பெண் எனும் மகள்
அன்று கவரப்பட்ட
திரௌபதியின் வஸ்திரம்
கிடைக்கவேயில்லை…
கண்ணன் தந்த ஆடையோடு
இதுவரையும் வந்துவிட்டாள்.
அந்த அவைக்குப்பின்
முன்னிருந்தவள் அல்லள் .
எப்போதும் தான் என்னும் கத்திமுனையை
வஸ்திரத்தில் வைத்திருக்கிறாள்.
மீண்டும்
இழந்துவிடக்கூடாது என்ற பதட்டத்தோடு.
பதட்டம் ஒவ்வொரு பாதையிலும் புதியஅடியை
தயங்கியே வைக்கச் சொல்கிறது.
அந்தத் தயக்கம் நூறாயிரம் வார்த்தைகளால்
அர்த்தப்படுத்தப்பட்ட பின்னும் கூட
அவள் தன்னிலை மறந்தும் கூட தயங்கிநிற்காமல்
முதலடியை வைப்பதில்லை.
அவளுக்காக என சொல்லப்படும்
அந்த மகாயுத்தத்தில்
பூமி குருதிச்சேரானப்பின்னாலும்…
அக்குருதியில் முளைத்தெழுகிறது
வஸ்திரம் பற்றும் கரம்.
அன்றாவது ஊருக்குச் சொல்லிக்கொள்ள
கண்ணன் ஒருவன் இருந்தான்.
விழித்துக் கொண்ட திரௌபதி
நேர்நிற்காமல்…
சிக்கியும் சிக்காமலும் வளைந்தோடுகிறாள்
திசைக்காட்டாத அடர்கானகத்து நதியாய்.
துருபதன்தான்
மகளிடம் அவள் யாரென்று சொல்ல
அவள் மொழியில் வார்த்தைக் கிடைக்காமல்,
பொம்மைகளைத் தேடியெடுத்து நிறுத்துகிறான்.
அழகியபதுமையைக் கண்டு
‘அம்மா’ என்று கைத்தட்டி சிரித்தமகளை
பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
~oOo~
கோடையில் காய்ந்த கொல்லிமலை
மேற்குவானில்
ஔியாலான பிலம்,
ஒரு ஔிஅருவி
கொல்லிமலையில் வீழ்கிறது,
பதைப்புக் கொள்ளும் நெஞ்சின்விலிமையை
மேலும் சோதிக்க
மறையும் நேரத்தில் எழுந்தான் ஆதவன்,
பேரொளி ஔிர்மஞ்சளில்
ஊரெங்கும் பொழிய,
என்றும் போல
திரும்பிக்கொண்டிருக்கிறாள் சுவேதா,
பால்காரர் நீண்டஹாரனுடன் செல்கிறார்,
எடுத்த புத்தகத்தை வைத்துவிட்டு
எதிர்கொள்ளமுடியாத ஔியின் பக்கவாட்டில்
இருக்கிறேன்..வேறொன்றும் செய்யவியலாது.
இத்தனை மஞ்சள்ஔியுடன் மறைந்து கொண்டிருக்கும்
ஆதவனை உணர்ந்தபடி அமர்ந்திருக்கிறேன்.
மஞ்சள் மறையும் நேரத்தில்
கனிகிறது வானம்.
துளிகளின் ஓசை நிறைக்கிறது மனதை.
ஒரு மழைக்காலத்தின்
முதல் துவக்கத்தில் மழையிலும்
நீண்டிருக்கிறது ஔி.
ஔித்துளியாய் சொட்டுகிறது வானம்.
வெயிலும் மழையும் சரிபாதியாய்
நின்றிருக்கும் இப்பொழுதில்
மீளக்காத்திருக்கின்றன
பூமி கரந்தவைகள்.