குடிபுகல் சிக்கல்கள் – சாத்தியமான தீர்வுகள் (குடிபுகல் – பாகம் 1)

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்

மகாகவி பாரதியாரின் இந்த இரு வரிகள் நமக்கொன்றும் புதிதல்ல. மேம்போக்கான வாசிப்பில் இது புரட்சிகரமான ஆனால் உலகையே அழிக்க விரும்பும் நாசகார வரிகளாக  தெரியலாம். ஆனால், சற்றே உற்று நோக்கினால், தனி மனித உரிமைகளை ஆதரிக்கவும் பாதுகாக்கவும்தான் இந்தக் குரல் வெளிப்படுகிறது என்பது எளிதாக புரிந்துவிடும். அவை இல்லாத உலகில் வாழ்வதில் அர்த்தமில்லை.

குடியேற்றம் பற்றி உலகெங்கும் நிகழும் விவாதத்தின் இரு தரப்புகளுக்கும் பாரதியின் இந்த வரிகள் எப்படி பொருந்துகின்றன என்பதைப் பற்றி நிறைய யோசித்துப் பார்க்கிறேன். இது நிச்சயம் மிகவும் சிக்கல்கள் நிறைந்த பூதாகாரமான ஒரு விஷயம்தான். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புண்ணியத்தில், அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் பல்வேறு பிரதேசங்களிலும் பொது விவாதங்களில் இப்போது அதிகம் பேசப்படுகிற ஒரு சமாச்சாரம் இது. பெரும்பாலான மக்கள் குடியேற்றத்தை ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள், ஆனால் அதன் சிக்கல்களைப் புரிந்து கொள்ளத் தேவைப்படும் ஆழமான தேடலையும் அறிதலையும் மேற்கொள்வதில்லை. ஒரு பெரிய சித்திரத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் கவனப்படுத்தும் வகையில் சொற்பொழிவுகளும், விவாதங்களும் நிகழ்கின்றன.

இந்தப் பிரச்சினையின் பன்முகத்தன்மையால் கவரப்பட்டு, சிறிது காலமாக நான் இது தொடர்பான கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை வாசித்து வருகிறேன், பாட்காஸ்ட்டுகள் (Podcasts) கேட்டுக் கொண்டிருக்கிறேன், ஆவணப் படங்கள் பார்த்திருக்கிறேன், பல தரப்பினருடனும் பேசியிருக்கிறேன். எனவே கட்டுரையாக எழுதி பிரசுரிக்கிறேனோ இல்லையோ, என் புரிதலுக்காக மட்டுமாவது இது குறித்த என் எண்ணங்களையும் அறிந்துகொண்ட விளக்கங்களையும் எழுதிப் பார்ப்பது நல்லது என்று தோன்றியது.

இதை மூன்று பகுதிகளில் செய்திருக்கிறேன். முதல் பகுதி, குடியேற்றத்தை முற்றிலும் தடுத்து நிறுத்தும், எல்லைகளை வலியுறுத்தும் தேசீயவாதிகளின் பார்வைகள் மற்றும் கருத்துகளைப் பேசுகிறது. இரண்டாம் பகுதி, எல்லைகள் திட்டமிட்டபடி இயங்குகின்றனவா இல்லையா என்பதை அலசுகிறது. மூன்றாவதும் இறுதியானதுமான பகுதியில், முதல் இரு பகுதிகளையும் இணைத்து தீர்வுகளை அடைய முயற்சித்திருக்கிறேன். முதல் இரண்டு பகுதிகளில் காணப்படும் அலசல்கள் எல்லாப் பக்கங்களையும் சமச்சீரான முறையில் தூக்கிப் பார்ப்பவையாகவும், இறுதியில் நான் சொல்லமுயலும் தீர்வுகள் அனைவரும் தர்க்கப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் வகையிலும் இருக்கும் என்று நம்புகிறேன்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்- கட்டுரையில் நிறைய சுட்டிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தையும் தயவுசெய்து வாசிக்க, பார்க்க, கேட்க முயலுங்கள். பின்புலத்தோடு இணைத்து புரிந்து கொள்ள வசதியாக வாசிப்பு அனுபவம் மற்றும் புரிதலைச் செறிவுபடுத்தும் தன்மை கொண்ட கட்டுரைகள், பாட்காஸ்ட்டுகள் மற்றும் காணொளிகள் வரிகளுக்கிடையே சுட்டிகளாக ஆங்காங்கே இணைக்கப்பட்டிருக்கின்றன. கட்டுரையை வாசிக்கும்போது சுட்டிகளைத் தட்டி வெவ்வேறு பக்கங்களை வாசிப்பது கவனத்தைக் குலைப்பதாக சிலர் கருதலாம் என்பதால் கட்டுரையின் முடிவில் சான்றாவனப் பட்டியல் ஒன்றையும் இணைத்திருக்கிறேன். வாசகர்கள் வரிசைக்கிரமத்தில் தனித்தனியாக அவற்றை வாசிக்க அந்தப்பட்டியல் ஏதுவாக இருக்கும். எப்படியோ எல்லா சுட்டிகளுக்குள்ளும் நீங்கள் புகுந்து பயணித்தால் புரிதல் சிறக்கும் என்று நம்புகிறேன். இதிலுள்ள நுண்விபரங்கள் குறித்து உங்களுக்கு கருத்து இருந்தால் பதிவிடுங்கள், வரவேற்கிறேன். அத்தகைய பதிவுகள் என் புரிதலை மேம்படுத்தும், அதன் விளைவாய் எதிர்காலத்தில் இன்னும் உருப்படியாய் சில கட்டுரைகள் எழுத அவை எனக்கு உதவும்.

மூடப்பட்ட எல்லைகளின் வசீகரம்
நம் தேசத்தைச் சேர்ந்தவர்களை நடத்துவது போலவே நம்மால் தொலைதேசங்களில் இருப்பவர்களை ஏன் நடத்த முடியாது என்று ஆராயும் ஒரு கட்டுரையை அண்மையில் வாசித்தேன். நாடு என்ற கோட்டைத்தாண்டி நம் பார்வையை இன்னும் சற்று அருகே கொண்டு சென்று குடும்ப அமைப்பை கவனத்தில் வைத்துக் கொண்டால், நாம் எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், நம் வீட்டில் நம்மோடு ஒரே கூரையில் வாழும் நம் சக குடும்பத்தினரை நாம் நடத்துவது போலவே நம் அண்டை வீட்டுக்காரர்களை நடத்த முடியாது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஒரு சிறு காலம் அப்படிச் செய்யலாம். நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதோ ஒரு பெரிய கஷ்டத்தில் இருக்கும்போது நாம் கொஞ்சம் உதவி செய்யலாம். ஆனால் நம் பெற்றோர் கணவன்/மனைவி மக்களுடன் செய்வது போல் நம் உடமைகள், சொத்து, இருப்பிடம், நேரம் என்று எல்லாவற்றையும் பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் அவர்கள் குழந்தைகள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வது சாத்தியமேயில்லை.

நம் சமூக அமைப்பே இப்படிப்பட்ட நடத்தையை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்படவில்லை. நாம் எப்படி பணம் சம்பாதிக்கிறோம், குடும்பத் தேவைகளுக்கு செலவு செய்கிறோம், வரி கட்டுகிறோம் என்பதை எல்லாம் பார்த்தால் இது நன்றாகவே தெரியும். இதே போன்ற, ஆனால் இன்னும் சற்று நீர்த்த வடிவிலான ஓர் வாதத்தை தேசம் முழுமைக்கும் நீட்டிக்க முடியும். உலகு முழுமையுடன் ஒப்பிடும்போது தேசம் கூடுதல் ஒருமைப்பாடு கொண்டது. நம் சக குடிமக்களுக்கு நாம் காட்டும் இரக்கத்தை வேறு தேசங்களில் இருப்பவர்களிடம் காட்டுவது நடைமுறையில் சாத்தியப்படாது. பூமியில் எங்கோ ஒரு தேசத்தில் ஆயிரம் பேர் மரணமடைந்தார்கள் என்ற செய்தியை விட நம் ஒற்றை விரலில் ஏற்படும் காயம் எப்போதுமே நமக்கு அதிக கவலையும் துன்பமும் அளிப்பதாக இருக்கும். அது மனித இயல்பு. பல விஷயங்கள் நல்ல வகையில் செயல்பட அருகில் இருக்கும் விஷயங்களை அதிக கவனத்துடன் கையாளும் ஒருமைப்பாடு தேவை. உலகில் உள்ள எல்லாரையும் சமமாக நடத்துமளவுக்கு அந்த உணர்வு நீர்த்துப் போகும்போது அதனால் ஒரு பயனுமில்லாமல் போகிறது, நாம் எது குறித்தும் அக்கறையில்லாதவர்களாய்ப் போகிறோம். நெருக்கமான பந்தங்கள் கொண்ட ஒரு குழுவில் இருக்கும் உணர்வு அளிக்கும் பிரத்யேக சிறப்பு உணர்வும் இல்லாமல் போய் விடுகிறது.

எல்லைகள் திறந்து இருப்பது ஏன் நல்லதில்லை என்பது பற்றி வாசிக்கும்போது இது போன்ற வாதங்கள் பலவற்றைப் பார்த்தேன்: ஸ்விட்சர்லாந்து ஒரு சிறிய, அழகிய, பணக்கார தேசம், அதில் தொண்ணூறு லட்சம் மக்களே வசிக்கிறார்கள். இந்தியாவில் நூற்று இருபது கோடி பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் சுவிட்சர்லாந்தில் வாழும் ஆசை இருக்கும். எந்த தடையும் இல்லையென்றால், இந்தியர்கள் அனைவரும் சுவிட்சர்லாந்துக்கு வந்து விடுவார்கள், அப்புறம் அப்படி ஒரு நாடே இருக்காது! இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டால், வலிமையான எல்லைகளும் தீவிர தேசீய அடையாளமும் புரிந்து கொள்ளக் கூடியதாக ஆகிறது.
தேசீய கீதங்கள், கொடிகளை அசைப்பது, தேசபக்தியை போற்றுவது போன்ற விஷயங்கள் பலருக்கு பெருமைப்படும்/தரும் விஷயங்களாக இருக்கின்றன. நிச்சயம் இவை நம் உணர்வுத் தேவைகளை நிறைவு செய்கின்றன, இறுகி ஒருமைப்பட்ட சமூகங்களை உருவாக்குகின்றன என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்காவில் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிலக்கரிச் சுரங்க தொழிலாளி ஒருவருடன் நடந்த உரையாடலின் பாட்காஸ்ட்டை சென்ற ஆண்டு கேட்டது நினைவிருக்கிறது. அவர் தனது தந்தை மற்றும் தாத்தாவுக்குப் பிறகு மூன்றாம் தலைமுறையாக நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்கிறார். பல பத்தாண்டுகளாக அவர்கள் ஒரே சுரங்கத்தில்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அது சுலபமான வேலையல்ல. கடின உழைப்பைக் கோருவது, ஆபத்து நிறைந்தது. சுரங்கம் இடிந்து விழலாம், நெருப்பு பற்றிக் கொள்ளலாம், நச்சு வாயுக்கள் வெளிப்படலாம். நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை செய்யும்போது அன்றாடம் சுவாசிக்கும் நிலக்கரித் தூசுக்கள் காரணமாய் கரு நுரையீரல்களுக்கு பலியாவது பற்றி நீங்கள் படித்திருக்கலாம். இவருக்கும் அந்தப் பிரச்சினை  இருந்திருக்கிறது, உடல் நலமின்மை காரணமாக அவர் சீக்கிரமே ஓய்வு பெற வேண்டியதாகி விடுகிறது. இத்தனை சிரமங்கள் இருந்தாலும், அந்தத் தொழிலாளி சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் வேறொரு நிருபருடன் பேசியது பற்றி மகிழ்ச்சியாக நினைவு கூர்ந்தார். அவர் சுரங்கத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தபோது நிலக்கரித் தொழிலாளியின் வேலை விண்வெளி விஞ்ஞானியின் வேலை போன்றது என்பதை நிருபர் சொல்லியிருக்கிறார்- இருவருமே அதுவரை எந்த மனிதனும் காலடித் தடம் பதிக்காத இடங்களில் புகுந்து புறப்படுகிறார்கள்! வெகு காலம் முன் அந்த நிருபர் சொன்ன ஒரு சின்ன விஷயம்  இவருக்கு எவ்வளவு பெருமையும் மரியாதையும் தந்திருக்கிறது என்பதை அவர் குரலில் தவழும் பெருமிதத்திலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

முந்தைய ஆண்டுகளில் தொழிலாளர்களுக்கு இப்படிப்பட்ட வேலைகள் அமெரிக்காவில் போதுமான சம்பளத்தை அளித்தன, கௌரவமான மத்திய வர்க்க வாழ்க்கை நடத்த உதவின. பொதுவாக, இந்த தொழிலாளிகள் உயர்நிலைப்பள்ளி படிப்பு முடித்திருப்பார்கள், இந்த வேலைகள் தந்த ஊதியத்தில் கார் வாங்கினார்கள், சொந்த வீடு கட்டினார்கள், அன்றாட உணவுக்கு சிரமப்படாமல் வாழ்ந்தார்கள். தேசம் செழிக்க உதவிய நேர்மையான, வெற்றிகரமான தொழிலாளர்கள் என்று தங்களை மிகச் சரியாகவே கருதினார்கள். பாட்காஸ்ட்டில் பேசிய சுரங்கத் தொழிலாளரின் குரலில் இருந்த பெருமையையும் அவரது வேலை அவரது வாழ்வுக்கு அளித்த அர்த்தத்தையும் உணர முடிந்தது- தாங்கள் வெட்டியெடுக்கும் நிலக்கரி தேசம் முழுமைக்கும் ஆற்றல் அளித்து முன்னேறும் விசையைக் கொடுக்கிறது என்று நம்பினார்கள்.

பல பத்தாண்டுகளாய் தொழிற்சாலைகளில் நிலையான பணியில் மிகச் சிறந்த வேலை விழுமியங்களுடன் இயங்கி நல்ல குடும்பங்களை உருவாக்கிய உழைக்கும் வர்க்க தொழிலாளர்கள் ஏராளமான எண்ணிக்கையில் சமூக அந்தஸ்துடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்தச் சித்திரம் பொருந்தும். நான் சொன்ன சுரங்கத் தொழிலாளியின் மகன் நான்காம் தலைமுறையினனாய், அதே வேலைக்குச் சென்றான். ஆனால் காலம் செல்லச்செல்ல இயற்கை எரிவாயு (Natural Gas) மலிவானது, சுத்தமானது, சுற்றுச்சூழலுக்கு நிலக்கரியை விட இணக்கமானது, அதிக லாபம் ஈட்டுவது என்ற பல காரணங்களால் மின்சார உற்பத்தி நிலையங்கள் நிலக்கரிச் சுரங்கங்களை மூடிவிட்டு இயற்கை எரிவாயு உற்பத்திக்கு மாறத் துவங்கின. இது போல் பல கோணங்களில் நன்மை தரும் புதிய தொழில் வாய்ப்பு மிக அரிதாகவே தோன்றும். 2012ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் விவாதங்களில் மிட் ராம்னியை நோக்கி, பராக் ஒபாமா பேசிய இந்த வரிகள் மிகப் பிரசித்தம்- “நீங்கள் கடற்படையைப் பற்றிச் பேசியபோது 1916ஆம் ஆண்டு இருந்ததைவிட இப்போது குறைவான எண்ணிக்கையில் கப்பல்கள் இருக்கின்றன என்று சொன்னீர்கள். அது சரி, கவர்னர், நம்மிடம் இப்போது குறைந்த எண்ணிக்கையில்தான் குதிரைகளும் பயோனட் துப்பாக்கிகளும் கூட இருக்கின்றன. அதில் தவறேதும் இல்லை.  ஏனென்றால் நம் ராணுவத்தின் இயல்பு இப்போது மாறிவிட்டது”.

இது நிலக்கரிச் சுரங்கப் பணிக்கு மட்டுமல்ல, பல உற்பத்தித் துறை பணிகளுக்கும் பொருந்தும். இயற்கை எரிவாயுவின் வருகை போலவே உலகமயமாக்கலும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது.  உலகில் ஏதோ ஓரிடத்தில் சாமான்களை உற்பத்தி செய்து தேவைப்பட்ட இடத்துக்கு மிகப் பெரிய ஷிப்பிங் கண்டெய்னர்களில் கொண்டு செல்வதை சாத்தியப்படுத்தியது. தேவைப்பட்ட இடத்தில் உற்பத்தி செய்வதை விட இது செலவு குறைவாகவும் லாபம் தருவதாகவும் இருந்ததால் அமெரிக்காவின் உற்பத்தித் தொழில்கள் மூடப்பட்டு, பணியிடங்கள் காணாமல் போய் சீனாவிலும், வியட்நாமிலும் தலைகாட்டின. பூமி என்று முழுமையாய்ப் பார்த்தால் இந்த மாறுதல்களால் பொதுவாக வாழ்க்கைத் தரம் உயர்கிறது. ஆனால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட நான்காம் தலைமுறை சுரங்கச் தொழிலாளி இப்போது என்ன செய்வான்? அவன் உடனே நிரலி (Software Program) எழுதக் கற்றுக் கொண்டு மேகக் கணிமை (Cloud Computing) நிறுவனங்களில் வேலைக்குச் சேர வேண்டும் என்று சொல்வது நடக்காத காரியம்.

நான் வாழும்/ வேலை செய்யும் இடத்திலிருந்து சில மைல்கல் தொலைவில் பெத்லகம் ஸ்டீல் என்ற ஒரு புகழ்பெற்ற உருக்காலை இருந்தது. நூறாண்டுகளுக்கு மேல் அங்கு உற்பத்தியான எஃகு அமெரிக்கா மற்றும்  உலகெங்கும் வாங்கப்பட்ட காரணத்தால் அமெரிக்காவின் உற்பத்தித் திறனின் பெருமைமிகு சின்னமாக அது இருந்து வந்தது. கப்பல் கட்டும் தொழிலும் ஈடுபட்ட நிறுவனம் அது. அதன் கப்பல்கள் இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கேற்றன. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இந்தியாவின் மிட்டல் ஸ்டீல் போன்ற நிறுவனங்களுடன் (இப்போது ஆர்சலர்மிட்டல் என்ற பன்னாட்டு நிறுவனம்) போட்டி போட முடியாத காரணத்தால் நலிவடையத் துவங்கி 2003ஆம் ஆண்டு திவாலானது.

உலகெங்கும் உள்ள மக்கள் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தேசத்தின் பெருமைமிகு நிறுவனங்களை அழிக்க வருவதாக அஞ்சுகிறார்கள் என்றால், அமெரிக்காவிலும் வெளிநாட்டு  நிறுவனங்கள் காரணமாக பெத்லகம் ஸ்டீல் திவால் மற்றும் பிற உற்பத்தித்துறை பணி இழப்புகள் போன்ற பல நிகழ்வுகள் மறு பக்கமும் சேதம் ஏற்படுவதை உணர்த்துகின்றது. கடந்த இருபது ஆண்டுகளுக்குள் பிறந்த என் குழந்தைகளுக்கு பெத்லகம் ஸ்டீல் அல்லது நிலக்கரிச் சுரங்க வேலை பெரிய இழப்பாக தெரியாது என்றாலும் நான் தனிப்பட்ட முறையில் அறிந்த, இத்தகைய மாறுதல்களால் பாதிக்கப்பட்ட என் அமெரிக்க/இந்திய நண்பர்கள் பலர் மேல் இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களில் பலர் உலகமயமாக்கம் கைமீறிப் போய் விட்டது என்று நினைக்கிறார்கள். சில பத்தாண்டுகளுக்கு முன் ரஸ்ட் பெல்ட் என்று அழைக்கப்படும் இந்தப் பிரதேசத்தில் நிலைமை எவ்வளவோ நன்றாக இருந்தது, அப்போது ஏராளமான அளவில் மத்திய வர்க்கத்தினருக்கான  பணியிடங்கள் இருந்தன, இப்போது அவர்களுக்கும் ஏற்ற வேலைகள் இல்லை என்பது அவர்களின் பொதுக்கருத்து.

இப்படிப்பட்ட தனி நபர்களிடம் நெருங்கிப் பழகி அவர்கள் சொல்வதை உற்று நோக்குவது உணர்வளவில் பிரச்சனை என்ன என்பதை காத்திரமான உருவில் தெளிவுபடுத்தும். எத்தனை வேலைகள் உருவாகின/ காணாமல் போயின என்பது போன்ற அருவ எண்கள் அளவிலான தர்க்க ரீதியான உயர்தர பகுப்பாய்வுடன் ஒப்பிடும்போது இதன் தாக்கம் முற்றிலும் வேறாக இருக்கிறது. தங்கள் தாத்தாக்களுடன் ஒப்பிடும்போது தங்கள் வாழ்வுத்தரம் நாளுக்கு நாள் குன்றி வருவதை எதிர்கொள்ளும் இவர்களிடம், உங்கள் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் காரணம் பிற தேசங்களில் உள்ள முகமற்ற மனிதர்கள்தான் என்று சொல்லி, நீங்கள் எதையும் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டியதில்லை, வேலை தேடி எங்கும் செல்லத் தேவையில்லை, நீங்கள் இருக்கும் இடத்திலேயே பெருமைமிக்க உங்கள் கடந்த கால மாண்பை மற்ற நாடுகளை அடித்து உதைத்தும், வேறு யாரும் நமது நாட்டுக்குள் வரவிடாமல் தடுப்பது மூலமும் மீட்டுத் தருகிறோம் என்று  வாக்களிக்கும் அரசியல்வாதிகள், உணர்ச்சித் தளத்தில் இத்தகைய வாக்காளர்களுக்கு கவர்ச்சியான தீர்வுகளை அளிக்கிறார்கள்.

நமக்கு மட்டுமே உரிய வேலைகள் என்று நாம் உண்மையாகவே நம்புவதை அன்னியர்கள் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற கவலை புதிதல்ல, அமெரிக்காவுக்கு மட்டும் உரியதுமல்ல. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இஞ்சினியர் என்ற புதுப்பட்டத்துடன் நான் HAL (ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டட்) என்ற பங்களூரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.  மத்திய அரசு நிறுவனத்தில் அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கும் வேலை. அது ஒரு மிகப் பெரிய பொதுத் துறை அமைப்பாக இருந்ததால் நாடெங்கும் நுழைவுத் தேர்வு நடத்தி வேலைக்கு ஆள் எடுப்பார்கள். இதனால் இந்தியா எங்குமுள்ள பொறியியலாளர்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய வருவார்கள். ஆனால் அங்கு நான் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், அந்த மாநிலத்தின் மக்கள், பிற மாநிலத்தைச் சேர்ந்த அன்னியர்கள் உள்ளே வந்து, நல்ல சம்பளம் கொடுக்கும் அரசு வேலைகளை கர்நாடக மாநில மக்களிடமிருந்து பறித்துக் கொள்கிறார்கள் என்று குற்றம் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். எனவே தேசங்களுக்கு இடையே மட்டும் இல்லாமல் ஒரே நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்குள்ளும் இத்தகைய சண்டைகள் வருவதுண்டு. இங்கு நான் என்னைப் பரிதாபத்துக்கு உரிய ஒருவனாகக் காட்டிக் கொள்ளவில்லை, இந்தப் பேச்சு எதுவும் என்னை பாதிக்கவும் இல்லை. நான் அவர்களுக்கு தக்க பதில் சொல்லி தீர்வு கண்ட நாயகனும் அல்ல. இப்படிப்பட்ட கொள்கை முடிவுகள் பற்றி அதிகம் தெரியாத இளம் பொறியியல் மாணவனான நான் யாருடைய மனதையும் மாற்ற ஆழமாக எதுவும் சொல்லியிருக்கவும் முடியாது.

ஒவ்வொரு இந்திய மாநிலத்துக்கும் அதற்கே உரிய மொழி, உணவு, கலாசாரம், திரைப்படங்கள் என்றெல்லாம் இருப்பதால் இந்தியா ஒரு வகையில் யூரோப்பிய யூனியன் போன்றது என்பதை மேற்கத்திய வாசகர்கள் அறிந்திருக்கலாம். பங்களூரு உள்ள மாநிலத்தின் அண்டை மாநிலத்தில்தான் நான் பிறந்து வளர்ந்திருந்தேன் என்றாலும், பங்களூரு உள்ள மாநிலத்தின் மொழியான கன்னட மொழியில் எழுதப்பட்ட எதையும் என்னால் ஒரு வரி கூட படித்துப் புரிந்து கொள்ள முடியாது. பிரான்ஸ் செல்லும் ஜெர்மானியன் போன்றது கூட அல்ல என் நிலைமை, அங்கே எழுத்தாவது தெரிந்த ஒன்றாக இருக்கும். ஆனால் இங்கே ஜப்பானிய மொழியும் ருஷ்ய மொழியும் போல் கன்னட மொழியும் தமிழ் மொழியும் எழுத்தமைப்பில் வேறுபடுகின்றன. அந்தப் பின்புல வேறுபாடுகள் காரணமாக அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ளவும் முடிந்தது. ஆனால் நான் வேலை செய்யும் நிறுவனம் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் என்பதால் இதே நிறுவனம் நான் பிறந்து வளர்ந்த அண்டை மாநிலத்தில்கூட அமைக்கப்பட்டிருக்கலாம். எனவே நான் யார் வேலையையும் பறித்துக் கொண்டதாக எனக்குத் தோன்றியதில்லை.

நான் அந்த நிறுவனத்தில் ஒன்பது மாதங்கள்தான் வேலை செய்தேன். அதன் பின் ஓஎன்ஜிசி என்ற இன்னொரு பொதுத்துறை நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு இரண்டாண்டுகள் கடலில் நிறுவப்பட்டிருந்த எண்ணைத் தளத்தில்  மின்னணு கருவியியல் துறையில் பராமரிப்பு இஞ்சினியராக இருந்துவிட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்தேன். ஒரு இளம் பிரம்மச்சாரியான எனக்கு அந்த எண்ணைத் தளத்தில் (Off-shore Oil Platform) அருமையான வாழ்க்கை கிடைத்தது. மாதத்தில் பதினான்கு நாட்கள் தொடர்ந்து வேலை, அதன் பின் பதினான்கு நாட்கள் விடுமுறை. விடுமுறை நாட்களை நான் என் பெற்றோர் இடத்துக்கு திரும்பி, மேற்படிப்புக்கான கல்வியை கற்க பயன்படுத்திக் கொண்டேன். குடும்பத்தை விட்டு தொடர்ந்து பதினான்கு நாட்கள் எண்ணைத் தளத்தில் இருக்க வேண்டும் என்பதால் வயதில் மூத்தவர்கள் அந்தப் பணி செய்ய விரும்பவில்லை என்ற காரணத்தால் மராத்தி மக்கள் செய்ய வேண்டிய வேலையை அன்னியர்கள் கைப்பற்றிக் கொள்கிறார்கள் என்று யாரும் என் காதுபட குறை சொல்லி நான் கேட்டதில்லை. அது போக, அந்தத் தளம் கடற்கரைக்கு அப்பால் நூறு மைல் தொலைவில் கடல் மேல் இருந்தது என்பதும் எனக்கு சாதகமாக இருந்திருக்கலாம். தினமும் நாங்கள் சக பணியாளர்கள்தான் ஒருவரோடொருவர் பழகிக் கொள்வோம், எனவே அருகில் இருந்த பம்பாய் நகரின்  உணர்வே எங்களுக்கு வரவில்லை. ஆனால் இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் ஒன்று அது என்பதால் அங்கு பம்பாய் கரையில் இருந்த பிற நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் இப்படி ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுவதை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். மொத்தத்தில் பல வருடங்களாக, பல் நூற்றண்டுகளாக கூட, உலகம் முழுதும் ஆங்காங்கே சொல்லப்பட்டு வரும் குறைதான் இது.

இந்த மாதிரியான சண்டைகள் எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். விரைவில் ரோபாட்களும், கணினிகளும் நம்மைவிட புத்திசாலியாகி எல்லா வேலைகளையும் நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டுவிடும் சாத்தியக்கூறு வளர்ந்து வருகிறது என்று நீங்கள் கருதலாம். செயற்கை நுண்ணறிவு மானுட அறிவைத் தோற்கடிக்கும் நாள் வருவது இருக்கட்டும். அடுத்த வருடமே  கணினிகள் அனைத்தையும் அரசின்மைவாதி (Anarchist) ஒருவன் ஏதோ ஒரு புதிய தொழில்நுட்பத்தைக்கொண்டு செயலிழக்கச் செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். இழக்கப்பட்ட கணினிகளின் செயல்திறனை ஈடு செய்யும் அளவில் புதிதாக உயிரியல் தொழில்நுட்பத்தை உபயோகித்து புதிய கணினிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்றும் வைத்துக்கொள்வோம். இந்தப்புரட்சியால் மிக அதிக அளவில் பயிற்சி பெற்று, நிறைய சம்பளம் வாங்கி வாழ்த்து வரும் தற்போதைய கணினி பொறியாளர்கள் சீக்கிரமே வேலை இழந்து இந்த உயிரியல்  கணிப்பொறியாளர்கள் வேலையில் சேர்வார்கள். இப்படிப்பட்ட ஒரு உலகில் ட்ரம்ப் போன்ற ஒருவர் எழுந்து, “நம் தேசத்தைச் சுற்றி மண்ணாலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தாலும் சுவர் எழுப்புகிறேன், இன்டர்நெட் மற்றும் ஐடி வேலைகளை மீண்டும் கொண்டு வருகிறேன், அரசின்மைவாதிகள் மற்றும் அவர்கள் இருக்கும் தேசங்களை பூண்டோடு அழிக்கிறேன், நான் இப்படி செய்தவுடன் நீங்கள் இழந்த மின்னணு கணினி பொறியியல் வேலைவாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு திரும்ப கிடைத்துவிடும்” என்று சொன்னால் மெத்தப் படித்த கணிப்பொறியாளர்கள் பலரும் அவருக்கே வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறேன்!

வேறு சில தளங்களைச் சார்ந்த அக்கறைகள் காரணமாய் கூட எல்லைகள் அவசியம் என்ற வாதத்துக்கு இடம் இருக்கவே செய்கிறது. உலக தேசங்கள் எல்லாவற்றையும் பாருங்கள். சமூக பிரச்சினைகள், உள்நாட்டு மோதல்கள் இல்லாமல் தம் குடிமக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரம் அளிப்பதில் வெற்றி பெற்ற முதல் பத்து தேசங்கள் எவையென்று எடை போட்டோமானால், நார்வே, ஸ்வீடன், ஜப்பான் ஆகியவை நினைவுக்கு வருகின்றன. இவை எல்லாமே சிறு தேசங்கள், இவற்றின் மக்கள் தொகையில் அடையாளம் சார்ந்த வேற்றுமை (Racial Diversity) குறைவாகவே இருக்கிறது. எனவே வேறுபடாத மக்கள்தொகை, சிறிய தேசம் என்ற நிலையில் தம்மை ஒத்திருக்கும் பிறருக்கே தம் வரிப்பணம் செல்கிறது என்பதால் அதன் மக்கள் அது குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை என்று நம்பலாம். வேறு பல சிறு தேசங்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன என்பதும் உண்மைதான். ஆனால் அதன் ஆட்சியாளர்கள் பெரும்பாலும் ஊழல் செய்யும் சிறு குழுவினராய் இருக்கின்றனர், இயற்கை வளங்களைத் தம் இரும்புப் பிடியில் வைத்திருக்கின்றனர். இது போன்ற எதிர்மறை உதாரணங்களைத் தவிர்த்தால், வளமான சிறு சமூகங்களில் வலுவான தேசீய எல்லைகள் தம் மக்களை ஒருமைப்படுத்துவதை ஒரு நல்ல அரசமைப்புக்கான உதாரணமாய்ச் சொல்லலாம். மறு முனையில் பெரிய தேசம், வெவ்வேறு மக்கள் என்ற நிலையில் நம்மால் நம்மைப்போல் இல்லாதவர்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்ற காரணத்தால் மற்றவர்களை வேலை ஏதும் செய்யாமல் நமது வரிப்பணத்தில் உண்டுகழிக்கும் சோம்பேறிகள் என்று சந்தேகிக்கிறோம்.  இது போக, தேசம் மிகப் பெரியதாக இருப்பதால் நிதி உதவிகள் யாருக்குச் செல்கின்றன, எவ்வளவு செல்கிறது என்பதை அறிந்து கொள்வதும் கடினமாக இருக்கிறது. இந்நிலையில் அரசாட்சி அமைப்பே சந்தேகத்துக்கு இடமாகிறது.

வேலையையும் பொருளாதார கவலைகளையும் ஒதுக்கி விட்டாலும்கூட சமயம், விழுமியங்கள், பண்பாடு, பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பு – இவை சார்ந்தும் எல்லைகளை நியாயப்படுத்தலாம். சமயங்கள் யாவையும் தம் மக்கள் தனிச் சிறப்பு கொண்டவர்கள் என்று உணரும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு தேசம் அல்லது சமூகத்தில் உள்ள ஒரு சமயக் குழு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, அதனுடன் போட்டியிடும் பிற சமூகக் குழுக்கள் தம்மை அச்சுறுத்துவதாக அவை எளிதில் கருதக்கூடும். அப்படிப்பட்ட அச்சங்கள் நியாயமாய் இருப்பதற்கான போதிய வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவில் கணிசமான அளவில் வாழும் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட கிறித்துவர்கள் தம் உரிமைகளும் விழுமியங்களும் எப்போதும் ஆபத்தில் இருப்பதாய் உணர்கிறார்கள். நூற்று இருபது கோடி பேர் கொண்ட இந்தியாவில் எண்பது சதவிகிதத்தினர் இந்துக்கள். ஆனால் அவர்களில் பலர் தம் சமயம் ஆபத்தில் இருப்பதாய் நினைப்பதோடு எதிர்த்து நின்றுதான் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாய் நம்புகிறார்கள். இது போலவே உலகில் வேறு பகுதிகளில் உள்ள யூதர்கள், முஸ்லிம்கள், மற்றும் பிறர், தம் தேசத்தில் பெரும்பான்மையினராய் இருந்தாலும் பிறரது அச்சுறுத்தலை உணர்கிறார்கள். அமைதிக்கும் சாந்தத்துக்கும் பேர் போன பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்கள்கூட பிற சமயத்தினரை தாக்குகிறார்கள்- தம் பெரும்பான்மைக்கு ஆபத்து வந்து விடும் என்ற அச்சம் இதன் காரணமாக இருக்கிறது. இதெல்லாம் போதாதென்று நாத்திகர்கள் கூட தம்மைச் சமூகம் ஒதுக்கி வைத்திருக்கிறது என்று வலுவாக நம்புகிறார்கள். தற்பாலின (Gay & Lesbian) விழைவு உள்ளவர்கள்கூட அதைப் பெருமையாய் வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறது, ஆனால் நாத்திகர்களான  தம்மால் முடிவதில்லை, அப்படிச் செய்யும்போது வலுவான சமூக பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று அஞ்சுகிறார்கள். இப்படி அஞ்சும், சந்தேகிக்கும்  பலருக்கும் தம்மைப்போன்ற மக்கள் மட்டுமே வாழும் ஒரு சிறிய சமூகத்தில் வாழ்ந்துகொண்டு பிறரை உள்ளே வரவிடாமல் சுற்றிச் சுவரெழுப்பிக் கொள்வது நிச்சயம் சரியான பரிகாரமாகவே தோன்றும்.

தம் விழுமியங்கள், கலாசாரம், பாதுகாப்பு முதலியவை அந்நியர் படையெடுப்பின் காரணமாய் நீர்த்துப் போய்விடுவதுடன், உள்ளே வரும் அந்நியர்கள் இணக்கமான சமூகத்தில் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படுத்துகிறார்கள், சமூகத்திற்கு தேவையற்ற குற்றவாளிகளும், பயங்கரவாதிகளும் வந்து நாட்டை உருக்குளைத்துவிடுவார்கள் என்று எப்படியெல்லாம் குறிப்பிட்ட ஒரு தேசத்தைச் சேர்ந்த குடிமக்கள் நினைக்கக்கூடும் என்று எழுதிக் கொண்டே போகலாம். எனவே, குடியேற்ற விஷயத்தை பொருளாதாரம், சமயம், கலாசார விழுமியங்கள், தேச அளவு, நிர்வாக வசதி, பாதுகாப்புக் கோணம் என்று எப்படி பார்த்தாலும் வலுவான எல்லைகளும் ஒருமைப்பாடு கொண்ட சமூகங்களும் வலியுறுத்தப்பட வேண்டியவைதான் என்று சொல்ல முடியும், அது நியாயம் போலவும் தெரிகிறது.
(தொடரும்)

அடுத்த பகுதி – வலுவான எல்லைகள் ஏன் நடைமுறையில் தோல்வியைச் சந்திக்கின்றன?
சான்றாதாரங்கள்:

  1. Black lung disease: https://en.wikipedia.org/wiki/Coalworker%27s_pneumoconiosis
  2. Bethlehem Steel: https://en.wikipedia.org/wiki/Bethlehem_Steel
  3. Rust Belt: https://en.wikipedia.org/wiki/Rust_Belt

One Reply to “குடிபுகல் சிக்கல்கள் – சாத்தியமான தீர்வுகள் (குடிபுகல் – பாகம் 1)”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.