படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்: வி.எஸ். நைபால்

வி.எஸ். நைபாலின் மரணம் தமிழில் எவ்வித காத்திரமான சலனத்தையும் உருவாக்கவில்லை என்று நண்பரொருவர் வருத்தப்பட்டுக் கொண்டார். வாட்ஸப்பில் அவரது நட்பு வட்டத்தினரிடையே எழுந்த சில சலசலப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் எழுதப்பட்ட சில அக்கறையற்ற குறிப்புகள், அந்த மகத்தான எழுத்தாளரைக் குறித்து பிறர் எழுதியது அல்லது இந்தியாவைப் பற்றி அவர் எழுதிய ஒன்றிரண்டு புத்தகங்களைப் படித்துவிட்டு அவர்களாக நினைத்துக் கொண்டதன் வெளிப்பாடுகள். யாருமே அவரை ஒரு நாவலாசிரியராக நினைவில் வைத்துக் கொண்டது போல் தெரியவில்லை. நான் நேசிக்கும் எழுத்தாளர்கள் மறைவையொட்டி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்கள் எழுத்தை வாசிப்பது என் பழக்கம் என்பதால் இப்போதும் நான் வி.எஸ். நைபாலின் நாவல்களில் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன், கட்டுரை என்று குறிப்பிடத்தக்க வகையில் அவரைப் பற்றி எதுவும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. மேலும், அடுத்த சில நாட்களில் விடுமுறைப் பயணம் ஒன்று மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இருந்தது, நண்பர் என் மீது மென்மையாகச் சுமத்திய பொறுப்பைத் தட்டிக் கழிக்க அக்காரணம் பயன்பட்டது ஆனால் நான் அந்தக் கட்டுரை எழுதுவதானால் அது இவ்வாறு தொடங்கும் என்றும் , என் மண வாழ்வின் முதல் சில நாட்களின் நினைவுகள், வெகு காலம் மறக்கப்பட்டு விட்டவை, அக்கட்டுரைக்கு அடியெடுத்துக் கொடுக்குமென்றும் அவரிடம் குறிப்பிட்டேன்,

1997 ஜனவரி: இலக்கிய பாவனைகள் கொண்ட ஓர் இளைஞன் (உள்ளூர் நாளிதழ்களில் அவன், இலக்கியத்திலும் கர்நாடக இசையிலும் நாட்டம் கொண்ட மணமகள் தேவை, என்று விளம்பரம்கூட செய்திருந்தான்) முதல் சந்திப்பிலேயே அவன் தம்பதி சமேதராய் இலக்கியப் பெருக்கம் செய்வது குறித்து கொண்டிருந்த பெருங்கனவுகளைக் கலைத்துவிட்டு இன்னமும் அவனுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் தன் மனைவியுடன் தேனிலவு சென்றிருந்த இடத்தில் வழக்கமான தேனிலவுச் சடங்குகளைச் செய்து முடித்தபின் இருவரும் அவரவர் வலையூஞ்சல்களில் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இல்லற இன்பங்களின் எதிர்கால நினைவுகளைக் கைப்பற்றிச் சேமித்து வைக்கும்கோடாக்கணங்களைத் தேடி இருவரும் ஊர் கிளம்பும்போது அவன் முன்னேற்பாடாய் பதுக்கி வைத்திருந்த புத்தகத்தின் ஓரிரு பக்கங்களைக் கள்ளத்தனமாய் வாசிக்க முயற்சி செய்கிறான். அவனது இளம் மனைவி வலையூஞ்சலில் படுத்திருந்தபடியே, முழுக்கவே புரிந்து கொள்ளக்கூடிய விசனம் மேலிட (ஆனால் அப்போது இந்த உண்மையை அவன் அறிந்திருக்கவில்லை என்பது அவனது துரதிருஷ்டம்), தன் அறிவுக்கிறுக்கு கணவனைக் கண்ணுற்று அவன் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தின் தலைப்பை கவனிக்கிறாள்: அது வி.எஸ். நைபாலின்எ வே இன் தி வர்ல்ட்’ (A Way in the World).  அவள் நைபாலை வாசித்ததில்லை, ஆனால் அது அவள் கவலையில்லை.  சொல்ல முடியாத ஓர் உண்மையை அவள் உள்ளார்ந்து உணர்ந்து கொள்கிறாள், தன் வாழ்வில் இனி வரப்போகும் ஆண்டுகளில் இந்தப் புரிதல் அவளுக்கு உற்ற துணையாய் உதவும். ‘எ பெண்ட் இன் தி ரிவர்’, வி.எஸ். நைபாலின் மகத்தான நாவலின் துவக்கச் சொற்களையே உள்ளுணர்வு அவளுக்கு அறிவுறுத்துகிறது: “உள்ளபடியே உள்ளது இவ்வுலகம்,”- ஸர் விடியாவின் வாழ்க்கையை எழுதிய பாட்ரிக் பிரெஞ்ச் அதற்கு தேர்ந்தெடுத்த தலைப்பும் இச்சொற்கள்தான்: ‘தி வர்ல்ட் இஸ் வாட் இட் இஸ்  (The World is What it is).

முப்பத்து ஓராண்டுகளுக்குப் பின், ஆகஸ்ட் 2018ல், இப்போது இளைஞனாய் இல்லாத அந்த இளைஞன், மேற்சொன்னபெண்ட் இன் தி ரிவர்,’ நாவல் வாசித்துக் கொண்டிருக்கிறான், சில நாட்களுக்கு முன் மறைந்த வி.எஸ். நைபாலுக்கு அவன் செலுத்தும் தன்னாலியன்ற அஞ்சலி.  திடீரென்று அவனது உறவினர் ஒருவர் அவனை அழைத்து எந்தவித பின்கதைச் சுருக்கமும் அளிக்காமல், தான் அவனுடன் பாஸ்டனில் சில நாட்கள் தங்கியிருக்க விரும்புவதாய்ச் சொல்கிறார். மத்திய வயதுக்கால சிக்கல் போலிருக்கிறது.  உறவினரின் வேலை போய் விட்டது, ஆனால் அவரது சிக்கல் வலுவடைய அது காரணமென்றாலும் அவரது சிக்கல் அதுவல்ல. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தங்கப் பதக்கம் வென்ற அறிவாளி இளம் இயற்பியலாளரான அவர் பிழைப்பைப் பார்க்க முதுநிலைக் கல்வியை கைவிட வேண்டிய அவசியம் ஏற்பட்ட நாள் முதல் அவர் பொத்திப் பாதுகாத்து வந்த கனவுதான் அவரது சிக்கல். ‘பிழைப்புஎன்ற விஷயம் அவரையும், அவரது எதிர்கால மனைவியையும் அமெரிக்காவின் கடற்கரையில் ஒதுக்கும், அங்கு அவர் தன்னை ஒரு தொழில்முறை மென்பொருள் வடிவமைப்பாளராக புதிதாய்ப் படைத்துக் கொள்வார்.  தனது மனதுக்குகந்த சரக்கைச் சிறு அளவு பருகல்களாய் அருந்தி தன் பணி அழுத்தத்தைத் தளர்த்திக் கொண்டிருக்கையில்  தன் இயற்பியல் மேதைமையைக் கைப்பற்றும் கனவைக் கைவிடாமல்  அசைபோட்டுக் கொண்டிருப்பார். தன்அறிவுத் தனிமையைப்பற்றிப் பேசுகையில், பங்குச் சந்தையின் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் மேற்கொண்டு தன்னை ஒரு நிதியுலக நிபுணராய் புதிதாய் படைத்துக் கொள்ளப் போவது பற்றியும் அவர் பேசுகிறார். இப்போது இளமையைவிட வயோதிகத்தின் அருகில் இருக்கும் முதுயுவனிடம், தன் மடிக்கணினியில் சேகரம் செய்து வைத்திருக்கும் மர்ம பரிபாஷைகள் நிறைந்த பாடப்புத்தகங்களையும் கணித இயற்பியலின் புதிய முன்னெடுப்புகளை விவரிக்கும் ஆய்வுக் கட்டுரைகளையும் காட்டி, முப்பது ஆண்டுகளாகத் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் கனவை நோக்கிய பயணம் இனி எப்படித் துவங்கப் போகிறது என்று சொல்கிறார்

முன்னம் நிகழ்ந்தவை மீண்டும் அனுபவமாகும் சிலிர்ப்பூட்டும் உணர்வில் அவன் தான் அப்போது வாசித்துக் கொண்டிருக்கும்எ பெண்ட் இன் தி ரிவர்நாவலின் முதல் ஐம்பது பக்கங்களில் அரங்கேறும் காட்சியொன்றை எதிர்கொள்வதை அறிந்து கொள்கிறான். அந்த நாவலின் 42ஆம் பக்கத்தில், நாவல் நாயகன் சலீம் நெஞ்சைக் கிழிக்கும் வகையில் சொல்கிறான், “என் பின்புலமும் பழக்கவழக்கமும் சொல்வதற்கப்பால் என்னில் இன்னும் பல இருக்கின்றன. என்னைச் சுற்றியிருந்த திருத்தப்படாத காட்டிலிருந்துஎன்னை ஏதோ ஒன்று பிரித்தது என்பதை நான் அறிந்திருந்தேன். இந்த வேறுபாட்டை நிறுவ, என் உண்மையான அகத்தை வெளிப்படுத்த,  என் அன்றாட வாழ்வில் எனக்கு எந்த வழியும் இல்லாததால், என் பொருட்களைக் காட்சிப்படுத்தும் முட்டாள்தனத்தில் இறங்கினேன்.” அவனது உறவினர் போல், ஜனரஞ்சக அறிவியல் பத்திரிக்கைகள் படித்து, அத்தனை புதிய விஷயங்களையும்  தெரிந்து வைத்திருக்கும் சலீம், மேலும் சொல்கிறான்: “நான் படித்துக் கொண்டிருக்கும்போது எப்போதும், நான் எந்த ஒரு குறிப்பிட்ட அறிவியல் அல்லது துறை பற்றி படித்துக் கொண்டிருந்தேனோ, அதற்குத்தான் நான் என் பகல்களையும் இரவுகளையும் அர்ப்பணித்திருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு, அறிவுக்கு அறிவு சேர்க்க வேண்டும், கண்டுபிடிப்புகள் செய்ய வேண்டும், என்னைக் கொண்டு உருப்படியாய் ஏதோ ஒன்று செய்திருக்க வேண்டும், என் திறமைகள் அனைத்தையும் நான் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். என் பார்வைக் கோணத்தில், அது ஒரு நல்ல உணர்வாக இருந்தது, அது அறிவு வாழ்க்கைக்கு இணையானதாகவே இருந்தது.”

ஒரு காலத்தில் ஏழ்மைவாய்ப்பட்டிருந்த அந்த உறவினர், நைபாலின் வரலாற்று நாயகர்கள் போல், “புதிதாய் தன்னைப் படைத்துக் கொள்ளும்உந்துதலை (நைபால் மிக உருக்கமாக இதை ஆவணப்படுத்துகிறார்)  தன்னுள் உணர்ந்திருந்தார், தனக்கான எல் டொராடோவைத் தேடி அமெரிக்கா வந்திருந்தார். அங்கு அவர் பிஸ்வாஸைப் போல்தனக்குரிய இடத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டிருந்தார்”, ஒன்றல்ல, இரண்டு வீடுகள் உரியவர் என்ற பெருமை பெற்றிருந்தார். எனினும் தன்னைத் தொடர்ந்து மீண்டும் புதிதாய்ப் படைத்துக் கொள்ளும் தேவை தீக்கங்கு விரல்களாய் அவரைத் தீண்டுவது நிற்கவில்லை, அவரது சுடர்மிகு அறிவு, “தன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்துவது,” அதுவொன்று மட்டுமே அவருள்ளத்தில் தன்னைச் சூழ்ந்திருந்த வேடிக்கை மனிதர்களிடமிருந்து அவரைப் பிரித்துக் காட்டியது. நம் இளைஞன் ஒரு துயர் தன் இதயத்தில் கவிவதை உணர்கிறான், ஆயினும் அலையொன்று அவனைச் சாடி நனைக்கிறது, ஏதோ ஒரு உன்னதம் தன்னைத் தொட்டாற்போல் இருக்கிறது. நைபாலின் பிஸ்வாஸ் போல், அவரும், மார்க்குஸ் அவுரேலியஸின் மெடிடேஷன்களை ஸ்லம்பர்கிங் மெத்தையில் படுத்திருந்தபடி வாசித்து ஓய்வெடுக்கலாம், என்று அவன் ஆறுதல் சொல்ல விரும்புகிறான், உறவினர் விஷயத்தில் அந்தப் புத்தகம் ஃபைன்மேனின்லெக்சர்ஸ் ஆன் பிசிக்ஸ்ஆக இருக்கக்கூடும். ஆனால் இது அத்தனையிலும் தன்னிரக்கத்தின் நெடி சிறிதளவு வீசுவதையும் உணர்ந்து, “உள்ளபடியே உள்ளது இவ்வுலகம்,” என்ற மாபெரும் துவக்கத்துக்குப் பின்பெண்ட் இன் தி ரிவர்நாவலில் வருவது, “ஒன்றுமில்லாதவர்கள், தாம் ஒன்றுமில்லாமல் ஆக அனுமதித்தவர்கள், அவர்களுக்கு அங்கு இடமில்லை,” என்ற சொற்கள் என்பதை நினைவுகூர்கிறான். அதையொட்டியே அவனும் தன் உறவினரிடம், “கனவு காண்பது போதாது, செயல் புரிய வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறான்.

அவரது மரணத்துக்குப்பின் நாம் போதுமான அளவு, ‘பொதுவெளியின் மேட்டிமைவாதி’, ‘பெரும் அகம்பாவிஎன்ற அடைமொழிகளை, ஆற்றுப்படுத்தும்நன்றாக எழுதக்கூடியவர்என்பதோடு சேர்ந்து, கேட்டு விட்டோம்.  ஆனால் என்னைக் கேட்டால், வருங்காலம் அவரது நாவல்களின் அடிப்படையில், அதிலும் குறிப்பாக அவர் முதலில் எழுதிய சில நாவல்கள், அவரை மதிப்பிடப் போகிறது (பெரும்பாலும் அவருக்கு சாதகமான தீர்ப்பாகவே இருக்கும்). தேசிய இலக்கியம் போன்ற வழக்கமான பொறிக்குழிகளைத் தவிர்த்த அவரால் உலகில் இதுவரை கண்டுகொள்ளப்படாத பகுதிகளில் வாழும் இதுகாறும் கண்டுகொள்ளப்படாத மக்கள் திரள்களுக்காக குரல் கொடுக்க முடிந்தது. ராலே, கொலம்பஸ் போன்ற மகத்தான வரலாற்று நாயகர்களின் மாபெரும் காலனிய நாட்டங்களையும் இவ்வுலகின் பிஸ்வாஸ்கள் மற்றும் சலீம்களின் காணி நிலத்துக்கான சாதாரண விழைவையும் தன்னிரக்கம் இல்லாமல், பலிகளின் உரிமை கொள்ளாமல், இணைக்க முடிந்தது.

நாமனைவரும் ஒரே துணியில் கிழித்து ஒட்டுப் போடப்பட்டவர்கள் என்பதும், எவ்வளவுதான் ஆழப் புதைக்கப்பட்டிருந்தாலும் நம்மனைவரிடத்திலும் இருக்கும்தேவையில்லாமல், இருக்க இடம் அளிக்கப்படாமல் பிறந்த ஒருவன் போல் வாழ்ந்து மறைவது,” குறித்த மரண பயத்தை மறுக்கும் ஏதோவொன்று, இன்று புதிதாய்ப் பிறந்தோம் என சுயத்தைப் படைத்துக் கொள்ளும் எளிய தூண்டுதலாய் நம்மனைவரையும் செலுத்தும் உந்துவிசையாகிறது. “அதிகார மையத்தில் அல்ல, விளிம்பில் மிதந்து, நதிப்போக்கில் அசைந்து கொண்டு இருப்பதுதளைகள் குறித்த ஆனந்தம், ஒரு சிறு பிரதேசத்துக்குரியவனாய் இருப்பதில் தோன்றும் தரிசனம்,” எவ்வாறு அவரால் நமக்கு சித்திரிக்கப்பட்டது என்பதை அமித் சௌத்ரி மிக நெகிழ்ச்சியாக எழுதுகிறார்*. ஆனால் நைபாலிடத்தில் இந்த ஆனந்தம் ஒருபோதும் மெல்லிய பச்சாதாபமாய் தோய்வடைவதில்லை, அவர் வட்டாரத்தன்மையின் எல்லைகள் குறித்து எப்போதும் இரக்கமற்ற பிரக்ஞையுடன் இருந்தார்; அதனால்தான் அந்த வீட்டில் முன்னம் இருந்த பெல்ஜியன் பெண்மணியை, “மழையும் வெம்மையும் கொண்ட இப்பெரும் மண்ணில் வேறொரு வகை வாழ்க்கையை, ஐரோப்பா, அகம், கலை என்பதன் சாயலை அறிமுகப்படுத்த முயற்சித்தகாரணத்துக்காக சலீம் போற்றுகிறான்; அது மட்டுமல்ல, “தன்னளவில் மதிப்பிடப்பட்டால், அவளது முயற்சி அப்படியொன்றும் உருப்படியானதல்ல,” என்ற விமரிசனத்தையும் சேர்க்கிறான். இந்த கூர்தீட்டப்பட்ட இரட்டைப் பார்வை நைபால் எழுத்தின் பின்னணியில் எங்கும் உள்ளதால்தான் அருமையாகச் செம்மைப்படுத்தப்பட்ட அவரது நாவல்களின் உரைநடையினுள் மகத்தான இலக்கியத்தின் உயிர்த்துடிப்பு ஒலிக்கிறது.

கட்டுரை வேடம் தரித்த இந்த நினைவுக் குவியல், தொண்ணூறுகளில் ஒரு நாள் குறித்த நினைவுகளுடன் துவங்கியது. செப்டம்பர் 2018க்கு முன்னோக்கிச் செல்வோம். பின்புலத்தில் ஹவாய். இப்போது நரை தட்டிய நம் இளைஞனும் அவன் மனைவியும் (அவளுக்கு இன்னும் நரைக்கவில்லை) ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவனின் திருமணத்துக்கு அங்கு சென்றிருக்கிறார்கள். திருமணம் முடிந்து விட்டது, பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்தாகி விட்டது. ‘ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை நாம் நம் கற்பனைக் கண் கொண்டு காண முடிகிறதுஇருவரும் அவரவர் வலையூஞ்சல்களில் தம்மைத் தளர்த்திக் கொள்கின்றனர். “உலகின் போக்கில்இணைந்து பயணித்து விட்டதால் அவளுக்குஉள்ளபடியே உள்ள இவ்வுலகத்தைக்குறித்து எரிச்சல் எதுவுமில்லை, அவ்வுலகு சில சமயம் அளிக்கக்கூடிய எரிச்சல் அவன் பார்வையைத் தப்புவதுமில்லை. அவன் வாசித்துக் கொண்டிருப்பதை நிறுத்துகிறான், அவளை நோக்கித் திரும்பி, தன்னிடம் உள்ள புத்தகத்தைக் காட்டுகிறான் (‘எ பெண்ட் இன் தி ரிவர்’), யார் எழுதியது தெரிகிறதா, என்று கேட்கிறான். அவள் சிறிது நேரம் யோசித்துப் பார்த்துவிட்டு, இல்லை என்று சொல்கிறாள். அடுத்து முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை அவளுக்காக அவன் நினைவுகூர்கிறான். அப்போது மிகுவெல் ஸ்ட்ரீட்டின் எலியாஸுடைய உதட்டில் உள்ள ‘லிட்ரிச்சரின் நினைவு போல்அவள் கேட்டறிந்த நினைவுகளில் மிக அழகான நினைவாக இருக்கும். அவன் நாவில், “அது தின்னக்கூடிய ஒன்று போல் ஒலிக்கும்சாக்லேட் போன்ற இனிப்பு மிகுந்த ஒன்றாக.

ஒரு வேளை இதுவே அவர்கள்அவசியமானவர்களாகவும் இடம் கொடுக்கப்பட்டவர்களாகவும்உணரப் போதுமானதாக இருக்கலாம்.


* https://indianexpress.com/article/lifestyle/books/remembering-vs-naipaul-hes-not-interested-in-the-staticin-the-beautifully-made-5303488/lite/?__twitter_impression=true

 

Sources / Further Reading:

A House for Mr. Biswas(1961), V.S. Naipaul, Penguin, 1976
A Bend in the River,(1979) V.S. Naipaul, Vintage, 1989
Miguel Street,(1959) V.S. Naipaul, Vintage, 2002
A Way in the World(1994), V.S. Naipaul, Vintage, 1995

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.