எமிலி வில்ஸன் ‘த ஆடிஸி’யை எப்படி மொழி பெயர்த்தார்?

எமிலி வில்ஸன்

ஏமி பிரேடி: நியூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸில் பாரி பவல் மொழியாக்கம் செய்த “தி போயம்ஸ் ஆஃப் ஹேஸியட்” புத்தகத்தைப் பற்றி அண்மையில் நீங்கள் எழுதிய மதிப்பீட்டில், மொழிபெயர்ப்பாலரின் பாலினச் சாய்வை விமரிசிக்கிறீர்கள். இலக்கியத்தை மொழியாக்கம் செய்யும்போது பாலினச் சாய்வு கொண்டிருத்தல் எப்படி பொருள்படுகிறது, நீங்கள் செய்யும் மொழியாக்கங்களில் அதை எப்படித் தவிர்க்கிறீர்கள்?
எமிலி வில்சன்: அவரது கேள்விக்குட்படுத்தப்படாத பாலினச் சாய்வை விமரிசித்தேன். சாய்வுகள், தேர்வுகள், சரித்திரங்கள், ஆர்வங்கள், அடையாளங்கள், எண்ணங்கள், முன்முடிவுகள், விருப்பங்கள் இருப்பதை யாராலும் தவிர்க்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எதைச் செய்வதிலும், ஒரு குறிப்பிட்ட வகையில் செய்வதுதான் சரியாக இருக்கும் என்ற அர்த்தம் எழும் வகையில், மொழிபெயர்ப்பாளர்கள் “புறவயப்பட்டவர்களாய்” இருக்க வேண்டும் அல்லது இருக்க முடியும் என்பது அல்ல நான் சொல்ல வந்தது. அப்படி நினைப்பதையே நான் சந்தேகப்படுகிறேன்: உயர்நிலையில் இருப்பவர்கள் எப்போதும் எதைச் செய்தார்களோ அதுதான் “புறவயமாகச் சரியானதாக’ இருக்க முடியும் என்ற நினைப்பை அது உறுதியாக்கி விடும்.
செய்திக் குறிப்பு எழுதுதல் அல்லது வாசித்தல் அல்லது வியாக்கியாயனம் செய்தல் அல்லது கதை கூறுதல் போன்றதே மொழியாக்கமும். அவை எதுவும் அப்படிச் செய்வதில்லை. “சாய்வற்றவர்களாய்” இருக்க வேண்டும் என்பதை நம் நோக்கமாகக் கொள்ள நாம் முயலக் கூடாது என்று நினைக்கிறேன். மாறாய், நாம் பொறுப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும். அப்படி இருப்பதானால், எவ்வளவு முடியுமோ அந்த அளவு நாம் நம் மனச் சாய்வுகள் மற்றும் விருப்பத் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்களாய் இருக்க வேண்டியிருக்கும். அத்துடன், நம் கைப்பொருள் குறித்து, முடிந்த அளவு விஷயம் தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும் (கிரேக்க பிரதியைப் பற்றி மட்டுமல்ல, நம் சமூகத்தையும் ஆங்கில மொழியையும் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்). என் பால் அடையாளம் (பிறப்புப் பாலடையாளத்தையே தனக்குரியதாய் உணரும் பெண்) ஆடிஸ்ஸி மொழிபெயர்ப்பை எப்படிப் பாதிக்கிறது என்று பலர் கேட்பது எனக்கு ஆச்சரியமாய் இல்லை. ஆனால் இதுவரை என்னைத் தவிர வேறு யாரும் செவ்வியல் மொழிபெயர்ப்பாளர்களாய் இருக்கும் ஆண்களை நோக்கி, அவர்களது பால் அடையாளம் அவர்கள் செய்யும் வேலையை எப்படிப் பாதிக்கிறது என்று கேட்பதில்லை என்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அது சிக்கலாகவும் இருக்கிறது. ஹேஸியட் பற்றிய கட்டுரையில் நான் விவரிப்பது போல், கேள்விக்குட்படுத்தப்படாத மனச்சாய்வுகள் மிக முக்கியமான, பிரச்சினைக்குரிய, சந்தேகத்துக்கிடமான தேர்வுகளுக்கு நம்மைக் கொண்டு செல்லும் (எடுத்துக்காட்டுக்கு, அந்த விஷயத்தில் நடந்தது போல், வன்கலவியை அது ஏதோ இருவரும் ஒப்புக்கொண்ட கூடல் போல் மொழியாக்கம் செய்வது).
மொழியாக்கம் செய்பவர்கள் எப்போதுமே அந்த மாதிரி செய்துவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். ஏனென்றால், ஆண் மொழிபெயர்ப்பாளர்கள் பாலடையாளம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்ற முன்முடிவு இருக்கிறது. அது போக, கரடுமுரடான ஆங்கில நடை “அசலான”, “துல்லியமான” அல்லது “திரிபற்ற” மொழியாக்கத்துக்கான அத்தாட்சி என்று நினைத்துக் கொள்கிறோம். இதை ஏற்றுக் கொள்ள முடியாது, இது உண்மையுமல்ல. நான் ஆடிஸ்ஸி மொழியாக்கம் செய்தது பற்றி எழுதும்போது, மூலப்பிரதி என்ன சொல்கிறதோ அல்லது செய்கிறதோ அதற்கு எந்த வகையிலும் உண்மையாய் இல்லாமல் இருக்கக்கூடாது, பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது என்று கவனமாய் இருந்தேன். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நான் என் அடையாளங்களும் சரித்திரங்களும் கவிதையில் என் ஆர்வத்தை எப்படி பாதிக்கக்கூடும் என்பதை நினைத்துப் பார்க்க முயற்சி செய்தேன்: ஒரு பெண்ணாகவும் பாலடையாளம் குறித்த விழிப்புணர்வு கொண்ட பெண்ணியராகவும் (பெண்ணாக இருப்பதால் பெண்ணியராக இருந்தாக வேண்டும் என்பதில்லை), புலம் பெயர்ந்தவராகவும், தாயாகவும், எழுத்தாளராகவும் கவிஞராகவும் இன்னும் பல அடையாளங்கள் எனக்கு இருக்கின்றன. ஆடிஸ்ஸி பல வகைகளில் என்னுடைய வாழ்வின் கூறுகளைக் கூடச் சித்திரிப்பதாக உணர்கிறேன் என்பதையும் ஒரு பக்கம் நினைத்துப் பார்த்து, நிறைய வேறு இடங்களிலும் எழுதினேன்.
கற்பனையாற்றல் மிக்க ஒரு பிரதியுடன் அந்தரங்க உறவு கொள்ளுதல் என்பதில் பாலினப் பாகுபாட்டுக்குப் பங்கு உண்டு என்றாலும், அது பாலின அடையாளங்களை வெகுவாகக் கடந்து செல்வது. ஆனால் நான் கிரேக்கப் பிரதி மீதும், என் மொழியாக்கத்தின் மீதும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில் வேறு எந்த மொழிபெயர்ப்பு நூலையும் கவனிக்கவில்லை என்பதால் நான் உருவாக்கிக் கொண்டிருந்த பிரதி ஆண்களால் உருவாக்கப்பட்டவற்றைவிட மாறுபட்டதாக இருக்குமா, அப்படியானால் குறிப்பாக எந்த வகையில் என்பதை உண்மையாகவே நான் அறிந்திருக்கவில்லை. முடிவில், என் மொழியாக்கத்தை முடித்தபின்னரே, பொது வாசகர்களுக்கு அதன் தனித்துவம் என்ன என்று விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட போதுதான், நான் பிற மொழிபெயர்ப்புகளில் உள்ள பல்வேறு காட்சிகளுக்குச் சென்று அவற்றை உற்று நோக்கினேன்- அப்போது பாலினம் சார்ந்து மிக முக்கியமான வேறுபாடுகள் இருப்பதை உணர்ந்தேன். உதாரணத்துக்கு, இதை நான் முன்னதாகவே பேசியிருக்கிறேன், மூலப் பிரதியில் இல்லாத இடத்தில் பெண்களை இழிவுபடுத்தும் மொழியை (‘வேசி’, ‘தேவடியாள்’ போன்ற சொற்களை) நான் இறக்குமதி செய்வதில்லை. ஆனால் ஆண்களால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகள் பல, “துல்லியமானவை” என்று போற்றப்படுபவையும்கூட இதைச் செய்கின்றன- என்பதைக் கண்டறிந்தபோது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. மேலும் ஒரு உதாரணம், நான் காலிப்சோ என்ற பெண் தெய்வத்தை கேலிக்கிடமானவளாகச் சித்தரிப்பதில்லை- ஆனால் ஆண் மொழிபெயர்ப்பாளர்கள் பலரும், அவளை மிகையுணர்ச்சிகள் கொண்ட ஓர் அபத்தமான “கன்னியாகச்” சித்திரிக்க மிகவே உழைக்கிறார்கள் என்பதைக் கவனித்தேன், நிறைவடையாத அவளது பாலுறவு இச்சைகள் சாரத்தில் நகைக்கத் தக்கனவாக உள்ளன. கிரேக்கர்கள் இதைச் செய்யவில்லை, நானும் இப்படிச் செய்வதில்லை. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றுகூட எனக்குத் தோன்றவில்லை, பிற மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும்போதுதான் இது உறைத்தது.
ஏமி பிரேடி: நான் படித்திருக்கிற பிற மொழிபெயர்ப்புகளைவிட, உங்கள் மொழியாக்கம் திரும்பச் சொல்லும் உத்தியைக் குறைந்த அளவில் பயன்படுத்துகிறது. இந்தத் தேர்வு குறித்து விளக்குகிறீர்களா?
எமிலி வில்சன்: ஹோமரிய கவிதையின் மீளுரைத்தலை எவ்வளவு தாமும் பதிலி செய்கின்றன என்பதில் மொழியாக்கங்கள் வேறுபடுகின்றன. ரிச்மண்ட் லாட்டிமோர் மிக அதிக அளவில் மீளுரைத்தல் செய்கிறார்; ஸ்டான்லி லோம்பார்டோ என்னை விடவும் குறைவாகவே மீளுரைக்கிறார் என்று நினைக்கிறேன் (நிச்சயம் அடைமொழிகளைக் குறைவாகவே பயன்படுத்துகிறார்- உதாரணமாக, அவரது வைகறை சிலபோது பெண் தெய்வம்கூட அல்ல). இந்தக் கவிதை தோன்றிய கலாசாரம் பிரதானமாக அல்லது பெருமளவு வாய்மொழிக் கலாசாரம், அதில் மீளுரைத்தல் குறிப்பிட்ட ஒரு பணியை நிறைவேற்றுகிறது. “இது முக்கியம்: இதைக் கேட்டு கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்,” என்று அது சொல்கிறது. நம்முடையதைப் போன்ற எழுத்துக் கலாசாரத்தில் மீளுரைத்தல் மிகவும் வேறுபட்டு ஒலிக்கிறது. “இது முக்கியமில்லாதது, தேய்வழக்கு, இதைத் தாண்டிச் செல்லுங்கள்,” என்று அது சொல்கிறது. ஹோமரிய வகைக் காட்சிகள் மற்றும் படிவங்களின் மீளுரைத் தன்மையை எடுத்துக்காட்ட மிகவும் விரும்பினேன், ஆனால் அதே போன்ற மீளுரைச் சொற்களால் அல்ல. அதைச் செய்தால் வாசகர் தூங்கிப் போய்விடுவது நிச்சயம் என்று தோன்றுகிறது.
வேறு வகையில், அணிமைகளைக் கொண்டு இதையொத்த விளைவை உருவாக்க விரும்பினேன் (ஏனென்றால், அதையே செய்திருந்தால் முற்றிலும் வேறு விளைவுக்குக் கொண்டு சென்றிருக்கும்). எனவே ரோஜா விரல்கள் கொண்ட வைகறை, மூல நூலில் எவ்வளவு முறை தொன்றுகிறாளோ, அதே அளவு மொழியாக்கத்திலும் தோன்றுகிறாள், எப்போதும் ரோஜாக்கள் அல்லது மலர்கள் அல்லது இளஞ்சிவப்பில், எப்போதும் விரல்களுடன் அல்லது தொடுகையாய், எப்போதும்’ அதிவிரைவில் அல்லது புதுப் பிறப்பாய், அல்லது முதற் பிறப்பாய், ஆனால் இப்படி மீண்டும் மீண்டும் வரும் கூறுகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதை பலவிதமாய் மாற்றியிருக்கிறேன்- இவ்விதமாய் படிமங்களும் உருவகங்களும் வாசகருக்கு எப்போதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்து இதைச் செய்திருக்கிறேன். இருபது முப்பது முறை இப்படி வந்தாலும் அது அலுக்கக் கூடாது. ஒவ்வொரு முறை ஒரு அதிதி வரவேற்கப்படும்போதும், ஒருவர் உடை மாற்றிக் கொள்ளும்போதும், உணவு உண்ணும்போதும், ஹோமரில் நடக்கும் விஷயங்கள் குறிப்பிட்ட வரிசையில் நடக்கின்றன என்பதை வாசகர்கள் அனுபவமாய்ப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அது உங்களைத் தொட வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள இந்தக் கோலத்தில் சிறு சிறு வடிவ மாற்றங்கள் அமைந்துள்ளன. உருப் பெறாத வெறும் மொத்தைகளாக வைகறையின் விரல்கள் வானில் இருக்கக் கூடது என்று நினைக்கிறேன்; வாசகி அவற்றின் தொடுகையை உணர வேண்டும் என்பது எனக்கு முக்கியம்.
ஏமி பிரேடி: வைகறை “ரோஜா விரல்கள் கொண்டவள்” என்ற விவரணை நான் முதல் முறை உயர்நிலைப் பள்ளியில் ஆடிஸ்ஸி படித்த நாள் முதல் என்னால் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. இப்போது நான் ஆங்கில மொழி முனைவர், ஆனால் இப்போதும் ஊகம்தான் செய்கிறேன். அந்தச் சொற்றொடரின் பொருள் என்ன?
எமிலி வில்சன்: இதற்கு ரோடோடாக்டைலோஸ் என்ற சொல்லை கிரேக்க மொழியில் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு படிமம், உருவகம், எனவே யாரால் இதைப் புரிந்து கொள்ள முடியும்! இதற்கு இன்ன பொருள் என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை. ஆனால் நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன். வைகறையில் சில சமயம் வானம் அதன் குறுக்கே இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு வண்ணத் தீற்றல்கள் கொண்டதாய் தோற்றம் அளிக்கிறது; அந்தத் தீற்றல்கள் ஒரு பெண் தெய்வத்தில் விரல்களாய் ஏன் இருக்கக் கூடாது? அவை அவளது விரல்களா, அவளது தொடுகையின் தடங்களா? அல்லது, பதினெட்டாம் நூற்றாண்டு கலையில் வைகறை இப்படித்தான் சித்தரிக்கப்படுகிறாள்- அவள் எப்போதும் தன் கரங்களில் ரோஜா மலர்களை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதாகவும் இருக்கலாம், இல்லையா? அவள் எப்போதும் புதிதாய்ப் பிறந்தவள் என்பதால் அவளுக்கு முற்போதுகளில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விருப்பம் இருக்கலாம், கோடையின் முற்பருவம், பருவங்களின் முதல் மலர்கள் என்று.
அல்லது இது: டக்டிலிக் ஹெக்ஸாமீட்டர் என்று சொல்லப்படும் சந்தத்தை கிரேக்கர்கள் ஆறு விரல்களாக (டாக்டில்) கற்பனை செய்தார்கள்: ஒரு விரலில் நீண்ட பகுதி ஒன்று, அதன் பின் இரு சிறு பகுதிகள் உள்ளன, மீட்டரில் உள்ள ஒரு டாக்டில் போல். எனவே வைகறை முதல் கவிஞராக இருக்கலாம்; பாடகரின் வரிகளில் உள்ள விரல்களுக்கு அவளது ரோஜா விரல்கள் சவால் விடுவதாகவோ அவற்றோடு இணைந்து இசைவதாகவோ இருக்கலாம். பொன்னாலான அரியணையும் ரோஜா விரல்களுமாக வைகறை, இலியட்டில் உள்ளதைவிட ஆடிஸ்ஸியில் அதிக முறை தோன்றுகிறாள். இது காலத்தைப் பற்றிய கவிதை என்பதை வைகறை குறிக்கிறது; குறிப்பாக சுழற்சியாகவும் மீண்டும் மீண்டும் தோன்றும் தொகையாகவும் உள்ள காலம். ஜீவித்திருத்தல் மற்றும் தொடர்ச்சியின் காலத்தை வைகறை குறிக்கிறது; விட்டுச் செல்வதற்கான காலமும் இருக்கிறது (தன் படுக்கையையும் தன் காதலன் டைதோனஸ்சையும் வைகறை விட்டுச் செல்கிறாள்), ஆட்சி செய்யவும் உழைக்கவும் ஒரு காலம் இருக்கிறது (ஒளியைக் கொணர அவள் பொன்னாலான அரியாசனத்தில் அமர்ந்து வருகிறாள்)- ஆடிஸ்ஸியில் எப்போதும் பயணத்துக்கான நற்காலம் இருக்கவே செய்கிறது. இது மானுடனுக்கும் (ஒடிஸ்ஸீயஸ் / டிதோனஸ்) பெண் தெய்வங்களுக்கும் (அதீனி, கலிப்சோ, ஸிர்ஸி) இடையில் உள்ள உறவு பற்றிய கவிதை இது என்பதை மீண்டும் மீண்டும் வைகறை வெவ்வேறு வகைகளில் உணர்த்திக் கொண்டே இருக்கிறாள்.
இது சுற்றி வளைத்துச் சொல்வதாக இருக்கிறது: நான் ஆடிஸ்ஸியின் வைகறைகளை நேசிக்கிறேன், அவை ஒவ்வொன்றுக்கும் சொல்லப்படும் ஒரே விஷயத்தை சற்றே மாறுபட்ட வகையில் சொல்ல முயற்சிப்பதை மிகவும் விரும்பிச் செய்தேன். என் மொழியாக்கத்தில் வேறு எந்த ஒரு பாத்திரம் போலவும் வைகறைக்கும் உயிர்ப்புடன் இருக்கும் உணர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு வைகறையும் அழுத்தம் திருத்தமாகவும், பிரகாசமாகவும், பல விரல்கள் கொண்டும், புதுப் பிறவியாகவும் தெரிய வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஏமி பிரேடி: ஆடிஸ்ஸியை இன்னுமொரு முறை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
எமிலி வில்சன்: என்னை உந்திய முதல் காரணம், அதிக அளவில் வாசிக்கப்படும் சமகால ஆங்கில மொழியாக்கங்கள் எதுவும் மரபுச் செய்யுள் அமைப்பு கொண்டதாய் இல்லை. மூல காவியம், சந்தம் கொண்டதாய், செய்யுள் வடிவில், அழகிய இசைத்தன்மை கொண்டது. ஆடிஸ்ஸியை செய்யுளாக அல்லாமல் வசனக் கவிதையாய் வாசிப்பது ஒரு மிகப்பெரிய இழப்பு என்று தோன்றியது. அதுதான் இப்போது வழக்கமாய் உள்ளது: பொதுவில் வாசிக்கப்படும் மொழியாக்கங்கள் (லாட்டிமோர், பாக்லஸ், லோம்பார்டோ, பிட்ஸ்ஜெரால்ட் எழுதியவை), வெவ்வேறு அளவில், சந்த அமைப்பு இல்லாதவை. இது போக, மூல மொழியில் உள்ளதைவிட சமகால மற்றும் இவற்றுக்கு முந்தைய மொழியாக்கங்கள், கிட்டத்தட்ட அனைத்தும், குறிப்பிடத்தக்க அளவில் நீளம் மிகுந்தவையாக இருப்பது ஒரு பிரச்சினை என்று எனக்குத் தோன்றியது; இதனால் அதன் துரிதமாகக் கதைசொல்லும் வேகம் நீர்க்கிறது; பெரும்பானான மொழிபெயர்ப்பாளர்கள் செய்தது போல் விரிவுபடுத்துவதை விட, மூல மொழியில் உள்ள அதே எண்ணிக்கை கொண்ட வரிகள் என் மொழியாக்கத்திலும் இருந்தால் போதும் என்று நினைத்தேன்.
இது போக, நடை சார்ந்த நோக்கங்களும் இருந்தன. சில சமகால, அல்லது, சமகாலத்தையொத்த ஹோமர் மொழியாக்கங்கள் அவற்றின் சமகாலத்தன்மையை மறைக்க வலிய முனைந்து உருவாக்கப்பட்ட விநோதமான, கரடுமுரடான, “அந்நியப்படுத்தப்பட்ட” ஆங்கிலத்தைப் பயன்படுத்த முயற்சி செய்கின்றன. இது ஏதோ, கிரேக்க மொழி அறிமுக வகுப்பில் திணறும் மாணவ அனுபவத்தை அளிப்பது போல் இருக்கிறது. சூப்பர் ஹீரோக்கள் மற்றும் சூப்பர்வில்லன்களின் உலகை உருவாக்கும் நோக்கத்தில் வேறு சிலர் குறிப்பிடத்தக்க ஒரு மகோன்னதமான, பெருஞ்சொற்கள் கொண்ட நடையைப் பயன்படுத்துகின்றனர்- ஹோமரிய பாத்திரங்களின் செயல்கள் கேள்வி கேட்க முடியாத அளவு முக்கியமான, மாபெரும், மகத்துவமான, கார்ட்டூன்தனமான எளிமை கொண்டிருக்கின்றன என்பது போல் இது இருக்கிறது. என் ஹோமரிய கிரேக்க வாசிப்பனுபவத்துக்கு முரணானதாக இந்த உத்திகள் இருப்பதாக நினைத்தேன். அந்த கிரேக்கம் செயற்கையானது, பல வழக்காறுகள் கொண்ட கவித்துவ மொழி, ஆனால் அதன் வாக்கிய அமைப்பு கடினமானதல்ல, பெரும்பாலும் ஆச்சரியத்தக்க வகையில் சரளமாகவும் நேரடியாகவும் இருக்கும் உணர்வு அளிப்பது. எனவே நான் என் மொழியாக்கம் எப்படி இருக்கக்கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டேன்: மிகவும் கொச்சைப் பேச்சு வழக்கைத் தவிர்த்து, குறிப்பிடத்தக்க அளவு கவித்துவம் கொண்டதாகவும், குறிப்பிடத் தக்க விதத்தில் செயற்கையாகவும் இசைத்தன்மை கொண்டதாகவும் வேறுபட்டதாகவும் சில சமயம் விநோதமாகவும் இருக்க வேண்டும், ஆனால் ஆடம்பரமாகவோ, விதேசத் தனமாகத் தெரிவதாகவோ இருக்கக் கூடாது. இறுதியாய் – ஒரு வேளை இதுதான் மிக முக்கியமான விஷயமாக இருக்கலாம், ஆனால் இவை எல்லாமே முக்கியம்தான் – பல மொழியாக்கங்களும் பிரதியின் அறம் சார்ந்த, மற்றும் கதைசொல்லலின் நுட்பங்களை எளிமைப்படுத்திவிடும் போக்கு கொண்டவையாய் இருப்பதை கவனித்தேன்.
எடுத்துக்காட்டுக்கு, ஒன்பதாம் நூல் ஒடிஸ்ஸீயஸ் நம்பத் தகுந்த கதைசொல்லிதானா என்பதை நாம் பரிசீலிக்க அனுமதிக்கிறது. சைக்ளோப்கள் “சட்டமற்றவர்கள்”, அல்லது, “விதி முறைகள் இல்லாதவர்கள்” என்று ஒடிஸ்ஸீயஸ் சொல்வதற்கும், பாலிஃபீமஸ் எல்லாவற்றையும் ஒரு முறையான வரிசைப்படி செய்கிறான் என்பதை அவன் ஏற்றுக் கொள்வதற்கும் இடையிலுள்ள முரண்பாடுகளை நாம் காண கிரேக்க நூல் அனுமதிக்கிறது. கிரேக்க மூலம் சில கணங்களில் கதைப்போக்கை ஒடிஸ்ஸீயஸ் அல்லாத பாத்திரங்களின் ஊடாகவும் குவிக்கிறது. உதாரணத்துக்கு, தன் கண் குருடாக்கப்பட்டபின் ஆத்திரத்திலும் வலியிலும் பாலிஃபீமஸ் துடிப்பதை நாம் பார்க்க முடிகிறது; அல்லது, டெலெமெக்கஸ்ஸால் தூக்கிலிடப்படும் அடிமைப் பெண்களின் அதிர்ச்சியையும் வலியையும் நாம் உணர முடிகிறது; அல்லது, பெனலபியின் குழப்பம், ஆதரவற்ற நிலை, ஆர்வம், துக்கம் ஆகியவற்றை நாம் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஒடிஸ்ஸீயஸ் ஒரு வீரனும் நாயகனும் மட்டுமல்ல, நவீன அர்த்தத்திலும் ஒரு  ஹீரோ என்று காட்டுவதற்கு – அவன் போற்றுதலுக்கு உரியவன் என்பதாக- கதைகூறல், பிற பாத்திரங்களிடம் இரக்கம் காட்டும் சாத்தியத்தைக் குறைத்தும் நீக்கியும்- இந்தப் பாடலின் அறச்சிக்கலை எளிமைப்படுத்தும் உந்துதலுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் பலர் ஆட்பட்டு விட்டார்கள் என்று தோன்றியது. கிரேக்க ஆடிஸி அடிமை பாத்திரங்களைக்கூட இது போல் உணர அனுமதிக்கிறது. ஆனால் பல மொழியாக்கங்களும்- இது மீண்டும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது- அந்த அடிமைகளைச் சுதந்திரமானவர்கள் என்பது போல் அடையாளப்படுத்துகின்றன (“பணிப்பெண்கள்” “மேய்ப்பவர்கள்” “வீட்டைப் பராமரிப்பவர்கள்” என்று பல).
ஒடிஸ்ஸீயஸ் மீது கதைகூறலைக் குவித்து அதன் வீச்சைக் குறைத்துக் கொள்ளாததாலும், அவனை கேள்விகளுக்கே இடமில்லாத, போற்றுதலுக்கே உரிய முன்மாதிரியாகச் சித்திரிக்காததாலும், கிரேக்கப் பிரதி ஒரு இலக்கியமாகவும் அற நூலாகவும் எவ்வளவு மேம்பட்டு விளங்குகிறது. இத்தனை ஆங்கில மொழியாக்கங்கள் இப்படியெல்லாம் அதை மலினப்படுத்த விரும்பியிருக்கின்றன என்ற விஷயத்தை நான் வெறுத்தேன். அதன் பன்முகத்தன்மைக்காக நான் ஆடிஸ்ஸியை நேசிக்கிறேன், அதற்கு உண்மையான ஒரு மொழிபெயர்ப்பை விரும்பினேன்; அப்படியொரு மொழிபெயர்ப்பு இல்லை என்பதை என்னால் காண முடிந்தது, எனவே அதை உருவாக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.
 
https://chireviewofbooks.com/2018/01/16/how-emily-wilson-translated-the-odyssey/amp/
***
[பதிப்புக் குழுவின் குறிப்பு:
மேல் விசாரணைக்கு:
1.
https://www.newyorker.com/books/page-turner/a-translators-reckoning-with-the-women-of-the-odyssey
2. https://www.lrb.co.uk/v40/n08/colin-burrow/light-through-the-fog
3.

All The Voices of The Odyssey: Emily Wilson On Language, Translation, and Culture


***
 
 
 
 
 

One Reply to “எமிலி வில்ஸன் ‘த ஆடிஸி’யை எப்படி மொழி பெயர்த்தார்?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.