கஞ்சனம்

நியு யார்க் நகரத்திற்கு வந்த புதிது. சீனர்களும், இந்தியர்களும், கருப்பர்களும், ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களும் கூடவே கொஞ்சம் வெள்ளையர்களும் கலந்து கட்டி வசிக்கும் இடத்தில் பிள்ளையார் கோவில் இருந்தது. என் வீட்டில் இருந்து ரயிலேறினால், ஃப்ளஷிங் ஸ்டேஷனில் இறங்க வேண்டும். இந்த ஃப்ளஷிங் என்பதை பலமுறை ஃளஷிங் மெடோஸ் எனச் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு தி ஹிந்துவிற்கும் நிர்மல் சேகருக்கும் நன்றி. அங்கேதான் யு.எஸ். ஓபன் நடக்கும். எல்லோருக்கும் திறந்த வாசலாக அமெரிக்கா இருக்கிறது என்பதைத்தான் யு. எஸ். ஓபன் என்கிறார்களோ?
ஃப்ளஷிங் டிரெயின் ஸ்டேஷனில் இறங்கி, கால் மணி நேரம் நடந்தால் கணபதி தெரிவார். கணபதியை விட போகும் வழியில் இருக்கும் நடைபாதை கடைகள் பர்மா பஜாரையும், புரியாத மொழியில் சம்சரிக்கும் மனிதர்கள் சௌகார்பேட்டையையும், நெருக்கமான சாலையில் இண்டு இடுக்கிலாமல், இடித்துத் தள்ளி முன்னேறும் கார்கள் சென்னை வீதிகளையும் ஞாபகப்படுத்தும்.
ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து கொண்டு, வீட்டிற்குள் இருக்கும் நம்மை நோக்கும் குருவி போன்றது வேடிக்கை பார்ப்பது. குருவி நம்மை பார்க்கிறதா. மாடி வீட்டு ஜன்னலில் இருந்து சாலையில் இரை தேடுகிறதா எனத் தெரியாது. அந்த மாதிரி வேடிக்கை பார்க்கும்போது, ஒரு நாள் அந்த வஸ்து கண்ணில் பட்டது.
அது கண்டதும் விற்கும் அங்காடி. அங்கே வாயிலில் அதைத் தொங்க விட்டிருந்தார்கள். பார்ப்பதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி போல் இருந்தது. என்னை அதில் பார்த்தால், வழக்கம் போலவே இருந்தது. என் அருகில் நிற்கும் தோழியைப் பார்க்கும்போதுதான் வித்தியாசம் தெரிந்தது. அவள் இடது கை பக்கம் துப்பட்டாவை தொங்க விட்டிருந்தாள். சாதாரண முகக்கண்ணாடியில் பார்க்கும்போது வலது கை பக்கமாக அந்த துப்பட்டா மாறிவிடும். இந்தக் கண்ணாடியில் உள்ளது உள்ளபடியே, இடது கை பக்கமாகத் தெரிந்தது.
அது “உண்மைக் கண்ணாடி” என்றார் உரிமையாளர். இடதை வலதாகவும், வலதை இடதாகவும் இடம் மாற்றாமல், நேரடியாக பிரதிபலிக்கும் என்றார். சற்றே நய்பால் எழுத்தைப் பற்றி சொல்கிறாரோ என சந்தேகமாகி விட்டது. அந்தக் கண்ணாடியில் என்னைப் பார்க்கும்போது உண்மைத் தோற்றம் தெரிந்தது. என் முகத்தில் கோணல்கள் என்னைக் குறுக வைத்தன. என் புன்னகையின் போலித்தனம் உறைத்தது. என் தலைமுடி வகிடு எவ்வாறு தவறாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை செல்ஃபீ காட்டும் குழப்பத்துடன் நோக்கினேன்.
ஆனால், அந்தக் கண்ணாடி காட்டும் தோற்றமே உண்மைக் காட்சி. நான் எப்போதும் பார்க்கும் பாத்ரூம் கண்ணாடி, அந்தரங்கமாக இருந்தாலும், புரட்டி போட்டே எதையும் காண்பித்தது. இடது என்பதும் வலது என்பதும் நம் வசதிக்காக நாம் வைத்துக் கொண்ட திசைகள். மேலே என்பது கீழே என்பதும் நம் நோக்கில் உருவான வழிகள். ஆனால், ஒளி பாய்ச்சி நம் வடிவத்தைக் கொணரும் உருவங்காட்டி, எப்படி குருட்டுக்கண்ணாடி ஆனது?

இந்தியாவைப் பற்றி எவராவது கருத்து சொல்ல வேண்டுமா? அது மேற்கத்தியரின் வேலை. ஆப்பிரிக்கரை குறித்து கட்டுரை புத்தகம் எழுத வேண்டுமா? அது வெள்ளையரால் மட்டுமே முடியும். எப்படி கண்ணாடி என்பது ஒரு பக்கத்தைப் புரட்டிப் போட்டாலும், சரியான பக்கப் பார்வை ஆகிறதோ –> அது போல் வெள்ளையர்கள் சொல்வது மட்டுமா சரியாக இருக்க முடியும் என்பதை 1950களில் ஆக்ஸ்ஃபோர்ட் உள் நுழைந்து மாற்றியவர் நய்பால். நய்பாலுக்கு முன் “பின்-காலனியம்” என்பதும் “பன்பண்பாட்டியம்” என்பதும் அகரமுதலியில் கவனிப்பாரற்று இருந்தன; இன்று இந்த கருதுகோள் எல்லோரின் வாயிலும் நுழைவதற்கு காரணமாக விளங்கியவர் நய்பால்.
அவரைத் தொடர்ந்து ஒரு பெரும் பட்டியலைச் சொல்லலாம்: சினுவா அசிபெ (Chinua Achebe), வோல் சொயின்கா (Wole Soyinka), நடின் கொர்டிமர் (Nadine Gordimer), டெரிக் வால்காட் (Derek Walcott), மார்கரெட் அட்வுட் (Margaret Atwood), மைக்கேல் ஒண்டாட்ஜெ (Michael Ondaatje), சல்மான் ருஷ்டி (Salman Rushdie) எனத் துவங்கி, சமீபத்தியவர்களான பென் ஒக்ரி (Ben Okri), டிமொத்தி மோ (Timothy Mo) மற்றும் கசுவோ இஷிகுரொ (Kazuo Jshiguro) வரை நீளும்.
வேலையில்லாமல் திண்டாடிய காலம் தவிர்த்து, மற்றபடிக்கு பணம் புழங்கிய சமயங்களில் தனக்கு எழுத்து எளிதாக வருவதில்லை என்று நய்பாலே ஒத்துக் கொள்கிறார். இருந்தாலும், நாவல், சிறுகதை தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நனவோடை, பிரச்சினை பூமிகளுடன் ஆன பயணக்குறிப்பு, அரசியல் விமர்சனம் என முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டு இருக்கிறார். 1957ல் முதல் நாவல் புத்தக வெளியீடு. அதற்கு ஜான் லெவலின் ரைஸ் நினைவுப் பரிசு (John Llewelyn Rhys Memorial Prize) வாங்குகிறார். இரண்டாண்டுகள் கழித்து “மிகுவேல் தெரு” சிறுகதைத் தொகுப்பிற்காக சாமர்செட் மாம் விருதைப் (Somerset Maugham Award) பெறுகிறார். 1971ல் புக்கர் பரிசு. 1990ல் சர் பட்டம். 2001ல் இலக்கியத்திற்கான நோபல்.
கருப்பர்கள் பெரும்பான்மையானவர்களாக இருக்கும் டிரினிடாட் நாட்டில் பிறப்பு. அந்த சிறு தீவில், இந்தியர்கள் மட்டுமே வசிக்கும், ஊர்களை விட்டு ஒதுங்கி இருக்கும் பகுதியில் இளமை வாழ்வு. அவரின் அப்பாவிற்கு மனநோய் பாதிப்பினால், தன் இளமைக்காலத்தில் சில காலம் தனிமை வாழ்வு. தன் பதினான்காம் வயதில் டிரினிடாட் கிராமத்தை விட்டு ஓட முடிவெடுக்கிறார். பதினெட்டாம் வயதில் படிப்புதவித் தொகை பெற்று இங்கிலாந்திற்கு வருகை. கொத்தடிமைகளாக வந்தவர்களின் பேரன்; எலிசபத் மகாராணியின் நாட்டில் குடிபுகுந்தவர். நய்பாலைக் குறித்த அதிகாரபூர்வ சுயசரிதையும், ஆராய்ச்சிகளும் பேட்டிகளும், விமர்சனங்களும் எக்கச்சக்கமாக கிடைக்கின்றன. ஆங்கிலத் துறையில் எம்.ஃபில்., பிஎச்.டி. செய்பவர்களுக்கு நல்ல தீனி போட்டிருக்கிறார் நய்பால். சராசரியாக, பதினெட்டு மாதங்களுக்கு ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கிறார். நாவல்கள் எழுத பல்லாண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். அபுனைவோ / புனைவோ… எழுதுகிறார்; அதை அடித்து விட்டு, துவக்கத்தில் இருந்து திரும்ப எழுதுகிறார்; அப்புறம் எழுதியது பிடிக்காமல் பாதியில் விட்டுவிட்டு வேறொன்றுக்குத் தாவுகிறார்; அதன் பின், இந்த ஆக்கத்திற்கே திரும்பி, தனக்கு திருப்தி வரும் வரை செப்பனிட்டு முழுமையடைய வைக்கிறார்.
தன்னை வெறுமனே மேற்கிந்திய எழுத்தாளர் என்று சொல்வது தன் ஆக்கங்களை குறுகிய பார்வையில் மதிப்பிடுவது என்கிறார் நய்பால். இந்தியாவைக் குறித்தும், புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளைக் குறித்தும் கடுமையான விமர்சன மதிப்பீட்டை வைத்திருந்தார் அவர். குடியேறியாக இருந்தாலும், தன்னை தேசியவாதி என்றே அடையாளம் காட்டிக் கொண்டார். அயல்நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்ததற்கும், அவர்களின் சுரண்டலுக்காகவும், கூனிக் குறுகுகிறார். ஐரோப்பிய பேரரசின் அராஜகப் போக்கினால், முன்னாள் காலனிகளுக்குக் கிடைத்த சிக்கல்களை விவரிக்கும் அதே தருணத்தில், மேற்கத்திய சிந்தனையின் தாக்கத்தையும், அதனால் கிடைத்த நாகரிக முன்னேற்றங்களையும் சுட்டிக் காட்டுகிறார். ஐந்தாம் நூற்றாண்டிலேயை அடைபட்டுக் கிடந்து, வாய்க்கால் வரப்பு சண்டைகளில் கிளர்ந்து கிடக்கும் நாடுகளை நவீன யுகத்திற்குக் கொணர முயற்சித்ததற்காக ஆங்கிலேயப் பேரரசை பாராட்டவும் செய்கிறார்.
நய்பாலின் புனைவுகளை விட எனக்கு அவருடைய பயணக்குறிப்புகளே புதுவிதமானவையாக இருந்தன. அதில் கண்விரிய அன்னிய தேசத்தின் சுவாரசியம் மட்டுமே புளகாங்கிதமாக தென்படவில்லை. அதில் சுயசரிதைத்தன்மை இருந்தது; கூடவே சுற்றுலாக்காரரின் பார்வையும் கிடைத்தது; கொஞ்சம் அரசியல் சூழலும் சமூக விமர்சனமும் சரித்திரப் பார்வையும் கொடுத்தது; நய்பால் மட்டுமில்லாமல் வழிநடையில் தென்படும் மற்றவர்களின் குரலுக்கும் இடமிருந்தது; அன்னிய தேச யாத்திரை நூல்களில் கதாபாத்திர சித்திரமும், அந்த குணச்சித்திரங்களின் குரலும், ஆவணங்களும் வந்தன. இவற்றில் சற்றே புனைவு கலந்திருந்தது. நான் சென்னை; சென்னைக்கு பின் கல்லூரிக்காக ராஜஸ்தான்; அதன் பின் கொஞ்ச வருஷம் பெங்களூர்; அதன் பின் அமெரிக்காவில் வாரந்தோறும் கூலிக்காக மாரடிக்க ஒரு நகரம் என்று வேரற்று இருந்த எனக்கு, நய்பாலின் அலைபாயும் தன்மை பிடித்திருந்தது.
நய்பாலின் கதைகளில் தோற்றுப் போன எழுத்தாளர்களையும், மோசமான புனைவுகர்த்தாக்களையும் பார்க்கலாம். அவர்கள் தங்களை இலக்கியவாதியாக கற்பனை செய்து கொண்டவர்கள். சகிக்கமுடியாத எழுத்தை கிண்டலாகக் கொணர்வது கஷ்டமான கலை. அதை கடித இலக்கியம், காம எழுத்து, துப்பறியும் இதழியல், நாட்குறிப்பு படைப்பு என விதவிதமாக பகிடி செய்து, தன் புனைவுகளில் உலவவிட்டிருக்கிறார் நய்பால்.

நய்பாலின் தனிமை என் எண்ணங்களுக்கு ஏற்றதாக இருந்தது. எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பதும், நேர்த்தியோடு செயல்படுவதும், முடிவை நோக்கி பயணித்து எடுத்த காரியத்தை சாதிப்பதும் எனக்கு அவரிடம் சிறப்பு ஈடுபாட்டைக் கொணர்ந்தது. “இந்த கொடூர உலகத்தில் எவ்வாறு நம் குழந்தைகளை நாம் பெற்றுக் கொள்ள நினைக்கிறோம்?” என்பது போன்ற கேள்விகள், என்னை துணுக்குற வைத்தாலும், வேறு எவருக்கும் இப்படி வெளிப்படையாக கேட்பதில்லையே என்றும் யோசிக்க வைத்தது.
நான் ஒரு குழப்பமான இந்தியன். என் குடும்பம் சாஸ்திரங்களிலும் சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை கொண்டவை. ஆனால், எனக்கு அதில் முழு நம்பிக்கை இருக்கிறதா என்பதில் சந்தேகம் கலந்த அவநம்பிக்கை உள்ளது. ஆபத்தான தருணங்களில் ஆஞ்சனேயரையோ, பிள்ளையாரையோ இன்றும் அழைக்கிறேன். நய்பால் அந்த மாதிரி எல்லாம் கிடையாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அமெரிக்காவின் தனி மனித சுதந்திரம் பிடிக்கும். மேற்கத்திய உலகின் எதையும் கேள்விக்குள்ளாக்கி ஆராய்ந்தறியும் அறிவியல் தன்மை பிடிக்கும்.
இருந்தாலும் இராமாயணமும் அவரை கவர்ந்திழுக்கிறது. “ஆற்றில் ஒரு வளைவு” (A Bend in the River) புனைவு ராமாயணத்தை நினைவுக்கு கொண்டு வருவது. மனோஹர் மல்கோன்கர் என்பவர் “கங்கையில் ஒரு வளைவு” (A Bend in the Ganges) என்னும் புதினத்தை 1964ல் எழுதுகிறார். ராமரின் கதையையும் குடியேற்ற நீக்கத்தையும் ஒப்பிட்டு நய்பால் தன் புனைவை எழுதுகிறார். ஐரோப்பாவின் காவியங்களுக்கு வெகுகாலம் முன்பே ராமாயணம் என்னும் காதை, பயணிகளின் கடற்பயணத்தையும், சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவரின் வாழ்க்கையையும், அனைத்தையும் இழந்தவரின் தேடலையும், மறுபடியும் திரும்ப தாயகம் திரும்புவதையும் சொல்கிறது. அன்னிய ஆரியர்கள், படையெடுத்து வந்து பூர்வகுடியினரை வென்றதாகக் கூட ராமாயணத்தை திராவிட ஆதரவாளர்கள் வெகுகாலமாகப் பார்க்கின்றனர். ஆரியர் = ஐரோப்பியர் எனவும், குரங்கு = ஆசியர் எனவும், இலங்கையர் = ஆப்பிரிக்கர் எனவும் வைத்துக் கொள்ளலாம். பதினான்கு ஆண்டுகள் ராமர் காட்டிற்கு செல்வதை, சலீமும், இந்தரும் ஆப்ரிக்காவிலும் இலண்டனிலும் கழிப்பதற்கு ஒப்பிடலாம்.
நன்மைக்கும் ராவணன் என்னும் தீமைக்கும் நடுவே போர் மூள்வது போல், அந்த புனைவின் இறுதியில் ஆப்பிரிக்க அம்மாவின் மகனான மாபெரும் மனிதருக்கும் x ஃபானோன் (Frantz Fanon) என்பவரின் அடியாள்களுக்கும் நடுவே யுத்தம் மூள்கிறது. நய்பாலின் வார்த்தையிலேயே சொல்வதானால், “மார்க்சிஸ்ட் என்பவர் மத வெறியர். மார்க்சிஸ்டுகள் மக்களின் கனவை அழித்தொழிக்க வினவுகிறார்கள். உங்களுக்கு கற்பனை என்றொன்று இருந்தால், அதை நசுக்கி, தூரத்தே வீசி, நசுக்குவது மார்க்சிச சித்தாந்தம். முழு சமூகப் புரட்சி என்பது விபரீதமானது; கிளர்ச்சி மூலமும் கலகம் மூலமும் சட்டென்று சமூகத்தைப் புரட்டிப் போடுவது என்பது அபத்தத்தில் முடியும்.”
நய்பாலின் எழுத்துக்களின் ஊடே கிடைக்கும் தரிசனம் ஆழப் பதியும். இடி அமீன், ஃபானொன், ஃபிடல் காஸ்ட்ரோ, மாவோ, மொபுடு, பெரான், மைக்கேல் எக்ஸ் என்று பல்வேறு இடங்களில் காணப்படும் நியோ இடதுசாரிகள், எதிர்-கலாச்சாரத்தில் எல்லாம் ஈடுபடுவதில்லை. அவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கையாளர்கள் நம்பி கிளிப்பிள்ளையாக சொல்வது போல் மேற்கிற்கு எதிரான கோபத்தையும் தன்னகத்தே வைத்திருப்பதில்லை. நிலையான மாற்றத்திற்கான உறுதியையும் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை. அவர்களின் பின் செல்லுபவர்கள் ஒன்றைச் செய்கிறார்கள் – தன் இனத்தைக் கொல்கிறார்கள்; தங்களின் சொந்தத்தையே அழிக்கிறார்கள்; குடியானவனையும் உழைப்பாளரையும் பிரதிபலிப்பதாகச் சொல்லிக் கொண்டு, தன் சமூகத்தையே வேட்டையாடுபவர்கள் அவர்கள். அவர்களின் மேற்கத்திய என்.ஜீ.ஓ.க்களும், ஆதரவாளர்களும் இதையெல்லாம் கண்டும் காணாமல் செல்கிறார்கள். சில காலம் பின் வசதியாக இவற்றை மறந்து போய், உங்களையும் மறக்க எத்தனிக்கிறார்கள்.
நய்பாலுக்கு இந்திய தத்துவம் மறக்கவேயில்லை. ஒரு காலை அங்கே எப்போதும் வைத்திருக்கிறார். பூர்வஜென்ம பயன் என்போம்; விதி வலியது என்போம்; கர்மபலன்படி எல்லாம் நடக்கிறபடி நடக்கும் என்போம்; உலகமே மாயை; வாழ்க்கை என்னும் அனர்த்தத்தை வாழ்ந்து இந்த உலக போகங்களில் மூழ்கி பிறப்பு, இறப்பில் உழன்று என்னும் கடைத்தேறல் என்போம்; இதெல்லாம் அவரின் ஆக்கங்களில் மேற்கத்திய மெய்யியலுடன் விவாதத்திற்கு உண்டாகிறது.
இந்த மாதிரி உழைப்பிலும் படிப்பிலும் கல்வியினால் வரும் தத்துவ ஞானத்திலும் நம்பிக்கை வைக்காமல், கற்பனையான போன பிறவியின் மீது குற்றஞ்சாற்றுவதில் நய்பாலுக்கு நம்பிக்கை இல்லைதான். இருந்தாலும் அவரின் நாவல்கள், இந்து மதத்தில் சொல்லப்படும் பிரும்மச்சரியம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சன்னியாசம் என்று நான்கு ஆசிரம தர்மங்களைக் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. மேற்குலக சித்தாந்தமான சுய சிந்தனை, ஏன் என்னும் வினா போன்றவை ஒரு திரியில் வரும்; கூடவே ஹிந்து மதத்தில் இருந்து இந்திரிய திருப்தி கோரும் காமம், குரோதம் (சினம்), லோபம் (கடும்பற்று), மோகம் (கற்பு நெறி பிறழ்வு), பேராசை, ஜாதி (உயர்வு தாழ்வு மனப்பான்மை), மாச்சர்யம் (வஞ்சம்) ஆகியவற்றையும் இன்னொரு திரியில் ஓடவிட்டுக் கொண்டேயிருக்கிறார். ஆக்கமும் அதன் பின் வரும் ஆழிவும், சுழற்சி வட்டமாக வைத்துக் கொள்கிறார்.
நய்பால் “உலகளாவிய நாகரிகம்” தோன்ற வேண்டுமென வலியுறுத்துகிறார். ஜப்பானிலும் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் உள்ளது போன்ற எல்லாரையும் சுமுகமாக அனுசரித்துப் போகும் சமூகத்தை விழைகிறார். நமக்கு வேண்டியதை பெற்றுக் கொள்ளக் கூடிய, விரும்புவதை அடைய முடியும் சமுதாயத்தை “நம்பிக்கையாளர்களின் நடுவே: ஒரு இஸ்லாமிய சஞ்சாரம்” (Among the Believers: An Islamic Journey) நூலில் முன்வைக்கிறார். மக்களும் மதங்களும் மாற வேண்டும். காலத்திற்கேற்றபடி கலாச்சாரம் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். நசுக்கப் படும் ஒவ்வொரு உள்நாட்டில் இருந்தும் இந்த ஆசை கொழுந்துவிட்டெரிய வேண்டும். சொந்த நாட்டின் பிரஜைகளிடமிருந்து இவ்வித தூண்டுதல்கள் எழ வேண்டும். மேற்குலகில் இருந்து வெள்ளை கனவானின் வருகையை எதிர்பார்த்திருக்கக் கூடாது.
இவற்றை எல்லாம் விட நய்பாலின் இளம் வயது கனவுகளின் ஒப்புதல் வாக்குமூலம் அவரிடம் “நீ நம்மாளுடா!” என சொல்லவைக்கிறது. அவருக்கு தான் வாழும் நரகம் பிடிக்கவில்லை. இளமையில் அதை விட்டு தொலைவே செல்லத் துடிக்கிறார். தான் ஒரு இதிகாசங்களில் வரும் ஆரிய இராவுத்தராகக் கற்பனை செய்கிறார். தன் குதிரைப்படை கொண்டு பாரதத்தை மீட்டெடுக்கிறார். பல்வேறு படையெடுப்பாளர்களை நீக்கியபின், சம்ஸ்கிருத கலாச்சாரத்தை இந்தியாவில் நிறுவுகிறார். இந்த மாதிரி ஒரு சாகஸத்தை கருஞ்சிறுத்தை என்னும் ப்ளாக் பேந்தர் படங்களிலோ, ஸ்பைடர் மேன் காமிக்களிலோ பார்த்திருக்கிறேன். ஆனால், கனவுருப்புனைவு போன்ற ஒன்றை விகடக்காரர்கள் நாவலில் (The Mimic Men)ல் முதல் முறையாக பார்த்தேன்.
உலக முழுதளாவிய ஆக்ஞைக்கு நய்பால் ஆசைப்பட்டார். சிறுமை கண்டு பொங்குவாய் என்றார். எல்லோருக்கும் முழுமையான சுதந்திரம் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த விடுதலையினால், வேண்டியதை வென்றடைய முடியவேண்டும் என வேண்டினார்.
அவரின் கோரிக்கைகள் வருங்கால தலைமுறைக்காவது நிறைவேற வேண்டும்.

One Reply to “கஞ்சனம்”

  1. பிற கட்டுரைகளில் நைபால் என்றும், இக்கட்டுரையில் மட்டும் நய்பால் என்றும் குறிப்பிடப்படுகிறார். பெயர்களை ஒரே மாதிரி எழுதுவது நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.