நய்பாலும் நோபலும்

எழுதிய தேதி: 2001-00-00


என் பதின்பருவத்தில் அந்தக் கட்டுரையை வாசித்தேன்; அது, நைபாலின் டிரினிடாட் இளமைக்காலத்தில் எழுதப்பட்ட கட்டுரை; பாடப்புத்தக ஆங்கில கவிஞர்களின் கண்டறியாத டஃபடில்களால் கரிபியன் மலர்கள் எவ்வாறு மறைக்கப்பட்டன என்பதைக் குறித்தது. அந்தக் கட்டுரை மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு திடுக்கிடச் செய்யும் வலிமை கொண்ட அடையாளம் கண்டுகொள்ளுதலைத் தூண்டியது, அக்கணம் இன்னும் என்னை விட்டு அகலவில்லை. ஒரு குழந்தையாய் நான், ‘தி மியூட்டினி ஆன் தி பௌண்டி’ வாசிக்கும்போது ‘ஃபிராஞ்சிபானி’ என்ற சொல் எனக்கு வசீகரமாக இருந்தது. எதுவெல்லாம் மர்மமானதோ, விரும்பத்தக்கதோ, அல்லது ரகசியமானதோ அது நிறைந்ததாய் அச்சொல் எனக்கு இருந்தது. அப்பபுறம் ஒரு நாள், என் சன்னல் கதவுக்கு வெளியே இருந்த சுருண்டு வளைந்த முதிர்ந்த மரக்கிளைகள், ‘ஃபிராஞ்சிபானி’ மரத்திற்கு உரியது என்பதை அறிந்து கொண்டேன்: பல ஆண்டுகளாக அவற்றை நான் வெறித்துப் பார்த்து கொண்டிருந்திருக்கிறேன். என் எதிர்வினை அதிர்ச்சியாகவோ ஏமாற்றமாகவோ இருக்கவில்லை: இவ்வுலகில் எனக்குரிய இடம் பொருத்தமற்றது என்ற திடீர் உணர்த்தலை அது அளித்தது. இந்தப் பிரக்ஞை நான் படித்த எதிலும் அதுவரை ஒரு போதும் பிரதிபலிக்கப்பட்ட ஒன்றல்ல- நைபாலின் கட்டுரையை நான் வாசிக்க நேரும்வரை.
அக்காலத்தில் நைபாலை வாசிப்பதன் மாயம் இதுதான். அவரது பார்வைகள் மற்றும் கருத்துகளுடனும் நான் எப்போதும் மாறுபட்டேன்: ஒப்புக்கொள்ள முடியாத அளவு வலிக்கிறது என்று சொல்லத்தக்க உண்மைகளின் அடிப்படையில் அமைந்தவை என்பதால் சில; மானுடம் பால் ஒவ்வாமை, அல்லது, கண்டனத்துக்குரியவை என்று சில; ஏற்றுக் கொள்ள முடியாத அளவு இனவாதத்துக்கு மிக அருகே வந்தவை அல்லது அறியாமையை வெளிப்படுத்துபவை என்று சில (கடைசி காரணம், குறிப்பாய், இஸ்லாமிய உலகு குறித்த அவரது எழுத்தில்). ஆனால், வேறு யாரும் பொருட்படுத்தத் தக்கது என்று கருதாத விஷயங்களை அவர் எழுதிக் கொண்டிருந்தார்; அனுபவத்தின் புதிய பரிமாணங்களை அகழ்ந்தெடுப்பதற்கான சொற்களை அவர் கண்டடைந்திருந்தார்.
இன்று, பல பத்தாண்டுகளுக்குப்பின், மொழி குறித்து அவர் எழுதிய அந்தக் கட்டுரை என் அனுபவத்தின் அந்தரங்க உறுப்பாய் மாறியிருக்கிறது. எங்கு என் நினைவு முடிகிறது, எங்கு நைபாலின் கதையாடல் துவங்குகிறது என்று என்னால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை: ‘ஃபிராஞ்சிபானி’ எனக்குரியதா, அவருக்குரியதா, அல்லது, மாறாய் நான் ஜகரண்டாவை நினைத்துக் கொண்டிருந்தேனாஅவ்வப்போது இது போன்ற பிற நைபால் கணங்கள் என் நினைவில் இன்றும் எழுகின்றன. வலித்துக் கொண்டிருக்கும் கடைவாய் பல் போல். சில ஆண்டுகளுக்கு முன் நான் என் அனுபவம் ஒன்றைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தேன், 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த தில்லி கலவரங்கள். இன்ன இடம் என்று சொல்ல முடியாத இடத்திலிருந்து, நைபால் எழுதிய பயணக் கட்டுரையின் பத்தி ஒன்று என் நினைவில் தோன்றியது; அதை இவ்வாறு நான் விவரித்திருந்தேன்: “ஒப்பிடுவதற்கில்லாத உரைநடையில் நைபால் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை விவரிக்கிறார். அவர் தனது ஹோட்டல் அறையில் இருக்கிறார், ஆப்பிரிக்கா அல்லது தென் அமெரிக்காவில் எங்கோ. அவர் கீழே பார்க்கிறார், மக்கள் ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறார்கள். அவருக்கே ஆச்சரியமாய் அந்தக் காட்சி அவருள் இனம் தெரியாத ஒரு ஏக்கத்தை நிறைக்கிறது, ஒரு வகை சோகம். வெளியே போக வேண்டும், சேர்ந்து கொள்ள வேண்டும், தனது அக்கறைகளை அவர்களது அக்கறைகளில் கரைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவரால் அது ஒரு போதும் இயலாது என்பதை அவர் அறிந்திருக்கிறார்; கூட்டங்களில் சேர்வது அவரது இயல்பல்ல… நைபால் மட்டுமே என்னை ஒரு எழுத்தாளராக, ஆங்கில மொழியில் எழுதும் எழுத்தாளராக, நான் நினைத்துக் கொள்வதைச் சாத்தியப்படுத்தினார். ஒருவன் தன்னுடன் திறமையாய் உரையாடும் ஒருவருக்கென்று பிரதேயகமாய் கொண்டுள்ள அந்தரங்க, அச்சுறுத்தல் உணர்வு கூடிய கவனத்துடன் அவரை வாசித்தேன். என் இயல்பும் தனித்திருப்பதே என்பதால் அந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது: அவரது அனுபவத்தைப் படிக்கும்போது, என் இயல்பில் ஒரு கூறு நைபாலின் இரக்கமற்ற கண்ணாடியில் மீண்டும் ஒரு முறை சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறேன், என்று நினைத்துக் கொண்டேன்.” “பாதிப்பு” என்ற சொல் இது போன்ற சூழலுக்கு பொருத்தமற்றதாய்த் தெரிகிறது: நைபாலின் எழுத்து, இவ்வுலகு குறித்த என் அறிவைக் கூர் தீட்டிக் கொள்ளும் சாணைக் கல் போன்றது.
என் ஆளுமை உருவாகி வந்த ஆண்டுகளில், இந்தியாவில், வேறு எந்த எழுத்தாளரும் உருவாக்க முடியாத ஒரு உக்கிரத்தையும் ஒன்றுதலையும் நைபால் தோற்றுவித்தார். அவர் எழுதிய அனைத்தையும் நான் வாசித்தேன், மிகவும் நெருக்கமான, அதே சமயம், பெரும்பாலும் எதிர்தரப்புக்குரிய கவனத்துடன்: “மிக்வல் ஸ்ட்ரீட், தி சஃப்ரேஜ் ஆஃப் எல்விரா, தி மிஸ்டிக் மாசூர், எ ஹவுஸ் ஃபார் மிஸ்டர் பிஸ்வாஸ், தி மிமிக் மென், மிஸ்டர் ஸ்டோன் அன்ட் தி நைட்ஸ் கம்பேனியன், இன் எ ஃப்ரீ ஸ்டேட்.. நான் இப்போது அந்த துவக்க கால நாவல்களை நேசிக்கிறேன்; என் பார்வையில், இவை மட்டுமே நைபாலுக்கு நோபல் அளிக்கப் போதுமானவை. ஆனால், அவரது புனைவல்ல, அபுனைவே மேற்கில் அவரை பொது கவனத்துக்கு கொண்டு வந்தது, குறிப்பாய் அவர் இந்தியா பற்றி எழுதிய இரு நூல்கள்: அன் ஏரியா ஆஃப் டார்க்னஸ் மற்றும் இந்தியா: எ ஊண்டட் சிவிலிசேஷன். அன் ஏரியா ஆஃப் டார்க்னஸ் அதன் சிறுமைப்படுத்தும், சீற்றம் நிறைந்த தொனியின் காரணமாய் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், கவனமாய் வாசிக்கும் ஒருவர், நைபாலின் கோபம் தன் மீதும் தன் கடந்த காலத்தின் மீதுமானதுஎன்பதைக் காண்பது கடினமல்ல. அவர் சிறுமைப்படுத்துவதன் காரணம், இந்தியாவில் அவர் காண்பது எதுவுமல்ல, மாறாய், வேரறுக்கப்பட்ட தன் மூதாதையர்களின் பெருங்கதைகள் மீதான வசீகரமிழப்பே அதன் தோற்றுவாய். ஆனால் இந்தப் புத்தகங்கள் அவர் எழுத்தில் ஒரு தீர்மானமான திருப்புமுனையை வெளிப்படுத்தவே செய்கின்றன. இதன்பின் அவர் மேற்குக்கு வெளியே உள்ள வாழ்வை அதன் கோணத்தில் காண மாட்டார்: இந்தியா, கரிபியன், ஆப்பிரிக்கா முதலியவை மேற்கின், அதிலும் குறிப்பாய் இங்கிலாந்தின், பார்வையை புகுத்துவதற்கான வெளிறிய திரைச்சீலைகளாகும். இனி அவரது துவக்க கால படைப்புகளில் காணப்படும் செறிந்த அடுக்குகள் கொண்ட தீவுகள் மறையும், ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில் “அரைவேக்காடு” என்று சித்தரிக்கப்படும், பெரும்பாலும் ஒத்த தன்மை கொண்ட சமூக கேலிச்சித்திரங்கள் அவற்றின் இடத்தைப் பிடிக்கும். உயிரற்ற இந்த ஒப்பீட்டில் மேற்கல்லாதது அற்பமன்றி வேறெவ்வாறாகவும் இருக்க முடியாது- இல்லாமையைக் கொண்டு வரையறுக்கப்பட்ட உலகு. எதிர்பார்க்கக்கூடிய வகையில், நைபாலின் எழுத்தின் நேர்ந்த இந்த திருப்பம் மேற்குலகில் மிகவும் ரசிக்கப்பட்டது, ‘மூன்றாம் உலகம்’ குறித்த அவரது சாடல்களுக்காக அவர் வெகு விரைவிலேயே புனித உயரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார். இப்போது பழக்கப்பட்டுப் போய்விட்ட நைபாலிய எள்ளல் தொனியை எந்த அளவுக்கு எதிரொலிக்க முடிகிறதோ அந்த அளவுக்கே பயணம் குறித்து எழுதுபவர்கள் இன்றைய மேற்குலகில் பொருட்படுத்தப்படுகிறார்கள் என்பது அவரது தாக்கத்தின் அளவை வெளிப்படுத்துகிறது.
நோபல் பரிசு நைபாலுக்கு மகிழ்ச்சியளிக்குமா இல்லையா என்ற கேள்வி விவாதத்துக்குரியது: மாபெரும் உயரத்திலிருந்து இலக்கியத்தின் மீது மலம் கழிப்பதாய் இதே குழுவினரை அவர் குற்றம் சாட்டி வெகு காலம் ஆகிவிடவில்லை. எது எப்படியிருந்தாலும், இந்தப் பரிசை அவர் இந்தியாவுக்கு அல்ல, அவர் சுவீகரித்துக் கொண்ட தாயகமான இங்கிலாந்துக்கு அர்ப்பணிக்கப் போவதாய் அவர் விருப்பம் தெரிவித்திருப்பதில் ஆச்சரியமில்லை. இது, அவர் உண்மையாகவே இலக்கிய கடன்பட்டிருக்கும் இடங்களை நைபாலிய பாணியில் பெயரின்றி விட்டுச் செல்கிறது: ட்ரினிடாட் மற்றும் கரிபியன் தீவுகள். செழுமை மிக்க கலாசார கலவைகள் கொண்ட ட்ரினிடாட் நைபாலுக்கு இலக்கிய இலட்சியங்கள், தனித்தன்மை கொண்ட குரல், அவர் எப்போதும் சிறந்த வகையில் நினைவுகூறப்படும் நாவல்களின் களம் ஆகியவற்றை அளித்தது. சர் விடியாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நோபல் அவரது அசகாய, ஒரு சில சமயங்களில் திசைமாறிய, திறன்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் மட்டுமல்ல, அவர் பிறந்த தீவுக்கு அளிக்கப்படும் சமர்ப்பணமும் கூட..

மூலம்: Amitav Ghosh : Naipaul and the Nobel