பாலுவிலிருந்து பாபுவிற்கு

பனிரெண்டாம் வகுப்புப் பிள்ளைகள் டீயூசன் ஹாலிலிருந்து படிகளிலிறங்கி தோட்டத்தின் நடைபாதையில் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.  பாலு வெளியே வந்து படிகளில் அமர்ந்து தானே இல்லையென்பது போல தலையாட்டிக் கொண்டான்

தேங்க்யூ சார்,”என்று படிகளில் இறங்கிய சிவாவைப் பார்த்து பாலு தலையாட்டினான். தன் நீல நிற டீ சர்ட்டிலிருந்த சாக்பீஸ் துகள்களை  தட்டிவிட்டான். “பேப்பர் கட்டை நைனா டேபிள்ல வக்கறேண்ணா,”என்றபடி சுபா படிகளில் குதித்திறங்கினாள்.  கீழே வராண்டாவில் வீல் சேரிலிருந்து நைனா, “காலேஜ்க்கு நேரமாகல,” என்றார்.  அவன் கீழே குனிந்து தலையாட்டினான்

கிட்டத்தட்ட பத்துநாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வினோ, மதிஅக்கா, மணி, மனோவும் வந்து போனதிலிருந்து மனது தத்தளித்துக் கொண்டேயிருக்கிறது.  இப்படி கண்ட நேரத்தில் உட்கார்ந்திருப்பவனல்ல நான்.  கைப்பிடி சுவரைத் தாண்டி வந்த எட்டுமணிவெயில் கண்களை கூசச் செய்தது.  கண்ணாடியை வேட்டியில் துடைத்துத்  துடைத்துமாட்டினான்

இவர்கள் வந்து போன மறுநாள் கல்லூரி இடைவேளையில்  மணி, “திமிரு பிடிச்சவனே.  .  இப்படி ஒருஅம்மா இருக்கயில பெரிய இவனாட்டம் வீம்பு பிடிச்சு அலயற எரும,”என்றான்

பாலு, “அம்மாவா…?!”என்று முறைத்தான்

மதிஅக்கா, “அம்மா இல்லாம என்னடா?”என்று தன் அழுத்தமான குரலில் சொன்னது உறுமுவது போல இருக்கவும் பேசாமலிருந்தான்

மணி, “அவங்க கிட்ட பேசுடா.  .  சகஜமா இருடா.  எட்டுவயசிலருந்து அப்படி என்னடா பிடிவாதம்,” என்றான்.  சமையலறையிலும், நடையிலும் இவர்கள் பின்னியோடு அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது

மதிஅக்கா, “அம்மாதான் போய் சேந்துட்டாங்கஅதுக்கு பதிலா இருக்கிற சான்ச மிஸ் பண்றீயே? சின்னபிள்ளயில பிடிக்காம இருந்திருக்கலாம்.  அவங்களும் அப்ப உன்ன மாதிரி எட்டுவயசு குழந்தைக்கு திடீர்னு அம்மாவாகற மெச்சூரிட்டி இல்லாம இருந்திருக்கலாம்,”என்றாள்

மனோ, “அவங்ககிட்ட அம்மாவையே எதிர்பாத்தா!” என்றான்

வினோ, எல்லா இடத்திலயும் பிடிக்காமதான் இருக்கும்,”என்றாள்

சுபாவ மட்டும் என் தங்கச்சின்னு சொல்லிக்கிட்டு, அவள டிசிப்பிளின், மண்ணாங்கட்டின்னு பாடாப்படுத்தற.  இவங்க யாராம்?”

அன்று எதைப் பேசினாலும் எதிராக நிற்க வேண்டி வரும் என்று பாலு அமைதியானான்

இந்த வினோ கேட்டதுதான் பாலுவுக்குப் புரியவில்லை.  கற்றலில் தனியாள் வேறுபாடுகள் வகுப்பு முடிந்து வெளிவருகையில் நடைபாதை தூணுக்கருகில் புத்தகத்தைக் கையில் பிடித்தபடி குனிந்து சேலையில் விசிறியிலை மடிப்புகளை உதறி விட்டுக் கொண்டிருந்தாள்.  வந்து அவனுடன் இணைந்து நடந்தபடி , “இப்படி ஒவ்வொரு குழந்தையும் அதுக்குரிய வேகத்திலயும்,விருப்பத்திலயும்மரபியல் கூறுகளின் அடிப்படையிலதான் கத்துக்குது.  அப்படின்னா.  .  .  நல்லாபடிக்கறவங்களுக்கு, சுமாரா படிக்கறவங்களுக்கு, மெதுவா படிக்கறவங்களுக்கு தனித்தனி கிளாஸ் இருக்கறது தப்பில்லயே?”

வெறுமனே படிக்க மட்டுமா பள்ளிக்கூடம்

ஸ்பெசல் ஸ்டூடண்ட் ன்னா நிறைய கத்துக்க முடியுமில்ல.  . 

அப்படியில்ல வினோ.  .  டீச்சிங் ப்ராக்டிஸ் போன அரசுபள்ளியில அரையாண்டு தேர்வு நெருங்கினப்ப என்ன பண்ணாங்க?”

வரிசையா பிள்ளைகளை மைதானத்தில  படிக்கவிட்டாங்க

ச்.  . 

ம்.  .  மெதுவா கத்துக்கற பிள்ளைகள நல்லாபடிக்கிற பிள்ளைகளோட சேத்துவிட்டாங்க

ஒன்பதாம் வகுப்புல அல்ஜீப்ராவ  மேனகாவுக்கு, ரகு எப்படி பொறுமையா சொல்லிக் குடுத்தான் தெரியுமா?“

ஆமா பாலு.  .  அப்படியில்லத்தா நான் சொல்லித்தரேன் வான்னு பெரிய மனுசனாட்டம் சொல்லுவான்.  நம்மளவிடப் பொறுமை தான்.”

அதுக்குத்தான் ஒரே வகுப்பறை வேணும் வினோ.  முடியாதவங்க இருக்காங்கன்னு பிள்ளைங்களுக்கு புரியனும்.  மேனகாவும், ரவிக்கு ஏதாச்சும் கத்துக்கொடுப்பா.  .  ஒரே வகுப்பறைங்கிறதுல இன்னும் நிறையவிஷயங்கள் இருக்கு,”

சரிதான்,”என்றபடி நடைபாதையின் முடிவில் திரும்பி கட்டையில் சாய்ந்து நின்றாள்.  படிகளில் கும்பலாகஇருந்தாலும் இடித்துக் கொள்ளாமல் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தார்கள்

அப்படி என்ன ஈகோ உனக்கு,” என்றாள்.  சட்டென்று நெற்றிசுருக்கி  அவளைப் பார்த்து, “என்னயாருக்கிட்ட ஈகோ?” என்றபடி எதிரே நின்றான்

உங்க சித்தி கிட்ட,” என்று அவன்முறைப்பை அலட்சியமாகப் பார்த்தாள்.  இவள்  பின்னியை ஒருநாள் பார்த்து பழகிவிட்டு அம்மா என்று மற்றவர்களைப் போல  தத்துபித்துன்னு உளறாமல் கேட்பது பரவாயில்லை.  அன்று அனைவரும் டீயுசன் ஹாலில் இருந்த நேரம், இவள் பெருமாள்கோவில் மாடு மாதிரி தலையாட்டிக்கொண்டு, முல்லைக் கொடியின் கீழ் டீ குடித்துக் கொண்டு, பின்னியிடம் பேசிக் கொண்டிருந்தது அவன் நினைவிற்கு வந்தது

என்னாச்சு, பதிலே இல்ல,”

ஈகோவா?”

பின்ன என்ன? கொஞ்சம் ஈகோ பிடிச்சவன்னு தெரியும்.  ஆனா  பதினஞ்சு வருசமா! பாலுவுக்குள்ள இப்படியொரு ஈகோயிஸ்டிக் கேரக்டரா!”

என்ன லூசுமாதிரி பேசற,”

நானா?”

நீயே நல்லா யோசி.   பாலகுரு ஒரு ஈகோயிஸ்ட்,”

வினோ.  .  வேணாம்.  வார்த்தைய விடாத

பின்ன என்னடா.  .   கூட இருக்கறவங்கக் கிட்ட இப்படியா நடந்துப்ப!…நீ நடக்கறத, போறத, வர்றத, நிக்கறதக் கவனிச்சு அவங்க எல்லாத்தையும் புரிஞ்சுக்கனும்.  நீ முகத்தக்கூட பாக்கமாட்ட.  .  நீ என்ன பெரிய…”என்று முடிப்பதற்குள்,

இங்க பாரு இது என்னோட தனிப்பட்ட விஷயம்.  என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? பேச வந்துட்ட.  .  என்றதும் முதல்தளத்திலிருந்து இறங்கும் வரை அமைதியாக வந்தவள், “பாக்கலாம்,” என்றபடி கடந்து போனாள்.  இன்றோடு அவளிடம் பேசி பத்துநாட்களிருக்கும்

கீழிருந்து சுபாவின், “அண்ணாஅண்ணா சாப்பிட வரலயா?” என்ற குரல் கலைத்தது.  எழுந்து சீருடை மாற்றி, முகம் கழுவி, அம்மா படத்தின் முன்நின்று நெற்றியில் சிறிய கீற்று குங்குமம் இட்ட பின் படிகளில் தாவி இறங்கினான்

வரவேற்பறையில் அமர பாய்த்தடுக்கு கிடந்தது.  சம்மணமிட்டு குனிந்தமர்ந்தான்.  தட்டில் வைக்கப்பட்ட இட்லியைப் பிட்டு வாயில் போட்டுக் கொண்டிக்கையில், “பாவா…”என்ற பின்னியின் குரல்

கண்சாடையில் ஏதாவது அபிநயம் செய்யக்கூடும்.  நைனாஉடம்புக்கு சுகமா பாலு?” என்று கேட்டார்

ஒன்னுமில்ல நைனா.  நல்லாயிருக்கேன்.

படியிலயே ஒக்காந்திருந்தியே?” என்றபடி வீல்சேரை உருட்டி அருகில் வந்து வெள்ளை சட்டைக்காலருக்கு மேல கழுத்தில் தொட்டார்.  உடலெல்லாம் ஒருமுறை சிலிர்த்து அமைந்தது.  பின்னியைப் பார்த்து நைனா சகை செய்வதை உணரமுடிந்தது.  மீண்டும் இட்லி விழுவதற்கு முன் இடதுகையைத் தட்டின் முன் நீட்டினான்

பின்னி,“சுபாஒழுங்கா சாப்பிடு.  இல்லன்னா ஒடம்பு வீணா போயிடும்,” என்றாள்.  வினோ நினைவிற்கு வந்தாள்.  எழுந்து வேகமாக கையை உதறிக்கொண்டான்

ம்மா.  .  ஐஞ்சு இட்லி முழுங்கிட்டேன்

நைனா சிரித்தபடி, “பென்சனை எடுத்துட்டு வந்தா மாசக் கணக்க தீத்தறலாம்,”என்றார்

பாலு, “பிளஸ் டூ பேப்பர திருத்தி வைங்க நைனா.  ட்யூசன் பீஸ் வந்ததை மளிகைக்கடைல குடுத்திருக்கேன்.  இந்த மாசத்துக்கு சாமானை வாங்கிட்டு வந்திரலாம்,” என்றபடி கைக்கழுவி விட்டு வராண்டாவில் ஷூவை மாட்டினான்

கார்டு பாபு,” என்று ஏ.  டி.  எம் கார்டை ஜன்னலில் பின்னி வைத்துவிட்டு செல்கையில் கஸ்தூரி மஞ்சளின் மணம் கடந்து போனது.   குனிந்து கயிற்றைக் கட்டினான்.   பாபு.  .  ’ பின்னி எப்போதும் இப்படித்தான் அழைக்கிறாள்.  இந்த வினோவை நினைத்து எரிச்சலாக வந்தது

பின்னி வீட்டிற்குவந்த அன்று, பின்னியைத் தவிர்ப்பதற்காகக் குனிந்த பாலுவை, அந்த மஞ்சள்கரங்கள் அணைத்துக் கொண்டனஅவள் வயிற்றிற்கு மேல் தலை படுவதை உணர்ந்ததும் அவளின் பிடியிலிருந்து வெடுக்கென்று விலக்கிக் கொண்டான்பின்பொருநாள் தலையில் கை வைக்கையிலும் அவ்வாறு விலகிக் கொண்டான்சுபா பிறந்த அன்று இரும்புத் தொட்டிலில் அவளைப் பார்த்துச் சிரித்ததும், அவனைப் பிடித்து பின்னி கட்டிலில் அவளருகில் வைத்துக் கொண்டு, “இவனிருக்கானில்லம்மா.ரெண்டுபிள்ளங்க போதும்,”என்று அவன் இடுப்பில் கைகளைச் சுற்றிகைகளை அவன்மடியில் வைத்துக்  கொண்டாள்கலங்கிவீங்கியிருந்த கண்கள்அந்தவெளிறிய சந்தனமுகமும் அவன் ஆழத்தில் எதையோ அழித்து வரைந்தன. அவன் பெரும்பாலும்  நேருக்குநேர் பின்னியைப் பார்ப்பதில்லை என்பதால் அந்தமுகமே நினைவின் ஆழத்தில் தெளிந்திருக்கிறது.

காய்ச்சலில் படுக்கையில், ஏதோ கனவில் என பின்னியின் தொடுகை விலக்கமுடியாத அவன் நினைவின் தொலைவிலிருக்கும்.தயங்கித்தயங்கியே அவனைத் தொடுபவள் ஹையர்செகண்டரி நாட்களில் தொடுவதை விட்டுவிட்டாள்எங்கோ பார்த்து, ஏதோ ஒரிரு வார்த்தை அவளிடம்  பேசும் அவனிடம், தினமும் அவள் நைனாவிடமோசுபாவிடமோ பேசுவதாய் பேசிக் கொண்டிருக்கிறாள்.

நைனாவை ஹாஸ்பிடலில் சேர்த்த அன்று, “பயப்படாத பாபு.  பெருமாள் இருக்காரு, ”என்று தோளைத் தொட்டவளை, அவள் தடுமாறி விழுமளவுக்கு தள்ளினான்.  சுவரில் சாய்ந்து கொண்டாள்.  பின் நிதானித்து கன்னத்தில் ஒரு அறை விட்டு, “அவர் வளத்த பிள்ளயாடா நீ!”என்று வேகமாக வராண்டாவில் நடந்து சென்றது நினைவில் வந்தது

வினோ சொன்னதைப் போல்தானா நான்? என்று நினைத்தபடி படியிறங்கி சுபாவுடன் நடந்தான்.  ஏன் அம்மாவுக்குப் பிறகு யாரையும் அம்மா என்று மறந்தும் கூட அழைப்பதில்லை.  யார் மீது கோபம்.  .  அம்மா மீதா! யார் என்ன சொன்னாலும் என்னுடன் இருக்க நினைக்காமல் ஏன் போனாள்சுபா பள்ளிமுடக்கில் அவன் கையைத் தட்டித் திரும்பினாள்

என்னண்ணா ஒருவாரமா ஒருமாதிரி இருக்க?”

இல்லடா.  .  கொஞ்சம் வேல அதிகம்,”என்றபடி அவள் தோளைத் தட்டித் திருப்பிவிட்டு கல்லூரிப் பேருந்தைக் கண்டதும் ஓடி ஏறினான்

கலைக்கல்லூரியின் பேருந்து நின்று போனதால் வருகிற பேருந்தில் பிள்ளைகள் பயல்கள் ஏறி, கொந்தளிப்பாக இருந்தது.  ஓட்டுநர், “பின்னால பாலிடெக்னிக், இஞ்ஜினீரிங், பள்ளிக்கூட பஸ்லாம் வருது.  அதுல வாங்க,” என்று நிறுத்தத்திற்கு நிறுத்தம் கத்தினாலும் சந்தில்  புகுந்து ஏறிக்கொண்டேயிருந்தார்கள்

பத்துநாட்களாக ஏதோ ஒன்று உள்ளே மெல்ல நடுங்குவதை உணர்ந்து கொண்டேயிருந்தான்.  இறுக்கிப் பிடித்தபடி உள்ளும் புறமும் ஒரு இயல்பல்லாத நிலை.  விழுவதைப் பற்றுவதைப் போலவோ அல்லது பறப்பதை இழுத்துப் பிடிப்பதைப் போலவா ஏதோ ஒன்று.  கண்களை இறுக மூடி இருக்கையில் சாய்ந்து கொண்ட போது முகம் சுளித்திருப்பதை உணர்ந்து வாயைத்திறந்து காற்றை ஊதினான்.  கடந்து செல்லும் காற்றுக்கு முகத்தைக் கொடுத்து கண்மூடினான்

இன்று முழுவதும் மனதில் நினைவுகள் முண்டியடித்துக்கொண்டிருந்தன.  ஏதோ   மனதில் கசகச வென்று.  சங்கீதாமேடம் இரண்டு முறை , “என்ன பாலமுரளி.  கவனம் இங்க இல்லயே,” என்று கேட்டார்

என்னடா முனி புடிச்சவனாட்டம் நெலச்சி உக்காந்திருக்க.  எங்கஊர்ல பிச்சாயி கோயிலுக்கு போவமா?” என்று மணி கேட்டுச் சிரிக்கையில், மனோ, “முனியா.  .  மினியா?” என்று கண்சிமிட்டினான்

மதிஅக்கா, “நெஜந்தான்.  நார்மல் பாலுவா இருந்தா இன்னேரம் மனோக்கிட்ட எகிறியிருக்கமாட்டான்.  என்ன தம்பி…” என்று சிரித்தாள்

பாலு வெறுமனே பல்லைக் காட்டி வைத்தான்.  இந்த வினோ எங்க? காலையில அவசரத்துக்கு பையக் குடுக்க ஆளில்லாம பத்துநாளா திண்டாட வேண்டியிருக்கு.  நான் கவனிக்கலயா? அவ கண்ணில படலயா?

வினோ எங்க?”

லைப்ரரி போயிருக்கா.  அவளுக்கு இந்தவாரத்தில ரெண்டு செமினார்,”என்றப்பின் மனோ, “அவக்கூட பேசறதில்லையா?” என்று கேட்டான்

பேசனும்,”என்னும் போது வினோ புத்தங்களுடன் வந்து பின்னாடி பெஞ்சில் அமர்ந்து மணியிடம் பேசத்தொடங்கினாள்

சாயுங்காலமும் பேருந்தில் அதே ரகளை.கும்பல் அம்மியது.சாவகாசமாக வரும் வினோ கும்பலில் சிக்கி கலைக்கல்லூரி பிள்ளைகளுடன் நிற்பது அவனுக்குத் தெரிகிறதுஅங்கு ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள்அவர்கள் மூவரையும் பார்த்ததும் புன்னகைக்கிறாள்இரண்டு நிறுத்தங்களுக்குப்பிறகு மதிஅக்கா இறங்கியதும் பிள்ளைகள் அவனருகே அமரத் தயங்கிய நேரத்தில், அவன் வினோவைப் பார்த்ததும், வந்து அவனருகில் அமர்ந்தாள். “ரொம்ப கசகசன்னு இருக்குல்ல?” என்றான்.

வேர்வ வாடை அடிக்குதா?  ஹெரிடிட்டி அப்படி,” என்றவாறு நகர்ந்து நன்றாக அமர்ந்தாள்

மணி, “இந்த வெயில்ல யாருக்குதான் வேர்க்கல,” என்றான்.  இவள் எப்பவும் இப்படித்தான் பயாலஜி படிச்சவங்க கொஞ்சம் இப்படித்தான் இருக்கிறார்கள்

ஈகோ போயிடுச்சா?”

என்ன?”

கணக்கு சாருக்கு….  என்மேல இருந்த ஈகோ போயிடுச்சா? முகத்தக் கூட பாக்கமாட்டேங்கறீங்க.  காலையில ப்ரேயர் முடிஞ்சி பையக் குடுக்கறவர ரெண்டுநாளா பாத்தேன்.  அவரே வராண்டாவில வச்சுட்டு போறப்ப நமக்கென்னன்னு விட்டுட்டேன்

அப்படியில்ல…”

மணி, “கணக்கு சார்ன்னா எனக்கும் கொஞ்சம் பயந்தான்,”என்றான்

போதும்.

வினோ, “நீ யோசனையிலயே இருக்கறது தெரியுது.  கிளாஸில ஸ்கிப் ஆகற.  சங்கீதா மேடம் என்கிட்டகூட கேட்டாங்க.  பாலுக்கு என்ன பிரச்சனைன்னு,” என்றாள்

வினோ நகர்ந்துதிரும்பி எங்களை நோக்கி பக்கவாட்டில் அமர்ந்தபடி மணியிடம், “இன்னக்கி என்ன வேல?”என்றாள்

காலேஜ் டேஸில கடைக்குப் போறது மட்டும் தான்.  உனக்கு எதாவது சார்ட் வரையனுமா?” என்றான்

பாலு, “என்ன வரையனுன்னு சொல்லு வரையலாம்,”என்றான்

மணி, “உனக்கு நிறைய வேலைடா.  .  நாங்க பாத்துக்கறோம்,” என்றான்

வினோ, “எப்படி சமாளிக்கற? என்னன்ன வேல? வீட்டுக்கு வந்தப்ப பாபுக்கு நிக்க நேரமில்லன்னு அம்மா சொன்னாங்க,”என்றாள்

டியூசன், வீட்டுக்கு தேவையானது எல்லாம், லீவில விசேசங்கள், முடியலன்னா சாயங்காலமா போய் பாத்துட்டு வர்றது, நைனாவுக்கு ஹாஸ்பிடல்,சுபாவுக்கு, பின்னிக்குஎதுக்கும் பின்னி கூடவே இருப்பாங்க.  இல்லன்னா சொல்லியனுப்புவாங்க…”

வினோ, “ம்என்று திரும்பி வேறுபக்கம் பார்த்தாள்.   அதுக்காக?” என்று நிறுத்தினாள்

மணி, “நாங்க இனிமே தான் இதெல்லாம் கத்துக்கனும்.  .  என்று பெருமூச்சுவிட்டான்

சொல்ல வந்தத சொல்லு வினோ

அதனால எங்களுக்கு எந்தபிரச்சனையும் இல்லன்னு நினைக்கற.  நாங்க உனக்குச் சொல்ற அளவுக்கு வளரல,” என்று மெல்ல நிமிர்ந்தாள்

“…”

பாலு எதுவும் பேசாமல் பேருந்தை வேடிக்கை பார்த்தான்.  கூட்டம் குறைந்திருந்தது.  காற்றோட்டமாக இருப்பதை உணரமுடிந்தது.  சட்டை ஈரம் உலர்ந்து கொண்டிருந்ததால் சில்லென்றிருந்தது

என்ன பெரிசா? நீ வார்த்தைக்கு வார்த்தைடாபோடற.  என்னால எதாச்சும் சொல்லமுடியுதா? “

ம்.  பாலு இங்க வாங்கஎன்ன பண்றீங்கன்னு பேசனுமா?.  .  .   அம்மாக்கு தெரியல.  நாலு சாத்து சாத்தியிருந்தா சின்னபிள்ளையா நடந்திருப்ப.  பாபுபாபுன்னு காந்திய கூப்பறாப்ல கூப்பிட்டா உச்சாணி கொம்பில நிக்கமாட்ட…”என்றாள்

பாலு நிமிர்ந்தமர்ந்து சிரித்தான்

இன்னும் கொஞ்சநாள்தான்.  .   தினமும் முகம் பாக்க, பேச கிடைக்கும்.  காமன் பஸ்ஸா இருந்தா பக்கத்தில இவ்வளவு சாவகாசமா உக்காருவேனா? நீ ஏன் என்கூட பேசல?” என்றாள்

பாலு, “பெருசா காரணம் எதுவுமில்ல,” என்றான்.  வினோ சேலையைச் சரிசெய்தபடி எழுந்து பையை முன்னாலிருந்த பெண்ணிடம் வாங்கிக் கொண்டாள்.  அவன்  வசதியாக அமர்ந்தான்.  இருக்கையின் கம்பியிலிருந்த அவளின் இடதுகையின் கடிகாரம் தோள்பட்டை எழும்பில் இடித்தது

முன்னகர எத்தனிக்கையில் ஆள்காட்டி, கட்டைவிரலால் என்னைத் தடுத்தாள்.  நிமிர்ந்து நேராக பார்த்தான்.  சின்ன சின்னக் காரணங்களைப் பிடிச்சு நிக்காத.   விட்ருடா,”என்றபடி தோளைதட்டிவிட்டு நகர்ந்து அவள் நிறுத்தத்தில் இறங்கினாள்

மணி எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்தபடியிருந்தான்.  கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டான்.   அவன் தோளில் தட்டி புருவத்தை உயர்த்தினான்.  மணி ஒன்றுமில்லை என தலையாட்டினான்.  பின் தோளில் கைபோட்டு வயிற்றில் குத்தினான்.  பாலு சிரித்தபடி அவனைத் தடுத்துவிட்டு எழுந்தான்.   மணியிடம் கூட இத்தனை நாள் சரியாக பேசவில்லை

பாலு இறங்கி தெருவில் நடக்கையில், சிறுவனாகி பள்ளிவிட்டு வீட்டிற்கு வருகையில் இருக்கும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தபடி கொஞ்சம் ஓடிவந்து நின்றான்.   மாணவி ஒருத்தி, “குட்ஈவிங் சார்,” என்றதும் தலையாட்டிவிட்டு அடங்கி நடந்தான்.  வீட்டிற்குவந்துவிட்டான்.  கைநிறைய அந்திமல்லியைப் பறித்து நைனா மடியிலிருந்த கிண்ணத்தில் பின்னி வைத்துக் கொண்டிருந்தாள்

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.