காயப்படுத்துவோரும் காயமுற்றோரும் – வி.எஸ். நைபாலின் சாம்ராஜ்யம்

பொதுவெளியின் மேட்டிமைவாதி’ ‘பெரும் அகம்பாவிபோன்ற அடைமொழிகளுக்கான காரணங்கள் நான் வீ.எஸ். நைபாலை 1994-இல் பேட்டி எடுத்தபோது கணிசமான அளவிற்கு வெளிப்படையாகவே காணக் கிடைத்தன. இதுவும் நான் எதிர்பார்த்ததுதான். வெளிறிய பெண்மணியொருவர், அவரது செயலாளர், என்னை அவரது லண்டன் அடுக்குமனையின் உட்காரும்அறைக்கு அழைத்துச் சென்றார். நைபால் என்னை சந்தேகத்துடன் நோக்கி, கைகுலுக்கி, அடுத்து வரவிருக்கும் ஒரு மணி நேர ஏளனம் தொனிக்கும் படிப்பினையை தொடங்கி வைத்தார். அவரது பிறப்பிடமான ட்ரினிடாடைப் பற்றி எனக்கு சுத்தமாக ஏதும் தெரிந்திருக்கவில்லை என்று கூறினார்; என்னிடமிருந்தது வழக்கமான முற்போக்கு நவிற்சி மட்டுமே. அது ஒரு பண்ணைச் சமூகம். அவர் எழுத்தைப் பற்றி எனக்கு ஏதாவது தெரியுமா? தெரியாது, என்றே அவர் சந்தேகித்தார். எழுத்து வாழ்க்கை நம்பிக்கையிழக்கும் அளவிற்கும் கடினமாக இருந்தது. ஆனால், நான் இடைமறித்தேன், அவரது பெரும் நாவலான “A House for Mr. Biswas” பதிக்கப்பட்ட உடனேயே பெரிதும் பாராட்டப்பட்டதுதானே? “அறுபதுகளில் வெளிவந்த புத்தகங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்யும் பட்டியல்களைப் பாருங்கள், அதில் பிஸ்வாஸ் இடம் பெறுவதில்லை”. அவர் செயலாளர் காப்பி கொடுத்துவிட்டுச் சென்றார். அமெரிக்காவில் எழுபதுகள் வரையிலும் தான் பதிப்பிக்கப்படவில்லை என்பதை வலியுறுத்தி, “மேலும் அங்கு வந்த விமரிசனங்கள் மோசமானவைஎழுத்துப் பயிற்சியற்ற, படிப்பறிவில்லாத, அறிவற்ற விமரிசனங்கள் அவை,” என்று நைபால் அடித்துக் கூறினார். தொலைபேசி ஒலித்தது, ஒலித்துக்கொண்டே இருந்தது. நைபால்மன்னித்துக் கொள்ளுங்கள்என்று எரிச்சலுடன் கேட்டுக் கொண்டார். “இவ்விடத்தில் யாரும் சரியாக கவனித்துக் கொள்ளப்படுவதில்லை.” செயலாளர் என்னை வழியனுப்புகையில், நாவலாசிரியரும் வேலைக்காரியும் கூடத்தில் சற்று பேசிக்கொண்டபோதுதான் புரிந்து கொண்டேன், அந்தம்மா அவர் மனைவியென்று.

சில நாட்களுக்குப் பிறகு, தொலைபேசி மணி ஒலித்தது: “நான்தான் விடியா நைபால். இப்போதுதான் கார்டியனில் நீங்கள் எழுதியிருந்தகவனமான பத்தியை படித்தேன். நாம் மதியவுணவிற்கு சந்திக்கலாமா? பம்பாய் பிராஸரி தெரியுமா? நாளை ஒரு மணிக்கு?” மதியவுணவிற்கு என்னை அழைத்துச் சென்ற நைபால் எனக்கு பேட்டியளித்த அந்த அருவருப்பான ஆசாமியிடமிருந்து வேறுபட்டிருந்தார். கண்டிப்பான அப்பா மென்மையான மாமனாக மாறியிருந்தார். “இது பஃபே முறை, எல்லாவற்றையும் ஒரே தட்டில் குவித்துக் கொள்ளாதீர்கள். அப்படிச் செய்வது நயநாகரீகமற்றது. கொஞ்சம் பதார்த்தத்தை மட்டுமே ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதைச் சாப்பிட்டு முடித்தபின் அவர்கள் அதை எடுத்துச் செல்வார்கள்.” அன்று அவர் என்னிடம் நடந்து கொண்டதை சரிக்கட்டுவதற்காக இன்று இப்படி நடந்து கொள்கிறார் என்று நான் நினைக்கவில்லை. மேலும் என்னை தொழில்ரீதியாக அல்லாது தனிப்பட்ட முறையில் சந்திக்கும் அளவிற்கு அவர் என் பத்தியை மெச்சினார் என்றும் கூற முடியாது. கடை இருபதுகளிலிருக்கும் ஒருவருடன் எழுத்துக்கலையைப் பற்றிப் பேச ஆர்வப்பட்டார் என்றே எனக்குத் தோன்றியது. ஆயுட்காலப் பழக்கங்கள்நுட்பமாக அவதானித்து, உலகைச் சேகரிப்பவரின் பழக்கங்கள்உடனடியாகவே தங்களை இயல்பாகவே வலியுறுத்திக் கொள்வதையும் என்னால் பார்க்க முடிந்தது: அவர் இங்கேயும் தனது எழுத்துப் பணியைத்தான் செய்து கொண்டிருந்தார். “கருத்துச் செறிவு கொண்ட புத்தகங்களை எழுத வேண்டுமானால்,” என்னிடம் கூறினார், “நீங்கள்உருவங்களை தகர்ப்பதற்குதயாராக இருக்க வேண்டும், உருவங்களை உடைத்தெறிய வேண்டும். அனிதா ப்ரூக்னர் ஒவ்வொரு வருடமும் அதே நாவலையே மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது உண்மையா?”  நான் உண்மைதான் என்றதற்கு, “கொடுமை கொடுமைஎன்று நொந்து கொண்டார்.

இந்திய சமூகவியல் கோட்பாட்டாளரான அஷீஸ் நந்தி, கிப்லிங்கிற்கு இரண்டு குரல்களிருப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். ஸாக்சோஃபோன் குரல், ஓபோ குரல் என்று அவர் வகைப்படுத்தியதாக நினைவு. முதலாவதானது கடுமையான, இராணுவத் தொனி கொண்ட ஏகாதிபத்திய எழுத்தாளருடையது. இரண்டாவது, துணைக்கண்டத்தின் கலாச்சாரங்களை வியக்கும் இந்தியத்தனம் ஊடுருவும் கிப்லிங்கின் குரல். நைபாலிற்கும் ஒரு ஸாக்சொஃபோனும் ஒரு ஓபோவும் இருக்கிறது: ஒரு கடுங்குரலும், ஒரு மென்குரலும். இவற்றை நாம் காயப்படுத்துபவர் மற்றும் காயமுற்றவரின் குரல்கள் என்றும் அழைக்கலாம். காயப்படுத்துபவரின் குரல் நாம் நன்கறிந்ததேபின்காலனித்துவ ஆய்வுகளையும் இலக்கியவுலகையும் வசீகரிக்கும் வெறுப்பின் மூலம். தாய் நாட்டை ஏளனத்துடன் இகழ்கிறார்: “நான் அங்கே பிறந்தேன் என்பதென்னவோ உண்மைதான். அது ஒரு பிழையென்றே நான் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.” 2001-இல் நோபெல் பரிசு அவருக்கு அளிக்கப்பட்ட போது அதைஎன் இல்லமான இங்கிலாண்டிற்கும், என் முன்னோர்களின் இல்லமான இந்தியாவிற்கும் அளிக்கப்பட்ட பெரும் தகுதிப் பாராட்டாகவிவரித்தார். ட்ரினிடாடை ஏன் விட்டுவிட்டீர்கள் என்று கேட்டதற்குதகுதிப் பாராட்டிற்கு அது வில்லங்கம் விளைவிக்கும்என்ற பயத்தைக் காரணமாக அளித்தார். ஆப்பிரிக்க சமூகங்களின்காட்டுமிராண்டித்தனம்மற்றும்பழமைத்தனத்”-தையும் பற்றி அவர் எழுதியிருக்கிறார். மேலும் இந்தியாவைப் பற்றி எழுதுகையில் பொதுவில் மலம் கழிப்பது பற்றி அளவிற்கதிகமாகவே கவனம் செலுத்தினார். (“மலைகளில் மலம் கழிக்கிறார்கள்; ஆற்றங்கரையில் மலம் கழிக்கிறார்கள்; ஏன் சாலைகளில்கூட மலம் கழிக்கிறார்கள்.”) பிடித்த எழுத்தாளர்கள் யார் என்று கேட்கப்பட்ட போது, “என் தந்தைஎன்று பதிலளித்தார். சமூக அந்தஸ்தை பெறுவதில் வெற்றி பெற்றவராகவும், வேண்டுமென்றே நண்பர்களற்று இருந்தவராகவும், ஒற்றை நபர் சாம்ராஜ்யமாகவும் வாழ்ந்தவர்: “பள்ளியில் எனக்கு ஆர்வலர்கள் மட்டுமே இருந்தார்கள், நண்பர்கள் இருந்ததில்லைஎன்று நினைவுகூர்ந்தார்.

காயப்படுத்துபவர், தன் முதல் மனைவி பட்ரீஷியா ஹேலை சில சமயம் சார்ந்து, மற்ற சமயங்களில் புறக்கணித்து, அனேகமாகத் திட்டி அவமானப்படுத்தி இழிவு செய்ததையும், இனியும் பயன்படுத்த முடியாத அளவு வரையிலும் பயன்படுத்திக் கொண்டதையும் பாட்ரிக் ஃபிரெஞ்சின், நைபாலின் சரிதையான, வியக்கத்தக்க “The World Is What It Is” –நூலில் நாம் அறிந்து கொள்கிறோம். ப்ரிட்டனில் இவ்வருடம் பதிப்பிக்கப்பட்ட ஃபிரெஞ்சின் சரிதை வசைபெயரெடுத்து வெளிப்படுத்திய திடுக்கிடும் செய்தி நமது சுகிப்பான அருவருப்பை மேலும் செழிப்பாக்கும்: 1972-இல் நைபால் மார்கரெட் குட்டிங் என்ற ஆங்க்லோ-ஆர்ஜெண்டைனிய பெண்மணியுடன் ஒரு நீண்ட, சிடுக்கான, சாடோமாஸோக்கிய பிறழ்புணர்ச்சி நிரம்பிய உறவைத் தொடங்கினார். பாலுணர்ச்சி மேலோங்கிய அவ்வுறவில், நைபால் அவரது தரப்பில், கொடுமை மற்றும் ஆதிக்க பிறழ்வேக்கங்களை பூர்த்தி செய்து கொண்டார். ஒரு முறை, மார்கரெட் இன்னொரு ஆணுடன் இருந்ததால் பொறாமையுற்றுஇரண்டு நாட்களுக்கு என் கைகளைக் கொண்டு அவளிடம் மிக வன்முறையாக நடந்து கொண்டேன்அவள் முகம் மிக மோசமான நிலைக்குள்ளானது. பொதுவில் அவளால் தலைகாட்டக்கூட முடியவில்லை,” என்று கூறினார்.

காயமுற்ற நைபாலோ ட்ரினிடாடில் போராட்டம், அவமானம் மற்றும் வறுமையால் நொய்வுற்றிருக்கும் தன் இளமைக் காலத்தால் அலைக்கழிக்கப்பட்டு, அதற்கு ஒருவித மூர்க்கத்துடன் திரும்பிச் செல்லும் எழுத்தாளர்; அவ்வலைக்கழிப்பால் ப்ரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் காலனிய விளிம்பிலிருந்து அதன் பெருநகர் மையத்திற்கு தான் மேற்கொண்ட அசாத்தியமான பயணத்திற்கும், “The Enigma of Arrival (1987)” –இல் குறிப்பிட்டதைப் போல்இங்கோர் அன்னியனாக, அன்னியனின் பயங்கலந்த உணர்ச்சித் துடிப்புடன்இங்கிலாண்டில் நீண்ட காலம் வாழ்ந்துவரும் வாழ்க்கையின் நிச்சயமின்மைக்கும் (அவர் பார்வையில்) திரும்பிச் செல்லும் எழுத்தாளர். மீண்டும் மீண்டும், தன் இருப்பை இடர்களால் சூழப்பட்டிருக்கும் ஒன்றாக பாவிக்கும் அவரது எண்ணம் விரிவாகி மற்றவர்களையும் அதன் வளையத்திற்குள் இணைத்துக் கொள்வதால், அவரால் கர்வமோ, மேட்டிமைக் கருணையோ இல்லாமல் தனது காயங்களை மற்றவர்களின் காயங்களுடன் இணைத்துக் கொள்ள முடிகிறது: அவரது தனி நபர் சாம்ராஜ்யம் அவரது கதாபாத்திரங்களால் குடியேற்றப்படுகிறது. பெரிதிலிருந்து சிறிதுவரை, படித்தவர் முதல் கிட்டத்தட்ட படிப்பறிவே இல்லாதவர் வரை, மெய்யானவையிலிருந்து புனையப்பட்டவை வரை என்று விரிந்து மாறுபட்டிருக்கும் அவரது பாத்திரங்கள்  அவற்றின் இல்லிடமற்ற தன்மையால் இணைகின்றன. இவர்களே  “Miguel Street (1959)” – [மிகைல் தெரு]வில் வசிக்கும் ஆடவர்கள். நைபால் தன் வளரும் பருவத்தை கழித்த ட்ரினிடாடின் தலைநகரமான போர்ட் ஆஃப் ஸ்பெய்னின் ஒரு சாலையை மையமாக்கி நகைச்சுவையாக வட்டார வழக்கைக் கொண்டு பல கதைகளை இணைக்கும் புத்தகமது. உதாரணமாக, எலியாஸ் என்பவன் டாக்டராகும் கனவுகள் கொண்டிருக்கிறான். “மேலும் எலியாஸ் தன் சிறு கைகளை ஆட்டி ஆட்டிப் பேசுகையில், பிற்காலத்தில் அவனுக்கு சொந்தமாகப் போகும் காடிலாக்கையும், கருப்பு பையையும் அந்த குழல்கருவியையும் எங்களால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது.” டாக்டர் ஆவதற்கு எலியாஸ் ப்ரிட்டிஷ் தேர்வொன்றில் வெற்றி பெற வேண்டும். “எலியாஸ் எழுதறதல்லாம் இங்க இருக்காது, தெரிஞ்சுக்கோ. அந்தப் பையன் எழுதற ஒவ்வோரு வார்த்தையும் இங்கிலாண்டுக்குப் போகப் போவுது,” என்று அவன் நண்பரொருவன் ஆர்வத்துடன் கூறுகிறான். எலியாஸ் தேர்வில் தோற்று மீண்டும் அதில் வெற்றி பெற முயல்கிறான். “இந்த இங்கிலீஷும் இலக்கியமுந்தான் என் கால வாரிவிடுது,” என்று அலுத்துக் கொள்கிறான். மீண்டும் அதில் தோல்வியுற்று ஒரு சுகாதார இன்ஸ்பெக்டராவதற்கு முடிவு செய்கிறான். அதற்குரிய தேர்வையும் கோட்டை விடுகிறான். இறுதியில் ஒரு சுமைவண்டி ஓட்டுனராக, “சாலை மேற்குடியில் ஒருவனாகஆகிறான். அதே போல் “In a Free State” (1971) –இன் முதல் கதையான ‘One Out of Many’ –இல் கதைசொல்லியாக வரும் சந்தோஷ். பம்பாயில் வேலைக்காரனாகப் பணியாற்றி தன் முதலாளியுடன் வாஷிங்டன் டி.சி செல்லும் சந்தோஷை பழைய வீட்டைத் துறந்த துயரம் அலைக்கழிக்கிறது. அமெரிக்க சாலைகளில் அலைந்து திரிகையில் சில ஹரே கிருஷ்ணா பாடகர்களைப் பார்க்கிறான், அவர்களை ஒரு கணம் இந்தியர்களாக பாவித்துக் கொள்கிறான். அவன் மனம் தனது கடந்த வாழ்க்கையை ந
ினைத்து ஏங்குகிறது:

ஹிந்து ஆடைகள் அணிந்து வட்டத்தில் ஆடும் இவர்கள் உண்மையில் நிஜமான மனிதர்களாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்போது நானும் அவர்களுடன் இணைந்திருப்பேன். நாங்கள் சாலை செல்லும் வழியில் பயணித்திருப்போம்; மதியங்களில் பெரிய மரங்களின் நிழலின் குளிர்ச்சியில் தற்காலிகமாக எங்கள் பயணத்தை நிறுத்திக் கொள்வோம்; மதியம் முடிகையில் அஸ்தமிக்கும் சூரியன் புழுதி மேகங்களை பொன்னாக மாற்றியிருக்கும்; ஒவ்வொரு மாலையிலும் நீர், ஆகாரம் மற்றும் இரவிற்கான தீக்கங்குகளுடன் ஏதோவொரு கிராமம் எங்களை வரவேற்கும். ஆனால் அதுவோ பிறிதொரு வாழ்க்கையின் கனவு.”

அதற்குபதிலாக, இந்திய உணவு விடுதி வைத்திருக்கும் ஒருவர் சந்தோஷிடம் கூறுவது போல், “இது பம்பாய் கிடையாது. இங்கே நீ தெருவில் நடந்து சென்றால் உன்னை ஒருவர்கூட கண்டுகொள்ள மாட்டார்கள். நீ என்ன செய்கிறாய் என்பதைப் பற்றி ஒருவருக்குகூட அக்கறை இருக்காது”. அவர் அவனை ஆசுவாசப்படுத்தும் நோக்கத்துடன்சந்தோஷ் தன் மனதிற்கு தோன்றியதைச் செய்யலாம் என்ற அர்த்தத்தில்தான் கூறுகிறார். ஆனால் சந்தோஷிற்கு வாய்த்திருக்கும் எதிர்மறையான சுதந்திரத்தின்அவன் என்ன செய்கிறான் என்பதை எவருமே பொருட்படுத்துவதில்லை, ஏனெனில் அவனை ஒரு பொருட்டாக எவருமே கருதுவதில்லைகீழ்மைகளின் மீது நைபால் நுட்பமாக கவனம் செலுத்துகிறார். சந்தோஷ் தன் எஜமானரைத் துறந்து, அமெரிக்கரொருவரை மணம் செய்துகொண்டு இறுதியில் அமெரிக்க குடிமகனாகிறான். அவன் இப்போதுஒரு சுதந்திர நிலையில் இருக்கிறான்’, ஆனால் கதையை அவன் இப்படி முடிக்கிறான்: ‘என் சுதந்திரம் எனக்கு இந்தப் பிரக்ஞையை மட்டுமே அளித்திருக்கிறது: எனக்கொரு முகமிருக்கிறது. ஒரு உடலும் இருக்கிறது. குறிப்பிட்ட சில வருடங்களிற்கு உணவளித்தும் ஆடைகள் அணிவித்தும் அவ்வுடலை நான் பேணியாக வேண்டும். அதன்பிற்கு அனைத்தும் முடிவுறும்.”

இவை அனைத்திற்கும் மேலாக, நைபாலின் தலைசிறந்த நாவலான, “A House for Mr. Biswas” –இன் நாயகனாக வரும் மோஹன் பிஸ்வாஸ். டிரினிடாடின் வறுமைக்குள் பிறக்கும் அவன் ஒரு குறிப்புப் பலகை எழுதுபவனாக தன் தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்குகிறான் (“வெட்டியாக இருப்பவர்களுக்கு இங்கு சட்டப்படி அனுமதியில்லைஎன்ற பலகையே அவனது முதல் போணி). பின்னர் ஏதோ ஒரு மாயத்தால் அவன் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நிருபராகி நாற்பத்தி ஆறாவது வயதில் தன் ஸ்லம்பர்கிங் மெத்தையில்  சொகுசாக மார்கஸ் அவுரீலியஸைப் படித்தபடியே உயிர் துறக்கிறான். அவன் ஒரு வீட்டிற்கு சொந்தக்காரன், ஆனால் வீடென்று பெயரளவில் சொல்லிக் கொள்வதற்கு தேவையான பொருட்கள்கூட அவனிடத்திலில்லை: “அவனிடம் பணமில்லைசிக்கிம் சாலையிலிருக்கும் வீட்டிற்காக திரு. பிஸ்வாஸ் கடனாளியானார், நான்கு வருடங்களாக மூவாயிரம் டாலர்களுக்கு கடன்பட்டிருந்தார்இரண்டு குழந்தைகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர் பளுவைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய மற்ற இரு மூத்த பிள்ளைகளும் ஸ்காலர்ஷிப்பில் வெளிநாடு  சென்றிருந்தார்கள்.” நாவலின் சிறு முகவுரையை நைபால் ஒரு ஆழ்ந்த சுயசரிதை நடுக்கத்துடன் முடிக்கிறார். திரு.பிஸ்வாஸ் ஏழ்மையான இவ்வீட்டை வாங்கவில்லை என்றால் என்னவாகியிருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கும்படி தன் சுகவாசி வாசகர்களை கேட்டுக் கொள்கிறார்: “அது இல்லாமலிருந்தால், எவ்வளவு கொடூரமாக இருந்திருக்கும்தான் வாழும் புவியில் தனக்கு உரித்தான ஒரு பிடி நிலத்தைக்கூட சொந்தம் கொண்டாடாமலே வாழ்வது; பிறந்தபோது இருந்த எவருக்குமே தேவைப்படாத, இருக்க இடமற்ற நிலையிலேயே வாழ்ந்தும், மரணித்தும்.” ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை? காத்திரமான அவரது பிற்கால கதையொன்றில் டால்ஸ்டாய் கேட்கிறார். இறந்த பிறகு புதைப்பதற்குத் தேவையான ஆறடி மட்டுமே என்று கதை விடையளிக்கிறது. திரு பிஸ்வாஸிற்கு அதைக் காட்டிலும் சற்று அதிக நிலமிருந்தாலும் அவர் கிங் லியரில் கரம்பு நிலத்தில் கிடக்கும் ஆடைகளற்ற காட்டுமிராண்டியின் நிலையை ஒரு மயிரிழையில்தான் தப்பியிருக்கிறார்.

தேவைப்படாதவர், இருக்க இடமற்றவர்கண்டுகொள்ளப் படாதவர், அதாவது நைபால் தனது புத்தகத்தின் நாயகனாக ஆக்கும் வரையில். அந்த நடுக்கம் சுயசரிதைத்தனமானது, ஏனெனில் திரு. பிஸ்வாஸ் அடிப்படையில் விடியா நைபாலின் தந்தை, சீபெர்சாத் நைபால்தான். சிக்கிம் சாலையின் அந்த புனைவு வீடு நேபால் சாலையிலிருந்த பதினெட்டு வயதில் விடியா இங்கிலாண்டு செல்லும் பயணத்திற்கு வழியனுப்பட்ட, பாட்ரிக் ஃபிரென்ச்சின் வார்த்தைகளில், “ஏழு சதுர மீட்டர்களில், இரண்டு தளங்களில், புறத்தே ஒரு மரத்தாலான படிக்கட்டுடனும், மேலே நெளித்தகடுக் கூரையுடனும் சாலையின் இறுதியில், தள்ளாடி வெப்பத்தில் தகிக்கும், பிரிவினை செய்யப்பட்டிருக்கும் ஒரு கட்டிடம்,”  அவரது நிஜ வீடுதான். சீபெர்சாதின் தந்தை இந்தியாவிலிருந்து டிரினிடாடிற்கு கரும்புத் தோட்டங்களின் பணியாள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கப்பலில் குடிபெயர்க்கப்பட்டார். பிரெஞ்ச் குறிப்பிடுவது போல், சொல்லளவிலான தன்விருப்பத் தேர்வும், குடும்பத்தோடு இணைந்திருப்பதற்கான அனுமதியும் மட்டுமே ஒப்பந்தக் கூலி அடிமைத்தனத்தை முழுமையான அடிமைத்தனத்திலிருந்து வேறுபடுத்தியது. ஐம்பது வருடங்களுக்குப் பின், தொழிலாளி இந்தியாவிற்குத் திரும்பிச் செல்லலாம், அல்லது ஒரு பிடி நிலத்திற்குச் சொந்தக்காரராகலாம். நைபால் பிறந்த காலகட்டத்தில், 1932-இல், ட்ரினிடாடில் வாழ்ந்த இந்தியர்களுள்  (அச்சமயம் தீவின் நான்கு லட்சம் ஜனத்தொகையில் மூன்றில் ஒருவர் இந்தியர்) இருபத்தி இரண்டு சதவீதம் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தார்கள். பிரிட்டிஷ் பல்கலையில் படிப்பதற்காக மொத்த தீவிற்குமே நான்கே நான்கு அரசு ஸ்காலர்ஷிப்கள் அளிக்கப்பட்டன. தப்பிப்பதற்கான ஒரே வழியாக விடியா இதை இனம் கண்டுகொண்டார். முதல் உதவித் தொகையை தனது பத்தாவது வயதிலும் இறுதித் தொகையை 1949-லும் வென்றார். ஆக்ஸ்ஃபோர்டிற்கு அடுத்த ஆண்டே விடை பெற்றுச் சென்றார்.

இம்மாதிரியான உலகில்தான் சீபெர்சாத் நைபால் நிருபராகவும் ட்ரினிடாட் கார்டியனிற்கு பத்தியாளராகவும் உயர்ந்தார். தன் சமூகத்தைப் பற்றி எளிமையாகவும், நகைச்சுவையுடனும், பிற்காலத்தில் தன் மகன் வியந்து பின்பற்ற முயலும் வகையில் விவரங்களை நுட்பமாக கவனிக்கும் நடையில் எழுதிய புனைவுக் கதைகளைப் புத்தகமாக பதிப்பித்தார். அது ஒரு மாபெரும் சாதனைதான் என்றாலும் பரந்த அளவுகோல்களுடன் நோக்குகையில் இது ஒரு தோல்வியும்கூட. ஏனெனில் சீபெர்சாத் தீவைக் கடந்து செல்லவே இல்லை. அப்படிச் சென்ற அவரது புத்திசாலிக் குழந்தைகள் வழியே அக்கடப்பை  கற்பனையில் மட்டுமே போலியாக அனுபவித்தார். (1953-இல் விடியா ஆக்ஸ்ஃபோர்டில் இன்னமும் படித்துக் கொண்டிருந்தபோது, தனது நாற்பத்தி ஏழாவது வயதில் காலமானார்). அந்த இரட்டை மதிப்பீடேபெருமையும் அவமானமும், பரிவும் பராதீனமும் – “A House for Biswas”- இற்கு  முப்பரிமாண நோக்கை அளிக்கிறது, ஒரு விதத்தில் நைபாலின் அனைத்துப் புனைவிற்கும் கூட.  இதனால்தான், எழுத்துலகில், அவருக்கு மட்டுமே பழமைவாத தரிசனத்துடன் மாற்றம் விழையும் தீவிர பார்வையும் இணைந்திருக்கிறது. காயமுற்று, தீவிரமாக இருக்கும் நைபால் தனது தந்தையின் வாழ்வின் ஒடுங்கிய காலனிய தொடுவானத்தை நினைத்து ஆத்திரத்தில் தகித்து அவரது தந்தையின் சாதனைகளை காலனிய நகர மைய மேட்டிமை ஏளனத்திடமிருந்து பாதுகாக்க முற்படுகிறார். ஆனால் ட்ரினிடாடென்ற சிறு சிறைக்கு அப்பால் சென்றுவிட்ட பழமைவாத காயப்படுத்துனரோ இப்போது குடியேற்ற நாட்டினராக அல்லாது குடியேறும் நாட்டவரின் கண்களுடன் பார்க்கிறார். அவரது கண்களுக்கு அச்சிறையீட்டின் சிறுமை மட்டுமே தெரிகிறது. நைபால் சுவாரசியமானவராகவும் புதிராகவும் தோற்றமளிக்கிறார், குறிப்பாக பின்காலனிய சமூகங்களிலிருந்து வந்தவர்களுக்கு, ஏனெனில் அவரது பழமைவாதமும் கலகத்தன்மையும் மிக அண்மையாக இருக்கின்றனஒவ்வொரு எதிர்வினையும் அந்த ஆக்கவளமிக்க அவமானத்திலிருந்துதான் இறங்கி வருகிறது. ஒரே ஊதுகுழலைக் கொண்டு ஸாக்சொஃபோனையும் ஓபோவையும் நைபால் இசைக்கிறார்.

அவரது எழுத்தில் நைபால் ஒரே சமயத்தில் காலனிய ஆதிக்கம் செய்பவராகவும், காலனீய ஆதிக்கத்திற்கு அடிபணிபவருமாகத் தன்னை உருவகித்துக் கொள்கிறார். காலனிய ஆதிக்கம், காலனிய அடிபணிதல் என்ற வகைமைகள், ஒன்றைக் கொண்டு மற்றொன்றின் மீது தீர்ப்பு வழங்குகையில், காலனிய ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்படுவோர் காலனிய ஆதிக்கம் செலுத்துவோராக மாறுவதைத் தவிர வேறெதையும் விழைவதை கற்பனை செய்து பார்க்க முடியாத அவரது இயலாமையே இதற்கான ஒரு காரணம். ஆகவேதான் ஐம்பதுகளின் தொடக்கத்தில் ஆக்ஸ்ஃபோர்டில் ஆங்கிலம் பயிலும் மாணவன் ஒருவன் சீபெர்சாதின் சாதனையை ஒரு அபத்தமான சிறு வெற்றியாக மட்டுமே காண நேரிடலாம். விடியா நைபாலும் அவனுடன் கண்டிப்பாக உடன்பட்டிருப்பார். ஆனால் சீபெர்சாதின் போராட்டத்தின் கசப்பு அந்தஆக்சோனியதன்மகிழ்வு கொள்ளும் ஆணவத்தை அடிக்கோடிட்டு தகைமை செய்யலாம். இம்முரணியக்கம் நமக்கு பழக்கப்பட்ட ஒன்றாக தோற்றமளிக்கிறது, ஏனெனில் இது இனத்தையும் சாம்ராஜ்யத்தையும் காட்டிலும் வர்க்கம் சார்ந்திருப்பதால்; நாட்டுப்புறத்திலிருந்து நகர மையத்திற்குச் செல்லும் சம்பிரதாயமான பெயர்தல்தான். இதில், நகர மையத்தைத் தவிர வெறெங்குமே செல்ல விரும்பாத நாட்டுப்புறத்தான் அந்நகர மையத்தை தன் நாட்டுப்புற ஐயவாதம் கொண்டு மதிப்பிடுகையில் நாட்டுப்புறத்தை தனது நகர மைய ஆணவத்தைக் கொண்டு அளவிடுகிறான். “A House for Biswas”-இல் காயப்படுத்துவோரையும் காயப்பட்டோரையும் பிரித்தெடுப்பது கடினமாகவே இருக்கிறது. மேலும் நைபால் நம்முள் ஒரு விதமான எதிர்த்தெழும் பரிவைத் தூண்டுவதற்காக குளிர்ச்சியான அனைத்துமறிந்த தொகுத்துச் சொல்லும் ஒரு நடையைக் கையாள்கிறார். ஸ்தம்பிக்கச் செய்யும் தருணமொன்று புத்தகத்தின் தொடக்கத்திலேயே வருகிறது. பின்னால் வரப்போவதை முதலில் யூகிக்கும் ஒரு பிளாஷ்ஃபார்வர்டில் அவரது சகோதரர் பிரதாப்பைப் போல்வாழ்நாள் முழுவதும் படிப்பறிவில்லாதுதோட்டங்களில் ஒரு கூலியாக வேலை செய்வதே திரு. பிஸ்வாஸின் தலைவிதியாக இருக்கலாம் என்று கூறுகிறார். பிரதாப், “பிஸ்வாஸைக் காட்டிலும் செல்வந்தனாக வருவானென்றும், பிஸ்வாஸிற்கு பல வருடங்கள் முன்னதாகவே ஒரு பெரிய, திடமான, நன்றாகக் கட்டப்பட்ட வீட்டிற்கு சொந்தக்காரனாகி விடுவானென்றும்அவர் மேலே எழுதுகிறார். அதன்பின் திசைதிரும்பும் வகையில்: “ஆனால் பிஸ்வாஸ் ஒரு போதும் தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்குச் செல்லவில்லை. அவரை முற்றிலும் ஆழ்த்தும் வகையில் தற்போது நடக்கவிருக்கும் நிகழ்வுகள் அதிலிருந்து திசைதிருப்பியன. அந்நிகழ்வுகள்  அவரை செல்வச் செழிப்பிற்கு இட்டுச் செல்லவில்லை, ஆனால் அவரது பிற்கால வாழ்க்கையில் அவர் சொந்தம் கொண்டாடியவை அனைத்துமே அநேகமாக இடம்பெற்றிருந்த அறையில் ஸ்லம்பர்கிங் மெத்தை மீது ஓய்வெடுத்தபடியே மார்க்கஸ் அவுரீலியஸைப் படித்து தன்னையே சமாதானப்படுத்திக் கொள்ளும் சாத்தியத்திற்கு அவரை இட்டுச் சென்றன.”

நைபால் இங்கு தான் யூகித்திருக்கும் ட்ரினிடாடை அறிந்திராத வாசகர்களுடன் அனேகமாக ஒரு மர்மமான பரிபாஷையில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்: உங்களைப் போன்றவர்களே பிஸ்வாஸை ஏளனத்துடன் நிராகரிக்கலாம். ஆனால் பிஸ்வாஸின் செல்வங்கள் பிரதாப்பின் செல்வங்களைக் காட்டிலும் முக்கியமானவை என்றும், மார்கஸ் அவுரீலியஸ் இருக்கும் அந்த ஸ்லம்பர்கிங் மெத்தை, சிறியதாக இருப்பினும், மார்கஸ் அவுரீலியஸ் இல்லாத ஒரு ஸ்லம்பர்கிங் மெத்தையைக் காட்டிலும் சிறந்தது என்பதும் உங்களைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும்.

இப்போதெல்லாம் வி.எஸ். நைபால் அருவருப்பாக இருப்பதிலும் மேன்மை உணர்வில் திளைப்பதிலும் காலம் கழிக்கிறார். அவரது முகமூடிகளும் கவசங்களும் அந்த இளம் எழுத்தாளரின் காயம்பட்ட உண்ர்வை இப்போது நினைவுகூர்வதற்கு பெரும் தடைகளாக இருக்கின்றன. ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து ட்ரினிடாடிற்கு அளவிற்கதிகமான தன்னம்பிக்கையுடன் எழுதிய கடிதங்களில் அவ்வப்போது ஒரு விரிசலைக் காண முடிகிறது; உதாரணமாக, “நான் என் குழுமத்தின் முதலானவனாக வருவதற்கு ஆசைப்படுகிறேன். அவர்கள் மொழியைக் கையாள்வதில் அவர்களையே என்னால் விஞ்ச முடியும் என்பதை இம்மக்களுக்கு நான் காண்பிக்க வேண்டும்,” என்று அவர் எழுதுகையில். பாட்ரிக் ஃபிரெஞ்ச் நைபால் அவர்களுடன் இணைந்து அவர்களையே வெல்லத் துடிக்கும்இம்மக்கள் யார் என்பதை நமக்கு தெளிவுபடுத்துவதற்காகஆக்ஸ்ஃபோர்டில் மாணவர்கள் நடத்திய Isis இதழில் கால் நனைக்கிறார். அங்கே ரமேஷ் திவேச்சா போன்றோர் எழுதியஅமெரிக்கர்களும்குடியேற்ற நாட்டினரும்போன்ற ஆளுமைச் சித்திரங்கள் நமக்கு காணக் கிடைக்கின்றன: “ஹிந்து ஆண்மைக்கு தலையாய உதாரணமான இவன் வின்செண்டில் தனது வெற்றிக்கான ரகசியங்களைப் பற்றி கோட்பாட்டு ரீதியாக அலசுவதிலும் தாஜில் தன் தாய்நாட்டு சப்பாத்திகளை விரல்களால் சோதிப்பதிலும் எந்த வித்தியாசமுமின்றி ஒரேயளவில் இயல்பாகவே செயல்படுகிறான்ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் காட்டிற்கு திரும்புகிறான், சட்டப் படிப்புக்கான இறுதித் தேர்வுகளுக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்வதற்காக.”

நைபாலிற்குஆக்ஸ்ஃபோர்டில் மனமுறிவு ஏற்பட்டது. பட்டப்படிப்பு முடித்து லண்டனில் வேலை தேடிய வருடங்கள் அவருக்கு மிகவுமே கடினமாக இருந்தன. 1952-இல் பட்ரீஷியா ஹேலை சந்தித்து அவருடன் ஏற்படுத்திக் கொண்ட உறவு இக்கடினத்தை ஓரளவிற்கு சுலபமாக்கியது. சில விதங்களில் அவர்கள் நன்றாகவே பொருந்துகிறார்கள். அவரைப் போலவே அவ்வம்மையாரும் செல்வச் செழிப்பற்ற சூழலில்தான் தொடங்குகிறார்அவரது அப்பா ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றினார்.  பர்மிங்ஹாமின் புறநகரொன்றில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்ககத்தில் அவரது குடும்பம் வசித்தது. அவரது பள்ளியில் ஆக்ஸ்ஃபோர்டிற்குச் செல்வதற்கான மாநில ஸ்காலர்ஷிப் வெற்றி பெற்ற ஒரே பெண் அவர்தான். திருமணம் செய்து கொள்கையில் அவர்களிருவருக்குமே  வயது இருபத்தி இரண்டு. இருவர் குடும்பங்களுமே திருமணத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆனால் நைபால் தன்னம்பிக்கையிலிருந்து மனக்கிலேசத்திற்கு விரைகையில் (“என் சுயநலத்தை மட்டுமே கணக்கில் கொண்டு பார்த்தால் நீதான் வருங்கால G.O.M-ற்கு (Grand Old Man of ‘letters’) ஆதர்ச மனைவிஎன்று பாட்டை சந்தித்த ஒரு வருடத்தில் நைபால் கூறினார்), பாட் திடத்துடன், தானாகவே அரவணைக்கும் ஒரு துணையாக இருந்தார். பல வருடங்கள் கழிந்தபின், சரிதையின் மிக நாசம் விளைவிக்கும் கணமொன்றில், நைபால்பாட்டுடன்  அவர்கள் உறவின் தொடக்க காலத்தில் மேற்கொண்ட கடிதப் போக்குவரத்தை மீள்வாசித்து குறிப்புகள் எழுதினார். எப்போதும் போல் இப்போதும் அவர் தன் தவறுகளை மன்னித்துக் கொள்ளவில்லை. தான் பாட்டிடம் மிக விரைவாக உறவு ஏற்படுத்திக் கொண்டுவிட்டதாக எழுதுகிறார்; நெருக்கத்தின் ஆழமும் அதிகமாகிவிட்டதால் அவரால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அவர் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்வதே உசிதமாக இருந்திருக்கும் என்றும் பாட்என்னைக் காமரீதியில் ஈர்க்கவே இல்லைஎன்றும் கூறுகிறார். தன்னளவில் அவ்வுறவுபாதிக்கும் மேல் ஒரு பொய்தான். தேவையின் அடிப்படையில் மட்டுமே அது நிலைத்தது. அக்கடிதங்கள் போலியானவை, ஆழமற்றவை…”

பாட் சில சமயங்களில் அதீனிய பெண்களுக்கு பெரிக்லஸ் தனது இறுதியுரையில் அறிவுறுத்தியது போல்– “நீங்கள் பேசப்படாமல் இருப்பதே உங்களுக்குக் கிடைத்த மாபெரும் புகழுரையாகக் கருதுங்கள்”- ஒரு விதமான அனாமதேய நிலைக்கு ஆசைப்பட்டார். விடியாவின் சத்தத்தைப் போர்த்து அமைதியாக்குவதே சரிதையில் அவர் பங்கு; விடியாவின் சுயம் என்ற பெரும் முரசிலிருந்து அவர் வாழ்வின் உன்னதமான தாள லயங்களை ஒலிப்பதற்கு ஏதாக அதை சரியான திசைக்குத் திருப்பிப் பிடித்துக் கொள்வது மட்டுமே அவரது பணி.  திருமணம் முடிந்து பல வருடங்களுக்குப் பின் டைரிக் குறிப்பொன்றில் பாட் இவ்வாறு எழுதுகிறார் : “நான் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. தனக்கு கொடுக்க என்னிடம் ஏதுமில்லை என்று விடியா கூறுவது அனேகமாக சரியாகத்தான் இருக்கும்.”  தன்முனைப்பற்று, ஆங்கிலேயர்களுக்கே உரிய கமுக்கத்துடன்,  சற்று வெள்ளந்தியாக, மினுமினுப்பு ஏதுமில்லாமல் தன்னை வகுத்துக்கொள்ளும் பாட் சிறிது சிறிதாக விடியாவின்  எழுத்தின் மீது மூர்க்கமான ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டார். அவர்கள் தனிமையில் இருக்கையில் விடியாவைமேதாவிஎன்று கிண்டலடித்தாலும், அவருக்கு உந்துதலாகவும் செயலாளராகவும் இருந்ததே அவருக்கு மகிழ்ச்சியளித்தது. அன்யோன்யமான, நெகிழ வைக்கும் வெளிப்படுத்தல்கள் நிரம்பிய இச்சரிதையில், ஏழு பரபரப்பான பக்கங்களில், பாட்டின் டைரிக் குறிப்புகளின் உதவியோடு நைபாலின் நாவல்களிலேயேபிஸ்வாஸிற்குபோட்டியளிக்கக் கூடிய ஒரே நாவலான “A Bend in the River (1979)” —இன் நதிமூலத்தையும் வளர்ச்சியையும் ஃபிரெஞ்ச் விவரிக்கிறார். 1977-ஆம் ஆண்டு, ஒரு இலையுதிர்கால மாலையில், டிவி பார்த்து முடித்த பிறகு தன் மனைவியிடம் நைபால்தன் சிந்தனைகளுடன் தனியே இருக்க விரும்புவதாககூறுகிறார். அரை மணி நேரத்தில் பாட் அறைக்குள் மீண்டும் திரும்பி வந்தவுடன் நாவலை இவ்வரிகளுடன் தொடங்கப் போவதாக கூறுகிறார்: “என் குடும்பத்தார் கிழக்குக் கடற்கரையிலிருந்து வருபவர்கள். ஆஃப்ரிக்கா எங்கள் பின்பக்கத்திலிருந்தது. நாங்கள் இந்திய பெருங்கடல் மக்கள்”. அதற்குப் பின் அவர் நாவலின் கதையையும் அதன் மையப் பாத்திரங்களின் உருவரையையும் பாட்டிற்கு விளக்குகிறார். அடுத்த சில மாதங்களுக்கு, பாட்டின் துணையின்றி தன்னால் நாவலை எழுதமுடியாது என்று நைபால் கெஞ்சியதையும் நாவலின் கடினமான மற்றும் விரைவான வளர்ச்சியையும் டைரி குறிப்புகள் ஆவணப்படுத்துகின்றன. சில சமயம், நாவலை அவர் படித்துக் காட்டுகிறார், வேறு சமயங்களில் சர்ச்சில் தன் செயலாளர்களிடம் நடந்து கொண்டது போல், அதிகாலை ஒரு மணிக்கு பாட்டை தன் படுக்கையறைக்கு வரவழைத்து நாவலை இவர் சொல்ல அவர் தட்டச்சு செய்கிறார். நாவல் விரைந்து செல்கிறது. மே 1978-இல் பாட்டை நைபால் தன் அறைக்கு அழைக்கிறார். இரவு பன்னிரெண்டரை வாக்கில்புத்தகத்தின் முடிவை கூறி முடித்தார். இதைச் செய்து முடிக்க எங்களுக்கு சுமார் ஒரு அல்லது ஒன்றரை மணி நேரம் பிடித்தது.”

“A Bend in the River”  சலீம் என்ற இந்திய முஸ்லிம் வணிகனின் குரலில் கூறப்படுகிறது. அண்மையில் சுதந்திரம் பெற்றிருக்கும் ஒரு ஆஃபிரிக்க நாட்டில், ஒரு மாபெரும் நதி வளைந்து செல்லும் ஓர் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வணிகத்தை பிரதானமாகக் கொண்டிருக்கும் ஊருக்கு அவன் புலம் பெயர்கிறான். 1966-இல் நைபால் உகாண்டா, கென்யா மற்றும் டான்சானியாவில் சிறிது காலம் கழித்தார். 1977-இல் மொபுடூவின் ஸ்ஜயீர் நாட்டிற்குச் சென்றார். கிசங்கானியில் ஒரு இந்திய வியாபாரியை அவர் சந்திக்க நேர்கிறது. இன அடையாளங்களை எந்த அளவிற்கு அவன் துறந்திருந்தான் என்பதை அவதானிக்கும்போது, அது அவரை ஆச்சரியப்படுத்துகிறது. “இந்த ஆசாமி இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான்?” என்பதே அவரது நாவலின் சாரம் என்று அவர் கூறியிருக்கிறார். நைபாலின் புத்தகங்களில் வரும் பல பாத்திரங்களைப் போல் சலீம் தன் அந்தஸ்தை நிலையற்றதாக உணருகிறான்: “நம்மைப் பற்றியும் நான் கவலைப்படுகிறேன். ஏனெனில், அதிகாரத்தை பொருத்தமட்டில், நமக்கும் அரேபியர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நாமிருவருமே கண்டத்தின் விளிம்பில் ஒரு ஐரோப்பிய கொடியின் கீழ் வாழும் சிறு குழுக்கள்தான்.” சலீமின் பழைய சிநேகிதனான இந்தர், பிரிட்டிஷ் பல்கலையில் படித்தவன், ஊரின் பல்தொழில் பயிலகம் ஒன்றிற்கு உரையாற்ற வருகிறான். இந்தர் சலீமிடம் தான் இங்கிலாண்டிற்கு மேற்கொண்ட பயணத்தைப் பற்றி கூறுகிறான். நைபால் அவர் என்றுமே தப்பிக்க இயலாத, தன்னை தந்திரமாக ஆட்கொண்டு அதிர்ச்சியூட்டும் இரு கதைகளுக்கு, மீண்டும் திரும்பிச் செல்கிறார்சுருக்கப்பட்ட அவர் தந்தையின் பயணத்தின் சிறுகதை வடிவம் மற்றும் அவரது பயணத்தின் கூறுகள் அடுத்தடுத்து இசைக்கப்படும் நீள்கதை (இந்தர்என் சாயலிலிருப்பான்என்று பாட்டிடம் அவர் கூறியிருக்கிறார்.)

லண்டன் விமான நிலையத்தைப் போலொரு இடத்தில் தரைதட்டுகையில் முட்டாள்தனமாக காட்சியளிப்பதைத் தவிர்ப்பதில் மட்டுமே நமது கவனமிருக்கிறது,” இந்தர் சலீமிடம் கூறுகிறான். பல்கலை முடித்த பிறகு இந்திய தூதரகத்தில் வேலை தேடுகையில் லண்டன் ஹை கமிஷனில் அவமானப்படுத்தப் படுகிறான். அங்கிருக்கும் அதிகாரிகள் அவனுக்கு சல்லித்தனமான பகட்டு அடிவருடிகளாக தோன்றினாலும், இந்தரிடம்ஆஃப்பிரிகாவிலிருந்து வருவதனால் எப்படி இந்தியாவின் பிரதிநிதியாக உன்னால் செயல்பட முடியும்?” என்று கேட்கும் அளவிற்கு அவர்களுள் ஒருவனுக்கு துணிச்சலிருக்கிறது: “இரண்டு நாடுகளுக்கு விசுவாசமாக இருக்கக் கூடிய ஒருவரை நாங்களெப்படி வேலையில் வைத்துக் கொள்ள முடியும்?” இந்தர் சலீமிடம் கூறுகிறான், “வாழ்க்கையில் முதல் முறையாக காலனியத்திற்கு எதிரான ஆத்திரம் என்னுள் பொங்கி எழுந்தது. ஆனால் இது லண்டனிற்கும் இங்கிலாண்டிற்கும் எதிரான ஆத்திரம் மட்டுமல்ல; ஒரு அன்னிய வீண்கனவொன்றின் மமதையால் எப்படி ஒரு மக்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்வதற்காக தயார் செய்யப்படுகிறார்கள் என்பதையும் நினைத்து ஆத்திரப்பட்டேன்”. அவன் லண்டனில் நைபாலின் தனி நபர் சாம்ராஜ்யமாக இருக்க முடிவு செய்கிறான். தனக்கு வீடில்லை என்பதையும், வீட்டிற்கு அவன் திரும்பிச் செல்ல முடியாதென்றும், லண்டனைப் போல் ஓரிடத்தில்தான் இருந்தாக வேண்டுமென்றும்நான் எனக்கு மட்டுமே சொந்தமானவன்என்பதையும் அவன் உணர்ந்து கொள்கிறான். எனினும்நான் அதிர்ஷ்டசாலிதான். உலகத்தை என்னுள் சுமந்து செல்கிறேன். இங்க பாரு சலீம்,  இந்த உலகத்துல பிச்சைக்காரர்கள் மட்டும்தான் தேர்வு செய்பவர்களாக இருக்க முடியும். மற்றவர்களுடைய தரப்பு அவர்களுக்காக தேர்வு செய்யப்படுகிறது. என்னால் தேர்வு செய்ய முடியும்ஆனால் இப்போது நான் வெற்றி பெற வேண்டும், மீண்டும் மீண்டும் வெற்றி பெற வேண்டும்,” என்று தன்னையே சமாதானம் செய்து கொள்கிறான்.

ஆனால் புத்தகத்தின் இறுதியில் இந்தர் அப்படியொன்றும் மீண்டும் மீண்டும் ஜெயித்து விடவில்லை என்பதை சலீம் கேள்விப்படுகிறான். அமெரிக்கர்கள் நிதியை நிறுத்திவிடுவதால் பல்கலை சார்ந்த வேலையும் அவனுக்கு இல்லாமல் போய்விடுகிறது. இப்போதுஅவன் அடிமட்டத்து வேலை செய்து கொண்டிருக்கிறான். அதைவிட உயர்வான பணிகளை செய்வதற்கு அவனிடம் திறமை இருக்கிறதென்பதும் அவனுக்குத் தெரியும், எனினும் அவனுக்கு அவற்றைச் செய்ய விருப்பமில்லைஎதையும் மீண்டும் இழக்கக்கூடிய அபாயத்திற்கு உட்பட அவன் தயாராக இல்லை.”

இந்தரின் ஒளிரும் தனிமொழிதலை எழுதிய நைபால்தான் பலவருடங்களுக்கு முன் பாட்டிற்க்கு இந்த மூர்க்கமான கடிதத்தையும் எழுதினார்:

ஒரு நிமிடம் என் இடத்தில் நின்று யோசித்துப் பார்பிரிட்டன் வாழ் நல்மக்கட்கு கிடைக்கும் வாய்ப்புகளில் இருபதில் ஒரு பங்காவது என் தந்தைக்கு அளிக்கப்பட்டிருந்தால் எதையுமே சாதிக்காத, முறியடிக்கப்பட்ட உடைந்த மனிதராக உயிர் துறந்திருக்க மாட்டார்.  ஆனால், என் போல் அவருக்கும் பட்டினியாய் கிடப்பதற்கான வாய்ப்பிருந்தது. அவர் ஒதுக்கிப் புறந்தள்ளப்பட்டார்ஒரு விதத்தில் ஹிட்ல்ர் யூதர்களை ஒதுக்கி அப்புறப்படுத்தியதைக் காட்டிலும் இது கொடூரமானதுதான். நாட்சீகளின் புறந்தள்ளலிலாவது ஒரு மூர்க்கமான உண்மைத்தனம் இருந்தது; மேலும் அவர்களாவது சட்டென்று கொன்று முடித்தார்கள். சுதந்திரமான புது உலகின் நடப்பு அதைக் காட்டிலும் பல மடங்கு நுணுக்கமானதாகவும் துல்லியமானதாகவும் அமைந்திருக்கிறது. நீங்கள் ஒரு அந்நிய நாட்டிடம்நான் அரசியல் ரீதியில் கொடுமைப்படுத்தப்படுகிறேன்என்று கூற முடியாது. அது உண்மையாகவும் இருக்க வாய்ப்பில்லைஆனால் அதைக் காட்டிலும் மோசமான, ஒரு நயவஞ்சகமான ஆன்மீகக் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறேன். இந்த மக்கள் என் மனபலத்தை தகர்க்க விரும்புகிறார்கள். ஒரு மனிதனாக எனக்கிருக்க வேண்டிய கவுரவத்தை இழக்கச் சொல்கிறார்கள்.  எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு தக்கவாறு என்னை பணிவுடன் நடக்கச் சொல்கிறார்கள்.”

நைபால் இக்கடிதத்தில் மற்ற எந்த எழுத்தாளரையும்விட, காலனீயம் அதற்கு உட்படுத்தப்பட்டவர் மீது இழைக்கும்நயவஞ்சகமான ஆன்மீகக் கொடுமையைஅலசிய கலகக்கார ஆய்வாளர் ஃபிரான்ஸ் ஃபானனையே ஒத்திருக்கிறார். “காலனிய பிரஜை,”  ஃபானன் தன் “The Wretched of the Earth” (1961) –இல் எழுதுகிறார், “எப்போதுமே கவனமாக இருக்கிறான்: காலனிய உலகின் கோடானுகோடி  குறியீடுகளால் குழப்பப்படுவதால், தான் எப்போது வரம்பு மீறுகிறோம் என்பது அவனுக்கு சரியாக புலப்படுவதே இல்லை. காலனிய ஆதிக்கம் செலுத்துவோர் கட்டமைத்திருக்கும் ஓர் உலகில் காலனிய பிரஜை எப்போதுமே ஒரு குற்றவாளியாக ஊகிக்கப்படுகிறான். அவன் அக்குற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும் அது டாமோக்லீசின் வாளைப் போல் அவன் தலை மீது ஒரு சாபம் போல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.” ஃபானன் வன்முறைப் புரட்சி மீது நம்பிக்கை கொண்டிருந்தார். நைபாலின் மாற்றம் நாடும் அவநம்பிக்கை ஃபானனின் மாற்றம் கோரும் நம்பிக்கையை, அவர்களிருவரும் கோபத்துடன் எதிர்த்த காலனிய குற்றவுணர்வு என்று வெட்டு, காலனிய அவமானம் என்ற காயமாகும் புள்ளியில் சந்திக்கிறது. இந்த காலனிய அவமானமென்பது ஒரு விதமான சாபக்கேடென்று ஃபானன் வாதிடுகிறார் – “குடியேற்றம் செய்பவன் பிரகடனப்படுத்தி தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவே விழைகிறான். தனது பாதுகாப்புக் கவலைகள் அவனை ஆதிக்கம் செய்யப்படுபவர்கள் கேட்கும் விதத்தில்இங்கே நான் தான் எஜமான்என்று சத்தமாக நினைவுபடுத்திக் கொண்டிருக்கச் செய்கின்றன, தன்னிடம் அடிபணிவோரை ஒரு மந்தமான ஆத்திர நிலையில் அவன் வைத்திருக்கிறான். ஆனால் இந்த ஆத்திரம் பொங்கி எழுந்து புரட்சியாக மாறுவதைத் தடுப்பதிலும் அவன் கவனமாக இருக்கிறான். நைபாலின் புத்தகம் – “In a free state” இந்த வாதத்தின் மிதமான, நம்பிக்கையற்ற, சுட்டெரிக்கும் நடைமுறைச் செய்துகாட்டல். பாபியும் லிண்டாவும், ஒரு வெள்ளை ஆண் பெண் ஜோடி, உகாண்டா போலிருக்கும் ஒரு ஆஃபிரிக்க நாட்டில் காரில் வளைய வருகிறார்கள். ஆடவன் அரசுத் துறையில் பணியாற்றும் ஒரு நிர்வாக அதிகாரி. பயணிக்கையில் அவர்கள் ஆஃபிரிக்க கருப்பர்கள் மீது காலனீய கோபத்தின் பேரில் பல ஆர்ப்பாட்டமான  கொடூரங்களை செய்கிறார்கள்; பிறர் இழைக்கும் கொடுமைகளுக்கு சாட்சியாகவும் இருக்கிறார்கள். வெள்ளையர்கள் தங்களுக்கு இன்னமும் கட்டற்ற அதிகாரம் இருக்கிறெதென்பதை நினைவுபடுத்திக் கொள்வதற்காகவே இச்செயல்கள் செய்யப்படுகின்றன. வலுவிழந்த தன்விளம்பிகள் (ஃபானனின் அர்த்தத்தில்), அழையா வெள்ளை விருந்தாளிகளான இவர்கள் எப்போதும் அவர்களே தூண்டிவிடும் கருப்புக் கோபத்தை தணிப்பவர்களாக பாவனை செய்து கொண்டு, அச்சுறுத்தப்பட்டபடியே விலங்குகளைப் போல் சூறையாடுகிறார்கள். பாரில், பாபி ஒருஉள்நாட்டுச்சட்டை (ஹாலண்டில் செய்யப்பட்டது) அணிந்து கொண்டு சூலு குலத்தைச் சேர்ந்த ஒரு கருப்பனைபிக்அப்செய்ய முயல்கிறான். “இவ்வுலகில் நான் மீண்டும் பிறந்தால் உன் நிறத்துடன்தான் பிறக்க விரும்புகிறேன்என்று கூறிவிட்டு பாபி தன் கையை சூலூவின் கைமீது இருத்துகிறான். சூலூ தன் கையை அகற்றாது, முகபாவனையை சற்றும் மாற்றாது பாபியின் முகத்தில் உமிழ்கிறான். பாழடைந்த ஹோட்டலொன்றில் வயதான இங்லிஷ் துணைத் தளபதியொருவர் தன் கருப்புச் செயலாளரை தன் வெள்ளை விருந்தாளிகள் முன் அவமதிக்கிறார். ஒரு நாள், என்னைக் கொல்வதற்காக நீ என் அறைக்கு வருவாய் என்று பீட்டரை எச்சரிக்கிறார். ஆனால்நான் உனக்காகக் காத்திருப்பேன். ‘இதோ பீட்டர், பீட்டர் என்னை வெறுக்கிறான்என்று கூறுவேன். ஆனால் நீ கதவைத் தாண்ட மாட்டாய். நான் உன்னைக் கொன்று விடுவேன், உன்னைச் சுட்டுக் கொன்று விடுவேன்.” புத்தகத்தின் தலைப்பைக் கொண்ட குறுநாவல் வெள்ளை கருப்பு என்று தன் பார்வையையும், விசுவாசத்தையும் மாற்றியபடியே செல்கிறது. புத்தகத்தின் மற்ற கதைகளும் அப்படியே: பாபி லிண்டா ஆஃபிரிக்க பயணத்திற்கு அப்பால் வாஷிங்டன் டிசியில் வேலைக்காரனாக பணியாற்றும் சந்தோஷ் கதையும் வருகிறது; வெஸ்ட் இந்திய வந்தேறி ஒருவன் இங்கிலாண்டில் பிழைப்பிற்காகப் பாடுபடும் கதை; மேலும் ஆசிரியரின் அன்றாட நாளேட்டிலிருந்து இரண்டு பகுதிகள். நைபாலின் பதிப்பாளர் குறுநாவலைத் தவிர மற்றதனைத்தையும் தட்டிக்கழிக்க முயன்றார். ஆனால்உருவங்களை உடைப்பவரானநைபால் தான் அனைத்தையும்தொடர்ச்சியாகஎழுதியதாகக் கூறி இதர பகுதிகளை அகற்ற மறுத்துவிட்டார்.

தன் பாத்திரங்களின் அரசியல் மற்றும் உணர்வு ரீதியான பலவீனங்களை பரிவுடன் பராமரித்த நைபால் அப்பரிவை தன் மனைவியிடம் காட்டாதது ஒரு கசப்பான விஷயம்தான். மார்கரெட் குட்டிங்குடன் அவர் மேற்கொண்ட மூர்க்கமாக நிறைவளித்த உறவு –“அவளைப் பார்த்த உடனேயே அவளை ஆட்கொள்வதற்கு ஆசைப்பட்டேன்என்று அவர் சரிதையாளரிடம் கூறினார்அவரது கிளர்வற்ற மணவாழ்க்கையை சிறிது சிறிதாக அழித்தது. எழுபதுகளின் மத்தியில்  நைபால் அடுத்தடுத்து ஓயாது நிருபர் வேலைகளுக்காக பயணம் மேற்கொண்டதால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்திருந்ததை விட அதிக நேரம் பிரிந்தே இருந்தார்கள். நைபாலின் சகோதரி கூறுவது போல், தனக்கு குழந்தைப் பேறு கிடையாது என்ற செய்தி, நைபாலின் நிரந்தரமான கள்ளக் காதல்கள், இவையனைத்தும் பாட்டை ஒரு பெண்ணாக தன்னம்பிக்கை இழக்கச் செய்தன.  இது ஒரு அபாரமான சரிதை, ஏனெனில் பாட்ரிக் ஃபிரெஞ்ச்சிற்கு பாட்டின் டயரிக் குறிப்புகள், மற்றும் நைபாலுடனான ஆழ்ந்த பேட்டிகள் இரண்டையுமே அணுகுவதற்கு அனுமதி கிட்டியது. நைபால் கபடமின்மைக்குப் பேர்போனவர்: பலமுறை அவர் சொல்வது தவறு என்பதை நாம் உணர்ந்திருந்தாலும் அவர் பொய் சொல்கிறார் என்று நாம் சந்தேகிப்பதில்லை. இன்னும் சொல்வதானால், தவறுக்கு இட்டு செல்லும் பாதையில் அவர் அனேகமாக நமக்கு இருபது உண்மைகளை காட்டிவிடுவார். பாட்டின் டயரிக் குறிப்புகளைப் படிப்பதோ ஒரு வலி தரும் அனுபவம்: “தாக்கப்படுகிறேன் என்பதை நான் உணர்ந்து கொண்டாலும் என்னால் என்னை காத்துக் கொள்ள முடியவில்லை.” “அவர் மேலும் மேலும் ஆவேசப்படுகிறார். மேலும், துரதிர்ஷ்டவசமாக, என் பார்வையில், அவர் என்னை வெறுத்து, துஷ்பிரயோகம் செய்வதாக எனக்குப் படுகிறது”. 1996-இல் பாட் மார்பக புற்று நோயால் மரணித்தார். “நான்தான் அவளைக் கொன்றேன் என்று பேசப்படும்,” நைபால் ஃபிரெஞ்ச்சிடம் கூறுகிறார்ஆம் அப்படிப் பேசப்படலாம். சில சமயம் எனக்கேகூட அப்படித் தோன்றுகிறது.”

பாட்டை தகனம் செய்த மறுநாள்,  நைபாலின் வருங்கால இரண்டாவது மனைவியான நாதிரா ஆல்வி என்ற, செல்வச் செழிப்பான பாகிஸ்தானிய வங்கி முதல்வரின் மகள், வில்ட்ஷரில், சமீப காலத்தில் அவரது முன்னோடி, விட்டு நீங்கியிருந்த வீட்டில் வந்திறங்கினார். நைபால் அவரது இலக்கிய முகவருக்கு எழுதுகிறார், “என் அதிர்ஷ்டத்தில் இவளுக்கும் ஒரு பங்குண்டு. நீ இவளைச் சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” இவ்விடத்தில்தான் ஃபிரெஞ்ச்சின் தேர்ச்சியான சோகம் மிக்க புத்தகம் நிறைவு பெறுகிறது. சமூக மற்றும் இன ஆதங்கங்கள் நிரம்பிய, ஒரு வகையில் அவற்றிலிருந்து மீளும், ஒரு வாழ்க்கை, கர்வம் பிடித்த ஒரு பெண்மணி பிரெஞ்சிடம் தனது கணவனின் உறவினர்கள், “அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் குடியானவர்கள்தான்”  என்றும் அவர் தந்தை “ஒரு ஒப்பந்தக் கூலியின் பேரனிடம் என் சந்தோஷத்தை நான் கண்டடைந்தேன் என்பதை அறிந்தால் அதிர்ச்சியுற்றிருப்பார்” என்றும் கூறுவதில் முடிவடைவது  விகாரமாக இருந்தாலும் பொருத்தமாகவே நமக்குப் படுகிறது.

“Enigma of Arrival” என்று தான் 1971 முதல் விட்டு விட்டு வசித்து வந்த வில்ட்ஷைர் நாட்டுப்புறத்தைப் பற்றி நைபால் எழுதிய நீண்ட புத்தகத்தில் நெஞ்சைத் துளைக்கும் இடைச்செருகல் ஒன்றில் இரண்டு பாழடைந்த காட்டேஜ்களை புது வீடாக மாற்றுவது பற்றி எழுதுகிறார். ஒரு நாள், கோடையொன்றை அக்காட்டேஜில் கழித்த கிழவியொருத்தியை அவளது பேரன் காட்டேஜைக் காண்பிப்பதற்காக கூட்டி வருகிறான். நைபாலின் புதுப்பிப்புகளைக் கண்டு குழப்பமுற்று கிழவி தவறான இடத்திற்கு வந்துவிட்டோமோ என்று சந்தேகப்படுகிறார். நைபால் கூச்சத்தால் வெட்கியதால்அங்கு நான் வசிக்காததைப் போல் பாவனை செய்தேன்என்று எழுதுகிறார். ஆனால் இந்த வெட்கத்திற்கான காரணமென்ன? அவரது கட்டிட வேலைகளா அலலது  ஆங்கில நாட்டுப்புறத்தில் அவரது இருப்பேவா? அவர் அங்கு வசிக்கிறார், ஆனால் அங்கு வசித்ததற்காக வெட்கப்படுகிறார்; இங்கிலாண்டில் நைபாலுக்கான வீடு, டிரினிடாடில் திரு. பிஸ்வாசின் வீட்டைப் போல், ஒரு இல்லமாகாத வீடாக இருக்கிறது. அவருக்கான இடம் அவருக்கு இன்னமும் அமையவில்லை.

Source:  Wounder and Wounded, V.S. Naipaul’s Empire, James Wood, The New Yorker, Dec 1 2008 issue : https://www.newyorker.com/magazine/2008/12/01/wounder-and-wounded

  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.