பூமி குமாரம்

சீதா தேவியையும், ஆண்டாள் நாச்சியாரையும் பூமிகுமாரிகள் என நாம் அறிவோம்.நம் புராணங்களில், காற்றில், தீயில்,நீரில், மண்ணில்,என தெய்வங்களும், தேவதைகளும் பிறந்திருக்கின்றனர்;அவர்கள் மண்ணில் நம்முடன் வாழ்ந்ததாக நம்பப் படுகிறது.ஆனால், நாம் வாழும் புவி பெற்ற ஒரு குழவி வானில் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வருகிறது எனச் சொன்னால் நம்மில் எத்தனை பேரால் ஏற்க முடியும்?

வானும், கடலும் மொத்தத்தில் இயற்கையும் மனிதர்களின் ஆவலைத் தூண்டிக்கொண்டேயிருக்கின்றன.பி.சி.இக்கு(BCE)முன்னரே இந்தியர்களும், பாபிலோனியர்களும்,கிரேக்கர்களும் வான் கோள்களை அறிந்திருந்தனர்.வராஹமிஹிராவின் ‘சூர்ய சித்தாந்தா’ திரிகோண விதிகளின் படி செவ்வாய் கோளின் விட்டம் எவ்வளவு எனக் கணக்கிட்டுச் சொல்கிறது.அதில்,இரும்பும், தண்ணீரும் இருப்பதையும் அவர் சொல்கிறார்.இந்த முடிவுகளுக்கு வர உதவிய செயல்பாட்டு முறைகள் இன்னமும் நம்மிடம் இல்லை.ஆனால், பல தலைமுறைகளாக அந்த அறிவு பேசப்பட்டு, விரிவாக்கப்பட்டு,பாடல்களாகவும் வந்துள்ளன.வானஇயல்,கணித இயல்,சோதிட அறிவியல் அனைத்தும் சந்திக்கும் ஒரு புள்ளியை அவர்கள் சொல்லித்தான் சென்றிருக்கிறார்கள்.நாம் அதை தொலைத்துவிட்டாலும், இன்று இன்னமும் ஆதாரபூர்வமாக, அறிவியல் விதிகளின் துணை கொண்டு, மேம்பட்ட கருவிகளைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷதர் சுருட்டி இராகத்தில்’அங்காரகம், ஆஸ்ரயாம்யகம்’ என்ற கீர்த்தனையில் செவ்வாயின் குண நலன்களைக் கூறுகிறார்.அவன் குருதி நிறத்தவன்,சிறப்பு மிக்க மந்தார மரத்தை நிகர்த்தவன்,மேஷ விருச்சிக ராசிகளின் அதிபதி,ரக்த நிற ஆடையை அணிந்தவன்,சக்தி வழங்கிய சூலம் உடையவன், கதை ஏந்தியவன்,  செம்மறி ஆட்டை வாகனமாக உடையவன்,அழகான கழுத்தும், கால்களும் உடையவன். மகர ராசியில் உச்சம் அடைபவன்,தேவர்களும்,அசுரர்களும் வணங்கக் கூடியவன், இனிய மந்தஹாசப் புன்னகையுடன் இருப்பவன்,நான்கு கரங்கள் கொண்டவன், சூர்யன், சந்திரன், குரு முதலியவர்களுடன் நட்பு பாராட்டுபவன்,சுப்ரமண்யன் எனும் முருகனுக்கு உகந்தவன், வைத்யனாத புண்ணியத் தலத்தில் உறைபவன்,எளியோரைக் காப்பவன் என்று பாடுகிறார்.
இதில் செவ்வாயின் சிவப்பு நிறத்தை பொதுவாக எல்லோரும் அறிந்துள்ளோம்.ஆட்டின் வடிவம் எனத் தோன்றும் விண்மீன்களின் தொகுப்பு மேஷ ராசி எனப்படுகிறது.இச் செய்தி, இரவு வானை தொடர்ந்து தொலை நோக்கி போன்ற சாதனங்களுடன் பார்ப்பவருக்கு எளிதாகப் புலனாகும்.விருச்சிகத்தில் மேஷத்தைவிட விண்மீன்கள் அதிகம்; அவை பெரும்பாலும் செறிவான ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கின்றன.செவ்வாய், மகரத்தில் உச்சம் பெறுகிறது என்ற செய்தியும் மேற்கூறிய பாடலில் உள்ளது.பொதுவாக கோள்களின் சுழற்சியைக் கூறும் அறிவியல் அவை சில காலங்களில் பளீரென்றும், சில காலங்களில் மங்கலாகவும் காணக்கிடப்பதைத்தான் சொல்கிறது.செவ்வாய் ஒரு கோள் என்பதாலும்,அது பால்வீதியில் அமைந்துள்ள இடத்தினாலும், அதன் சுற்றுச்சூழலாலும்,அது காட்டும் வண்ணத்திற்குத் தொடர்பு,அது தன் இராசிகளில் கொள்ளும் விண்மீன்களின் ஒளியிலிருந்து பெற்றுக் கொள்ள வழி இருக்கிறதா என்று மனித சிந்தனை இதுவரை எண்ணவில்லையோ என்றே தோன்றுகிறது.அவ்வாறாக அந்த விண்மீன்களின் ஒளி வந்தடைவது இயல்வதா என்ற கேள்வியும் எழாமலில்லை.கோளுக்கென்று ஒரு கிரகம்(வீடு) ஒன்றில் உச்சம், ஒன்றில் நீச்சம் என்பதில் கற்பனையை மீறி விஷயங்கள் இருக்கக்கூடும் அல்லவா?இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒவ்வொரு வீடுதான்.செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி இவற்றிற்கு இரு வீடுகள்! இதை இவ்வாறும் சொல்லலாம்.நாம் வசிக்கும் வாழ்விடத்தை வீடு என்று சொல்கிறோம்.வாடகை வீட்டில் வசிப்பவர் உண்டு, சொந்த வீடுகளில் வசிப்போரும் உண்டு.வீட்டை க்ரஹம் என்றே சொல்கிறோம்.’கிருகப்பிரவேசம்’ என்பது வழக்கு மொழியில் எல்லோராலும் சொல்லப்பட்டு, புரிந்து கொள்ளவும் படுகிறது.360 டிகிரியை இந்திய வான இயல் மற்றும் சோதிட நூல்கள் பன்னிரெண்டு இராசிகளாகப் பிரிக்கின்றன. மேலை சோதிடமும் பாகைகளாவே கையாளுகின்றன.ஏழு முதன்மை கிரகங்கள் இராசியின் அதிபர்களாக, அதாவது சொந்த வீடு உடையவர்கள் என்று நம் சாத்திரம் சொல்கிறது.மற்ற இரு கிரகங்களும் நிழல் கிரகங்கள்-அவைகளுக்குச் சொந்த வீடு கிடையாது.
ஒரு அட்டவணை

கோள் சொந்த வீடு உச்சம் அடையும் வீடு
சூரியன்(ஸ்டார்) சிம்மம் மேஷம்
சந்திரன் கடகம் ரிஷபம்
செவ்வாய் மேஷம், விருச்சிகம் மகரம்
புதன் மிதுனம்,கன்னி கன்னி
வியாழன் தனுசு, மீனம் கடகம்
வெள்ளி ரிஷபம்,துலாம் மீனம்
சனி மகரம், கும்பம் துலாம்

 
இந்திய விண்வெளி ஆய்வு  செவ்வாயை ஆராய்வதற்கு ஒரு திட்டத்தைத் தயாரித்து அதை முதல்முறையிலேயே வெற்றிகரமாகவும் செயல்படுத்தியுள்ளது. ‘மாம்’என்று செல்லமாக அழைக்கப்படும் அதில் மூன்று பெண்மணிகள் (திருமதிகள் சீதா சோமசுந்தரம்,நந்தினி ஹரினாத்,மினால் ரோஹித்)திட்ட இயக்குனர்,திட்ட வடிவமைப்பாளர்,பொறியியல் விஞ்ஞானி மற்றும் ஆய்வாளர் முக்கிய பங்காற்றியுள்ளனர்.18 மாதங்களில் வடிவமைக்கப்பட்ட மங்கள்யான் 5 நவம்பர்2013-ல் விண்ணில் செலுத்தப்பட்டு24செப்டெம்பர்14லில்-செவ்வாயின் சுழல் வட்டப் பாதையில் கோளுக்கு அருகாமையில் 365 கிலோ மீட்டரிலும்,தொலைவில் 80000 கிலோ மீட்டருமாக நிலை நிறுத்தப்பட்டது.
இஸ்ரோ வெளியிட்ட படம் கீழே:

அது கொண்டு சென்ற பரிசோதனைக் கருவிகள் மிகக் குறைந்த அளவு எடை கொண்டவையே-உயிர் வாழும், வாழ்ந்த குறிகளைக் காட்டும் மீதேனை உணரும் சென்சார்,சுற்றுச் சூழலை அறிவதற்கான லைமன் ஆல்ஃபா ஃபோடோமீடர், மென்கா(MENCA)தனிமங்களைக் கண்டறிய சிவப்பு ஊடு கதிர் அளவை முக்கியமானவை.இதில் மீதேனைக் கண்டறியும் செயல்பாட்டில் பிழை நேர்ந்திருப்பதாக அறிகிறோம்.ஆனாலும், மங்கள்யான் தந்திருக்கும் வண்ணப்புகைப் படங்களும், இதர அறிவியல் செய்திகளும் மிக மிகத் தேவையானவை.MENCA-Mars Exospheric Neutral Composition Analyser) மிக வெப்பமான அர்கான் (Argon)வாயுவைக்  கண்டறிந்துள்ளது.இது இயற்கையாகக் காணப்படும் ஹைட்ரஜன் போன்ற ஆறு வாயுக்களில் ஒன்றாகும்.
2018 ஜூலை மாதத்தில் புவியின் வேகமான  சுழற்சி காரணமாக நமக்கும், செவ்வாய்க்கும் இடையே உள்ள தூரம் குறைகிறது. இதனால் பின்னிரவில் ஒளிர் சிவப்பாகப் பார்க்கும் வசதியும் ஏற்படுகிறது.மங்கள்யானும் செப்டெம்பெர் 2015-ல் 365 கிமி தொலைவிலிருந்து 260 கி மீஎன நெருங்கிப் பார்க்கும் விதமாக இயக்கப்பட்டது.
ஒரு சிறிய ஒப்பீட்டைப் பார்ப்போம்.செவ்வாய்  தன் சுற்றுப் பாதையில் செல்ல பூமியின் அளவீட்டில் எத்தனை நாட்கள் எடுக்கிறது?
சூர்ய சித்தாந்தம் 686 நா 23 மணி 56 நிமி23.5 வி
Ptolemy           686 நா 23 மணி 31 நிமி 56.1 வி
20 ம் நூற்றாண்டு 686 நா 23 மணி 30 நி 41.4 வி
நாசாவின் மாவன்(MAVEN) விண்கலம் செவ்வாயை அடைந்த இரு நாட்களில் நம் ‘மாம்’சுழல் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.செவ்வாயில் காணப்படும் பள்ளத்தாக்குகள்,அதன் பரப்பில் தென்படும் கிளை விரிவாக்கங்கள் அங்கே நீர் இருந்திருக்கக்கூடும் என்றும், சில நுண்ணுயிரிகளின் தடயங்கள் தென்படலாம் எனவும் காட்டுவதாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
எம் சி சி (Mars Colour Camera) எடுத்து அனுப்பியுள்ள பள்ளத்தாக்கின் படம்.

மார்ஸ் கலர் காமிரா அனுப்பிய படம்

சஹாரா பாலைவனத்தில் பொழிந்து பின் 2011-லில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் பொழிவுத்துகள் 320 கிராம் எடையுடன் இருந்தது; அதிலிருந்து 44 கிராம் விண்பாறை செதுக்கப்பட்டு 7 துகள்கள் ஜிர்கான் என்ற தனிமம் பெறப்பட்டது. டென்மார்க்கில், அதன் அறிவியல் ஆய்வகத்தில் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த உலோகத்தனிம வகை இரும்பில் கலப்பதற்கு பயன்படுகிறது. வராஹரின் கூற்றின் படி இரும்பும் நீரும் செவ்வாயில் உள்ளது. 4.547 கோடானுகோடி வருடங்களுக்கு முன்னர் செவ்வாயின் வெளி மேலோடு அமைந்தது என்றும், சூரியன் பிறந்து 2 கோடி ஆண்டுகளுக்குப் பிறகே இது நிகழ்ந்தது என்றும் டென்மார்க்கின் ஆய்வு சொல்கிறது. ஆனாலும் இதை முடிந்த முடிபாகக் கொள்ள மேலும் ஆய்வுகள் தேவை. செவ்வாயிலிருந்து நம்மைப் பார்க்கையில் நாம் இங்கிருந்து பார்க்கும் வெள்ளியைப் போல் தெரிகிறோமாம்;கால வெளியின் காட்சி மயக்கங்கள்.
சூரிய ஒளியில் இயங்கும் நாசாவின்’ஆப்பர்சூனிடி ரோவர்’ ஜுன் 10-ம் தேதியிலிருந்து உறங்கப் போய்விட்டது.(கட்டுரை எழுதும் நேரத்தின் நிலை இது) காரணம்- வழமையைவிட அதிக நாட்களாக நீடிக்கும் செவ்வாயின் புழுதிப் புயல்.சில வருடங்களே செயல்படும் என நினைத்த ‘க்யூரியாசிடி ரோவர்’ ‘கேல் பள்ளத்தாக்கில்” உழுது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மனிதனைப் போல் மூளை,உடல்,கரங்கள், கண்கள் மற்றும் கால்களுடன் காணப்படும் க்யூரியாசிடிஒருரோபோ(ரோபாட்) மனிதன் எனலாம். மூளையாகக் கணிணிகள்,உள் விஷயங்களைப் பாதுகாக்கும் உடல்,மண் அள்ளும் கரங்கள்,சூழலைக் கண்காணிக்கும் கண்கள், நடக்கும் கால்கள் என இது ஒரு முழு மனிதனை நிகர்த்தது. நவம் 2011லிருந்து’நத்தையாரே, நத்தையாரே, அத்தை வீடு பயணமோ?’ என ஊர்ந்தாலும் மனித இனம் குடியேறும் வாய்ப்பிற்கான கூறுகளை இதன் மூலம் கண்டறியலாம்.விண்வெளி வீரர் அணியும் ஆடையுடன் அலங்கரிக்கப்பட்ட பொம்மை ‘விளையாட்டு ஊர்தியில்’ செவ்வாய்க்கும், வியாழனக்கும் இடையில் உடுவுரு கச்சையில் (Astriod Belt) 6000 பணியாளர்களின் பெயர்கள் தாங்கிய தகட்டோடு சென்றுள்ளது ஸ்பேஸ் எக்ஸ்.
புவியில் ஒரு நாளுக்குச் சமமானதே செவ்வாயின் ஒரு நாளும்.அங்கேயும் பருவ நிலை மாற்றங்கள் உண்டு.எரிமலைகளும், பள்ளத்தாக்குகளும் பூமியைப் போலவே காணப்படுகின்றன. சொல்லப்போனால் சூரியக்குடும்பத்தின் மிகப் பெரிய எரிமலையான ஒலம்பஸ் மான்ஸ் செவ்வாயில் உள்ளது.செவ்வாய் கிரகத்திற்கு இரு சந்திரன்கள்- பயமும்(Phobos) பதட்டமும்(Deimos)!
வானம் வசப்படும், வாழ்வும் வளப்படும்.அறிவியலும்,ஆன்மீகமீளாய்வும் ஒரு புள்ளியில் இணையக்கூடும். திருமண வாழ்விற்கான கிரகம் அவன் என்கிறோம்;உடன் பிறப்புகளைச் சுட்டுபவனாகவும் அவன் இருக்கிறான்.எதையும் புறம் தள்ளுவது எளிதே-அதில் புதைந்திருக்கும் உண்மை புலப்படாவிடில்
நாம் செல்ல வேண்டிய தொலைவு அதிகம்.செல்வோம்.
தீக்ஷதர் க்ருதி  இராகம்:சுருட்டி தாளம்: ரூபகம்
பல்லவி
அங்காரகம் ஆஸ்ரயாம்யகம் வினதாஸ்ருத ஜன மந்தாரம் மங்கள வாரம் பூமி குமாரம் வாரம் வாரம்
அனு பல்லவி
ஸ்ருங்காரக மேஷ வ்ருச்சிக ராஸ்யாதிபதிம் ரக்தாங்கம் ரக்தாம்பராதி
சரி தம் சக்தி ஸூலதரம் மங்களம் கம்புகளம் மஞ்சுள தரபதயுகளம் மங்களதாயகமே சதுரங்கம் மகரோத்துங்கம்(அங்கா)
சரணம்
தானவ சுர சேவித மந்தஸ்மித விலசித வக்த்ரம் தரணி ப்ரதம் ப்ராத்ரு தாரகம் ரக்த நேத்ரம் தீன ரக்ஷகம் பூஜித வைத்யனாத க்ஷேத்ரம் திவ்யௌ காதி குருகுஹ கடாக்ஷானுக்ரஹ பாத்ரம்
பானு சந்த்ர குரு மித்ரம் பாசமான சு களத்ரம் த்யானோ சஹஸ்ர சித்ரம் சதுர் புஜம் அதி விசித்ரம் (அங்கா)
***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.