சில வாரங்களுக்கு முன் நான் நியூ யார்க்கில் எரித்ரியன் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்டியன் மற்றும் அமெரிக்கன் ஆர்த்தடாக்ஸ் ஜ்யூவிஷ் திருமணம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். எரித்ரியர்கள் தேசமெங்குமிருந்தும் உலகெங்குமிருந்தும் வந்திருந்தனர். போரும் கலவரமும் இரு தலைமுறைகளாக அவர்களை உலகெங்கும் வாரியிறைத்திருந்தது.
எரித்ரிய பெண்கள் தம் பாரம்பரிய வெள்ளையுடையும் நெட்சேலா என்று அழைக்கப்படும் மேலுடையும் அணிந்து வந்திருந்தனர்; ஆண்கள் தம் கருப்பு நிற மேற்கத்திய சூட்களில் நளினமாகவும் சீரியசாகவும் இருந்தனர். வைன் கிளாஸ் சிதறித் தெறித்தது; யூத குடும்பம் கைகளைக் கோர்த்துக் கொண்டு வட்டமாய் ஆடினர்; எரித்ரியர்கள் கூடா என்று அழைக்கப்படும் வட்ட நடனம் ஆடினர். யூத ஆண்கள் மணமகளை நாற்காலியில் அமர்த்தி உயரத் தூக்கினர்; எரித்ரியர்கள் ஆலயத்தில் குலவையிட்டனர்.
அது சிக்கலான, அழகிய நாள். பல நூற்றாண்டு மரபுகள் ஒன்று கூடின. போர் ஆப்பிரிக்க குடும்பங்களையும் ஹோலோகாஸ்ட் யூத குடும்பங்களையும் சிதறடித்திருந்த காரணத்தால் மணமகனும் மணமகளும் அமெரிக்காவில் சந்தித்துக் கொள்ள நேர்ந்தது, அனைவரும் தமக்குக் கிடைத்த புது வெளியில் தம்மை புதிதாய்ப் படைத்துக் கொண்டனர்.
யூத திருமணத்தில் கொண்டு செல்லப்படும் நிழற்குடையின் பெயர் ஹுப்பாஹ். புதுமணத் தம்பதியினருக்கான புகலை அது குறிக்கிறது. ஹூப்பா பக்கவாட்டில் எப்போதும் திறந்திருக்கும், அது ஒளியையும் காற்றையும் மட்டுமல்ல, மனிதர்களையும் உள்ளே அனுமதிக்கிறது. இவ்வாறாக, புதுமணத் தம்பதியரின் இல்லம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது, அதிலுள்ள ஸ்டோன் சூப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. விருந்தினரையும் தேவதைகளையும் வரவேற்ற ஆபிரஹாமின் முகாமை இது நினைவுறுத்துகிறது. உன் இல்லம் விரிந்து திறந்திருக்கட்டும், வழிப்போக்கர்களை வரவேற்க அதன் அத்தனை புறமும் திறந்திருக்கட்டும்.
என் பக்கம் எரித்ரிய பக்கம், நான் எரித்ரியள் இல்லை எனினும்; மறைந்த என் கணவர் எரித்ரியர். எங்களோடு வாழ பதினாறு வயதில் அமெரிக்கா வந்தபோது என் மகளாக மாறிய அவரது நீஸ்தான் மணமகள். அவளை இருந்த இடத்தில் இருக்க முடியாமல் செய்தது போர், என் முதல் குழந்தை என்று நான் நினைத்துக் கொண்டிருந்த கரு தரித்திருந்த காலத்தில் அவளது அம்மா என்னிடம், “இவள் இனி உன் மகள்,” என்றாள்,
இப்படிதான் வளர்கிறது வாழ்க்கை. குடும்பங்கள் விரிகின்றன, பிறரது ஆசிகளும் பொறுப்புகளும் நம்மை நாடி வருகின்றன.
நமக்கு வசதியான பிரதேசத்தை விட்டு வெளியேறும்போது, நாம் வளர்ந்த காலத்தில் உண்ட ரொட்டிக்கு மாறாய் வேறொன்றை உண்ணும்போது, பகுத்துணரும் மனப்பான்மை வளர்கிறது. சல்லா, சப்பாத்தி, வெந்நீர் கார்ன்பிரெட், பிடா, இன்ஜெரா, பாகெட்- வேறொரு ரொட்டியை, வேறு வகையில் காரம் சேர்ந்த உணவை உண்பது என்பது எவ்வளவு அற்புதமானது. உன் மொழிக்கு மாறாய் வேறொரு மொழியில் கனவு கண்டு கொண்டிருப்பவன் அருகில் உறங்குவது என்பது எவ்வளவு அற்புதமானது.
இந்த மாதிரி ஒரு மண நாள் காட்சியை நினைத்துப் பாருங்கள்: பத்து வயதான என் உடன் பிறந்தாரின் மகன் மாக்ஸி, அவன் ஸ்காட்டிஷ் மற்றும் எரித்ரியன், ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டீனில் வாழ்கிறான், தன் அத்தை திருமணம் செய்து கொள்வதைப் பார்க்க பயணம் செய்து வந்திருக்கிறான். போட்டோவில் அவன் தன் அப்பாவின் குலத்துக்குரிய வடிவில் அமைக்கப்பட்ட கில்ட் அணிந்திருக்கிறான், இந்த சமயத்தில் அவன் ஆலயத்தில் அணிவதற்கென்றே செய்யப்பட்ட டார்ட்டன் யார்முல்கே அவன் தலை மேல் இருக்கிறது. நீ பார்த்ததிலேயே இனிய வெட்கச் சிரிப்பு சிரிக்கிறான், குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் அவன் எரித்ரிய நடனம் கற்றுக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.
இதுவே புலம்பெயர் சமூகத்தின் அழகு, கலாசார பரிமாற்றத்தின் அழகு, அடுத்து என்ன வரப் போகிறது என்று அறியாதிருப்பதன், புதிய வாழ்வொன்றை அமைத்துக் கொள்வதன், இடைவெட்டுக்குபின் புதிதாய் ஒன்றைச் செய்வதன் அழகு. பரந்து விரிந்திருக்கும் இவ்வுலகில் டார்ட்டன் ஸ்கல்கேப் அணிந்திருக்கும் ஒரே ஸ்காட்டிஷ்-எரித்ரிய சிறுவன் அவனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அவன் நிச்சயம் கடைசி ஸ்காட்டிஷ்-எரித்ரியன் அல்ல.
பல பத்தாண்டுகள் நிகழ்ந்த சுதந்திரப் போர் மற்றும் செம்பயங்கரம் என்று அழைக்கப்பட்ட பிணிப்புக்குப் பின், 1981ஆம் ஆண்டு தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடான எரித்ரியாவில் இருந்து என் கணவர் அமெரிக்கா வந்ததால் இந்தக் குடும்பம் என் குடும்பமாகிறது. அவர் ஓர் அகதி. போர், இயற்கைப் பேரழிவு அல்லது அடையாளமிழப்பு போன்றவற்றைத் தப்ப தன் தேசத்தை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டவர்.
‘அகதி’ என்ற சொல்லைக் கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அமெரிக்கா வரவேற்பற்ற இடம், கதவுகளும் சன்னல்களும் மூடிப் பூட்டப்பட்ட வீடு என்று தொடர்ந்து விவரிக்கப்படுவதைக் கேட்கும்போது நாம் என்ன நினைக்கச் சொல்லப்படுகிறோம்?
பிக்கர் ஜெப்ரேயேசஸ், மறைந்த என் கணவர், நான் மணம் புரிந்து கொண்ட அகதி. அவர் தன்னைச் சுட்டுக் கொல்ல வந்த கும்பல்களை விட்டு தப்பி வந்தார், தன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தேடிய போர் வீரர்களிடமிருந்து ஒளிந்திருந்தார், தன் பள்ளிப்பருவ சகாக்கள் காணாமல் போகக் கண்டார். அவர் அறிந்த ஒவ்வொரு குடும்பத்திலும் இது இயல்பாய் நிகழ்ந்த ஒன்று. பதினாறு வயதில் அவரது அம்மா அவர் உயிரைக் காக்க அவரை வெளியே அனுப்பினார். அவர் சூடானுக்கு நடந்தே சென்றார். அங்கிருந்து இத்தாலி சென்றார், அங்கிருந்து ஜெர்மனி, அதன் பின் அங்கிருந்து அமெரிக்கா, இறுதியில் நியூ ஹாவன் வந்து சேர்ந்தார்.
அவரது முழுப்பெயர் பிக்கர்மரியம் ஜெப்ரேயேசஸ். இத்தாலியில் அவரை மார்க்கோ என்று அழைத்தார்கள். ஜெர்மனியில் அவரை என்னவென்று அழைத்தார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவில், பெரும்பாலான நியூ ஹாவன் மக்களால் பில் என்று அழைக்கப்பட்ட உள்ளூர் சீன நாட்டு மருந்துக் கடை உரிமையாளர் லி-பாஒ அவரை ஃப்ரெட்டி என்று அழைத்தார். புதிய இடத்தில் தம் தாய்மொழியைக் கைவிடாதிருந்த நியூ ஹாவன் இத்தாலிய-அமெரிக்கர்கள் அவரை ஃபியோர் என்றழைத்தனர்.
அமெரிக்கா வந்ததும் அவர் இதைத்தான் செய்தார்: அவர் வேலை செய்தார், பொதுவாக மூன்று வேலைகள். அவை விருப்பத்துக்கு உரியவையல்ல, பேருந்துகளில் பல முறை பயணம் செய்து சென்றடைய வேண்டிய இடங்களில் நீண்ட, தனிமை நிறைந்த இரவுப் பொழுதுகளில் வேலை செய்தார். அது போக அவர் நண்பர்களை உருவாக்கிக் கொண்டார். அதன் பின் அவர் தன் சமூகத்தில் ஓர் உறுப்பினர் ஆனார். அதன்பின் அவர் புதியன உருவாக்கி, அந்தச் சமூகத்துக்கு வளமை சேர்த்தார்.
எரித்ரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போரின் பல்வேறு காலகட்டங்களில் வந்தார்கள். 1998ஆம் ஆண்டு எத்தியோப்பிய-எரித்ரிய எல்லைப் போருக்குப் பின் கடைசி அலை வந்தது. அப்போது எத்தியோப்பியாவில் இருந்த சில எரித்ரியர்கள் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையிடத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பல பத்தாயிரக்கணக்காக உயிர்களை பலி கொண்ட அந்தப் போர் அரை நூற்றாண்டு கால சண்டைக்குப் பின் இந்த மாதம்தான் முறைப்படி முடிவுக்கு வந்தது.
பிக்கர் தான் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கன், ஆப்பிரிக்கன், எரித்ரியன், கிழக்கு ஆப்பிரிக்கன், அஸ்மாரினோ, மனிதன், என்று கருதினார். அவர் அந்த அடையாளங்களில் வாழ்ந்தார். நானறிந்த வேறு எவரையும்விட அதிக புத்தகங்கள் வாசித்தார், எட்டு மொழிகள் பேசினார், பல ஆண்டுகளாக ஒரு சமூகத்துக்கு உணவளித்த உணவகம் துவங்கினார், 882 ஓவியங்கள் வரைந்தார்- அவற்றில் சில இவ்வாண்டு செப்டம்பர் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மியூசியம் ஆஃப் ஆப்பிரிக்கன் டயஸ்போராவில் ஒரு நபர் கண்காட்சியில் வைக்கப்பட இருக்கின்றன.
அவர் அமெரிக்க குடிமகன் ஆனார், நாங்கள் நியூ ஹாவன் நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்குச் சென்றோம். அங்கிருந்த உலகில் நான் அமெரிக்காவின் அடிப்படைக் கருத்தாக்கத்தையும் அதன் உறுதிப்பாட்டையும் கண்டேன். “புரட்சிகர வரவேற்பு” என்ற சொற்றொடர் என் நினைவுக்கு வந்தது.
தன்னை விட்டு அகலாத அச்சத்தில் பிக்கர் வாழ்ந்தார்- இத்தனைக்கும் அவரை அறிந்தவர்கள் அவரைவிட சந்தோஷமான வேறு எவரையும் அறிந்திருக்க முடியாது. செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின், பிரௌன் நிற மக்கள், ‘வழக்கத்துக்கு மாறான’ கடைசி பெயர் கொண்டவர்கள் கைது செய்யப்பட்டபோது, பல நாட்கள் அவருக்கு அச்சத்தில் வியர்த்து விடும், இப்போது எது எவருக்கு தாயகமாய் இருக்கிறதோ அங்கு தனக்கு இனி பாதுகாப்பு இல்லை என்று கவலைப்படுவார். அவர் என்னைவிட்டு, தான் நேசம் வைத்திருக்கும் தன் குழந்தைகளை விட்டு, பிரிக்கப்படலாம் என்று பயப்படுவார்.
தான் வளர்ந்த இடத்திலிருந்து வெகு தொலைவில், எங்கள் வீட்டின் பின்புறம் மரத்தின் அடிக்கட்டையில் ஒரு முறை அமர்ந்திருந்த அவர், “நான் சொல்றது தமாஷா இருக்கலாம், ஆனா இது எனக்கு ஆப்பிரிக்கா மாதிரி இருக்கு,” என்றார்.
என் கணவரின் சகோதரிகளில் ஒருவர், அவரும் ஒரு அகதி, தன் கணவனும் உயிர் பிழைத்திருந்த மகனும் ஊரிலிருந்து வந்து சேர்வதற்குள் அமெரிக்காவில் ஒரு புதிய வாழ்வை எதுவுமில்லாமல் துவங்கினாள். உடமைகள் அனைத்தையும் அவள் எத்தியோப்பியாவில் விட்டு வந்தாள்- வீடு, கார், நகைகள். ஒரு வழியாய் இவற்றில் சில அவளிடம் வந்து சேர்ந்தன. கென்னடி விமான நிலையத்திலிருந்து அழைப்பு வரும், முக்கியமான ஒரு பொட்டலம் வந்து சேரும்: உணவுப் பொருட்கள், துணி, ஆவணங்கள்.
இவற்றில் சிறந்த கணம் அவளது சிறிய காபி டேபிள் வந்ததுதான்- அதில் காபி கொப்பைகளுக்கான ஒரு அடுக்கு இருந்தது, செயற்கை புல்லால் செய்யப்பட்ட ஒரு சிறிய விரிப்பும் வந்தது. அவள் புனிதமான எரித்ரிய காப்பி சடங்கு செய்து முடித்தாள்- அக்கணம் அவள் அகதியாய் இல்லை, வாழ்நாள் எல்லாம் செய்து கொண்டிருந்த சடங்குகளைச் செய்யும் பெண்ணாய் இருந்தால்.
“நான் இப்போது என் வீட்டில் இருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே அவள் எங்களுக்கு கோப்பை கோப்பையாக காப்பி கொடுத்தாள். அவள் இப்போது இறந்து விட்டாள். சமீபத்தில் திருமணம் செய்து கொண்டது அவளது மகள்தான்.
ஆம், வாழ்வின் பொருள்தான் என்ன, காப்பி, டீ, நேசத்துக்குரியவர்களுடன் உரையாடல் என்பதாய் இல்லாமல்?
அகதிக்குரிய வீடுதான் என்ன? நான் ஒருபோதும் என் வீடு எப்போதும் எனக்குரியது என்று எடுத்துக் கொண்டதில்லை. ஆனால், நான் வீடற்றுப் போவேன் என்று ஒருபோதும் எனக்குத் தோன்றியதில்லை.
“என் குழந்தைகள் அகதிகளாகக் கூடாது,” என்று என் கணவர் சொல்லுவார். நாங்கள் இருண்மையும் புரிதலும் கூடிய சிரிப்பைப் பகிர்ந்து கொள்வோம். “ஆனால் அகதிகள் நாங்கள் அறிந்ததை அவர்களும் அறிய வேண்டுமென்று விரும்புகிறேன்: கையில் எதுவுமே இல்லாத நிலையிலும் நீ உனக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளலாம். உயிர் பிழைத்தவர்களுக்கு இருக்கக்கூடிய ஆற்றலும் தந்திரமும் குழந்தைகளுக்கு இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்”.
“அகதிகள் நாங்கள்,” என்பார் அவர், உயிர் பிழைக்கும் அகதிகளை நினைத்துக் கொண்டு.
பிக்கர் எதிர்பாராமல் இறந்தார், அவரது ஐம்பதாவது பிறந்தநாளுக்குச் சில நாட்கள் பின்னர், மாரடைப்பால். அவர் ஆரோக்கியமாக இருந்தார் என்று நினைத்தோம். அவர் அகதி என்பது எங்களுக்கு ஆச்சரியமாய் இல்லை, என்று சில மருத்துவர்கள் தனியாய்ச் சந்தித்தபோது சொன்னார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இதய சிகிச்சை மருத்துவர்கள், இதயம் ஒரு உவமை, இதயம் ஒரு உண்மை என்று சொன்னார்கள். தொடர்ந்து அளிக்கப்படும் அழுத்தம் இதயத்தை உடைக்கலாம். விடுதலையை நோக்கி நடை போடுபவர்கள் பலர் அதன் அழுத்தத்தை தம் வாழ்நாள் முழுதும் சுமக்கிறார்கள், கண்ணுக்குத் தெரியயாத சுமை, ஆனால் என்றும் இருப்பது.
ஆம், அவர் என்னவர், இப்போது நான் அவர் பாடலை இசைக்கிறேன். ஆனால் தம் வீட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்ட பிற அகதிகள், உச்சரிக்க ஒரு சிலர் சிறு முயற்சியும் எடுத்துக் கொள்ளாத பெயர்கள் கொண்ட, அமெரிக்காவைக் கட்டியெழுப்பும் மனிதர்கள் அத்தனை பேரிடமிருந்தும் அவர் ஒரு விதத்திலும் மாறுபட்டவரல்ல. காதலில் வீழ்ந்து இங்கு குடும்பத்தை அமைத்துக் கொண்ட பல லட்சக்கணக்கானவர்களில் நானும் எவ்வகையிலும் மாறுபட்டவளல்ல.
என் வாழ்வில் பிக்கரின் இருப்பு, தேசீயத்தின் எல்லைகளையும் ஆபத்துகளையும் உணர்த்துகிறது, குடும்பங்கள் பல தலைமுறைகள் பிரிக்கப்படலாம் என்ற உண்மையை உணர்த்துகிறது, கவிஞர் டபிள்யூ. ஹெச். ஆடனின் சொற்களில், “நாம் நேசித்ததாக வேண்டும் அன்றி மரிப்போம்,” என்பதை உணர்த்துகிறது.
நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் வாழ்வைத் தொடரும்போது ஏழ்மைப்பட்டவர்களாய் இருக்கிறோம், இந்த தேசம் எந்த வகையில் தனித்துவம் கொண்டதாய் உள்ளது எனில் இங்கு உலகே உள்ளது என்பதில், என்ற படிப்பினையை பிக்கரின் கதை அளிக்கிறது.
பிக்கர் இவ்வுலகை சீக்கிரமே துறந்தார். எனவே அவரது அமெரிக்க கதையைச் சொல்லும் பணி எனக்குரியது. நான் இக்கதை சொல்லி, நம் வாழ்வினுள் வழிப்போக்கர்களை வரவேற்று எத்திசையும் திறந்திருக்கும் இல்லங்கள் அமைப்போமா, என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி – நியூ யார்க் டைம்ஸ் – Opinion | How to Make a Life From Scratch – The New York Times