வேற்றிடவேர் படியும் கிரணத்தின் நிறப்பிரிகை

கடந்த பல வருடங்களாக மினஸோடா கவிஞர்கள் அவையின் உறுப்பினராக மாதாந்திர கவிதை வாசிப்புகள், வருடம் இருமுறை நிகழும் மாநில அளவிளான குளிர்கால, கோடை கால பட்டறைகளில் பங்கெடுத்து கவிதைகள் வாசித்து சில தனி நிகழ்ச்சிகளையும் அளித்திருக்கிறேன்.  ஆனால் அமெரிக்க அளவிலான தேசிய நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடிந்தில்லை. இம்முறை அமெரிக்க மாநில கவிஞர் அவைகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த அமெரிக்க தேசிய அள்விளான கூடுகையில் (NFSPS) பங்கேற்க கொலராடோவின் டென்வர் நகருக்கு செல்ல வாய்ப்பு கிட்டியது. பல வாழ்வியல் சிரமங்களுக்கு மத்தியிலும் இரு  குழந்தைகளுடன் என்னையும் பராமரித்து வளர்த்து வரும் என் துணைவியார் கவிதையும் இலக்கியமும் எனக்கு எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை உணர்ந்திருப்பது பெரும் வரம் என்றுதான் சொல்லவேண்டும்.

நண்பர்களின் அன்புக்கட்டளைக்கு இணங்கி அவர்களுடன் சாலைப்பயணமாக காரில் செல்ல முடிவெடுத்து மே 31, வியாழன் அதிகாலை மினியாப்பொளிஸிலிருந்து பயணத்தை துவக்கினோம். நண்பர்களும் கவிஞர்களுமான பீட்டர் ஸ்டைன், மேரி ஸ்மித், ஜிம் எபர்லிங், லிண்டா வைட் ஆகியோருடன் கிளம்பி மினஸோடாவின் புளூ எர்த் நகருக்கு சென்று சக கவிஞரும் மாக்கஸின் காலாண்டிதழின் ஆசிரியருமான மெரிடித் குக்ஐயும் ஏற்றிக்கொண்டோம். சற்று பெரிய உருவிலான ஜிம்மின் இரண்டு சக்கர நடக்கும் வண்டி, உள்ளங்கையிலிருந்து குவிந்து கிளைக்கும் விரல்களைபோல அடிப்பாகம் கொண்ட     மெரிடித்தின் உயரமான உலோக கைத்தடி ஆகியற்றை ஏற்றுவதற்காக பெட்டிகள் அனைத்தையும் மறு வரிசைப்படுத்தி அடுக்கிக் கொண்டு காரை கிளப்பினோம்.
ஜிம் வேதியிலளாராக பணியாற்றி ஓய்வு பெற்ற கவிஞர். அறிவியலாளர்கள் என்பதால் அவருக்கும் எனக்கும் பேச ஏதாவது விஷயமிருக்கும் என்று கருதி இது போன்ற பயணங்களில் என்னையும் அவரையும் அருகே அமரவைத்து விடுவது நண்பர்களின் வழக்கம். இம்முறை நீண்ட பயணம் என்பதாலும் மூத்தவர்கள் என்பதாலும் ஜிம்முக்கும் மெரிடித்துக்கும் நிரந்தரமாக நடு வரிசை இருக்கைகளை அமரக்கொடுத்து மேரியும் லிண்டாவும் காரை செலுத்த நானும் பீட்டரும் பின் வரிசையில் அமர்ந்து கொண்டோம்.

அரட்டையாக ஆரம்பித்த பேச்சு இந்திய கவிஞர்களைப்பற்றி சுற்றி வந்து தமிழ்க் கவிஞர்கள்கள், எழுத்தாளர்கள் பற்றிய உரையாடலாக நிலைபெற்றது. தமிழின் முன்னோடியான எழுத்தாளர்கள் அமெரிக்காவைப்போல பெருவாரியான இதழியல், பதிப்பக வெற்றியின் வழி அறியப்படுபவர்கள் அல்ல என்கிற விஷயம் தமிழ் எழுத்தாளர்களை வேறுபடுத்திக் காட்டுவது. பெரும்பாலோர் வாசிக்கும் பரப்பிலக்கியம் இலக்கிய தகுதிகளுக்கு உரிய செவ்விலக்கியம் என்ற வேறுபாடு அமெரிக்காவில் அநேகமாக இல்லை. ஆனால் தமிழில் அதைப்போன்ற இருமை இருப்பதன் காரணம் என்ன என்ற திசையில் உரையாடல் சென்றது.
சிறிய வாசகர் வட்டம் காரணமாக பதிப்பகத்துறை பெரும் ஆற்றலுடன் இயங்கும்படியான சூழல் அமையாதது என்பதுடன் தமிழ் எழுத்தாளர்கள் என்றுமே பதிப்பக வெற்றியை ஒரு பொருட்டாக எண்ணி அதை நோக்கி பாய்பவர்கள் அல்ல, கவிஞனாக எழுத்தாளனாக இருப்பதையே ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுகொண்ட பராம்பரியத்தை சேர்ந்தவர்கள் என்று பாரதி, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, க.நா.சு, ஜெயகாந்தன், கோணங்கி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா ஆகியோரின் ஆளுமை, வாழ்க்கைப் பயணம் ஆகியவற்றின் மீது அலையாடிச்சென்ற உரையாடல் சமீபத்தில் முன்னெப்போதையும் விட தமிழில் இலக்கியமும் கவிதையும் பெரும் விசையுடன் எழுந்து வருவது பற்றி சென்றது.
பீட்டர் தெரிவு செய்திருந்த ஆங்கில பாடல்களை கேட்டபடி அரட்டையும் கேலியுமாக பயணம் நீண்டது. சாலையை தவிர எல்லாப்பக்கங்களிலும் மக்காச்சோளமும், சாய்பீனும் நிறைந்த தோட்டங்கள், தோட்டங்களாக மாறாத பிரெய்ரி புல்வெளிகள், மேயும் மாடுகள், குதிரைகள் என தோன்றியும் மறைந்தும் மாறிக்கொண்டிருக்கும் நிலப்பரப்புகள் பார்வையை நிறைத்தபடி இருந்தன.    மினஸோட்டாவை கடந்து அயோவா வழி நெப்ராஸ்கா சென்று கொலராடா மாகாணத்துக்குள் நுழையும்போது மாலை மணி ஏழாகிவிட்டிருந்தது. செவ்வாய் கிரகத்தில் இறங்கி விட்டதைப்போல வெற்று நிலமாகவும் மலைக்குன்றுகளின் நிராதரவான வெளியுமாக மாறிவிட்டிருந்த கொலராடோவின் நிலப்பரப்பு வேகமாக எங்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தது.

~oOo~

எட்டு தொகுதிகள் வெளியிட்டிருக்கும் கவிஞரும் ஓவியரும் ஆங்கில ஆசிரியருமான  கேரலின் கேம்பெல் ’படிமங்கள் -கவிதையை இழுத்துச்செல்லும் குதிரைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். ’பல தொகுதி கவிதைகள் எழுதுவதை விடவும்  வாழ்நாளில் ஒரு படிமத்தையாவது உருவாக்கி அளிப்பது மேலானது’ என்ற எஸ்ரா பவுண்டின் மேற்கோளுடன் ஆரம்பித்து -கவிஞன் தான் உத்தேசிக்கும் ஒன்றை ஒளி, ஒலி, தொடுகை, சுவை, மணம் ஆகிய புலன் வழி உணரும் அனுபமாக வாசகனுக்கு  கடத்துவதில் ஒரு படிமத்தின் பணி எத்தகையது என்பதை ’கோடைநாள்’ (மேரி ஆலிவர்) கவிதையில் வரும் வெட்டுக்கிளியை உதாரணமாக்கி விளக்கினார்.
கேத்தி பெர்னியரின் ’தேநீர் கோப்பை’ கவிதையை ஒரு கைதி, குழந்தை, கொலையாளி, பூசாரி, இறக்கும் தறுவாயில் உள்ள நோயாளி, ராணுவீரர் என வேறு வேறு நபர்களின் ஆளுமைகளுக்குள் சென்று அவர்களின் பார்வையில் இருந்து எழுதினால் ஒரே படிமம் வாசகனுக்கு ஏற்படுத்தும் அதிர்வுகள் எவ்வெவ்வாறு வேறுபட்டவையாக ஆக முடியும் என்பதன் சாத்தியங்களை உரையாடிச்சென்றார்.
படிமங்கள் ஏதுமற்று வாழ்த்து அட்டையில் வரும் வரிகளை விடவும் சற்றே பெரிய உருவில் வரும் எண்ணத்துளிகளை கவிதைகள் என்று எப்படி கருதமுடியும்? என்ற கேள்வி அவையில் எழுந்தது. பெரும் கவிதைகளின் சிம்பனி வரிசையில் அவை வாராமல் இருக்கலாம், ஆனால் அவைகளை கவிதைகள் அல்ல என்று எப்படிச்சொல்ல முடியும்? என்று மினஸோடா கவிஞரொருவர் பதிலளித்தார். அப்படியென்றால் ”நல்ல கவிதை” என்பதன் வரையறை என்ன, ஒரு கவிதை நல்ல கவிதையாக தகுதியடைவதற்கு தேவையான அடிப்படைக் கூறுகள் என்னென்ன? என்ற பெரும் கேள்வியை நோக்கி நகர்ந்து வெடித்து சிதற இருந்த விவாதம் நேரமின்மை காரணமாக தலைப்பின் ஒருமைக்குள் மையப்படுத்தப்பட்டு ஏறக்குறைய ஒரு உரை வாசிப்பாக சென்றது.
படிமங்கள் அற்ற ஒற்றையான எளிய நுண்சித்தரிப்புகள் கொண்ட கவிதையைப்போலவே ’சாலையின் குறுக்கே  ஓடிய நாய், கறுப்பு நிறம், சிகப்பு கழுத்துப்பட்டை, மூலையில் திரும்பி, வெள்ளி நிற வண்ணமடித்த வேலியைத் தாண்டி ஓடி, செர்ரி தெருவில், மிஸஸ் முர்ரேயின் வாசலில், திருடனை கடித்தது’ என்பதை போல மிகுந்த வர்ணனைகளுடன் விவரணைகள் சாலப்பெய்து வருபவை பெரும்பாலும் ருசிப்பதில்லையே ஏன்? என்பதும் விவாதிக்கப்பட்டது.
வாசகனுக்குள் ஒரு காட்சியை உண்டாக்க தேவையாக அளவு குறைந்த பட்ச தரவுகள் இருப்பதே நல்லது. மேலதிகமான உபரி தகவல்கள் வாசகனின் கற்பனைக்கு தடங்கலாகி வாசக அனுபவத்தின் தரத்தை குறைப்பதுடன் வெறும் தகவல் பட்டியலாகவும் மாறிவிடும் அபாயம் இருக்கிறது என்றேன். அதை அவர் ஒத்துக்கொண்டு பழைய குளம், தாவிக்குதித்தது தவளை, நீரின் ஒலி (மாட்ஷோ பாஷோ), ஒரு டன் எடையுள்ள கோயில் மணிமேல், மடிந்து நிற்கிறது தூக்கத்தில் அசையாமல், வெளிர் பச்சையில் வண்ணத்துப்பூச்சி (யோசா பூஸன்)’ ஆகிய ஹைக்கூக்கள் முறையே -கேட்டல், பார்த்தல் ஆகிய புலன்கள் வழி வாசகனுக்குள் நுழைந்து என்னவிதமான சிதறல்கள்ளை உண்டாக்குகிறது என்பதை நோக்கி உரையாடலை கொண்டு சென்றார்.
மீன்’ (எலிஸபெத் பிஷப்) ’பெரும் கடற்பறவை’ (ஹோவர்ட் நெமராவ்) ’நடன மங்கை, இளஞ்சிவப்பு நிறத்தில் பம்பரத்தைப்போல சுழலும் தேவதை, மேடையின் குறுக்கே பறந்து சென்றாள், டேண்டலயன் விதையைப்போல’, ’என் பிரியத்தை நீண்ட கழுத்துள்ள பூச்சாடியில் வைத்து இரத்தம் வடியும் பெருவிரலுக்கு மருந்திட்டேன்’, ஆகியவற்றில் தனித்தனியாகவும், கூட்டாகவும், உள்மறைந்தும் நிற்கும் உவம உருவகங்கள் வழி உருப்பெறும் படிமங்களை முன்வைத்து உரை நீண்டது. வாசித்து எழுதும் பயிற்சிக்காக ஜார்ஜ் டயாஸின் ‘நான் எங்கிருந்து வந்தேன்’ என்ற கவிதை தரப்பட்டது. மேலும் நுண்மையான விவாதங்களுக்கு இடமளிக்காவிட்டாலும் கவிதையில் இயங்கும் பொதுவான சில சட்டகங்கள் மீதான பொதுப்படுத்தலாக உரை அமைந்தது.
அடுத்து வந்த ’நிகழ்த்துதலின் கலை’ என்ற தலைப்பிலான சேத்-ன் உரை ”கவிதை வாசிப்பு” என்ற செயலின் பல்வேறு பரிமாணங்களையும் நுண் ஆய்வு செய்வதாக அமைந்தது.
குரலின் மெல்லிய வேறுபாடுகளின் வழி ஒரு கவிதையின் வரி வடிவத்தை ஒலி வடிவில் வடித்தெடுப்பது எவ்வாறு என்பதை  முன்வைத்து -வாசிப்புக்கு முன் குரல் பெட்டியை தளர்த்தி தயாராக்குவது, வாசிப்பின் போது ஒவ்வொரு சொல்லையும் அது என்ன பொருளை தருகிறது என்பதை அறிந்திருக்க வேண்டியதன் அவசியம், சொற்களை தனித்தனியாக பேசாமல், சாதாரண உரையாடலின் தொனியில் இல்லாமல், அழுத்தம் திருத்தமாக புரியும்படி கவிஞன் அக்கவிதையில் உத்தேசித்த சொற்றொடர்களாக தெளிவாகவும் திருத்தமாகவும் உச்சரித்தல் ஆகியவற்றை முன்வைத்து பேசினார்.
கவிஞர் மட்டுமல்லாது நாடக ஆசிரியர், நாடக நடிகர், பாடகர், தாள வாத்திய கலைஞர் ஆகிய தளங்களின் வழியும் இயங்குபவர் என்பதால் கவிதை வாசிப்பதை ஏறக்குறைய ஒரு நிகழ்த்துகலையாகவே அடையாளங்கண்டு கொண்டிருந்தார் சேத். குரலின் தொனி, ஒலியளவு, ஏற்ற இறக்கம், உச்சரிப்பின் வேகம், சொற்களின் நீட்டலளவு, குரலின் நயம், குரலின் உணர்ச்சியளவு ஆகியவைகளை மாற்றுவதன் மூலம் ஒரு கவிதைக்கு அது உத்தேசிக்கும் உணர்ச்சியை வாசிப்பின் வழி எவ்வாறு சேர்க்க முடியும், அதனால் உருவாகும் வாசிப்பின் தரம் எவ்வாறு வேறுபடும் என்பதை உதாரணங்களுடன் நடித்துக்காட்டி, வாசிக்கும் செயலின்போது குரல்- மனம்- உடல் இம்மூன்றும் நேர் கோட்டில் இயங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஒரு கவிதையை வாசிக்கும் போது அதன் சொற்கள் தரும் பொருளை வாசிப்பவர் தன் மனக்கண்ணில் கற்பனை செய்து கொள்வது வாசிப்பின் குரல் வெளிப்பாட்டில் நுட்பமான ஆனால் குறிப்பிடத்தக்க வேறுபாட்டை உண்டாக்கும் என்பதை -எங்கிருந்தோ தொலைபேசியில் அழைக்கும் வாடிக்கையாளர்கள் சொல்வதை கேட்கும்தோறும் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதும் – ஸ்தூல சரீரமாக வாடிக்கையாளர் கண்முன் இல்லை என்றாலும் அவ்வாறு இருப்பதாக எண்ணிக்கொண்டு தொலைபேசியில் தொடர்ந்து புன்னகைத்துக்கொண்டே இருக்க வேண்டியதை பயிற்றுனர்கள் தங்கள் வகுப்புகளில் ஏன் வலியுறுத்துகிறார்கள்? என்பதை சொல்லி விளக்கினார்.
கார்னெல் பல்கலையின் வேதியியல் பேராசிரியரும் (1981 ஆண்டில் நோபல் பெரிசு பெற்றவர்) ’ஆக்சிஜன்’ போன்ற நாடகங்களையும்  ’இடைவெளிகளும் விளிம்புகளும்’ ’உருவற்ற நிலை’  ஆகிய கவிதை தொகுதிகளையும் எழுதியிருப்பவர் பேராசிரியர் ரோல்ட் ஹாப்ஃமன். அவரின் பரிந்துரையுடன் வெளிவந்த ’ஆயிரம் பிணைப்புகள் – மேரி கியூரியும் ரேடியத்தின் கண்டுபிடிப்பும்’ என்ற புகழ்பெற்ற நூலையும் மேலும் இரு சிறுகதை தொகுதிகளையும் எழுதியிருக்கும் ஆங்கிலப்பேராசிரியரும் கவிஞருமான எலனார் ஸ்வான்ஸன் ’பிறிதொரு ஆளுமையின் நோக்கிலிருந்து வாழ்க்கையை எழுதுதல்’ பற்றி உரையாற்றினார்.
தன் இருப்பை முற்றிலுமாக கரைத்துவிட்டு இன்னொரு ஆளுமையாக மாறி  எழுதுதல் என்பதை ‘டிராய் நகரின் ஹெலன் மேசைமீது ஆடுகிறாள்’ (மார்கரட் அர்ட்வூட்), மெடூஸா (பட்ரீஸியா ஸ்மித்), ’ரெனால்ட் தொழிற்சாலையில் சிமோன் வெய்ல்’ (நான்ஸ் வான் வின்கிள்), ’காதலும் இன்னபிற துரதிருஷ்டங்களும்’ (ஃபிலிப் லெவின்) ஆகிய உதாரணங்களை முன்வைத்து, மேரி கியூரியின் ஆளுமைக்குள் தான் சென்று வாழ்ந்து எழுதிய கவிதைகளை சிலதையும் வாசித்தார். அவருடன் மேற்கொண்ட தனி உரையாடலில் டார்வினை முன்வைத்து இதுபோல ஓரிரு கவிதைகளை எழுதியிருப்பதாக சொன்னேன். மேரி கியூரியின் வாழ்க்கை வரலாறு பற்றிய பல நூல்கள், கடிதங்கள், நேர்முகங்கள் ஆகியவற்றை வாசித்து மட்டுமே மேரி கியூரியின் ஆளுமையை எனக்குள் தொகுத்துக்கொண்டேன் மற்றபடி இயற்பியலை பாடமாக படித்ததில்லை. உயிரியலை முறையாக கற்றிருப்பது டார்வினின் ஆளுமையை இன்னும் நுட்பமாக புரிந்துகொள்ள உனக்கு உதவக்கூடும் என்றார்.
கொலாராடோவிலன் ஆங்கில பேராசிரியரும் கவிஞருமான டேவிட் ராத்மன்  ’பெல் டர்ன்பல்: அமெரிக்க கவிஞரின் வாழ்க்கையும் படைப்புகளும்’ என்ற தன்னுடைய சமீபத்தைய நூலை முன்வைத்து கவிஞர் பெல் டர்ன்பல் பற்றி உரையாற்றினார்.   1970 ஆம் ஆண்டு மறைந்த கவிஞரும் பெண்ணியவாதியுமான பெல் தட்டச்சு செய்பவராகவும் பள்ளி ஆசிரியராகவும்  பணியாற்றி பின் முழுநேர எழுத்தாளராகி ’தங்கப்படகு’ ‘மலையின் மறுபுறம்’ ஆகிய நாவல்களையும் ‘பத்து மைல் தூரம்’ ‘மலைப்பாதைகள்’ ஆகிய கவிதை தொகுப்புகளையும் எழுதியவர். கொலராடோ மலைகளில் வாழும் மக்கள் மற்றும் சுரங்க தொழிலாளர்களின் வாழ்க்கையை தன் கவிதைகளிலும் சமகால பத்திரிகைகளிலும் பதிவு செய்தவர். தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை நிகழ்ச்சி நடைபெறும் கொலராடோ மாகாணத்தில் கழித்தவர் என்பதால் சுற்றி வளைத்து பெல்லின் தனி வாழ்க்கையை வட்டமிட்டு சென்ற உரை அவரின் தேர்ந்தெடுத்த சில கவிதைகளையும் வாசிக்கும் நிகழ்வாகி நிறைவடைந்தது.
ஆங்கிலத்துறை பேராசிரியரும், கவிஞருமான ஆரன் அபேத்யா,  கொலராடோ மாகாணத்தில் தன் சொந்த ஊரிலேயே வாழ்ந்து கொண்டு அந்த நகரத்தின் மேயராகவும் பணியாற்றுபவர். சொந்த மண்ணை விட்டு போகாமல் இருப்பது என் கவிதைக்கு மிகவும் அவசியமானது என்பதை சொல்லி ’கவிதையின் நான்கு வீடுகள்’ என்ற தலைப்பில் (”நல்ல?”) கவிதைகளின் பொதுவான அம்சங்களை எவை என்பதை ஆராய்வதான உரையை கவிஞனிடம் கண்ணீர் இல்லையென்றால் வாசகனிடமும் கண்ணீர் இல்லை என்ற ராபர்ட் ஃப்ராஸ்டின் மேற்கோளிலிருந்து ஆரம்பித்தார். கவிதையில் போர் நிகழ்ந்து இரத்தம் சிந்தப்படவேண்டும், (பெரும்பாலும் அது கவிஞனின் இரத்தம்) குறைகளை களைவதிலும், பிரச்சினைகளை தீர்ப்பதிலும் மனிதனுக்கு கடவுளுக்கு நிகரான வல்லமை உண்டு என்பதற்கு கவிதைகள் ஒரு உதாரணம். தன்னை நிர்வாணமாக்கி இருண்ட பக்கங்களை ஆராயும் வழிமுறை நல்ல கவிதைகளுக்கான அச்சாணி என்ற புள்ளிகளை முன்னிறுத்தியபடி உரை விரிந்து சென்றது.
ஒரு பிரச்சினையைப்பற்றி எழுதியே ஆகவேண்டும் என்பதற்காக அதை கவிதையில் கொண்டுவரக்கூடாது என்பதை விவரித்து அவர் சொன்னபோது அவையிலிருந்த பெண்ணியவாதி கவிஞர்களிடையே சலசலப்பு எழுந்தது. அப்படியென்றால் பெண்களுக்கான சம உரிமை போன்ற விஷயங்களை கவிதையில் எழுதக்கூடாதா? என்று ஒருவர் கேள்வியெழுப்ப நான் அப்படிச்சொல்லவில்லை. வறுமை, சமூக ஏற்றத்தாழ்வுகள், அரசியல் பிரச்சினைகளை ஆகியவற்றை கவிதையில் பேசுபொருளாக எடுத்துக்கொள்ளும்போது ஒரு எளிய குடிமகனாக அல்லாமல் ஒரு கவிஞனாக மட்டுமே அவற்றை கையாள வேண்டும். நீங்கள் ஏற்கனவே சட்ட திட்டமாக நன்கறிந்து உறுதியான நிலைப்பாடு எடுத்துவிட்ட ஒரு விஷயத்தைவிடவும் முழுக்கவும் தெரியாத சற்றேனும் மர்மான ஒரு விஷயத்தை பற்றி எழுதுவதையே நான் பரிந்துரைப்பேன் என்பதை அவர் விளக்கி மேலும் கேள்விகளுக்கு பதிலாற்றிச் சொல்லவும் ஏற்கனவே அளிக்கப்பட்ட நேரத்தை விடவும் நீண்டு சென்று விட்டிருந்த அமர்வு நிறைவுக்கு வந்தது.
பிற சொற்பொழிவுகளை ஒப்பிட என் அறிதல்களுடன் இணக்கம் கூடி நிறைவளித்த அனுபவம் என்று அபேத்யாவின் உரையை சொல்லவேண்டும். கவிதைகள் அனைத்தும் மனிதன் எவ்வளவு மகத்தானவன் என்பதையும் எவ்வளவு எளியவன் என்பதையும் ஒரே சமயம் சுட்டி நிற்கும், இரு முரண்களை எடுத்துக்கொண்டு கண்டித்தல், கேள்விக்குள்ளாக்குதல், மறுவரையறுத்தல், ஆகியவற்றின் வழி ஒரு ஆன்மீக விவாதமாக ஆக்க முயலும் என அவர் முன்வைத்த பல விஷயங்கள் ஏற்கனவே எனக்குள் உருவாக்கி வைத்திருந்த தேற்றங்களையும் புரிதல்களையும் சரி பார்த்துக்கொள்ளவும் உறுதிசெய்யவும் உதவியாக இருந்தன.
பதினைந்துக்கும் மேற்பட்ட  தொகுதிகளை வெளியிட்டிருக்கும் கவிஞர் ரோஸ்மெரி ட்ராமர். (துருக்கியின் ஜலாலுதீன்) ரூமியின்‘ கவிதைகளில் ஈடுபாடு கொண்டு ரூமியை மையமாக வைத்து ‘தோட்டத்தில் ரூமி’, ’ரூமி கடற்கரைக்கு செல்கிறார்’ ஆகிய கவிதைகள் அடங்கிய ‘ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதம் – ரூமியுடன் அன்றாட வாழ்வில்’ என்ற தொகுதியையும் எழுதியிருப்பவர். ரூமியின் ’அற்புதமாக காற்று வீசும் நாளில்’ கவிதையை தன் இனிய குரலில் உரக்கப் பாடி அவையினரையும் உடன் பாட வைத்த பிறகு  உருவகங்களின் வழி ’கவிதையை கண்டடைதல்’ என்ற உரையை ஆரம்பித்தார்.
தேனீயைப்போன்ற உன் பழுப்பு நிற விழிகள் நான் மலரைப்போல உண்ர்கிறேன்’ என்ற எளிய ஏறக்குறைய தேய்வழக்கு போன்ற உவமை பொருத்தமான ஒரு இடத்தின் சூழலில் பயன்படுத்தப்படும்போது ’நான்கு வார்த்தை வரிகள்’,  (மே ஸ்வென்ஸன்) கவிதையில் வலுவானதொரு படிமமாக எப்படி உருக்கொள்கிறது என்பதன் மீது உரையாடல் சென்றது. உவமையாக வரும் பொருளும் உவமிக்கப்படும் பொருளும் ’போல’ என்ற உவம உருபால் பிரிக்கப்பட்டு வரும்போது தமிழில் அதை நாம் உருவகம் என்று சொல்வதில்லை. (உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்) -ஆனால் ஆங்கிலத்தில் அதைப்போன்ற கராறான வரையறகள் இல்லாமல் சில சமயங்களில் உவமையையும், உருவகம் என்ற பொருளிலேயே எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையும், தகவல்/ விவரணை ஆகிய பதங்களை படிமம் என்ற பொதுவான பொருளில் சிலர் பயன்படுத்துவதையும் காண முடிந்தது.
’காதல்’ (லோலா ஹஸ்கின்ஸ்), ’ஆக்டோபஸாக இருப்பது’ (கொலேட் வால்கீமா), ’நம்பிக்கை’ (ஜேன் ஹிர்ஷ்ஃபீல்ட்), ’கண்பார்வை’ (ஏ.ஆர்.அமான்ஸ்), ’மழைத்துளிகளுக்கிடையே இருக்கும் கொசு’ (டெடி மாக்கர்), ’சூனியப்புல்’ (லூயிஸ் குளுக்)  ஆகிய கவிதைகளில் வேறுபடும் வர்ணனைகளும் அவற்றில் உருவாகி வரும் வாசக அனுபவமும் விவாதிக்கப்பட்டது.
கவிதையின் விசாரம் என்பது ஆருடம் கூறல், புலம்பல், கேள்வி, விமர்சனம் ஆகிய எதன் வழியும் இயங்கமுடியும் என்பதைப் போலவே ஒரு கவிதையை படம் பிடிக்க பார்வையாளன், பங்கேற்பாளன், கவிதையில் கையாளப்படும் பொருள் ஆகிய ஆடி வரிசைகளுள் கவிஞர் குறிப்பாக எதை தேர்ந்தெடுக்கிறார் என்பது அக்கவிதை உருவாகி வரும் வழிமுறையின் சிறப்பால் மட்டுமே நிகழவேண்டும். சற்றுமுன் எழுதிய கவிதையை விடவும் ஒரு விஷயம் உங்களுக்கு கூடுதலாக தெரிந்திருக்குமென்றால் அந்தக்கவிதையை கொன்று விட்டீர்கள் என்றுதான் அர்த்தம் என சொல்லி அவையை சிரிக்க வைத்து ஒரு கவிதையின் கடைசி வரி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றால் அவ்வரியையும் தாண்டி தொடர்ந்து நீட்டி எழுதிச்செல்வதே அதை நிறைவு செய்ய சிறந்த வழி என்பதையும் முன்வைத்தார்.

~oOo~

பங்கேற்பவர்கள் தங்கள் கவிதையை வாசிக்கும் ‘திறந்த ஒலிபெருக்கி’  அன்றாடமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அது தவிரவும் பங்கேற்பாளர்கள் சிறு குழுக்களாக அவர்களின் அறைகளில் ஒருங்கிணைக்கும் கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகளும் உண்டு. இந்த முழு நிகழ்வையும் ஒருங்கிணைத்து நடத்தும் தலைவர் ஜூலி கம்மின்ஸ் தன்  பிரம்மாண்டமான (பிரஸிடென்சியல் ஸ்யூட்) அறையில் நிகழும் வாசிப்பிற்கு தனிப்பட்ட அழைப்பின் பேரில் நானும் மினஸோடா நண்பர்களும் சென்றோம். இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து ஒவ்வொருவரும் கவிதைகளை வட்டமாக சுழன்று வாசிக்க நடு இரவை தாண்டியும் நீடித்துச் செல்லும் நிகழ்வு அது.
முதல் நாளன்று நிகழ்வின் சாட்சியமாக வெறும் பார்வையாளனாக அமர்ந்திருந்தில் தைரியம் வரப்பெற்று இரண்டாம் நாள் மீண்டும் அழைக்கப்பெற்றதால் கைப்பேசியில் தரவிறக்கிய சில கவிதைகளுடன் சென்றேன். ஒவ்வொருவராக பெயர், ஊர் சொல்லி சுய அறிமுகம் செய்து கொண்டு தான் அந்த அறைக்குள் வந்து சேர்ந்த கதையையும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்பது நிபந்தனை.
மினஸோடாவிலிருந்து சுமார் ஆயிரம் மைல்கள் (13 மணி நேரம்) மேற்கொண்ட கார் பயணம் பற்றி சக கவிஞர் ஒருவர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பவும், பென்ஸில்வேனிய கவிஞர் ஒருவர் தான் ஆயிரத்து எழுநூறு மைல்கள் (26 மணிநேரம்) காரில் பயணித்து வந்ததை சொல்லி அவையை பிரம்மிக்க வைத்த பிறகு என் முறை வந்தது.    பூமியின் மறுபக்கத்தில் இருக்கும் இந்தியாவிலிருந்து சுமார் 11,200 மைல்கள் பயணம் செய்து வருகிறேன், இந்த அறையின் தரையை துளையிட்டு மறுபுறம் செல்ல முடியுமென்றால் என் ஊர் வந்துவிடும் என்று நான் சொல்ல, அதனால் தான் இங்கு வந்துசேர பத்து வருடமாகியது என்று பீட்டர் சொல்லவும் சிரிப்பொலி எழுந்தது. ’ஒரு புத்கத்தின் மரணம் (அல்லது) கவிதையை கொலை செய்வது எப்படி’ ‘அழுகையின் விதிமுறைகள்’, ’ஒரு கரும் பறவையும் என்றென்றைக்குமாக வாழும் கலையும்’, ’சாராவின் ஆவி’, ‘இருத்தலின் இன்பம்’, ‘தங்கமீனின் உளவியல்’, ஆகிய கவிதைகளை வாசித்தேன்.
இந்த கூடுகையில் பங்கெடுக்க பதிவு செய்துள்ள சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கவிஞர்களுள் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாதவன் நான் மட்டுமே. என்பதால் தாய்மொழி அல்லாத அயல் மொழியான ஆங்கிலத்தில் எழுதுவது எனக்கு எவ்வாறு சாத்தியமாகிறது நான் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்று கேட்கப்பட்டது.
நான் இன்று வாசித்தவற்றுள் பாதிக்கும் மேற்பட்டவை தமிழில் எழுதி ஆங்கிலத்தில்  மொழியாக்கம் செய்யப்பட்டவை. நவீன தமிழ்க்கவிதையும் நவீன ஆங்கிலக்கவிதையும் வேறு வேறு அல்ல என்று நான் சொன்ன விஷயம் ஆச்சரியக்குறியாகி அவை நடுவே நெடுநேரம் நின்றது.
வால்டோ எமர்சன்,  வால்ட் விட்மனில் ஆரம்பித்து எட்கர் ஆலன்போ,  வைஸ்டன் ஹியூ ஆடன், எஸ்ரா பவுண்ட், தாமஸ் ஸ்டர்ன்ஸ் எலியட், ராபர்ட் ப்ராஸ்ட், எமிலி டிக்கின்ஸன் வழி வளர்ந்து ஸில்வியா ப்ளாத், லாங்ஸ்டன் ஹ்யூஸ், ஆலன் கின்ஸ்பெர்க், வழியாக  மேரி ஆலிவர், பில்லி காலின்ஸ் டிரேஸி ஸ்மித் வரை வந்துள்ள நவீன சமகால அமெரிக்க கவிதையின் ஒழுக்கு அமெரிக்காவுக்கும் ஆங்கில மொழிக்கு மட்டுமே உரியது என்பதே பெரும்பாலோரின் பரவலான மனப்பதிவாக இருந்தது, என்பது ஆச்சரியமான விஷயமல்ல.
ஆங்கில நவீன கவிதை, உலகின் வேறொரு மூலையில் தூரமானதொரு வேற்று மொழிக்குச் சென்று சமகால ஆங்கிலக்கவிதையின் மைய நீரோட்டத்திற்கு இணையாக வளர்ந்திருப்பது ஆச்சரியமான விஷயமல்ல என்பதை ஒட்டி என் உரையாடல் சென்றது.  நவீனக்கவிதை ஆங்கிலத்தின் தோன்றுவற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நவீனக்கவிதைக்கு இணையானவை என்று சொல்லத்தக்க அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை ஆகிய தொகை நூல்கள் தமிழில் உண்டு என்ற தகவல் இன்னொரு ஆச்சரியமாக எதிர்கொள்ளப்பட்டது. மேலும் முன்னெப்போதையும் விட உலகமொழிகள் அனைத்துக்கும் இடையேயான ஒருமைகள் மிகப்பல என்பது நிரூபணமாகி வருவதையும் உலக மொழிகளுக்கிடையே உள்ள அடிப்படையான பொதுமைகளும் அவை உருவாகி வந்த பாதைக்கும் உயிரியல் ரீதியான அடிப்படையான எளிய காரணங்கள் உண்டு என்பதை பெர்டெஸ்க்கினா, கிறிஸ்டியன்ஸன் ஆகியோரின் சமீபத்தைய ஆரய்ச்சியை மேற்கோள் காட்டி கோட்டுருவமாக சுருக்கமாக சொன்னேன்.
இன்னொரு முக்கியமான விஷயம்: உலகத்திலேயே கவிதைகள் பற்றிய மிகவும் கறாறான வரையறைகளும் மதிப்பீடுகளும் இருக்கும் இடங்களுள் முதன்மையானது எது என்று எனக்கு தெரியாது. ஆனால் அதைப்போன்ற இடங்களை கணக்கெடுத்து தர வரிசைப்படி பட்டியலிட்டால் அதில் குறைந்தபட்டம் இரண்டாவதாகவாவது தமிழ்நாட்டின் பெயர் நிச்சயம் வரும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். தரக்குறைவான ஒரு கவிதையையோ படைப்பையோ எழுதிவிட்டு தமிழ்நாட்டில் ஒருவர் அவ்வளவு எளிதில் தப்பிச்சென்றுவிட முடியாது. அதைப்போன்ற பொறுப்பற்ற ஒரு ஆசாமிக்கு ஆபத்து எங்கிருந்து எப்பொழுது எந்த வடிவில் வரும் என்பதை யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்பதும், என்று நான் சொன்னதும் அறையில் எழுந்த சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆனது.

மாதிரிக்காக என்னுடையது அல்லாத இன்னும் இரண்டு தமிழ்க்கவிதைகளையும் வாசிக்கவா என்று கேட்க அவை ஆரவாரத்துடன் வரவேற்றது. நான் மொழிபெயர்த்து வாசித்த மனுஷ்யபுத்திரனின் ’கால்களின் ஆல்பம்’, மற்றும் ’சாரதா’ ஆகிய கவிதைகள் பெரிதும் ரசிக்கப்பட்டன.
சும்மா தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்,  அப்படியென்றால் சாரதா என்பது உண்மையில் யார்? கவிஞரின் காதலியா? என்று ஒரு பெண் கவிஞர் கேட்கவும் ’அம்மா, இந்த கவிதையே அதைப்பற்றி இருக்கையில் அதை நான் எப்படி உறுதியாக சொல்ல முடியும்? வேண்டுமானால் அடுத்தமுறை கவிஞரை சந்திக்கும்போது அவரிடமே நேரடியாக கேட்டுப்பார்க்கிறேன் என்று சொல்லவும் மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.
பெரிய கூடத்தை நிறைத்துகொண்டு இருபத்தைந்து நபர்களுடன் தொடங்கிய வாசிப்பு ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் ஒவ்வொருவராக தூங்கச்செல்ல  இறுதியில் சிலர் மட்டுமே எஞ்சி மிகச் சிலருக்கிடையான தனிப்பட்ட உரையாடலாக ஆகிவிட்டிருந்தது. இறுதியில் அப்படி எஞ்சியவர்களுள் ஃபில் பீச்(கொலராடோ), ஸ்டீவன் கான்ஸர்ட்(பென்சில்வேனியா), ஷெர்லி பிளாக்வெல் (நியூ மெக்ஸிகோ) மற்றும் ஒரு கையில் நோட்டுப் புத்தகத்தோடும் இன்னொரு கையில் எழுதுகோலோடும் தன் பெயரை அறிவிக்க முடியாதபடிக்கு களைப்பில் தூங்கிவிட்டிருந்த ஒரு முதிய கவிஞர் ஆகியோருடன் நானும் ஐவராகி தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தோம். உலகின் பல மூலையையும் சார்ந்த அதுவரை அறிமுகமில்லாதவர்களை நெருங்கிய நண்பர்களைப்போல அந்த அறைக்குள் கவிதை  கட்டிப்போட்டிருந்தது. அதுவரை இடைவிடாது வாசிக்கப்பட கவிதைகள் ஏற்படுத்திய தாக்கத்தின் நிலைக்குலைவுடன் ஐந்து பேர் என்ற சிறு குழு என்பதாலும் ஏறக்குறைய நடு இரவை எட்டியிருந்த அறையுள் நிலவிய கடும் நிசப்பத்தினாலும் முழுகவனமும் கவிதையில் குவிந்துவிட கேலியும் கிண்டலும் இல்லாமலாகி உணர்வெழுச்சியும் நெகிழ்சியும் நிறைந்தாக வாசிப்பு மாறியிருந்தது. ‘என் மூச்சை பிடித்திருந்தேன்’ என்ற நீண்ட கவிதையை ஃபில் பீச் தன் நினைவிலிருந்து மழையைபோல உரத்த குரலில் பாராயணமாக பொழிந்ததை கேட்டது வாழ்நாளின் மறக்க முடியாத அனுபவம்.
வழக்கமான தொழில் முறையிலான அரங்குகளைப்போல கோட்டும் டையும்  அணிய தேவையில்லாமல், உரையாற்றுவதற்காக கலைச்சொற்களின் வரிசையை நினைவுகூர்ந்து  குறிப்புகளை சரிபார்க்க அவசியமில்லாமல் கவிதைக்கு மட்டுமேயான ஒரு நிகழ்வுக்காக எளிய ஆடைகளுடன் விடுமுறை மனநிலையுடன் விடுதியில் தங்கியிருந்தது ஒரு இனிய அனுபவமாக இருந்தது. நீண்ட கார்ப்பயணம், அதற்காக வழக்கத்தை விட முன்னதாக எழுந்து கொண்டது, பயணத்தின் கடைசி முந்நூறு மைல்களுக்கு காரை ஓட்டிக்கொண்டு சென்றது, தனி வாசிப்புகளுக்கு சென்று இரு நாள்களும் வழக்கத்தை விட தாமதமாக உறங்கியது என உடல் மிகவும் களைப்படைந்திருந்தது.  மதிய உணவுக்குப்பிறகு கவனிக்க முடியாதபடி தூக்கம் கண்களை அழுத்தியதால் ஓய்வெடுக்க அறைக்கு சென்றாக வேண்டிய கட்டாயத்தில் சில அமர்வுகளுக்கு செல்ல முடியவில்லை.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கொலராடோ மகாணத்தின் அரசவைக்கவிஞரான ஜோசப் ஹட்சின்சனின் உரை இடம் பெற்றது. பேராசிரியராகவும் டென்வர் பல்கலையில் ஒரு துறையின் இயக்குனராகவும் பணியாற்றும் ஜோசப் பதினைந்துக்கும் மேற்பட்ட தொகுதிகள், நூல்கள் வெளியிட்டவர்.
கவிதை வாசிப்பவர்களின் எண்ணிக்கை  மிகவும் சிறியது என்பதுடன்
கவிதை வாசிப்பவர்கள் அனைவரும் கவிஞர்கள் மட்டுமே என்பதால் கவிஞர்களின் உலகம் மிகவும் சிறியது. அரசவைக்கவிஞர் என்ற பதவியின் மூலம் நான் என்ன செய்ய முடியும்? இந்த அமெரிக்க தேசம் என்னைப் போன்ற ஒருவனிடமிருந்து எதை எதிர்பார்க்கிறது? என்னால் இந்த நாட்டுக்கு என்ன பயன்? ஒரு வேளை கொலராடோ சட்டசபையின் ஒவ்வொரு கூட்டத்தையும் ஒரு கவிதையை வாசித்து ஆரம்பித்து வைக்க என்னால் இயலும். ஆனால் அதைப்போன்ற ஒரு இடத்தில் தான் நான் இதுவரைக்கும்  அழைக்கப்பட்டதே இல்லையே! என்று அவையை சிரிக்க வைத்து, நான் சொன்னது முற்றிலும் உண்மை சற்றும் பொய்யில்லை என்று நேர்மையான வருந்தும் குரலில் சொல்லி அவையை மீண்டும் சிரிக்க வைத்தார். மற்றபடி, இளைஞர்கள் கவிதை வாசிப்பதில்லை, கவி அரங்கங்களுக்கு வருவதில்லை, உள்ளூர் அரசு கவிஞர்களை எழுத்தாளர்களை மதிப்பதில்லை, நலிந்த ஓய்வு பெற்ற கவிஞர்களை ஆதரிக்கும் பொருளுதவியுடன் கூடிய ஆதரவு போதுமான அளவில் இல்லை, பள்ளிகளில் மாணவர்களுக்கு கவிதை கற்றுத்தர தகுதியான ஆசிரியர்கள் போதுமானபடி இல்லை என்பது போன்ற அவர் முன்வைத்த பல பிராதுகள் தமிழ் நாட்டின் சூழலுக்கும் பொதுவானவைதான்.
அவரின் கவிஞ நண்பர்கள் அனைவரும் நன்றாக இல்லை நீக்கிவிடு என்றதன் காரணமாக வேண்டுமென்றே விடாப்பிடியாக தொகுதியிலிருந்து நீக்காமல் விட்ட அவரின் ‘முதல் ஒளியின் முதல் பறவை’, ’கடிகாரம்’, அவையினரின் வேண்டுதலுக்கு இணங்க ’காமத்திலாழ்த்துதல்’, மற்றும் தன் மனைவியை முதலில் சந்தித்தபோது அவரை காதல் வயப்படச்செய்த ‘நகரின் எல்லைகள்’ ஆகியவற்றையும் ‘ஜூன் காலையில்’ ’புல்’ (கார்ல் சாண்ட்பர்ஹ்), ,  ஈஸா என்ற மெக்ஸிகோ கவிஞரின் பெயரற்ற ஒரு கவிதை,   அவரின் மாணவர்கள் சிலரின் கவிதைகள் என தொடர்ந்து வாசித்தபடி சென்றார்.
தேநீர் இடைவேளியின் போது கவிஞரும் நாவலாசிரியருமான டான் கவஹாரவை திரும்பவும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தன் பெற்றோர்களைப்போலவே இந்தியாவில் பிறந்து தேராதூனில் பள்ளி சென்ற, பிறப்பால் பிரிட்டிஷ் இந்தியாவின் பிரஜையான டான் இருபது வருடங்களுக்கு முன் தேராதூனுக்கு திரும்பி வந்து, 1948 மார்ச் மாதம் முதல் எந்த தடயமும் இல்லாமல் காணாமல் போன தன் தந்தையையும், இந்தியாவில் தன்னுடைய இளமைப்பருவத்தையும்  மையமாக வைத்து பிரகாசமான சூரிய ஒளியில் பெய்யும் மழை எனப் பொருள்படும் ’நரிக்கல்யாணம்’ என்ற நூலை எழுதியிருப்பவர்.
டானுடன் பேசிமுடித்ததும் அதுவரை எல்லாவற்றையும் புன்னகையுடன் கேட்டுக்கொண்டு அமைதியாக அவருடன் இருந்த ஒரு பெண்மணி தன்னை அறிமுகப்படுத்திகொண்டு எண்பதுகளில் தமிழ்நாட்டுக்கு வந்து திருச்சி தண்ணீர்மலை ஆஸ்ரமத்தில் பீட் கிரிஃபித்தை சந்தித்தையும் அதற்காக மும்பையிலிருந்து தமிழ்நாட்டுக்கு மேற்கொண்ட ரயில் பயணம் பற்றியும் சொல்லியபின் சாந்திவனம் பற்றி உனக்கு தெரியுமா? என்றும் கேட்டு வைத்தார். அவரின் பெயரை பிறகு தேடிப்பார்த்த போதுதான் தெரிய வந்தது அந்த அம்மையாரின் பெயர் அனிதா கில்பர்ட், பல தொகுப்புகள் வெளியிட்டுள்ள கொலராடோவின் புகழ் பெற்ற கவிஞர் என்பது.  அமர்வுகள் முடிந்தபின் மினஸோடா நண்பர்கள் அனைவரும் சந்தித்து நிகழ்வில் சந்தித்த இன்னும் சில கவிஞர்களுடன் நெடுநேரம் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு பிரியாவிடை பெற்றுக்கொண்டு தூங்கச்சென்றோம்.
ஊர் திரும்புவதற்காக மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு காரில் ஏறி கொஞ்சநேரத்தில் அனைவரும் உறங்கிவிட லிண்டா வழிகாட்டியாக நான் காரை செலுத்திக்கொண்டு வந்தேன். கூடுகையின் மூன்று நாள் அனுபவங்கள் விவாதங்கள் ஆகியவற்றை பற்றி நீண்டு சென்ற உரையாடல் என்னைப்பற்றியும் என் மனைவி குழந்தைகள், தமிழ்நாடு ஆகியவை பற்றி நீண்டது.
எங்கள் ஊரில் இப்படிச்சொல்வோம் என்று எப்போதும் நீ இந்தியாவை பற்றியே  இன்னமும் சொல்லிக்கொண்டிருகிறாய். நீ இன்னமும் தமிழில் எழுதுகிறாயா? நவீன ஆங்கில கவிதைக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பிருக்கிறதா? என்று கேட்டு வைத்தார் லிண்டா.  ஜூலியின் அறையில் நடந்த வாசிப்புக்கு லிண்டா அன்று வரவில்லை என்பதும் எனக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
நவீனக்கவிதைக்கும் ஹைக்கூவுக்கும் அருகே வரும் தமிழ்க்கவிதையான திருக்குறளை 1886 ஆம் ஆண்டிலேயே ஜார்ஞ் யுக்லவ் போப் ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தது, மில்டனின் பேரடைஸ் லாஸ்ட்டின் மூன்றாம் புத்தகம் 1895 ஆம் ஆண்டில் விருத்தம் எனும் பாவடிவில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கில முன்னுரையுடன் வெளிவந்தது (முன்னுள்ள இரண்டு புத்தகங்களும் தனக்கு முன்பாகவே அம்மானை வடிவத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டதாக முன்னுரையில் இதன் ஆசிரியரான, சுப்பிரமணிய முதலியார் எழுதுகிறார்), தோரோ, எமர்ஸன், வால்ட் விட்மன் ஆகியோரை பாரதி தமிழிக்கு அறிமுகப்படுத்தி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டது என ஆரம்பித்து எஸ்ரா பவுண்ட், டி.எஸ் எலியட் ஆகியோரின் கட்டுரைகளை கா.நா.சு தமிழுக்கு அறிமுகப்படுத்தியது வரை ஒரு எளிய கோட்டுச்சித்திரமாக சொல்லி முடித்தேன்.
சாலையிலிருந்து பார்வையை விலக்காமல் காரை செலுத்திக்கொண்டே பேசிக்கொண்டிருந்துவிட்டு எதிர்வினை ஏதும் வராததால் வலப்புறம் திரும்பி பார்த்தபோதுதான் தெரிந்தது. பக்கத்து இருக்கையில் லிண்டா நன்றாக உறங்கி விட்டிருந்தார் என்பது. காரில் என்னைத்தவிர அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் கார் எஞ்சினின் மெல்லிய உறுமலைத் தவிர பூரண அமைதி.
பிரெய்ரி புல்வெளியின் பிரம்மாண்டம் காலை கதிரின் ஒளியில் கொலராடோவின் குன்றுகளின் சிறிய வரிசையை கடந்து நான்கு திசைகளிலும் துலங்கி வந்து கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை புல்வெளியைத் தவிர வேறெதுவும் இல்லை. பசுமையின் ஏற்றத்தாழ்வுகளைத்தவிர வேறெதுவும் இல்லாத அழகில் வார்த்தைகள் அற்றுப்போய், ஆயிரக்கணக்கன புற்களில் நானும் ஒரு சிறு புல்லாக மாறி வான் நோக்கி தரையில் நிற்பதைப்போன்ற பிரமையில் மனம் வெறுமையாகி அசைவின்றி நின்றது. மறுகணம் வானுக்கு கீழே மிகப்பிரம்மாண்டமான ஒற்றை புல்வெளியைத்தவிர வேறெதுவும் இல்லாத சற்றும் அறிமுகமற்ற வேறொரு கிரகத்துக்குள் நான் மட்டும் தனிமையில் சென்று சேர்ந்து விட்டதைப்போன்ற பெரும் தனிமை என்னை சூழ்ந்து கொண்டது.
பிரெய்ரியின் புற்களையும் செடிகளையும் தாண்டி கார் விரைந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய குளமும் அதைச்சுற்றி குதிரை கோதுமை என்றழைக்கபடும் எரியோகோணம் என்ற பூச்செடி மண்டிய புதர்களானான புல் வெளி ஒன்று நெருங்கி வந்தது. எரியோகோணம் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் தேனீக்களுக்கும் விருப்பமான தாவரம். ஆனால் அந்தக்காலையில் அந்தப் புல்வெளி முழுக்கவும் வண்ணத்துப்பூச்சிகள் அற்றுப்போய வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு வேளை அதிகாலை என்பதால் வண்ணத்துப்பூச்சிகள் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை போலும் என நினைத்துக்கொண்டேன்.
தன் வாழிடத்திலிருந்து பிடுங்கப்பட்டு வேறிடத்தில் நடப்படும்போதும், வெள்ளத்தால், புயலால், காயங்களால் பாதிக்கப்படும்போதும் தங்களை வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள தாவரங்கள் பல உபாயங்களை மேற்கொள்ளுகின்றன. வேர்கள் அல்லாத வேறு இடத்திலும் வேற்றிட வேர்களை உண்டாக்கிக்கொள்வது அவற்றுள் முக்கியமானது. எரியோகோணம் வேற்றிடவேர்களை உண்டாக்கிக்கொள்ளும் தாவரம். பிரெய்ரியில் முளைக்கும் பெரும்பாலான தாவரங்களும் வேற்றிட வேர்களை உண்டாக்கி கொள்ளும் ஆற்றல் கொண்டவை. பல தானியப்பயிர்கள், ஏன் நெல் பயிர் கூட வேற்றிட வேர்களை உண்டாக்கிக்கொள்ளும் தாவரம் தான்.
கொலாராடோவின் எல்லையை கடக்கும் முன் நன்கு விடிந்து விட காரில் அனைவரும் எழுந்து விட்டிருந்தனர். கேலியும் கிண்டலும் பாடலும் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்திருந்தன. கார் ஓட்டும் பணியிலிருந்து என்னை விடுவிப்பதற்காக பீட்டரும் மேரியும் முன்வர ஒரு சிற்றுண்டி சாலையை கண்டுபிடித்து காரை நிறுத்தினேன். சிற்றுண்டியை முடித்துக்கொண்டு பின் இருக்கைக்கு நானும் லிண்டாவும் மாறிக்கொள்ள கார் கொலராடோ எல்லையை தாண்டி நெப்ராஸ்காவை நோக்கி ஓடத்தொடங்கியது.
கண்களை அழுத்திக்கொண்டு வந்த உறக்கத்தை தள்ளிப்போட முயன்றவனாய் கூடுகையில் சந்தித்த கவிஞர்களை ஒவ்வொருவராக நினைவு படுத்தி அவர்களின் முகங்களையும் பெயர்களையும் தொடர்பு படுத்தி இணைத்து அடையாளப்படுத்த முயன்றேன். களைப்பில் கவிஞர்களின் முகங்கள் பெயர்கள், அனைத்தும் ஒரே போல காட்சியளித்து,  பல குரல்களின் வழி கவிதை ஒலிக்க ஆரம்பித்து பின் பல தனிப்பட்ட குரல்களும் மெதுவாக ஒன்றாக கலந்து சீராக ஒரே குரலாகி பிரம்மாண்டமான ஒற்றைக் குரலில் அசரீரியைப்போல ஒலிப்பது போன்ற பிரமை விரிந்தது.
தூக்க கலக்கத்தின் குழப்பத்தில் கவிஞனுக்கு நூறாயிரம் முகங்கள், பல்லாயிரம் பெயர்கள், ஆயிரம் பாஷைகள், நூறாயிரம் வரிகள் ஆனால் அவன் ஆன்மா ஒன்றுதான் போலும் என்று எண்ணிக்கொண்டேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.