ரணங்கள்: ஃ பிர்தவுஸ்  ராஜகுமாரன்

This entry is part 29 of 48 in the series நூறு நூல்கள்

ஒரு சமூகத்தைப் பாதித்த நிகழ்காலச் சம்பவம் எவ்வளவு முக்கியமாக இருப்பினும் அது இலக்கியத்தில் உடனே பிரதிபலிப்பது முக்கியமா இல்லையா என்ற கேள்வி எப்போதும் உண்டு. அவசியம் என்பவர்களும் இல்லை என்பவர்களும் சமமாகவே இருக்கலாம். மிகத்  துயரகரமான ஒன்றாகவோ சமூகத்தை புரட்டிப் போட்ட நிகழ்வாகவோ இருக்கும் பட்சத்தில், அதைக் கொண்டு எழுதப்படும் ஒரு புனைவு, பழைய காயங்களை மீண்டும் திறந்து வன்மங்களைக் கட்டவிழ்த்து விடுமோ என்ற அச்சமும்கூட உண்டு. ஆனால், அத்தகைய நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதைப் பற்றி எழுதாமல் இருக்க முடியுமா என்ன? மேலும், நாம் வரலாற்றிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டும். ”Those who dont learn from history are condemned to repeat it (George Santayana) என்பது ஒரு உண்மையான கூற்று. அதனாலேயே இம்மாதிரி உண்மைச் சம்பவங்களை, பெருங்கலவரங்களை அடிப்படையாகக் கொண்ட புனைவுகள் வரத்தான் வேண்டும்.

கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் ஃபிர்தவுஸ் ராஜகுமாரன் அவர்கள் எழுதியுள்ள ‘ரணங்கள்’ நாவலைப் படிக்கும்போது, மேற்சொன்ன எண்ணங்களே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. ‘ரணங்கள்’ நாவலை ஒரு புனைவு என்று சொல்வதைக் காட்டிலும், ஒரு காலகட்டத்தின் டைரிக் குறிப்புகள் என்றே கூறலாம். நாவல், கோவையின் பல்வேறு இடங்களில் குண்டுகள்  வெடித்த அந்த 1998ம் ஆண்டின் மோசமான நாளான பிப்ரவரி 14 சனிக்கிழமையன்று துவங்குகிறது. பின், காலத்தில் பின்னுக்குப் போய் மீண்டும் அதே நாளில் வந்து முடிகிறது. முதன்மையாக இக்பால் எனும் ஒரு இஸ்லாமிய அரசு ஊழியரின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. அவரே  இந்த நாவலின் ஆசிரியர் ராஜகுமாரன் என்பது வெளிப்படை. ஆனால், தன்மை ஒருமையில் இல்லாமல், பல்வேறு பாத்திரங்களின் அனுபவத்துக்கும் இடமளிக்கும் விதத்தில் நாவல் எழுதப்பட்டுள்ளது.

இந்த படைப்பின் பலம் என்பது, கோவையில் 80களின்  பிற்பகுதிகளில் தொடங்கி தொடர்ந்து சந்தேகத்தோடும் அச்சத்தோடும் பார்க்கப்பட்டு, பல்வேறு அவஸ்தைகளுக்காட்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கும் எளிய  இஸ்லாமியர்கள் பற்றி அது அளிக்கும் சித்திரம். நாவல் துவங்குவதே அத்தகைய ஒரு எளிய பெண்ணான நூர்ஜகானின் ஒரு நாளில்தான். நூர்ஜகானைப் போலவே, காதர்ஷா, காஸிம்  பாய், அஹமது ராவுத்தர், ஜமால் அஹமது ராவுத்தர் போன்ற எளிய மனிதர்களின் அவஸ்தைகளை வாசிப்பவரின் மனதை பிசையும்படி விவரித்திருப்பதுதான். அந்தச் சித்திரங்களைக் கண் முன் கொண்டு வருவதில் ஆசிரியர் பெருவெற்றி பெற்றிருக்கிறார். இவைத இந்நாவலின் புனைவம்சங்கள் என்று சொல்லலாம்.

இது போன்ற புனைவம்சங்களை விட நாவல் அதிகமும் கோவையில் படிப்படியாக மோசமாகிக் கொண்டு வந்த இரு வகுப்பாருக்கிடையேயான உறவையும் அதன் காரணமாக அமைந்த சம்பவங்களையும் அப்படியே காலவரிசைப்படி சொல்லிச் செல்கிறது. அதிலே பெரும்பாலும் சார்பற்ற தன்மையே இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். முக்கியமாக, முஸ்லீம் ஜமா அத்துக்களின் குறுகிய சுயநலப்போக்குகள், தமுமுகவின் வளர்ச்சி, அல் உம்மா அமைப்பின் வளர்ச்சி (நாவலில் வேறு பெயரில்), ஆகியவை எந்தவித சார்பும் பூசி மெழுகல் தன்மையும் இல்லாமல் இக்பாலின் பார்வையில், சரியான விமர்சனங்களோடேயே பதியப்பட்டிருக்கிறது. குறிப்பாக அல் -உம்மா அந்தக் காலகட்டங்களில் ஈடுபட்ட கட்டப் பஞ்சாயத்துகள் தெளிவாகக்  காட்டப்பட்டுள்ளன. அதேபோல், இந்துத்வ இயக்கங்களின்  படிப்படியான வளர்ச்சியும் சரியாகவே காட்டப்படுகிறது.

இவையெல்லாம் போக நாவலின் வெற்றி எதிலென்றால் கோவைவாசிகள் அந்த 97 நவம்பரிலிருந்து 98 பிப்ரவரி இறுதிவரை அனுபவித்த அச்சத்தை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருப்பதுதான். நான் 86ல் கோவையிலிருந்து சென்னைக்கு வேலை நிமித்தம் சென்று விட்டேன். பின் 96 நவம்பர் வரை கோவைக்கு அவ்வப்போது மட்டுமே வருபவனாக இருந்தேன். 96ன் இறுதியில், மீண்டும் கோவைக்குத் திரும்பி வந்துவிட்டேன். நாவலில் விவரிக்கப்படும் சம்பவங்களின்போது, கோவையில்தான் இருந்தேன். அப்போது அனுபவித்த உணர்வுகளை ஒருமுறை இதைப் படிப்பதன் மூலம் மீண்டும் அனுபவித்தேன். அந்த அளவுக்கு இதில் ஒரு அசல்த்தன்மை இருக்கிறது.

ஆனால், நாவலின் அணிந்துரையில், பேராசிரியர் அ. மார்க்ஸ் இப்படிச் சொல்கிறார். “நாவல் இலக்கணம், இலக்கிய நுட்பம், பாத்திரப் படைப்பு, என்றெல்லாம் நுணுகி ஆராய்ந்து இது ஒரு இலக்கியமாகத் தேறியுள்ளதா எனச் சொல்லும் விற்பன்னர்கள் சற்று ஒதுங்கிக் கொள்வது நல்லது. இது எந்த ஒரு தனிமனிதனின் வரலாற்றையும் சொல்லவில்லை. ஒரு ஊரின், ஒரு சமூகத்தின், ஒரு காலகட்டத்தின் வரலாற்றைச் சொல்கிறது. புதின வடிவம் என்பது, அந்த வரலாற்றைச் சொல்வதற்கு, ராஜகுமாரன் தேர்ந்தெடுத்த, ஒரு உத்தி, அவ்வளவுதான்”. இது முழுமையாக ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு அவதானிப்பு. அதனாலேயே இந்த நாவல் அந்த வரலாற்றில் தவறவிடும் சில அம்சங்களையும் அவர் காட்டும் சமூகத்தின் சிந்தனைப் போக்குகளையும் விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியதும் அவசியம். இந்நாவலைப் படித்ததும் என் மனதில் தோன்றிய சில எண்ணங்களை இப்படித் தொகுத்துக் கொள்கிறேன்.

முதல் அம்சமாக, இதில் வரும் இந்து பாத்திரங்கள் அனைவருமே, கிட்டத்தட்ட ஒரு எதிர் முஸ்லீம் மனநிலை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தியாகு, சம்யுக்தா என்ற இரண்டு இந்து கதாபாத்திரங்கள் விதிவிலக்காக இருக்கின்றன. ஆனால், அவை இரண்டும் இன்னொரு எல்லையில், இஸ்லாத்தின் பெருமையை உணர்ந்து மதம் மாறுவதாகக்  காட்டுவது, செயற்கையாக இருக்கிறது. மேலும் இது இந்த நாவலுக்கு எந்த வகையில் பங்களிப்பு செய்கிறது என்பதும் புரியவில்லை.  இப்படிப்பட்ட சித்தரிப்புகள் இந்த நாவலுக்கு வலு சேர்ப்பதில்லை, மாறாய், பின்னடைவாகவும் அமையக்கூடும்.

நாவல் துவங்குவது 1998ல். பின் பின்னுக்குப் போவது,1989வரையில்தான். உண்மையில், சுதந்திரம் அடைந்து ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கும் மேல், விளிம்பில் இருந்த இந்துத்துவ கொள்கை ஏன் மையத்துக்கு வந்தது என்பதை ஆசிரியர் ஆராய்ந்திருக்கலாம். நாவலில் அதற்கான இடம் உள்ளது. பாபர்  மசூதி இடிப்பு உருவாக்கிய பதற்றங்களைப் பற்றி மிகச் சரியாகவே  குறிப்பிடும்  நாவல், ஷா பானு வழக்கு, சல்மான் ருஷ்டியின் Satanic Verses நாவலுக்கு வழங்கப்பட்ட தடை,  சல்மான் ருஷ்டிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட  ஃபத்வா, ஆகியவை பொதுச் சமூகத்தில் இஸ்லாமியர் வன்முறையை எதிர்கொள்ளும் விதத்தின் மீது உண்டாக்கிய விலகல் உணர்வை கண்டுகொள்ளவேயில்லை. அதிலும், நாவலின் நாயகன் ஒரு இலக்கியவாதியாய் இருக்கையில், ருஷ்டி விஷயத்தில் கருத்துச் சுதந்திரம் பற்றி கொஞ்சம் பேசியிருக்கலாம்.

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருக்கும் தி.க. போன்ற இயக்கங்கள், கடவுள் இல்லை என்று உரக்க பிரச்சாரம் செய்தாலும், அந்த வாசகம் ஏன் அவர்களிடையே விலகலை உண்டு பண்ணுவதில்லை? இந்து கடவுளர்களை இழிவாகப் பேசும், தி.க., தி.மு.க., ஆகிய கட்சிகளின் தோழமையும் அதை சிறுபான்மையினர் ஒருபோதும் விமரிசிக்காத நிலையும்கூட, கடவுளை நம்பும் இந்துவுக்கு இவர்கள் மீது ஒரு விலகலை உருவாக்காதா? இந்துத்துவ பிரச்சாரத்தைவிட, இறை மறுப்பாளர்கள் – சிறுபான்மையினர் கூட்டணி இந்த விஷயத்தில் சாதாரண மக்களிடையே இந்து அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.  நாவலின் பிரதான பாத்திரமான எழுத்தாளர் இக்பால் (கதாசிரியர்) இந்த ரீதியில் சிந்தப்பதேயில்லை என்பது ஒரு ஏமாற்றம். மேலோட்டமான ஓரிரு வரிகள்தான் உண்டு.

நாவலில் வரும் அனைத்து இஸ்லாமிய பாத்திரங்களும் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற தங்கள் இறைவனை இறைஞ்சுகிறார்கள். அல்லாஹ்வே, றப்பே என்று மன்றாடுகிறார்கள். ஆனால், அவர்களை அந்த இறைஞ்சல்களும் இறைவனும் காப்பாற்றுவதேயில்லை. ஆனாலும், அவர்களின் நம்பிக்கை குறைவதாக எந்தக் குறிப்பும் இல்லை. படைப்பாளியான, பகுத்தறிவில் நம்பிக்கை கொண்ட இக்பாலின் நிலையும் இதுவே.  சிந்திக்கத் தெரிந்த, நவீன இலக்கியம் படைக்கும் கதையின் நாயகன், இயல்பாக இறை நம்பிக்கை குறித்த கேள்விகளுக்குப் போயிருக்க வேண்டாமா? இக்பால் விவரிப்பது சாதாரண மக்களை என்ற அளவில் இது சரியே, ஆனால் பகுத்தறிவில் நம்பிக்கை கொண்ட இக்பால் இவர்களின் இறை நம்பிக்கையை எதிர்கொள்ளத் தவறுவது நாவலின் பலவீனமே. இந்த இடத்தில், தமிழகத்தில் பகுத்தறிவுக் கொள்கையை ஏற்றுக் கொண்ட இந்துக்கள் பல இந்து சமய விழாக்களில் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுகையில் இறை நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குவது நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.

பழனிபாவைப் பற்றி வருவது எல்லாமே அவரை விதந்தோதும் வண்ணம் இருக்கிறது. அவர் போன்றவர்கள் இஸ்லாமியருக்கு அதிகம் கெடுதல்கள்தான் செய்தார்கள். அவருடைய பேச்சு ஒன்றை அண்மையில் காணொளியில் கேட்டேன். சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒன்று அல்ல அது. அவரை ஒரு நாயகனாக பார்ப்பதும்  ஆரோக்கியமானது அல்ல.

1997, நவம்பர் 29, 30 தேதிகளில் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்ட பிறகான கலவரங்களில் இறந்த 19 முஸ்லிம்கள் மற்றும் அவ்வப்போது கொல்லப்பட்ட இஸ்லாமியரின் எண்ணிக்கையை குறிப்பிடுவதில் இருக்கும் முனைப்பு மிகப்பெரும் துயரச் சம்பவமான  1998 பிப்ரவரி, 14ல் நடந்த குண்டுவெடிப்பின்போது இறந்தவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடுவதில் இல்லை. 64 பேர் அந்த ஒரே சம்பவத்தில் இறந்தனர். ஆர்.எஸ். புரம் லோகமான்யா வீதியில் நிறுத்தி வைத்திருந்த கார் குண்டுகள் வெடித்திருக்குமானால்,  தமிழகத்தின் மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாகவும், பயங்கரவாத வரலாற்றின் மறக்க முடியாத ஒன்றாகவும் அது இருந்திருக்கும் என்பது அதன் தீவிரத்துடன் நாவலில் பதிவாகவில்லை. காவலர் செல்வராஜ் கொலை பற்றிய ஒரு கோணம் நாவலில் உள்ளது. அது பற்றிய வேறு கோணங்களையும் நான் அந்த சமயங்களில் கேட்டிருக்கிறேன். அதே போல, கோட்டைமேடு பகுதியில் குத்திக் கொல்லப்பட்ட காவலர்  ஜோதிகிருஷ்ணன், பெட்ரோல் குண்டு வீசிக் கொல்லப்பட்ட கோவை ஜெயில் வார்டன் ஜி. பூபதி ஆகியோர் பற்றிய குறிப்பும் அந்தச் சம்பவங்களும் இல்லை. அதே போல சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பு கொண்ட ஷாகுல் ஹமீது என்பவரை விசாரித்துக் கொண்டிருந்த எஸ். ஜெயப்ரகாஷ் என்ற காவலர் கொல்லப்பட்டார். இவையெல்லாமும் கோவை குண்டுவெடிப்பு கலவரங்களுடன் தொடர்புடைய சம்பவங்கள்தான். அப்போதைய காவல் துறை ஒட்டுமொத்தமாகவே இஸ்லாமியருக்கு எதிராக நடந்து கொண்டது என்பதே ஆசிரியர் முன் வைக்கும் பார்வை. ஆனால், அதற்கு இன்னொரு புறமும் இருக்கிறது என்பது இந்நாவலில் பேசப்படுவதேயில்லை. மேலும், அச்சமயத்தில் பல்வேறு முஸ்லிம் இருப்பிடங்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் குறித்து நாவலில் வரும் பார்வை மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இங்கு உள்ள இணைப்பில், எவ்வகையான, எவ்வளவு ஆயுதங்கள், கண்டுபிடிக்கப்பட்டன என்பது பற்றிய விவரங்கள் உள்ளன. இந்த விஷயத்தில்  ஊடகங்கள்  மிகைப்படுத்தி எழுதியதாக வரும் நாவலின் பார்வை சரியானது அல்ல.

நாவலாசிரியர் ஒட்டுமொத்தமாகவே ஊடகங்கள் இஸ்லாமியருக்கு எதிராகவே செய்திகளை பரப்பியதாக பதிவு செய்கிறார். அது உண்மையல்ல. தி ஹிந்து, ஃப்ரண்ட்லைன், போன்ற இடதுசாரி ஆதரவு இதழ்கள் கூடவா அப்படி செயல்பட்டன? உதாரணமாக, ஃப்ரண்ட்லைன் இதழில் வெளியான இந்தக் கட்டுரையைக் காணலாம். இது நடுநிலையாகவே இருக்கிறது என்று சொல்வேன்.

இன்னொரு முக்கியமான விஷயம், ஆசிரியர் இந்து சமூகத்திலிருந்து தலித்துகளையும் ஆதிவாசிகளையும் பிரித்தே பார்ப்பது. இது சரியான பார்வையல்ல , இதுவும் 1990களுக்குப் பிறகு தொடங்கிய ஒன்று. காந்தி, தலித்துகளுக்கான இரட்டை வாக்குரிமை என்பது அவர்களை என்றென்றும் இந்து சமூகத்திலிருந்து பிரித்து விடும் என்றெண்ணியே அதை தவிர்த்தார். அதில் அவருக்கும் அம்பேத்காருக்குமிடையேயான முரண்பாடுகளும் மிகக் கடுமையான வாக்குவாதங்களும் வரலாறு. இந்து சமூகம் தன் அங்கமான தலித்துகளை நடத்திய விதம் மிக அநீதியானது என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், அவர்களின் மேலெழுதலுக்கான சீர்த்திருத்தங்கள் அதற்குள்ளிருந்தே எழுந்து வந்துள்ளன என்பதும் வரலாற்று உண்மை.மேலும், அவர்களின் மேன்மைக்கு இஸ்லாமை விட கிறித்தவமே ஒப்புநோக்க பெரும்பங்கு ஆற்றியுள்ளது என்பதும் வரலாற்று உண்மை.

இஸ்லாம்தான் தலித்துகளுக்கு சரியான பாதுகாப்பாக இருந்திருக்கும் என்றால் அம்பேத்கர் ஏன் புத்த மதத்தை தழுவினார் என்ற கேள்வி முன் நிற்கிறது. அம்பேத்கர் இஸ்லாமைப்பற்றி முன்வைத்த விமர்சனங்களும் இங்கே கவனிக்கத்தக்கது. தலித்துகளும் இஸ்லாமியரும் இயற்கையாகவே கூட்டாளிகள் என்பது போல கட்டப்படும் புனைவை இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் பேராசிரியர் அ. மார்க்ஸ் போன்றவர்கள் தொடர்ந்து சொல்லி வந்த போதிலும், தலித்துகளின் முக்கியமான மதம் மற்றும் வழிபாடு சார்ந்த நம்பிக்கைகளை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதே உண்மை. அதனாலேயே தலித்துகளின் இஸ்லாமிய மதமாற்றம் பெருமளவு நடைபெறவில்லை. இந்த உண்மையை ஆசிரியர் மறந்து விடுகிறார்.

1998 பிப்ரவரி 14ல்  குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் முக்கியமானது, பா.ஜ.க. தலைவர் அத்வானி, தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதாக இருந்த இடம் ஆர்.எஸ். புரம், தலைமை தபாலாபீஸுக்கருகில் உள்ள  ஒரு நாற்சாலைச் சந்திப்பில் உள்ள ரவுண்டானா. அங்கு ஒரு சிறு போக்குவரத்துப் பூங்காவும் இருந்தது. பொதுவாக அந்த இடத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது. நடந்ததுமில்லை. ஆனால், இந்தக்  கூட்டம் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன், அந்த ரவுண்டானா பூங்கா அகற்றப்பட்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி பேசிய ஒரு பொதுக் கூட்டத்துக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு எழுந்த எதிர்ப்புகளை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து பாஜகவினரும் அதே இடத்தைக் கேட்க, காவல்துறையால்  மறுக்க முடியாமற் போனது. குண்டு வெடிப்பில் உயிர்ச் சேதங்கள் அதிகமாக இதுவும் ஒரு காரணம்.

இந்த சம்பவங்களுக்கு, குறிப்பாக வணிக மையங்கள், துணிக்கடைகள் ஆகியவை குறி வைத்து அழிக்கப்பட்டமைக்குப்பின் இருந்த தொழிற்போட்டி போதிய கவனம் பெறவில்லை. இன்று கூட, ஷோபா கார்னர் என்று அழைக்கப்பட்ட அந்த இடத்தில் வேறொரு கடை இருப்பது என் தலைமுறையினருக்கு சற்று துணுக்குறலைத் தரத்தான் செய்கிறது.

இந்து- முஸ்லிம் பகை வளர்ந்ததற்கு இன்னொரு காரணம், பக்கத்து மாநிலமான கேரளத்தின் மலப்புரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இருக்கக்கூடிய இந்து- முஸ்லிம் அமைப்புகளுக்கிடையேயான மோதலின் ஒரு நீட்சியாக கோவையிலும் வந்து சேர்ந்தது  (சொல்லப்போனால், மலப்புரம் மாவட்டமே கேரளத்தில், இடதுசாரிகள் இஸ்லாமியரை வசப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு தவறான நடவடிக்கை என்ற பார்வையும் உண்டு). இந்த விஷயங்கள் கூட நாவலில் வந்திருக்கலாம்.

இந்தச் சம்பவத்தை பற்றிய புனைவுகள் என்றால், சம்சுதீன் ஹீரா எழுதியுள்ள ‘மௌனத்தின் சாட்சியங்கள்,’ மற்றும் கரீம் எழுதியுள்ள, ‘தாழிடப்பட்ட கதவுகள்,’ என்ற இரு நாவல்கள் இருக்கின்றன. அவற்றை நான் இன்னமும் படிக்கவில்லை. திலீப் குமாரின் ஒரு சிறுகதையும், உள்ளது. பின், எம்.ஜி. சுரேஷின், ‘ அட்லாந்திஸ் மனிதன் மற்றும் சிலர்’ நாவலில், குண்டு வெடிப்புக்கு முன் நடந்த கலவரங்களை பற்றிய ஒரு சித்திரம் உண்டு. வேறு புனைவுகள் எனக்குத் தெரிந்தவரை இல்லை.  நம் சமகால வரலாறு இலக்கியத்தில் இடம் பெறுவதற்கும், நம் சமூகத்தின் முக்கியமான ஒரு பகுதி மக்கள் அந்நியப்பட்டு அடையும் இன்னல்களையும் துயர்களையும் சித்தரிக்கும் விதத்துக்காகவும் இதைப் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாவண்ணம் தடுக்கும் நோக்கத்திலும்கூட இம்மாதிரியான படைப்புகள் முக்கியமானவைதான். இது போன்ற படைப்புகள், ஆரோக்கியமான விவாதங்களை எழுப்பி, நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள உதவும். பொதுவெளியில் அமைதியும் தனி மனிதர்களுக்கான பாதுகாப்பும் பேணப்படும்போதுதான் நீதிக்கான கோரிக்கைகள் வெற்றி பெறுகின்றன. இதற்குரிய இணக்கமான சூழலை உருவாக்குவதில் அரசுகள், அமைப்புகள், ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் பங்கிருக்கிறது. இந்தப் பொறுப்பை நாம் அனைவரும் உணர்வதே ஆரோக்கியமான விளைவுகளுக்கு வழியமைக்கும், காயப்படுதலோ, காயப்படுத்துதலோ அல்ல- ஆனால், அது அவ்வளவு எளிதானதும் அல்ல என்பதே உண்மை.

Series Navigation<< தப்பித்தல் நிமித்தம்ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.