இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி!

மும்பை கிழக்கு போரிவிலியில், என் வீட்டின் பால்கனி ஒரு பரவசமான இடம். சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவின் எல்லையில் அமைந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு. தினமும் காலையில் கண்விழிப்பதே மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையில்தான்.  பின்னிரவு நேரங்களில் பால்கனியில் அமைதியாக அமர்ந்து கொண்டு இளையராஜாவின் பாடல்கள் கேட்டது ஏதோ பிறவியில் வாங்கி வந்த வரம். 80களின் இறுதியில் மும்பையின் புறநகர் மலைகளை, ரியல் எஸ்டேட் முதலைகள் விழுங்கிவிட, இந்த 22000 ஹெக்டர் பரப்பு மட்டும் தேசியப் பூங்காவானதால் தப்பிப் பிழைத்திருக்கிறது.  மும்பை பெருநகருக்குள், சிறுத்தைகள் வாழும் அருமையான பல்லுயிர்க்காடு.

ஒரு விவாதத்தில், இந்திரா காந்தியின் பங்களிப்புப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், நண்பர் ஜெயமோகன், இந்திரா காந்தியின் சூழியல் பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிட்டார்.  1972 ஆம் ஆண்டு, ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற முதல் சூழியல் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, இந்தியாவில் தேசியப் பூங்காக்களை நிறுவினார் என. அதற்கு முன்பு, கேரளாவின் அமைதி பள்ளத்தாக்கு நீர் மின்சாரத் திட்டத்தை, சூழியல் காரணங்களுக்காக நிறுத்தினார் என்று மட்டும் கேள்விப் பட்டிருந்த எனக்கு, அது புதிய திறப்பாக இருந்தது. ஆனால், இந்திராவின் பங்களிப்பு அதைவிடவும் பெரிது எனச் சொல்கிறது ஜெய்ராம் ரமேஷின், “ Indira Gandhi – A life in Nature”, புத்தகம்.  (Simon & Schuster India வெளியீடு. விலை ரூபாய் 799).

இந்தப் புத்தகம் ஒரு வகையில், ஜெய்ராம் ரமேஷின் மனநிலை மாற்றம் பற்றியதும் எனச் சொல்லலாம். அவரது வார்த்தையிலேயே சொல்வதெனில்,  “I got transformed from being a zealot for rapid economic growth at all costs to someone who came to insist that such rapid economic growth must be anchored into ecological sustainability”. 2009 ஆம் ஆண்டு மே மாதம் துவங்கி, 26 மாதங்கள் இந்தியாவின் சூழியல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் ஏற்பட்ட மனமாற்றம் அது.  இந்தக் காலத்தில், தன் பணியின் ஒரு பகுதியாக, சூழியல் துறையில் நடந்த அரசு முயற்சிகளைப் படித்து, இந்திரா காந்தி என்னும் பெரும் தலைவரின் பங்களிப்பை உணர்ந்து கொள்கிறார்.

இயற்கையின் மீதான ஆர்வம், இந்திராகாந்தியின் இளமைப்பருவத்திலேயே துவங்குகிறது. அடிப்படைப் பாடங்கள் தந்தை நேரு தன் மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு எழுதும் கடிதங்களில் இருந்து துவங்குகின்றன. 1930 ஆம் ஆண்டு, மௌரிஸ் என்பவர் எழுதிய “தேனியின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தைப் பரிசாக அனுப்புகிறார். இது போலப் பல புத்தகங்களை அவர் மகளுக்காக அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். கமலா நேருவின் தம்பியும், இந்திராவின் தாய்மாமனுமான கைலாஸ் நாத் கௌல்,  ஒரு உயிரியல் ஆய்வாளர்..(இவர் பின்னர் இங்கிலாந்தில் அரச தாவரவியல் பூங்காவில் பயிற்சி பெற்று, கான்பூர் வேளாண் பல்கலையின் துணை வேந்தரானார்) அவருக்குப் பாம்புகள் மீது பெரும் ஆர்வம்.. பாட்டி வீட்டில் எந்தப் பெட்டியைத் திறந்தாலும் பாம்பு இருக்கும் என எழுதியிருக்கிறார் இந்திரா.. இதனால், அவருக்கு பாம்பு மற்றும் பல விலங்குகள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

அலஹபாத் என்னும் சமவெளியில் பிறந்திருந்தாலும், தன் தாயின் உடல் நிலை காரணமாக, இந்தியா மற்றும் ஸ்விட்சர்லாந்த நாடுகளின் மலைப் பிரதேசங்களில் வசிக்க நேரிட்டது. அதன்பின் இயற்கையோடு இணைந்த சூழலில் அமைந்திருந்த தாகூரின் விஸ்வபாரதிப் பல்கலைக்கழகத்தில் படித்தார்.

இவையைனைத்துமே, அவருக்கு, இளம் வயதிலேயே, இயற்கையைப் பற்றிய பெரும் பட்டறிவையும், வாழ் நாள்க் காதலையும் ஏற்படுத்தி விட்டது.

1941 ஆம் ஆண்டு, இந்தியப் பறவையியலின் தந்தையான சலிம் அலியின், “இந்தியப் பறவைகள்” புத்தகம் தந்தையின் வழியே கிடைக்கிறது.. அதிலிருந்து அவருடன் வாழ் நாள் நட்பு துவங்குகிறது.

1950 களில் துவங்கி 1964 வரை, தந்தை நேருவின் தனி உதவியாளராக தீன் மூர்த்தி பவனில் அவருடன் வசித்து வந்தார்.. அந்த வீட்டில், மயில், அணில், இமாலயன் பாண்டா, புலிக்குட்டிகள் என ஒரு குறும் சரணாலயமே இருந்தது. அவற்றைப் பேணுவது தந்தைக்கும் மகளுக்கும் மிகப் பிடித்த காரியம்..

அவரின் இந்த இயற்கை மற்றும் வனவிலங்குகள் மீதான பிரியம், அரசின் திட்டங்களாக மாறியது அவர் பிரதமரான சில ஆண்டுகளுக்குப் பின் தான். 1966 ஆம் ஆண்டு பிரதமரான அவர், முதல் மூண்றாண்டுகள், இந்தியாவில் அப்போது பெரும் பிரச்சினையாக இருந்த உணவுப் பஞ்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளில் முனைப்புடன் இருந்தார். “பசுமைப் புரட்சியின்” துவக்க நாட்கள் அவை. பின்னர் கட்சியில் பிளவு, அரச மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேசிய உடமையாக்கப்படல் என மிகவும் அதீதப் பளுவில் இருந்த போதும், தன் நண்பர் சலீம் அலியின் மூலமாக, நாட்டு நடப்புகள் மிக முக்கியமாக, பறவை சரணாலயங்களின் பிரச்சினைகளை அறிந்து கொண்டிருந்தார்.. அதே போல், மிருக ஆர்வலர்கள் பலரும் அவருக்கு,  கட்டுப்படுத்தப்படாத வேட்டைகளால், நாட்டின் வனவிலங்கு எண்ணிக்கை வேகமாகக் குறைவதை அறிவித்துக் கொண்டேயிருந்தார்கள்.

1969 ஆம் ஆண்டு, பால் ஆடம்ஸ் என்னும் அப்படி ஒரு வனவிலங்கு வேட்டைப் பிரியரிடம் இருந்து ஒரு கடிதம் அவருக்கு வருகிறது. பல வருடங்களாக இந்தியாவுக்கு வேட்டைக்காக வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில்,  சில மோசமான அறிகுறிகள் தென்படுவதாகவும் எழுதியிருந்தார். ஒரு புலியைக் கூட அவரால் காண முடியவில்லை. இதன் முக்கிய காரணம், புலிகளும் சிறுத்தைகளும் அவற்றின் தோலுக்காக அளவில்லாமல் வேட்டையாடப் படுகின்றன.

இதே வேகத்தில் சென்றால், இவையிரண்டுமே இந்தியாவில் அழிந்துவிடும்.. இவற்றின் தோல் விற்பனை சட்ட பூர்வமாகத் தடை செய்யப்பட்டு, மிகக் கடுமையான தண்டனை வழங்கப் பட வேண்டும் என்னும் ஆலோசனையைச் சொல்கிறார்.

அன்று, வனவிலங்குகளும் காடுகளும், வேளாண் துறையின் கீழ் இருந்தன. அதன் அமைச்சர் ஜக்ஜீவன் ராமுக்கு உடனே கடிதம் எழுதுகிறார்.. வழக்கமான அரசுத் துறை பதில் வந்தது அவருக்கு உகந்ததாக இல்லை.. ஜக்ஜீவன் ராம் இந்திய சுதந்திரம் பெற்றது முதல் இருக்கும் மூத்த மந்திரி. அவருக்கு இதன் முக்கியத்துவம் தெரியாது என, அவருக்குக் கீழ் இருந்த “இந்திய வனவிலங்கு வாரியத்துக்கு, அன்றைய சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துரையின் இளம் மந்திரியான டாக்டர் கரண்சிங்கை நியமிக்கிறார். இதுதான், இந்திய வனத்துறை மற்றும் விலங்குகள் நலனில், அரசு ஆக்கப் பூர்வமாக எடுத்த முதல் முடிவு.

வாரியத்தின் துவக்கக் கூட்டத்தில், அதற்கான நோக்கத்தையும், தன் கனவையும் மிக விரிவாக உறுப்பினர்கள் முன் வைக்கிறார். வளர்ச்சிக்காக, காடுகளை, வரம்பில்லாமல் அழிப்பதை, வனவிலங்குப் பொருள் வியாபாரம் வனவிலங்குகளை அழிப்பதை, தொழிற்சாலைகளுக்காகவும், நீர்த்தேக்கங்களுக்காகவும் காடுகள் விழுங்கப்படுவதை வேதனையோடு சுட்டிக் காட்டுகிறார். இதை ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துவக்கம் என்றே சொல்ல வேண்டும். உலகெங்கும்,  சூழல் காக்கும் இயக்கங்கள், ஆர்வலர்களால் துவங்கப் பட்டு, அரசை எதிர்த்துப் போராடும் ஒன்றாக இருக்க, இங்கே, அரசின் தலைவரே, சூழல் காப்பதை முன்னெடுக்கிறார். 1969 ஆம் ஆண்டு ஜுலை 9 ஆம் ஆண்டு நடந்த இந்தத் துவக்கக் கூட்டத்தில்தான், “சிங்கம்” இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப் படுகிறது. இந்தியப் புராணங்களில், சிங்கம் ஒரு முக்கியமான விலங்காக இருந்த்தும், அதன் எண்ணிக்கை குறைந்து கொண்டு வந்ததும் காரணங்கள்.

இதன் பிண்ணனியில், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் இதுபற்றி ஒரு கடிதம் எழுதுகிறார். வனத்தையும் வனவிலங்குகளைக் காப்பதன் முக்கியத்துவத்தையும் அதில் வலியுறுத்துகிறார். மாநில வனத்துறையின் கீழ், வன உயிரினங்களுக்கான ஒரு துறையும், அதில் பயிற்சி பெற்ற அறிவியலர் இருக்க வேண்டியதையும் வலியுறுத்துகிறார். இறைச்சி, தோல் முதலியபொருட்களுக்காக நடக்கும் வேட்டையை நிறுத்த வேண்டி சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என மேலும் எழுதியிருக்கிறார்.

இக்கடிதத்தை, தன் தனிப்பட்ட ஆர்வத்தால் மட்டும் இதை எழுதவில்லை. வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு, சரியான முறையில் சரணாலயங்கள் எழுந்தால், அவை பெரும் சுற்றுலாத் தளங்களாக மாறி, மாநிலங்களுக்கு வருவாயைத் தேடித் தரும் எனவும் மிகுந்த தீர்க்க தரிசனத்தோடு எழுதியிருக்கிறார்.

ஆனால், 1969 ஆம் ஆண்டில், மராத்தியத்தைத் தவிர வேறு மாநிலங்களில், இது பற்றிய ஒரு புரிந்துணர்வு இல்லை. மாநில அரசுகள் இதை ஒரு பிரச்சினையாகக் கூடப் பார்க்கவில்லை. எனவே எய்யப்பட்ட முதல் அம்பு, இலக்கை அடையவில்லை.

அதே ஆண்டு, தில்லியில், International Union for conservation of Nature (IUCN) ன் பத்தாவது பொதுக் குழுவைத் துவக்கி வைத்துப் பேசுகிறார்.  இந்தியச் சூழியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் இது. அதில் முன்வைக்கப் பட்ட இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்திராவின் கவனத்தை ஈர்த்தன. ஒன்று, கிர் காட்டில், சிங்கங்கள் பாதுகாப்பாக இருப்பதைப் பற்றியது. இன்னொன்று, புலிகளின் எண்ணிக்கை, அபாயகரமான அளவில் குறைந்தது பற்றியது. நாடு முழுவதும் 2500 புலிகளே உள்ளன என்றது இரண்டாவது அறிக்கை.

இதைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு, அஷோக் பார்த்தசாரதி என்னும் கேம்ப்ரிட்ஜ் அறிவியல் பட்டதாரியை, முதன் முதலாக,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தனி உதவியாளராக நியமிக்கிறார். இதைத் தொடர்ந்து, மனித சுற்றுச் சூழலுக்கான ஒரு குழுவை அவர் பீதாம்பர் பந்த் தலைமையில் அமைக்கிறார். இது, 1972 ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் மாநாட்டுக்காக, இந்தியா தன் பங்கேற்பைச் செய்யத் துவங்கப்படட்து.  இதை இந்தியா மிகவும் முக்கியமாக்க் கருதி முன்னெடுக்க வேண்டும் என இந்திய விண்வெளிக்கழக நிறுவனரான, விக்ரம் சாராபாய் வலியுறுத்துகிறார். அதற்கான துவக்கமாக, “சூழல் மாசும், மனித சுற்றுச் சூழலும்” என்னும் தலைப்பில் மும்பையில் ஒரு கருத்தரங்கை ஒருங்கிணைக்கிறார். இந்தியாவில், சுற்றுச்சூழல் மாசுபடுவதைப் பற்றிய முதல் கருத்தரங்கம் இது. ஸ்டாக் ஹோமில் நடைபெற உள்ள 1972 ஆம் ஆண்டு ஐ.நா சபையின் சுற்றுச் சூழல் மாநாட்டில், இந்தியா, மிகவும் தனித்துவமான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என அவரது எண்ணம்.

1971 ஆம் ஆண்டு, இந்திரா காந்தியின் வாழ்வில் மிக முக்கியமான ஆண்டு. “வறுமையை ஒழிப்போம்” என்னும் கோஷத்தை முன்வைத்து, தன் உள்கட்சி எதிரிகளை வென்று, தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தார். வருட இறுதியில்,  பங்களாதேஷ் போரை வென்றிருந்தார்.

1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சுற்றுச் சூழல் திட்டமிடல் கூட்டமைப்பை (National Committee for Environmental Planning and coordination (NCEPC)) உருவாக்கினார். இந்தக் குழுவின் கீழ், முன்பு பீதாம்பர் பந்த் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட மனித சூழல் குழு கொண்டு வரப்பட்டு, திட்டக் கமிஷனின் ஒரு பகுதியாக மாறுகிறது. 1972 மே மாதம், காந்தியின் நெருங்கிய சீடரும் சினேகிதியுமான, மீரா பென், ஸ்டாக்ஹோம் மாநாட்டில், இந்தியா தன் பங்களிப்பை அழுத்தமாகச் செய்யும் என நம்பிக்கை தெரிவித்து இந்திரா காந்திக்கு கடிதம் எழுத்கிறார்.

1972 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற, ஐ.நா. சபையின் மனிதச் சூழல் மாநாடு (UN Conference on the Human environment), சூழியல் வரலாற்றில் மிக முக்கிய மைல்கல். அன்றிருந்த அரசியல் சூழலின் காரணமாக சோவியத் யூனியன் மற்றும் அவர்களின் பங்காளிகள் கலந்து கொள்ளவில்லை. மாநாட்டில் இரண்டு முக்கிய நாடுகளின் தலைவர்கள்  கலந்து கொண்டார்கள். ஸ்வீடன் நாட்டின் ஒலாஃப் பால்மே மற்றும் இந்திரா காந்தி.

அந்த மாநாட்டில் இந்திரா காந்தியின் பேச்சு ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.  அன்று அவர் சொல்லியதாகச் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம், “சுற்றுச் சூழல் மாசுபடுதலுக்கு முக்கிய காரணம் வறுமையே” என்பது மேடையில் இருந்த பலராலும் (செக்ரடரி ஜெனரல், மௌரிஸ் ஸ்ட்ராங் உள்பட) மேற்கோள் காட்டப்பட்டது. அவர் பேசியது கொஞ்சம் மாறுபட்டது எனினும். (are not poverty and need the greatest polluters? – என்பதே அவர் பேசிய வரி).  அந்த சொற்பொழிவின் இறுதியில், மொத்த அரங்கமும் (பாகிஸ்தானியர் உள்பட) எழுந்து நின்று கரவொலி எழுப்பியது.

அந்த மாநாட்டில், மிகவும் ஆணித்தரமாக, அவர் வளரும் நாடுகள் சார்பாக வாதிட்டார் என நியூயார்க் டைம்ஸ் உள்பட உலகின் பெரும் நாளிதழ்கள் எழுதியிருந்தன.  மாசுக்கான புதிய அளவுகோள்கள், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு ஒன்றாக இருக்க முடியாது.  மேலும், அவர் மறைமுகமாக வியட்நாம் போரில், பெருமளவு இயற்கை வளங்கள் அழிந்ததைப் பேசினார். ஸ்டாக்ஹோல்ம் மாநாட்டின் இந்த சொற்பொழிவு, உலகச்சூழியல் சொல்லாடலில், மிக முக்கியமான ஒரு மைல்கல் எனக் கருதப்படுகிறது.

இந்த மாநாடு, துளிர் விட்டுக் கொண்டிருந்த ஐரோப்பிய சூழியல் இயக்கங்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருந்த்து. 80களின் பின்பகுதியில், அவை முக்கியமான சமூக, அரசியல் இயக்கங்களாக வளர்ந்தன.  இதன் தொடர்ச்சி தான் 1992 ஆம் ஆண்டு கையெழுத்தான க்யோட்டோ ப்ரோட்டோகால்.. இதில், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளின் தேவைகளை பெரும்பாலும் ஏற்றுக் கொண்டு, கரியமில வாயு மற்றும் ஐந்து மாசு வாயுக்கள் வெளியேற்றம் என்னும் அலகை அடிப்படையாக வைத்து, பல மாசுக் கட்டுப்பாடுகளை குறைக்கும் வழிகளையும், குறைக்க முடியா தொழில்நுட்பங்களுக்கு எதிர்மறை வரியும் விதிக்க ஒப்புக் கொண்டன.  வளரும் நாடுகளுக்கு, மாசு குறைக்கும் தொழில் நுட்பத்தைப் பரப்பவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் பின்னர் மேலும் டோஹா, பாரிஸ் என இது முன் சென்று கொண்டிருக்கிறது.. ஆனால், இதன் அடிப்படைக் கொள்கை, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கிடையேயான வேறுபடும் அலகுகளுக்கான அடிப்படை, 1972 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி முன்வைத்ததுதான்.

இந்த மாநாட்டில், இந்திரா காந்தி பேசியதை வாழ்த்தி, பசுமைப் புரட்சியின் மிக முக்கிய காரணியும், நோபல் விஞ்ஞானியுமான நார்மன் போர்லாக், அவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், வளரும் நாடுகளின் நலனை மிக வலுவாக எடுத்துச் சொன்னதை வாழ்த்தியிருந்தார். அதே கடிதத்தில், அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் சூழியல் குழுக்களை விமரிசித்திருந்தார். அவற்றின் முயற்சியால், அப்போது, டிடிடி பூச்சி மருந்து அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருந்தது.  போர்லாக், அவர்களை, சூழியல் வெறியர்கள் என வர்ணித்து, இந்தியாவில் ஒருபோதும், இது போன்ற தடைகளை அனுமதிக்கக் கூடாது என எழுதியிருந்தார்.

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட முக்கிய விஞ்ஞானி நார்மன் போர்லாக்.  அவரின் பங்களிப்பை இந்திரா காந்தி பெரிதும் மதித்தார்.. இந்தியா வரும்போதெலாம், அவர் இந்திய அரசு விருந்தாளி என மதித்து, அவருக்கான வரவேற்புகளை அரசு முறைப்படி கொடுத்து கௌரவித்திருந்தார். ஆனாலும், போர்லாக்கின், “சூழியல் வெறியர்கள்” என்று அழைத்ததை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.  அவரின் பங்களிப்பையும், டிடிடி மருந்தின் பங்களிப்பையும் அங்கீகரித்து பதில் எழுதிய அவர், வருங்காலத்தில், பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் (biological) முறைகளையும், உழவியல் (agronomical) முறைகளையும் பெருமளவில் உபயோகித்து, பூச்சி மருந்துகளை ஒரு அளவோடு (judicious use) உபயோகிக்கும் ஒரு ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு முறைகளை, அறிவியல் உலகம் முன்னெடுக்க வேண்டும் என எழுதியிருந்தார். இன்று, ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு என்பது இந்திய அரசின் கொள்கையும் கூட. பட்டினியால தவிக்கும் நாட்டின், உணவுத் தேவையை அவசரமாகப் பூர்த்தி செய்ய வேண்டிய அதே சமயம், அதற்கான  அறிவியல் தீர்வின் எல்லையையும் தெளிவாக உணர்ந்த ஒரு தலைவர் என்பதை   நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. (நாட்டின் தானியங்களை சிட்டுக் குருவிகள் அழிக்கின்றன. நாடெங்கும் சிட்டுக் குருவிகளை முழுதாக அழிக்க வேண்டும் எனத் துவங்கிய மாவோவின் கொள்கை, எப்படிச் சீன தேசத்தைப் பெரும்பஞ்சத்தில் ஆழ்த்தியது என்னும் நம் அண்டை நாட்டின் சரித்திரம் அறிந்தால், இந்திரா காந்தியின் அறிவுடைமை நமக்கு விளங்கும்.)

ஸ்டாக்ஹோல்ம் மாநாட்டின், அடுத்த படியாக, ஐக்கிய நாடுகளின் சூழியல் திட்டமைப்பு (United Nations Environment Program) துவங்கப் பட்டது. இதன் தலைநகர், ஆசியா அல்லது ஆப்பிரிக்காவில் அமைய வேண்டும் என ஆலோசனைகள் வந்தன. புது தில்லியும், நைரோபியும் போட்டியிட்டன. இந்தியா, நைரோபிக்கு வழிவிட்டு விலகிக் கொண்டது. உலகின் மிகப் பழமை வாய்ந்த சரணாலயமான செரெங்கெட்டி/மஸாய் மாரா வின் அருகில் உள்ள நைரோபியில், இதன் தலைமையகம் அமைவதுதான் சரியானதும் கூட.

இந்த மைல்கல் தவிர, இந்திரா காந்தி, சூழலைப் பாதிக்கும் பல முக்கிய விஷயங்களில் தலையிட்டிருக்கிறார்.   வளர்ச்சி மிக முக்கியம். ஆனால், அது சுற்றுச் சூழலை அழித்து உருவாக்கப்பட்டதாக இருக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். எடுத்துக்காட்டாக, கட்டுப்படுத்த முடியா வளர்ச்சி பெற்று வந்த மும்பை நகருக்கு அருகில், நவி மும்பை என்னும் பெரும் நகரம் உருவாக்ககப் பட வேண்டும் என வலியுறுத்தி அதை முன்னெடுக்கச் செய்தார்.

அவர் தந்தை காலத்தில் பெரும் கனவுகளோடு கட்டப் பட்டிருந்த பக்ரா நங்கல் போன்ற திட்டங்களின் சூழியல் எதிர்மறை விளைவுகளை மிக நன்குணர்ந்தவராக இருந்தார். அது போன்ற திட்டங்களால், இடமாற்றம் செய்யப்படும் மக்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களை மாநில அரசுகள் சரிவரச் செய்வதில்லை என்பதையும் அறிந்திருந்தார்.

அந்த அறிதலின் விளைவாக, பல நீர் மின் திட்டங்களை அவர் நிறுத்த வேண்டியிருந்த்து. கேரளாவின் அமைதிப் பள்ளத் தாக்கு அதில் மிக முக்கியமான உதாரணம்.  அந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் எனப் பிடிவாதம் பிடித்தது மாநில அரசு. அதனால் ஏற்படும் விளைவுகளைப் பலரும் எடுத்துச் சொல்லியும் அரசியல் காரணங்களுக்காக, ஒப்புதல் கொடுக்கும் நிலை ஏற்பட்ட்து. அது பின் கேரள மாநிலத்தின் மக்கள் பிரதிநிதிகளால் எதிர்க்கப் பட்ட்து. இந்திரா காந்தி, எம்.ஜி.கே மேனன் தலைமையில், மாதவ் காட்கில் போன்ற சூழியல் அறிஞர்களைக் கொண்ட குழுவை அமைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், இறுதியில், அந்தத் திட்டம் கைவிடப் பட்டது.

அதே போல தமிழகத்தில் முதுமலைச் சரணாலயத்தில் அமையவிருந்த நீர் மின் திட்டத்திலும் தடையிட்டிருக்கிறார். அவரல் முடிந்த வகையில், இந்தியாவின் சூழியலைப் பாதிக்கும் எல்லா விஷயங்களிலும் தன் நேர்மறைப் பங்களிப்பைச் செய்திருக்கிறார். அவரின்  புலிகள் காப்பகத் திட்டம் உலகின் மிக முக்கியமான திட்டங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. அது உருவாக்கப்படாமல் இருந்திருந்தால், இந்தியாவில் இன்று புலிகள் இனமே அழிக்கப்பட்டிருக்கும். அதே போல்,  களக்காடு சிங்கவால் குரங்குகள் சரணாலயம், பரத்பூரின் பறவைகள் சரணாலயம், ஒரிஸ்ஸாவின் சில்கா ஏரி பாதுகாப்பு, சுந்தரவனக் காடுகளின் பாதுகாப்பு, கிண்டி மான்கள் சரணாலயம் என, இந்தியாவின் மிகப் பெரும் வனவிலங்குப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களின் இருப்பில், அவரின் கொள்கை முடிவுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.  சலீம் அலியின் (அவரின் நீண்ட கால நண்பர்) தூண்டுதலில், பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார். சோவியத் யூனியனுடான புலம் பெயர் பறவைகள் ஒப்பந்தம் அதில் மிக முக்கியமான ஒன்று.

பெரும் விவாதங்களுக்குள்ளான நர்மதா, தேரி (இமய மலையின் அடிவாரத்தில், பாகீரதி நதியில் உள்ள அணை) போன்ற திட்டங்களில், பாதிக்கப்படுபவர்கள், எதிர்ப்பவர்கள், சூழியல் அறிஞர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, தீர்வுகளை எட்ட முற்பட்டார். இமய மலையின் மிக முக்கிய சூழியல் போராட்டத் தலைவரும், காந்தியருமான சுந்தர்லால் பகுகுணாவை அழைத்து அவரின் வாதங்களையும் கேட்டுக் கொண்டார். அன்று, மாநில வனப் பகுதியில் மரங்களை வெட்டுதல், மாநிலத்துக்கான மிக முக்கிய வருமானமாகக் கருதப் பட்டது. இதை, தனிப்பட்ட தலையீடு மற்றும் சட்டங்கள் வழியே போராடி, கிட்டத்தட்ட அது இன்று நின்றே விட்டது. அதே போல் கடுமையான வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்கள், இன்று வேட்டையாடுதலைப் பெரும்குற்றமாக மாற்றி உள்ளது. 1958 ஆம் ஆண்டு, நாக்பூரில் துவக்கப்பட்ட மக்கள் நலப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை, 1974 ஆம் ஆண்டு, தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (National Envionemental Engineering Institute (NEERI) என மற்றியமைத்தார். இன்று, அது உலகின் பெருமைமிகு சுற்றுச் சூழல் ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்று.

சூழல் துறையை ஒரு அரசு நிர்வாகத்தின் தனி அங்கமாக அவர் 1980 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகு மாற்றினார். தனித்துவமான சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையை உருவாக்கி, அதன் அமைச்சராக அவர் மரணம் வரை நிர்வகித்து வந்தார்.

தன் இளம் வயதிலேயே இயற்கையோடு அவர் ஏற்படுத்திக் கொண்ட உறவு, தந்தையின் பாதிப்பால் அவர் படித்த புத்தங்கள், ஒரு தலைவராக, வளர்ச்சித் திட்டங்களால் இயற்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அவர் தன் பட்டறிவால் கண்டது, தன் இளம் வயதுத் தோழமைகள் (கைலாஸ் நாத் கௌல், சலீம் அலி) என இந்தச் சூழல்தான் இந்திரா காந்தியை பெரும் சூழியல் காவலராக உருவாக்கியது எனச் சொல்லலாம்.

உலகெங்கும், சூழியல் விழிப்புணர்வு, சிறு குழுக்களாலும், அரசுக்கு எதிரான போராட்டங்களாலும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அரசியலின், ஆட்சியின் ஒரு பகுதியாக, அதற்கான முக்கியத்துவத்தைக் கொடுத்த முன்னோடித் தலைவர் என இந்திரா காந்தியை நிச்சயமாகச் சொல்லலாம்.  இன்று நாட்டில், காடுகள் ஒரளவு பாதுகாப்பாக இருப்பதற்கும், பல அரிய விலங்குகள் உயிரோடு இருப்பதற்கும் மிக முக்கிய காரணம் அவரே.

அவரை எதிர்த்த பல, பெரும் அரசியல் தலைவர்கள், அவரை, குங்கி குடியா (பேசாப் பொம்மை) என ஏளனம் செய்தார்கள்.  இந்தப் புத்தகத்தில், தரவுகள் மூலம் வெளிப்படும் இந்திரா காந்தி, அதி நுண்ணுணர்வும், அறிவியல் அறிவும் கொண்ட,  சூழல் கெடாப் பொருளாதார  வளர்ச்சி என்னும் ஒரு கருதுகோளை, 50 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய, முன்னோடித் தலைவராக வெளிப்படுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.