ரம்மியமான கதைகள்: நைபால் பற்றி டயனா அடில்

1971 ஆம் ஆண்டு In a Free State புத்தகத்துக்காக விடியாவுக்கு புக்கர் விருது கிடைத்த இரவை நினைத்துப்பார்க்கிறேன். இதுபோன்ற சம்பிரதாயங்களை அலுப்போடு பார்ப்பவராக நடந்துகொள்பவர் என்பதால் விருது விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்றார். மிக அரிதாக அவரைத் திட்டுபவளாக இருந்தாலும் என்னையும் மீறி, “நீங்க என்ன ஆனாலும் வந்தே ஆகணும். நீங்க ஒத்துழைக்காவிட்டால் நாங்கள் எப்படி தொடர்ந்து பதிப்பிக்க முடியும்?” என்றேன். அடிக்கடி இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர் வெளிநடப்பு செய்வது வாடிக்கை. அன்று நல்லவிதமாக நடந்துகொண்டார். எதற்காகவும் மற்றவர்களுக்கு அவர் நன்றி சொல்லி நான் இதுவரை கண்டதில்லை. புலம்பியபடியே விருது விழாவுக்குச் சென்று தனது காசோலையைப் பெற்றுக்கொண்டார். அவர் நல்லவிதமாகவே நடந்துகொண்டதாகவே எனக்குப் பட்டது.

அந்த காலகட்டத்தில் நான்  மிக சிரமத்துடனேயே அவர் மீதான என் அன்பை தக்க வைத்துக்கொண்டிருந்தேன். அதீத புத்தி கூர்மை மற்றும் நகைச்சுவை உணர்வு கொண்டவரான அச்சிறுவயதுக்காரரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் அலுவலகம் இருந்த சோஹோ பகுதியின் காபி கடையில் நடந்த எங்கள் முதல் சந்திப்பு எனக்கு நினைவிலிருக்கிறது. ரொம்ப சிறியவனாகத் தெரிந்தார். மிகவும் சங்கோஜியாக அறிமுகமான அவரது கதைகளின் பால் நான் ஈர்க்கப்பட்டிருந்தேன். பிரான்சிஸ் வைண்டமுக்கும் மிகவும் பிடித்திருந்தது என்றாலும் ஆன்ரே டஷ்ஷுக்கு சந்தேகம் இருந்தது. இங்கிலாந்தில் யாருமே கவலைப்படாத விஷயங்களைப் பற்றி ட்ரினிதானிய பாணியில் பேசும் கதைகளை யார் வாங்குவார்கள் என அவர் சந்தேகித்தார். முதலில் ஒரு நாவலை எழுதி வெளியிட்டு வெற்றிகரமான வரவேற்பைப் பெற்றால் சிறுகதைத் தொகுப்பு வெளியிடலாம் என்றார் ஆன்ரே. எங்கள் அதிர்ஷ்டம் அவர் முதல் நாவலை அப்போதுதான் முடித்திருந்தார். Mystic Masseur  வெளியானதும் The Suffrage of Elvira நாவலும் வந்துவிட்டது. ஆனாலும், 1959 ஆண்டு வெளியான Miguel Street எனும் கதைகள் அற்புதமான தொகுப்பாகும். டிரினிடாட் பற்றிய வளப்பமான சித்திரத்தை அத்தொகுப்பு காட்டியது.

அவர் மீது பெருமதிப்பு கொண்டிருந்தேன். எழுத்தாளராக வேண்டும் என சுய முயற்சியோடு முனைந்து சாதித்து காட்டியிருந்தது அற்புதமான விஷயம். உள்ளுணர்வினால் உந்தப்பட்டிருந்தாலும் அவர் சொந்தமாக வார்த்து எடுத்து பாதை அது.  மனைவி பாட்டை நடத்திய விதத்தினால் ஒரு மனிதராக அவரை நான் வெறுக்கத் தொடங்கியிருந்தாலும் அவரது படைப்புகள் என்றும் எனது பிரியத்துக்கு உரியவை. அவள் இல்லாதது போலவே நடந்துகொண்டார். “மிகவும் சுவாரஸ்யமற்றவள் என்பதால் நான் கேளிக்கை விருந்துகளுக்கு வருவது விடியாவுக்குப் பிடிப்பதில்லை”, என என்னிடம் ஒரு முறை சொன்னாள். அவரது நீண்ட நாள் காதலியான அர்ஜெண்டேனியா நாட்டுப்பெண் , மார்கரெட் உடன் இருந்தபோதும் பாட் அவரைப் பிரியவில்லை. 

“அவர் ஒரு முட்டாள். பாட்டின் நாட்குறிப்பை படிக்காமலேயே தன்னுடைய சரித்திரத்தை எழுதிய பாட்ரிக் பிரெஞ்சிடம் நீ எழுதிக்கொள் எனக் கொடுத்து விட்டார். தடையின்றி அதைப்பற்றி எழுதினார் பாட்ரிக். அக்குறிப்புகளில் இருந்த பல விஷயங்கள் உளப்பதைப்பு உருவாக்குவன”

1975 ஆம் ஆண்டு வெளியான ‘Guerrillas’ வரை எனக்குப் பிடிக்காத அவரது படைப்புகள் இல்லை. எனக்குத் தெரிந்தவர்களை கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்ட கதை அது. அதில் வரும் பெண்ணைப் பற்றிய சித்திரம் முழுவதும் தவறு. மறு ஆலோசனை செய்தபின் மீண்டும் எழுதலாமே என நான் சொன்னபோது அவர் சற்று மெளனமானார். அதன் பின்னர், “மன்னிக்கவும். என்னால் முடிந்ததை எழுதியிருக்கிறேன்,” எனச் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினார். இப்ப என்ன செய்வது, என நான் குழம்பி நின்றேன். அவரது பதிப்பக ஏஜெண்ட் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் விலகுவதாகச் சொன்னார். பின்னர் மீண்டும் எங்களிடையே தொடர்பு தொடங்கியபோது எங்களுக்குள் இருந்த நெருக்கத்தை இழந்திருந்தோம். புத்தகங்களைப் பற்றிப் பொதுவாகப் பேசுவதைத் தாண்டி நாங்கள் சேர்ந்து உணவு உண்பதைக் கூட நிறுத்திவிட்டோம்.

அவர் முதல்முறை விலகியபோது ஆன்ரேயிடம் நான் சொன்னது நினைவில் இருக்கிறது – “அவரை விரும்பும்படி வலுக்கட்டாயமாக என்னை மாற்றிக்கொள்ள அவசியமில்லை என்பது பெரும் விடுதலை உணர்வைத் தருகிறது.” ஆன்ரே வெடித்துச் சிரித்தார். அவரும் அதே உணர்வை அடைந்திருந்தார் என்பதைப் புரிந்துகொண்டேன். சிந்தனைவயப்பட்டவராகவும் மனமுறிவின் விளிம்பில் திளைப்பவராகவும் அவர் இருந்தார். முகத்தைப் பார்த்ததுமே அவர் அந்த சமயத்தில் படும் வேதனைகள் எத்தனை உண்மையானவை என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

எங்கள் பதிப்பக உறவு கடுமையான சூழலில் முடிந்தது. உறவைத் தக்கவைக்கும் கவலையிலிருந்து வெகுவாக விலகியிருந்ததால் எனக்கு இந்த முறிவு சுலபமாக இருந்தது. நான் இணைந்து பணியாற்றிய எழுத்தாளர்களில் மிகச் சிரமத்தைத் தந்தவர் என சுலபமாகச் சொல்லிவிடலாம். நாங்கள் ஒன்றாக வேலை செய்வது முடிந்தபின் அவரை நான் பார்க்கவில்லை. அவரது கடைசி மனைவி சொல்வார்: “நீங்கள் அவரை கண்டிப்பாக சந்திக்க வர வேண்டும்”. ஆனால் நான் செல்லவில்லை. அவருக்கு 2001 ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்தபோது நான் மிகவும் திருப்தி அடைந்தேன். அவருக்கு வாழ்த்துக்கடிதம் கூட அனுப்பியதாக நினைக்கிறேன். நல்ல எழுத்தாளர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர் எங்களுடைய அதிகம் விற்பனையை ஈட்டிய எழுத்தாளர் இல்லை. அக்காலத்தில் ஒருவருடைய எழுத்தின் மீதான ஈர்ப்பு இருந்தாலே அவருடன் இணைந்து பணியாற்றுவது சாத்தியமாக இருக்கும் என்பதால் அவருடன் இருந்தோம். விற்க முடியாத எழுத்தாளர்களை போஷித்து வருவது இக்காலத்தில் கடினம் என்பதால் இப்போது அவருக்கு இப்படி ஒரு எழுத்து வாழ்க்கை அமைந்திருக்குமா என்பது எனக்குச் சந்தேகம் தான். அவை மிக ரம்மியமான நாட்கள். அவரது உச்சகட்ட படைப்பு என நான் நம்பும்  A House for Mr Biswas நாவல் இன்று வரை மறுபதிப்பில் இருப்பது எனக்கு மிகவும் அற்புதமான நிகழ்வாகத் தோன்றுகிறது.

*
மூலம் – https://www.theguardian.com/books/2018/aug/17/diana-athill-vs-naipaul-delighted-stories

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.