The past is everything, the future nothing, and time has no other meaning.*
சில நாட்கள் குளிருக்கு பின் மீண்டும் வெயிலேற ஆரம்பித்திருக்கும் ஞாயிறு மதிய நேர, மூன்று பதினெட்டிலிருக்கும் கடிகாரத்தின் காலம், ஒவ்வொரு முள்ளாக முன்னேற முயன்று கொண்டிருக்க, நான் ஒவ்வொரு நொடிக்கும் – அப்பனை எப்படி கொல்லலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த, எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பிற்கு சென்ற கோடை விடுமுறையின் இரவொன்று, ஞாயிறு மதியம் அளவுக்கதிகமாக கத்திரிக்காய் பஜ்ஜியை சாப்பிட்டு மந்தமான வயிற்றுடன் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் ஆறாம் வகுப்பு மாணவன், நூலகம் சென்று திரும்பிக் கொண்டிருந்த பதினொன்றாவது படித்துக் கொண்டிருந்தவன், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்த செய்தித் தாளில் என் எண் இல்லாததை நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் தாளை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மதியம்- என் வாழ்வின் முடிந்து போன வெவ்வேறு கணங்களுக்கு சென்று மீண்டு கொண்டிருந்தேன். நான் காலப் பயணமோ, கடிகாரத்தின் மூன்று பதினெட்டின் நிஜத்தில் இருப்பதை உணர்ந்தபடியே அந்நினைவுகளை மீட்டுக் கொண்டிருப்பதையோ செய்யவில்லை, மீண்டும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்தக் கணங்களில் முன்பைப் போலவே பங்கேற்றுக் கொண்டிருந்தேன். மனப்பிறழ்ச்சியில் சிக்கிக் கொண்டிருக்கிறேனோ? ‘கடந்த காலத்தை தவிர்த்து காலத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை’ என்று ரூமேனிய நாட்டிலிருந்து சொல்லிய மீர்ச்சா கர்த்தரெஸ்கோ என்னை ஆற்றுப்படுத்தினார். ஆனால் இந்தக் கணங்கள் உண்மையில் நான் முன்பே வாழ்ந்தவைதானா அல்லது எனது கற்பனையா என்று எனக்கு சந்தேகம் எழ “You do not describe the past by writing about old things, but by writing about the haze that exists between yourself and the past”* என்று கர்த்தரெஸ்கோ அறிவுறுத்தினார். கடிகார காலத்திற்கு இணையாக ஆனால் எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருந்த, என் வாழ்வின் நடந்ததாக நான் நம்பிக்கொண்டிருக்கும், இப்போது மீண்டும் உயிர்பெற்றிருக்கும் கணங்களால் நிறைந்த ‘என்னுடைய’ காலத்தோடு பொருத்திப் பார்த்து அவர் சொன்னதைப் புரிந்து கொள்ள முயன்றேன்.
I am a voyeur of my own childhood and youth, trying to understand what is happening behind the blinds*
இலாஹி மளிகைக் கடை பாய் வீட்டின் முன்னறையில் அமர்ந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
‘ரெண்டு மாசமாகிடுச்சு, இந்த மாசத்தோட மூணு, மொத்தமும் வேணாம், ஒரு மாச மளிகையாவது தாங்க’
‘பி.எப் பணத்துக்கு அப்ளை பண்ணிருக்கேன், இன்னும் ஒரு வாரத்துல வந்துடும், தந்திடறேன்’
‘ஸார் எப்ப வருவாரு, இப்பலாம் அவர கடை பக்கம் பாக்க முடியறதில்ல, பண பாக்கி இருக்கட்டும், அதுக்காக மூஞ்சி கூட காட்டாம இருக்கறது நல்லாவாருக்கு ‘
‘…’
‘எங்க போயிருக்காரு’
‘இங்கதான் லைப்ரரிக்கு, இல்லடா’ என்று இவனைப் பார்த்து அம்மா கேட்க தலையசைக்கிறான்.
‘செட்டித் தெரு வழியாத் தானே போகணும்’
‘..’
‘கெளம்பறேன், சார கடைக்கு வந்து போக சொல்லுங்க’
பாய் கிளம்புகிறார். மூன்று குடித்தனங்கள் உள்ள வீட்டின் பின்பக்கத்தில் கடைசி போர்ஷன் நான் வசித்தது. இரண்டாவது போர்ஷனில் வசிக்கும் சுந்தரி அக்காவிடம் ஓரிரு கணங்கள் பேசிவிட்டு செல்கிறார் பாய், அக்காவும் அவர் கடையில் தான் மளிகை வாங்குகிறார். அக்காவின் போர்ஷனை கடந்தவுடன் வரும் ஒராள் செல்லும் அகலமுடைய சந்தை கடந்து வீட்டு வாசலை அடைந்து பைக்கை எடுத்துக் கொண்டு தெரு முனையை பாய் தாண்டும் வரை பார்த்து விட்டு என் போர்ஷனுக்கு வந்தவன் ‘பாய் போயிட்டாருமா’ என்கிறேன்.
சாத்தப்பட்டிருந்த உள்ளறைக் கதவை அம்மா தட்ட அப்பா வெளியே சிரித்தபடியே வருகிறார். முகம் மாறும் அம்மா வீட்டின் மூன்றாவது அறையான சமையற்கட்டிற்குள் நுழைகிறாள்.
oOo
பள்ளியாண்டின் முதல் நாள், முதல் பீரியட். புது வாத்தியார், முந்தைய வருடங்களில் வகுப்பெடுத்திருந்த ஆசிரியர்கள் என்றால் தப்பித்திருப்பேன். ஒவ்வொருவராக எழுந்து நின்று தங்கள் பெயர், தந்தையின் உத்தியோகம் போன்றவற்றை சொல்கிறார்கள். என் முறை வந்ததும் என் அப்பனின் உத்தியோகமாக எப்போதும் சொல்லும் பொய்யையே இப்போதும் வேகமாக சொல்லி முடித்து அமர்கிறேன். அருகில் அமர்ந்திருக்கும் சந்துருவிற்கு என் அப்பன் வேலைக்கு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன என்ற உண்மை தெரியுமென்றாலும், அவன் அதை வெளிக் காட்டிக் கொண்டதில்லை. வகுப்பில் வேறு யாரும் அறிய வாய்ப்பில்லை என்றாலும், இப்போது அடுத்த பெஞ்ச்சில் சுய அறிமுகம் செய்து கொண்டிருக்கும் விக்னேஷை விட்டு விட்டு எல்லோரும் ஏன் என்னையே பார்க்கிறார்கள்? உமா என்ன நினைப்பாள், அவள் தந்தை நிறைய நிலபுலன் வைத்திருக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள், ‘லான்ட்லார்ட்’ என்று தான் தந்தையின் உத்தியோகம் குறித்து சொல்கிறாள். வீட்டில் கார் கூட உள்ளது. மேஜை மீது தலையை கவிழ்த்துக் கொள்பவன் மீண்டும் நிமிரும் போது இறுதி பெஞ்ச்சின் ராமகிருஷ்ணன் குரல் கேட்கிறது, அனைவரும் சாரையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மீதமிருக்கும் ஆறு பீரியட்களில் எத்தனை புதிய வாத்தியார்கள் வரப் போகிறார்கள்? அத்தனை முறை நான் பொய் சொல்வதை ஏளனத்துடன் வகுப்பறையில் அனைவரும் கவனித்துக் கொண்டிருப்பார்கள், அடுத்த வருடம் முதல், பள்ளி திறக்கும் தினத்தன்று லீவ் போடுவது தான் நல்லது.
oOo
‘தாத்தா போயிட்டாரு’, காலையில் பால் ஊற்றும் போது சங்கர் சொன்னான்.
‘ஒன் தாத்தாவா’
‘மண்டபத்துல தங்கியிருந்தாரே அந்த தாத்தா’
‘ஒத்தக் கண்ணு தாத்தாவா என்னாச்சு’
நான் வசித்த போர்ஷனின் பின்புறம் இருந்த காலி மனையை எங்கள் பக்க சுவற்றில் அமர்ந்த படி பார்த்துக் கொண்டிருப்பதும், அங்கு சங்கர், மனையின் மறு முனையில் ஓட்டு வீட்டில் குடியிருந்த பாச்சு, அவன் சகோதரன், என்னுடன் படிப்பவர்கள் இவர்களுடன் விளையாடுவதும் என் வழக்கம். மனையின் வலது புறத்தில் இருந்த மண்டபத்தில் வசித்து வந்த அந்த தாத்தாவை அப்படி விளையாடும்போது பந்து அங்கு சென்று விட்டால் எடுத்துக் கொண்டு வரும் போது பார்த்ததுண்டு, அப்போது தான் அவர் அணிந்திருந்த தடிமனான கண்ணாடியின் வலது கண்விழி கிட்டத்தட்ட மூடிய நிலையில் இருந்ததை கவனித்தேன்.
‘முந்தாநேத்து ராத்திரி தூக்கத்துலயே போயிட்டாரு, நேத்து பத்து மணி வாக்குல தான், பெரியவர் வெளிய வரலையேன்னு போய் பார்த்தேன், அப்பறம் நாங்களே காரியத்த பாத்தோம்’ என்றான் சங்கர். மண்டபத்தை அடுத்திருந்த இடத்தில் தான் அவனுடைய மாட்டுத் தொழுவம் இருந்தது.
‘அவருக்கு யாரும் இல்லையா’
இல்லையென்று தலையாட்டிய சங்கர், ‘நீயும் எப்பப் பாரு சாவு நியூஸ் தான் காலங்காத்தால சொல்ற, எம்.ஜி.யாருக்கும் இப்படித் தான் சொன்ன’ என்று நான் கூறியதற்கு சிரித்தான். மூன்று வருடங்களுக்கு முன் எம்.ஜி.யார் இறந்த செய்தியை அவன் தான் கிட்டத்தட்ட இதே நேரத்திற்கு என்னிடம் சொல்லியிருந்தான்.
‘புதுசா யாரோ வராங்க போலிருக்கு’ என்று மனையின் இடது புறத்தில் இருந்த பங்களாவை சுட்டி நான் கேட்க ‘க்ளப் வருது’ என்று சொல்லி விட்டு கிளம்பினான் சங்கர்.
oOo
I, remember, that is, I invent. I transmute the ghosts of moments into weighty, oily gold.*
மூன்று குடித்தனங்கள் உள்ள வீட்டின் பின்பக்கத்தில் கடைசி போர்ஷன் நான் வசித்தது. ட்யுஷன் முடித்து நான் திரும்பும் போது, எங்களுக்கு முந்தைய, என்னை விட இரண்டு வயது சிறிய அனுவின் போர்ஷன் முன்பு எலி உரத்த குரலில் அவள் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார். இலாஹி ஸ்டோர்ஸ் பாய், என்னளவில் எலியாக மருவி பல வருஷங்கள் ஆகி விட்டன. ‘கிஸான் ஜாம் கொடுங்க எலி’ என்று அவரிடம் நேரடியாகவே ஒரு முறை கேட்டு சமாளித்த அனுபவம் எனக்குண்டு.
‘எவ்ளோ லேட்டானாலும் என்னிக்காவது தப்பா பேசிக்கிருக்கேனா உங்கள்ட்ட’
‘இல்ல பாய் கொடுத்தர்றேன்’ சன்னமாகத் கேட்ட அனு அப்பாவின் குரலைத் தாண்டி என் போர்ஷனுக்குள் சென்றேன். பின்னாலேயே பாயின், ‘அது கேக்கல ஸார், நீங்க ஏன் இப்படி பண்ணீங்க, அப்றம் தரேன்னு, சொல்லிருக்கலாம் சத்தம் போட்ருக்கேனா அதவிட்டுட்டு பாப்பாட்ட’
தொடர்ந்து பாயின் அதே கேள்விகளுக்கு அனு அப்பாவின் மெல்லிய குரலொலி. பேச்சு சத்தம் அடங்கிய பின் வெளியே வந்து போர்ஷனின் பின்புறம் சென்றேன். அடுத்திருந்த காலி மனையையொட்டி இருந்த சுவற்றில் அமர்ந்திருந்த அனுவைப் பார்த்து திரும்ப எத்தனித்தவனை அவள் அழைக்க நானும் சுவற்றிலமர்ந்து, மனையில் வளர்ந்திருந்த பஞ்சு மரத்திலிருந்து வெடிச்சு சிதறி காற்றில் மிதந்து கொண்டிருந்த பஞ்சுச் பொதிகளை பார்த்து கொண்டிருந்தேன்.
‘பாய் வந்தா நா இல்லேன்னு சொல்ல சொன்னாரு அப்பா. அவர் போனப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு அப்பா தெருக்கு போனாரு, பாய் அவர் பிரெண்டோட பேசிட்டிருந்திருக்கார் அப்பாவ பாத்துட்டார்’
‘..’
‘அப்ப ஆரம்பிச்சது, இப்டி பண்றாருன்னு இத சொல்லிட்டாரு.இந்த வயசுலேயே இப்படி பொய் சொல்றியே, இத தான் படிக்கறியானு என்ட்ட கேக்கறாரு.’
‘..’
‘நான் அப்பவே வேணாம்னு சொன்னேன், பரவால்ல என்ட்ட காசு இருக்கு சைக்கிள் வாங்கித் தரேன்னு அப்பா தான் சொன்னார். ஆனா மளிகைக்கு தர வேண்டிய பணத்துல தான் வண்டி…’
பேச்சை நிறுத்தி அழுகையை அடக்க முயற்சிக்கிறாள். அவள் பக்கம் திரும்பாமல் உள்ளங்கையை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
‘அப்பா கோயிலுக்கு போயிட்டேன் வரேன்னு அஞ்சரைக்கு போனாரு, இன்னும் வரல’
இரவு ஒன்பது மணியளவில் அனு வந்து சொல்ல, ராமர் கோவிலுக்குச் சென்றேன். ஸ்ரீராமஜெயம் எழுதி கோவிலில் சமர்ப்பித்தால் படிப்பு நன்றாக வரும் என்று தாத்தி சொன்னதற்கு ‘அதெல்லாம் சும்மா’ என்று சொல்லிவிட்டு பின் அப்படி பேசியதற்காக ராமர் கண்ணைக் குத்துவாரோ என்று பயந்திருக்கிறேன். அவ்வப்போது நண்பர்களுடன் கோவில் மண்டபத்தில் அமர்ந்து பேசினாலும், எப்போதேனும் தான் சுவாமி தரிசனம் செய்வது. அப்போது அர்ச்சகர் தரும் மிதமான கார ருசி கொண்ட துளசியை உண்ட பின் வாயினுள் பரவும் நறுமணமும், சடாரியை அவர் தலையில் வைப்பதும் காதருகில் கிறுகிறுப்பை ஏற்படுத்தும். தீர்த்தத்தை முழுங்கும் போது தொண்டை கட்டி விடுமோ என்ற தயக்கமும், இப்படி நினைப்பதால் ராமர் கோபித்துக் கொள்வாரோ என்ற அச்சமும் எனக்கு உண்டு, அதுவும் இந்த வருடம் பனிரெண்டாவது வேறு, யாரையும் பகைத்துக் கொள்ள முடியாது.
கொடிமரத்தை பார்த்தபடி அமர்ந்திருந்த அனு அப்பா, நான் இரண்டு மூன்று முறை அழைத்த பின் என் பக்கம் திரும்பினார்.
‘வீட்ல தேடறாங்க ஸார்’ என்றேன் .
மீண்டும் கொடி மரத்தை வெறித்தபடி ‘வரேன்பா நீ போ’
‘….’
‘யுனிபார்ம் வாங்கித் தர வக்கில்ல, சாக்ஸ்லாம் எலாஸ்டிக் போய்டுச்சு. ரப்பர் பேண்ட் வெச்சு கட்டிக்கறா. அவ எதுவும் கூட சொல்லாம சமாளிச்சுடுவா, டென்த்தாச்சே, ஸ்கூலுக்கு பதினஞ்சு இருவது நிமிஷம் நடந்து போறதுக்கு சைக்கிள்ள போனா அவளுக்கு வசதியாருக்குமேன்னு தான் வாங்கித் தந்தேன் ‘
உணர்ச்சியற்ற குரலில் கொடி மரத்தை பார்த்தபடி கொண்டிருந்தார். அனுவைக் கூட்டி வரலாம் என்று திரும்பியவன் மீண்டும் அவர் அருகில் சென்றமர்ந்தேன். தரிசனம் முடித்து ஒரு சிலர் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
‘ஒங்களுக்காகத் வெய்ட் பண்றாங்க ஸார் நீங்க வந்தா தான் சாப்டுவாங்க’
‘நான்லாம் பீயைத் தின்னலாம்’
பின்னகர்ந்தவன் சில நொடிகள் கழித்து, ‘எங்க வீட்லயும் பீ தின்ருக்கோம் ஸார்’ என்றேன்
oOo
இரண்டு மாத விடுமுறைக்குப் பின் பள்ளி மீண்டும் உயிர் பெற்றிருந்தது. புதிய சீருடைகளைவிட அதிகமாக சற்றே சாயம் போன சென்ற வருடத்திய வான் நீல சட்டை, அடர் நீல பேண்ட், ஸ்கர்ட்கள். முட்டிவரை நீளும், ஆடுசதையின் நடுப்பகுதி வரை நீளும் காலுறைகளுக்கு இணையாக நைந்து, கணுக்காலுக்கு சற்று மேல் வரை மட்டுமே நீளும் காலுறைகள். சில புதிய ஷூக்கள். கழுத்துப் பகுதியில் சுருக்குப் போடப்பட்ட டைகள், முடிச்சை நெஞ்சுப் பகுதி வரை இறக்கி டையை அணிந்திருக்கும் சில பயல்கள். தேர்வாகாமல் அதே வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டியவர்களின் அசௌகர்யம். புதிதாக பள்ளியில் சேர்ந்திருப்பவர்களின் ஆரம்ப கட்ட கூச்சம்.
வகுப்பறைக்குள் நுழைந்தேன். இந்த வருடம் ஒன்பதாம் வகுப்பு என்பதால் இனி பேண்ட் தான் அணிய வேண்டும். முதல் முறையாக முழுக்கால் சட்டை அணிந்த சந்தோஷம் வகுப்பறையில் இருந்த பயல்களிடம். நானும் ஒரு வாரம் முன்பு வரை பேண்ட் அணிந்து பள்ளிக்குச் செல்வதைப் பற்றி கிளர்ந்திருந்தேன், பள்ளி திறந்த முதல் நாள் நடக்கக் கூடிய அந்த சம்பவம் நினைவுக்கு வரும் வரை. டைம் டேபிளை குறித்துக் கொண்டிருக்கும்போது, ‘யாராவது இதுவரைக்கும் நமக்கு வராத ஸார் இந்த வருஷம் க்ளாஸ் எடுக்கறாங்களான்னு தெரியுமாடா’ என்று பிரபாகரிடம் கேட்டேன். சதாசிவம் சாரிடம் ட்யுஷன் செல்கிறான் எனவே தெரிந்திருக்கக் கூடும். ‘சதாசிவம் ஸார் தாண்டா க்ளாஸ் டீச்சர், வேற தெரியலடா’ என்று சொன்னான். இன்றைய தினத்தை எப்படியாவது கடந்தால் போதும், மீதமிருக்கும் பள்ளியாண்டு என்னுடையது தான்.
கோடையை கழித்ததை பற்றிய பரஸ்பர பிரஸ்தாபங்களூடே உமா வந்து விட்டாளா என்று எத்தேச்சையாக நிகழ்வது போல் பெண்கள் பெஞ்ச் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்று அவமானப்படாமல் தப்பித்து விட்டால் அடுத்த வருடம் வரை பிரச்சனை இல்லை.
விடுமுறை நாட்களின் சோம்பல் இன்னும் மிச்சமிருக்கும் புதிய ஆரம்பத்தின் கிளர்ச்சியில் தளும்பி இருந்த வகுப்பறைச் சூழலில் என்னுள் நிறைந்திருந்த அச்சத்தை விலக்கி வைக்க முடிந்தது. முதல் மூன்று பீரியட்களுக்கு முந்தைய வருடங்களில் வகுப்பெடுத்திருக்கும் ஆசிரியர்கள், இன்னும் நான்கு பீரியட்கள்தான். அடுத்து வந்த ஆசிரியர் இதுவரை எங்களுக்கு பாடமெடுக்காதவர். தன்னை அறிமுகம் செய்துகொண்டபின் ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டு வர என் முறை. எழுந்து என் பெயரைச் சொல்லிவிட்டு அமர முயன்றவனை கையைசைத்து நிறுத்தினார் ஸார்.
‘பாதர் என்ன பண்றார்?”
oOo
நான் வசித்த போர்ஷனின் பின்புறம் இருந்த காலி மனையை எங்கள் பக்க சுவற்றில் அமர்ந்த படி பார்த்துக் கொண்டிருப்பதும், அங்கு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதும் என் வழக்கம். மனையின் இடது புறத்தில் இருந்த பங்களாவில் பேய் உலவுவதாக சொல்லப்பட்ட வதந்தியில் நாங்கள் கிளர்ந்திருந்த அந்த கோடை காலத்தில் தான் அங்கு க்ளப் ஒன்று வருவதாக அறிந்து இன்னும் பரவசமடைந்தோம்.
‘க்ளப்னா டான்ஸ்லாம் இருக்கும்ல’
‘அலையாத நாயே’
எங்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் வெறும் சீட்டாட்டம் நடக்கும் இடமாக மட்டுமே புது க்ளப் அமைய, அதைப் பற்றி புலம்பிக் கொண்டே மனையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தான் அவனுடைய அறிமுகம் கிடைத்தது. செங்கல்பட்டிற்கு அருகிலிருந்த கிராமத்தில் இருந்து வந்திருந்தவன், க்ளப்பிலேயே தங்கி அதன் மேலாளருக்கு உதவியாக வேலைகள் செய்து கொண்டிருந்தான். மதிய நேரம் பெரும்பாலும் வேலை இருக்காது என்பதால் விடுமுறை நாட்களில் எங்களுடன் விளையாடிக் கொண்டிருப்பான். அனைவருடனும் எளிதில் பொருந்திப் போகும் அவனுடைய இயல்பை நாங்கள் விரைவிலேயே தெரிந்து கொண்டு விட்டாலும், மனையின் வலது புறத்தில் இருந்த மண்டபத்தில் தனியாக வசித்து வந்த தாத்தாவுடன் அவன் நட்பாகியது எங்களை வியப்பிலாழ்த்தியது.
‘இவ்ளோ வருஷமா நாங்க இங்க விளையாடறோம், எங்கள அவரு எதுவும் திட்டலாம் மாட்டாரு, ஆனா பேசினதே இல்லையே, எப்படிடா நீ ப்ரண்ட் புடிச்ச’ என்று நான் அவனிடம் கேட்டதற்கு சிரிக்க மட்டும் செய்தான்.
‘சொதந்திர போராட்டத்துல அவர் கலந்துகிட்டிருக்காரு தெரியுமா. அதுவும் ஒத்த கண்ணோட, பதினேழு, பதினெட்டு வயசுல ஏதோ கொழந்தைய காப்பாத்த போய், கண்ணு புட்டுகிச்சு அவருக்கு’ என்று அவன் சொல்லிய அன்று, அவனை அழைத்துக் கொண்டு தாத்தாவை பார்க்கச் சென்றோம்.
‘யார தாத்தா காப்பாத்தினீங்க’, ‘மெடல் எதாவது கொடுத்தாங்களா’ போன்ற எங்களின் கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல், வேறேதெல்லமோ பேசி சமாளித்து அனுப்பினார் தாத்தா. அதற்குப் பின் அவனும் தாத்தா குறித்து எங்களிடம் பேசியதில்லை. ‘என்னடா ரெண்டு பெரும் குசு குசுன்னு பேசிக்கறீங்க’ என்று சந்துரு கேட்டதற்கும் வெறும் சிரிப்பு தான்.
கோடை விடுமுறை முடிந்து, ஆகஸ்ட் மாத மத்தியில் ‘என்னடா அவன் இப்பலாம் வரதில்ல’ என்று சந்துரு சொன்ன போது தான் அவனை பார்த்து ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டதை உணர்தோம். ‘தெர்லியேடா, க்ளப்ல கேட்டுப் பாக்கலாமா’
‘அங்க யார கேக்கறது’
யாரை கேட்பது என்று நாங்கள் முடிவெடுப்பதற்குள் அந்த மாத இறுதியில் க்ளப் மூடப்பட்டது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தாத்தா காலமாகி சில நாட்களுக்குப் பின் பள்ளியிலிருந்து திரும்பியவன் உடை மாற்றிக் கொண்டு பின்பக்கம் சென்றவன், காலி மனையில் வளர்ந்திருந்த பஞ்சு மரத்தினடியில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து ‘என்னடா ஆளக் காணும்’ என்று சுவற்றிலேறி குதித்து அவனருகில் சென்றேன்.
‘வீட்ல சின்ன பிரச்சன’
‘என்னடா’
‘அப்பா விட்டுட்டுப் போயிட்டாரு, கொஞ்ச நாள் அவர தேடினோம், அப்பறம் இங்க க்ளப்ப வேற மூடிட்டாங்க, எங்க வருது. திடீர்னு தாத்தாவ பாக்கணும் போல இருந்தது அதான் வந்தேன், அவர் வெளில போயிருக்கார் போல’
‘டேய் அவர் இப்பத் தான் இறந்தாரு, பத்து நாள் கூட ஆகல’ என்று நான் கூறியவுடன் எதவும் சொல்லாமல் வெறித்துப் பார்த்தபடி சில கணங்கள் அமர்ந்திருந்தவன், தலையை குனிந்தான். அவனுடல் குலுங்க ஆரம்பித்தது.
oOo
Space is Paradise and time is inferno.*
மூன்று இருபத்து நான்காகி விட்டிருந்தது. இன்னுமொருமுறை சென்று வருவோம் என்று பாண்டிச்சேரியில் இருந்து செங்கல்பட்டை அடைந்தேன். பெரிய மணிக்காரத் தெருவில் நான் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரின் மகன், தந்தைக்கு எழுப்பியிருந்த, -‘செல இருக்கற வீட்ல தான குடியிருக்க’ என்று என் வசிப்பிடத்தின் அடையாளமாகிப் போன- மார்பளவு சிலையின் இரு கற்கண்களும் ஒற்றை விழியாக இணைந்து அதிலிருந்து சீழ் வழிந்து கொண்டிருந்தது. மகனையும், மருமகளையும் சபித்துக் கொண்டிருந்த பற்கள் எதுவும் இல்லாத வாயிலிருந்து வந்த துர்நாற்றம் உண்டாக்கிய குமட்டலை அடக்கியபடி ஒராள் மட்டுமே செல்லக் கூடிய அகலமான சந்தினுள் நுழைந்து இரண்டாவது போர்ஷனை அடைந்த போது, அங்கு நின்றிருந்த, நிஜத்தில் அந்த போர்ஷனில் வசித்த சுந்தரி அக்கா, அவருக்கு முன்பு அங்கு குடியிருந்த கோம்ஸ் மிஸ் இருவரும் நின்றிருந்தார்கள். ‘என்னப்பா, இந்த போர்ஷன்ல குடியிருக்கறவங்க மளிகை பணம் குடுக்க முடியாம ஒளிஞ்சு மாட்டிக்கிட்டாங்கன்னு ஏன் பொய் சொல்ற நீ.’ என்று அவர்கள் கேட்க ‘நான் ஒங்க பெயரை யூஸ் பண்ணலையே’ என்றேன். ‘ஆனா ரெண்டாவது போர்ஷன்னு சொல்றேல, அதுல நாங்க தான இருந்தோம், அனுவா இருந்தா?’
‘ஸாரி’
‘ஈஸியா சொல்லிட்ட. ஒங்கப்பா வேலைக்கு போய் சம்பாதிக்கலைனா அதுக்கு எங்கள ஏன்ப்பா அசிங்கப்படுத்தற, பத்திகிட்டு வருது.’
தொடர்ந்து என்னை நோக்கி கையை நீட்டியபடி பேசிக்கொண்டிருந்த இருவரும், உருகி வழிந்து இணைய, சுந்தரி அக்காவின் உடலும் கோம்ஸ் மிஸ் எப்போதும் அணியும் முட்டி வரை நீளும் கையில்லாத ஒற்றை ஸ்கர்ட் அணிந்தவளாக உருவெடுத்த பெண்ணிற்கு கோம்ஸ் மிஸ்ஸின் மகள் முகம். ‘ஐரீன்’ என்று என் புனைவுகளில் அவளை குறிப்பிட்டிருந்தாலும், அவள் பெயரோ முகமோ எனக்கு நினைவில் இல்லை. இந்த முகம் அவளுடையது என எனக்கு ஏன் இப்போது தோன்றுகிறது? அப்பெண்ணின் அருகில் சென்றேன். சுந்தரி அக்காவின் மிருதுவான உடல் சருமமெங்கும் சுருக்கங்கள் புழுக்கள் போல் புடைத்து நெளிய ஆரம்பிக்க கேவலுடன் பின்வாங்கி மீண்டும் முன்சென்று அவளுள் நுழைந்து வெளியேறியவன், என் போர்ஷனை தவிர்த்து விட்டு முதலில் காலி மனைக்குச் சென்றேன். தாத்தா பஞ்சு மரத்தினடியில் அமர்ந்து கொண்டிருந்தார். அங்கு வந்த என் க்ளப் ‘நண்பன்’ அவர் முன் அமர்ந்து அழ ஆரம்பித்தான். அவன் நிஜமில்லை என்பதைத் தாத்தாவிடம் சொல்வதற்காக அவரருகில் சென்றபோது, அழுது கொண்டிருப்பவனைத் தேற்றிக் கொண்டிருந்த தாத்தாவின் அழுகிப் போன கண்ணிலிருந்து சீழ் வழிந்து தரையில் சிந்த, அதன் மீது ‘நண்பனின்’ கண்ணீர் துளியொன்று வீழ்ந்தது. அந்த சீழ் துளியிலிருந்து எழுந்த, பொசுங்கிய வாடை கொண்ட புகை நெருப்பாக மாற, திரும்பி ஓடி சுவற்றின் மீதேறி என் வீட்டுப் பக்கம் குதித்தவன் திரும்பிப் பார்த்தேன். இருவரும் உள்ளெரிந்து கொண்டிருக்க, அவர்களைச் சுற்றி காலி மனை முழுதும் நெருப்பால் நிரம்பியிருந்தது. அந்நெருப்பிற்கான அவிர் பாகமாக மனையில் என்னுடன் விளையாடிய அனைவரும் அதில் அமிழ்ந்து கொண்டிருந்தார்கள். என் போர்ஷனுக்குள் நுழைந்தேன். அம்மா சுவற்றுடன் ஒண்டி அமர்ந்திருக்க என் அப்பன் நீள் வயரை உள்ளங்கையில் சுற்றிக் கொண்டு மீதமிருக்கும் பகுதியை அவள் முகத்தின் நேரே ஆட்டியபடி ஏதோ கூறிக் கொண்டிருந்தான். ஆனால் இது நாங்கள் மெட்ராஸில் -நான் ஒன்றாவது படிக்கும் வரை – வசித்த போது நடந்த சம்பவம் இல்லையா? இப்போது அம்மா தலை கலைந்து போர்ஷன் வாசலில் பயந்தபடி நின்றுகொண்டிருக்க அவளை உள்ளே செல்லுமாறு அருகில் நின்றுகொண்டிருக்கும் ஒன்பதாவது படிக்கும் நான் சொல்கிறேன். என் அப்பன் முன்னறையிலிருந்து ஏதோ கூற ‘ஓத்தா பாஸ்டர்ட்’ என்று கத்தியபடி அவன் மீது என் செருப்பை வீசி எறிகிறேன். நான் முடிவெடுத்திருந்தது போல் அந்த வருடமே அவனைக் கொன்றிருந்தாலும் இந்த நினைவுகளை என்ன செய்திருக்க முடியும். பிடிமானத்திற்காக சுவற்றின் மீது சாய்ந்தேன்.
என் காலருகில் குமாஸ்தா டெஸ்க் என்று நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது வாங்கியதிலிருந்து அழைத்த, என்னுடைய இருப்பத்தியைந்தாவது வயதில் செங்கல்பட்டை விட்டு குடி பெயரும் வரை, நான் அதை உபயோகிப்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், வேறு யாருக்கும் கொடுக்க மனமில்லாமல் வைத்திருந்த, மரத்திலான எழுதும் மேஜை, கரையான் அரித்துக் கிடந்தது. அதன் மேல் பரவியிருந்த கரையான் முட்டைகள். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொன்றாக உடைந்து, அவற்றினுளிருந்து, நான் எழுதிய வீட்டுப்பாடத் தாள்கள்-
“My lips are burning at the touch of your skin
Will your lips be cool at the touch of my lips”
என்று உமாவை எண்ணி எழுதி, பின் அனு என்ற, அடுத்த போர்ஷனில் குடியிருக்கும் பெண்ணிற்காக எழுதியதாக என் புனைவொன்றில் மாறிய தாள், எல்லாம் தோன்றி ஒவ்வொரு எழுத்தாக கருகி உதிர, வெற்றுத் தாள்களே மிச்சமிருந்தன. உமாவிற்கு என்ன ஆனது? போர்ஷனை விட்டு நீங்கியவன் நான் படித்த பள்ளியினுள் நுழைந்தேன். த்ரீ-பி,போர்-பி, பைவ்-பி,சிக்ஸ்-எப், என பன்னிரெண்டாவது வரை நான் படித்த அனைத்து செக்ஷன்களின் பெயர்கள் ஒட்டப்பட்டிருந்த வகுப்பறை கதவின் தாழ்ப்பாளை தொட அது தீ நாகமாக நெளிந்தது, பின்னகர்ந்து கதவை நான் எட்டி உதைக்க அது சருகுகள் போல் நொறுங்கி உதிர்ந்தது. உள்ளே பள்ளிக் காலம் முழுதும் நான் எழுதிய அத்தனை பரிட்சைகளின் விடைத்தாள்களும் எரிந்து கொண்டிருந்தன. முருகி உடைந்த தாளொன்று சத்தமிட்டு சிரிக்க அதை எடுத்துப் பார்த்தேன், எட்டாம் வருட காலாண்டு தேர்வில் ஆங்கிலத்தில் பெற்றிருந்த தொண்ணூற்றி மூன்று மதிப்பெண்கள் இளித்தபடி என் உள்ளங்கையில் உடைய, அந்தத் துகள்களை தூக்கி எறிந்தேன். பெண்கள் அமரும் பகுதியில் நான்கு எலும்புக் கூடுகள், பத்து முதல் பதினேழு வயதான உமாவின் எலும்புக் கூடுகள் அவை என்று அவற்றின் அடிப் பகுதியைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டவன் மீண்டும் ஒருமுறை அவற்றை பார்த்தேன். அனுவின் ஜாடையும் அவற்றில் இருப்பது போல் தோன்றுவது எனது உளமயக்கமா?
‘பாதர் என்ன பண்றார்’ தமிழய்யா என்னை கேட்கிறார். அடுத்து போதையில் வகுப்புக்கு வரும் ஏழாம் வகுப்பு மேத்ஸ் ஸாரிடமிருந்தும், ஹையர் செகண்டரியில் கெமிஸ்ட்ரி சொல்லித் தந்த, ‘சனீஸ்வரன்’ என்று நாங்கள் அழைக்கும், நீண்ட மூக்கும், தலைசாய்த்த பார்வையும் உடைய ஸாரிடமிருந்தும் அதே கேள்வி. ‘பாதர் என்ன பண்றார்’, ‘பாதர் என்ன பண்றார்’ வகுப்பறையில் உள்ள அனைவரும் என்னிடம் இதே கேள்வியைக் கேட்கிறார்கள். உமாவின் பார்வையில் நான் உணர்வது பரிதாபமா, ஏளனமா. ‘என் அப்பன் நான் நாலாவது படிக்கும் போது கடைசியா வேலைக்கு போனான்’ என்று கத்தினாலும் தொடர்ந்து அதே ‘பாதர் என்ன பண்றார்’. ‘நான் சொல்றது கேக்கலையா’ என்று கையசைத்தபடி கூறியவன், ஒட்டிய உதடுகளுடன் வாய் இறுக மூடியிருப்பதை அறிந்தேன். என் அப்பனைப் பற்றி சொல்ல நினைக்கும் போதெல்லாம் இப்படி நடந்து விடுகிறது. ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ ராகத்தில், ஐம்பத்தேழு சகாக்கள் மற்றும் ஏழு சார்களின் குரல்கள் ஒற்றை ‘பாதர் என்ன பண்றார்’ ஒலி வடிவமாக என்னை நோக்கி வர வகுப்பறையை விட்டு வெளியே ஓடினேன். பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் என் பெயர் வராமல் அவனமானமடைந்து, இரண்டு மாதங்கள் கழித்து, பள்ளி அடுத்த ஆண்டிற்கு திறந்த பின், ஒரு வழியாக சான்றிதழை வாங்க தலையை போட்டுக் கவிழ்த்தபடி தலைமையாசிரியர் அறைக்குச் சென்று கொண்டிருந்தேன். என் தோளில் மீது அமர்ந்திருந்த ‘பாதர் என்ன பண்றார்’ வடிவத்தை சுமந்தபடி ஓடிய என்னை நிறுத்திய இலாஹி ‘எலி’ பாய் ‘அந்த வயசுல பொய் சொல்ல ஆரம்பிச்சு இப்பவும் சொல்லிட்டிருக்கியே, கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா’ என்றார். அவரை தள்ளிவிட்டு ஓடியவனின் கால்களை பற்றிக் கொண்ட ‘கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா’வையும் இழுத்துக் கொண்டு சென்று என் தோளை நான் பிடித்தேன். என்னை நோக்கித் திரும்பிய நான் ‘காப்பி அடிச்சு மாட்டிகிட்டதால தான நமக்கு ரிசல்ட் வரல, செங்கல்பட்டே சிரிச்சுதேடா. அப்பறம் அப்பன் வேலைக்கே போகாதது, பொய் சொல்லி மாட்டிக்கிட்டது எவ்ளோ அசிங்கம் நமக்கு வெக்கமே இல்லையாடா’ என்று அழ ஆரம்பித்தவன் கண்களிலிருந்து வழிந்த ஆசிட் துளிகளில் மூழ்கினான். நான் என்னை நிரப்பி ஆரம்பித்த அகக்கனலை தணிக்க செங்கல்பட்டின் எல்லையில் உள்ள கொளவாய் ஏரிக்கு சென்றேன். ஏரிக்கு பதில் அங்கு ப்யூகரெஸ்ட் நகரின் டிம்போவீட்டா நதி அக்னி திராவகமாக ஓடிக்கொண்டிருக்க, அதன் கரையில் நின்றிருந்த கர்தரெஸ்கோ ‘கடந்த காலமென்பது எப்போதுமே அனல் நதி தான், அது செங்கல்பட்டானாலும் சரி, ப்யூகரெஸ்ட்டானாலும் சரி’ என்றார்.
‘ஆனா எப்படி ஸார் உங்க கடந்த காலம் இங்க வந்துது’
நதியிலிருந்து காலக் கணங்களை தன் கையின் பள்ளத்தில் தேக்கி, அவற்றை மீண்டும் காலத்தினுள் கவிழ்த்த பின் ‘போகும் காலத்தில் எது யாருடைது’ என்றார். நான் எதுவும் கூறாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘எல்லாம் சுகுமாரன் சொன்னது தான்’ என்றார்.
‘அப்படியே இருக்கட்டும் ஸார், ஆனா எதுக்கு முடிஞ்சு போனதை பத்தி நினைச்சு நாம இவ்வளவு கஷ்டப்படணும்’ என்று நான் கேட்டதற்கு ‘எதிர்காலம் என்று எதுவுமே கிடையாது, கடந்த காலம் தான் எல்லாமே, காலம் என்று சொன்னால் கடந்த காலம் என்பதைத் தவிர அதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது’ என்று கூறிவிட்டு நெருப்பு நதியில் நுழைந்தவருக்கு பின்னால் நானும் சென்றேன். கால நதியில் கர்த்தரெஸ்கோ எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் செங்கல்பட்டில் நானாகவும், நான் ஐம்பதுகளின் புகரெஸ்ட்டில் அவராகவும் மிதந்து சென்று கொண்டிருந்தோம்.**
பின்குறிப்பு:
*மீர்ச்சா கர்த்தரெஸ்கோவின் (Mircea Cărtărescu), ‘ப்ளைண்டிங்’ (Blinding, ரோமனிய மொழியில் ‘Orbitor’) நாவலின் முதல் தொகுதியிலிருந்து.
** மீர்ச்சா கர்த்தரெஸ்கோ கடந்து சென்று முடித்து விட்ட கணங்களை கால நதியில் நான் வாழ்ந்ததை இங்கு விரிவாகவே எழுதியிருக்கக் கூடும், ஆனால் அவை ‘ப்ளைண்டிங்’ நாவலின் சில பகுதிகளை தமிழில் -அனுமதி பெறாமல் -மொழிபெயர்ப்பதாகவே இருக்கும் என்பதால் அப்படிச் செய்யவில்லை. மேலும், ‘டான் கிஹோட்டே’யை மொழிபெயர்ப்பவர் புதிய புனைவொன்றைதான் படைக்கிறார் என்று போர்ஹெஸ் கூறியிருந்தாலும், அது அவரைப் போன்ற மேதைகளுக்கே பொருந்தும் என்றும், என்னைப் போன்றவர்கள் செய்வது -என் மொழித் திறனின் போதாமையினால்- மோசமான மொழிபெயர்ப்பாக மட்டுமே இருக்கும் என்றும் நம்புகிறேன்.