மூடாத எல்லைகள் – இல்லாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 3)


மாநிலங்களுக்கிடையேயான குடிபெயர்வுகள்
முதலில் அமெரிக்காவை எடுத்துக் கொள்வோம். அங்கு நிறைய சம்பளம் கொடுக்கும் வேலை வாய்ப்புகள், உயர்ந்த தரத்திலான சமூக உதவி அமைப்புகள், சிறந்த கட்டமைப்பு கொண்ட பொது போக்குவரத்து முதலியவை உள்ள முன்னேறிய மாநிலங்களான கலிபோர்னியா, நியூ யார்க் போன்றவையும் இருக்கின்றன. அதற்கு எதிர்மறையாக அவ்வளவாக வேலை வாய்ப்புகள் இல்லாத, இருக்கும் வேலைகளும் பழைய காலத்துக்குரிய நிலக்கரிச் சுரங்கம் போன்றவற்றில் இருப்பதால் சமீப காலங்களில் மிகவும் மங்கி நிற்கும் மிசிசிப்பி, வெஸ்ட் வர்ஜினியா போன்ற, ஒப்பீட்டளவில் ஏழ்மை மிகுந்த மாநிலங்களும் இருக்கின்றன. பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் இங்கு பொது போக்குவரத்து அமைப்புகள் (Public Transport) இல்லவே இல்லை என்று சொல்லலாம். அத்தகைய ஏழை மாநிலங்களில் சமூக உதவி அமைப்புகள் சரிவர இயங்குவதில்லை என்பதால் அதன் ஏழை குடிமக்கள் தம்மைத்தாமேதான் கவனித்துக் கொண்டாக வேண்டும். இந்த ஏழை பணக்கார மாநிலங்களுக்கிடையே பெரிய எல்லைகள் ஏதும் இல்லை. அமெரிக்க மாநிலங்களுக்கு இடையே மக்கள் போய் வருவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் எதுவும் கிடையாது. எனவே இந்த ஏழை மாநிலங்களில் உள்ளவர்கள் கூட்டம் கூட்டமாக பணக்கார மாநிலங்களில் குடியேறி விடுவார்கள் என்றுதான் எதிர்பார்ப்போம்.

ஒரே தேசத்திற்குள் வெவ்வேறு பகுதிகளுக்கு மக்கள் சென்று வருவதைத் தடுக்கும் செயற்கை எல்லைகள் வெவ்வேறு அளவில் சில தேசங்களில் நிலவுகின்றன. உதாரணத்துக்கு சீனாவில், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலம் சென்று குடியேற அரசு அனுமதி பெற வேண்டும். பெறாவிட்டால் உணவுக்கான உதவித் தொகை, கடனுதவு போன்ற சலுகைகளை இழக்க நேரிடும். இது போன்ற தடைகள் அமெரிக்காவில் இல்லை. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு குடி மாறலாம். அப்படி இன்னொரு இடத்தில் குடியேறியபின் அந்த மாநிலத்தில் ஓட்டுனர் உரிமை, புதிய தபால் முகவரி போன்றவற்றை பெற வேண்டியிருக்கும். ஆனால் இதெல்லாம் சிறிய ஆவண வேலைகள்தான். இப்படியிருந்தும் எந்த ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையும் பெரிய அளவில் உயர்வதில்லை, எந்த ஒரு மாநிலத்தை விட்டும் பெரிய அளவில் மக்கள் வெளியேறுவதில்லை.

ஏன்? இதற்கான காரணங்கள் பல பரிமாணங்கள் கொண்டவை. பொதுவாக நம் நெருங்கிய குடும்பத்தினரும் தூரத்து சொந்தங்களும் ஒரு மாநிலத்திற்குள் வாழ்ந்து வருவது உலகெங்கிலும் காணப்படும் ஒரு சாதாரண வழக்கம். நாம் வளர்ந்த இடத்தின் தட்பவெப்பம், உணவு, கலாசாரம் போன்றவற்றை நாம் விரும்பலாம். வேறொரு மாநிலத்தின் முற்போக்கு அல்லது பிற்போக்கு விழுமியங்கள் நம்மால் ஏற்க இயலாதவையாய் இருக்கலாம். அப்படியே நாம் பணக்கார மாநிலம் ஒன்றிற்கு போனாலும் அங்கு நாம் சம்பாதிக்கக்கூடிய அதிக பணத்துக்கு செலவு வைக்கும் அதிக வாடகை அல்லது வரிகளை நாம் விரும்பாமல் இருக்கலாம். எனவே எல்லைகள் இல்லாதபோதும் மக்கள் தொகை பரிமாற்றம் தானாகவே கட்டுக்குள் இருக்கிறது.

இந்தியாவிலும் சில மாநிலங்கள் அல்லது நகர்களில் அதிக வேலை வாய்ப்புகளும் அதன் கூடவே நிலத்துக்கான அதிக விலை, வாடகை மற்றும் வரிகளும் உள்ள சூழல் நிலவுவது நமக்கு நன்கு தெரிந்த விஷயம்தான். தமிழ்நாடு, குஜராத் ஆகியவற்றை இப்படி வளர்ந்த மாநிலங்களுக்கு உதாரணமாய்ச் சொல்லலாம். மறுபுறம் வேலை வாய்ப்பு குறைந்த, நிலத்தின் விலை, வாடகை, வரிகளும் குறைந்த மாநிலங்களும் நமக்கு பரிச்சயம்தான். பல பத்தாண்டுகளாக பீகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய நான்கு மாநில பெயர்களின் முதல் எழுத்துகளை ஒன்றுகூட்டி பீமாரு மாநிலங்கள் என்று அவை அழைக்கப்படும் வழக்கம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த நான்கு மாநிலங்களின் பரவலான நிலவரத்தைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளப்பட்ட இந்த சொல்லின் பொருள், ஹிந்தி மொழியில், நோய்மை. எழுத்தறிவு சதவிகிதம், பாலகர்/சிசு மரணத் தொகை குறைப்பு, வேலை வாய்ப்பு என்று பல அம்சங்களில் பிற மாநிலங்களை விட இவை வெகுகாலமாக மிகவும் பின்தங்கி இருந்தன, ஊழல் மிகுந்த நிர்வாகத்தால் ஆளப்பட்டன. ஒருவேளை இம்மாநிலங்களில் சில இப்போது முன்னேறிக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்திய மாநிலங்கள் இடையே மிகப்பெரும் வேறுபாடுகள் இருப்பதை நாம் நிச்சயம்ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் வளம் மிக்க மாநிலங்களுக்குச் செல்லும் நானும் என் நண்பர்களும் மிகப் புதிய தொழில்நுட்பம் எங்கும் நிறைந்திருப்பது, டோல் ரோடுகள் சிறப்பாக இயங்குவது, நில விலை மிகவும் உயர்ந்திருப்பது போன்ற மாறுதல்களைப் பார்த்து வியந்து திரும்புகிறோம். ஆனால் ஏழ்மை மிகுந்த மாநிலங்களுக்குச் சென்று வரும் நண்பர்கள் பல பத்தாண்டுகள் ஆகியும் அவர்கள் உறவினர்கள் வாழும் ஊர்களில் எதுவும் மாறவில்லை என்று சலித்துக்கொள்கிறார்கள். எல்லாரும் பேசிக் கொள்ளும் ‘வளரும் இந்தியா’ எங்கே இருக்கிறது என்று தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் இவர்கள்.

இந்தியாவும் தேசத்தினுள் குடி மாறுவதைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதால் ஓரளவுக்கு குடி பெயர்வு கண்ணுக்குப் புலப்படுகிறது. உதாரணத்துக்கு, தமிழகத்தில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் உணவகங்களில் மேஜை துடைப்பவர்கள் ஏழ்மை மிகுந்த மிசோராம், திரிபுரா போன்ற இந்திய வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஒப்பீட்டளவில் அந்த மாநிலங்கள் மிக மெதுவாக வளர்ச்சியடைபவை. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாறாய் அவர்களது சரும நிறம், முக அமைப்பு, மொழி என்று பலவும் இருப்பதால் அவர்களை எளிதில் அடியாளம் கண்டு கொள்ள முடியும். ஆனால் அவர்களுடைய மொழி, உணவு, கலாசாரம் என்று எல்லாமே ஓரளவுக்கு வேறுபட்டு இருப்பதால், குடும்பத்துடன் அவர்கள் வளம் மிக்க மாநிலத்துக்கு உடனே குடிபெயர்ந்து விடுவதில்லை. மாறாக, தற்காலிகமாக வந்து இரவு பகலாய் உழைக்கின்றனர், பணத்தை மிச்சம் செய்ய தம் உணவை தாமே சமைத்துக் கொள்கின்றனர், முடிந்த அளவு சொந்த ஊருக்கு சேமித்த பணத்தை அனுப்புகின்றனர். அதன் பின் ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைப் பார்க்க தாம் பிறந்த மாநிலத்துக்கு திரும்புகின்றனர். இப்படி சொந்த ஊர் போனவர்கள் திரும்பி வராமலும் போகலாம். அல்லது ஓரிரு உறவினர்களை அழைத்தும் வரலாம். ஆனால் அரசு நடைமுறைபடுத்தும் தடைகள் எதுவும் இல்லாதபோதும் இது வரை தமிழகத்தின் கலாசாரம், மொழி, உணவு என்று எதையும் பெருந்திறல் குடியேற்றம் மாற்றியதற்கான ஆதாரம் இல்லை.

இது பற்றிய விவாதங்களின்போது, பேராசிரியராக பணியாற்றும் இந்திய நண்பரொருவர் இந்தியாவைப் போலில்லாமல் குடும்ப பந்தங்கள் அவ்வளவு வலிவாக இல்லாத அமெரிக்க சமுதாயத்தில் மக்கள் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்வது குறைவாகவே இருப்பது புரியாத புதிராக இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் அல்லது ஐரோப்பாவில் இடம் பெயர்ந்தால் மொழி, கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல சவால்களை சந்திக்க நேரும். அமெரிக்காவில்தான் அதெல்லாம் கிடையாதே! ஒருவேளை செல்வம் மிகுந்த வெள்ளை இனத்தவர்கள் எளிதாக இடம் பெயர, காசு பணத்திற்கு கஷ்டப்படும் கருப்பு மற்றும் ஹிஸ்பானிக் இனத்தவர்கள்தான் இடம் பெயர்வதிலும் நிறைய தடைகளை சந்திக்கிறார்களோ என்ற கேள்வியும் பேச்சுவாக்கில் எழுந்தது. கடந்த முப்பது ஆண்டுகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சேகரித்து என் மனதுக்குள் வகைப்படுத்தி புரிந்து கொண்ட பல கவனிப்புகளில் இந்தக் கேள்வியின் விடை ஒளிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
சமீபத்தில் இங்கே பென்சில்வேனியாவில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் நடந்த கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தேன். அங்கே அடுத்தடுத்து இருந்த ஆசிரியர்களின் அலுவலக அறைகளில் அவர்கள் பெயரும் அவர்கள் பட்டம் பெற்ற பல்கலைகழகத்தின் பெயரும் சிறிய பலகைகளில் எழுதி இருந்ததை பார்த்துக்கொண்டே வந்தபோது, அவர்களில் மிகப்பெரும்பாலோர் இதே மாநிலத்திலுள்ள பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றிருப்பதை கவனித்து ஒரு அமெரிக்க நண்பரிடம் சுட்டிக்காட்டினேன். அவர் நாம் பிறந்த இடத்திலேயே வளர்ந்து, பட்டம் பெற்று பணியாற்றும்போது, அந்த இடம் மற்றும் சமூகத்துடன் அது ஒரு சுகமான ஒட்டுணர்வை (cohesion, sense of belonging) கொடுக்கிறது என்று குறிப்பிட்டார். நாற்பது, ஐம்பது வருடங்களாய் நான் பிறந்து வளர்ந்த ஊர், ஊரில் உள்ளவர்கள் எல்லாம் எனக்கு தெரிந்தவர்கள்தான் என்று சொல்லிக்கொள்வதெல்லாம் நமக்கு இந்தியாவிலும் மிகவும் பரிச்சயம்தான். அந்தப் பழக்கமும் அது தரும் கூட்டுணர்வை விழைந்து பெறுவதும் இங்கேயும் சகஜம். இதைத் திரும்பத்திரும்ப நான் சந்திக்கும் சக அலுவலக நண்பர்கள், சூப்பர் மார்க்கெட், முடிவெட்டுமிடம், உணவகங்கள், ஆஸ்பத்திரி, கார் டீலர்ஷிப் என்று பல இடங்களில் சந்திக்கும் மனிதர்கள் என்று எல்லோரிடமும் தினமும் பார்க்கிறேன். பேரக்குழந்தைகளை பார்த்துக்கொண்டு மகன்/மகள் வேலைக்குச் செல்ல உதவும் தாத்தா பாட்டிகள் இங்கே நிறைய உண்டு. எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஒரு வெள்ளைப் பெண்மணி போலிஷ் இனத்தவர். அவரும் அவர் கணவரும் தங்கள் வீட்டை விற்றுவிட்டு, இன்னொரு வீடு வாங்கும்வரை தற்காலிகமாக சில மாதங்கள் தன் மகன் வீட்டில் குடியேறி இருக்கிறார்கள். குடும்பபிணைப்புகள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை என்று நாம் பொதுவாக நினைக்கும் இந்த சமூகத்தில் வாழும் அந்த மகன் சந்தோஷமாகவே தன் அம்மாவுக்கும் அவர் கணவருக்கும் தன் வீட்டில் இடம் கொடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார்.

நான் குடியிருக்கும் தெருவில் வாழும் நன்கு படித்த வெள்ளை இனத்தைச்சேர்ந்த டாக்டர்கள், வக்கீல்கள், என்ஜினியர்கள் பலர் இதே மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அக்கம்பக்க பார்ட்டிகளில் பார்த்து பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் பல தலைமுறைகளைச் சேர்ந்த தங்கள் குடும்பத்தினர் அருகிலேயே வாழ்ந்துவருவதை பற்றி சொல்லியிருக்கிறார்கள். என் மருமான் உன் கம்பெனியில்தான் வேலை செய்கிறான், என் அப்பா இரண்டு தெரு தள்ளி வசிக்கிறார், என் மனைவியின் மாமா அந்தச் சர்ச்சுக்கு போவார் போன்ற விவரங்கள் அடிக்கடி பேச்சில் அடிபடும். வேறு மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்து எங்கள் தெருவில் வசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்றாலும், பெரும்பாலானோர் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள்தான். இதற்கு முன்னால் நியூ ஜெர்சியில் மூன்று வருடங்களும், லூசியானாவில் பனிரெண்டு வருடங்களும் இருந்தபோதும் இதே மாதிரியான உள்ளூர்காரர்களை பலதரப்பட்ட மட்டங்களில் சந்தித்திருக்கிறேன்.

கடந்த முப்பது வருடங்களில் இந்த மாதிரியான பல சிறிய பெரிய அனுபவங்களின் மூலம் நுட்பமான ஆனால் வலுவான ஒரு காரணி மெல்ல மெல்லப் புரிந்தது. இந்தியக்குடும்பப் பிணைப்புகள் எவ்வளவு நெருக்கமானவை என்று நமக்கு நன்றாகத்தெரியும். எனவே, தனிமனித உரிமைகளுக்கு பெயர்போன சமூகம் என்பதாலும், விவாகரத்து நிறைய உண்டு என்பதாலும், அமெரிக்க குடும்ப உறவுகள் வலிவற்றவை என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். பாரபட்சம் இல்லாமல் புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு பார்த்தால் அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் இங்கு வாழும் ஒரு சராசரி அமெரிக்க குடும்பம் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து, ஆங்காங்கே நிலவும் குடும்ப உறவுகளின் நெருக்கத்தையெல்லாம் ஆய்ந்து தங்கள் குடும்பம் அவ்வளவு நெருக்கமானதில்லை என்றெல்லாம் புரிந்து கொண்டதில்லை. அவர்களுக்கு தெரிந்தது அவர்கள் குடும்பமும் அருகே உள்ள மற்ற அமெரிக்க குடும்பங்களும்தான் என்பதால், ஆசிய, கருப்பு, ஹிஸ்பானிக் குடும்பங்கள், உலகின் பிற இடங்களில் வாழும் அல்லது இடம் பெயர்ந்து வந்திருக்கும் குடும்பங்களைப் போலவே தங்கள் குடும்பமும் மிகவும் நெருங்கிய வலுவான பிணைப்புள்ள ஒன்று என்றுதான் அவர்கள் நிச்சயம் உணர்கிறார்கள், பெருமை பொங்க நம்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அதுதான் உண்மை, நிதர்சனம். இந்தப்புரிதலும், நம்பிக்கையும் அவர்களையும் சொந்த ஊருடன் நன்றாகவே கட்டிப்போட்டு விடுகிறது!

கடும் பொருளாதார பின்னடைவு நிலவிய ஒபாமா காலத்து நேர்முகம் ஒன்றில் முன்னாளைய அதிபர் பில் கிளிண்டன் அளித்த பேட்டி ஒன்று நினைவுக்கு வருகிறது. மக்கள் மட்டும் இடம் மாறத் தயாராக இருந்தால் அமெரிக்காவில் உள்ள அத்தனை காலியிடங்களையும் நிரப்பி வேலையில்லா திண்டாட்டத்தை கணிசமாக குறைக்க முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார். உள்ளூரில் ஆள் இல்லை என்பதால் அப்போது கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் பணியிடங்கள் அமெரிகாவில் காலியாக இருக்கின்றன என்றார் அவர். மக்கள் இடம் மாறத் தயங்குவது, அல்லது அவர்கள் இடம் மாறுவதற்கு தடையாய் இருக்கும் உண்மையான காரணங்கள் போன்றவற்றை நாம் அலசி ஆராய்ந்து, இருக்கும் தடைகளை விலக்க நிறைய முயற்சிக்க வேண்டும் என்றார் கிளிண்டன். மக்கள் தேசம் விட்டு தேசம் குடி புகாமல் இருப்பதற்கும் இதே போன்ற காரணங்கள் பொருந்துகின்றன.

தேசங்களுக்கிடையேயான குடிபெயர்வுகள்

மாநிலங்களைக் கடந்து போய், ஐரோப்பாவில் உள்ள ஷெஞ்சன் (Schengen) தேசங்களை எடுத்துக் கொள்ளலாம். இது பற்றி தெரியாதவர்கள் இந்த தளத்தில் உள்ள தகவல்களை கொஞ்சம் மேய்ந்து பார்க்கலாம். ஒரு காலத்தில் பிரிந்திருந்த இந்த தேசங்கள் இப்போது ஒன்றுபட்டு, பெரும்பாலும் தமக்கிடையே எல்லைகள் இல்லாத ஒரே தேசம் போல் செயல்படுகின்றன. இந்த 22 தேசங்களின் குடிமக்கள் இந்தப் பிரதேசத்தினுள் எங்கு வேண்டுமானாலும் தடையின்றி செல்லலாம். இதற்கும் ஒரு படி மேலாக பின்னால் ஐரோப்பிய யூனியன் இன்னும் பல நாடுகளை இணைக்க வந்தது. https://www.schengenvisainfo.com/eu-countries/ site என்ற தளம் கடந்த சில பத்தாண்டுகளில் ஐரோப்பிய யூனியன் எப்படி வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இப்போது இதில் இருபத்தெட்டு தேசங்கள் உறுப்பினர்களாய் உள்ளன. சில இணையும் கட்டத்தில் உள்ளன, வேறு ஓரிரு தேசங்கள் இணையும் சாத்தியம் பரிசீலிக்கப்படும் என்ற கட்டத்தில் உள்ளன. ஷெஞ்சன் நாடுகளுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இடையே பொதுத் தன்மைகள் இருந்தாலும், சில ஷெஞ்சன் நாடுகள் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் அல்ல (நார்வே, சுவிட்சர்லாந்து போன்றவை), சில நாடுகள் ஐரோப்பிய யூனியனில் இருக்கின்றன, ஷெஞ்சனில் இல்லை (ஐஸ்லாந்து போன்றவை). ஐரோப்பிய யூனியனின் மொத்த மக்கள்தொகை இப்போது கிட்டத்தட்ட ஐம்பத்து ஒரு கோடி என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. அதில் உள்ள 28 தேசங்களின் மக்கள் ஐரோப்பிய யூனியனுக்குள் எங்கும் பயணம் செய்யலாம், தங்கலாம், வாழலாம், வேலை செய்யலாம். அங்கேயும் தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் அன்னியர்கள் குறித்து காழ்ப்புரைகள் ஆற்றுவது பற்றி நாம் அவ்வப்போது வாசிக்கிறோம் என்றாலும் எந்த ஒரு தேசத்தின் குடிமக்களும் ஒட்டுமொத்தமாக தங்கள் நாட்டை காலி செய்து கொண்டு யூனியனில் உள்ள வேறொரு பணக்கார தேசத்துக்கு குடியேறுவதாய் தெரியவில்லை.

இந்தப் பார்வைக்கு எதிராய், ஐரோப்பிய யூனியனில் சேரும் தேசங்கள் ஏராளமான விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்கிற அவசியத்தை சுட்டிக் காட்டலாம். அதிலொன்றாக, யூனியனில் உள்ள தேசங்களில் பொருளாதார நிலையில் சிறப்பாய்ச் செயல்படும் தேசத்துடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு தேசமும் அதன் பணவீக்கத்தை 1.5% அளவுக்கு மிகாத வகையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற விதியைச் சொல்லலாம். ‘கன்வர்ஜன்ஸ் க்ரைடீரியா’ என்று அழைக்கப்படும் கூடுகை அடிப்படைகளில் இது ஒன்று என்ற வகையில் அது உண்மைதான். ஆனால் ஐரோப்பிய யூனியனில் புதிதாய்ச் சேரும் நாடுகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். வெகு நாட்களாக உறுப்பினராய் இருக்கும் கிரீஸில் பத்து வருடங்களுக்கு முன் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். அவர்கள் யூனியனில் சேர்வதற்கு முன்னிருந்த பொருளாதார நிலை குறித்த தரவுகளில் அவர்கள் செய்த தில்லுமுல்லு அப்போது பெரிய பிரச்சினையாய் வெடித்தது. ஆனால் கிரெக்ஸிட் (Grexit) என்று பெயரிடப்பட்ட பூதம் ஒன்றும் கிளம்பவில்லை. எல்லோரும் பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் குடி பெயர்ந்து விடவும் இல்லை.

அண்மையில் தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் உரையாற்ற பெர்லின் சென்றிருந்தேன். சமயம் கிடைத்தபொழுது கொஞ்சம் ஊர் சுற்றினேன். ஊரைச் சுற்றி வரும்போது, பெர்லின் சுவற்றையும் செக்பாயிண்ட் சார்லியையும் பார்த்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் பல பத்தாண்டுகள் பிரிந்திருந்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கிழக்கிலிருந்து மேற்கில் குடியேற  முயற்சித்து சுவரேறிய மக்களைச் சுடும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் இருந்த சுவற்றை (Berlin Wall) இன்னும் மறவாதிருந்த பெர்லின் குடிமக்கள் பலரிடம் பேசிக்கொண்டிருந்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகளை இணைக்க வழி வகுக்கும் வகையில் பெர்லின் சுவர் இடித்து தள்ளப்பட்ட நாள் இன்னும் எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அப்போது நான் லூயிசியானாவில் உள்ள பேட்டன் ரூஜில் (Baton Rouge) முதுகலை பட்டக்கல்வி மாணவனாய் புதிதாய்ச் சேர்ந்திருந்தேன். என் சிறிய அபார்ட்மென்ட்டில் இருந்த தொலைக்காட்சியில் அதை நான் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறது. அது நிகழ்ந்து முப்பதாண்டுகள் ஆகப் போகின்றன. ஐக்கிய ஜெர்மனியின் சான்சலராய் உள்ள ஏஞ்சலா மெர்கல் 2005ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவர் மேற்கு ஜெர்மனியில் பிறந்து, குழந்தையாய் இருந்தபோது கிழக்கு ஜெர்மனிக்குச் சென்று அங்கு வளர்ந்தவர் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட எல்லைகளை அழித்து ஒன்று சேரும் சமூகங்கள் வளமாய் வாழ முடியும் என்பதற்கான ஒரு சான்று. ஐரோப்பிய யூனியனில் சிறப்பாய்ச் செயல்படும் பொருளாதாரங்களில் ஜெர்மனி ஒன்று. அது ஒப்பீட்டளவிலும் பாதுகாப்பான ஒரு நாடாகவே இருக்கிறது. மேம்பட்ட வாழ்க்கைத் தரம் கொண்டிருக்கிறது என்பதுடன் உலக அளவில் அரசியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக தளங்களில் அதன் தலைமை பரவலாகவே இருந்து வெற்றிகரமாய் இயங்கி வருகிறது.

உலகெங்கும் இன்று கிட்டத்தட்ட இருபத்து நான்கரை கோடி மக்கள் தாம் பிறந்த நாட்டுக்கு வெளியே வேறொரு தேசத்தில் வாழ்கிறார்கள் என்று ப்யூ ஆய்வு மையத்தின் தளத்தில் உள்ள குறிப்பு உணர்த்துகிறது. இது பெரிய எண்ணிக்கைதான். இவர்கள் அத்தனை பெரும் ஒரே தேசத்தில் வாழ்ந்தால் அது உலகின் ஐந்தாவது பெரிய தேசமாக இருக்கும் என்று அத்தளம் குறிப்பிடுகிறது. ஆனால் இது அனைத்தும் நாம் எப்படி இந்த புள்ளிவிவரத்தைப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்த விஷயம். உலகின் மக்கள் தொகை 760 கோடி என்பதை கவனத்தில் கொண்டால், அதனுடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை 3.2% மட்டுமே. எனவே ஏறத்தாழ 97% மக்கள்தாம் பிறந்த தேசத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! இதிலிருந்தெல்லாம் தெரிவது என்னவென்றால், எல்லைகள் சரியான முறையில் அழிக்கப்படும்போது, அந்த சமூகங்கள் உடனே பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு, பொருளாதாரம் உருக்குலைந்து அழிந்து ஒழிந்துவிடுவதில்லை. மக்கள் விழுந்தடித்துக்கொண்டு பணக்கார பகுதிகளுக்கு ஓடி விடுவதும் இல்லை!
அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 14% வெளிநாட்டில் பிறந்தவர்கள். ஆனால் உலக அளவில் இது ஒன்றும் மிகப் பெரிய எண்ணிக்கையல்ல. கனடாவின் மக்கள் தொகையில் 22% வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்றால், பிற தேசங்களில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்கும் வளைகுடா நாடுகள் சிலவற்றில் உலகின் மிக அதிக சதவிகித வெளிநாட்டினர் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, கட்டாரில் 75% வெளிநாட்டினர், யுனைட்டட் அராப் எமிரேட்ஸில் 88% வெளிநாட்டில் பிறந்தவர்கள். குடியேறிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருந்தாலும் இந்த நாடுகளில் வாழ்க்கைத் தரம் குறையவில்லை. அப்படியானால், குடியேற்றம் வரமாக அமைவதற்கு மாறாய் சாபமாவது எதனால்? இந்த பிளானெட் மணி பாட்காஸ்ட்டில் இரு கூறுகள் பேசப்படுகின்றன. அவற்றில் இக்கேள்விக்கு விடை கிட்டலாம். அமெரிக்காவில், 1980களில் எண்பதாயிரம் கியூபர்கள் மியாமி மற்றும் ஃபிளோரிடா பகுதியில் குடியேற அனுமதிக்கப்பட்டபோது அமெரிக்க பொருளாதாரத்தில் எப்படிப்பட்ட தாக்கம் ஏற்பட்டது என்பதை இந்த பாட்காஸ்ட் அலசுகிறது.


எப்படி பார்த்தாலும் கியூபா காரர்கள் குடியேற்றம் பெரிய அளவில் குறுகிய காலத்தில் ஏற்பட்டிருந்தும்  உள்ளூர் பொருளாதாரம் நசிந்து விடவில்லை. பெர்க்லி பல்கலையில் தொழிலாளர் பொருளாதாரம் குறித்து ஆய்வு நடத்தும் பொருளாதாரத்துறை பேராசிரியர் டேவிட் கார்ட், இரண்டு அடிப்படை விதிகள் நிறைவு செய்யப்படும்போது குடியேற்றம் வெற்றிகரமாக உள்ளூர் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்கிறார்:

  1. குடியேற்றத்தை பெற்றுக் கொள்ளும் தேசத்தில் ஏற்கனவே பொருளாதாரம் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அப்போது அதனுள் புதிதாக வந்து இணையும் குடியேறிகள் ஏற்றுக் கொள்ள முடியாத சமூகச்சுமையாய் இருக்க மாட்டார்கள்.
  2. குடியேறுபவர்கள் புதிய வேலைகளில் சேர்வதற்கேற்ற தொடர்புகளும் வழிமுறைகளும் அங்கு உருவாகியிருக்க வேண்டும். அப்போதுதான் வரவேற்கும் மக்களின் கொடையை எதிர்பார்த்து வாழாமல் அவர்கள் தாம் புகுந்த சமூகத்துக்கு வளம் சேர்க்கும் உறுப்பினர்களாய் விரைவிலேயே மாற முடியும்.

குடியேற்றத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளிலும் சமூகங்களிலும் அடிக்கடி பேசப்படும் ஓர் அச்சம் உண்டு. உள்ளூரில் குறிப்பிட்ட அளவு மட்டுமே செல்வமும் வேலை வாய்ப்பும் உள்ளது, அதை புதிதாய் வந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது ஏற்கனவே இருப்பவர்கள் அதே அளவு இழப்புக்கு உட்படுத்தப்படுவார்கள், இதனால் வாழ்க்கைத் தரம் மோசமடையும், வாய்ப்புகள் குறையும் என்ற பயம்தான் அது. ஆனால் மேற்கண்ட இரு அடிப்படை விதிகள் நிறைவு செய்யப்படும் பட்சத்தில், கையில் எதுவுமில்லாமல் குடி புகும் மக்கள் கிடைத்த வேலையை செய்து சம்பாதிக்கும் அத்தனை பணத்தையும் உணவு, உடை, உறையுள் தேவைகளுக்கு உடனே செலவழிக்கிறார்கள். சராசரி வாழ்க்கை வாழத் தேவையான பண்டங்களை வாங்கவும் பயணம் மற்றும் பிற சேவைகளுக்கும் அப்படி செலவு செய்வது அவசியமாகிறது. இதனால் உள்ளூர் பொருளாதாரம் ஏற்றம் காண்கிறது. அவர்கள் எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் பொருளாதாரத்தின் அளவை அவர்களே விரிவாக்குகிறார்கள், அனைவரின் நிலையும் உயர்வடைகிறது. ஏற்கனவே இருப்பவர்கள் அடிப்படை தேவைக்குரிய பொருட்களை ஏற்கனவே வாங்கிவிட்டிருப்பதால், வியாபாரம் மந்தமாகும் நிலையில், புதிதாய் குடியேறுபவர்கள் துவக்க காலத்தின் நிறைய பொருட்கள் வாங்க வேண்டும் என்ற அவசியத்தால் (வாகனம், சமையல் பொருட்கள், துணிகள், வீட்டு உபயோக பொருட்கள்) இந்த பொருளாதார விரிவு அவர்கள் குடியேறியவுடன் நிகழ்கிறது. வெற்றிகரமாக குடியேற்றம் நிகழும்போது அவர்களை ஏற்றுக் கொள்ளும் தேசம் நன்மை பெறுகிறது.

ஆஸ்டின் மக்காம்ப்ஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்ஸில் விற்பனைத்துறை பேராசிரியராய் பணியாற்றுபவர் ராஜ் ரகுநாதன். அவர் ஒரு சுவையான நேர்முகம் அளித்திருகிறார். இதில், பரிணாம வளர்ச்சியால் கற்பிக்கப்பட்ட நம் மூளை எல்லாவற்றையும் குறைந்த இருப்பு கொண்டதாகவே காண்கிறது என்கிறார். உணவு, வேலை வாய்ப்பு, திருமண வாய்ப்பு, என்று ஏதோ ஒரு தேவை குறைகிறது என்று கண்டு அதற்காக நாம் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது நம் மூளை. நம் பொருளாதார மாடல்கள்கூட இதே அணுகுமுறையை பயன்படுத்துகின்றன. யாரோ ஒருவர்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் இது உண்மையாக இருக்கலாம். ஒரே பதக்கத்துக்காக இரு குத்துச் சண்டை வீரர்கள் போட்டியிடுவது அப்படிப்பட்ட ஒரு சூழல். ஆனால் நவீன உலகில் உள்ள ஒவ்வொரு வளத்துக்கும் இது பொருந்தாது. மிகப் பெரிய அளவில் வளங்கள் குவிந்திருப்பதற்கான முன்னுதாரணங்கள் எண்ணற்ற அளவில் உள்ளன. எனவே போட்டியிடுவதைவிட, இணைந்து இயங்குவதே அனைவரும் மிகுதியானஅளவில் உணவு, வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைச் சாத்தியங்களைப் பெற உதவுவதாக இருக்கும். நம் கூட்டு மனநிலையில் இந்த உணர்வு இப்போதுதான் நுழையத் துவன்கியிருக்கிறது. பற்றாக்குறை (scarcity) மனநிலையில் இருக்கும் நாம் செறிவு (Abundance) மனநிலைக்கு மாற சில காலமாகலாம். இது போக, எங்கு தேவையோ அங்கு இரு மனநிலைகளில் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கும் இயல்பும் நாம் பெற வேண்டும். இது சிந்தனையைத் தூண்டக்கூடிய சவால், எதிர்காலம் குறித்து நம்பிக்கையளிக்கும் ஒன்று.

குழந்தைகளாக இருந்தபோது தம் பெற்றோர் அல்லது உறவினர்கள் விசா அல்லது முறையான வேறு ஆவணங்கள் இன்றி குடியேறியபோது அவர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் என்ற வகையில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களில் பலர் அப்போது ஒரு வயது, அல்லது இரு வயது குழந்தைகள். எனவே விசா சான்றிதழ்கள் ஏதுமின்றி உள்ளே வந்தது அவர்கள் குற்றமல்ல, அவர்களுக்கு அமெரிக்காவைத் தவிர வேறு எந்த தாயகமும் இல்லை என்பதை எல்லோராலும் எளிதாக உணர முடியும். அவர்களில் பலருக்கு தாம் பிறந்த மண்ணில் பேசப்படும் மொழிகூட தெரியாது, வாழ்நாள் எல்லாம் அமெரிக்காவில் வாழ்ந்துவிட்ட காரணத்தால் அவர்கள் பிறந்த நாட்டில் பிற உறவினர்கள், நண்பர்கள் அல்லது வேறு உறவுகளும் கிடையாது.


இவர்களில் ஏறத்தாழ அனைவரும் குற்றமற்ற வாழ்வு வாழ்வதால், அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா DACA என்ற ஒரு திட்டத்தை (Deferred Action for Childhood Arrivals)  முன்வைத்தார். இவர்கள் அமெரிக்காவில் வாழ்வதையும், கல்வி கற்பதையும், பணியாற்றுவதையும் சட்டப்படி அனுமதித்து அமெரிக்க குடிமக்களாய் அவர்கள் ஆக்கப்பூர்வமான வழிகளில் அவர்கள் பங்களிப்பை தொடர்வதை இந்த திட்டம் அங்கீகரித்தது. சட்டத்துக்கு மாறாய் எந்த குற்றமும் இழைக்காமல் பத்தாண்டுகள் தொடர்ந்து அமெரிக்காவில் வசித்தவர்கள், அங்கு குடியிருக்கவும், குடிமக்கள் என்ற அந்தஸ்து பெறவும் விண்ணப்பிக்க இந்த திட்டம் செயல்வடிவம் அளித்தது. இது முழுக்க முழுக்க நியாயமானதாக தெரிவதால் அமெரிக்க மக்கள்தொகையில் எண்பது சதவிகிதத்தினர் இதற்கு ஆதரவு அளிக்கின்றனர்.

ஒபாமா காங்கிரஸ் அங்கீகாரம் பெறாமல் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று குற்றம் சாட்டி ஜனாதிபதி ட்ரம்ப் இந்தத் திட்டத்தை சில மாதங்களுக்கு முன் ரத்து செய்தார். இந்த இளைஞர்கள் தவறு எதுவும் செய்யவில்லை என்பதால் அவர்களுக்கு தன் முழு ஆதரவு உண்டு என்று சொல்லும் ட்ரம்ப், இந்தச் சட்டத்தை அனுமதித்து காங்கிரஸ் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார். அப்படியானால் அதை ஏன் ரத்து செய்தார்? காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அமெரிக்க மெக்ஸிகன் எல்லையில் சுவர் எழுப்ப இதை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்வது அவரது எண்ணம். பலநூறு கோடிகள் செலவு செய்து எல்லையில் சுவர் எழுப்புவதில் ஒரு பயனும் இல்லை என்று காங்கிரஸ் கருதுகிறது. ட்ரம்ப்பே ஒருமுறை சொன்னது போல், எல்லை கடக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பவர்கள் அந்தச் சுவர்களின் மீது கயிற்றேணி ஒன்றை வீசி அதில் ஏறி வந்து விடலாம். எனவே காங்கிரஸ் சுவர் எழுப்ப பணம் செலவழிப்பது பேரும் விரயம் என்று கருதி இது விஷயத்தில் ஒன்றும் செய்யாமல் இருக்கிறது, டாகா குழந்தைகளும் திரிசங்கு நிலையில் இருக்கின்றனர்.

எண்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் ஆதரவு அளிப்பதால் காங்கிரஸ் இந்தச் சட்டத்தை எளிதாய் நிறைவேற்றி, அமெரிக்க அதிபரை அதில் ஒப்பந்தமிடச் செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கும் என்று நீங்கள் நினைப்பீர்கள். அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருக்கும் ரிபப்ளிகன் கட்சி செனட்டர் ஜெஃப் ஃபிளேக், மெக்சிகோவை ஒட்டியுள்ள அரிசோனா என்ற தெற்கு எல்லைப்பகுதி மாநிலத்தைச் சேர்ந்தவர். இவ்வாண்டு இறுதியில் தன் பணிக்காலம் முடிவடைவதற்குள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாக வேண்டும் என்று விரும்புகிறார் இவர். ஆனால் இது ஏன் சாத்தியப்படவில்லை என்று இந்த பாட்காஸ்ட் விளக்குகிறது. இது போன்ற பிரச்சினைகள் எவ்வளவு சிக்கலானவை என்பதை பாட்காஸ்ட்டை கேட்பதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே டாகா சட்டமாக வேண்டும் என்றெல்லாம் சொல்வதைவிட, நடைமுறையில் எப்படிப்பட்ட அமைப்பு இதற்கு தீர்வு காணும், உலகு எங்கும் உள்ள தர்க்கமற்ற விதிமுறைகளை நீக்கும், இன்றுள்ள நிலைக்கு மாற்றாய் நாம் என்ன ஆக்கப்பூர்வமான தீர்வுகள் அளிக்க முடியும் என்று கொஞ்சம் பெரிய அளவில் சற்று விலகி நின்று யோசித்துப் பார்க்கலாம்.
(தொடரும்)
சான்றாதாரங்கள்:

  1. http://worldpopulationreview.com/european-union-countries/
  2. https://www.schengenvisainfo.com/eu-countries/ site
  3. Convergence Criteria: https://www.ecb.europa.eu/ecb/orga/escb/html/convergence-criteria.en.html
  4. Checkpoint Charlie: https://en.wikipedia.org/wiki/Checkpoint_Charlie
  5. http://www.pewresearch.org/fact-tank/2016/05/18/5-facts-about-the-u-s-rank-in-worldwide-migration/
  6. Planet Money Podcast: https://www.npr.org/sections/money/2015/09/30/444800350/episode-654-when-the-boats-arrive
  7. https://www.theatlantic.com/business/archive/2016/04/why-so-many-smart-people-arent-happy/479832/
  8. https://www.thisamericanlife.org/642/the-impossible-dream

One Reply to “மூடாத எல்லைகள் – இல்லாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 3)”

  1. பற்றாக்குறை/செறிவு என்ற எதிரெதிர் கண்ணோட்டங்களைக் குறித்து ஓர் உதரணம். பலமுறை பற்றாக்குறை இருக்கிறது என்ற எண்ணம் மனிதர்களைத் தமது தேவைகளை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தூண்டுகிறது. பல வருடங்களுக்கு முன் நான் வசித்து வந்த குடியிருப்பில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் தொட்டித் தண்ணீர் தினம் காலை 6-7 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டு வீட்டுக் குழாய்களில் வரும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் எல்லோரும் பெரிய பாத்திரங்களை வாங்கி ஆறேகால் மணிக்குள்ளே எல்லாவற்றையும் நிரப்பிக் கொள்வார்கள். 6.20க்கு தொட்டி காலியாகி குழாயில் தண்ணீர் வராது. பிடித்து வைத்த ஏகப்பட்ட தண்ணீர் செலவாகாது. அடுத்த நாள் காலையில் வரும் தண்ணீஈரை எல்லாம் பிடித்துக் கொள்ள முடியவில்லையே, வீணாகப் போகிறதே(!) என்று கவலைப் படுவார்கள். தண்ணீர் நிறைய இருக்கிறது, வேண்டுமென்னும்போது குழாயைத் திறந்து பயன்படுத்தினால் போதும். இப்படி வீடெல்லாம் அடைக்குமாறு தாண்ணீர்ப்பாத்திரங்களை வைக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் வரவில்லை. (இதற்காக அந்த நேரத்திலேயே அவசரம் அவசரமாக குளிப்பது, துணி துவைப்பது என்று தொல்லைகள்).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.