கவிதைகள்- சுசித்ரா மாரன்

 

1.
ஒரு கத சொல்லட்டுமா சார்…?!
கூடத்திலிருந்தால் அறையிலும்….
அறையிலிருந்தால் கூடத்திலும்
ஒலித்துக்கொண்டே இருக்கும்
ஏதேனும் உருளும் சத்தம்..
 
ஒழித்துக்கட்டும் எண்ணம்
ஓங்கிக்கொண்டே போக..
 
என் புலம்பலின் தீர்வாக
பொறி வைத்துவிட்டு
வந்திருக்கிறேன் கவனம்
என்றது அப்பாவின் அலைபேசி
 
வீடடைந்த பின்னர்
நொடிக்கொருமுறை
எட்டிப்பார்க்கிறேன்
பலி கொள்ளும் ஆர்வத்தோடு….
 
ஊதிக்கொண்டே செல்லும்
இசைஞனின் பின் சென்று
ஆற்றில் மூழ்கும் அந்நாளைய
ஆறாம் வகுப்பு ஆங்கிலப்புத்தக
கதை கனவுகள்…..
 
விழித்தவுடன் உள்ளங்கை
பார்க்கும் பழக்கம் மறந்து
உள்வைத்த பொறி பார்க்க ஓட்டம்..
 
அப்போதும்
பழக்கம் மாறாமல்
பொறியை உருட்டிபோட்டு
மரித்துக்கிடந்தது எலி..
 
உயிரற்ற நிலைகுத்தியவிழி
கடத்தியது உறைந்திருந்த
உச்சபட்ச வலியை
 
 வீட்டை விட்டு
அப்புறப்படுத்திய நொடி முதல்
மனதுள் புகுந்து கொண்டு
உருட்டத்தொடங்கிவிட்டது அவ்விழி..
***
2
இப்போது..
விடுமுறைக்கு வந்த
குழந்தைகள் விடைபெற்ற பின்பு
மௌனம் அணியும் பாட்டி வீடு
போன்றதானது நானிருக்கும் வீடு.
 
கூடத்துக்கும்
அறைக்குமான
கண்ணாமூச்சியில்
தோற்கடிக்கப்பட்டது யார்..?
 
நிசப்தமான வீட்டில்
உருளும் ஓசைகள் உள்ளே..
 
நானும் எலியும்  வசித்த
வீட்டில் இப்போது எல்லாம்
வைத்தது
வைத்தபடியே….
***
3
திண்ணை
வெற்றிலையை
இடித்துக்கொண்டிருக்கும் ..
வாழ்க்கை மென்று
துப்பிய பாட்டிகளின் சரணாலயம்..
 
திருவையில் அரைத்துக் கொண்டே
இருக்கும் காதலை இல்லாமல் செய்து 
இல்லா காதலுக்கு கரம் சிரம் பொருத்தும்
திரைக்கதை அரசிகள்
பக்கத்துவீட்டுஅத்தைகளின்
நட்சத்திர விடுதி
 
திண்டிட்ட மேடைகளில்
ஒய்யாரமாய் சாய்ந்து
கூந்தலுலர்த்திக்கொண்டே
வாரஇதழ்களில் லயித்திருக்கும்
தேவதை அக்காக்களின் 
பனிபடர் சோலை
 
கோலாங்கட்டி கல் வைத்து
சிக்குக்கோலம் பழகும்
அம்மாவின் பயிற்சிப்பட்டறை
 
பாண்டேக்களை
திணரடிக்கும்
துரைமுருக மாமாக்களின்
அரசியல் மன்றம்..
 
ஆடுபுலி தாயம் ஏழாங்கல் 
நூத்துக்குச்சி ஆடி
மகிழும் தங்கைகளின்
உள்விளையாட்டரங்கம்..
 
பல்லாங்குழி புளியங்கொட்டைகளை
சிதறடித்து வம்படியாய்
சுற்றிவரும் அண்ணன்களின்
மல்யுத்தக்களம்..
 
பனையோலை காற்றாடி
சுற்றவைக்க தன்னைத்தான்
சுற்றிச்சுழலும் தம்பிகளின்
சுழலூஞ்சல்..
 
பெரியம்மா வீட்டுத்திண்ணையில்
அக்காக்களுடன்
சிலோன் வானொலியொடு   
கோடையிரவில் சேர்ந்திசைத்த போதும்..
 
வினோத வழவழப்பு
தனித்துவ சில்லிப்பு
உடைய மாமா வீட்டுத்திண்ணையில்
உறங்கிய போதும்..
 
தாத்தா வீட்டுப் பெருந்திண்ணையின்
மீப்பெரு சீட்டாட்ட வட்டம்
கண்டு வியந்த போதும்..
 
அறிந்திருக்கவில்லை திண்ணையின்
செம்மையை கவிதையாக்கி 
களிக்கநேருமென்றும்
இனிவரும் தலைமுறைக்கு
திண்ணையின் அண்மை
அறியவியலா அதிசயமாகுமென்றும்..
***
4
இரவு
கன்றும் உண்ணாது
கலத்தினும் படாது வீணாக்கும்
பசலை மறைக்கும்
செஞ்சாந்துப் பூச்சுகதிரொளியை
எதிரொ ளிக்கும் மதியொளி
குழைத்து சாம்பல் பூசும் அந்தி
 
ஆநிரை கவர வெட்சி சூடி விரைந்து
என்நிறை கொள்ள வரும்
மறவனின் வருகைஆம்பல் மொட்டவிழ
ஆலோன் ஆரத்தழுவும் முன்னிரவு
 
ஈருடலுள்ளம் இணைந்திசைக்கும்
இடைநில்லா அகப்பாடல்அடர் மரக் கூகையின்
குழறும் யாமக் குரலிசை
 
யாக்கைகளின் யாசித்தல்
நிறைவுற்ற நிம்மதிநித்திரையின்
ஆழத்துள் அமிழ்த்தும்
ஓசையற்ற பின்னிரவு
 
என
 
இரவெனப்படுவது
ஓர் உடுப்பகை
ஓர் உடுபதி
சில உடுக்கள் மட்டும்
சார்ந்ததல்ல எனக்கு..
*
(ஆலோன், உடுபதிசந்திரன்
உடுப்பகைசூரியன்
கூகை குழறுதல்ஆந்தையின் அலறல்)
***
5
ஆறு
அவள் ஆடை தாண்டி
அங்கம் தீண்டி
இடை வளைத்து தழுவும்
ஆற்றின் பெயர்
ஆண்பாலாய் அமைதல் ஏற்கா
ஆண்மனம் சூட்டியவை
ஆறுகளின் பெண்பாற் பெயர்கள்..
 
பல்வகை மோக நதியில்
மூழ்கி முயங்கி
திளைத்து குளித்து களித்ததாய்
தனக்குத்தான் உணர்த்தித் தேற்ற
ஆண்மனம் சூட்டியவை
ஆறுகளின் பெண்பாற் பெயர்கள்.
***

2 Replies to “கவிதைகள்- சுசித்ரா மாரன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.