மோ வு மோ வு


மேலைக் கடல் அமைதியாக இருந்தது. முரட்டுத்தனமான ஆர்ப்பரிப்புடன் முழங்கும் அவள் இந்த மாதங்களில் இத்தனை அமைதியாக இருந்ததில்லை. காவல் அரண்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரியர் அட்மிரல் நந்தா ’கோ மேன், எஞ்சாய் லைஃப், இப்பதான கல்யாணம் ஆச்சு, போய்யா, நாங்க பாத்துக்குறோம்’ என்று மனமகிழ்ந்து அளித்த ஒருவார விடுமுறை. கிரிதரும், மீராவும் லோனவாலாவிற்கு பறந்து வந்து விட்டார்கள். அவளுக்கு ஊட்டிக்குத்தான் போக வேண்டும் என்று ஆசை. “ஜூலை, ஆகஸ்ட்ல யாராச்சும் லோனவாலா போவாங்களா?”’போவாங்களே, மீரா இருந்தா அந்த இடமே அழகு கொஞ்சாதா?’ என்று அவன் சிரித்தான்.
லோனவாலாவின் புகழ் பெற்ற சீரோதா (சீதோடா) ஏரி அமைந்துள்ள மலைக் காடுகளுக்கு அவர்கள் வந்தார்கள். பகல் பொழுது என உணர முடியாத அடர் காடு. புது மணத் தம்பதிகளை வரவேற்பது போல் வீசிய காற்றில் சிலிர்த்து மலர்களை இதழிதழாக தூவிய மரங்கள்; காற்றில் பரவி வந்த சாரல்; அழைக்கும் பேடையின் குரல், கண்டடையப் பறந்து தவிக்கும் ஆண்; அவற்றைக் கேலி செய்வது போல் பறந்து பறந்து தேன் தேடும் பெரும் வண்ணத்துப் பூச்சிகள், பசிய ஒளியில் வண்ணக் கோலங்கள்; ‘எங்கே இந்தப் பக்கம்?’ என்று துள்ளிக் குதித்து கேட்டுக்கொண்டே ஓடிய காட்டு மான்கள்.’நீ நேவியில் இருந்தால் எங்களுக்கென்ன?’என்று முறைத்துக்கொண்டே காட்டுச் சாலையைக் கடக்கும் எருமைகள். குன்றுகள் அசைவது போல் நடையழகுடன் குடும்பம் குடும்பமாகச் செல்லும் யானைகள்,கூடவே வந்த வழிகாட்டி காட்டிய சிறுத்தைகளின் பாதத்தடங்கள்.’இது வேறு உலகம்’ எனத் தோன்றியது மீராவிற்கு.
சீரோதா ஏரி,உலகின் அத்தனை அமைதியையும், அழகையும் கொட்டி இயற்கை படைத்த நீர் நிலை.காடுகளின் நடுவே அவளொரு இளவரசி.பரந்து விரிந்து, உயர்ந்த மலையில் உயிர்கள் தேடும் நிறைவை வைத்துக்கொண்டு அழைத்துக் கொண்டிருக்கிறாள்அவள்.பலப்பல யுகங்களின் முன்னர் வானிலிருந்து அமுதைத் திருடிக்கொண்டுவந்த கந்தர்வர்களும், தேவ கன்னிகைகளும் மலையின் நடுவே மிக அந்தரங்கமாக சேமித்து வைத்து விளையாடிய தடாகம் என்ற மயக்கம் ஏற்பட்டது.மாலை மெல்ல மெல்ல அணுகி வந்தது.மனிதர்கள் ஓரளவிற்கு இருந்த போதிலும் பேச்சின் ஒலி எழாத அமைதி.கண்ணாடித்தகடென விரிந்திருக்கும் ஏரியில் பேச்சின் ஒலி விரிசலை உண்டாக்கிவிடும் என எண்ணியதைப் போல் கிரியும், மீராவும் அமர்ந்திருந்தார்கள்.
திரை போல் இருள் கவியக் கவிய ஏரியின் கரையோரங்களில் கேம்ப் ஃபயர் முளைத்தது.வண்ண வண்ண நாடோடிக் கூடாரங்களிலிருந்து வித விதமான இசைக் கருவிகளோடு மனிதர்கள் அந்த செந்தீயைச் சுற்றிக் குதித்து ஆடினார்கள், பாடினார்கள்.மீராவிற்கு இங்கு வீணை இல்லையே என்று ஏக்கமாக இருந்தது.கிரி புல்லாங்குழலை எடுத்து அவளுக்குப் பிரியமான ”நீரில் படரும் நிலவின் ஒளி உன் அழகைக் காண ஏறி வந்தது. காட்டுக் கூடாரத்தில் உன்னை ஒளித்தேன். காற்று போய் சொல்லி விட்டது’’ என்று வாசிக்கையில் இன்பம், முழு இன்பம் இதுதானோ என நினைத்தாள்.
குழுக்களாகக் கூடி அங்கிருந்தவர்கள் புதிர் விளையாட்டுக்களைத் தொடங்கினர்.வார்த்தைகளையும், எழுத்துக்களையும் கலைத்துப் போட்டு ’கநீ,கிரி,கூல், சப,ஸட,நரு,யம்,லனி,வல,தவி,தான்..என்று மீரா வேகமாகச் சொல்லிக்கொண்டு போகையில் பேந்தப் பேந்த எல்லோரும் முழித்தார்கள்.
’யங்க் மேன், நீயாவது உன் மனைவி சொல்வதைக் கண்டுபிடியேன்!’ அவன் சரணம் என்று கைகளை உயர்த்திய அதே நேரம்,அவன் உள் சட்டையில் சிறு கருவியின் அதிர்வு கேட்டது.சங்கேத மொழியில் ‘அவசரம், வா’என்றது.முகத்தில் ஒன்றும் காட்டாது ‘பசிக்கிறது, வா, சாப்பிட்டுவிட்டு வரலாம், ஸீ யூ கெய்ஸ்’ என்று கிளம்பினான்.மீராவிற்கு தன் பஸில்லை யாருமே கண்டுபிடிக்கவில்லையே என்ற பெருமையும், வருத்தமும்.’சாப்ட்டுட்டு கேம்ப்ஃபயருக்கு போலாமா?’ என்றாள். ‘இல்ல, இராணுவ காப்டர் டவுன் ஸ்டிரிப்பில் நிக்குது.சாப்ட நேரமில்ல, ப்ரெட் பாக்கெட் எடுத்துக்கோ, போறச்சே சாப்ட்லாம்’
“ஏதாவது எமெர்ஜென்சியா?’
‘தெரியல.ஆனா, நாம அவசரமா போறதா காட்டிக்கப்படாது, காப்டர்ல போறச்சே இதப் பத்தி பேசக்கூடாது; சும்மா கிண்டலா தேன்    நிலவு வழிசலோடத்தான் போகணும்.’
இன்னதென்று புரியாத பயம் அவள்வயிற்றைக் கவ்வியது.’கிரி, உனக்கு ஏதாவது ஆபத்தா?’
‘ஜஸ்ட் கீப் கொயட்’ என்ற அவன் கடுகடுப்பு அவளுக்குப் புதியது.”பயப்படாதே,நான் வர எவ்ளோ நாளாகும்னு தெரியாது; செல்லுலயும் பேச முடியும்னு தோணல, எப்படியாவது கான்டாக்ட்ல இருக்கப் பாக்கறேன். தைர்யமா இரு.”கண்ணீர் வழிய ஆரம்பித்த கன்னங்களில் அவன் உதடுகள் உத்வேகத்துடன் பதிந்தன.
கப்பற்படையின் இரகசிய நிலவறையில் நந்தா,விஸ்வம், சாந்தா,அலெக்ஸ் நால்வரும் காதுகளே கண்களாக உன்னிப்பாகக்  கேட்டுக்கொண்டிருந்தனர்.கிரி உள் நுழைந்த போது சமிக்ஞையால் வரவேற்று ‘டெலி ப்ரின்டெர்’ போன்ற கருவியின் முன் அவனையும் உட்காரச் சொன்னார்கள்.
‘வைஸ் அட்மிரல் ஆன் வே. டெசிஃபர் சிக்னல், அலெர்ட்கோஸ்ட்  கார்ட் நாட் இன்ஃபார்ம் எனிதிங் நௌ; அவெய்ட்ஆர்டெர்ஸ் ஃபார் சேம்’
கிரி ஒன்றும் புரியாமல்  கண்களால் என்ன விஷயம் என்றான்.
அந்த நேரம் சிறிது முன்னர் கேட்ட ஒரு விசித்திரமான, சன்னமான ஒலி கேட்டது.கடலில் நங்கூரமிட்டு நின்றிருந்த பெரிய சரக்குக் கப்பலிலிருந்து துறையில் பெர்த் கேட்டு  வந்த வேண்டுகோளின் ஊடாக அந்த ஒலி கேட்டது.மறுகணம் அந்த ஒலி தென் மும்பையின் ஏதோ ஒரு மூலைக்குள்ளாக பயணிப்பது ட்ரேக்கில் தெரிந்தது;சில நொடிகளில் அது வடக்கு நோக்கி கராச்சியின் எல்லைக்குள் சென்றது; பின்னர் தொடர்பு முற்றிலுமாக அறுந்து போனது.
தொடர்பு எல்லைகளுக்கு உட்படாமல் இந்திய வான்விண் எல்லையில் பயணித்த அது என்ன, யாரால் யாருக்காக,எந்த நன்மை அல்லது தீமைக்காக அங்கீகரிக்கப்படாத செல்ஃபோன் மூலம் பரவுகிறது?அது அந்த பெரிய கப்பலுக்குள் இருக்கும் யாரோ ஒருவரின் கைபேசியா,அல்லது ஏதும் டெரரிஸ்ட் குழு அவர்களை பிணையக் கைதிகளாகப் பிடித்திருக்கிறதா, டிஸ்ட்ரெஸ் சிக்னல் வரவில்லையே, அந்த சிறு ஒலி கொண்டு வந்த செய்தி தான் என்ன,அது தெற்கு மும்பையிலிருந்து கராச்சிக்கு ஏன் போனது?அங்கிருந்து எங்கு போயிருக்கும்?ஐவரும் என்ன செய்து இந்த நுனிகளைக் கோப்பது எனத் திகைத்தனர். அவர்கள் மனதில் 26/11/2008 நிழலாடியது. எத்தனை கொடிய நிகழ்வு!நான்கு நாட்கள் நீடித்த போராட்டம், அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்ட பரிதாபம்;மீண்டும் அவர்கள் தலைதூக்குகிறார்களா?எல்லைக் கடற்படையிடமிருந்தோ, உளவுத் துறையிடமிருந்தோ, நம்முடைய நேச நாடுகளிலிருந்து வந்த செயற்கைக் கோள் புகைப்படங்களிலிருந்தோ இப்படிப்பட்ட குறிப்புகள் வரவில்லையே!
கிரி  கப்பற் படையின் தனிப்பட்ட கணிப்பொறியை விட்டு அகலாமல் அமர்ந்து கொண்டான். நந்தா முப்படை தளபதிகளுக்கும், கப்பற்படை உயர் அதிகாரிகளுக்கும்,கடல் சார்ந்த கரை பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ‘எச்சரிக்கை, ஏதோ மாறுதலாகத் தெரிகிறது, விழிப்புடன் இருக்க கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள், இரகசியம் மிக அவசரம்’ என்று செய்தி அனுப்பிக் கொண்டிருந்தார்.சாந்தா அந்த ஒலி அல்லது சமிக்ஞை மீண்டும் வருகிறதா எனப் பார்த்துக் கொண்டே இருந்தார். விஸ்வமும்அலெக்ஸும் ‘கம்பாட்ஸ்’களுக்கு மிகச் சுருக்கமாக உத்தரவு அளித்து ‘பொசிஷன் அலெர்ட்’ செய்து கொண்டிருந்தனர்.புரிபடாத அவசர நிலை,சொல்லத்தெரியாத அபாயம்; ஆனால், இவை கூட அனுமானமாக இருக்கலாம்;இவர்கள் அலட்சியப் படுத்தக்கூடாது, பயமுறுத்தவும் கூடாது.
பாவம் மீரா,இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்?தேன் நிலாவை  இப்படி இரு நாட்களில் முடித்துக் கொண்டு கடுமையாக விரைந்து வந்த தன்னைப் பற்றி அவள் என்ன நினைப்பாள் என அவன் கசந்து கொண்டான் ச்சே, கல்யாணம் செய்து கொண்டிருக்கக்கூடாது !
திடீரென்று அவன் கணிணியில் வு வு என்ற வடிவத்தில் எழுத்துக்கள் தோன்றின.தமிழிலா வருகிறது என அவன் ஆச்சர்யப்பட்டான்.ஆனால், இதன் அர்த்தம் என்ன? கணிணித்திரையையே பார்த்துக்கொண்டிருந்ததனால் இப்படி ஒரு மயக்கம் ஏற்பட்டிருக்குமோ?ஆனால், மீண்டும் தெளிவாகத் தெரிந்து மறைந்த எழுத்துக்கள் அவன் பார்த்ததை உறுதிப்படுத்தின.
சிறிது இடைவெளியில் மோ வு மோ வு என்று ஒன்று பளீரிட்டது.அந்த எழுத்துக்கள் தலைப் பகுதி குறுகியும், நடுவே பெருத்தும்,வாலில் குறுகியும் தட்டையாக நீண்ட உடல் அமைப்போடு காணப்பட்டன்.மோ வு மோ வு.”சாந்தா, மேம், இதைப் பாருங்கள்” என்று ஏறக்குறைய அவன் கத்தினான்.கணிணியில் அந்த எழுத்து வடிவத்தை பல கோணங்களில் உறையச் செய்த அவள் ‘இது சமீபத்தில் வந்த இன்டெர் ஸ்டெல்லுலார் பொருள். ஹவாய் மொழிப் பெயர் இது.’அப்பாலிலிருந்து வந்த தூதன்’ என்று பொருள்.ஆனால், இது எப்படி இங்கே தெரிகிறது வெறும் எழுத்துக்களாக. அதற்கு புவியில் ஹவாயில் வைத்த பெயர் எப்படித் தெரியும்? புதிர் கூடிக்கொண்டே போகிறதே’ என்றாள்.
அன்னிய உறவுத் துறை மந்திரியின் மூலம் ஹவாய் தொடர்பு கொள்ளப்பட்டது.அவர்களுக்கு ஆச்சர்யம்; அந்த எழுத்துக்களை படமாக அனுப்பக் கேட்டார்கள்.ஆனால், அவர்களாலும் சொல்ல முடியவில்லை.
கிரி மண்டையை உடைத்துக்கொண்டான்;என்ன ஆபத்து காத்திருக்கிறது? எந்த நேரத்தில் அது நடக்கும்? உண்மையில் ஆபத்துதானா அல்லது கவனம் திருப்பும் முயற்சியா?ஒலி கிளம்பிய பெரும் கப்பல் கண்காணிப்பில் வைக்கப்பட்டது; அதில் சந்தேகத்திற்குரியதாக ஏதுமில்லை;சரக்குக் கப்பல் வேறு, மாலுமிகள், சைலர்ஸ் குறைவாகத்தான் இருந்தார்கள்.
‘அந்த எழுத்துக்களில் க்ளூ இருக்கலாம், மாத்தி யோசி கிரி’ என்று அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.ஒரு பொறி தட்டிற்று; மீரா விளயாடிய எழுத்து மாற்றிய விளையாட்டு.அவன் உற்சாகமானான்,’ வு’வை தலைகீழாக்கி எழுதிப் பார்த்தான்.புரியவில்லை. அந்த எழுத்திலிருந்து நேர்கோட்டை பிரித்த போது ‘உ’வந்தது. வளைந்த சுழல் கடலைக் குறிப்பதோ;செயற்கைக்கோள் புகைப்படங்களில் அரேபியன் கடல் அப்படித்தானே சுழன்று காணப்பட்டது.’உ’வின் சுழற்சிக்கிக் கீழே அமைந்த கோடு நீண்டிருந்தாலும் அது ஆழ் மூழ்கும் கப்பலைக் காட்டுவதாகக் கொண்டாலும் ‘வு’வில் பிரித்த நேர் கோடு என்ன சொல்கிறது?
‘அது வடக்கு திசையைக் காட்டுகிறது’ என்றான் விஸ்வம்
‘அப்போ அது ‘ரிபீட்’ ஆகிறதே’
“சார்,அது வடக்கின் வடக்கே ஆனால் அரேபியன் கடலுக்குள் என்பதாகச் சொல்கிறது” என்றான் விஸ்வம்.
‘சரி, ‘மோ’வின் அர்த்தம் என்ன? அதுவும் இருமுறை வருகிறதே!’
‘தெரியல்ல சார்.ஆனா, தப்பா நினக்கலன்னா என் வொய்ஃப் இதுல உதவக் கூடும்’
“சரியான காதல்யா உனக்கு. நாமளே முழிக்கிறோம்”
‘சார். அதிக நேரமில்ல, கிரி சொல்றதையும் பாத்துடுவோமே’
ரியர் அட்மிரல் சம்மதியாமல் சம்மதித்தார்.
மீராவிற்குச் சூழலே புதிது.அவள் உன்னிப்பாகக் கேட்டாள், அந்த’மோ’வை பார்த்துக்கொண்டேயிருந்தாள்.நடுவில் உள்ள ‘ம’வை திருப்பி எழுதினாள்.இப்போது நேர்கோட்டைப் பிரித்தவுடன் ‘ஆன்டி-க்ளாக்வைஸ்ஸில் சுழல் உள் நோக்கி வந்தது. தனி ஒலியற்ற அந்த எழுத்துக்கள், அதுதான் ‘ம’வின் முன்னும் பின்னும் உள்ளவை அதிக மனிதர்களற்ற தீவுகளைக் குறிக்கலாம் என்றாள்.
‘சுகொர்த்தா’—யூரேகா- ஏமனில் உள்ள தீவு.செயற்கைக் கோள் அலைபேசி செய்தியை அங்குதான் அனுப்பியிருக்கிறது.நீர் மூழ்கிக் கப்பல் மூலமாக மீண்டும் ஒரு 26-11 நிகழ வாய்ப்பு இருக்கிறது. அதை அன்னிய உறவுத்துறையிடம் சொல்வோம், உளவுத்துறையிடமும் சொல்வோம்.நம் கப்பற்படை அந்த திசையை நோக்கி பயணப்படட்டும்.எல்லாம் சரி, நமக்கு ஏன் அந்த இன்டெர் ஸ்டெல்லுலார் பொருள் செய்தி அனுப்ப வேண்டும்?சுகொர்த்தாவில் அப்படி ஒரு சதி அவர்கள் அறியாமலே வகுக்கப்பட்டிருந்தால், அவர்களும் காக்கப்படுவார்கள், நாமும்தான். மிஸஸ். கிரி மெடல் உங்களுக்குத்தான்.
கிரி அவள் காதோரம் வந்து’கமு கத் கத கம் கதா’ என்றான்.அந்த விண்வெளிப் பொருளை விஞ்ஞானிகள் ஆராயட்டுமே சார்’ என்றான் சிரித்துக் கொண்டே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.