மகரந்தம்


[stextbox id=”info” caption=”பொருளாதாரத் திட்டமிடல்”]

“நான்கு கிளி இனங்களை டோக்கன் பரிமாற்றப் பணியில் சோதித்தோம். மோசமான, நடுத்தரமான, உயர்ந்த மதிப்பு கொண்ட உணவு வகைகளுக்கு மூன்று வகை டோக்கன்களை மாற்ற இந்தக் கிளிகள் பழக்கப்பட்டன. இவை வெற்றிகரமாக மதிப்புக்குத் தக்க வகையில் டோக்கன்களைக் கொடுத்து உணவுப் பண்டங்களைப் பெறவும் கற்றுக் கொண்டன. இதன்பின், குறிப்பிட்ட ஒரு உணவுப் பண்டம் அல்லது உயர்ந்த வகை உணவுப் பண்டத்தைப் பெற்றுத் தரக்கூடிய டோக்கன், இந்த இரண்டுக்கும் இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சோதனை இவற்றுக்கு வைக்கப்பட்டது. தேர்வுகளை ஒப்பிடத் தேவையான வேறொரு சோதனையில், கிளிகள் உணவுப் பண்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது அதற்கு இணையான மதிப்பு கொண்ட டோக்கன் அல்லது அதைவிட மதிப்பு குறைவான டோக்கனைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற வாய்ப்பு தரப்பட்டது. அனைத்து கிளி வகைகளும் பொருளாதார அறிவுடன் தேர்வு செய்யும் ஆற்றலை வெளிப்படுத்தின. முக்கியமான சோதனைகள் ஒன்றில் பெரிய மகாவ் கிளிகள் மட்டுமே பிற அனைத்து கிளிகளை விடவும் புத்திசாலித்தனமாய் தேர்வு செய்தன. சில கிளிகளுக்கு, குறிப்பாய், ஆப்பிரிக்க கிரே கிளிகளுக்கு, டோக்கன்கள் அதனளவில் மதிப்பு கொண்டவையாய் தெரிகின்றன-பொருளாதார அடிப்படையில் உணவுப் பண்டங்களை தேர்வு செய்ய முடியாத வகையில் இவற்றின் டோக்கன் பற்று தடையாய் இருந்தது இனி வரும் டோக்கன் பரிமாற்ற ஆய்வுகள் இது குறித்து இன்னும் தீவிரமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்”

நேச்சர் என்ற அறிவியல் இதழில் வந்த ஆய்வறிக்கை இது.
கிளிகள் அப்படியொன்றும் நம்மைவிட புத்திசாலிகளும் இல்லை, முட்டாள்களும் இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் கிளிகள் இது போன்ற சோதனைகளை மனிதர்களுக்கு வைக்கும் அளவு முட்டாள்களாக இருக்காது என்பது நிச்சயம்.
இந்த ஆய்வின் அவசியம் என்ன என்று கேட்போருக்கு விவிலிய நூல், செமிதியம், செம்புரட்சி ஆகியவற்றின் மையத்தில் இருக்கும் ஒரு கோட்பாடு பற்றித் தெரிய வேண்டும் என்று மட்டும் சுட்டலாம். இங்கிலிஷில் அதை Reification  என்று சொல்கிறார்கள். கிளிகளுக்கும் இந்தப் பிரமை உண்டு என்று காட்டுவதன் அவசியம் என்ன என்பது கேட்கப்படலாம், ஏனெனில் மனிதருக்கு இந்தப் பிரமையால் பெரும் பிரச்சினைகள் எழும் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். இது பற்றி உங்கள் கருத்து என்ன? எழுதுங்களேன்.

https://www.nature.com/articles/s41598-018-30933-5
[/stextbox]


[stextbox id=”info” caption=”பங்கேற்பு ஆளுகை”]

இணையம் ஒரு மிகப் பெரிய விவாத வெளி – எங்கே பார்த்தாலும் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள், கருத்துகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புரிதல் என்பது மட்டும் வளர்வதேயில்லை, வேறுபாடுகள் தீவிர வெறுப்பாய் மாறுகின்றன. கருத்துகள் தகவல்களின் இடத்தைப் பெற்றுக் கொள்கின்றன, தகவல்கள் கருத்துகளின் இடத்தில் வைக்கப்படுகின்றன. இணைய தளங்களின் வடிவமைப்பே பரபரப்பான உரையாடல்கள் மூலம் விழிகளை நிலைகுத்தி நிற்கச் செய்வதுதான் என்றாகிவிட்டது, ஆக்கப்பூர்வமான விளைவுகள் எதுவும் உண்டா என்பதே சந்தேகம்.

தாய்வான் அரசின் அழைப்பின் பேரில் இளம் அரசியல் ஆர்வலர்கள் சிலர், விதாய்வான் என்ற இணையதளம் ஒன்று அமைத்துள்ளனர். இங்கு விவாதம், உரையாடல் மற்றும் வாக்களிப்பு என்ற இரு உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு ஆம், இல்லை, வேண்டும், வேண்டாம் என்று வாக்களித்து, கருத்துகள் பெற்று, விவாதம் வளர்த்து விடை காண்பதற்கு மாறாய், இந்த தளம் இவ்வாறு இயங்குகிறது: எந்த ஒரு கேள்விக்கும் யாரும் கருத்து சொல்லலாம். ஆனால் கருத்துகளுக்கு பதில் அளிக்க வழியில்லை, அந்த கருத்தை உயர்த்தும் வகையில் அல்லது தாழ்த்தும் வகையில் வாக்களிக்க மட்டுமே இயலும். இதனால் தேவையற்ற திசைகளில் விவாதங்கள் செல்வது தடுக்கப்படுகிறது, ட்ரோல்கள் வேலை செய்ய இடமில்லாமல் போகிறது. எல்லாவற்றுக்கும் மேல், எந்த கருத்துகள் அதிக வாக்கு பெறுகின்றனவோ, அவையே ஏற்கப்படும் என்பதால், இரு தரப்பினரும் மறு தரப்பினரைக் கவரும் வகையில் இணக்கமான கருத்துகளைச் சொல்லி வாக்குகளைக் கவர முயற்சிக்கிறார்கள். இதனால் அனைவரும் ஏற்கத்தக்க தீர்வை நோக்கி விவாதம் நகர்கிறது. இது குறித்த மிக விரிவான கட்டுரை இங்குள்ளது

https://www.technologyreview.com/s/611816/the-simple-but-ingenious-system-taiwan-uses-to-crowdsource-its-laws/
[/stextbox]


[stextbox id=”info” caption=”முக நாற்று நடுதல்”]

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள், நாம் யார் என்பதற்கான அடையாளம் நம் முகம்தான். ஆனால் விபத்துகளில் முகம் முற்றிலும் சேதப்பட்டவர்கள் நிலை இதுவரை ஒன்றும் செய்ய முடியாததாக இருந்து வந்தது. மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாய், இன்று முகத்தை முழுதாகவே தானம் பெற்று மாற்றியமைக்கும் சிகிச்சை வந்து விட்டது. இது வரை நாற்பது பேர் முகம் மாற்று சிகிச்சை பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு மருத்துவ சிகிச்சை குறித்து மனதைப் பிசையும் புகைப்படங்களுடன் ஒரு கட்டுரை இங்கிருக்கிறது. இதில் தொடர்புடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மருத்துவர்கள், தாதியர் என்று அனைவைரையும் கையெடுத்துத் தொழத் தோன்றுகிறது. கருணை மிக்க ஒரு சமூகம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்ல நினைத்தாலும், இங்குள்ள அநீதி வேறெங்கும் இல்லை என்பதுதான் யதார்த்தம். தனி மனிதர்களின் அறவுணர்வு அரசுகளைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதுதான் இந்த நூற்றாண்டின் பெருஞ்சோகம்.

https://www.nationalgeographic.com/magazine/2018/09/face-transplant-katie-stubblefield-story-identity-surgery-science/
[/stextbox]

One Reply to “மகரந்தம்”

  1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற இந்த செய்தியும் இணைப்பும் எனக்கு 25-03-17 சொல்வனம் இதழில் வெளியான என்னுடைய அறிவியல் புனைவான ‘ஆடிப்பாவையை’ நினைவு படுத்தியது. அதில் தலை மாற்று அறுவை சிகிட்சை பற்றி எழுதியிருந்தேன்.அக்கதையைப் பற்றி திரு.Gora எழுதிய விமர்சனத்தை இன்றுதான் பார்த்தேன். அக்கதை மொழிபெயர்ப்பல்ல.அக்கதையின் அறிவியலாளர் உண்மையானவர்.அந்த அறுவை சிகிட்சையின் சாத்தியங்களை வைத்து நான் எழுதிய புனைவு.நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.