கவிதைகள்- லாவண்யா, வான்மதி செந்தில்வாணன்

லாவண்யா- கவிதைகள்

இப்படியிருக்கவில்லை

எது சரி

எது தவறென்று

எதுவும் சொல்கிறாற்போலில்லை.

சரியைத்தவறென்று

தவறைச்சரியென்று

நியாயப்படுத்த

பிஞ்சு முதல் பழம்வரை துணிந்தபின்

பேச ஒன்றுமில்லை.

உலர்ந்த இதயங்களோடு சமரசமாய்

வாழநேர்ந்த காலம் ஆலகாலம்.

இப்படியிருக்கவில்லை நம் வாழ்க்கை.

ஏனிப்படி ஆனதென்றும் புரியவில்லை.

விடை தெரியாத வினாக்களோடு

வாழப்பழகிக்கொள்ளவேண்டுமென்று

ஒருவர் மட்டும் சொன்னார்.

***

என்ன தோன்றும்?

கையெழுத்து மறையும் நேரம்

கருவேலமுள் மண்டிக்கிடக்கும்

காட்டுப்பாதையில் நடந்துபோகையில்

கால்செருப்பு கைச்செருப்பானால்

ஒருவன் மனதில் என்ன தோன்றும்?

யானை விலைக்கு குதிரை வாங்கி

குதிரையேறி யாத்திரை போக

பாம்பு கடித்து குதிரை செத்தால்

யாத்ரீகன் மனதில் என்ன தோன்றும்?

மழையில்லை. மதியவெயில்.

தென்னைமேல் இடி விழுந்து

பச்சை ஓலை எரிவதைப்

பார்த்தவன் மனதில் என்ன தோன்றும்?

இப்படியெல்லாம் யோசிக்கும்

நீயொரு லூசுப் பயலென்று

நான் எண்ணத்தோன்றும்.

லாவண்யா

காத்திருந்த நால்வர்

மாபாதகனொருவன்

இருத்தல் இறத்தல்

இரண்டிற்குமான இடைவெளியில்

படுத்துக் கிடந்தான் நலிந்து.

காத்திருந்த நால்வர்

காலநீட்சியின் வெறுமை தீர

நடைப்பிணம் சுமைப்பிணமானால்

உடல் சுடுகாடு போகும்

உயிரெங்கே போகுமென்று

சன்னக்குரலில் சாவை வடிகட்டினர்.

பித்ருலோகம் போகுமுயிரென்றாலும்

புத்திர பாக்கியமில்லை. அதனால்

ஏழுதலைமுறைக்காலம்

தலைகீழாய் நிற்பானென்றான் ஒருவன்.

தலையில்லை உயிருக்குக் காலுமில்லை

தலைகீழாய் நிற்பது சாத்தியமில்லை

இப்படிச் சொன்னான் இரண்டாமவன்.

நல்ல பாம்பெனப் பெயரெடுத்திருக்கிறான்.

நரகத்தில் இவனுயிர் முட்டைபோல்

வேகுமென்றான் மூன்றாமவன்.

கட்டுக்கதைகளை விட்டுத் தொலையுங்கள்.

பழைய உடலைவிட்டுப் பிரிந்த உயிர்

புதிய உடலொன்றில் புகுந்து கொள்ளுமென்றான் நான்காமவன்.

உயிருடன் என்னைக் கொல்லும்

உங்களுயிர் என் கையால் போகுமென்று

தீயைப்போலெழுந்தான் தீயவன்.

நால்வரும் பறவைகளானார்கள்.

லாவண்யா

***
வான்மதி – கவிதைகள்
1.
வீட்டில்
அடுக்கி வைக்கும்
ஒவ்வொரு முறையும்
பொருள்கள்
ஒழுங்கில் இருக்கவே
விருப்பம் கொள்கிறேன்.
அறையின் ஒழுங்கு
சீர்குலைகையில்
பந்துபோல்
ஒரு மூலைக்கும்
இன்னொரு மூலைக்குமாய்
உருண்டு புரள்கிறேன்.
“தாம் தூமென”
தாவிக் குதிக்கிறேன்.
வெடி வெடிப்பதுபோல்
“டமாரென”
என்னை நானே
வெடித்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.
சமீபமாக
அறையின் ஒழுங்கினைக்
காப்பாற்றிக்கொள்ளவென,
வேதாளமாக மாறி
வீடுமுன் நின்ற
முருங்கை மரத்தின்
உச்சாணிக்கொம்பிற்கு
என் அறையுடன்
இடம்பெயர்ந்துவிட்டேன்.
2.
அம்மா,
“தரித்திர”மென
வசைபாடிய பொழுதுகளில்
வெட்டிக் கூறுபோடும்
ஆத்திரத்துடன்
நானதைத் தேடிக்கொண்டிருந்தேன்.
பருவமெய்த
பால்ய நாளொன்றில்
அரிவாள்மனையில் அரிந்தெடுத்த
அம்மாவின்
பழைய  உள்பாவாடையில்
அப்பட்டமாய்த் தென்பட்டதது.
சட்டென
அதன் கழுத்தை இறுகப்பற்றி
தரதரவென இழுத்துவந்து
வீட்டின் பின்புறமிருந்த
துவைப்புக்கல்லில்
“தொப் தொப்”பென
அடித்துத் துவைத்தேன்.
பின்
சாவுக்களை பீடித்து
சவம்போல் கிடந்த அதை
கொல்லைப்புறத்தில்
குழிதோண்டிப் புதைத்து
அடையாளமாய்
நடுகல் ஒன்றை நட்டுவிட்டு
திரும்பிப்பார்க்காது வந்துவிட்டேன்.
மறுநாள்
ஒட்டிய  வயிறுடன்
துவண்டு சரிந்தபோது
வீட்டின்
காலி சோற்றுப்பானையில்
ததும்பி வழிந்தது
எனக்கான தரித்திரம்.
-வான்மதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.