3 கவிதைகள்

அம்மாவின் முந்தானை

உதிரத்தை உறிஞ்சக் கொடுத்து…
ஒட்டிக் கொண்ட பாலின் பிசுபிசுப்பால்
உதடுகள் கருக்காமல் இருக்க
அழுந்தத் துடைத்த மென்பஞ்சு
ஒழுகும் சளி கண்டால்
யாரும் பார்க்கும் முன்
அழகான சேலையாயினும்
அவசர கைகுட்டையாகும்
விருந்தினர் வருகையின் போது
விரைந்து விரும்பி ஒளிந்து
திருட்டு பார்வை பார்க்கும்
நம் திரை மறைவு
எவ்வளவு துவட்டினாலும்
உலராத தலைக்கேசம்..
முந்தானைப் படர்தலில்
அர்ப்பணித்துவிடும்
ஒட்டுமொத்த ஈரத்தையும்
பனிக்கால பயணத்தில் கதகதக்கும்
தாய்ப்பறவையின் சிறகணைப்பு
மழை வெயிலில்
அனிச்சையாய்
தலைக்குமேல்விரியும் வண்ணக்குடை
விழாக்களில் விரும்பிய இனிப்புகள்
ஒளிந்து கொண்டு
தன் சுவை கூட்டிக்கொள்ளும்
அதிசய கொள்கலம்
பழக்கத்தில் அழுக்குக் கையை
பட்டுத் தலைப்பில் துடைக்கையில்
பதறி கோபப்படும் போது
பெருமித சரிகை இடம் மாற்றிவிடும்
அம்மாவின் முகத்திற்கு
துப்பட்டாவாக பரிமாணம் கண்ட போதும்
களைப்பின்றி தொடர்கின்றன
மரபுவழி கடத்தப்பட்ட பண்புகளாய்
அம்மாவின் முந்தானை சேவைகள்
சுசித்ரா மாரன்

நிலையாமை, ஏன்?

நிலையாமை எனும்போதே
நிலநடுக்கம் நம்முள்
நமக்கெதற்கு இதுவென்றே
நகர்ந்துவிடும் மனப்பாங்கு.

நிலையாமை பாடி
நிலைபெற்றோர் ஏராளம்.
சான்றோரவர் கூற்றை
சற்றே சிந்தித்தால்,

நிலையாமை பாடியது…
நம்மையெல்லாம் அச்சுறுத்த?
மகிழ்ந்திருக்கும் நமக்கு
மரணபயம் காட்ட?

கலையாத கல்வியினால்
கைநிறைய வழிந்திடினும்
இது போதாதென்ற
சிந்தையற்ற வாழ்க்கை.

அல்லது, இன்ப
வாழ்க்கை இதுவென்றே
அனுதினம் ஆர்ப்பரிக்கும்
தானெனும் ஆணவம்.

என்றிருக்கும் நமக்கு,
இதிலெதுவும் நிலையில்லை
உலகினில் நிலையான
உள்பொருள் மூன்றென்றார்.

நேற்றிருந்தோர் இன்றில்லை
இன்றிருப்பது நாளையில்லை
அடுத்தநொடி என்னவென்று
ஆரும் அறிவதில்லை.

பிறப்புஇறப்பு வளையத்தில்
எதன்முடிவும் நாமறியோம்
கிடைத்த வாழ்வதனில்
எடுத்த பிறவியிதில்

உரிய காலத்தே
உள்பொருள் உணர்ந்து
உரியன செய்திடவே
உரைத்திட்டார் நிலையாமை!

சண்முகா

~oOo~

தாழம்பூப் பெட்டியின் வைரமோதிரம்

மேகங்களில்லா வானில்
ஔியை இழையாய் பிரித்து நெய்த
கோடானுகோடி ஔிப்படலத்தை அழுத்தி செய்த முழுநிலா,
உற்றுப்பார்க்கையில்
வானிலிருந்து பிரிந்து எழுகிறது முழுநிலா,
பதறி கண்மூடித்திறக்கையில்
மென்ஔி கரும்பட்டுத்திரையில்
வட்டஔிக்கல்.
ஔி ஒருஊற்றிலிருந்து
பீரிடுகையில்,
ஔி ஒருமாயம் என விரிகையில்
என்ன செய்வேன்?
இத்தனை வார்த்தைகளாலும்
ஆவது ஒன்றுமில்லை.
“சந்தமாமா பாரு” அம்மாச்சி
அழைத்துக் கொடுத்த வார்த்தை.
ஆமாம் சந்தமாமா.
நகர்ந்து கொண்டிருக்கும்
சந்தமாமா பஞ்சுப் போர்வையை போர்த்திக்
கொள்ளும் முன்
ஒருவாய்…ச்.. இல்லை
ஒருமுறை புன்னகைத்து விட்டேன்.
கமல தேவி