கூகி வா தியோங்கோ -வும், மொழியின் கொடுங்கோலும்


நைரோபி நகருக்கு அருகே, கிருஸ்தவப் பாதிரிகளால் நடத்தப்பட்ட ஒரு உயர்நிலைப் பள்ளியில் தன் படிப்பை முடித்து வெளியேறி முப்பது வருடங்களுக்குப் பிறகு, கூகி வா தியோங்கோ, இப்போது கென்யாவில் காலனிய காலத்து கல்விக் கொள்கையின் தொடர்ந்து வரும் தாக்கத்தைப் பற்றி யோசிக்கத் தேவையான கால இடை வெளியை அடைந்திருந்தார்.  ‘புத்தியிலிருந்து காலனியத் தாக்கத்தை அகற்றல்’ (Decolonising the Mind) என்ற தன் புத்தகத்தில் அவர் இப்படி எழுதினார்- “பீரங்கிக்குப் பின்னே அந்தப் புதுப் பள்ளிக்கூடம் இருந்தது.” அந்தப் புத்தகம் பண்பாட்டு ஏகாதிபத்தியத்தையும், காலனியக் கல்விக் கூடத்தின் வகுப்பறை எப்படி ஆஃப்ரிக்காவையும், மேலும் பல பகுதிகளையும் உளநிலையளவில் காலனியர்கள் ஆக்கிரமிப்பதில் வெற்றியடைய உதவியது என்பதை ஆராய்ந்து விளக்குகிறார். “ஆக்கிரமிப்பின் வெற்றியை நிரந்தரமாக்க பீரங்கியை விட மேலான கருவியாக அது இருந்தது,” அவர் மேலும் எழுதினார், “பீரங்கி உடலை அடக்குகிறது, பள்ளிக்கூடம் ஆன்மாவை வசீகரித்து மயக்கத்தில் ஆழ்த்துகிறது.”
1920களில் கட்டப்பட்ட அலையன்ஸ் உயர்நிலைப் பள்ளி (The Alliance High School) இன்று கென்யாவின் முதல் நிலைப் பள்ளிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அயல் நாட்டினர் காலனிகளுக்குப் “பரிசாக”க் கொடுத்த பல நிறுவனங்களைப் போல, இதுவும் ஆஃப்ரிக்கர்களை நாகரீகப்படுத்தும் ஒரு காருண்ய மிக்க அமைப்பாக அதை நிறுவியவர்களால் கருதப்பட்டது. அது இங்கிலிஷில் போதித்தது; உள் நாட்டு மொழியான கிகூயுவில் பேசிய சிறார்கள் அடிக்கப்பட்டார்கள். இங்கிலிஷ்தான் அதிகாரம், ஆய்வறிவு, மேலும் புத்திசாலித்தனத்துக்கான மொழி (எனக் கருதப்பட்டது); கிகூயு என்ற மொழி, அம்மொழியில் கூகி பல பத்தாண்டுகள் கழித்துத்தான் மறுபடி எழுதத் துவங்குவார், பின் தங்கிய நிலைக்கான அறிகுறியாகக் கருதப்பட்டது. அந்த ஆஃப்ரிக்கத்தனம், அதைக் கொண்டிருந்தவர்களின் நலனைக் கருதி, அவர்களிடமிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கருதப்பட்டது. துப்பாக்கியால் மட்டும் இதைச் செய்ய முடியாது; கூகியின் சொற்களில், அதைச் செய்ய “சிந்தனைச் சக்தியின் உதவி” தேவைப்பட்டது. “புத்தியிலிருந்து காலனியத்தை அகற்றல்” புத்தகம் காலனியத்தின் பிடியில் சிக்கிய மக்களின் புத்தி வெளி எப்படித் தாக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டது என்பதை ஆராய முற்படுகிறது. மொழி எப்படி சூழ்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் கையாளப்படுகிறது, அதிகாரத்தின் நோக்கங்களுக்கு உதவும்படி செலுத்தப்படுகிறது என்பனவற்றைக் கவனிக்கிறது.
இந்தப் புத்தகத்தின் அடிப்படையாக இருந்த உரைகள் 1984 இல், மாஒரி மொழி வாரத்தின்போது ஆக்லண்டில் நிகழ்த்தப்பட்டவை. கடந்த மே மாதம், நியூஸீலாண்டிற்கு மூன்றாவது முறையாக கூகி வந்த போது நான் அவரைச் சந்தித்தேன். இருவரும் ஆக்லண்டின் எழுத்தாளர் திருவிழாவில் பேசவிருந்தோம். 80 வயதிலும் தெளிவான பார்வையோடும், தேர்ந்த பேச்சோடும் திகழும் கூகி, 1984 இல் தான் உரை நிகழ்த்த வந்தபோது தனக்குக் கிட்டிய ஒரு சந்திப்பை நினைவு கூர்ந்தார். அந்த சந்திப்பு மொழிக்கும் அதிகாரத்துக்கும் உள்ள உறவைப் பற்றிய தன் அலசலை விரிவுபடுத்தியதாகச் சொன்னார். அவர் மேடையை விட்டு நீங்கிய போது, ஒரு மாஒரிப் பெண் அவரை அணுகினாராம், “நீங்கள் கென்யாவைப் பற்றிப் பேசவில்லை,” அப்பெண் சொன்னார், “மாஒரி மக்களைப் பற்றிப் பேசி இருக்கிறீர்கள்.” அவர் உரையில் கொடுத்த அனைத்து உதாரணங்களும் கென்யாவிலிருந்தும், ஆஃப்ரிக்காவில் இதர இடங்களிலிருந்தும் எடுக்கப்பட்டிருந்தன, த அலையன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பதின்ம வயதில் தனக்குக் கிட்டிய அனுபவங்களும், பல பத்தாண்டுகளுக்குப் பிறகும் நீடித்த அதன் கெடுக்கும் சக்தியைப் பற்றிப் படிப்படியாக அவர் உணர்ந்தவையும் அந்த உரையில் படிவுகளாக இருந்தன. “ஆனால் அந்த மாது, மாஒரிகளின் நிலையை அதில் பார்த்தார், அவர் என்னிடம் சொன்னார். “இங்கிலிஷ் மொழியால் பெறும் பெருமிதத்துக்கு முன் நிபந்தனையாக ஆஃப்ரிக்க மொழியை அவமதிப்பது இருந்தது. இதுதான் எல்லாக் காலனிய நிலைகளிலும் நேர்ந்தது- நியூஸிலாண்டிலும்தான்.”
த அலையன்ஸ் உயர்நிலைப் பள்ளியை விட்டு நீங்கி வெகுகாலம் கழித்து, கூகிக்குப் புலப்பட்டது ஒன்று. தானும் தன் வயதுக் குழுவினரும், மேலைச் சார்புள்ள உலகப் பார்வைக்குள் புழங்குவதற்கே தாம் தயார் செய்யப்படுகிறோம் என்பதைச் சிறிதும் கவனிக்காததோடு, அந்த முயற்சிக்கு எந்த மறுவினையும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறார். பொருளுடைமைப் பிரிவுகளின் வேறுபாடுகளை மையத்தில் வைத்துப் பார்க்காதிருந்த ஒரு சமூகத்தில் இந்தப் பள்ளிக் கூடம் எப்படி அந்த வகைப் பேதங்களுக்கான அடையாளங்களை மாணவர்களிடையே பதித்தது என்பதையும் அவர் முன்னம் புரிந்து கொள்ளத் தவறி இருந்தார். அந்தப் பள்ளிக் கூடத்தையும், அது போதித்த அனைத்தையும்- அது போதிக்க மறுத்த எல்லாவற்றையும் கூட- சமூகம் ஏற்றுக் கொண்டது, அதைப் போற்றி வணங்கவும் செய்தது. “அதிகாரத்தின் மொழி இங்கிலிஷ், அது உள்வாங்கப்படுகிறது,” அவர் விளக்கினார். “எது விபரீதமோ அதை சாதாரணம் என்று நாம் ஆக்கி விடுகிறோம், காலனியத்தின் அற்பத்தனங்களை நியதிகளாக்கி அவற்றின் வழியே நம் செயல்பாடுகளை நடத்துகிறோம். பிறகு அதைப் பற்றி நாம் யோசிப்பது கூட இல்லை.”
புத்தியிலிருந்து காலனியத்தை அகற்றல் 1புத்தகமும், அதற்குப் பிறகான கூகியின் புத்தகங்களும், புனைவுகளோ, அபுனைவுகளோ எல்லாமே, இந்த எழுத்தாளரை முழுமையான காலனியப் பாதிப்பு அகற்றுதலுக்கான அழுத்தமான வாதியாக நமக்கு அடையாளம் காட்டுகின்றன. கவனிக்கப்படக் கூடிய வகையான பொருளாதார மேலும் அரசியல் வட்டங்களில் மட்டுமல்லாது, புத்தியிலிருந்தும் காலனியத்தை அகற்றுவதை இவர் வலியுறுத்துகிறார். பன்னாட்டரங்கில் தெரிய வந்திருக்கிற ஆஃப்ரிக்க எழுத்தாளர்களில் மிகச் சிலரே தம் சொந்த மொழியில் எழுதுகிறார்கள் என்பதைப் பற்றி இவர் வருத்தம் தெரிவிக்கிறார். அதனால் ஒரு கட்டத்தில் கிகூயு அல்லது ஸ்வாஹிலி மொழிகளில் மட்டுமே பிரசுரிப்பதை மேற்கொள்கிறார். மொழி பெயர்ப்பு பண்பாடுகளிடையே பாலமாக விளங்கக் கூடும் என்பதை நம்புகிறார், ஆனால் ஒவ்வொரு மொழிக்கும், அதன் பல வட்டார வழக்குகளுக்கும் குறிப்பிடத் தக்க இசையொலிப்பு உண்டு, அது மொழி பெயர்ப்பில் இழக்கப்பட்டு விடுகிறது, அந்த மொழி வழக்கொழிந்து போனால் அவை என்றென்றைக்குமாக இழக்கப்பட்டு விடும் என்றும் அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.
இந்தப் புலம்பலை வேறு சிலரும் எதிரொலித்திருக்கின்றனர். ஐரிஷ் மொழிக் கவிஞரான நுவலா ந்யீ கோநல் தற்கால ஐரிஷ் இலக்கியம் தன் கே(ய்)லிக் வேர்களைத் தேடி அடைய வேண்டும் என்று வாதிட்டிருக்கிறார். 1995 இல் நியுயார்க் டைம்ஸில் அவர் எழுதியது:
ஐரிஷ் பெருமளவு இளக்கமும், உணர்ச்சி நுட்பமும் கொண்ட ஒரு மொழி; துரிதமும், களிப்பும் கூடிய, சரித்திரம் மேலும் புராதீனச் சுட்டல்கள் கொண்டது; சமூகத்தால் பல தலைமுறைகளாகப் பதப்படுத்தப்பட்டிருப்பதால், மக்களிடையே நேரும் உணர்வுப் பரிமளிப்புகளின் ஒவ்வொரு சுண்டலையும் கண்டெடுத்து, அவற்றை இசைக்கக் கூடிய திறன் கொண்டதும், ஆழமும் விரிவும் கொண்ட கற்பனைவளமும் கொண்டதுமான கருவி. கந்தலாடை உடுத்த விவசாயிகளின் இந்த மொழி எப்போதும் கவிதையாகப் பெருக்கெடுக்கும் நிலையில் இருப்பதாகவே பல பன்னாட்டு அறிஞர்களும் கொண்டாடி இருக்கிறார்கள்.
இருந்த போதும், முன்னாள் காலனி நாடுகளில் மக்கள் மொழிகளின் குலைவு என்பது இலக்கிய வெளியைத் தாண்டி சாதாரண மக்கள் மீது பெரும் தாக்கம் கொண்டிருக்கிறது. கென்யாவில் இருந்த பிரிட்டிஷார் கென்ய மக்களை நாகரீகப்படுத்துவது என்ற பிரச்சாரத்தை உண்மையாக நம்பினார்களோ இல்லையோ, உள்நாட்டு மொழிகளின் இடத்தில் இங்கிலிஷ் எழுந்தது காலனியத்தின் நோக்கங்களை ஆழப்படுத்தி, அதன் அமைப்புகளை சமுதாயத்தின் பல இடங்களிலும் நிலை நிறுத்தியது. காலனிகள் -பிரிட்டிஷ் காலனிகளோ அல்லது வேறு வகையோ- எதானாலும், உள் நாட்டு மக்கள் மொழிகள் எல்லாக் காலனிய நாடுகளிலும் ஓரம் கட்டப்பட்டன என்பது, காலனிய மேலாட்சியாளர்களுக்கு உடன்பட்ட ஒரு சமூகக் குழுவை உருவாக்கி, அவர்களை தம் மக்களிடமிருந்து பிரித்து அன்னியமாக்கியது. 1835 இல், அரசியலில் மிக்க தாக்கம் கொண்டிருந்தவரும், (உ)விக் கட்சியின் அரசியலாளரும், வரலாற்றாளருமான தாமஸ் பாபிங்டன் மக்காலே, பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் சம்ஸ்கிருதம் மேலும் அரபி மொழிப் புத்தகங்கள் பிரசுரமாவதற்கு ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும் என்று வாதிட்டார். “நாம் இப்போது நம்முடைய முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்,” அவர் எழுதினார், “நமக்கும் நாம் ஆளும் லட்சக்கணக்கான மக்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர்களாக இருக்க ஒரு வர்க்கத்தை உருவாக்கவேண்டும்; ரத்தத்தாலும், நிறத்தாலும் இந்தியர்களாக இருந்த போதும், விருப்புகளாலும், கருத்துகளாலும், ஒழுக்கத் தேர்வுகளிலும், அறிவுத் தேர்விலும் இங்கிலிஷ்காரர்களாக இருக்கும் ஒரு சமூகக் குழுவை உருவாக்க வேண்டும்.”
பிரித்து ஆளும் ஆயுதமாகப் பயன்படும் மொழி, எளிதில் அப்படி அடையாளம் காணப்பட முடியாதது: அமைதியாக அதைப் பிரயோகித்தால், நசுக்கப்பட்ட குழுக்களிடையே அது அதிகார அடுக்குகளை உருவாக்கும். பழைய பழக்கங்களை, பண்பாட்டை உதறியவர்களே உண்மையாக மேம்பட்டவர்கள் என்று அடையாளம் காட்டும் – ஆனால் அவர்கள்தான் முற்றிலும் காலனியத்துக்கு அடிமைப்பட்டவர்கள். இப்படிப் புதிதாக வார்க்கப்பட்ட மேல்தட்டு மனிதர்களை- அவர்கள் முன்பு மக்களின் பக்கத்தில் நின்றவர்கள்- மற்றவர்கள் அண்ணாந்து பார்க்க வைக்கும். இந்த நடைமுறை, மக்காலேயின் கருத்தில், இந்த சமூகக் குழுவை, “ பெரும் திரளான மக்களுக்கு அறிவைப் புகட்டத் தக்கதான பாத்திரங்களாக படிப்படியாக மாற்றும்.”
இன்று பழிக்கப்படும் “இந்தியக் கல்வி பற்றிய அறிக்கை” என்பதை அன்று அவர் சுழற்சியில் அனுப்பினார். அது பிரிட்டன் தன் ஆட்சியின் கீழ் இருந்த அயல் நாடுகளெங்கும் கொண்டிருந்த மொழிக் கொள்கையின் அடித்தளமாக இருந்த ஆணவத்தை நாம் பார்க்கக் கொடுக்கிறது. காலனிய மேல் நிலையினரில் இருந்த ‘ஓரியண்டலியர்கள்’ பற்றிப் பேசுகையில், “கிழக்கு நாடுகளின் மொழிகளில் அவர்களுக்கு இருந்த புலமையால் அவர்கள் சிறப்பு பெற்றுள்ளனர்,” என்று அறிவித்த அவர், “இந்தியாவிலும், அரேபியாவிலும் உள்ள அனைத்து இலக்கியமும் நல்ல யூரோப்பிய நூலகத்தின் ஒரு அலமாரியில் அடங்கிய புத்தகங்களுக்கு ஈடாகாது என்பதை மறுக்கக் கூடிய ஒருவரைக் கூட அவர்களிடையே நான் கண்டதில்லை,”என்றும் சொல்கிறார்.
அன்று அவருடைய காலத்து மனிதர்களில் பலரைப் போல, அவர் பிரிட்டன் தன் கீழ்ப்பட்ட மக்களுக்கு அளிக்க நிறைய கொண்டிருப்பதாகவும், அவர்களிடமிருந்து பிரிட்டன் கற்க ஏதும் இல்லை என்றும் கருதினார். பல நாட்டு மக்களின் மொழிகள், கேவலமானவை, நாகரீகமற்ற மக்களின் மொழிகள், அவை மனித நாகரீகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் கால் விலங்குகள், பளுக்கள் என்று அவர் கருதினார். “அரபி மேலும் சம்ஸ்கிருதக் கல்லூரிகளில் நாம் செலவழிப்பது எல்லாம் உண்மையை முன்னேற்றச் சிறிதும் உதவாதவை,” என்றவர் மேலும் எழுதுகிறார், “தவறுகளையே உயர்த்திப் பிடிப்பவர்களை வளர்க்க நாம் கொடுக்கும் பணயத் தொகை அது.”
இதே நோக்குதான் உலகில் வேறு இடங்களில் எல்லாம் பண்பாடுகள் கரைந்து ஒன்றாவது என்ற போக்கை வழிநடத்தியது.  “இந்தியனைக் கொல்லு, மனிதனைக் காப்பாற்று,” என்ற கொள்கை பத்தொன்பதாம் நூற்ற்றாண்டில் ‘அமெரிக்கப் பழங்குடியினரை’ அமெரிக்கராக்கும் முயற்சியாக அமெரிக்கக் கல்வியமைப்பை நடத்தியது. யூரோப்பியரல்லாதவர்கள் முதலில் அவர்களுடைய பண்பாடுகளிலிருந்து அகற்றப்பட்டால்தான் அவர்கள் நாகரீகமுள்ளவர்களாக ஆவார்கள் என்ற அதே நம்பிக்கைதான் அங்கும் செயல்பட்டது.
1977 இல், கென்யாவுக்குச் சுதந்திரம் வந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டபோதுதான், மொழி ஏகாதிபத்தியத்தின் நீடித்த தாக்கம் பற்றிய கூகியின் கருத்துகள் வளர்ச்சி பெறத் துவங்கின. ஆஃப்ரிக்க இலக்கியத்தில் ஏற்கனவே பெயர் பெற்றிருந்த அவர், கிகுயூ மொழியில் ஒரு நாடகத்தை அந்த வருடம் அரங்கேற்றி இருந்தார், அதற்குப் பிறகு சிறிது நாட்களில் கடுங்காவல் சிறையிலடைக்கப்பட்டார்.  1982 இல் அந்த நாடகக் குழுவை மறுபடி உயிர்ப்பிக்க முயற்சி செய்யப்பட்டபோது, அது காவல் துறையினரால் தடுக்கப்பட்டது. கூகி அதற்குப் பிறகு இருபதாண்டுகள் நாட்டை விட்டு வெளியேறி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலில் பிரிட்டனிலும் பிறகு அமெரிக்காவிலும் காலம் கழித்தார். ஜோமோ கென்யாட்டாவின் ஆட்சியை அவரது நாடகம் விமர்சித்திருந்தது, அவரும் ஒரு கிகுயு சமூகத்தினர்தான்: அது அன்றைய தலைவர்களை மேல்தட்டுப் பார்வையும், தமக்குள் மட்டுமே கவனம் செலுத்தும் குழுவினராகவும் சித்திரித்து விமர்சித்தது, அத் தலைவர்கள், கென்ய விவசாயிகளின் நலன்களைத் தாம் காப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் அவர்களிடமிருந்து முற்றிலும் அன்னியப்பட்டிருந்ததாகக் குற்றம் சொல்லியது, சுதந்திரம் பெற்று வெகுகாலம் ஆன பிறகும் பெரும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் நிலவுவதை விமர்சித்தது. ஆனால், அதற்கு முன்பு இங்கிலிஷில் அவர் எழுதி இருந்த புத்தகங்களுமே இந்த நாடகத்தைப் போலவே காலனியத்துக்குப் பிறகு அதிகாரத்தில் இருந்தவர்களை விமர்சித்திருந்தன. அவருடைய குற்றம்தான் அப்போது என்ன? கென்யா நாட்டின் இயல்பான மக்கள் கைக்கு அதிகாரம் வந்து வெகு காலம் கழித்த பிறகும், இங்கிலிஷ் மொழியை அவர் ஒதுக்கியதுதான் ஒரு குற்றமா? அவரைச் சிறையிலடைத்தவர்கள்- அவர்களில் பலர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடியவர்களில் முன்னணியில் இருந்தவர்கள். அவர்களே, இதே வகையான மொழி அடக்குமுறையை முன்பு கைக்கொண்டிருந்த அன்னிய ஆட்சியாளரிடமிருந்து, கென்யாவிலிருந்து விரட்டப்பட்டவர்களிடமிருந்து, தாம் ஏற்றுக் கொண்டனரா? இப்படி மக்கள் மொழியை அவர் பயன்படுத்தியது, இங்கிலிஷில் தேர்ந்த கல்வி பெறாத திரளான மக்களிடம் நேரடியாகப் பேசியதால், அன்றைய கென்யத் தலைவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததா? அவருடைய இந்த மாறுதலான அணுகல், காலனியத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தை மறுபடி, அசலாகத் தொடர்ந்தது போல இருந்ததா?

“விட்டு நீங்கிய காலனிய அதிகாரத்திடமிருந்து ஆட்சிக் கொடியைப் பெற்ற ஆஃப்ரிக்க பூர்ஷுவாக்கள் ஏகாதிபத்தியத்தின் கருப் பையில் வளர்ந்தவர்களே,” என்று கூகி எழுதி இருந்தார், அவருடைய ‘மையத்தை நகர்த்துவது: பண்பாட்டு சுதந்திரத்துக்கான போராட்டம்” என்ற நூலில். இது 1993 இல் பிரசுரமான புத்தகம், கட்டுரைத் தொகுப்பு. “அதனால், ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரும், அவர்களுடைய புத்தியின் நோக்கமும், தம் மக்கள்பாலும், தம் சொந்த வரலாறு குறித்தும், தம் சொந்த மொழிகள் குறித்தும், தேசத்தின் அனைத்தின் பாலும் அவர்களுடைய மனச் சாய்வுகளும், முழுதும் அன்னியரின் மனநிலைகளாகவே இருந்தன; யூரோப்பிய பூர்சுவா வழி காட்டிகள் அவர்களுக்குக் கொடுத்திருந்த கண்ணாடிகளின் வழியேதான் அவர்கள் தம் நாட்டையே பார்த்தனர்.”
கூகி தன் முதல் புத்தகத்தை வெளியிடுவதற்கு மூன்றாண்டுகள் முன்பு இறந்து போனவரான ஃப்ரான்ஸ் ஃபேனொன் , இதே போன்ற எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். சுதந்திரம் பெற்ற நாட்டின் மத்திய வர்க்கத்தினர், இப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள்- தரகு முறை மூலமும், பெரும் நிதியைப் பதுக்குவதன் மூலமும்- காலனியக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மேன்மேலும் அதிகரிப்பார்கள், அதனால் சுதந்திரம் பெற்ற நாட்டின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும் என்று அவர் மிகச் சரியாக அனுமானித்திருந்தார். அந்த மத்திய வர்க்கம், இந்த நடைமுறையால், ஏகாதிபத்தியத்தின் உள்நாட்டு முகமாக மாறி இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். “அதன் கண்கள் வழியே பார்த்தால், நாட்டின் நிலையை மாற்றுவது அதன் கடமை இல்லை.” என்று ஃபேனொன் எழுதி இருந்தார். “நேரடியாகச் சொன்னால், தேசத்துக்கும், நியோ காலனியம் தன்னை மறைத்துக் கொள்ள அணிந்துள்ள முகமூடியான, தட்டிக் கேட்பாரில்லாது நடக்கும் (தேச) முதலியத்துக்கும் இடையே ஒரு தொடர்புப் பாதையாக இருப்பது அதன் போக்கு.”
காலனிய ஆட்சியின் நீடித்த தாக்கம் பற்றிய இன்றைய சிந்தனையில் பெரும்பகுதி, அந்தத் தாக்கம், முன்னாள் காலனிய நாடுகள் இன்னமும் தம்மை மேற்கு நாடுகளோடு ஒப்பிட்டுக் கொண்டு, தாமும் அவை போல இருக்க வேண்டும் என்று கருதும் நிலையிலேயே இருப்பதில்தான் அதிகம் என்று கருதுகிறது. மக்காலேயும் அவர் காலத்தவரும் மேலை நிலத்து மதிப்பீடுகளும், சாதனைகளுமே தர நிர்ணயிப்புக்கு அளவுகோல்கள் என்றும், உலகத்தின் இதர நாடுகள் எல்லாம் அந்தத் தரத்தை எட்டவே முனைப்பு கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்த்திருந்தனர். காலனிய மொழிக் கொள்கைகளை வகுத்தவர்கள், குறிப்பாகச் சொன்னால், கட்டுப்பாட்டுக்கென தாம் வகுத்த கல்வித் திட்டங்களை இந்தப் பார்வையைக் கொண்டுதான் வகுத்திருந்தனர். மேல்நிலையில் இருப்பன என்று கருதப்படும் அனேக ஆஃப்ரிக்க உயர்நிலைப் பள்ளிகளின் உயர் வகுப்புகளில் பாடத் திட்டங்கள் இன்னமும் இங்கிலிஷ் படைப்புகளாலேயே முன்பாரத்தைக் கொண்டவையாக உள்ளன. ஏனெனில் இங்கிலிஷ் செவ்வியல் புத்தகங்களே இன்னமும் லட்சிய நூல்களாகக் கருதப்படுகின்றன. இதன் மூலம் ஆஃப்ரிக்கர்களின் எழுத்து வெறும் வால் போல ஆகி விடுகிறது, வாய்வழி மரபுகளைக் கற்க சிறிதும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இத்தனைக்கும் அந்த மரபுகள்தாம் கதைகளை மக்களிடம் பரப்ப முக்கியமான வழிமுறையாக நெடுங்காலமாக இருந்திருக்கின்றன.
இந்தப் போக்கைத் தடுக்க ஒரு எதிர்ப்பு உருவாகி வருகிறது: காலனியம் கடந்த ஆசியக் களத்தில் பணியாற்றும் பண்பாட்டுக் கோட்பாட்டாளர்கள், ஆசியரிடையே அதிகம் கவனிப்பைக் கொடுக்கும் ஆய்வுகளில் கவனம் செலுத்துவதை இப்போது முன்வைக்கத் துவங்கி உள்ளனர். அதே நேரம் முன்னாள் காலனிய சக்திகளுக்கும், காலனியத்துக்கு ஆட்பட்டிருந்தவர்களுக்கும் இடையே இன்னமும் நிலவும் அதிகார ஏற்றத் தாழ்வுகள் என்னென்ன வழிகளில் நுட்பமாக இன்னமும் செயல்படுகின்றன என்பதையும் அலசி நோக்குவது இவர்களின் கவனத்தில் உள்ளது. இந்த அலசலை இலக்கிய மொழிபெயர்ப்புகள் மூலம் செய்ய முடியும் என்று இவர்கள் கணிக்கிறார்கள். இந்த அணுகலுக்கு உந்து சக்தியாக இருப்பது, ஒரு நம்பிக்கை. மேற்கு தர ஒப்பீட்டுக்கான  ஓர் இலக்காக இன்னமும் இருக்கும் வரை- அது மட்டுமே ஒரே ஒரு ஒப்பீட்டு இலக்காக இல்லை என்றாலும் கூட- காலனியக் களைவு என்பது ஸ்தம்பித்த நிலையில்தான் இருக்கும் என்பதே அந்த எண்ணம். கூகியின் பார்வையில், இந்த ஒப்பீட்டின் மூலம் அங்கீகாரம் பெறும் முயற்சிகள் இன்னமும் தொடர்கின்றன. அதே நேரம், ஃபேனோன் சுட்டிக் காட்டிய ”தொடர்புப் பாதைகள்”, எவற்றின் மூலம் சுதந்திரம் பெற்ற பின் அதிகாரத்துக்கு வந்த அரசுகள் மேலை வணிக அமைப்புகளின் நலன்களுக்கும், மக்களைச் சுரண்டும் உள்நாட்டு முயற்சிகளுக்கும் இடைத் தரகர்களாகச் செயல்படுகின்றனவோ அவை இன்னமும் வலுவாகவே இருக்கின்றன. இது ஏகாதிபத்திய வெற்றியின் உளவியல் கூறுகள் இன்னமும் நீடித்திருப்பதைச் சுட்டுகின்றன. எது பீரங்கி மூலம் தன் சக்தியைக் காட்டுவதில்லையோ அதை வன்முறை எதிர்ப்பின் மூலம் அகற்ற முடியாது.
ஆஃப்ரிக்காவிலும் மற்ற இடங்களிலும் நடக்கும் இயக்கங்கள், உள் நாட்டின் மொழிகளில் உள்ள இலக்கியங்களின் படைப்பிற்குப் புத்துயிரூட்டும் முயற்சிகளை முன்வைக்கின்றன, அதே நேரம் மொழி பெயர்ப்புத் திட்டங்கள் மூலம் ஆஃப்ரிக்க எழுத்தாளர்களுக்கு இங்கிலிஷ் தெரியாத ஆஃப்ரிக்க வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் மூலம் ஆஃப்ரிக்க எழுத்தை சொந்த மண்ணுக்குத் திருப்பும் முயற்சி மேலோங்கி வருகிறது. ஜலடா ஆஃப்ரிக்கா என்பது பல ஆஃப்ரிக்க மொழி எழுத்தாளர்களுக்கு ஒரு பிரசுரக் களம் அமைத்துத் தருகிறது. அவர்களின் படைப்புகளை இங்கிலிஷிலும் ஆஃப்ரிக்க மொழிகளிலும் மொழி பெயர்ப்பது இந்தத் திட்டம். செனகல் நாட்டின் ‘Céytu’ என்கிற திட்டம், அந்நாட்டில் ஃப்ரெஞ்சு மொழிப் புத்தகங்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் ஒரு திட்டம், மொழிபெயர்ப்புகளை இது நம்பி இருக்கிறது. இந்த நாட்டில் பெரும்பான்மையினரின் மொழியான ஊஃப், என்பதற்கு வளமையான வாய்வழி கலாசாரம் இருக்கிறது, ஆனால் எழுத்து வழியில் இல்லை. சல்மான் ருஷ்டியைப் போன்ற சில எழுத்தாளர்கள், பல கோடிகள் (பிலியன்கள்) எண்ணிக்கை உள்ள இங்கிலிஷ் மொழி வாசகர்களுக்கு எழுதுவதில் கிட்டும் பயன், பழம் பண்பாடுகளின் மொழிகளில், மிகக் குறைவான எண்ணிக்கை வாசகர்களுக்கு, எழுதுவதை விடப் பன்மடங்கு அதிகம் என்று வாதிடுகின்றனர். பன்னாட்டு அங்கீகாரம் பெற்ற பல ஆஃப்ரிக்க எழுத்தாளர்களில் மிகச் சிலரே கூகியின் முன்னெடுப்பைப் பின்பற்றித் தம் தாய் மொழியில் எழுதத் திரும்பி இருக்கின்றனர்.
பெனெடிக்ட் ஆண்டர்ஸன், ‘இமாஜிண்ட் கம்யூனிடீஸ்’ என்ற தன் நூலில், பகிரப்படும் மொழிகளுக்கு ஒன்றிணைக்கும் சக்தி உண்டு, அதன் மூலம் “கடந்த காலம் மறுபடி நிலை நிறுத்தப்படுகிறது, கூட்டுறவுகள் மறுபடி கற்பனை செய்யப்படுகின்றன, எதிர்காலம் கற்பனை செய்யப்படுகிறது,” என்றெழுதினார். அது சரியானால், சொந்த நாட்டு மொழிகள் இறக்கத் தொடங்குவது என்பது முன்னாள் காலனிய நாடுகளின் சிதைப்புக்கு எத்தனை தூரம் வழி கோலும்? மொழியை, தம் ஆட்சியின் கீழிருந்த நிலப்பகுதி மக்களைப் பிரித்து ஆள்வதற்கு வழி வகுக்கும் சூழ்ச்சிக்கு ஆயுதமாக வளைப்பது யூரோப்பிய அதிகாரச் சக்திகளின் நோக்கமாக இருந்தது; மற்ற யூரோப்பிய சூழ்ச்சிகளில், குழு அடையாளங்களை அரசியலாக்குவது- யூரோப்பிய ‘இன’ நோக்கு அறிவியல் மூலம் இனங்களின் அதிகார அடுக்குகளை உருவாக்குவது- போன்றன  காலனிய ஆட்சி முடிந்து பல பத்தாண்டுகள் தாண்டியும் இன்னமும் கடும் வன்முறை நிறைந்த போராட்டங்களில் ஆஃப்ரிக்கர்களையும் இதர மக்களையும் நிறுத்தி இருக்கின்றன.
ஆதிக்கத்துக்கான நெடுநாள் இலக்கை அடையும் இந்தப் போர்முறைகள் எல்லாமே கட்டுப்படுத்தி ஆளும் செயல்முறைகளின் தொகுப்பில் ஒரு பகுதியாக, குறியீட்டளவிலேயே செயல்பட்டு வந்திருக்கின்றன. “ஒரு மக்களின் பண்பாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் அடைப்பது,” கூகி எழுதினார், “அவர்கள் மற்றவர்களோடு கொள்ளும் உறவுகளில் தாம் யாரென அவர்கள் வரையறுக்கப் பயன்படுத்தும் கருவிகளைக் கட்டுப்படுத்துவதாகும்.” கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் இந்த விசைகள் முன்பு வெள்ளை அதிகாரிகள்/ நிர்வாகிகளின் கைகளில் இருந்தன. கூகி வருத்தத்தோடு நமக்கு அளித்திருப்பது, இந்த விசைகள் எப்படி முந்தைய காலனியத்தை எதிர்த்தவர்களாலேயே பயன்படுத்தப்படுகின்றன என்பதை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
ஆகஸ்ட் 6, 2018.

~oOo~

குறிப்புகள்:
1 மொழி பெயர்ப்பாளர் குறிப்பு: Decolonising the Mind என்ற புத்தகத்தின் தலைப்புடைய மொழி பெயர்ப்பை இந்தக் கட்டுரையில் பயன்படுத்துகிறேன். “புத்தியிலிருந்து காலனியத்தை அகற்றல்” என்ற பெயர் இந்த டீகாலனைஸிங் த மைண்ட் என்கிற இங்கிலிஷ் புத்தகத்தையே குறிக்கும்.
கட்டுரையின் மூல வடிவை இங்கு பெறலாம்: Ngũgĩ wa Thiong’o and the Tyranny of Language | by Francis Wade | NYR Daily | The New York Review of Books
இந்தக் கட்டுரையை வெளியிட்ட நியுயார்க் ரிவ்யு ஆஃப் புக்ஸிற்குச் சொல்வனம் தன் நன்றியைத் தெரிவிக்கிறது.
Ngũgĩ wa Thiong’o என்று இங்கிலிஷில் எழுதப்படும் பெயர் அவருடைய இயல்பு மொழியான கிகூயுவிலிருந்து பெறப்பட்ட உச்சரிப்பை இக்கட்டுரையில் கொடுத்திருக்கிறோம். கிகூயு மொழி ஆஃப்ரிக்க மொழிகளில் பலவற்றின் மூலாதாரமான பாண்டு மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.
கலிஃபோர்னியா மாநிலப் பல்கலையின் இர்வைன் நகரத்து அமைப்பில் கூகி வா தாங்கோ பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். 1938 இல் கென்யாவில் பிறந்த கூகி வா தியோங்கோ இப்பொழுது 80 வயதைத் தொட்டிருக்கிறார். இவரது 2013 ஆம் வருடத்துப் பேட்டி ஒன்றின் காணொளியைக் கீழே காணலாம்.

இவரைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு விக்கி பதிவைப் பார்க்கவும்.
இவர் ஒரு கட்டத்தில் ஃப்ரான்ஸ் ஃபேனனின் வகை மார்க்சியத்தைப் பின்பற்றியவர். அப்பொழுது துவங்கி கிருஸ்தவத்தையும், இங்கிலிஷ் மொழியையும் அவை காலனியத்தின் தொற்று நோய்கள் என்று கருதிக் கைவிட்டதாகத் தெரிகிறது. பிற்பாடு இவர் பெருமளவும் கிகியு, மற்றும் ஸ்வாஹிலி மொழிகளிலேயே எழுதி வந்திருக்கிறார். ஆனால் கென்யாவின் மோய் ஆரப் அரசு இவரைத் துன்புறுத்திச் சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்திய பிறகு இவர் மேலை நாடுகளில் வசித்து வந்திருக்கிறார்.

~oOo~

ஒரு பத்தியில் மொழி பெயர்ப்பு முயற்சிகளில் ஒன்றாக ஜலடா ஆஃப்ரிக்கா என்று ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஜலடா ஆஃப்ரிக்காவின் ஒரு பதிப்பாக இங்கு காணவிருப்பது கூகி வா தியோங்கோவின் ஒரு சிறுகதை: Jalada Translation Issue 01: Ngũgĩ wa Thiong’o – Jalada African Business Blog On Humans
இந்தப் பதிப்பில் ஒரு சிறுகதை பல ஆஃப்ரிக்க மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அளிக்கப்படுவதைக் காணலாம். இத்தகைய முயற்சி இந்திய மொழிகளிடையே துவக்கப்பட்டிருப்பதை நாம் சமீபத்தில் பார்த்திருக்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.