மூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)


1970கள் அல்லது 80களில் வெளிவந்த பல இந்திய திரைப்படங்களில் வில்லன்கள் இந்தியாவுக்குள் தங்கம் கடத்திக் கொண்டு வருபவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். அந்தப் படங்களைப் பார்த்து வளர்ந்த காலத்தில் நாம் அந்த வில்லன்கள் தேசபக்தியில்லாத குண்டர்கள், அவர்களுக்கு சுயநலம்தான் முக்கியம் என்று நினைத்துக்கொள்வது வழக்கம். அப்போதெல்லாம் இந்தியா ஒரு மாபெரும் லைசன்ஸ் ராஜ் நிர்வாகமாக இருந்தது. பெரும்பாலான பொருளாதாரச் செயல்பாடுகளை கோட்டாக்கள் மற்றும் உரிமங்கள் (Licenses) கொண்டு இறுக்கிப் பிடித்து அரசாங்கம் தன கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இந்த அணுகுமுறையை ஒரேயடியாய் முட்டாள்தனம் என்று சொல்லிவிட முடியாது. சுதந்திரம் பெற்ற புதிதில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருந்த இந்தியாவை தூக்கி நிறுத்த அந்நாளைய தலைவர்கள் கையெடுத்தது அந்த அணுகுமுறை. சோவியத்யூனியன், அமெரிக்கா என்ற இருதுருவ வல்லரசுகள் பயன்படுத்திய முறைகளை ஆய்ந்து பார்த்து, இந்தியாவுக்கு ஏற்றது என்று நடுவாந்திரமான அமைப்பாக உருவாக்கப்பட்ட முறை அது. அந்த அமைப்பில் அரசுக்கு உரிமையான உள்ளூர் கார் தொழிற்சாலையைப் பாதுகாக்க வெளிநாட்டு கார்களுக்கு 150% இறக்குமதி வரி போடுவது போன்ற கடுமையான வரிச்சுமை பெருவாரியான அந்நிய பொருட்களுக்கு உண்டு. இந்திய தேசமெங்கும் நிகழும் அன்றாட பொருளாதார பரிவர்த்தனைகளை மையத்திலிருந்து கண்காணித்து கட்டுபடுத்தி நிர்வகிக்க அரசு விரும்பியதால் வந்த விளைவு இது அத்தனையும்.

எண்பதுகள் முழுதும் இந்திய ரூபாயின் மதிப்பு மத்திய வங்கியால் முட்டுக் கொடுத்து உயர்த்தி வைக்கப்பட்டது. இந்தக் காரணத்தால் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு பத்து ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது. இது அதன் உண்மையான மதிப்பல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்ட மதிப்பு என்பதால் பயணிகளுக்கு டாலர் தட்டுப்பாடு எப்போதும் இருந்தது. 1989ஆம் ஆண்டு நான் மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்தபோது என் கல்விக் கட்டணத்தைச் செலுத்த என்னிடமிருந்த இந்திய ரூபாய்க்களை அமெரிக்க டாலர்களாக மாற்ற வேண்டியிருந்தது. இது எதுவும் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடு இல்லை. வெளிப்படையாக வங்கிகள் வழியாகத்தான் இதெல்லாம் செய்தேன் என்றாலும், அப்போது நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில வருடங்களுக்குப் பின்னால் தொண்ணூறுகளில் இந்தியா தான் வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாத நிலையை எதிர்கொண்டபோது வேறுவழியில்லாமல் பொருளாதார தாராளமயமாக்கம் நடைமுறைக்கு வந்தது. அப்போது இந்த விதிகள் எல்லாம் நீக்கப்பட்டு சந்தைப் பொருளாதாரம் இன்னும் சற்று அதிகமாக இந்தியாவில் இயங்கத் தொடங்கிற்று. எல்லா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டபின் இன்று டாலரின் மதிப்பு அறுபத்து ஐந்து ரூபாய்க்கு அருகில் இருக்கிறது. இந்தியாவில் அதிகரிக்கும் பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்கிறோமா இல்லையா என்பதைப் பொறுத்து கடந்த ஆண்டுகளில் அதன் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது, அல்லது தன் மதிப்பைக் காப்பாற்றி நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் தீர்மானிக்கலாம். ஆனால் ஒன்று. நம் தேவை எதுவாக இருந்தாலும் சரி, ரூபாய் டாலர் பணமாற்றம் செய்வது இப்போது கஷ்டமாக இல்லை. ரூபாயின் மதிப்பு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மிதக்கும் காரணத்தால் பணமாற்றத்தில் இருந்த கறுப்புச் சந்தை (ஹவாலா) இன்று அழிந்து விட்டது. அதே கதிதான் தங்கத்துக்கும் ஏற்பட்டது. பத்து சதவிகிதம் என்பது போன்ற ஒரு நியாயமான வரி கட்டி நீங்கள் ஒரு கிலோ தங்கம் வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் கொண்டு வரலாம் என்ற நிலை ஏற்பட்டபின் இந்திய சினிமாவில் தங்கம் கடத்தும் வில்லன்கள் காணாமல் போய் விட்டார்கள்!

இது ஏதோ இந்தக்காலத்திற்கு சம்பந்தமில்லாத பழைய கால இந்திய வரலாறு என்று நினைக்க வேண்டாம். உலகிலேயே மிக அதிகமாக கச்சா எண்ணெய்யை தரைக்கடியில் வைத்துக்கொண்டிருந்தாலும், இன்று தடுமாறி தத்தளித்துக் கொண்டிருக்கும் தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவை பார்த்தால் இந்தப்பிரச்சினையின் இந்நாளைய தீவிரம் எளிதாகப் புரியும். அந்த நாட்டின் பணத்திற்கு பொலிவார் என்று பெயர். பணவீக்கம் தலைகால் புரியாத உயரத்திற்கு சென்றுவிட்ட நிலையில், அரசாங்கம் ஒரு அமெரிக்க டாலர் சுமார் இரண்டு லட்சம் பொலிவாருக்கு சமம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் வெளி சந்தைகளில் ஒரு அமெரிக்க டாலர் சுமார் இருபைத்தைந்து லட்சம் பொலிவாருக்கு விற்றுக்கொண்டிருக்கிறது! எனவே எக்கச்சக்க கருப்புப்பணம், வரி ஏய்ப்பு. சமாளிக்க முடியாமல் தடுமாறும் அரசாங்கம். பசியில் வாடும் குடிமக்கள். செயற்கையாய் ஒரு நாட்டின் பணத்திற்கு இப்படி சம்பந்தமில்லாத ஒரு விலையை நிர்ணயித்து முட்டுக்கொடுத்து நிறுத்த முயன்றால், அரசோடு நல்ல உறவு வைத்திருக்கும் சிலருக்கு பணம் கொழிக்கும், சாதாரண மக்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக ஆகும்.

காசு பணத்தை விட்டுவிட்டு இன்னும் இயற்கையோடு ஒன்றிணைந்த நதிகளின் போக்கை எடுத்துக்கொள்வோம். சென்ற நூற்றாண்டின் பல பத்தாண்டுகள் வரை உலகெங்கும் மாபெரும் அணைகள் கட்டப்பட்டன. தேசீய அரசுகள் தண்ணீரைச் சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் ஒரு தொலைநோக்குப் பார்வைக் கொண்ட  திட்டமாக அணை கட்டல் காணப்பட்டது. ஆனால் தொண்ணூறுகளில் இந்தப் பார்வை மங்கத் தொடங்கியது. இப்போதும் பெரிய அணைகள் இருக்கின்றன, ஆனால் நீரை அதன் போக்கில் போக விட்டு, குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுடன் அதைப் பயன்படுத்திக் கொள்வதுதான் சிறந்தது என்ற உண்மை நமக்கு விளங்கிவிட்டது. தண்ணீர் தானாகச் செல்ல விரும்பாத இடத்துக்கு வலுக்காட்டாயமாக அதனைக் கொண்டு செல்வதால் அல்லது அது விரும்பும் இடத்திற்கு போக விடாமல் தடுத்தால், அதனால் ஏராளமான எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன, நீண்ட கால கணக்கைப் பார்த்தால், இதனால் நன்மை விளைவதைவிட அதிக அளவில் தீமையே உருவாகிறது.

வளரும் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பொருட்களையும் சேவைகளையும் இடம் மாற்றியளிக்கும் மனிதர்கள் ஓடும் நதிகளையும் கடத்தப்படும் தங்கத்தையும் போன்றவர்கள். அதன் ஓட்டத்தைத் தடுக்கவும், முறைப்படுத்தவும் நீங்கள் நினைக்கலாம். குறுகிய காலம் அதில் நீங்கள் ஓரளவு வெற்றி பெறவும் கூடும். குறிப்பிட்ட சிறிய இடங்களில் (in small scales) ஒரு வேளை முழு வெற்றியும் கிட்டலாம். ஆனால் கணிசமான பரப்புகளில் பெரிய அளவில் இது நடக்கும்போது முறைப்படுத்த விரும்புபவர்களை மீறிச் செல்லும் வழியை மனிதர்கள் விரைவாகவே கண்டு கொண்டு விடுகிறார்கள். தடுக்க முயன்றால் அதன் விளைவுகள் பயங்கரமாகவோ பரிதாபமாகவோ  இருக்கின்றன. ஆனால் இதற்கு அர்த்தம் தண்ணீர், பொருட்கள், மனிதர்கள், சேவைகளை முறைப்படுத்த நாம் நினைக்கவே கூடாது என்பதல்ல. பிறருக்கு எந்த தீங்கும் ஏற்படாதவரை தண்ணீர் தன் போக்கில் போகட்டும் என்று விடுவதும், மனிதர்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும் என்று அனுமதிப்பதும் சிறந்த நிர்வாக கொள்கையாகும். அது நிர்வாகச் செலவினங்களைக் குறைக்கும், வளர்ச்சிக்கு தடையாய் இருக்காது.

‘பார்டர் ட்ரிலஜி’ (Border Trilogy) என்று மூன்று பகுதிகள் கொண்ட ஒரு ஒலிச்சித்திரத் தொடர் ரேடியோலாப் (Radiolab) என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியாக ஒலிபரப்பப்பட்டது. அந்த மூன்று பாகங்களும் நீங்கள் தரவிறக்கம் செய்து கேட்க இங்கே காத்திருக்கின்றன – பகுதி 1, பகுதி 2, பகுதி 3. இவற்றை கேட்டு முடிக்க உங்களுக்கு மூன்று மணி நேரம் செலவாகலாம், ஆனால் கேட்கும்போது பாதுகாப்பான இடங்களுக்குப் புகல் புகும் வழியில் கடுமையான தடைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தாலும் வேறு வழியில்லாத குடியேறிகள் ஏன் தங்கள் தாயகத்தை விட்டுத் தப்பிச் செல்கிறார்கள் என்பது பற்றிய பல தெரிவான புரிதல்கள் உங்களுக்கு கிடைக்கும். இந்த ஒலிச்சித்திரம் அமெரிக்க மெக்ஸிக எல்லையைச் சுற்றி நடந்த நிகழ்வுகளை பதிவு செய்கிறது. டெக்ஸாஸின் தென் முனையில் உள்ள எல்லைப்புற நகரம் எல் பாஸோ (El Paso). அது மெக்ஸிகோவின் வட முனையில் உள்ள வாரஸ் (Juarez) என்ற நகருடன் ஒட்டியிருக்கிறது. கூகுள் மேப்பில் பார்க்கும்போது இந்த இரு நகரங்களும் புவியியல் வியூகப்படி மொத்தமாய் சேர்ந்திருக்கும் ஒரே பிரதேசம் என்பதையும், குறுக்கே செயற்கையாய் உருவாக்கப்பட்ட அமெரிக்க மெக்ஸிக எல்லைக் கோடு செல்வதையும் காணலாம். பல பத்தாண்டுகளாய் எவ்வித தடைகளும் இன்றி மக்கள் இருபுறமும் சென்று வந்த   தொடர் வாழ்விடமே இந்நகரங்கள் என்பதுதான் தரைதள நிதர்சனம்.

நூற்றுக்கணக்கான மெக்ஸிகர்கள் தினமும் எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் வந்து எல் பாஸோவில் பகல் பொழுது வேலை செய்துவிட்டு அந்தி சாய்ந்ததும் வாரஸ் திரும்புவார்கள். அமெரிக்கர்கள் மலிவு விலை உணவுக்கும் மதுவுக்கும் தேவையிருக்கும்போது சாதாரணமாய் வாரஸ் போய் வருவார்கள். மெக்ஸிக பகுதியைவிட அமெரிக்க பகுதியில் செல்வம் மிகுந்திருந்ததால் அவ்வப்போது எல் பாஸோ பகுதியில் சிறு சிறு திருட்டுக் குற்றங்கள் நடக்கும். ஆனாலும் குறைந்த செலவில் கூலி வேலைகள் செய்ய மெக்ஸிகர்கள் தேவை இருந்ததால், சிறு திருட்டுக்களை சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. எல்லைக்காவல் பணியில் இருந்த போலீஸ்காரர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால், குற்றவாளிகளை விசாரித்து பிடிக்க முயல்வதற்கு பதில், அமெரிக்க குடிமக்களாக இருந்தாலும் மெக்ஸிகர்கள் போன்ற ஹிஸ்பானிக் (Hispanic) தோற்றம் கொண்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்களை எல் பாஸோ பகுதியில் தடுத்தி நிறுத்தி விசாரணை செய்வதை அவர்கள் வழக்கமாய் வைத்திருந்தார்கள். நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க அவர்களால் செய்ய முடிந்தது பள்ளிக்கூட மாணவர்களை தொந்தரவு செய்வதுதான்!

1990களின் துவக்க ஆண்டுகளில் எல்லைக் காவல் தலைவராக சில்வஸ்டர் ரேயேஸ் என்ற ஒருவர் எல் பாஸோவில் நியமிக்கப்பட்டார். இவரே ஒரு ஹிஸ்பானிக் வம்சாவளியினர்தான். எல் பாஸோ நகரை சுத்தம் செய்துகாட்ட விரும்பிய ரேயேஸ், அமெரிக்கா வரும் வழியில் மெக்ஸிகர்கள் கடந்து வந்த ரியோ கிராண்டே ஆற்றின் இருபுறமும் நிரந்தரப் பணியில் எல்லைக் காவல் படையினரை அமர்த்தி, ‘ஆபரேஷன் பிளாக்கேட்’ என்ற ஒரு புதிய நடவடிக்கையை துவக்கினார். இது அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்யும் மெக்ஸிகன் தொழிலாளர்களால் ஆரம்ப கட்டத்தில் எதிர்க்கப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டனின் அட்டர்னி ஜெனரலாய் இருந்த ஜானட் ரீனோ, நிர்வாகம் நாப்டா (NAFTA – North American Free Trade Agreement) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயன்று கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கடுமையான மனிதாபிமானமற்ற நடவடிக்கை தேவையில்லை என்று விமரிசித்தார். ஆனால் அவர் கள நிலவரத்தை புரிந்துகொள்ள எல் பாஸோ வந்தபோது, உள்ளூர் குற்றங்களைக் கணிசமாய் குறைத்த அந்த நடவடிக்கைக்கு நகர மக்கள் ஆதரவளிப்பதை அறிந்ததும் தன் மனதை மாற்றிக் கொண்டு ரேயேஸ் மாடல் நன்றாகவே வேலை செய்கிறது என்று அதிபர் கிளின்டனிடம் உறுதியளித்தார். இதன் பின் ஒரு சுவையான திருப்புமுனை ஏற்பட்டது. அமெரிக்காவுக்குள்ளே பலர் இந்த நாப்டா  ஒப்பந்தம் நிறைவேறினால், எல்லா அமெரிக்க வேலைகளும் மெக்ஸிகோவுக்கு ஓடி விடும், அப்புறம் அமெரிக்கா அதோகதிதான் என்று வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களை சமாதானப்படுத்த, மெக்ஸிகோ மற்றும் கனடாவுடன் வர்த்தக உறவுகளை வலுவாக்கிக் கொள்ளும்போதே அமெரிக்காவின் எல்லைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று காட்ட விரும்பினார். இதற்காக, ரேயேஸ் எல் பாஸோவில் செய்ததைப் போலவே, கிளிண்டன் கலிபோர்னியாவின் தெற்கு எல்லை வழியே புகும் மெக்ஸிகர்களைத் தடுத்து நிறுத்த ஏராளமான எல்லைப் பாதுகாப்புப் படையினரை அங்கு பணியமர்த்தினார். இது அங்கேயும்  மெக்ஸிகர்கள் உள்ளே வருவதை தடுத்து நிறுத்தி, அதன் பலனாக நாப்டா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உதவியது. ‘Prevention through Deterrence’ என்று இந்த நடவடிக்கை பாராட்டப்பட்டது. இப்போதும் இது அணுகுமுறை நடைமுறையில் உள்ளது. ஆனால் இதன் விளைவாய் கலிபோர்னியா வழியே அமெரிக்காவுக்குள் வர முடியாத மெக்ஸிகன் தொழிலாளர்கள் அடுத்த மாநிலமான அரிசோனாவில் இருக்கும் பாலைவனத்தைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி செய்யத் துவங்கினார்கள். அது மனித உயிருக்கு ஆபத்தான பயணம். இதன் பின் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட நூற்று ஐம்பது பிரேதங்களை பாலைவனத்தில் கண்டெடுப்பதாய் எல்லைக் காவல் படையினர் சொல்கிறார்கள்.

இரக்கமற்ற கொடும் பாலைவன வெயிலில் அப்படி பரிதவித்து இறப்பவர்களின் கதி என்ன என்பதை ஆய்வாளர்கள் அறிய விரும்பினார்கள். ஜேசன் டி லியோன் என்ற மானுடவியலாளர் இந்த ஆய்வுக்காக அப்போதுதான் கொல்லப்பட்ட இரு பன்றிச் சடலங்களை பாலைவனத்துக்கு கொண்டு சென்றார். எடை, சைஸ் என்று பலவிதங்களில் பன்றிகள் சராசரி மனித உருவத்தை ஒத்திருந்ததால் இந்தத் தேர்வு. எல்லை கடந்து வரும் தொழிலாளர்கள் அணிவது போன்ற ஆடைகள், காலுறைகள் மற்றும் தொப்பிகளை அவற்றுக்கு அணிவித்தார். இரு பன்றிச் சடலங்களில் ஒன்று நிழல் பகுதியிலும் மற்றொன்று வெயிலிலும் விட்டுச் செல்லப்பட்டது. அவற்றைச் சுற்றி பல்வேறு திசைகளில் அசைவு அறியும் (Motion Sensing) காமிராக்களை நிறுவினார். சடலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்து அழுகுவதை ஓரிரு ஆண்டுகள் பதிவு செய்வதுதான் அவர்கள் நோக்கம் என்பதால், அடுத்த சிலமணி நேரங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை அவர்கள் யாரும் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஒரே மணி நேரத்திற்குள் கழுகுகள் அந்த பன்றி சடலங்களை கிழித்துத் தின்னத் துவங்கின. முதல் இரண்டு நாட்களில் அவற்றின் சதைப் பகுதிகள் உண்ணப்பட்டன. அடுத்த ஒரு வாரத்தில் மிச்சமிருந்த எலும்புக் கூடுகள் ஒவ்வொரு எலும்பாக அந்தக் கழுகுகளால் பிய்த்து தள்ளி எடுத்துச் செல்லப்பட்டு சுத்தமாகத் துடைத்து தின்னப்பட்டன. கேட்கவே மனதை வேதனைப்படுத்தி கூச வைக்கும் இந்த நிகழ்வால் அதிர்ந்து போன ஆய்வாளர்கள் பாலைவன மண்ணில் இறந்து போகும் மனிதனின் சடலமும் இது போலவே ஒரே வாரத்தில் எந்த தடயமும் இல்லாமல் சுத்தமாக உட்கொள்ளப்படும் என்று புரிந்து கொண்டார்கள். இறந்தவர்கள் எந்தவித தடயமும் இல்லாமல் காற்றில் கரைந்துவிடுவதற்கு தேவை ஒரே வாரம்தான். எனவே ஒவ்வொரு ஆண்டும் கண்டெடுக்கப்படும் நூற்றைம்பது பிரேதங்களைவிட மிக அதிக அளவில் மனிதர்கள் அரிசோனா பாலைவனத்தில் இறக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம், அந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கலாம்.

மரிசெலா என்ற முப்பது வயது பெண்ணும் அப்படிப்பட்ட நிலைமைக்கு ஆட்பட்ட ஒருவள்தான் – அமெரிக்காவில் உள்ள அவரது உறவினர் வேண்டாம் என்று தொலைபேசி வழியே கூறி தடுக்க முயன்ற பின்னும் பாலைவனம் கடந்து அமெரிக்க வர முயற்சி செய்து உயிரிழந்தவள் அவள். அவளது சடலத்தில் மிஞ்சியிருந்ததை கழுகுகள் உண்பதற்கு முன் ஜேசன் டி லியோனின் குழுவினர் அவளைக் கண்டெடுக்க நேர்ந்ததால், அவள் யார் என்பதையும் அவள் ஏன் இந்தக் கொடும் பயணத்தை மேற்கொண்டாள் என்பதையும் மிகுந்த முயற்சியெடுத்து கண்டறிந்தனர். இந்த பாட்காஸ்ட் தொடரின் மூன்றாம் பகுதியில் இது குறித்த விபரங்கள் இருக்கின்றன. இவரைப் போல் புலம் பெயர்பவர்கள் நம்மால் புரிந்து கொள்ள முடியாத இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு பயணம் செய்யக் காரணமான சூழ்நிலை என்ன என்பது குறித்து உணர்வுகள் கலந்த தனிப்பட்ட புரிதல் அவரது கதையைக் கேட்பவர்களுக்கு ஏற்படலாம். தங்களுக்கு உரியதாய் இல்லாத ஒன்றை எடுத்துக் கொள்ள பெருங்கூட்டமாய் உள்ளே வரும் “சட்டத்தை மீறிய அன்னியர்கள்” (Illegal Aliens) என்று நாம் ஒரு சிலரை வெறுக்க உணர்ச்சிகளற்ற எண்களும் பட்டியல்களும் நம்மைத் தூண்டலாம். மரிசெலா போன்றவர்களைப் பற்றிய பின்கதைகளை நாம் தெரிந்து கொள்ளும்போது அத்தகைய வெறுப்பை நம் மனதில் இருக்க அனுமதிப்பது மிகவும் கடினமாக போய் விடுகிறது.

“கண்ணுக்குத் தெரியாததை உள்ளம் அறியாது,” (Out of Sight – Out of Mind) என்ற நிலை அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமானது என்பதால் எத்தனை பேர்  பாலைவனத்தைக் கடக்க முயலும்போது இறந்து போகிறார்கள் என்பதைப் பற்றி துல்லியமான தகவல்களைத் திரட்ட யாருக்கும் ஆர்வமில்லை. இப்படிப்பட்ட ஒரு கல் நெஞ்சம் தன்னைச் சுற்றி எழுப்பிக் கொள்ளும் சுவரை நாம் பாதுகாப்பரண் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் சற்றே விலகி நின்று யோசித்தால் இது மனிதாபிமானமற்றது என்பதையும் வெளியே சொல்லிக் கொள்வது போலவோ நாம் நினைப்பது போலவோ இந்த பாதுகாப்பு அரணாக ஒன்றும் செயல்படுவதில்லை என்பதையும் உணர்ந்து கொள்வோம்.

அடுத்ததாக இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். அல்லது இந்த பாட்காஸ்ட்டின் முதல் பகுதியை மட்டும் கேளுங்கள் – கென்யாவில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் சட்டப்படி மிகச்சரியாகவே நடந்து கொள்பவர்களைப் பற்றி இதில் பேசுகிறார்கள். எந்தப்பக்கம் நகர முயன்றாலும் நல்லது நடக்காது என்ற ஒரு இக்கட்டான அதே சமயம் பரிதாபமான நிலையில் இவர்கள் ஒரு தேர்வு மேற்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.

கட்டுரையும் பாட்காஸ்ட்டும் கைரோ ஹாஸன் என்ற நாற்பது நான்கு வயது சொமாலியா தேசத்து அகதியைப் பற்றி பேசுகின்றன. இந்தப்பெண் கென்யாவில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கிறார். தனக்கும் தன் குழந்தைகளுக்கும் உணவு அளிக்க உதவித் தொகையோ வேலையோ பெற முடியாத இவர் கடும் கடனில் வீழ்ந்துள்ளார். அவரது வசிப்பிடமான டின்சோர் என்ற ஊரை அல்-ஷபாப் என்ற இஸ்லாமிஸ்ட் குழு கைப்பற்றியதும் 2010ஆம் ஆண்டு சொமாலியாவை விட்டு உயிர் பிழைக்கத் தப்பியோட வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டவர் இவர். இந்த அகதிகள் முகாமில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தபின் கடனிலிருந்து தப்ப இவருக்கு இருக்கும் ஒரே வழி, சொமாலியா திரும்ப ஐ.நா. இவருக்கு அளிக்கும் பண உதவியை ஏற்றுக் கொள்வதுதான். ஆப்பிரிக்காவின் உச்சியில் உள்ள சொமாலியா தேசம் போரில் பிளவுபட்டிருக்கிறது, இங்கு அரசு நிர்வாகம் அடியோடு செயலிழந்து விட்டது. அவர் தன் உறுப்பிடாத ஊருக்கே திரும்பிப் போய்விட ஒப்புக்கொண்டால் அவருக்கும் அவரது இரு மகள்களுக்கும் தலா நூற்று ஐம்பது டாலர்கள் கொடுக்க ஐ.நா. அமைப்பு தயாராக இருக்கிறது.

இப்படிப்பட்ட அகதிகள் கடையேற முன்னர் ஒரு சிறு வழி இருந்தது. அமெரிக்காவில் குடியேற பல ஆண்டுகள் நீளும் விசாரணைக்கு இவர்கள் ஒப்புக் கொள்வதுதான் அது. அந்த கென்யா அகதிகள் முகாமிலிருந்து மட்டும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்கா வர விரும்பினாலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இருநூறு சொமாலிய அகதிகளுக்கு மட்டுமே அமெரிக்காவில் குடியேற்றம் பெறும் வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பதால் அந்தப் பாதையும் மிகவும் குறுகியதும், கடினமானதும்தான். ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் இந்தத் திட்டத்துக்கு சுத்தமாய் முற்றுப்புள்ளி வைத்து விட்டதால் அந்தச் சிறு வாய்ப்பும் பறி போய் விட்டது. தங்கள் நாட்டில் இந்த அகதிகளுக்கு புகல் கொடுக்க உலகிலுள்ள வேறு எந்த நாடும் ஆர்வமாக இல்லை என்பதால் உலகின் பிற தேசங்களும் இந்த விஷயத்தில் அப்படியொன்றும் உயர்ந்தவையில்லை. இருப்பதிலேயே கென்யாதான் மிகவும் பரந்த மனம் கொண்ட தேசமாக இருக்க வேண்டும் – இந்த பரிதாபகரமான அகதிகள் முகாம் இருப்பதற்குகாவது இடம் கொடுத்திருக்கிறதே!

கைரோ ஹாஸனுக்கு நானூறு டாலர்கள் கடன் இருக்கிறது. தன் குழந்தைகளின் பசி போக்க முகாமில் கடை வைத்திருக்கும் இன்னொரு அகதியிடமிருந்து அவர் இரவல் பெற்ற தொகை அது. அதை அடைப்பதற்கு வேறு ஒரு வழியும் இல்லாததால், ஐ.நா. அளிக்கும் வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறார். அது கொடுக்கும் நானூற்று ஐம்பது டாலர்களில் நானூறு டாலர்களை மறு நிமிடமே தன் கடனை அடைக்க அந்தக் கடைக்காரனிடம் திருப்பிக் கொடுக்கிறார். அடுத்த ஓரிரு மணிகளில் புராதனமான ராணுவ விமானமொன்றில் ஏறி சோமாலியாவில் உள்ள மொகடிஷூ நோக்கி பயணிக்கிறார். அவரைப் போலவே ஊர் திரும்பிய மற்றொரு பெண்மணி அண்மையில் அங்கு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் காலமானார் என்பது ஹாஸனுக்குத் தெரியும். எனவே, சிதிலமடைந்திருக்கும் சொமாலியாவில் எப்படி பிழைப்பு நடத்துவது என்று எதுவும் தெரியாத நிலையில் கைரா ஹாஸன் ஊர் திரும்புகிறார். வரப்போகும் ஆண்டுகளின் வன்முறைகளிலிருந்து அவர் தன் மகள்களை வேறு காப்பாற்றியாக வேண்டும். ஆனால் கென்ய அகதி அடையாளத்தை தன்னிச்சையாய் துறந்த காரணத்தால் மீண்டும் அதை அடைய முடியாது என்ற நிதர்சனத்தையும் அவர் நன்றாகவே அறிந்திருக்கிறார். அவரிடமிருந்து நானூறு டாலர் பெற்றுக் கொண்ட கடைக்காரனும்கூட மோசமானவன் அல்ல. அவன் ஒரு இளம் சொமாலியன், அவனுக்கும் கடன் இருக்கிறது, அடுத்த மாதமோ அல்லது அதற்கு அடுத்த மாதமோ அவனும்கூட ஐ.நா. அளிக்கும் உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டு ஊருக்கு புறப்பட வேண்டியிருக்கலாம்- கென்யாவில் அவனுக்கு எதிர்காலம் என்று ஒன்று எப்போதும் இருக்கப் போவதில்லை. சொமாலியா திரும்பினாலும் அங்கே சுற்றிக்கொண்டிருக்கும் கொலைகாரர்களாலோ, அடிக்கடி நிகழும் குண்டு வெடிப்புகளிலாலோ கொல்லப்படலாம். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ/முடியுமோ அதை இவர்கள் அத்தனை பேரும் ஒழுங்காக செய்கிறார்கள். இருந்தும் அவர்கள் யாருக்கும் ஒரு சுமாரான விடிவு கூட எங்கும் காத்திருப்பதாகத்  தோன்றவில்லை. நீங்களும் நானும் இப்படிப்பட்ட ஒரு சூழலில் எப்படி நடந்து கொள்வோம்?

இந்தியாவின் எல்லை ரயில்வேக்கள் (India’s Frontier Railways) என்று யூட்யூபில் மூன்று பகுதிகள் கொண்ட பிபிசி ஆவணப்பட தொகுப்பு ஒன்று இருக்கிறது. மூன்று பகுதிகளையும் நிச்சயம் பாருங்கள். நான் மேலே சொன்ன பாட்காஸ்ட்டுகள் மற்றும் கட்டுரைகள் எல்லைகள் குறித்து உங்களுக்கு அளித்த புரிதலுக்கு முற்றிலும் மாறுபட்ட இன்னொரு மனிதாபிமானம் நிறைந்த சித்திரத்தை இந்த ஆவணப்படம் உங்களுக்கு அளிக்கலாம்.

(தொடரும்)

அடுத்த பகுதி – என்னதான் செய்வது? தீர்வுகளுக்கான தேடல்

சான்றாதாரங்கள்:

 1. https://www.wnycstudios.org/story/border-trilogy-part-1/
 2. https://www.wnycstudios.org/story/border-trilogy-part-2-hold-line
 3. https://www.wnycstudios.org/story/border-trilogy-part-3-what-remains
 4. http://www.washingtonpost.com/sf/world/2017/12/15/how-refugees-are-being-forced-back-to-a-war-zone-to-repay-their-debts/?utm_term=.8e222daa0ccd
 5. Act 1: https://www.thisamericanlife.org/643/damned-if-you-do
 6. Indian Frontier Railways: https://www.youtube.com/watch?v=i8hs24tvR_8&t=2s

3 Replies to “மூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)”

 1. கடுஞ்சோதனைகளையும் இன்னல்களையும் தாண்டி அரிசோனா பாலவனம் வழியே கடந்து அமரிக்காவுக்கு வர முயல்ப்வர்களின் கதி என்னவாயிற்று என்ற தாய்நாட்டில் இருக்கும் உறவினர்களுக்குத் தகவல் போகாதா? ஏன் தொடர்ந்து அத்தகைய அபாயகரமான வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? அவர்களுடைய நாட்டில் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறதா?

 2. நிச்சயம் பல உலக நாடுகளில் குடிமக்களின் நிலை படு மோசமாக இருப்பதுதான் இந்தப் பரிதாபங்களுக்குக் காரணமாய் இருக்கிறது.
  மரிசெலாவின் கதையில் பார்த்ததுபோல், சொந்த உறவினர்களே நேரிடையாக தொலைபேசியில் அழைத்து அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பயணத்திலுள்ள அபாயங்களை விளக்கினாலும், ஏதோ ஒரு கடவுள் அருளால் தாம் மட்டும் எப்படியாவது எல்லா இடையூறுகளில் இருந்தும் தப்பி அந்தப்பக்கம் கரை ஏறிவிடுவோம் என்ற குருட்டு நம்பிக்கையுடன் பலர் இந்தப்பயணத்தை மேற்கொள்கிறார்கள். சொந்த நாட்டில் சோற்றுக்கு வழியில்லாத நிலை, கொலை/கொள்ளை, தங்கள் பதின்வயது குழந்தைகள் போதைப்பொருட்களை கடத்தும் குழுக்களால் வன்முறையை பயன்படுத்தி உழைக்க இழுக்கப்படுவது போன்ற பல காரணங்கள் இந்த முடிவின் பின்னால் நின்று கழுத்தைப் பிடித்து இந்த அகதிகளை தள்ளுகின்றன. இந்தப்பயணத்திற்கு வழி காட்டுகிறேன் என்று சொல்லி அதற்காக ஆயிரக்கணக்கில் அகதிகளிடமிருந்து பணம் பிடுங்கும் கும்பல்கள் நிறைய உண்டு.
  ஒரு சிலர் எப்படியோ பிழைத்து வந்து அகதிகளாய் தஞ்சம் கேட்டு/பெற்று வாழ்வதும் நடக்கிறது. அந்த வெகுசிலரைப் பார்த்து அதே போல் முயற்சித்து வழியில் இறந்துபோகும் ஆயிரக்கணக்கான பலர் கதைகள் தடயமே இல்லாமல் அழிந்து போகின்றன. இப்படி அழிபவை இந்த பாலைவனப் பரிதாபங்கள் மட்டும்தான் என்றில்லை. கடலில் இப்படி இறப்பவர்களைப் பற்றிய ஒரு TED உரையை இந்த இணைப்பு http://bit.ly/2Ox7jgn சுட்டுகிறது. முடிந்தால் பாருங்கள்.
  பதிவுக்கு நன்றி.
  -சுந்தர்.

 3. “ஏன் தொடர்ந்து அத்தகைய அபாயகரமான வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? ”
  சுந்தர் சொல்வது போல, இருக்கும் இடம் இதைவிட மோசம். ஏறக்குறைய தற்கொலைதான். தெரிந்தே வருகிறார்கள். பாலை வானத்தை உயிரோடு தாண்டுவது முதல் கண்டம் தான். அப்புறம் எப்படியாவது சொந்தக்காரர்கள் இடத்துக்கு போய் சேரவேண்டும். சட்டத்துக்கு புறம்பான குறைந்தபட்ச கூலிக்கும் குறைவான கூலியில் இடுப்பொடிய வேலை செய்யவேண்டும்.
  எல்லா தடைகளையும் தாண்டி தெய்வாதீனமாக அமெரிக்க குடிமகனை மணம் செய்து குடி உரிமை பெற்ற பிறகு கூட நிச்சயமின்மை அவர்களை வாட்டுகிறது. ஒரு குற்றமும் புரியாது இருப்பது ஆண்டுகள் வாழ்ந்து அமெரிக்க ராணுவ வீரரை மணந்த ஒரு பெண்ணை நாடு கடத்திய செய்தி மனதை உலுக்கியது. அந்த ராணுவ வீரர் டிரம்புக்கு ஓட்டளித்தவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.