மௌனம் களையட்டும்


நினைவுகள் ஒரு தெரு நாய் போல் என் மண்டைக்குள் குலைத்துக்கொண்டிருந்தது. அதன் சத்தத்தை என்னால் தாங்கவே முடியவில்லை. இந்தப் பயணம் முழுக்க என் விருப்பமில்லாமல் என்னுடனே பயணித்துக் கொண்டிருக்கிறது. இத்தனை நாள் உறங்கிக் கொண்டிருந்த அது இப்போது முழு வீரியத்துடன் தன் கூறியப் பற்களில் எச்சில் ஒழுக நின்றுகொண்டிருக்கிறது. பயம் மட்டுமே இப்போது என்னை ஒரு கார் மேகம் போல் சூழ்ந்து கொண்டு எதையும் பார்க்கவிடாமல், பேர் இரைச்சலை உண்டாக்கி எதையும் கேட்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது.
அமைதியாக சென்றுகொண்டிருந்த அந்த குளிர் சாதன பேருந்தில் அந்த நடத்துநரின் குரல் தெளிவாகவும் சத்தமாகவும் தான் இருந்தது. ஆனால் என்னால் அதைச் சரியாக கேட்கமுடியவில்லை. இரண்டு முறை அவர் சத்தமாக அழைத்தும் நான் சுயநினைவில் இல்லாததால் அவர் என் தோலை தட்டி என்னை சுய நினைவுக்குக் கொண்டுவந்தார். அவரை உற்றுப்பார்த்து யார் எனக்கண்டு பதட்டமாக  அவரிடம் “ஒரு பாண்டிச்சேரி” என்றேன். அவர் தன் கையில் வைத்திருந்த கத்தையான பயணச்சீட்டில் வேவ்வேறு வண்ணத்தில் மூன்றை எடுத்து அதனில் சில ஓட்டைகளை நளினமாக ஏற்படுத்தி அதை என்னிடம் கொடுத்தார். நான் அதைப் பெற்று என் மேல் சட்டைப்பையில் வைத்துவிட்டு மீண்டும் என்னை மறக்கத்துவங்கினேன்.
நான் வாழ்ந்த நரகத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நரகம், ஆமாம் நரகம். இல்லாதவனுக்குக் கூட பால்யம் நரகமாக இருக்கக் கூடாது. பெரும்பாலும் இருக்காது. ஆனால் பால்யத்தில் நரகத்தை அனுபவிப்பவனின் மொத்த வாழ்க்கையும் சூன்யமாகதான் இருக்கும். விதிவிலக்காக சிலர் அதிலிருந்து தப்பித்து வெளியேறலாம். ஆனால் அதை நோக்கி மறுபடியும் திரும்பவே கூடாது. இதே நரகத்திலிருந்து வெளியேறி இத்தனை ஆண்டுகள் அதன் நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடல் மணலை உதறுவது போல் உதறிக்கொண்டிருந்தேன். ஆனால் யானை போல் நானே என் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டு நான் வாழ்ந்த நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.
முதலில் ஊருக்குப் புறப்பட நான் தயாரான போது எனக்கு இதைப்பற்றி எவ்வித சிந்தனையும் இல்லை. ஒரு நாள் திட்டம் தான் காலையில் சென்று நண்பர்களுக்குப் பத்திரிக்கை வைத்துவிட்டு மாலை அல்லது இரவு புறப்பட்டு வந்துவிட வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். சொந்தங்களுக்கு இரண்டு வாரத்திற்கு முன்பே அப்பவும் அம்மவும் பத்திரிக்கை வைத்துவிட்டார்கள். என் நண்பர்களுக்கு நான் தான் வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். “இங்கயே இவ்ளோ வேல கிடக்குது, இப்ப ஏண்டா கிளம்பி போற” என அப்பா சத்தம் போட, நான் போயே தீர்வது எனப் பிடிவாதமாக இருந்தேன். நான் கூப்பிட்டாள் தான் அவர்கள் வருவார்கள் என்ற நிலை உருவாகியிருந்தது. நான் சென்னைக்கு சென்றதும் அவர்களை மறந்துவிட்டதாக அவர்களுக்குள் ஒரு எண்ணம் வந்திருந்தது. அதைத் தவிர்க்க கண்டிப்பாக நானே நேரில் சென்று அழைக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தேன். விடியகாலையிலேயே எழுந்து குளித்து தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் போது தான் என் அப்பா என்னிடம் வந்து அந்த குண்டைப் போட்டார்.
“டேய், மார்கெட் தெருல நாடார் கடைக்கு போய் நாடாருக்கு ஒரு பத்திரிக்கை வெச்சிடு. நாங்க போனபோது மறந்துட்டோம்” என்றார்.
“நான் அந்தப் பக்கம் போகல” என்றேன்.
“பஸ் ஸ்டாண்ட்லருந்து எவ்வளவு தூரம்டா. ஒரு பஸ்ஸோ இல்ல ஆட்டோவோ புடிச்சி குடுத்துட்டு வா” என்றார்.
நான் “பாக்கறன்” என்றேன்.
“பக்கறன்லா சொல்லாத, அவருக்கு குடுக்கறதுனா போ இல்லனா போவாத” என்றார் கோவமாக.
நான் எதுவும் சொல்லாமல் என் வேலைகளைத் தொடர்ந்து செய்யத்துவங்கினேன். அதை அவர் சரி என்று நான் சொன்னதாக எடுத்துக்கொண்டு நகர்ந்தார். நான் போவேனா, இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால் அந்த நரகத்தைப் பற்றிய நினைவுகளைத் தூண்டிவிட்டுவிட்டார்.
அந்த நரகம் ஒரு தெரு. அழகான ஒரு தெரு. பகல் முழுவதும் மக்களால் நிரம்பியிருக்கும் ஒரு மார்க்கெட் தெரு. மெயின் ரோட்டில் இருந்து பார்த்தால் எதிர் முனையில் தெரியும் பெருமாள் கோவில் தான் அந்தத் தெருவின் மொத்த அழகும். மெயின் ரோடு வழியாக நுழைந்தால் தெருவின் முதல் பாதி கடைகளும், மார்க்கெட்டும் இருக்கும். மார்க்கெட்க்கு மூன்று வழி உண்டு. தெருவில் அடுத்தடுத்து இரண்டு வழிகளும் பக்கவாட்டில் தெருவில் ஒரு வழியும் இருக்கும். முன் புறம் காய்கறி கடைகளும், ஃபேன்சி ஸ்டோரும், வெற்றிலை பாக்கு கடை, முட்டைக்கடையும், பக்கவாட்டில் மீன் கடைகளும், பின்புறம் கறிக் கடைகளும் இருக்கும். தெருவின் அடுத்த பாதி முடுக்க வீடுகள் தான் இருக்கும். இரண்டாவது பாதியில் இருந்த ஒரே கடை நாடார் கடை தான். நாடார் கடைக்கு நேர் எதிர் வீடு எங்கள் வீடு. சிறிய வீடு, ஒரே அறை, உள்ளே ஒரு சமையல் அறையும் குளியல் அறையும், கழிவறையும் இருக்கும். நாங்கள் நான்கு பேரும் ஒரே அறையிலும், பாட்டி சமையலறையிலும் படுத்துக்கொள்வோம். அதே தெருவில் தான் நான் என் பால்யத்தை கழித்தேன். சந்தோஷமான நாட்கள் என்பது வெகு சில நாட்கள் மட்டும் தான். அவை எல்லாம் இப்போது கொஞ்சம் கூட நினைவில் இல்லை. நான் வாழ்ந்த அதே தெருவில் நடக்கக்கூட அஞ்சி நடுங்கிய நாட்கள் தான் அதிகம். அதே தெருவில் சுற்றித்திரியும் தெரு நாய்க்கு இருக்கும் சுதந்திரமும் தைரியமும் என்னிடம் இல்லாமல் இருந்தது. எல்லாவற்கும் ஒரு காரணம் இருந்தே தீரும். அது பெரும்பாலும் நாம் உருவாக்கியதாகவே இருக்கும். ஆமாம் இத்தனையும் நானே உருவாக்கியது தான். நான் தான். நான் தான். நான் தான்.
அதுவரை படித்து வந்த தனியார் பள்ளியிலிருந்து அப்போது தான் குடும்பச் சூழல் காரணமாக அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்தேன். அதற்கு முன் படித்த பள்ளிக்கும் இப்போது இருக்கும் பள்ளிக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. எனக்குப் பல விவரங்கள் இங்கு தான் தெரிய ஆரம்பித்தது. பல வழிகளை நான் கற்றுக்கொண்டேன். வீட்டிலிருந்து பள்ளிக்கு இத்தனை வழிகள் இருப்பதையே அப்போது தான் கண்டேன். இப்படிப் பல ஆச்சர்யங்களை எனக்கு அளித்தது அந்தப் பள்ளி. ஒரு சனிக்கிழமை அரைநாள் தான் பள்ளி. முதல் இரண்டு வகுப்புகள் முடிந்ததும் இடைவேளை சமயத்தில் மதியம் ஏரிக்குச் சென்று குளிக்கலாம் என்ற யோசனை இருதயராஜால் முன்மொழியப்பட்டது. உடனே போகலாம் என சிலர் அதை யோசனையைச் செயல்படுத்த முடிவெடுத்தனர். நான் அதுவரை ஏரிக்குச் சென்று குளித்ததில்லை. இல்லை தவறாக சொல்கிறேன். ஏரியை நான் பார்த்தது கூட இல்லை. உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு எழுந்தது. நானும் வருவதாகச் சொன்னேன். எப்படிப் போவது எனத் திட்டங்கள் தீட்டப்பட்டது. குளித்ததும். அங்கிருந்து அவரவர் எப்படிப் போவது எனப் பேசப்பட்டது. முதலில் அங்கிருந்து எப்படி வீட்டிற்குப் போவது என எனக்குக் குழப்பம் ஏற்பட்டது. பிறகு ஒரு பையன் என் வீட்டருகே இருப்பவன், அவனும் வருவதால் கொஞ்சம் தைரியம் வர நானும் உற்சாகமானேன். அடுத்த இரண்டு வகுப்புகள் கணக்கு வகுப்பு. மனதிற்குள் எரி எப்படி இருக்கும் எனக் கற்பனை ஓடிக்கொண்டிருந்தது. ஆசிரியர் போடும் கணக்கு கூட எதோ ஏரிக்கு எப்படிப் போவது என்ற சூத்திரம் போலவே இருந்தது.
மதியம் மணி 12:30க்கு பள்ளியின் மணி அடிக்க ஏரிக்குப் போவதாக முடிவெடுத்தவர்கள் மட்டும் தனியாக ஒன்று சேர்ந்தோம். மொத்தம் பதிமூன்று பேர். புறப்பட்டோம். பள்ளியிருந்த தெருவைக் கடந்து புவன்கரே வீதியை அடைந்து இடது புறமாக திரும்பி நடந்தோம். அனைவருக்குள்ளும் ஒரு உற்சாகம் இருந்தது. அதில் சிலருக்கு முன்பே சென்று குளித்த அனுபவம் இருந்ததால் அவர்களின் அனுபவங்களை சொல்லியவாறு வந்தனர். என்னைப் போல புதிதாக வருபவர்கள் வாயைப் பிளந்தவாறு அதைக் கேட்டுக்கொண்டே வந்தோம்.  கொஞ்ச தூரம் கடந்ததும் ரெயில்வே கேட் வர அனைவரும் சட்டென திரும்பி தண்டவாளத்தில் நடக்கத் துவங்கினர். அதற்கு மேல் எனக்கு வழி தெரியாததால் அவர்களைக் கவனமாக தொடர்ந்தேன். கொஞ்ச தூரம் ரெயில் பாதையிலேயே நடந்து நூறடி ரோட்டை அடைந்து பிறகு அதையும் தாண்டி ரெயில் பாதையிலேயே தொடர்ந்து நடந்தோம். இப்போது எனக்கு நன்றாக வேர்க்க ஆரம்பித்திருந்தது. சட்டையெல்லாம் ஈரமாகிக் கொண்டிருந்தது. அப்படியே திரும்பிப் போய்விடலாமா என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே அனைவரும் தண்டவாளத்தை தாண்டி ஒரு ஒற்றையடிப் பாதையில் நுழைந்தனர். இதுவரை நான் இதுபோன்ற வழியெல்லாம் பார்த்ததேயில்லை. மெல்ல ஒரு பயம் உள்ளுக்குள் பரவத்துவங்கியது. இதயத்துடிப்பு அதிகரிக்கத் துவங்கியது. ஆனால் மற்ற பையன்களின் உற்சாகம் அதிகரித்தவாறு தான் இருந்தது. நான் அருகில் இருந்த ஒரு பையனிடம்,
“இன்னும் எவ்ளோ தூரம்டா” என்றேன்.
அவன் “என்ன கேட்டா” என்றான்.
“நீயும் போனதில்லயா” என்றேன். அவன் உதட்டைப் பிதுக்கினான். ஒற்றையடிப் பாதையின் இருபுறமும் முட்செடிகளும் மலங்களுமாக இதுந்தது. ஆனால் யாரும் அதையெல்லாம் கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஒற்றையடிப் பாதை நேராக ஒரு மணல் மேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்தப் பாதையின் முடிவில் மணல் மேடு இரண்டாகப் பிரிந்து சென்றது இருபுறமும் நீண்டு வளர்ந்த பணை மரங்கள். அந்த மேட்டின் மீதும் ஒரு பாதை இருப்பதை அதில் ஒருவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போகும் போது தான் கண்டேன். மேட்டை நெருங்கியதும் பையஙள் உற்சாகமாகக் கத்திக்கொண்டே ஓடி மேட்டின் மேல் ஏறினார்கள். அனைவரும் ஓடுவதைக் கண்டு நானும் வேகமாக ஓடிச் சென்று மேட்டின் மீது ஏறியதும் பரந்து விரிந்த அந்த ஏரி காட்சியளித்தது.
மேட்டின் மறுபுறம் ஒரு சிறு சறுவல். அதன் முனையில் கொஞ்சம் சகதியாக இருக்கப் பழுப்பு நிறத்தில் இருந்தது கரையோர தண்ணீர். அப்படியே போகப்போக அதன் கரையில் இருந்த மரங்களின் நிறமாகவும், மரங்கள் கடந்ததும் முழுக்க வானத்தின் நிறமாக மாறத்துவங்கியது. என்னைப்போலப் புதிதாக வந்த பைகள் மட்டுமே அதைக் கொஞ்சம் பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருந்தோம் மற்ற அனைவரும் தங்கள் ஆடைகளைக் களைந்து நீருக்குள் இறங்கினார்கள். பாதிப் பேருக்கு மேல் நிர்வாணமாகவே இருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் எனக்குள் இருந்த தயக்கம் விலக நானும் ஆடைகளை மளமளவென கலைத்து ஏரிக்குள் இறங்கினேன். குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி செல்ல வேண்டாம் என சிலரால் அறிவுறுத்தப்பட்டேன். கரை ஓரங்களில் இருந்த மரங்களின் கிளைகளை பிடித்துத் தொங்கியவாறு பையஙள் குதித்து விளையாடினார்கள். வெயிலுக்கு நீர் மேலோட்டமாகச் சூடாக இருந்தாலும் இடுப்புக்குக் கீழ் இருந்த தண்ணீர் குளிர்ச்சியாகவே இருந்தது. யார் அதிக நேரம் உள்ளே மூழ்கி இருக்கிறார்கள் என்ற அரத பழசான விளையாட்டையே நாங்களும் விளையாடினோம். நீச்சல் தெரிந்த ஒரு சிலர் தங்கள் வீர தீர செயல்களை செய்து காட்டினர். நான் கரையோரத்திலேயே குதித்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு அதன் பிறகு நீருக்குள் மறைந்து வந்து உள்ளாடையை இழுத்துவிட்டு விளையாடினர்.
ஆட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. எப்போதாவது ஒருவர் இரண்டு பேர் வந்து போய்க் கொண்டிருந்தனர். யாராவது வரும்போது மட்டும் கழுத்துவரை நீரில் மூழ்கி அமைதியாக இருப்போம். சில பையன்களுக்கு நிர்வாணமாக இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் இருந்தனர். பெண்கள் யாரவது தூரத்தில் வருவது தெரிந்தால் வேண்டுமென்றே மரத்தின் கிளையில் தொங்கி ஊஞ்சலாட துவங்கிவிடுவான்கள் பெண்களும் கிட்ட வந்து முகத்தைக் கோணிக்கொண்டு வசைபாடிக் கொண்டே ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டு போனார்கள். நேரம் மெல்ல மெல்லக் கரைந்தது. மதியம் யாரும் எதுவும் சாப்பிடாததால் ஒரு கட்டத்தில் அனைவருக்கும் சோர்வு ஏற்படப் புறப்படலாம் என ஒவ்வொருவராய் கரையில் ஏறி ஈர உடம்பிலேயே ஆடை அணியத் துவங்கினோம். சிலர் இன்னும் ஆட்டம் போட்டுக்கொண்டே இருந்தனர். நான் என் ஆடைகளை எடுத்து உடுத்திக்கொண்டிருக்கும் போது என் பின்னால் இருந்து அந்தக் குரல் கேட்டது, “டேய்…”. நான் திரும்பிப் பார்த்தேன் இருவர் நின்றிருந்தனர். இருவரில் ஒருவனை எனக்குப் பார்த்தவுடன் அடையாளம் தெரிந்தது. அவன் என் வீட்டின் அருகில் இருந்தவன். என் வீட்டிலிருந்து ஒரு பத்து வீடு தள்ளியிருக்கும் டைலர் கடையில் தான் எப்போதும் இருப்பான். அவனுக்கு அப்போது இருபது வயது இருக்கும். அவன் வயதைச் சரியாக கணிக்க முடியாது. எப்போது சற்று அழுக்காகவே இருப்பான். சராசரி உயரம். பல நேரங்களில் போதையிலேயே தான் இருப்பான். பல கெட்ட பழக்கங்கள் உடையவன். (இதெல்லாம் அப்போது தெரியாது) நான் திரும்பிப் பார்த்ததும் என்னைப் பார்த்து,
“நீ நாடார் கடைக்கு எதிர் வீடு தானே” என்றான்.
நான் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தேன்.
“இங்க என்னடா பண்ற” என்றான்.
அவன் அப்படிக் கேட்டதும் எனக்குப் பயம் ஏற்படத்துவங்கியது. நான் பயப்படுவதை அவர் கண்டுக்கொண்டுவிட்டான். நான் அவனிடம்,
“பசங்கக் கூடக் குளிக்க வந்தன்” என்றேன்.
“உங்க வூட்டுக்கு தெரியமா” என்றான்.
நான் அமைதியாக இருந்தேன்.
“சரி எப்படி போவ” என்றான்.
நான் ஒரு பையனைக் காட்டி அவனுடன் போவதாக சொனேன். உடனே அவன்,
“வேணாம் நான் ஷாட்டா கூட்டினு போரன் வா” என்றான். எனக்குத் தயக்கமெல்லாம் எதுவுமில்லை. அவன் கூப்பிட்டதும் அந்தப் பையனிடம் சொல்லிவிட்டு அவனுடன் புறப்பட்டேன்.
நாங்கள் வந்த திசைக்கு எதிர்த் திசையில் அவன் என்னைக் கூட்டிச்சென்றான். அவன் என் முன்னாலும் அவனுடன் வந்தவன் என் பின்னாலும் வந்தனர்.  அந்த மேட்டின் ஒரு சரிவில் ஏரியும் மறு சரிவில் சின்ன சின்ன குடிசை வீடுகளும் இருந்தது. பனை மரங்கள் மட்டும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருந்தது. கொஞ்ச தூரம் நடந்ததும் வீடுகள் குறைய ஆரம்பித்து சீமைக் கருவேள மரங்களாக வரத்துவங்கின. வீடுகள் எல்லாம் சுத்தமாக இல்லாத ஒரு இடத்தில் நாங்கள் மேட்டிலிருந்து இறங்கினோம். அப்போது அவன் என்னிடம்,
“டேய், நீ குளிக்க வந்தது உங்கப்பவுக்கு தெரியுமா” என்றான் மறுபடியும்.
நான் “தெரியாது” என்றேன்.
அப்படியே ஒரு ஒற்றையடிப் பாதையை பிடித்துப் போனோம். அது நேராகப் போய் ஒரு உடைந்த சிமெண்ட் தளம் அருகே முடிந்தது. அந்தத் தளம் பத்து அடிக்கு பத்து அடி இருந்தது. அதன் நாளு முனைகளும் உடைந்திருந்து. அதில் பல இடங்களில் பெயர்ந்து இருந்தது. நான் திரும்பி அவனிடம்,
“இப்ப எப்படி போறது” என்றேன்.
“ஒரு வேலை இருக்கு, முடிச்சிட்டு போலாம்” என்றான்.
உடன் இருந்தவன் என்னை மேலும் கீழும் பார்த்துக்கொண்டே இருந்தான். எனக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை.
சில நொடிகள் அமைதிக்குப் பிறகு, “நான் சொல்ற மாதிரி கேட்டினா உங்கப்பா கிட்ட சொல்லமாட்டன்” என்றான்.
அதுவரை இல்லாத ஒரு சிறு பயம் அப்போது எனக்குள் எட்டிப்பார்த்தது.
நான், “என்ன?” என்றேன்.
உடன் வந்தவன் அப்போது தான் வாயைத் திறந்தான்.
“நாங்க சொல்ற மாதிரி கேளு, பத்து நிமிஷத்துல வூட்டுக்கு போய்டலாம்” என்றான்.
நான் அமைதியாகப் பார்த்தேன். என் கண்ணில் கண்ணீர் வரத்துவங்கியது. நான் அழத்துவங்கினேன். ‘வீட்டு போகனும்’ என்று அழுதேன். ஓடிவிலாமா என்று பார்த்தேன். சுற்றியும் முள் மரங்கள். கீழே முழுக்க முள். ஓடினால் வந்த பாதையில் தான் ஓடவேண்டும். அதை அடைத்துக்கொண்டு அவர்கள் இருவரும் நின்றிருந்தனர்.  அந்த இருவரையும் மீறி ஓடுவது முடியாது என்று தோன்றியது. ஏன் இவர்களுடன் வந்தோம் என்று என்னை நானே திட்டிக்கொண்டேன். அழவதை அதிகப்படுத்த முடிவெடுத்தேன். அழவும் செய்தேன். அந்த இன்னொருவன் கோவமாக,
“………….., எதுக்குடா அழற. கம்முனு சொல்றத கேளு இல்ல கைய கால ஒடச்சி இங்கயே போட்டு போய்டுவோம். ஒருத்தனும் வரமாட்டான் இங்க. ராத்திரில நாய், நரி தான் வரும். ஒழுங்கா சொல்றத செய்” என்றான்.
“நான் என்ன என்றேன்.
“டவுசர கழட்டிட்டு திரும்பிப்படு என்றான்.
எதற்கு என்று எனக்கு அப்போது புரியவில்லை. நான் அப்படியே நின்று கொண்டிருந்தேன். வேகமாக என் அருகில் வந்த அவன் என் பின் மண்டையில் பொளேர் என்று ஒன்று வைத்தான். மற்றொருவன் “டேய் அடிக்காதடா” என்றான். அவன் என்னை அடித்ததும் தான் அவர்கள் சொன்னது போல் செய்துவிடுவார்களோ என்ற பயம் எனக்கு வந்தது. எப்படியாவது வீட்டிற்குப் போய்விடவேண்டும் என்று அவன் சொன்னது போல் செய்தேன். முதலில் அவன் தான் என் மேல் படுத்தான். திடீரென்று பின்னால் உயிர் போகும் வலி. என்ன செய்கிறான் என்று திரும்பிப் பார்க்க முயன்றேன். மற்றொருவன் தன் கட்டியிருந்த கைலியை கழட்டி தோளில் போட்டுக்கொண்டு தன் உள்ளாடையை முட்டிவரை இறக்கிக்கொண்டு தன் உறுப்பை கைகளால் உருவிக்கொண்டிருந்தான். நான் வலியில் கத்த என் மேல் இருந்தவன் இதோ முடிஞ்சிது என்றான். எனக்கு அழுகையாக வர அழுதுகொண்டே எதிரில் பார்க்க முட்செடிகளில் புகுந்து ஒரு பாம்பு போய்க்கொண்டிருந்தது. நான் அதைப்பார்த்ததும் பாம்பு என்று கத்தினேன். அவனும் அதைப் பார்த்துவிட்டான். அவன் அதைப்பார்த்ததும் பயந்து எழுந்துவிட்டான். அவன் எழுந்ததும் நானும் எழுந்து சட்டென என் காற்சட்டையை அணிந்துகொண்டு, பையை எடுத்துக்கொண்டு ஓடத்துவங்கினேன். உள்ளாடையெல்லாம் அணியத்தோன்றவில்லை. அதை அங்கேயே விட்டுவிட்டு ஓடினேன். அவர்கள் இருவரும் கத்திக்கொண்டே சில அடிகள் ஓடிவந்தனர். ஆனால் அவர்கள் உடலில் ஆடை இல்லாததால் அப்படியே நின்றுவிட்டனர். நான் தெறிக்க ஓடினேன். காலில் சில இடங்களில் முட்கள் குத்தியும் கிழித்தும் காயமேற்படுத்தியது. அதையெல்லாம் பார்க்கக் கூடத் தோன்றாமல் ஓடினேன். மேட்டை அடைந்து வந்த வழியிலேயே ஓடினேன். வழியில் சைக்கிளில் போய்க்கொண்டிருந்த ஒரு தாத்தா, “ஏய், ஏன்டா இப்பிடி ஓடற” என்றார். அதையெல்லாம் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் ஓடினேன். மனம் முழுக்க என்னைப் பற்றியே வெறுப்பு நிறைந்திருந்தது. அழுதுகொண்டே ஓடியதால் வழியில் பார்த்தவர்கள் எல்லாம் என்னைப் பார்ப்பது போலவே தோன்றியது. யாரோ எங்கேயோ பார்த்து சிரித்துக்கொண்டிந்ததெல்லாம் என்னைப் பார்த்து சிரித்துப் போலவே தோன்றியது. மாலை மெல்ல மறையத்துவங்கியிருந்தது. கிடைத்த வழியிலெல்லாம் ஓடினேன். சில இடங்களில் முட்டுச்சந்துகளில் போய் மாட்டிக்கொண்டு திரும்பி எங்கெங்கோ ஓடினேன். யாரிடமும் வழிகேட்கப் பயமாக இருந்தது. வழிசொல்கிறேன் என்று மறுபடியும் எவனிடமாவது மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன். என்னென்னவே தோன்றியது. மதியமே வீட்டிற்குச் சென்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அல்லது மற்ற பைகளுடனாவது சென்றிருக்கலாம். எனக்கு அப்போது என் மீதே கோவம் கோவமாக வந்தது. ஒரு வழியாகத் தண்டவாளத்தை அடைந்து நடக்கத்துவங்கினேன். திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தேன். வேகமாக நடந்து வீட்டிற்கு வந்தேன். வந்ததும் மணிப்பார்த்தேன். ஐந்து முப்பது ஆகியிருந்தது. வலியை விடப் பயம் உடல் முழுக்க பரவியிருந்தது.
“ஏன் லேட்டு” என அம்மா கேட்க, “விளாடிட்டு வந்தன்” என்றேன்.
என் உடலில் அந்த படபடப்பு அடங்கவேயில்லை. உள்ளே சென்று கை கால்களைக் கழுவினேன். முள் கிழித்த இடங்களிலெல்லாம் பயங்கரமாக எரிந்தது.
அன்று இரவு முழுக்க கண்களில் தண்ணீர் வந்துகொண்டே இருந்தது. வீட்டில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றே காதில் விழவில்லை. அனைவரும் (அப்பா, அம்மா, பாட்டி, தம்பி) சாப்பிட்டு விளக்கணைத்து படுத்துவிட்டனர். எனக்குக் கண்களை மூடினால் அந்தப் பாம்பு மெல்ல ஊர்ந்து வந்த காட்சிகளே கண்களில் தெரிந்தது. பக்கத்தில் படுத்திருந்த என் தம்பியின் மூச்சுக்காற்றுகூட பாம்பின் ஓசையாகத் தோன்றியது. எப்போதும் போல் அவன் தூக்கத்தில் காலைத் தூக்கி என் மீது போட்டான். எப்போதும் இல்லாத அருவருப்பு அப்போது எனக்கு ஏற்பட்டது. வேகமாகத் தட்டிவிட்டேன். அவனும் தூங்காமல் தான் இருந்திருக்கிறான். உடனே அழ ஆரம்பித்தான். அம்மா “கம்முனு படுங்க” னு ஒரு சத்தம் போட்டதும் அடங்கிவிட்டான். அதன் பிறகு என் மீது அவன் இரவு முழுக்க கால்களை போடவில்லை. என்னென்னவோ யோசனைகளில் நான் எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. மறுநாள் காலையில் எழுந்திருக்கும் போது வீட்டில் பாட்டி மட்டுமே இருந்தாள். காலையிலேயே யாரோ இறந்துவிட்டதாகச் செய்தி வர அப்பாவும் அம்மாவும் சென்றுவிட்டார்கள் என்றாள். அவர்கள் மாலையில் தான் வருவார்கள். எங்கேயோ சுற்றிவிட்டு வீட்டுக்குள் ஓடிவந்தான் தம்பி. நேராகப் பாட்டியிடம் சென்று,
“ஆயா… இன்னிக்கி கறி ஆக்குவல்ல” என்றான்.
“உங்கொப்பா சாவு வூட்டுக்கு போய்யிருக்காரு. நாளைக்கு செய்றேன் டா கண்ணு” என்றாள்.
அவன் அழ ஆரம்பித்தான். “போன வாட்டியும் இதான் சொன்ன. எப்ப பாத்தாலும் அம்மாவச, பவுர்னெமி னு எதனா சொல்லிச் சொல்லி ஏமாத்தற. எனக்கு இன்னிக்கி கறி வேணும்.” என்று அழுதான்.
பாட்டிக்கு அவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியவில்லை. சற்று நேரம் யோசித்துவிட்டு எங்கள் இருவரையும் அருகில் அழைத்தாள். ஆனால் தம்பி மட்டுமே அருகில் சென்றான். எனக்கு அதில் சுவாரஸ்யமும் எதுவும் ஏற்படவில்லை. என் தம்பி பாட்டியின் அருகில் சென்றதும்,
“இதப்பாரு, நான் செஞ்சிதறன், மதியானம் சாப்டதும் எல்லாத்தயும் கழுவி வச்சிடனும். உங்கம்மா வந்தா வாயே தொறக்கக்கூடாது” என்றாள். என் தம்பி உற்சாகமாகத் தலையை ஆட்டினான். பாட்டி தன் சுருக்குப்பையைத் திறந்து அதிலிருந்து காசை எடுத்து கையில் வைத்துக்கொண்டு என்னை அழைத்தால். என் தம்பி நான் போகிறேன் என் அடம்பிடிக்க, அவள் அதற்கு இணங்கவில்லை. அவன் முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டான். பாட்டி என்னிடம் காசைக்கொடுத்து முதலில் நாடார் கடைக்குச் சென்று சில பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, பிறகு போய் கறி வாங்கி வரச் சொன்னால். நாடார் கடை வீட்டின் எதிரிலேயே இருந்தது. நான் நாடார் கடைக்கு சென்றேன். என் தம்பியும் பின்னாலேயே வந்தான். கடையில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. நான் சென்று கிடைத்த சிறு சந்துகளில் நுழைந்து கடைக்கு முன் அடுக்கியிருந்த அரிசி மூட்டையின் மேல் சாய்ந்துகொண்டேன். என்னை நூல்பிடித்தது போல் என் தம்பியும் வந்து நின்றுவிட்டான். கடையில் இருந்த இருவருமே எங்களை கண்டுகொள்ளவில்லை. சுற்றியிருந்த பெண்களிடமே அவர்கள் பேச்சுக்கள் இருந்தது. என் தம்பி கொஞ்சம் கொஞ்சமாக அரிசியை அள்ளி வாயில் போட்டு மென்றுகொண்டிருந்தான். கூட்டம் குறைய ஆரம்பித்தது. நான் மெல்ல சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது எதார்த்தமாக என் இடதுபுறமாகத் திரும்பிப்பார்த்தேன். தூரத்தில் தெரிந்த டைலர் கடையில் நின்று கொண்டு அவன் பேசிக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் தலையைத் திருப்பிக்கொண்டேன். இதயத்துடிப்பு அதிகரிக்கத் துவங்கியது. அதன் பிறகு அந்தப்பக்கமே நான் திரும்பவில்லை. வேகமாகப் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் கொடுத்துவிட்டு நான் கறி வாங்கப் போகமாட்டேன் என்று கூறிவிட்டு படுத்துக்கொண்டேன்.
“வாங்கினு வந்தா செய்வன்” என்று சொல்லிவிட்டு பாட்டி வெற்றிலையை மடித்து வாயில் வைத்துக்கொண்டாள். என் தம்பி அவன் அழும் வேலையைத் துவங்கினான். தான் போவதாக சொன்னான். ஆனால் பாட்டி அதற்குச் சம்மதிக்கவில்லை. வந்து என்னை எழுப்பினான். நான் ஒரு முடிவுக்கு வந்து அவனிடம்,
“சரி நான் வாங்கினுவரன். ஆனா நீ என் கூட வரக்கூடாது” என்றேன்.
அவன் “சரி” என்றான்.
நான் பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். நேராக  நாடார் கடை அருகே சென்று எட்டிப்பார்த்தேன். அவன் அங்கு தான் இருந்தான். நான் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த தெருவில் நுழைந்தேன். அதைச் சுற்றிக்கொண்டு அடுத்த தெருவுக்கு போய்விடலாம். வேகமாக ஓடினேன். அந்தத் தெருவில் தார் சாலை போடவில்லை. கருங்கல் மட்டுமே போடப்பட்டு அதன் மேல் செம்மண் போட்டு அழுத்தியிருந்தார்கள். கற்கள் ஆங்காங்கே வெளியே தெரியும். வேகமாக ஓடியதில் கால் கட்டை விரலில் கல் பட்டு நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டியது. ஆனால் அப்போது அந்த வலியெல்லாம் பெரிதாக தெரியவில்லை. அவன் மீது இருந்த பயமும், அவன் அதை வெளியே சொல்லிவிடுவானோ என்ற பயமும் கூடவே ஒட்டிக்கொண்டது. அப்படியே ஓடுச்சென்று கறியை வாங்கிக் கொண்டு அதே வழியில் திரும்பி வந்தேன். என் காலைப் பார்த்ததும்  தம்பி ‘ரத்தம்’ என்று அலறினான்.
“எல்லாம் உன்னாலதான்” என்று அவனிடம் எரிந்துவிழுந்து விட்டுப் படுத்துக்கொண்டேன். அன்று முழிக்கவே நான் எழுந்திருக்கவில்லை. மறுநாள் காலை கடுமையான காய்ச்சல் வந்திருந்தது. பள்ளிக்குப் போகவில்லை. அந்தக் காய்ச்சல் அடங்க ஒருவாரம் ஆனது. மெல்ல மறப்பதும் ஏதாவது ஒன்று அதை நினைவுபடுத்துவதுமாக இருந்தது.
ஒருவாரம் சென்று பள்ளிக்குச் சென்றேன். ஏரிக்கு சென்று குளித்த பின் ஒருவாரம் கழித்து அப்போது தான் பள்ளிக்குச் சென்றிருந்தேன். அதற்குள் பலவிதமான கதைகள் உருவாகியிருந்தது. எனக்கு ஜுரம், ஜன்னி, காரில் அடிப்பட்டுவிட்டேன். மீண்டும் வந்து ஏரியில் குளித்து நீரில் அடித்துக் கொண்டு போய்விட்டேன். வீட்டில் தெரிந்து பள்ளியைவிட்டு நிறுத்திவிட்டார்கள். வீட்டில் அடித்ததால் நான் ஓடிப்போய்விட்டேன். எனப் பல கதைகள். நான் இருந்த அதிர்ச்சியையே மறக்கடிக்கும் விதமாக இருந்தது இந்த அதிர்ச்சி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பையன்கள் வந்து விசாரித்தவண்ணம் இருந்தனர். சில ஆசிரியர்களும் கூப்பிட்டு விசாரித்தனர். கதைகள் அவர்களையும் சென்றடைந்திருந்தன.
அன்று மதியம் உணவு இடைவேளை.  நான் எப்போதும் பள்ளியிலேயே போடும் சாப்பாட்டை தான் சாப்பிடுவேன். அதிலும் சிலர் தட்டை வீட்டில் இருந்து எடுத்து வந்து தான் சாப்பிடுவார்கள். நான் பள்ளிக்கூடத்தில் தரும் தட்டைப்பெற்றுக் கொண்டு வந்து வரிசையில் நின்றேன். முதலில் ஆறாம் வகுப்பிலிருந்து தான் சாப்பாடு போட தவங்குவார்கள். பிறகு ஏழாவது அடுத்து எட்டாவது. ஆறாவது போய்க்கொண்டிருந்தது. எனக்குப் பின்னால் இருந்த பையன்கள் பின்னால் இருந்து நெட்டித் தள்ளிக்கொண்டிருந்தனர். என் முதுகோடு இனைந்து ஒட்டு உரசித் தள்ளிக்கொண்டிருந்தனர். பின்னால் இருக்கும் பையன்களுக்கு இது விளையாட்டு. முதலில் நான் இவ்வாறு விளையாடியிருக்கிறேன். ஆனால் இப்போது என் பின்னால் இருந்து என்னை ஒட்டு உரசித் தள்ளுவது எனக்கு அருவருப்பைத் தந்தது. சட்டெனப் பின்னால் திரும்பி என் பின்னால் நின்றிருந்தவனைத் தள்ளினேன். அவன் அவன் பின்னால் இருந்தவன் மேல் போய் விழுந்தான். இருவரும் என்னை முறைக்க, நான் திரும்பி நின்றுகொண்டேன். இப்போது அவர்கள் வேண்டுமென்றே தள்ளத்துவங்கினார்கள். மீண்டும் இதயம் வேகமாகத் துடிக்கத்துவங்கியது. ஏதோ அவன்களே பின்னால் வந்து நின்று அப்படிச் செய்வது போல் தோன்றியது. சட்டென வரிசையிலிருந்து வெளியேறி கடைசியில் போய் நின்றுகொண்டேன். ஏழாவது முடிந்து எட்டாவது ஆரம்பமாகியது. அதுவரை வரிசையில் நிற்காமல் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் எங்கள் வரிசை நகர்வதைப் பார்த்தும் வேகமாக வந்து எங்கள் பின்னால் வந்து நின்றுகொண்டனர். அவர்களின் வேர்வை நாற்றமும், வெயிலில் விளையாடிய உடல் சூட்டோடும் வந்து என்னை உரசியவாறு நின்றனர். அவர்களையும் முன்னால் போகவிட்டு பின்னால் போய் நின்றுகொண்டேன். வரிசை போய்க்கொண்டே இருந்தது.
கடைசியாக நிற்பதினால் என்ன ஆகிவிடப்போகிறது என்று முதலில் நினைத்தேன். ஆனால் சத்துணவில் முட்டைப் போடும் தினங்கள் மட்டும் எப்போதும் கூட்டம் கொஞ்சம் அதிகமாகக் கூடும். வழக்கம் போல் நான் கடைசியில் போய் நின்றுகொள்வதால் எனக்கு முட்டைக் கிடைக்காமலே போய்க் கொண்டிருந்தது. முட்டை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும் இந்த உரசல்களில் இருந்து விலகியிருப்பது சற்று ஆருதலாக இருந்தது.
ஒரு நாள் டைலர் கடையை கடந்து போயே ஆகவேண்டிய சூழல். தனியாக இருந்தால் வேறு தெருவில் புகுந்து வேகமாக ஓடி காரியத்தை முடித்திருப்பேன். ஆனால் கூட என் அப்பாவும் வருவதால் என்னால் அன்று தப்பிக்க முடியவில்லை. மறுநாள் ஆயுதப்பூஜை. வீட்டில் பூஜைக்கு தேவையானதை வாங்க அப்பா புறப்பட்டார். அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை என்னையும் “கூட வா” என்று அழைத்தார். நான் முதலில் நாடார் கடைக்கு தான் கூப்பிடுகிறார் என வேகாக ஓடிச்சென்று அவருடன் இனைந்துகொண்டேன். ஆனால் அவர் நாடார் கடைக்கு செல்லாமல் மார்கெட்டை நோக்கு சென்றார்.  இடதுப் புறமாக டைலர் கடை இருந்தது. நான் என் அப்பாவின் வலதுப் புறமாக ஒளிந்துகொண்டு நடந்தேன். ஓரக்கண்ணால் கடையைப் பார்த்துக்கொண்டே நடந்தேன். கடையில் அவர்கள் இருவருமே இல்லை. லேசாக ஒரு நிம்மதி பரவிய நொடி கடையிலிருந்து ஒரு குரல்,
“டேய் அதோ போறான் பாருடா அவன் தாண்டா” என்று கேட்டது. யார் யாரிடம் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அப்போது அந்தக் கடையை கடந்துக் கொண்டிருந்தது நாங்கள் மட்டும் தான். என் கண்ணில் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. போச்சு இனி இந்தத் தெருவில் என்னால் நடக்கவே முடியாது என்று தோன்றியது. அவங்கள் எல்லாரிடமும் சொல்லிவிடுவார்கள். என் மனதிற்குள் இருக்கும் குழப்பம் எதுவும் தெரியாமல் என் அப்பா அவர் பாட்டுக்கு நடந்துச் சென்று கொண்டிருந்தார். நான் சில நாள் ஏன் இப்படி இருக்கிறேன் என்று இவர்களுக்குத் தோன்றுமா, தோன்றாதா. இவர்கள் கண்களுக்கு நான் தெரிகிறேனா, இல்லையா? எனக்குக் குழப்பமாக இருந்தது. ஆனால் ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. இனி இந்தத் தெருவில் இருந்த கொஞ்ச நஞ்ச சுதந்திரமும் இனி இருக்காது. அவன்கள் இருவரும் இருக்கிறார்களே இல்லையோ, இனி இவன்கள் பார்க்கும் போதெல்லாம் சிரிப்பார்கள். இப்போது சிரித்தமாதிரி. இது எப்படியும் தெரு முழுக்க பரவும். எப்படி கிரிக்கெட் விளையாடப் போவது. அங்கு ஒருவனுக்குத் தெரிந்தால் கூட முடிந்தது. அன்று இரவு முழுவதும் இதைப்பற்றிய சிந்தனையிலேயே உறங்கினேன். மீண்டும் அந்தப் பாம்பு கனவில் வந்தது. இப்போது அது கடந்து போகவில்லை. என்னை நோக்கி வந்தது.  என் முகத்தின் அருகே படமெடுத்து நின்றது. படமெடுத்தவுடன் அது தன் உருவத்தை பெரிதாக்கிக் கொண்டே சென்றது. அதன் நிழல் என் உடல் முழுவதும் பரவியது. சட்டெனக் கண்விழித்தேன். கண்ணை மூடினால் அந்த பாம்பு என் முன் ஆடியது. பாம்பு தெரிந்ததும் கண்ணை திறந்துகொண்டேன். அப்போது தான் அந்த முடிவுக்கு வந்தேன். வீட்டை விட்டு ஓடிப்போய் விடலாம் என. எப்போது விடியும் என காத்திருக்கத் துவங்கினேன். அப்படியே தூங்கியும் விட்டேன்.
காலையில் எழுந்திருக்கும் போதே இரவு எடுத்த முடிவு கண்முன் வந்து நின்றது. அதில் உறுதியாக இருந்தேன். அப்பா காலையிலேயே வேலைக்குச் சென்றிருந்தார். நேராகக் குளித்து முடித்து பள்ளி சீருடையை அணிந்துகொண்டு பையில் புத்தகங்களுக்குப் பதிலாக இரண்டு சட்டையும், ஒரு கால் சட்டையும் எடுத்து வைத்துக்கொண்டேன். பாட்டி தன் காசை ஒளித்துவைக்கும் இடம் எனக்கு மட்டுமே தெரியும். யாரும் பார்க்காத போது அதை அப்படியே எடுத்து பையில் திணித்துக்கொண்டேன். வீட்டைவிட்டு வெளியேறிப் பழக்க தோஷத்தில் கால்கள் பள்ளி நோக்கியே சென்றது. அப்பறம் சுதாரித்து ஆலை ரோட்டை பிடித்து நேராகச் சென்று கடலூர் ரோடு வந்து இடது பக்கமாக திரும்பி உப்பளம் ரோட்டை அடைந்தேன். கால்கள் தெரிந்த பாதையிலேயே சுற்றி சுற்றி வந்தது. அதற்கு புதிய பாதைகளும் தெரியவில்லை, அதை நோக்கு போகவும் தைரியமில்லை. உப்பளம் சாலைவழியாக நேராகக் கடலை நோக்கி நடந்தேன். கண்முன் என்ன வருகிறது, என்ன போகிறது என்று கூட தெரியாமல் முழுக்க சிந்தனை வயப்பட்டவாறே நடந்தேன். ஒருவழியாகக் கடற்கரையில் இருந்த டூபிளக்ஸ் சிலை அருகே சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன். வெயிலுக்கு நன்றாகச் சூடு ஏறியிருந்தது. கடற்கரையில் அந்த நேரத்தில் யாருமேயில்லை. ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருந்தது. அப்படியே வேடிக்கைபார்த்தவாறு அமர்ந்திருந்தேன். அப்பறம் எங்கே போவது என்று தெரியவில்லை.  இப்படியே யோசித்துக்கொண்டு எழுந்து நடக்கதுவங்கினேன். யாரோ என் பின்னால் வருவது போலவே இருந்தது என்று திரும்பிப்பார்த்தேன். என் மாமா சைக்கிளில் நின்றிருந்தார். அவர் என்னிடம் எதுவுமே பேசவில்லை. என் முடியைப்பிடித்துக் குனியவைத்து முதுகில் சரமாரியாக அடித்தார். பிறகு கொன்றுவிடுவது ஒரு பார்வை. அதிசயமாக அப்போது நான் அழவேயில்லை. அதுவேறு அவருக்கு கோவத்தை அதிகப்படுத்தியது.
“ஏறுடா” என்றார்.
நான் அமைதியாக ஏறி பின்னால் அமர்ந்தேன். நேராக என்னை வீட்டில் கொண்டுவிட்டு பாட்டியிடம் விவரங்களைச் சொல்லி “நான் அப்பறம் வந்து பேசிக்கொள்கிறேன்” என்று என்னை மிரட்டிவிட்டுச் சென்றார். அதற்குள் பாட்டியின் காசை யார் எடுத்தது என்று அம்மாவுக்கும், பாட்டிக்கும் ஒரு சண்டை தொடங்கியிருந்தது. காசை எடுத்து பாட்டியிடம் கொடுத்தேன். அன்று அனைவரின் வெறிக்கும் நானே இறையானேன். மாற்றி மாற்றி கேள்விகள். நான் எதற்கும் பதில் அளிக்கவில்லை. என்னுடைய அனைத்து பெருட்களும் நோட்டு புத்தங்களும் ஆராயப்பட்டது.
“பள்ளிக்கூட்த்துல எதனா பிரச்சனையா… நீதானா பண்ணியா…” என இதே கேள்விகளே திரும்பத் திரும்ப கேட்கப்பட்டது. ஒரு நிமிடம் சொல்லிவிடலாமா என்று தோன்றியது. ஆனால் எனக்கு அப்போது நிச்சயமாக தெரியும் “நீ ஏன் அங்களாம் போன” என்று எனக்கு தான் அடி விழுமே தவிர கண்டிப்பாக நடந்ததைப் பற்றி மட்டும் பேசவே மாட்டார்கள். இதையெல்லாம் அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது நான் காசு திருடியது தான்.
“இப்படி திருட்டுப்புத்தி இருந்தா எப்படி, வூட்டுல எப்படி காச வைக்கிறது. புத்தி அப்படித் தானே இருக்கும்” என சந்தடி சாக்கில் பாட்டி அம்மாவை வம்புக்கு இழுக்க அன்றை முழுப்பிரச்சனையும் அப்படியே தோசைப் போல் திரும்பியது. வழக்கம் போல் அப்பா ஒரு பாயும் தலக்கானியையும் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றார். இவர்கள் இனி என் பக்கம் வரமாட்டார்கள் எனத் தெரிந்ததும் நான் போய் படுத்துக்கொண்டேன். என் தம்பி வழக்கம் போல் என் மீது காலைத் தூக்கிப்போட்டான். நான் தள்ளிவிட்டுவிட்டு அவனுக்கு எட்டாத இடத்தில் படுத்துக்கொண்டேன். ஆனால் கடைசிவரை நான் வீட்டைவிட்டு ஓடி போகத்தான் சென்றேன் என்று அவர்களுக்கு தெரியவேயில்லை. நான் ஏதோ காசை திருடி ஊரைச்சுற்ற முயன்றதாகவே நினைத்தார்கள்.
மீண்டும் அதே பயம். மீண்டும் வீடே கதி என்று இருந்தேன். விளையாடக் கூட போவதில்லை. எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று மந்திரிக்கக் கோவிலுக்கு என் அம்மாவுடன் சென்றேன். போகும் வழியில் அவன்கள் இருவரும் நின்றிருந்தனர். தூரத்திலேயே என்னைப் பார்த்து விட்டனர். நான் என் அம்மாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். வழக்கமாக என்னை எங்காவது வெளியில் கண்டால் ஒரு மாதிரியாகச் சிரிப்பார்கள் அல்லது ஏதாவது செய்கையோ ஓசையோ எழுப்புவார்கள். ஆனால் அன்று என்னை யாரென்றே தெரியாது என்பது போல் நின்றிடுந்தார்கள். போகும் வழியெங்கும் என் அம்மா என்னிடம்,
“ஸ்கூல்ல யார் கூடனா சண்டை போட்டியா”.
“இல்லமா” என்றேன்.
“வாத்தியார் அடிச்சாரா?”.
நான் இல்லை என்பது போல் தலையையாட்டினேன். அதன்பிறகு ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தார். இருவரும் அருகே இருந்த அம்மன் கோவிலிக்கு சென்றோம். அப்பா அங்கிருந்த பூசாரியிடம் ஏதோ சொல்ல அவர் கோவிலுக்கு பின்னால் இருந்த வேப்பமரத்திலிருந்து கொஞ்சம் வேப்பிலையை எடுத்துவந்து என் முகத்தில் லேசாக படுவதுபோல் சுழற்றி சுழற்றி அடித்தார். வீட்டுக்கு வந்ததும் என் பாட்டிக்கு அதில் திருப்தியில்லை. மறுநாள் காலையிலேயே என்னை எழுப்பி ஒரு பாய் வீட்டிற்கு சென்று அங்கும் ஒருமுறை மந்திரித்து அழைத்துவந்தார்.
நாட்கள் இப்படியே தான் ஓடினே. அதிக நேரம் வீட்டிற்களேயே அடங்கிக்கிடந்தேன். கடைக்குப் போக முடியாது என வீம்பாக அடிகள் வாங்கினேன். ஆனால் எதையும் யாரிடமும் சொல்லவில்லை. அந்தத் தெருவில் இருந்து வீட்டை காலிசெய்த போது கொஞ்சம் நிம்மதி வந்தது. ஆனால் அவனை அவ்வப்போது பார்க்க நேர்ந்தது. சில சமயம் தூரத்திலிருந்து குரல்கொடுப்பான், யார் என்று திரும்பிப்பார்த்தால் சிரிப்பான். சில ஆண்டுகள் போனதும் தான் அவன் அன்று என்னை என்ன செய்தான் என்றே புரிந்தது. அது வரை ஏதோ தவறுவிட்டோம் என்று தெரியுமே தவிர என்ன என்று தெரியவில்லை. அதன் பிறகு என் மேல் எனக்கு ஒருவிதமாக அருவருப்பு ஏற்பட்டது. அது நான் சென்னைக்கு வரும் வரை என்னைத் தொந்தரவு செய்தது. சென்னைக்கு வந்த பிறகே அந்தச் சம்பவத்தை நான் முழுவதுமாக மறந்தேன். இன்று காலை அந்த தெருவைப் பற்றி பேச்சு வரும் வரை என் நினைவில் அது சுத்தமாக இல்லை.
புதுச்சேரிப் பேருந்து நிலையம். என்ன செய்வது என்று குழப்பமாக நின்றிருந்தேன். போவதா வேண்டாமா என்று எனக்குள்ளேயே பல முறைக் கேட்டுக்கொண்டேன். முதலில் நண்பர்களைப் பார்த்துவிடலாம் என்று ஒவ்வொருவராகப் போனில் அழைத்தேன். ஒருவன் மட்டும் ஓய்வாக இருப்பதாக சொன்னான். முதலில் அவன் வீட்டுக்குச் சென்று பத்திரிக்கை வைத்துவிட்டு பிறகு அவன் வண்டியிலேயே மற்றவர்கள் வீட்டுக்குச் சென்று பத்திரிக்கை வைத்தேன். எல்லாரும் ஒருநாள் இருந்துவிட்டு போகும்படி சொன்னார்கள். மாலையில் மது அருந்த போகலாம் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கு முதலில் புறப்பட்டால் போதும் என்று இருந்தது. அனைவரின் வேண்டுதல்களையும் நிராகரித்துவிட்டுப் புறப்பட்டேன். அவனே என்னை மீண்டும் பேருந்து நிலையத்தில் கொண்டுவந்து விட்டான். நேரம் மதியம் மூன்று முப்பது. மீண்டும் குழப்பம் மண்டைக்குள் குடிவந்தது. பல குரல்களும், கேள்விகளும் ஒலித்தது.
“இன்னும் எத்தனை நாள் இப்படியே பயப்படுவாய்” என ஒரு குரல் மெல்லக் கேட்டது.
பல கேள்விகள் என் மண்டைக்குள் அது பாட்டுக்கு ஒலிக்க நான் என்னை அறியாமலேயே முதலியார்பேட்டை செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தேன். சரியாக பதினைந்து நிமிடத்தில்  முதலியார்பேட்டையில் பேருந்து நிறுத்ததில் இருந்தேன். நேராக மார்கெட் ரோடும், பெருமாள் கோவிலும் தெரிய அதையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். தெரு நிறைய மாறியிருந்தது. கோவில் புதுசாக பெயிண்ட் அடிக்கப்பட்டு பலப்பல வென்று இருந்தது. தெரிவின் முனையில் புதுசாக ஒரு தடுப்பு வைத்து கட்டங்கட்டமாக கட்டிடமும் அதில் சில் காய்கறி கடையும் இருந்தது. தெருமுனையில் முனிசிப்பாலிட்டு அலுவலகத்தில் அழகாக இருந்த மரத்தை காணவில்லை. ஏதோ மொட்டை அடித்த மாதிரி இருந்தது. தெருவின் முனையில் எப்போதும் இருக்கும் நிழல் சுத்தமாக இல்லை. சுற்றி ஒரு முறைப்பார்த்தேன். பல புதிய கட்டிடங்கள் கடைகள் முலைத்திருந்தன. நாடார் கடைக்கு போக ஏதோ ஏழு மலை, ஏழு கடல் கடக்க வேண்டும் போல் இருந்தது. நிச்சயம் நானாகப் போய் அறிமுகம் செய்து கொண்டாலொழிய யாருக்கும் என்னை இப்போது அடையாளம் தெரியாது. மூச்சை நன்றாக இழுத்துவிட்டேன். இரண்டு நாய்கள் தெருவுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.  தெருவை ஒருமுறை உற்றுப்பார்த்துவிட்டு பக்கத்து தெருவை நோக்கி நடந்தேன்.

2 Replies to “மௌனம் களையட்டும்”

  1. இக்கதையின் நாயகன் புழங்கிய இடங்களைத்தும் எனக்கு அத்துப்படி.அந்த ரயில்வே ட்ராக்கும் அந்த பனைமரம் நிறைந்த ரெட்டைஏரிக்கரையும் என் பால்ய கால நினைவலைகளை மீட்டுருவாக்கம் செய்தன.அந்தப் பேச்சாற்றல் கொண்டான் பெயரைத் தாங்கிய பள்ளியில்தான் நானும் படித்தேன்.
    வாழ்த்துக்கள் தோழரே!ஆற்றோட்டமான நடை.தேர்ந்த கதைசொல்லியின் முத்திரைகள் கதை முழுக்கவும்.கதையின் கடைசி இரண்டு வரிகளில் நின்று விட்டீர்கள் போங்கள்.வாழ்க்கையில் பல தருணங்களில் இப்படி ‘அது கிடக்கிறது நாய்கள்’என்று புறந்தள்ளி நடக்கத் தெரிந்துவிட்டால் நாளும் சொர்கமே.

  2. இக்கதையில் கூறப்பட்டுள்ள இடங்களனைத்தும் நான் எனது பள்ளிப்பருவத்தில் புழங்கிய இடங்களாக இருப்பதால் மிகவும் அணுக்கமாக உணர்கிறேன்.கதை மிகவும் லாவகமாக நடையில் செல்கிறது.கதையின் இறுதி வரிகள்தான் கதையின் முத்தாய்ப்பாக அமைந்துவிட்டது.கதாசிரியருக்கு எனது பாராட்டுக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.