வி. எஸ். நைபால் என்ற மனிதரும் அவர் எழுத்தும்

(கரிபியன் பீட், ஜனவரி – பிப்ரவரி 2002)

நோபல் பரிசுச் செய்தி குறித்து அறிய வந்தபோது இங்கிலாந்தின் கிராமப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நைபால் பெருந்தன்மையான பதில் அளித்தார். இங்கிலாந்து (அவரது “தாயகம்”), இந்தியா (அவரது “மூதாதைகளின்” தேசம்), அவரது இலக்கிய ஏஜண்ட் என்று நன்றி கூறினார். அவர் தன்னை “தேர்வுக்குப் பொருத்தமான நபராக” கருதவில்லை என்று விளக்கினார் (1972ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அவர் நோபல் பரிசுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்), தன் பிறப்பிடத்தைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார்.
ட்ரினிடாட்டில், புதிய தேசிய நூலகத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. நைபால் தன் பதின்ம பருவத்தின் சில ஆண்டுகளைக் கழித்த செயிண்ட் ஜேம்ஸ்ஸில் உள்ள இல்லம், “திரு பிஸ்வாஸின் நண்பர்கள்” என்ற அமைப்புக்கு அளிக்கப்பட்டது. அது நைபால்கள் மற்றும் பிற மேற்கிந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த ஆய்வு மையமாக வளர்த்தெடுக்கப்படவிருக்கிறது. அவரது நூல்களின் தரம் அவர் சிறுமைப்படுத்தியதன் காயத்தை மன்னிக்கப் போதுமானதாக இருக்குமா என்று விவாதிக்கும் கடிதங்கள் செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்டன. “நைபால் முக்கியமான விஷயத்தை தவற விடுகிறார்,” என்பது போன்ற தலைப்புகள் கொண்ட கடிதங்கள்.

1962ஆம் ஆண்டு, ‘தி மிடில் பாசேஜ்’என்ற அவரது முதல் பயண நூலைப் பதிப்பித்த நாள் முதல் ட்ரினிடாட் நைபால் மீது அதிக நேசம் பாராட்டியதில்லை. ட்ரினிடாட், “முக்கியத்துவமற்றது, படைப்பூக்கமற்றது, நம்பிக்கை வறட்சி கொண்டது,” என்று அவர் எழுதினார். திறமைக்கு பதில் சூழ்ச்சியை கைக்கொள்கின்றனர் ட்ரினிடாடியர்கள். பிரிட்டிஷ் மேற்கிந்திய தீவுகள் எங்கும், “எதுவும் படைக்கப்படவில்லை… ஸ்பானிஷ் அமெரிக்கா போன்ற ஒரு நாகரீகம் இல்லை, ஹைதி அல்லது அமெரிக்க காலனிகள் போன்ற மாபெரும் புரட்சி இல்லை. தோட்டங்கள், செல்வம், நசிவு, புறக்கணிப்பு, இவை மட்டுமே…” இந்த மதிப்பீடுகள் நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டன; இதனினும் இனிய அவரது கருத்துகள் மறக்கப்பட்டன.
நைபால் தன் முடிவுகளையோ மொழியையோ தணித்துக் கொள்வதில்லை. யாருடைய உணர்வுகளையும் காப்பாற்றும் கடமை அவருக்கு இல்லை. வெவ்வேறு காலகட்டங்களில் அவர் மனிதர்களை குரங்குகள் என்று அழைத்திருக்கிறார், இன்ஃபீஸ் (கீழானவர்கள்) என்று, வில்லும் அம்பும் ஏந்துபவர்கள் என்று, உருளைக்கிழங்கு தின்பவர்கள் என்று, மிஸ்டர் வோகி என்று. பல தேசங்கள் முழுமையும் “காடுகள்” என்று அவர் விவரித்திருக்கிறார். அவர் ஆங்கில மொழியில் பட்டக்கல்வி பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், “மிகவும் இரண்டாந்தர நாட்டுப்புற பல்கலை”. ஆப்பிரிக்காவுக்கு “எதிர்காலமில்லை”, ஆப்பிரிக்க இலக்கியம் பற்றி பேசுவதானால், “மேளம் முழக்கி நாவல் எழுத முடியாது”. ஒரு முறை அவர் நைட்ஹூட் விருதுகளை பிரிட்டஷ் அரசு, தபால் அலுவலகம் வழி விற்க வேண்டும் என்றும்கூட பரிந்துரைத்தார் (இது அவர் ஸர். விடியா நைபால் ஆவதற்கு முன் சொன்னது).
அவர் பேட்டி எடுப்பவர்களை சங்கடப்படுத்தக்கூடியவர்; விஷயம் தெரியாமல் கேள்வி கேட்பவர்களிடம் அவர் காட்டும் சகிப்பின்மை மிகப் பிரபலமான ஒன்று. ஜேன் ஆஸ்டன் முதல் ஜேம்ஸ் ஜாய்ஸ் வரை இலக்கியத்தின் மாபெரும் பெயர்களை அவர் குப்பைத் தொட்டிக்கு வீசியிருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரை கலாசாரச் சூறைத்தனத்துக்குச் சாடியிருக்கிறார். “அவருக்கு கோபக்காரர் என்று ஒரு பிம்பம் இருக்கிறது,” என்று அவரது இரண்டாம் மனைவி நதிரா சொல்கிறார், “ஆனால் அது உண்மையில் மெய்யல்ல”.
நைபாலின் பல விமரிசகர்கள் அவரை நோக்கி மிகக் கடுமையான குற்றங்கள் பலவற்றுடன், இனவாதம், மேட்டிமைவாதம், ஆண்செருக்கு, ஐரோப்பிய மையமை, பித்தலாட்டம் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். 1992ஆம் ஆண்டு நோபல் வென்ற டெரக் வால்காட், “அதன் நேர்மைக்காக போற்றப்படும் தன்னை அவலட்சணப்படுத்திக் கொள்ளும் ஏளனம்”, குறித்து குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார். “என்னை அப்படி கோபப்படுத்துகிறார், என் எண்ணங்கள் எல்லாமே கட்டுக்கடங்காமல் வன்முறையாக இருக்கிறது,” என்று அலறியிருக்கிறார் ஜமைக்கா கின்கைட். எட்வார்ட் சைத், “ஸ்டீரியோடைப்புகளின் விற்பன்னர், தன்னை உருவாக்கிய உலகு மீது ஒவ்வாமை கொண்டவர்,” என்று அவருக்கு பெயர் சூட்டியிருக்கிறார்.
கூர்மையான நாவு கொண்ட செலிப்ரிட்டி என்பது நைபாலின் பல பாத்திரங்களில் ஒன்றுதான். தன் வாசிப்பரங்குகளில் பார்வையாளர்களை தாங்க முடியாத சிரிப்பில் ஆழ்த்தும் வல்லமை அவருக்கு உண்டு. வில்ட்ஷைர் கிராமப்புறத்தில் உள்ள தனது குடிலில், லண்டனில் உள்ள தன் அடுக்ககங்களில், பழுத்த ஆங்கில பாஷை மற்றும் பைப்புடன், தன் “அழகிய பிரெஞ்ச் மொழியில்”, மனதுக்கினிய, நாகரீகமான இங்கிலீஷ் கனவான் வேடத்தை அவரால் தரிக்க முடியும். நுண்ணிய வைன்கள், மூக்குப்பொடி, கிரிக்கெட், 1940களின் திரைப்படங்கள், இந்திய கலைகள், அச்சு, எழுத்துருவங்கள் பற்றி அவர் அறிந்திருக்கிறார், கையெழுத்தைக் கொண்டு ஆளுமையை ஊகிக்கும் நாட்டம் கொண்டவர்.
தான் ட்ரினிடாட்டின் கார்னிவலையும் உருக்காலான பான் என்ற ட்ரம்மின் ஓசையையும் வெறுப்பதாகச் சொல்லிக் கொள்கிறார், ஆனால் அவருக்கு ‘ஸ்பாரோ’ மற்றும் ‘இன்வேடர்’ காலிப்சோக்கள் பாடத் தெரியும். அவர் ஓர் அற்புதமான நண்பராகவும் ஆசிரியராகவும் இரக்கமற்ற எதிரியாகவும் இருக்கக்கூடியவர். ஆஸ்த்மா, தூக்கமின்மை, அச்சவுணர்வுகள், தீய கனவுகள் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் அவதிப்படுபவர்.
அமெரிக்க நாவலாசிரியரும் பயண எழுத்தாளருமான பால் தெரோ, நைபாலை முதன் முதலில் ஆப்பிரிக்காவில் சந்தித்து முப்பது ஆண்டுகளுக்கும் மேல் அவரது நெருங்கிய நண்பராக இருந்தவர், அவரைப் பற்றி பல கதைகள் சொல்கிறார். “யூரோப்பியர்களுக்கு சலுகையளிக்கும் வகையில் நடந்து கொண்ட காலகட்டத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வோங் என்ற பெயர் கொண்ட இரு சீனர்கள் வெளியேற்றப்பட்டபோது, நைபால், “சரி, இரு வோங்குகள் ஒரு வைட்டாகாது”, என்றார். ஆப்பிரிக்காவில் அவர் வேண்டுமென்றே பெயர்களைத் தவறாக உச்சரித்தார்: எம்போயா என்பதற்கு பதில் “மாஹ்-போயா” என்றார், நகூகி என்பதை, “நாஹ்-கூகி” என்றார், குக் என்ற ஆங்கிலேயரை மாஹ்-குக் என்று அழைத்தார், ஏனென்றால் அவர் ஆப்பிரிக்கச் சட்டை அணிந்திருந்தார், மோசமான ஆப்பிரிக்க கவிதைகளை மிக உற்சாகமாக பரிந்துரைத்தார்.”
அப்போதே அவரால் மோசமான எழுத்தைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. தன் கவிதையின் எழுத்துப் பிரதியை காட்டிய ஆப்பிரிக்க மாணவரிடம், “இது உன் கவிதையா?” என்று அவர் கேட்டார்… “ஆமாம்தானே? சரி, இதை வாசித்து விட்டேன், இனி கவிதை எழுத மாட்டேன் என்று நீ எனக்கு இப்போதே சத்தியம் செய்து கொடுத்தாக வேண்டும். வருத்தப்படாதே. என்னைப் பார், வாழ்க்கையில் நான் ஒரு கவிதைகூட எழுதியதில்லை. உன் திறமைகள் வேறு திசையில் இருக்கின்றன என்று நம்புகிறேன். ஆனால் உன் கையெழுத்து அழகாக இருக்கிறது.”
என்ன சொன்னாலும், ஓர் எழுத்தாளர் மூர்க்கத்தனத்துக்கோ அரசியல் சரிகளை அனுசரிக்காத காரணத்தாலோ நோபல் பரிசு பெறுவதில்லை. நைபால் 26 அசாதாரண புத்தகங்கள் எழுதியிருக்கிறார், அவற்றில் பலவும் மெய்யாகவே மகத்தானவை. ஆனால் இந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், இந்து பெண்மணியின் நெற்றியில் உள்ள சிவப்பு பொட்டு எதைக் குறிக்கிறது என்று நேர்முகம் ஒன்றில் கேட்கப்பட்டபோது, “என் தலை காலியாக இருக்கிறது,” என்று பதில் சொன்னவர்.
விதியாதர் சுருஜ்பிரசாத் நைபால் சிக்கலான மனிதர்.
நைபாலின் மிகப்பெரிய எண்ணிக்கை கொண்ட எழுத்துத் தொகை 44 ஆண்டுகளின் தொழிற்பாடு: புனைவுகள், வரலாறு, சுயசரிதை, பயணம், செய்திக் கட்டுரைகள், மற்றும் இவ்வகைமைகளின் வெவ்வேறு கலவைகள். அவரது களம் இக்கோளம் எங்கும் விரிகிறது: கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா, யுனைட்டட் ஸ்டேட்ஸ், இங்கிலாந்து, கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, ஐவரி கோஸ்ட்டும் மொசாம்பிக்கும், இரான், பாகிஸ்தான், இந்தியா, மலேஷியா. இவ்வளவு பெரிய பயணத்தை வெகுச் சில எழுத்தாளர்களே முயற்சி செய்திருக்கிறார்கள். ‘பின்-காலனிய உலகு’க்கு உரிய துயரங்களை இவ்வளவு முழுமையாகவும் சோகமாகவும் வேறு யாரும் விவரித்தது கிடையாது (இந்த ‘பின்-காலனிய உலகு’ என்ற சிந்தனை செப்டம்பர் 11க்குப்பின் வெறும் கல்வித்துறை தேய்வழக்கு என்று சொல்ல முடியாத நிலையை எட்டிவிட்டது).
“அமைதி பின்னடைவு காண்கிறது,” என்று 1972ஆம் ஆண்டு அவர் மொரிஷியஸில் இருக்கும்போது எழுதினார். “பர்ரகூனில் கூட்டம் அலைமோதுகிறது; தப்பிச் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு விட்டன. மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள், ஆபத்து குறித்த அச்சம் இவர்களுக்கு இல்லை.” “அரைகுறையாய் உருவாக்கப்பட்ட சமூகங்களின்” உறுதியின்மை, அவை உடைவுக்கும் வன்முறைக்கும் உள்ளாகும் சாத்தியம்; பொருந்தாத இடத்தில் இருத்தப்பட்டவர்களும் உடமைகளைப் பறிகொடுத்தவர்களும்; குடியேறி, நாடு கடத்தப்பட்டவன், கலவை இனத்தவன்- “உலகமயமாக்கப்பட்ட” உலகின் இந்த இருட் பிரதேசம் நைபாலின் வசிப்பிடமாக இருந்திருக்கிறது. இரண்டாம் தரத்துக்கு எதிராய், குழப்பத்துக்கும் சடத்தன்மைக்கும் எதிராய், அவர் கொரில்லாப் போர் தொடுத்திருக்கிறார்: சுதந்திரமும் மரியாதையும் செயல் புரிந்து வென்றெடுக்கப்பட வேண்டியவை. நைபால் தீர்வுகள் அளிப்பதில்லை: அவர் தன்னை நோய் கண்டறிவிப்பவனாய் காண்கிறார், சிகிச்சை அளிப்பவராய் அல்ல. நீங்கள் அவருடன் முரண்படலாம், அவரது நடத்தையைக் கண்டிக்கலாம், அவரது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகளை நிராகரிக்கலாம்; ஆனால் அவரது எழுத்தைத் தப்ப முடியாது.
தம் உணர்வுநிலையை காப்பாற்றிக் கொள்வதற்காக எழுத்தை நோக்கி உந்திச் செல்லப்படும் எழுத்தாளர்களில் ஒருவர் நைபால்.
அவரது ட்ரினிடாட் குழந்தைப்பருவம் கொந்தளிப்பானது. அவரது அன்னை திரோபதி கபில்தியோ இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர், மத்திய ட்ரினிடாட்டில் உள்ள சகுவானாஸ்ஸில் தாய்வழி பாட்டியால் தலைமை தாங்கப்படும் “பண்டிதர்கள் மற்றும் நில உடமையாளர்” குடியில் ஒருவர். (1920ஆம் ஆண்டு கட்டப்பட்ட வட இந்திய பாணி இல்லம் இப்போது புதுப்பிக்கப்பட்ட நிலையில் இன்றும் இருக்கிறது.) அவரது தந்தை சீபெர்சாத் நைபால் தனியர்; அவர் பண்டிதராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதை நிராகரித்து, இந்து மதச் சீர்திருத்தத்தை ஆதரித்தார், நிருபரானார். இரு குடும்பங்களும் பிராமண வேர்கள் கொண்டவை; இரண்டும் இரு தலைமுறைகள் முன்தான், 1880களில், ஒப்பந்தக் கூலிகளாய், இந்தியாவை விட்டு வெளியேறியவை. சீபெர்சாத்துக்கும் திரோபதிக்கும் 1930 முதல் 1952 வரையிலான ஆண்டுகளில் பிறந்த ஏழு குழந்தைகளில் விடியா இரண்டாமவர்.
அவருக்கு ஏழு வயதாகியிருந்தபோது, அவரது இந்து உறவினர்கள் சூழ வாழ்ந்திருந்த சகுவானாஸ்ஸின் இந்திய உலகை விட்டு போர்ட் ஆஃப் ஸ்பெயினின் க்ரியோல் உலகுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் அவரது பெற்றோர்கள் கடற்கரைக்கு அருகில் உள்ள டாக்சைட் பகுதியில் இருந்த அவரது பாட்டி வீட்டில் வசித்தார்கள், பின்னர் ஊருக்கு வெளியே பெடிட் சமவெளியில் இருந்த பாட்டியின் கோகோ தோட்டத்துக்குச் சென்றனர், அதன் பின் மீண்டும் நகர் திரும்பினார்கள். இறுதியில் அவரது அப்பா- கபில்தியோக்களுடன் ஒன்ற முடியாதவர், மன அழுத்தத்தாலும் மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டவர்- புறநகரில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் பகுதியில், 26, நேபால் வீதியில் 1946ஆம் ஆண்டு சொந்த வீடு வாங்கினார். விடியா க்வீன்ஸ் ராயல் கல்லூரியில் படித்தார். “அந்த வீட்டில் நாங்கள் இருந்த கடைசி இரண்டு ஆண்டுகள், மிக மோசமாக இருந்தன,” என்று அவர் எழுதினார்.
சீபெர்சாத் நைபால் எழுத்தாளராக வேண்டும் என்ற ஏக்கம் கொண்டிருந்தார், கணிசமான எண்ணிக்கை கொண்ட சிறந்த சிறுகதைகள் எழுதினார், அவற்றில் சில லண்டன் பிபிஸியில் ஒலிபரப்பப்பட்டன. வெவ்வேறு காலகட்டங்களில் இருமுறை அவர் லண்டன் கார்டியனில் பணியாற்றினார். அந்தப் பத்திரிக்கையை நவீனப்படுத்தியவரும், அவருக்கு முக்கியமாக இருந்த அறிவுரையும் ஆதரவும் அளித்தவருமான கால்ட் மக்கவான் அங்கு அவர் முதல் முறை பணியாற்றியபோது ஆசிரியராக இருந்தார். அவரது கதைகள் இந்திய கிராம வாழ்க்கை மற்றும் “அந்த வாழ்க்கைக்கு அருளும் நிறைவும் அளித்த இந்துச் சடங்குகளை” பேசின. எழுதிக் கொண்டிருக்கும்போதே அவர், இளம் விடியாவுக்கு “தி அட்வென்சர்ஸ் ஆஃப் குருதேவா”வைப் படித்துக் காட்டினார். “அவர் பத்திரிக்கையாளர் அல்லது எழுத்தாளர் பணிக்குப் பிறந்தவர்,” என்று விடியா பின்னர் எழுதினார்; அவரது எழுத்து அதன் முழுச் சாத்தியத்தை நிறைவு செய்யவில்லை எனினும், “பிறவிப் பண்டிதர் பணியின் வேறு வடிவம்.”
உரசல்கள் நிறைந்த ஒழுங்கற்ற குடும்ப வாழ்க்கை, தொடர்ந்த இடமாற்றங்கள், அந்நிய க்ரியோல் உலகினுள் அடக்கமாய் இருந்த இந்திய உலகு, அவரது தந்தையின் மகிழ்ச்சியின்மை- இவையனைத்தும் ட்ரினிடாட் மற்றும் வாழ்வு குறித்த விடியாவின் கண்ணோட்டத்தை உருவாக்கின: “என் பள்ளி வாழ்க்கையில் மட்டுமே ஒழுங்கிருந்தது”. குடும்ப வாழ்க்கை, “அதிகாரம் ஒன்று மட்டுமே சர்வ வல்லமை கொண்டிருந்த எதேச்சாதிகார அரசின் சிமிழ் வடிவம். என்னை அதிலிருந்து உள்ளிழுத்துக் கொண்டேன்.” அது, “உலக நடப்பின், குரூரத் தன்மையின் முதல் அறிமுகம். அது எனக்கு… மற்றொரு வகை வாழ்வின் மீது, தனிமையான, கூட்டம் குறைவான வாழ்வின் மீது, தன்னைச் சுற்றி தனியிடம் கொண்ட வாழ்வின் மீது நாட்டம் அளித்திருக்கிறது.”
குழந்தைப்பருவத்தின் இச்ச்சவால்களிலிருந்துதான், வளர்ச்சியடைந்த விடியாவின் படைப்புகளில் உள்ள கருப்பொருட்கள் மற்றும் அக்கறைகள் அனைத்தும் பிறந்திருக்கின்றன.
விலகியிருப்பது மற்றும் பட்டுக்கொள்ளாமல் இருப்பது போன்ற முகமூடியை அணிந்து கொள்ளப் பழகினார் அவர். ஒழுங்கு, பகுத்தறிவு, அந்தரங்கம், தனிமை முதலானவற்றுக்கான தீவிர தேவையை உணர்ந்தார். அவர் தன் தந்தையின் “ஹிஸ்டீரியாவுக்கு” வாரிசானார்- “அழிந்து விடுவோம் என்ற அச்சம்… நான் என்னவாக இருக்க வேண்டுமோ அப்படியாக முடியாமல் போய் விடுவது குறித்த பீதி.” தன் தந்தையைப் போலவே அவரும், “பிறவிப் பணியைத் தொடர்வதால் மட்டுமே அச்சத்தை எதிர்த்து போரிட முடியும்,” என்று கண்டு கொண்டார்- “அதற்கான திறமை இருப்பதற்கான அறிகுறி எதுவும் வெளிப்படவில்லை,” என்றபோதும், அவருக்கு பதினொரு வயது இருக்கும்போது, “நான் ஓர் எழுத்தாளனாக வேண்டும்… என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.” எழுத்தாளனாக இருப்பது என்பது, “இருளை வெல்வது,” என்று அவர் கண்டார். உயிரைத் தக்கவைத்துக் கொள்ளுதல் என்பதன் பொருள் உலகில் உன் தடயத்தை விட்டுச் செல்வது என்று அவர் கற்றுக் கொண்டார்: தனிப்பட்ட சாதனையை நோக்கி அறிவு மற்றும் மன உறுதியின் ஆற்றல்கள் அனைத்தையும் செலுத்த வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
1940களின் பிற்பகுதியில் அவரது மிகப்பெரிய தேவை ட்ரினிடாட்டை விட்டுத் தப்பிச் செல்வதாக இருந்தது. 1983ஆம் ஆண்டு ஓர் நேர்முகத்தில் அவர் கூறினார்: “எனக்கு அதன் தட்பவெப்பம் பிடிக்கவில்லை. எனக்கு அங்கு நிலவிய ஒளியின் தன்மை பிடிக்கவில்லை. எனக்கு அதன் வெப்பம் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு ஏற்பட்ட ஆஸ்துமாவைப் பிடிக்கவில்லை. என்னைச் சுற்றியிருந்த இனப் பகைமைகள் பிடிக்கவில்லை… எனக்கு அந்த இசை பிடிக்கவில்லை. எனக்கு அந்த ஓசை பிடிக்கவில்லை. நான் தவறான இடத்தில் இருப்பதாக மட்டும்தான் தோன்றியது.” சீரழிந்து, நசிந்து கொண்டிருப்பது எதையும் விவரிக்க, “காடு” என்ற உயிர்ச் சித்திரத்தை அவர் உருவாக்கிக் கொண்டார்: “அமைப்புகள் செயலிழப்பது, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம் முடிவது… திருட்டு, ஊழல், இனப்பகைமையைத் தூண்டுவது”.
அவர் 1950ல் தப்பித்தார், ஆக்ஸ்போர்டில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் அவருக்கு உதவித்தொகை அளித்தது. அவர் தன்னம்பிக்கைமிக்க கடிதங்களை வீட்டுக்கும் இந்தியாவில் படித்துக் கொண்டிருந்த தன் மூத்த சகோதரி கம்லாவுக்கும் எழுதினார். அவருக்குச் சில நட்புகள் கிடைத்தன (“இங்கே இருப்பது கூட்டம் கூட்டமாக கழுதைகள்,” என்றாலும்கூட), அடுத்தடுத்து குறுகிய காலத்தில் சில தோழிகள் கிடைத்தார்கள், ‘ஐபிஸ்’ என்ற பல்கலை தினசரியிலும் ‘ஆக்ஸ்ஃபோர்ட் டோரி’ என்ற இதழிலும் எழுதினார்; கிரிக்கெட் விளையாடினார் (ஒரு முறை 11-3-25-3 என்ற அளவில் பந்து வீசினார், தனது காலேஜ் முதல் அணியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார்). அவர் ஆயில் பெயிண்ட்டிங்குகள் தீட்டினார். பாரிஸ் சென்றார். ‘தி மார்ட்லெட்ஸ்’ என்ற “கல்லூரி அறிவுஜீவி” குழுவின் காரியதரிசியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது தன்னம்பிக்கை மெல்ல மெல்ல அதிகரித்தது. “நான் ஒரு புதிய ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அங்குள்ள சிறந்த ஹோட்டலுக்குப் போய், லவுஞ்சில் உட்கார்ந்து கொண்டு, எல்லா தினசரிகளையும் படிப்பேன்… காப்பி குடிப்பேன். எனக்கு சௌகரியமாக இருக்கப் பிடிக்கும். ட்ரினிடாட்டில் இருந்தபோது சிவில் சர்வீஸ் ஆபிஸ் போகக்கூட மிகவும் கூச்சப்படுபவனாக இருந்தேன், ஆனால் இப்போது நான் எல்லா இடத்துக்கும் போகிறேன், மற்ற எவருக்கும் இருக்கும் உரிமை எனக்கும் இருக்கிறது என்று தீர்மானமாக நம்புகிறேன்.” ஆக்ஸ்ஃபோர்டில் அவர் ‘தி ஷாடோட் லிவரி’ என்ற நாவல் எழுதினார். “நான் எழுத்தாளனாகி விட்டேனென்று சந்தேகப்படுகிறேன்,” என்று அவர் தகவல் தெரிவித்தார். “நான் எழுத எழுத, இன்னும் அதிகம் எழுத ஆசைப்படுகிறேன்.” அப்போதும், இதைச் சேர்க்க மறக்கவில்லை: “ஆனால் எழுதுவது எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இல்லை.”
நவம்பர் 1951ல் அவரது நாவல் நிராகரிக்கப்பட்டபோது, நீண்ட ஒரு மன அழுத்தத்தில் ஆழ்ந்தார், “எதிலும் எனக்கு ஆர்வமில்லாமல் போய் விட்டது.” அடுத்து வந்த மார்ச் மாதத்தில் அவரது கதைகள் பிபிஸியில் ஒலிபரப்பப்பட்டன, ஆனால் அப்போது அவர், “மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன், ஊர் திரும்பும் விழைவுகள் மிக உக்கிரமான உணர்வுகளாக இருந்தன… தாள முடியாத தனிமையை உணர்ந்தேன்,” என்று எழுதுகிறார். தனக்கு “நரம்புத் தளர்ச்சி,” ஏற்பட்டு விட்டதாக அவர் தன் குடும்பத்தினரிடம் ஏப்ரல் மாதத்தில் ஒப்புக் கொண்டார். “என் மன முறிவின் காரணம் எனக்குத் தெரியும்: தனிமை, அன்பின்மை… என்னால் யாரைப் பார்ப்பதையும் தாள முடியவில்லை.என்னால் வாசிக்க முடியவில்லை, அது மனிதர்களைப் பற்றி நினைக்கச் செய்தது; நான் சினிமா போக முடியவில்லை; என்னால் ரேடியோ கேட்க முடியவில்லை… பயப்படாமல் நான் சாலைகளில் நடந்து செல்ல முடிகிறது என்பதே கிட்டத்தட்ட ஓர் அதிசயமாக இருக்கிறது.”
இந்நிலை சில மாதங்கள் நீடித்தது, செப்டம்பரில் ஒரு மனநல மருத்துவரைப் பார்த்தார், அப்போது அவர் பட்ரிஷியா ஆன் ஹேலையும் சந்தித்திருந்தார் (அவரை 1955ஆம் ஆண்டு மணம் செய்து கொண்டார்). அவள், “என் நோய்மையின் உச்சத்தில் என்னை நட்பாக்கிக் கொண்டாள், என் மனநிலை மாற்றங்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டாள்”. 1953ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் பி.ஏ. பட்டம் பெற்றபோதும், “இருண்ட மன அழுத்த கால கட்டங்கள்” வருவதாய் அவர் சொன்னார். அப்போது அவருக்கு வயது 20தான்.

f=”https://solvanam.blog/wp-content/uploads/2018/08/Naipaul_Vidia_parents_elder_sister_Kamla.jpg”>
சீபெர்சாத் அக்டோபர் 1953ல் இறந்தார். ஆனால் ட்ரினிடாட் திரும்பி குடும்பத்தைக் காப்பாற்ற நைபாலுக்கு அளிக்கப்பட்ட அழுத்தத்துக்கு அவர் இணங்கவில்லை. “ட்ரினிடாட் வாழ்க்கை முறையில் நான் பொருந்த மாட்டேன் என்று தோன்றுகிறது. என் மிச்ச வாழ்நாளை ட்ரினிடாட்டில் கழிக்கச் சொன்னால் நான் செத்துப் போய் விடுவேன் என்று நினைக்கிறேன். அந்த இடம் மிகச் சிறியது, அதன் விழுமியங்கள் எல்லாமே தவறானவை, அதன் மக்கள் அற்பமானவர்கள். இவை போக, எனக்கு அங்கு எந்த வேலையுமில்லை.” மாறாக, அவர் ஒரு பண்ணையில் வேலை செய்தார், கலைக்களஞ்சியங்கள் விற்றார், இந்தியாவில் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தார். கையில் ஆறு பவுண்டுடன் லண்டன் சென்றார், அங்கு பிபிஸியில் பகுதி நேர பணியாற்றினார், கான்கிரீட் அண்ட் சிமெண்ட் அசோசியேஷனுக்கு விளம்பர வாக்கியங்கள் எழுதித் தந்தார். “பார், நான் ஓர் எழுத்தாளராக வெற்றி பெறப் போகிறேன்,” என்று அவர் ஏப்ரல் 1955ல் எழுதினார். “அதை நான் அறிவேன். அந்தச் சாத்தியத்துக்காக என் எதிர்காலத்தைப் பணயம் வைத்திருக்கிறேன்.” அக்டோபரில்: “வெளிப்படையாகச் சொல்கிறேன், எழுத்தில் பெரிய அளவில் என்னவோ செய்யப் போகிறேன் என்று எதிர்பார்க்கிறேன்.”
1955ஆம் ஆண்டு திறப்பு ஏற்பட்டது- அவரது சிந்தனையில் இருந்த ட்ரினிடாட் விஷயங்கள் திடீரென்று ஒருமுகப்பட்டன, அவர் ‘மிகுவல் ஸ்ட்ரீட்’ தொகுப்பில் உள்ள கதைகளை ஆறு வாரங்களில் எழுதி முடித்தார். அவை, அவர் வாழ்ந்திருந்த டாக்சைட் வீதியின் மக்களைப் பற்றிய கதைகள், வலுவான வண்ணங்கள் கொண்ட ட்ரினிடாட் ‘பாத்திரங்கள்’, சிரிப்பவர்கள், சோகமானவர்கள், உயிரோட்டமுள்ளவர்கள், வித்தியாசமானவர்கள். ஆனால் இப்போதே நகைச்சுவை நைபாலின் அக்கறைகளில் தோய்ந்ததாய் இருக்கிறது: நிலையின்மை, இனக்கலப்பு, போலி செய்தல், வெற்று வாக்குறுதிகள், பெருங்கனவுகள்; எப்போதுமே எதுவும் சாதிக்கப்படுவதில்லை, எதுவும் நிலைத்திருப்பதில்லை. கரிபியன் எழுத்துலகில் இது மெய்யாகவே ஒரு புதுக்குரலாக இருந்தது: மேற்பரப்பில் அற்புதமான நகைச்சுவை, கூர்மையான, தெளிவான, உரையாடல்கள், நறுக்கு தெறித்தாற் போன்ற வாக்கியங்கள், இருண்மை நிறைந்த முரண்நகை கொண்ட உள்ளடுக்குகள்.
டிசம்பர் மாதத்தில் பதிப்பாளர் ஆண்ட்ரே ட்யூஷ் நைபாலின் முதல் நாவல் ‘தி மிஸ்டிக் மாஸ்யூர்’ஐ பதிப்பிக்க ஏற்றுக் கொண்டார். அதன்பின் ‘தி ஸஃப்ரேஜ் ஆஃப் எல்விரா’ மற்றும் ‘மிகுவல் ஸ்ட்ரீட்’ வெளியாயின. இனி அவர் வேறு எந்த பதிப்பகத்துக்கும் எழுத மாட்டார், வேறு யாருக்கும் கடமைப்பட்டிருக்கவும் மாட்டார். ”இது… மனிதர்களிடமிருந்து என்னை விடுவித்திருக்கிறது, உறவுச் சிக்கல்களிலிருந்து, பகைமைகளிலிருந்து, போட்டியிலிருந்து. எனக்கு எதிரிகள் இல்லை, போட்டியாளர்கள் இல்லை, எஜமானர்கள் இல்லை. நான் யாரையும் அஞ்சவில்லை.”
‘மிகுவல் ஸ்ட்ரீட்’ வந்தபின் மேலும் நான்கு புத்தகங்கள் நைபாலின் ட்ரினிடாட் அனுபவங்களைப் பேச எடுத்துக் கொண்டன. ‘தி மிஸ்டிக் மாஸ்யூர்’ , ‘தி ஸஃப்ரேஜ் ஆஃப் எல்விரா’ என்ற இரண்டும் 1930கள் மற்றும் 1940களின் ட்ரினிடாட்டை களமாய்க் கொண்ட கூர்மையான சமூக விமரிசன நகைச்சுவைப் படைப்புகள்: இவற்றின் நாயகர்கள் சூது, பித்தலாட்டம், வாக்குகளை விலைக்கு வாங்குதல், சதி, மாயம், அல்லது வெறும் அதிர்ஷ்டத்தால் பேரும் புகழும் அடைகின்றனர். இக்காலகட்ட கதைகளில் மிகவும் நகைச்சுவையான கதைகள் பின்னர் ‘எ ஃப்ளாக் ஆன் தி ஐலண்ட்’ என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டன.
ஆனால் அவரது துவக்ககால மாஸ்டர்பீஸ், ‘எ ஹவுஸ் ஃபார் மிஸ்டர் பிஸ்வாஸ்’தான். நீண்ட, யதார்த்தவாத நாவலான அது அவரது குழந்தைப்பருவ அனுபவத்தை மீளுருவாக்கம் செய்தது. சீபெர்சாத் நைபால் போன்றவன், பரிதாபத்துக்குரிய, செய்வகை தெரியாத, மோகன் பிஸ்வாஸ், பருண்ம வடிவிலும் படிமப் பொருளிலும் தனக்கென்று ஒரு வீடடைய ஏங்குகிறான்; கபில்தியோக்கள் துள்சிக்களால் விவரிக்கப்படுகிறார்கள், நைபாலின் இடத்தை இளம் ஆனந்த் பிஸ்வாஸ் வகிக்கிறான் (“அவனது பகடியுணர்வு அவனை விலகியிருக்கச் செய்தது… பகடி இகழ்ச்சிக்கு கொண்டு சென்றது… வேகமான, ஆழமான, எல்லாவற்றையும் நோக்கிய இகழ்ச்சி அவனது இயல்பில் ஒரு பகுதியானது. அது போதாமைகளுக்கு இட்டுச் சென்றது, தன்னுணர்வுக்கும் தொடர்ந்த தனிமைக்கும் காரணமானது. ஆனால் அது அவனை தோற்கடிக்க முடியாதவனாக்கியது”).
இந்த துவக்க காலகட்டம், அப்போது ட்ரினிடாட் மற்றும் டொபாகோ பிரதமராக இருந்த டாக்டர் எரிக் வில்லியம்ஸின் பரிந்துரையின் பேரில் நைபால் எழுதிய கரிபியன் பயண நூலான, ‘தி மிடில் பாசேஜ்’ உடன் முடிவுக்கு வந்தது. ட்ரினிடாட், கயானா, சூரினாம், மார்டினிக் மற்றும் ஜமைக்கா ஆகிய தீவுகளுக்கு நைபால் சென்றார், ஆங்கிலேய பயணிகள் வரிசையில் அவரும் அத்தீவுகளை அன்னியர் பார்வையில் கண்டார். “அந்த இடம் குறித்து பாதிக்கும் மேற்பட்ட சித்திரத்தை தவற விட்ட, மிகவும் எதிர்மறை பார்வை,” ஆண்ட்ரி ட்யூஷ்ஷில் இருந்த பதிப்பாசிரியருக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றமளித்தது. ஆனால் அது ஒரு முக்கியமான முன்னெடுப்பு: புனைவின் முகமூடி இல்லாமல், அவர் எதை “அரைகுறையாய்ச் சமைக்கப்பட்ட சமூகங்கள்,” என்று சொல்கிறார் என்பதை மிகத் தெளிவாக இங்கு வெளிப்படுத்துகிறார்.
முதலில் சொன்ன இந்த துவக்க புத்தகங்களே எந்த ஒரு எழுத்தாளருக்கும் காத்திரமான சாதனையாய் இருந்திருக்கும். ஆனால் அவை வணிக வெற்றி பெறவில்லை. 1958ஆம் ஆண்டு, தான் ஐந்து ஆண்டுகளில் மூன்று புத்தகங்கள் எழுதி 300 பவுண்டுகள் பெற்றிருப்பதாக நைபால் குறைபட்டுக் கொண்டார். அடுத்த சில ஆண்டுகளும் நைபால் ஏழ்மையுடன் போராட வேண்டியிருந்தது, ‘கொரில்லாக்கள்’ பெயர் பெற்றுத் தந்த 1975ஆம் ஆண்டு வரை அவருக்கு யுனைட்டட் ஸ்டேட்ஸ்சிலும் பெரிய அளவில் மதிப்பிருக்கவில்லை. ஆனால் இப்போது தன்னிடம் இருந்த ட்ரினிடாட் கதைகள் முடிந்து போய் விட்டதை அவர் உணர்ந்தார். அவரது நிலை மிக மோசமாக இருந்தது, கருப்பொருள் இல்லாத எழுத்தாளர்.
அவர் வளரும் நாடுகளின் பிற பகுதிகளை உற்று நோக்கத் துவங்கினார். தன் மூதாதையர்களின் தாயகமான இந்தியாவில் அவர் ஓராண்டு இருந்தார், ஒரு தேசத்தையும் தன் இந்தியத்தன்மையையும் விவரிக்கும் ‘அன் ஏரியா ஆஃப் டார்க்னஸ்’ எழுதினார். அவரது தாத்தா ட்ரினிடாட்டிலிருந்து இந்தியா திரும்பியிருந்தார், அங்கு தன் பழைய வீட்டை அடையும் முன் இறந்தார். நைபால் அந்த கிராமத்துக்குச் சென்றார், அதைக் குறித்து எழுதினார்: “இந்த கிராமமே மெய்யான இடம். ட்ரினிடாட் ஓர் இடையிசை, மயக்கம்.” இந்தியாவில் சாடுவதற்கு அவர் நிறைய விஷயங்களைக் கண்டார். ஒழுங்கின்மை, ஊழல், திறமையின்மை, அழுக்கு, பழக்கமாய்ப் போய்விட்ட முன்யோசனையின்மை, சடங்குகள், மூட நம்பிக்கை, நசிவு, அர்த்தமில்லாத மர்மங்கள். 1981ஆம் ஆண்டு ஒரு நேர்முகத்தில் சொன்னார்: “இந்தியா தன்னை ஒரு பெரிய தேசமாகக் காண வேண்டும் என்று விரும்புகிறேன். அது உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியாக வேண்டும். அது மிக உயர்ந்த சாதனைத் தரங்கள் கொண்டிருக்க வேண்டும். 60- 70 கோடி மக்களைக் கொண்ட தேசம் இன்று மோசக்கார சாமியார்களை மட்டுமே உலகுக்கு தருகிறது என்றால் அது தன்னைக் குறித்து வெட்கப்பட வேண்டும்.”
நைபால் இங்கிலாந்து குறித்து எழுதத் தயங்கினார்: அது மூடப்பட்ட, அந்நியர்களை பெருமளவு அனுமதிக்காத அந்தரங்கச் சமூகம் என்பதாக அவர் கண்டார். ஆனால் தான் “பிராந்திய எழுத்தாளராக” மட்டும் இருந்தால் போதாது, இலக்கிய மைய ஓட்டத்தில் தன்னை நிறுவிக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தார். 1962ஆம் ஆண்டு காஷ்மீரில் அவர் தன் முதல் “ஆங்கில” புத்தகத்தை முடித்தார்- அது முழுக்க முழுக்க இங்கிலீஷ் களமும் பாத்திரங்களும் கொண்ட இருண்மையான, உன்முகப்பட்ட ‘மிஸ்டர் ஸ்டோன் அண்ட் தி நைட்ஸ் கம்பானியன்’. இந்த நாவல் குறைந்த அளவே வாசிக்கப்படுகிறது, அதற்கு உரிய இடத்தை இன்னும் அடையவில்லை என்றபோதும் உற்சாகமற்ற, மங்கிய ஒளி கொண்ட இங்கிலாந்தில் முதிய மிஸ்டர் ஸ்டோனும் அவரது முறியடிக்கப்பட்ட கனவுகளும் நைபாலின் எழுத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றம்.
ஆனால் தனக்குரிய மையத்தைக் கண்டடையும் சிக்கலுக்கு இந்தப் புத்தகங்கள் தீர்வு காணவில்லை. தன் மூதாதையர்களின் மண்ணில் மட்டுமல்ல, தான் பிறந்த தீவிலும் நைபால் ஓர் அன்னியராகவே உணர்ந்தார்: இந்தியாவில் அவர் மிகவும் மேற்கத்தியராகவும் மேற்கில் அவர் மிகவும் இந்தியராகவும் இருந்தார். இந்தியாவும் ட்ரினிடாட்டும் தனது உணர்வுகள் வெளிப்படுவதைத் தடை செய்வதாக அவருக்குத் தோன்றியது. “என் வெறுமையை, உடலளவில் நான் தொலைந்து போனவன் என்ற உணர்வை, எதிர்கொண்டு,” அவர் லண்டன் திரும்பினார்.
1960களின் மத்திய ஆண்டுகளில் நைபால் சில மாதங்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் கழித்தார். அவர் இளம் அமெரிக்க எழுத்தாளர் பால் தெரோவுடன் நண்பரானார். இளம் நைபால் குறித்து மிக உயிர்ப்புள்ள, உண்மையை உணர்த்தக்கூடிய சித்திரங்களை அவரே அளித்திருக்கிறார். நைபால் கிழக்கு ஆப்பிரிக்க பல்கலைப் பணியில் இருந்தாலும் அங்கு அவர் ஒரு முறைகூட உரையாற்றவில்லை என்கிறார் தெரோ- வெகு சீக்கிரம் நைபால் பல்கலை வளாகத்தை விட்டு வெளியேறி மேற்கு கென்யாவில் உள்ள ஒரு ஓட்டலில் அறையெடுத்து ஒரு புதிய புத்தகத்தை எழுதி முடித்தார்.
“அவர் நான் சந்தித்தவர்களில் மிக வினோதமான ஒருவர்,” என்று தெரோ எழுதினார், “அவர்தான் பழகுவதற்கு மிகக் கடினமானவர் என்பதில் சந்தேகமில்லை. அவரிடம் முரண்பாடுகள் இருந்தன, அவர் தொடர்ந்து என்னைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார், நான் சொன்ன எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்க்கேள்வி எழுப்பினார், எப்போதும் என் கவனத்தைக் கோரிக் கொண்டேயிருந்தார், அவர் அற்பத்தனமாய் நடந்து கொள்ளக்கூடியவர், ஆப்பிரிக்கா பற்றி நம் நம்பிக்கைகளுக்கு விரோதமான கருத்துகளைச் சொன்னார், அவர் அலட்டிக் கொண்டார், கேலி செய்தார், ஒரு பாவமும் அறியாத தன் மனைவியை அழ வைத்தார், அசாத்தியமான எதிர்பார்ப்புகள் வைத்திருந்தார், அவர் தனக்கு மிகையான முக்கியத்துவம் அளித்துக் கொண்டார், தன் உடல்நிலை பற்றி எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தார். அவர் குழந்தைகளையும் இசையையும் நாய்களையும் வெறுத்தார். ஆனால் அவரது அறிவு கருத்தைக் கவர்வது, தன் நம்பிக்கைகள் குறித்து மிகவும் தீவிரமாக இருந்தார், ஒரு நண்பராகவோ அல்லது ஒரு சக எழுத்தாளராகவோஅவருடன் இருக்க வேண்டும் என்பதற்காக நான் எப்போதும் சிறந்த வகையில் நடந்து கொள்ள வேண்டியிருந்தது”.
இருவரும் இணைந்து பயணம் செய்தார்கள், நைபால் பருத்தியாலான ஆடைகளும் வெயிலை மறைக்கும் அகன்ற விளிம்புகள் கொண்ட தொப்பியும் அணிந்திருந்தார், “கனமாக இருந்த அவரது கைத்தடி, அவரைத் தாக்க வருபவர்களை தேவைப்பட்டால் வீழ்த்தவும் அவர்களது மண்டையை உடைக்கவும் உதவக்கூடிய குண்டாந்தடியாகவும் பயன்பட்டது.” நைபால் அவருக்கு எழுத்துக்கலை குறிப்புகள் வழங்கினார். போலியாகவோ, படாடாபமாகவோ, அலங்காரமாகவோ இருப்பது அனைத்தையும் அவர் நிராகரித்தார்; தெளிவு, எளிமை, கடும் உழைப்பு ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார். “உண்மை ஒழுங்கற்றது,” என்று சொன்னார் அவர். “அது அழகியது அல்ல. எழுத்து அதைப் பிரதிபலிக்க வேண்டும். கலை உண்மை சொல்ல வேண்டும்.”
“நான் உடன் பயணம் செய்வதவர்களில் அவரளவு முழு விழிப்புடன் இருந்தவர்கள் யாரும் கிடையாது,” என்று தெரோ எழுதினர். “எழுத்துக் கலை மீது அவரளவு அர்ப்பணிப்பு கொண்டவர்களை நான் சந்தித்ததேயில்லை… அவருக்கு இலக்கியம் படைப்பது என்பது ஒரு வகை பிரார்த்தனை, நிலைகுலையச் செய்யும் பிரார்த்தனை. ஓர் எழுத்தாளராக அவர் வாசகனின் தோழனல்ல, அவனுக்கு இணையாவனல்ல, மாறாய், ஆசாரிய பாங்கு கொண்ட எழுத்தாளராய் இருந்தார்.”
1966ஆம் ஆண்டு அவர் மேற்கு கென்யாவில் எழுதி முடித்த புத்தகம், ‘தி மிமிக் மென்’.
நைபால் எழுத்துக் கலையில் தேர்ச்சியடைந்து வந்த அதே காலகட்டத்தில், சகிப்புத்தன்மைக்கோ மென்மையுணர்வுகளுக்கோ தான் இடம் கொடுக்க வேண்டிய காரணங்கள் குறைவதாய் அவருக்குத் தோன்றியது; துவக்க நூல்களின் சமூக நகைச்சுவை இப்போது இருண்மை நிறைந்ததாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் மாறத் துவங்கியது. ‘தி மிமிக் மென்’ நாவலில், தோல்விடைந்த கரிபியன் அரசியல்வாதி ஒருவர், லண்டனில் வசிக்கும் நிர்ப்பந்தத்தில் இருப்பவர், தன் அரசியல் வாழ்வு குறித்து நினைத்துப் பார்க்கிறார், எழுத்தின் மூலம் தன்னையே புரிந்து கொள்ள முயற்சி செய்கிறார். தன் கரிபியத் தீவு உண்மையான விடுதலையடையுமளவு பெரிதல்ல என்பதைக் காண்கிறார்; இனவாத காயங்கள், காழ்ப்பரசியல், காயப்படுத்தப்பட்ட கலாசாரம், இந்தியத்தன்மையின் இழப்பு, பகுத்தறிவின் தோல்வி பற்றி நினைத்துப் பார்க்கிறார். தாயகத்திலிருந்து 4000 மைல்கள் தொலைவில் தனித்து விடப்பட்ட அவர், சுரணையின்மை, சுருங்கிக் கொள்ளுதல், நொறுங்கிப் போதல் ஆகியவற்றுக்கு எதிரான தன் ஒரே அரண் எழுத்து மட்டுமே என்று கண்டுகொள்கிறார்.
‘தி மிமிக் மென்’ நாவலை எழுத நைபால் இரு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். ஆனால், கிட்டத்தட்ட எழுதி முடித்தவுடன் இன்னொரு புத்தகத்தை எழுதத் துவங்கிவிட்டார். ட்ரினிடாட்டின் இருண்ட வரலாற்றினுள் அகழ்வு செய்யும் ‘தி லாஸ் ஆஃப் எல் டொராடோ,’ ஒன்றின் மீதொன்று இரு கதையாடல்கள் அடுக்கப்பட்ட நாவல். இதற்கான முதல்நிலை ஆய்வு மற்றும் எழுத்துப் பணிகளை முடிக்க இரு ஆண்டுகள் ஆயின. ‘வரலாறு’ என்பது எழுதப்படுவதற்காக புத்தக அடுக்கில் காத்திருக்கும் ஒன்றல்ல, மாறாய் அது உருவாக்கப்பட வேண்டும், அகழ்வு செய்து எடுக்கப்பட வேண்டும், மீண்டும் கற்பனை செய்யப்பட வேண்டும் என்று நைபால் அறிந்தார். எல் டொராடோவைத் தேடிய ராலியின் கதை, போர்ட் ஆஃப் ஸ்பெயின் சிறைச்சாலையில் ஓர் இளம் பெண்ணின் சித்திரவதை, என்ற அதன் இரு கதையாடல்கள், வியர்த்தவுணர்வுகள், மிகுகற்பனை, நொறுங்குதலின் விதைகள் குறித்த சிந்தனையை ஆழப்படுத்தின.
எல் டொராடோ மகத்தான ஒரு சாதனை. ஆனால், அது நைபாலின் எழுத்து வாழ்வின் மிகப் பெரிய சோதனைகளில் ஒன்றன் தூண்டுதலானது. அதை எழுதப் பணித்த பதிப்பாளர் அதில் ஆர்வமிழந்தார்- சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற ஒரு ஜனரஞ்சக வரலாற்றை அவர் எதிர்பார்த்திருந்தார். இந்த நிராகரிப்பில் நைபால், “ஆத்திரத்துக்கோ கண்ணீருக்கோ இடமில்லாத மிக ஆழமான ஒரு துக்கத்தை,” உணர்ந்தார். இந்தப் புத்தகத்தில் அவர் மிகப் பெரிய விஷயங்களை எதிர்பார்த்திருந்தார்; இங்கிலாந்திருந்து வெளியேறி கனடா அல்லது ட்ரினிடாட்டில்கூட குடியேறி விடலாம் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால் இப்போது அந்தப் பேச்சுக்கெல்லாம் இடமில்லாமல் போய் விட்டது.
எனினும், இந்தக் கசப்பான அனுபவம், அடுத்து நைபால் எழுதப்போகும் விஷயத்தை கவனப்படுத்தியது. அந்நிய மண்ணில் குடியேறக் கட்டாயப்படுத்தப்பட்டவன் என்று தன்னைக் குறித்து அவர் இப்போது இன்னும் அதிகம் நம்பினார், செல்லுமிடமெல்லாம் அன்னியனாக, வெளியாளாக இருப்பவன். “நான் எந்த இடத்துக்கும் உரியவனல்ல… எனக்கு தாயகமில்லை… நான் நாடு கடத்தப்பட்டவன்.” அவர் எழுதினார்: “நான் வளர்ந்தபின் கிட்டத்தட்ட என் காலமெல்லாம் நான் அன்னியனாக இருந்த தேசங்களில் கழிக்கப்பட்டு விட்டன… ஓர் எழுத்தாளனாக நான் அந்த அனுபவத்தைக் கடந்து செல்ல முடியாது. அந்த அனுபவத்துக்கு உண்மையாக இருப்பதானால் நான் இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களைப் பற்றியே எழுதியாக வேண்டும்.”
1970களின் துவக்கத்தில், நைபால் இங்கிலாந்தின் கிராமப்புறத்தில் ஒதுங்கிக் கொண்டார், பின்னர், ‘தி எனிக்மா ஆஃப் அரைவல்’ நாவலில் விவரிக்கப்படப் போகும் பின்னணிக்குரிய ஸ்டோன்ஹென்ஜ் அருகில் உள்ள வில்ட்ஷைரில் ஒரு சிறு குடிலில் வசிக்கத் துவங்கினார். அவரது புறப்பரப்பில் இருந்த பாதுகாப்புக் கவசம் இறுகியது. புத்தகங்களை எழுதி முடிப்பதற்கு இடையிலான இடைவெளியில், பத்திரிக்கைகள் பணித்த விஷயங்களை எழுத அவ்வப்போது பயணம் செய்தார். ட்ரினிடாட் பயணம் ஒன்று “கறுப்பர் சக்தி”யை முன்வைத்து பிரசாரம் செய்தவரும் கொலைகாரருமான மைக்கேல் எக்ஸ் மீது ஒரு நீண்ட கட்டுரைக்கும், மீட்பர் மிகைகற்பனையை விவரிக்கும் ‘கொரில்லாஸ்’ என்ற நாவலுக்கும் காரணமானது. மத்திய ஆப்பிரிக்கா மொபுட்டுவின் காங்கோ குறித்த கட்டுரைகளுக்கும் ‘எ பெண்ட் இன் தி ரிவர்’ நாவலுக்கும் காரணமானது. 1971ஆம் ஆண்டு புக்கர் பரிசு கிடைத்ததைத் தொடர்ந்து பொதுவெளியில் கௌரவமும் அங்கீகாரமும் கிடைத்தன. வேரின்மையை விவரிக்கும் ‘இன் எ ஃப்ரீ ஸ்டேட்’ தொகுப்பின் தலைப்புக்குரிய கதை அவரது கிழக்கு ஆப்பிரிக்கா பயணத்தை அடிப்படையாய்க் கொண்டது. அர்ஜெண்டினாவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது நைபால் ஒரு குறுகிய காலம் சிறைக் கைதியாய் இருந்தார், அதைவிட மோசமான கதியிலிருந்து அதிர்ஷ்டம்தான் அவரைக் காப்பாற்றியிருக்க வேண்டும்.
இக்காலகட்டத்தில் நைபாலின் நாயகர்கள் தங்களை உருவாக்கி, மீளுருவாக்கம் செய்து கொண்டு, உலகில் தங்களுக்கு என்று ஓர் இடத்தில் தங்களை நிறுவிக் கொள்வதிலேயே கருத்தாய் இருக்கின்றனர். அவர்கள் ஐயம், செயலின்மை, வெறுமை மீதான அச்சங்களுக்கு எதிராய் போராடுகின்றனர். குடும்பம், சமூகம் அல்லது அரசின் ஆதரவின்றி, அவர்கள் இலக்கற்ற திசையில் செலுத்தப்படுவதாய் உணர்கின்றனர். அவர்களைச் சுற்றியிருக்கும் சமூகங்கள் உதிர்ந்து அழிகின்றன, வன்முறைக்கும் சர்வாதிகாரத்துக்கும் பலியாகின்றன. மனிதர்களின் வேர்கள் சிதைக்கப்படுகின்றன, வேற்றிடம் நோக்கிச் செலுத்தப்படுகிறார்கள், புரிந்து கொள்ளவோ நம்பவோ முடியாத கனவுகளை துரத்திச் செல்கிறார்கள், ‘கொரில்லாஸ்’ நாவலின் ஜேன் போல் அதிர்ச்சியளிக்கும் முடிவுகளுக்கு வருகிறார்கள். மூர்க்கர்கள் மற்றும் சுரண்டுபவர்கள் கருணையில் பரிதவிக்கிறார்கள். நல்லெண்ணம் கொண்ட வெள்ளை-லிபரல்களும் பின்காலனிய நிபுணர்களும் (‘இன் எ ஃப்ரீ ஸ்டேட் ‘ நாவலின் பாபி மற்றும் லிண்டா போன்றவர்கள்) பிறரது சமூகங்களில் குழப்பம் விளைவிக்கிறார்கள், தம் காலனிய முன்னோடிகளைப் போலவே அழைக்கப்படாத இடங்களுக்கு தம் உணர்வுச் சுமைகளைக் கொண்டு செல்கிறார்கள். மிச்சமிருப்பதெல்லாம் அச்சுறுத்தும் உலகின் முன் விடுதலைக்கும் அசல்த்தன்மைக்கும் முயற்சிப்பது மட்டுமே; செயல் புரிந்தும் சாதித்து முடித்தும் ஓர் அடையாளத்தை விட்டுச் செல்வது.
ட்ரினிடாட் மற்றும் இந்தியாவில் வளர்த்தெடுத்திருந்த கருப்பொருட்களை நைபால் இவ்வகையில் வெற்றிகரமாக ‘உலகமயமாக்கினார்’. ‘எல் டொராடோ’ தந்திருந்த காயத்துக்குப்பின் வில்ட்ஷைரில் அவருக்கு ஒரு புதிய துவக்கத்தை மேற்கொள்ளும் உணர்வு அமைந்தது. “என்னைச் சூழ்ந்திருந்த நிலம் நன்மை பயப்பது என்று எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, என்னளவில், அத்தகைய இயல்பு கொண்ட முதல் சூழல் அது. என் ரணங்கள் இங்கு ஆற வேண்டும்… இரண்டாம் பிறப்பு போன்ற ஒன்று இங்கு இருக்க வேண்டும்…” தன் எழுத்து முழுக்க முழுக்க புதுமையாகவும் தனித்தன்மை கொண்டதாகவும் இருப்பதாய் நினைத்தார், எந்த விலை கொடுத்தும் அது பாதுகாத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
எழுதுவதென்பது கடினமாக இருப்பது குறித்து அவர் அடிக்கடி பேசியிருக்கிறார், ஒவ்வொரு புத்தகத்தை முடித்த பின்னும் தொடரும் களைப்பு, விரக்தி, புனைவின் வியர்த்தம். ஆனால் 1979ல் பாட் நைபால் சொல்வது: “உங்களிடம் அவரைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். வேலை செய்வது என்பது வேதனையாக இருக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார். உண்மையில், அதுதான் விடியாவின் மிக உயர்ந்த ஆனந்தம்.”
இந்தியா குறித்த இரண்டாம் புத்தகம், ‘எ வூண்டட் சிவிலிசேஷன்,’ 1970களின் மத்திய காலத்தில் வந்தது, அது ‘அன் ஏரியா ஆஃப் டார்க்னஸ்’ அளித்த தரிசனங்களைத் திருத்துவதாய் இருந்தது; இப்போது நைபால் தன் பயண எழுத்துகளை விரிவாக்கத் துவங்கினார். 1979ஆம் ஆண்டு, அவர் ‘மதமாற்றம் செய்யப்பட்ட’ இசுலாமிய தேசங்களில் சில மாதங்கள் பயணம் செய்தார்- இரான், பாகிஸ்தான், மலேஷியா, இந்தோனேஷியா. இதன் விளைவு, ‘அமங்க் தி பிலீவர்ஸ்’, அதை அவர் 1981ஆம் ஆண்டு முடித்தார்- பயண இலக்கியம் மற்றும் ஆய்வுகளில் புதிய அணுகுமுறைகளை இது முயற்சிக்கத் துவங்கியது.
மரபார்ந்த அணுகுமுறை அவருக்கு எப்போதும் ஒரு பிரச்சினையாகவே இருந்திருக்கிறது- மேற்கத்திய பயணி ஒருவனின் சாகசங்களுக்கான அயல்திணை பின்னணியாய் ஒரு தேசத்தைக் கொள்வது-, அது போன்ற மேட்டிமைத்தனம் இல்லாத வகையில் பயணம் செய்வதும் காண்பதும் குறித்த தேடலில் இருந்தார் அவர். “இப்போது… நீ ஒரு தேசத்தில் பயணம் செய்யும்போது, அதில் முக்கியமான ஆள் நீ, அதாவது பயணியல்ல, என்று உணர்கிறேன்; உன்னுடன் பயணம் செய்து கொண்டிருப்பவர்கள்தான் முக்கியமானவர்கள்.”
எனவே கதைசொல்லி விலகி நிற்கிறார், தனித்தன்மை கொண்ட குரல்களின் கூட்டு ஒலி காகிதத்தில் வெளிப்படுகிறது. அமெரிக்க தெற்கில் (‘எ டர்ன் இன் தி சௌத்’), இந்தியாவுக்கு மூன்றாம் பயணம் (‘எ மில்லியன் ம்யூட்டினிஸ் நௌ’), இசுலாமிய உலகுக்கு இரண்டாம் பயணம் (‘பியாண்ட் பிலீஃப்’) என்று அடுத்தடுத்து இந்த உத்தி நிதானமாக வளர்க்கப்பட்டது. இதன் விளைவாய் இன்னும் புறவயப்பட்ட சித்திரம் உருவாகிறது, அது மேலும் அடர்த்தியாக இருக்கிறது, ஆசிரிய கட்டமைப்பின் தெளிவான குவிமையம் இல்லாமல் – பல வாசகர்களும் ஆட்சேபித்தது போல்- வாசிக்க மிகவும் கடினமான பாணி தோன்றியது.
ஆனால் பிற புத்தகங்களில் நைபால் குவிமையத்தை மேலும் மேலும் நெருக்கமாக தன் மீது அமைத்துக் கொள்கிறார், அர்த்தமும் ஒழுங்கும் காண உள்நோக்கிக் காண்கிறார். ‘ஃபைண்டிங் எ செண்டர்’, ‘தி எனிக்மா ஆஃப் அரைவல்’, ‘எ வே இன் தி வர்ல்ட்’ ஆகிய புத்தகங்களில் சுதந்திரம், பகுத்தறிவு போன்ற பொது விவகாரங்கள், அக மெய்ம்மைகள் குறித்த விசாரணைகளுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்கின்றன- காண்வகைகள், வரலாற்றையும் கலாசாரத்தையும் புரிந்து கொள்ளும் வகைகள், எழுத்து வகை, மெய்ம்மையின் இயல்பு. சுயசரிதையுடன் புனைவும் பயண இலக்கியமும் கூடுகின்றன. நைபால் மீண்டும் மீண்டும் தன் வாழ்வின் மிக முக்கியமான அனுபவங்களுக்கு திரும்புகிறார், வெவ்வேறு கோணங்களில் அவற்றை மாற்றி எழுதுகிறார்: எழுதத் துவங்கியதன் நினைவு, தனது தந்தை, ட்ரினிடாட்டை விட்டு வெளியேறுதல், இங்கிலாந்தில் முதல் சில மாதங்கள். ‘எல் டொராடோ’ மற்றும் ‘இன் எ ஃப்ரீ ஸ்டேட்’ ஆகிய புத்தகங்களில் வடிவ உத்தியை மேம்படுத்தி, ஒன்றன் மீதொன்று அடுக்கப்பட்ட கதையாடல்களைக் கொண்டு, அவர் புனைவு, சுயசரிதை, வரலாறு, பயணம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள மரபார்ந்த வேறுபாடுகளைத் தகர்த்து, காலவெளியைக் கடந்து தொடர்பு மற்றும் அதிர்வு அலைகளை உருவாக்கக்கூடிய வலைப்பின்னல்களை உருவாக்குகிறார்.
எடுத்துக்காட்டுக்கு, நோபல் கமிட்டியினரால் சுட்டப்பட்ட ‘தி எனிக்மா ஆஃப் அரைவல்’ என்ற புத்தகம், வில்ட்ஷைரில் புதிய வாழ்வு துவங்குவது பற்றியும் புதிய கலாசாரம் மற்றும் சூழ்நிலத்தை அடையாளம் கண்டு, புரிந்து கொள்ளக் கற்பது பற்றி கவனமான, நுண்விவரணைகள் கொண்ட சித்திரத்தை அளிக்கும் புத்தகம் (“சோவியத் அதிருப்தியாளர் ஒருவர் தாயகத்தில் கார்க்கிக்கு திரும்புவது போல்,” என்று இதை கேலி செய்கிறார் வால்காட்). அது அறிதலின் குவிமையத்தை திருத்திக் கொள்வது பற்றியது, உண்மையை நாடுவதற்கு தேவையான தொடர்ந்த சீரமைப்புகளைச் செய்து கொள்வது பற்றியது. புத்தகத்தின் தலைப்பு டி சிரிகோ ஓவியத்தில் பெறப்பட்ட ஒன்று: பெயரில்லாத இடத்துக்கு பயணி வருகிறான், பின்புலம் இல்லாதவன், திரும்பிச் செல்ல முடியாத பயணம். நைபால் தன்னை மாற்றமும் கொந்தளிப்பும், சீரழிவும் புத்துயிர்ப்பும் நிறைந்த மாபெரும் கேன்வாஸின் ஒரு பகுதியாய்க் கண்டார் – இந்திய-ட்ரினிடாடிய அகதி, ஓய்ந்த பேரரசான இங்கிலாந்தின் கரையில் ஒதுங்கியவன், ஆப்பிரிக்க, ஆசிய, தென் அமெரிக்க துயரங்கள் குறித்து எழுதுபவன்- இதில் அனைவரும், எங்கும் பாதிக்கப்படுகிறார்கள், காலத்தின் கரம் தீண்டப்படாத கிராமப்புற இங்கிலாந்தும்கூட இதற்கு விலக்கல்ல. வில்ட்ஷைரில் அவர் குடியேறிய சிதிலமடைந்த எஸ்டேட், அதன் வாடகை குடில், அந்த நிலத்துக்குரிய, சித்தம் பேதலித்த, ராஜவம்ச உரிமையாளர், எல்லாம் தேய்தலின் பிசிறற்ற பிம்பத்தை அளித்தன.
இந்த உலகில் மனிதர்கள் தம் இடத்தைக் கண்டு கொள்ள முடியும்; நோய்மைக்கும் மரணத்துக்கும், முதுமைக்கும் ஒழுங்கின்மைக்கும் எதிராய், தனி அடையாளமும் பாதுகாப்பும் தேடி போராட்டம் மேற்கொண்டு, வென்று, உயிர் பிழைத்திருக்க முடியும். ஒரு வகையில், மிஸ்டர் பிஸ்வாஸின் எதிர்ப்பிரதியும் நீட்சியும்தான் எனிக்மா. இதில் இளைய பிஸ்வாஸ் வேறொரு அகதி அலையில் பயணிக்கிறார், ஆனால் தனக்கென்று ஒரு வீடு இருப்பதைக் கண்டு கொண்டு அதில் தனக்குரிய ஓர் இடத்தை உருவாக்கிக் கொள்கிறார்.
1981ஆம் ஆண்டு ஒரு நேர்முகத்தில் நைபால் சொல்கிறார்: “நான் எதை மிகவும் விரும்புகிறேன் என்று பல ஆண்டுகளுக்கு முன் ஒருவர் கேட்டார்- என் புலன் நுகர்வு வாழ்க்கை துளிர்ப்பதற்கு முன் நடந்தது இது-, நான் மூன்று விஷயங்களைச் சொன்னேன்: புதியவர்களைச் சந்திப்பதை விரும்புகிறேன், சூழ்நிலத்தை மிகவும் கொண்டாடி ரசிக்கிறேன், நேசத்துக்குரியவனாய் உணரும், சிறப்பாய் வடிவமைக்கப்பட்ட, விருந்துகளை விரும்புகிறேன்.”
நைபாலின் “புலன் நுகர்வு வாழ்க்கை” 1970களில் அர்ஜென்டினாவில் தூண்டப்பட்டதாய்த் தெரிகிறது. அவரது புத்தகங்களை வாசிக்கும் பல வாசகர்களின் கவனத்தைக் கவரும் விஷயம் இது- பாலுணர்வு எழுப்பும் அசௌகரிய உணர்வுகள், கலவியும் காதலும் ஆபத்தான கவனக் குலைவுகள் என்ற எண்ணம், ‘எ பெண்ட் இன் தி ரிவர்’ மற்றும் ‘கொரில்லாஸ்’ நாவல்களின் மகிழ்ச்சியற்ற, மூர்க்கத்தனமாகவும் இருக்கும் கலவி அனுபவங்கள், பற்றுதல் ஆபத்தானது, காதல் நிலையில்லாதது என்ற உணர்வு. “மனைவி என்பது மோசமான சொல்,” என்று அவர் ஒரு முறை சொன்னார். 1995ஆம் ஆண்டு அமெரிக்க நேர்முகம் ஒன்றில் அவர், “நான் ஒரு காலத்தில் ஏராளமான வேசிகளை நாடிச் சென்றவனாக இருந்திருக்கிறேன்,” என்று சொன்னார். “என் பார்வையில், இந்த மண்ணிலேயே மிக அவலமான காட்சி என்பது ஒரு கர்ப்பிணிப் பெண்தான்” என்று ஒரு முறை கூறியிருக்கிறார்.
1996ஆம் ஆண்டு பட்ரிஷியா நைபால் மரணமடைந்தபோது, 41 ஆண்டு கால மணவாழ்வுக்குப்பின், நைபால் விரைவிலேயே மறுமணம் செய்து கொண்டார்- அவரை விட பல ஆண்டுகள் இளைய பாகிஸ்தானி பத்திரிகையாளர் ஒருவரை; அப்போது அவர், ‘பியாண்ட் பிலீஃப்’ என்ற தன் இரண்டாம் இஸ்லாமிய புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தார். 1990களில் பதிப்பிக்கப்பட்ட பிற புத்தகங்கள், இரண்டு மட்டுமே- ஒன்று, ‘ஆன் ரீடிங் அண்ட் ரைட்டிங்’ என்ற தலைப்பில் இரு சிறு கட்டுரைகளின் தொகுப்பு, மற்றது, ஆக்ஸ்ஃபோர்ட் காலகட்டத்தில் விடியா, சீபெர்சாத் மற்றும் அவரது சகோதரி கம்லாவிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களின் தொகுப்பு, இது அவரது ஏஜெண்டால் தொகுக்கப்பட்டது.
ஆனால் மார்ச் 1999ல் அவர் ஒரு புதிய நாவல் எழுதத் துவங்கினார், அது சென்ற ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு சற்று முன் பதிப்பிக்கப்பட்டது. மேம்போக்கான பார்வையில், ‘ஹாஃப் எ லைஃப்’, அதில் உள்ள சுயசரிதைத் தன்மை கொண்ட எதிரொலிகள் வெளிப்படையாகவே தெரிந்தாலும்கூட, நைபால் நேரடியான புனைவு வடிவ கதைசொல்லலுக்கு திரும்பியது போல் இருக்கிறது. அதன் இந்திய நாயகன், வில்லி சந்திரன், சுய உழைப்பில் முன்னேறிய, ஆனால் போதாமைகள் நிறைந்த பண்டித தந்தை உள்ளவன்- அவர் ‘பின்தங்கிய’ தாழ்த்தப்பட்ட சாதி பெண்ணை மணம் புரிந்து கொண்டவர் என்பதால் வில்லியும் அவன் சகோதரி சரோஜினியும் கலப்பு சாதியினர் ஆகின்றனர், இடப்பெயர்வின் வரையறை இது. வில்லி லண்டன் தப்பிச் செல்கிறான், அங்கு இறுக்கமான, மகிழ்ச்சியற்ற கலவி அனுபவங்களை எதிர்கொள்கிறான், கலவியனுபவம் குறித்த தன் வெகுளித்தன்மை குறித்து கசப்புடன் குறைபட்டுக் கொள்கிறான். அவன் பெரும்பசியுடன் அறிவு சேகரிக்கிறான், தேவைக்குத் தக்க வகையில் தன்னைப் பிறருக்கு ஏற்றவாறு மறு உருவாக்கம் செய்து வெளிப்படுத்திக் கொள்வது எப்படி என்பதைக் கண்டு கொள்கிறான்.
அவன் பிபிஸிக்கு எழுதுகிறான், ஒரு சிறுகதை தொகுப்பு வெளியிடுகிறான். மொசாம்பிக் மாணவி அனாவைச் சந்திக்கிறான், தன்னையொத்த சகா என்று அவளுடன் ஆப்பிரிக்கா திரும்பி அங்கு அவள் மற்றும் அவளது குடும்பத்தினருடன் வாழ்கிறான். அங்கு 18 ஆண்டுகள் வசிக்கிறான், தன் கலவியாற்றல்களைக் கூர் தீட்டிக் கொள்கிறான், மிகவும் திருப்தியான உறவு கிட்டுகிறது. “இவ்வளவு ஆழமான திருப்தி இல்லாமல், எனக்குள் இருந்த இந்த இன்னொருவனைக் கண்டுகொள்ளாமல்” இறந்திருந்தால் அது எவ்வளவு மோசமான வாழ்க்கையாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொள்கிறான், “இதற்கு என்ன விலையும் கொடுக்கலாம், எந்த பின்விளைவையும் சந்திக்கலாம்.”
ஆனால் அனாவின் போர்ச்சுகீசிய உலகு மூடப்பட்ட ஒன்று, அதுவும் உதிர்ந்து கொண்டிருக்கிறது; அங்கு ஒரு கொரில்லா யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது, மக்கள் வெளியேறுகிறார்கள். எதுவும் நிலையில்லை. தான் தன் வாழ்வை வாழத் தவறி விட்டதாக அவன் முடிவு செய்கிறான்; ஏதோ ஒன்று சாதித்து, இந்த உலகில் என் அடையாளத்தை விட்டுச் செல்வதற்கு மாறாய், “என் வாழ்வின் சிறந்த ஆண்டுகள் சென்று விட்டன, நான் ஒன்றுமே செய்யவில்லை. நான் வெகு காலம் மறைந்திருந்து விட்டேன்.” அவன் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி தன் சகோதரியுடன் இணைகிறான், அவள் ஒரு ஜெர்மானியனை மணம் புரிந்து கொண்டு ஜெர்மனியில் வசித்துக் கொண்டிருக்கிறாள்; இந்தியாவிலிருந்து “அவளைக் கொண்டு செல்ல” அந்த ஜெர்மானியன் வந்திருக்காவிட்டால், அவள் நிலை என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறான். அவளிடம் அவன், தான் அனாவின் வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறான், தனது வாழ்வையல்ல. “அவளது எண்ணங்களைச் சார்ந்து நான் ஆணாய் இருந்திருக்கிறேன்.” அனா அவனிடம் இறுதியாய்ச் சொல்லியிருந்தது: “அது என் வாழ்வாகவும் இல்லாதிருந்திருக்கலாம்.”
நாவல் இங்கு முடிவடைகிறது, ஒரு பெரிய வெடிப்பாயல்ல, தீனமான முனகலாய். உன் அறிவின் ஒவ்வொரு துளியையும், சாதிக்க விழையும் மன உறுதியையும், பயன்படுத்திக் கொள்ளத் தவறி நீ சமரசம் செய்து கொண்டால் இப்படித்தான் ஆகும், என்று நைபால் சொல்வதாய்த் தெரிகிறது: உதிரும் உலகில் நீ அர்த்தமற்ற, வீணான குறை வாழ்வு வாழ்கிறாய்.
இப்போது நைபாலின் நட்பைத் துறந்து விட்ட பால் தெரோ இந்தப் புத்தகத்தை, அவர், “எழுதியதிலேயே கனமற்றது, கேள்விக்கிடமில்லாமல் விநோதமானது,” என்று கண்டனம் செய்தார். நிச்சயம் இது சோகமான, இருண்மையான, வெறுமையான புத்தகம்தான்; எல்லாரும் இலக்கற்று இருக்கிறார்கள், யாருடைய வாழ்வும் முழுமையடைவதில்லை. ஆனால் தன்னளவில் முரண்பாடற்ற ஒன்று. “நீ விழையாதிருந்தால் உன் மனம் இலக்கின்றிப் போகிறது, மனதில் ஓர் இலக்கு இல்லை என்றால், வாழ்வு சிறிதளவு அர்த்தமற்றுப் போகிறது… அதை யாரும் இயக்கலாம், அதில் யாரும் செயல்படலாம். நான் எதுவும் செய்வதில்லை, நான் செயல் புரிவதில்லை என்று சொல்பவர்கள், தாம் உயிரோடு இருக்கும் காரணம் ஒன்றுக்காகவே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று உரிமை கோருவது தவறு என்று நினைக்கிறேன்,” என்று அவர் 1983ஆம் ஆண்டில் கூறியிருக்கிறார்.
‘ஹாஃப் எ லைஃப்’ நாவலில் உள்ள சிந்தனை, அதன் கூறுமுறை, நைபால் இதுவரை எழுதியுள்ள எதற்கு இணையாகவும் கச்சிதமாகவும் இருக்கிறது.சென்ற ஆண்டு புத்தகத்தைச் சந்தைப்படுத்தும் முயற்சியில் நைபால் பொதுமக்களிடையே சீண்டும் வகையில் நடந்து கொண்டதுடன் இந்த கடும் உழைப்பை இணைத்துப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது- இஸ்லாமின் ‘பேரழிவு’ தாக்கம் முதற்கொண்டு ஈ.எம். ஃபாஸ்டர் மற்றும் ஜான் மெய்னார்ட் கெய்னஸின் பால்விழைவுப் பழக்கங்கள் வரை எல்லா விஷயங்களிலும் கருத்து கூறினார்.
“சினம், சமநிலையைக் குலைக்கிறது, கிட்டத்தட்ட புறப்பார்வையைக்கூட குறுக்குகிறது,” என்று கூறியுள்ள நைய்பால், “அருளாவேச, சுருங்கும் தெளிவுக் கணத்தை,” உருவாக்கவும் செய்கிறது என்கிறார். 1971ஆம் ஆண்டிலேயே, “ஏதோ ஒரு விஷயத்தை எழுத வேண்டும் என்று பயங்கர ஆத்திரத்துடன் உட்கார்வேன்; வெறுப்புடன் கேலிச்சித்திரம் போல் ஒன்றை எழுதத் துவங்கக்கூடச் செய்வேன்; ஆனால் எழுதும்போது ஏதோவொன்று நடக்கிறது. என் இன்னொரு பக்கம் வெளிப்படுகிறது, நான் எழுதும்போது தோன்றும் பக்கம், அதுதான் என் மேன்மையான பக்கம், அது இனிமையாய் இருக்கிறது என்பதால் மேன்மையானது அல்ல, அது என்னைவிட உண்மையானது என்பதால்,” என்று தன் நிலையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நைபால் அபூர்வமாகவே நேர்முகம் அளிக்கிறார், எப்போதும் அவர் தான் தன் படைப்பைக் கொண்டு மதிப்பிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார். “பிறவி மேதை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை,” என்று அவர் ஆரம்ப காலத்தில் டெரெக் வால்காட் நேர்முகம் ஒன்றில் சொல்லியிருக்கிறார் (1965). “ஆன்மா தன்னிச்சையாய்ப் பொழியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.” அவரது நடையைப் பாராட்டும் விமரிசகர்கள் விரைவிலேயே தம் தவற்றை உணர்ந்து கொள்கிறார்கள். நடை என்பது, வெறும், “கடும் சிந்தனை விஷயம்தான்; நீ என்ன சொல்ல விரும்புகிறாய் என்று சரியாய்த் தெரிந்து வைத்திருப்பதுதான்.” “நடைக்கு தன்னளவில் மதிப்பு கிடையாது. என் எண்ணங்கள் காகிதத்தில் வெளிப்பட எவ்வளவு முடியுமோ அவ்வளவு தெளிவாக எழுத முயற்சி செய்கிறேன். நடை துருத்திக் கொண்டு நிற்கக்கூடாது. சொற்கள் குறுக்கிடக் கூடாது.”
ஒரு நாளன்று நானூறு வார்த்தைகள் எழுதினால் அந்த நாள் நல்ல வகையில் எழுதப்பட்ட நாளாகிறது, என்று 1994ஆம் ஆண்டு அவர் சொன்னார். கையால் எழுதுகிறார், அதன்பின் அதை கணினி திரைக்கு மாற்றுகிறார், அதை வைத்துக் கொண்டு “விளையாடிப் பார்க்க,” அச்சிட்டு வைத்துக் கொள்கிறார். அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு வாரத்தில் இது போல் இரண்டு அல்லது மூன்று நல்ல நாட்கள் அமையும் என்கிறார். பயணம் செய்யும்போது, எல்லாரும் பேசிக் கொள்வதை நினைவு வைத்துக் கொள்ள உன்னிப்பாக கவனிக்கிறார். ”நான் எப்போதுமே ஒரு சிறிய நோட்டுப் புத்தகம் பயன்படுத்தி வந்திருக்கிறேன், அதில் பின்னர் எழுதுவேன். டேப் ரிகார்டர் இருந்தால் உரையாடலில் கவனம் இருக்காது. உளறி விடுவோம். எழுதுவதற்கான தேவை உங்களுக்குக் கொடுக்கும் மனம் மற்றும் நினைவுப் பயிற்சி இருக்காது.” உண்மையை எழுதுவது காயப்படுத்தவே செய்யும். “ஒருவன் எழுதி முடித்ததும் காயத்தின் ஒரு சிறு அலறல் கேட்காவிட்டால் உண்மையில் ஒன்றும் அதிகம் செய்யவில்லை என்று பொருள். நான் உண்மையை உரசிப் பார்த்து விட்டேனா இல்லையா என்பதை அளவிடும் கருவி எனக்கு இதுதான்.”
நைபால் விஷயத்தில் கரிபியன் பகுதிகளைக் கோபப்படுத்துவது இதுதான்: அப்பகுதியில் இருக்க முடியாத ஒருவன், மெட்ரோபோலிசுடன் அடையாளப்படுத்திக் கொண்டவன், தன்னை எடை போடுவதும் மெட்ரோபாலிட்டன் வழியில் வேலை செய்வதற்கு அருகில் கரிபியனில் உள்ள எதுவும் நிற்க முடியாது என்ற உட்குறிப்பும். இதில் ஒரு பிழைபுரிதல் இருக்கிறது என்றாலும், இது காயப்படுத்துகிறது, இந்தக் காயம் மெய்யானதுதான்.
ஆனால் ஒவ்வொருவரும் அவரவருக்கேற்ற இடத்தைப் பார்த்துக் கொண்டாக வேண்டும். உலகில் திசையின்றி அலைந்து கொண்டிருப்பவர்கள் எதிர்பாராத இடங்களில் தரை தட்டலாம். ‘ஆரோக்கியமான சூழ்நிலத்தை’ ஏற்றுக் கொண்டது, அல்லது, அவரது பொதுவெளிச் சீண்டல்கள், பொறுப்பின்மைகள், தேசீய புனிதங்களை மிதித்துத் தேய்ப்பது, மனிதர்களும் இடங்களும் இப்போது உள்ளபடி இல்லாமல் மாறுபட்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது, இப்படி பலவற்றைக் கொண்டு அவரது படைப்பை மதிப்பிடுவது வியர்த்தம். சுகமும் ஊக்குவிப்பும் நைபாலின் பிறவித் தொழில் அல்ல. அவர், தன் படைப்புகளில் தன்னைத் தன் வாசகர்கள் முன் நிர்வாணப்படுத்தி வைத்தார். எழுத்தாளனின் கடமை, தன் அகத்துக்கு உண்மையாய் நடந்து கொள்வது, அதில் எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல் இருப்பது, பின்விளைவுகள் எப்படி இருந்தாலும் சரி, உண்மையைக் கண் கண்ட வகையில் எடுத்துரைப்பது,
உங்களுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ, இதைத்தான் அவர் செய்தார்.

oOo

நன்றி – கரிபியன் பீட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.