வாசகர் மறுவினை

அஸ்வத் எழுதிய தொல்வெளியிலிருந்து தொடரும் இசை குறித்து


இசை பற்றி எனக்குத் தெரிந்தது பாமரருக்குத் தெரிந்ததை விடவும் குறைவு. இதைப் பெருமையாகச் சொல்லவில்லை. வெறும் சினிமாப் பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த ஆள் நான். வீட்டில் பிறர் கர்நாடக சங்கீதம் நிறைய கேட்ட போது அது வயசானவர்கள் இசை என்று போயிருந்திருக்கிறேன். தெலுங்கு என்பதால் சொற்கள் புரியாமலும் விலகி இருக்கலாம். மதுரை சோமுவை என் மாமா டேப் ரிகார்டரில் போட்டுக் கொண்டு கேட்ட போது முதல் தடவையாக அதில் விழுந்து பிரமித்து நின்றேன். 1964-65 என்று நினைவு- நாட்டக்குறிஞ்சியிலே முருகா என்று ஒரு பாட்டுப் பாடுவார். அதைப் பின்னாளில் நான் வேறெங்கும் கேட்டதில்லை. அதைக் கொஞ்சநாட்கள் பாடிக் கொண்டு திரிந்தேன். (டேப் ரிகார்டர் ஒரு ஸ்பூல் ரிகார்டர். திடீரென்று டேப் அறுந்து விடும் அதை ஒட்ட வைத்து திருகல், கோணல் இல்லாமல் thread செய்து மறுபடி பாட வைக்க வேண்டி வரும். இதோடு கொஞ்ச காலம் பாடாகப் பட்டு விட்டு அதை என் மாமா விற்று விட்டார் என்று நம்புகிறேன்.) ஆனால் அதுதான் நான் கேட்ட பதிவான இசையில் சிறப்பானதாக இருந்த ஒன்று.
பிறகு படிப்படியாக முன்னேறி பல கச்சேரிகளுக்குப் போயிருக்கிறேன். இந்துஸ்தானியில்தான் அதிகம் பரிச்சயம் ஏற்பட்டது. இன்றும் அதில்தான் அதிகம் கேட்டிருக்கிறேன். சமீப காலங்களில் டிசம்பர் ஜனவரியில் சென்னையில் இருப்பதால் கச்சேரிகளுக்குப் போகிற பழக்கம் ஏற்பட்டது. ஜன ரஞ்சகமாகப் பாடுவோரை விட, தனக்காகப் பாடுவது போலத் தோன்றும் சிலரையே எனக்கும் என் மனைவிக்கும் பிடிக்கிறது. ஆனால் இருவருக்கும் ராகங்களை அடையாளம் காண்பது கூடத் தெரியாது. அவள் என்னை விடப் பல படி மேல், சிலவற்றைக் கண்டு பிடிப்பாள்.
இதை ஏன் சொன்னேன் என்றால், இந்தக் கட்டுரையின் மையத்தில் இருக்கும் இசை என்ற கருதுபொருள் பற்றிச் சொல்ல எனக்கு எதுவும் தெரியாது. அதனால் நான் பிறவற்றைப் பற்றித்தான் பேச முடியும் என்று சொல்வது நோக்கம்.
ஆடிஸம் என்பதை நோய் என்றோ, வளர்ச்சிப் பிரச்சினை என்றோ நான் ஒதுக்கவில்லை. அது ஒரு ஸ்பெக்ட்ரம் என்பது எனக்குத் தெரிந்திருக்கிறது. அதில் செயலற்ற நிலையில் இருக்கும் சிறார்/ வளர்ந்தவரில் துவங்கி மிக்க செயல்திறனோடு ஆனால் சமூக உறவுகளில் அதிகத் திறனில்லாது இயங்கும் நிலையில் இருப்பவர் வரை பல வகைகள் உண்டு.
ஒரு விதத்தில் பார்த்தால் அனேகமாக எல்லா மனிதர்களையும் இந்த ஸ்பெக்ட்ரத்தில் பொருத்திப் பார்க்கலாம் என்றே என் யோசனை. அதாவது ‘நார்மல்’ என்பது கிட்டத்தட்ட அடைய முடியாத ஒரு நிலை. நார்மல் என்பதே ஒரு நேர்கோட்டில் மனிதரைப் பொருத்தும் முயற்சியின் விளைவு. அது scattered data points நடுவே பல வகை விரிவளிப்புகளைப் பொருத்திப் பார்த்து, பெரும் திரளுக்கு ஏற்றது என்று காணப்பட்ட ஒரு distribution பாணியைப் பீடம் ஏற்றிய சிந்தனை- அறிவியல் ரீதியாகச் சொன்னால்.
அதில் பொருந்தாத பல வகைப் பரவல் பாணிகளைப் புள்ளியியல் பயன்படுத்துகிறது. இவை அனைத்தும் சிதறிய தகவல் புள்ளிகள் நடுவே ஒரு பாணியைக் காணும் மனித இயல்பை ஏற்கும், அதன் மூலம் செயல்திறன் பெற முயலும் வேலை.
Binomial, logarithmic, bi-modal, Geometric, Exponential, Poisson என்று பல உண்டு. நூற்றுக் கணக்கில் இருப்பதாக ஒரு புள்ளியியல் தளம் சொல்கிறது. ஆனால் 15 தான் நிறையப் பயன்படுவன. அவற்றுக்கெல்லாம் அரசு போல அமர்ந்திருப்பது ‘நார்மல்’ பரவல். (Common Probability Distributions: The Data Scientist’s Crib Sheet – Cloudera Engineering Blog)
ஆனால் சமீப காலங்களில் எது ‘நார்மல்’ என்பதே பெரிய கேள்வியாகி இருக்கிறது. எப்படி இலக்கியத்தில் எது செவ்வியல் என்பதே கேள்விக்குட்படுத்தப்பட்டு, அது ஆதிக்க சக்திகளின் சுவடு/ அடையாளம்/ நசுக்கல் வெளிப்பாடு என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு, classical, canon, central என்ற சொற்களே இன்று ரத்தக்கறை படிந்த சொற்களாகக் கருதப்படுகின்றன. அதனால் marginal, aborigine, decentered, edge போன்றனவற்றில்தான் உண்மை இருக்கிறது, அவைதான் நிஜ வரலாறு, நிஜப் பண்பாடு, நிஜச் சிந்தனை, நிஜ ஒழுக்கம் என்றே கூட வாதிடும் பிராக்யர்கள் எங்கும் நிலவுகிறார்கள். இவர்களே எதார்த்தம் என்பது ஒரு பரவல், அதில் நார்மல் என்று எதுவும் கிடையாது என்றும் சொல்வார்கள். இந்த வகைச் சிந்தனையின் ஒரு சாரி/ அணிவகுப்புதான் தத்துவ/ வரலாற்றியல்/ அழகியல் வாதப் பிரதிவாதங்களில் கட்டுடைப்பு என்று சில பத்தாண்டுகளாக பெரும் ஆர்ப்பரிப்புடன் உலவி வருகிறது.
மையம் என்று ஒன்று இருந்தால்தான் விளிம்பு என்று ஒன்றை இனம் காட்ட முடியும். பெரும்பான்மை என்று ஒன்று இருப்பதாகக் காட்டினால்தான் சிறுபான்மை என்று இன்னொன்றைச் சொல்ல முடியும். சமூகம் என்று ஒன்றைக் காட்டினால்தான், புறமொதுக்கப்பட்டவர்கள் என்று அடையாளம் காட்டப்படுவதற்குப் பொருள் கிட்டும். ஏற்கப்பட்ட ஒழுக்கம், நியதி என்றெல்லாம் சில இருந்தால்தான் தகாதது, உதவாதது, விலக்கப்பட வேண்டியது என்று சில உருவாகும். ராவணனே நீதிமான் என்று சொல்லத் துவங்கினால், பின் பெண்டிரைத் தலைமுடியைப் பற்றி இழுத்துப் போய் சிறை வைத்துத் தன் விருப்பத்துக்கு இணங்க வைக்கும் ஆண் தான் சிறந்தவன் என்று ஒருவர் சொல்வதாகத்தான் நாம் புரிந்து கொள்ள முடியும். இல்லை ராவணனுக்குத் தனியாக இன்னொரு புனைவை எழுதி அவன் செம்மான், மற்ற நாடோடிதான் அற்பன், பயங்கரவாதி என்று புனைவு எழுத வேண்டி வரும். அப்படி எழுதினால், அப்போதும் வெற்றி பெறுவது விளிம்பு இல்லை, சிறுபான்மை இல்லை. ஏனெனில் அங்கும் செம்மை, நன்னடத்தை, மாண்பு போன்ற சில பழைய, மிகப் பழைய ஒழுக்கக் கோட்பாடுகளே ஆட்சி செய்யும். இராவணனை ‘நல்லவன்’, ‘ஒழுக்க சீலன்’, அதிநாயகன் என்றெல்லாம் காட்டுவதில் ஏதோ தாம் வெற்றி பெற்றதாகச் சில அரசியலாளர் கொக்கரிக்கும்போது எனக்கு வியப்பு எழுகிறது. ஏனெனில் அவர்கள் இன்னமும் பழைய சட்டகங்களை உடைத்து அழித்து விடவில்லை.
எந்த சமூகத்தை இழிக்கிறார்களோ அதே சமூகத்தின் அங்கீகாரமும், அதன் மீது அதிகாரமும், அதை ஆளும் நோக்கமும்தான் இவர்களிடமும் இலக்கு, குறிக்கோள். பழைய கள், புது மொந்தை.
அதிகாரமற்ற சமச் சமுதாயம் என்று பெரும் ஜிகினாவைச் சுற்றினாலும், அதில் நீங்கள் ஏன் அதிகாரத்தில் இருக்க வேண்டும், சாதா தோசையாகக் கீழே அமரத்தானே வேண்டும், ஏன் மேடையேறி பந்தா செய்கிறீர்கள் என்று யாரும் புரட்சிகளைக் கேட்பதில்லை. எதற்கு லெனினும், ஸ்டாலினும், மாவோவும், ஈவெராவும் நாயகர்களாக வழிபடப்படுகிறார்கள்? சோவியத் ரஷ்யாவில் அடையாளமற்ற தாய்/ தொழிலாளி/ போர்வீரன் என்று சிலை வைத்துப் பார்த்தார்கள். யாருக்கும் அவை நினைவில் இல்லை. உருவில்லாத கடவுளைத்தான் வணங்குகிறோம் என்று சொன்ன மதங்கள் அதைச் சொன்ன புத்தகங்களை, நபிகளை/ குருவை நாயகர்/ புனிதர்/ கடவுளின் தூதுவர் என்று சாதா ரொட்டிக்கு மேலே ஏற்றி வைத்து விட்டனர். இப்போது அந்தப் புத்தகத்தைக் குறை சொல்ல முடியாது, அந்த தூதுவர்கள் இறந்து மண்ணாகி விட்டனர், இன்றைக்கு ஏற்ற சிந்தனையைக் காட்டுங்கள் என்று சொன்னால் சிரச்சேதம் செய்ய வேண்டுமென்று அதே பெரும்பான்மை கத்துகிறது.
இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால், பாணியை இனம் காண்பதும், மையத்திற்கு நகர முயல்வதும், அங்கீகாரம் பெற்ற இடங்களில் அங்கீகாரம் பெற முயல்வதும், மனிதரின் இயல்பு. இதைச் செய்ய ஆணவமும், அதிகார வெறியும் தேவை என்றில்லை. இவை சாதாரணருக்கும் இருக்கும் சாதாரண ஆசையே. சாதா- ரணம் தான் இது. பெரும் ரணம் இல்லை. ராஜப் பிளவை என்பார்கள் புற்று நோயை முன் காலத்தில். அது ராஜாக்களுக்கு மட்டும் வந்ததால் அல்ல. பிளவைகளில் சிகிச்சைக்கு இணங்காத ஒரு நோய் என்பதால். அதைப் போல ரணங்களில் பெரும்பான்மையிடம் சாதா தான் இருக்கிறது. இந்த சாதா என்பதே ரணங்களின் பாணியைப் பார்த்து, சில பல பிரச்சினைகள் இருந்தாலும் தனக்கும் சூழ உள்ளவர்களுக்கும் அவதி/ காயம்/ நமைச்சல் இல்லாது இயங்கும் குணம் உள்ளவர்களை சாதா ரணர் என்று நாம் அழைக்கிறோம். [இங்கு ரணம் என்ற சொல்லை அதன் மூல மொழியின் அர்த்தப்படி நான் பயன்படுத்தவில்லை. எனக்கு வசதிக்கு வளைத்திருக்கிறேன்.] நார்மல் என்பது இந்த சாதா தான்.
நார்மல் என்ற சொல்லுக்கு வேர் மூலம் தரும் ஒரு அகராதிப் பக்கம் இங்கே.
அகராதியில் கிட்டும் பல விரிபொருள்கள் இங்கே.
நாம் ஒவ்வொருவரும் நமக்கு சௌகரியமான வகை சாதாரணத்தை உருவாக்கிக் கொள்கிறோம், அதைப் பயன்படுத்தி அதையே வழக்கமாக்கிக் கொண்டு அதை ‘நார்மல்’ என்று புரிந்து கொள்கிறோம். அந்தக் குவி ஆடியை நம் கண்கள் தன்னியல்பாக ஆக்கிக் கொள்கின்றன, அந்தக் கண் பாப்பாவின் மூலம் உலகைப் பார்த்து நம் மதிப்பீடுகள், நம் சார்புகள், நம் தேர்வுகள் அமைகின்றன. இவை பின் குழு உருவாக்கல், செயல் முறைகள், விருப்ப அதிகாரப் பகிர்வுகள், விருப்பப் பொருளாதார/ சமூக அமைப்புகள் என்று படிவுகளாக ஆகின்றன.
[இதெல்லாம் உங்களுக்கும், இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்கனவே தெரியும். பின் எதற்கு எழுதுகிறேன் என்றால், சில சமயம் தெரிந்தவற்றையே கலைத்துப் போட்டு வேறு ஒழுங்கில் அமைத்துக் கொடுத்த ஒன்றைப் பார்க்கையில் நமக்கு வேறு விதமான பார்வைப் பரிமாணம் அல்லது பரிமாணப் பார்வை கிட்டலாம். நான் இதை எழுதத் துவங்குகையில் இப்படி இதை எழுதப் போகிறேன் என்று திட்டமிட்டுக் கொண்டு எழுதவில்லை. எனக்கு உணர்வாகக் கிட்டியவற்றை அவை ஒழுகும் விதத்தில் இங்கு இடுகிறேன். இதில் ஏதும் தெளிவின்மை இருந்தால் அது எழுத்துத் திறனுக்கும், வார்த்தை வங்கி என்று மனதில் உள்ள சேமிப்புக்கும், கருத்துகளைக் கோர்க்கும் மூளையின் பகுதிக்கும் இடையே உள்ள உறவுச் சிக்கலால் வருவது. இதையே திறன் போதாமை என்று சுருக்கிப் புரிந்து கொள்கிறோம். இங்கு என் கடிதம் defamiliarizing the familiar என்ற உத்தியைப் பயன்படுத்துகிறது. அதுதான் ‘நவீனத்துவம்’ என்று அறியப்பட்டதன் இலட்சணம் என்று கூடச் சொல்கிறார்கள். ]
ஆக நார்மல்/ சாதாரணம் போன்றன சமூக அமைப்புகளில் ஏற்கனவே இருக்கும் அமைப்புகள்/ நிறுவனங்கள்/ குழுக்கள் ஆகியவற்றில் உரசல்/விரிசல்/ நாசம்- அழிப்பு/ வன்முறை- குரோதம் போன்றனவற்றை உருவாக்காமல் பொருந்தக் கூடியவர்கள்/ கூடியவை என்று அறியப்பட்டவை. ஆனால் முன் சொன்ன மாதிரி, ஒவ்வொருவரும் இந்தக் ‘கெடுதி’களில் ஏதாவது ஒரு சதவீதம் தம்மிடம் கொண்டவர்களே. அந்தச் சதவீதமானது அவர்கள் எந்த வகை அமைப்புகளில் பொருத்திக் கொண்டிருக்கிறார்களோ அவற்றில் கூட உழைப்பவர்கள்/ இயங்குபவர்களுக்குச் சேதம் விளைக்காத வகையில் இயங்க முடிகிற வரையிலும் பொறுத்துக் கொள்ளப்படும்.
உடனே எனக்குத் தோன்றுவது ஒரு அதிகாரியின் நினைவு. நான் வேலை பார்த்த ஒரு வங்கியில் ஒரு நடுவயது அதிகாரி இருந்தார். இவர் படிநிலையில் சாதாரண அதிகாரி. இன்னும் (middle management) என்று இன்று அறியப்பட்ட நிலைக்கு உயரவில்லை. அத்தனை வயதில் அங்கேயே இருப்பது கொஞ்சம் ‘நார்மலானது’ இல்லை. சிலர் சுயத் தேர்வால் மேலே உயராமல் இருப்பார்கள். இவர் அப்படி இருந்திருக்கலாம் . இவர் ஒரு bachelor. அலுவலகப் பெண்களிடம் கொஞ்சம் ‘வழிவார்’. ஆனால் ஏதும் கெடுதலாகவோ, மோசமாகவோ பேச மாட்டார், என்பதால் பெண்கள் இவருடைய அசட்டு நடத்தையை லட்சியம் செய்யாமல் இருந்தனர். புதிதாக அந்த இலாகாவுக்கு வரும் நபர்களுக்கு இவரைப் பற்றித் தெரியாது ஏதாவது முட்டாள்தனமாகச் செய்து வைத்து பிரச்சினை கிளம்பும். பொதுவாக இவருடைய சக அதிகாரிகளே இப்படி அகப்பட்டுக் கொள்வார்கள். இவர் சகஜமாகப் பழகுவதை நம்பி, இவருடைய சொந்த வாழ்வு பற்றி இவரிடம் எதுவும் பேசக் கூடாது என்று பல வருடம் இவரோடு வேலை செய்தவர்களுக்குத் தெரியும். ஆனால் ஒரு முறை புதிதாகச் சேர்ந்த ஒரு அதிகாரி, பதவியில் இவருக்கு ஒரு படி மேலிருப்பவர், இளைஞர், இவரிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டு விட்டார். அந்தக் கேள்வியை அவர் எப்படிக் கேட்டார் என்பது எனக்குத் தெரியாது. இது அலுவலக நேரத்தில் ஏன் எழுந்தது என்றும் எனக்குத் தெரியாது. ஒருவேளை இவர் ஏதோ பெண்ணிடம் வழிந்ததைக் கண்டிக்க அவர் அப்படிக் கேட்டிருக்கலாம்.
அந்தக் கேள்வி ஒரு trigger கேள்வி. அதை யாரும் கேட்க மாட்டார்கள். கேட்டால் பயங்கரக் கோபம் அடைந்து கண்டபடி ஏசி, கத்தி அலுவலகத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து விட்டு, பின் திடீரென்று வெளியேறி எங்கேயோ உலவி விட்டு, மறுபடி ஒரு மணி நேரத்தில் திரும்புவார். பிறகு கடும் மௌனத்தில் வேலை செய்வார்.
அன்று கத்தியபடி தன் இருக்கைக்குப் போனவர், அங்கிருந்து ஒரு கண்ணாடி பளுவை (table weight என்று அந்நாளில் சொல்வார்கள். இன்று இவை எங்கும் காணப்படுவதில்லை) எடுத்து அந்த அதிகாரி மீது பத்துப் பதினைந்து அடி தூரத்திலிருந்து வீசினார். அந்த இளைஞர் இவர் திடீரென்று வெடித்துக் கத்தியதில் பிரமித்து இவரைப் பார்த்துக் கொண்டிருந்ததால் தலையைக் குனிந்து கொண்டு அந்த குண்டு தன்னைத் தாக்காமல் தப்பித்தார்.
பிறகென்ன, இந்த அதிகாரி மீது புகார் எழுப்பப்பட்டது. அவரை வேலையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்தார்கள். ஆறேழு மாதம் கழித்து விசாரணை முடிந்து, மற்ற அதிகாரி தன் புகாரை விலக்கிக் கொண்டதும், இவருக்கு வேலை திரும்பியது. இடையில் மனநலச் சிகிச்சை பெற்றிருக்கலாம். ஆனால் திரும்பிய பிறகு முன்பு போல சகஜமாக, உற்சாகமாக இருப்பது மிகக் குறைந்திருந்தது. இளைத்தும் போயிருந்தார். அவர் ஒரு செயல்திறன் மிக்க வங்கி எந்திரம். அதை அவரிடமிருந்து பிடுங்கியதும் அவருக்கு வாழ்வில் ஏதோ பறி போயிருந்தது. அவர் ‘நார்மல்’ நிலைக்குத் திரும்ப அந்தப் பறி முதல் உதவி இருக்கும் போலிருக்கிறது.
இந்த அதிகாரி பிறருக்கு உடல் சேதம் விளைக்க முயலாத வரை இவர் பொறுத்துக் கொள்ளப்பட்டிருந்தார். இவரே நிறைய பெண்களிடம் ‘வழிந்ததில்’ அவர்களுக்கு என்ன மன நலக் குறைவு ஏற்பட்டது என்பதை வங்கியோ, பிற ஆண்களோ, அதிகாரிகளோ, ஏன் பெண்களே கூடவோ அதிகம் பொருட்படுத்தவில்லை. எனக்குத் தெரிந்து ஒரு பெண் கூட இவர் மேல் எழுத்து மூலம் புகார் செய்யவில்லை. வாய் வார்த்தையாகப் புகார் செய்தால் நிறுவனம் ஏதும் நடவடிக்கை எடுக்காது என்பது ‘நார்மல்’. ஆனால் அது ‘நார்மலே’ இல்லை, பொதுச் சமூகப் பார்வையில், இல்லையா? இப்படி நிறுவனங்களே ஒரு அளவில் ‘நார்மல்’ நடத்தை இல்லாதவை. ஆனால் உட்குழு நார்மல் என்பது பொது நார்மலிலிருந்து எப்போதுமே விலகித்தான் இருக்கும்.
இங்கு நான் சொல்ல வந்தது உங்களுக்குப் புரிந்திருக்கும். இசை/ நாட்டியம்/ இலக்கியம்/ நாடகம்/ சினிமா/ விளையாட்டுத் தொழில் (ஸ்பொர்ட்ஸ்) போன்றன எல்லாம் நிகழ்த்தல் துறைகள். Performance based activities. இவற்றில் சமத்துவம் என்ற கருத்து மிக மிகப் பெயரளவில்தான் இருக்கும். Nominal equality தான் நிலவும். அது இயங்கு களத்தை எல்லாருக்கும் சமமாக அமைக்க வேண்டும் என்ற நன்னடத்தை பற்றிய மதிப்பீடுகளால் உருவானது. மனிதக் குரங்குதான் இப்படி ஒரு நடத்தையைக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. பல பாலூட்டிகளும் இப்படி ஒரு நடத்தையைக் காட்டுகின்றன. தோற்ற மிருகத்தைத் தன் குழுவில் இருக்க அனுமதிக்கும் பாலூட்டிகளில் துவங்கி, அதை விரட்டி விட்டுத் திரும்பி விடும் நடத்தை, அத்தோடு அதன் வாரிசுகளை எல்லாம் தன் குழுவின் எல்லைக்குள்ளிருந்து அகற்றும்/ கொல்லும் நடத்தை, தோற்ற மிருகத்தைக் கொல்லும் நடத்தை என்று பற்பல தேர்வுகள் பாலூட்டிகளிடம் காணப்படுகின்றன. இவற்றில் எல்லாவற்றையும் விடக் குரூரமான வழிமுறைகளை மனிதக் குரங்கு கடைப்பிடிக்கத் தயங்குவதில்லை. இவற்றில் எல்லாவற்றிலும் மேன்மையான வழிமுறையையும் மனிதக் குரங்கு அவ்வப்போது தேர்ந்தெடுக்கிறது. அதைப் பாராட்டியே இலக்கியம், தர்ம சாஸ்திரங்கள், விவிலிய நூல்கள், ஒழுக்கப் பாடங்கள், வாய்வழிப் போதனைகள், பாட்டி/ தாத்தா கதைகள், உபந்நியாசங்கள், சர்ச்சியப் பிரசங்கங்கள், கல்லூரிகளில்/ பள்ளிகளில் அற போதனைகள், ‘ஆசான்’களின் அறக் கதைகள் எல்லாம் எழுகின்றன. மனிதக் குரங்குக்கு அதன் சிறப்பான நடத்தையை இலக்காகத் தொடர்ந்து முன்வைத்தால் அது ஒரு இலட்சிய புருஷனின் குணங்களை அடைந்து விடும் என்ற உடோப்பிய நோக்கம் இது.
[எதார்த்தத்தில் பிரசங்கிப்பவர்களிடமே இவை இருப்பதில்லை என்பதையே நாம் ‘பகீர்’ செய்திகள் என செய்தித்தாள்கள் பிரசுரிப்பனவற்றில் இருந்து அடிக்கடி அறிகிறோம். ]
மற்றெந்த மனித நடவடிக்கைகளையும் விட spontaneity என்பதற்கும், களத்தில் காட்டப்படும் திறனுக்கும் அதிக மதிப்பு கொடுத்து, இதர பின்புலத் தகவல்களுக்குக் குறைவான மதிப்பு கொடுப்பவை இந்த performance based activities. ஒரு அறிவியலாளர்/ அரசு அதிகாரி/ நீதிபதி/ மருத்துவர் போன்றவர்களுக்கு அன்றாடம் ஒரு குறைந்த பட்ச நிகழ்த்தல் இருந்தால் போதும். அவர்கள் ஏற்கப்பட்டு விடுவார்கள். ஒவ்வொரு நிகழ்த்தலிலும் கூரிய திறன் வெளிப்பாட்டை இவர்களிடம் யாரும் கேட்பதில்லை. இவர்களைச் சுற்றி அமைப்பு சார் கட்டுமானங்களின் உதவி ஏராளமாக இருக்கிறதால், அவை பெரும்பகுதி பளுவைச் சுமந்து விடும்.
நிகழ்ச்சிச் செயல் மட்டுமே கருதப்படும் துறைகளில் ‘அலைப்பு’, சீரின்மை, கூட இருப்பவர்களுடன் பொருந்தும் விதத்தில் இயங்க முடியாமை, கூடதிகத் தன் முனைப்பு ஆகியன ஏற்கனவே வென்றவர்களிடம் பொறுத்துக் கொள்ளப்படும். படிநிலையில் ஏற முயல்வோருக்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
இது நிகழ்த்தல் துறைகளுக்கு மட்டும் என்றும் நான் கருதவில்லை. அறிவியல்/ பல்கலைத் துறைகளில் ஆய்வாளர்களிடையே நடக்கும் கருத்துப் பரிமாற்றம் என்ன வகைத்தானதாக இருந்தால் வெற்றி கிட்டும் என்று சிகாகோ பல்கலை ஒரு வகுப்பே நடத்திப் போதிக்கிறது. அந்த விடியோ இங்கே. This Video is a valuable tool for people who wish to write at expert levels.
Where Are You From? – Member Feature Stories – Medium:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.