மறக்கப்பட்ட ரஷ்ய கிளாசிக் நாவல்- அபுலோமாஃப் (Oblomov)


[19ஆம் நூற்றாண்டின் சிறந்த ரஷ்ய நாவல்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படும் அபுலொமாஃப் என்ற நாவலை எழுதிய இவான் கன்சொரோஃப் பற்றி 50 ஆண்டுகளுக்கும் மேலாக பதிப்பாசிரியராகச் செயலாற்றிய ராபர்ட் காட்லீப் என்ற அமெரிக்க பதிப்பாசிரியரின் கட்டுரை. தமிழாக்கம்: சுந்தரம் பழனியப்பன்.]
மேலை வாசகர்களுக்கு, இந்த நாவலைப் பற்றி ஏதும் தெரிந்திருந்தால், அவர்கள் இது படுக்கையை விட்டு எழுந்திராத ஒரு மனிதன் பற்றிய நாவல் என்று கருதுகிறார்கள்.
முதுமையடைதலின் சாதக அம்சங்களில் ஒன்று – நீங்கள் நம்பத்தான் வேண்டும், மேலும் பல இருக்கின்றன- அறுபது அல்லது அதைவிட அதிக ஆண்டுகளுக்கு முன் நீங்கள் முதல்முறையாக அறிந்த புத்தகங்களை மீண்டும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது (சில சமயம் மீள்வாசிப்பு செய்ததை மீண்டும் வாசிக்க வாய்க்கிறது).
சில எழுத்தாளர்கள் எப்போதும் நம்மோடு இருக்கிறார்கள் – உதாரணமாக, என்னைப் போன்றவர்களுக்கு, ஜேன் ஆஸ்டன்; சில புத்தகங்களை நாம் ஒவ்வொரு பத்தாண்டுகள் அல்லது இருபதாண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் வாசிக்கிறோம்; War and Peace, Anna Karenina, The Idiot- போற்றப்படும் புதியதொரு மொழியாக்கம் நமக்கு தூண்டுதல் அளிக்கலாம்; Middlemarch, Moby-Dick, Proust. ஆனால் குறிப்பிடத்தக்க பிற படைப்புகள் நம் நினைவிலிருந்து அகலாமல் போனாலும், பார்வையிலிருந்து மறைந்து விடுகின்றன.
மிகச் சமீபத்தில், கிட்டத்தட்ட ஆறாண்டுகள் நினைத்துக் கொண்டிருந்துவிட்டு, ருஷ்ய நாவல்கள் அனைத்திலும் மிகப் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்றை மீண்டும் வாசித்தேன்- , இவான் கன்சரோஃப் (Ivan Goncharov) எழுதிய அபுலோமாஃப்  (Oblomov). மேற்கத்திய வாசகர்களில் பெரும்பாலானவர்கள், இதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால், படுக்கையை விட்டு எப்போதும் எழுந்திருக்காத ஒருவனைப் பற்றிய நாவல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வகையில் அவர்கள் நினைப்பது சரிதான்: அதன் மையப் பாத்திரமான இலியேய் இலியிச் அபுலோமாஃப் (Ilya Ilyich அபுலோமாஃப்) நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் ருஷ்ய அடையாளத்தின் அடிப்படை குணமாகத் தெரிவதில் ஒன்றுக்கான சொல்லை ரஷ்யாவுக்கு அளித்துள்ளது- அபுலொமொஷ்சினா. இதன் பொருள் அபுலோமாஃப் நிலையில் இருப்பது- பரம்பரை பரம்பரையாக நிலவுடமையாளராக இருந்த உயர்குடியைச் சேர்ந்தவன், நோக்கமும் மன உறுதியும் இல்லாத காரணத்தால் எதையும் செய்யாமல் சும்மா இருப்பவன்.
ஆனால் அவன் படுக்கையை விட்டு எழுந்திருக்கிறான்- என்றும் சொல்லலாம். அவனது அடிமை-வேலைக்காரன் ஸஹார் (zakhar), இலக்கியத்தின் முக்கியமான நகைச்சுவை பாத்திரங்களில் ஒருவன், இவான் அபுலோமாஃப் காலுறைகளும் காலணிகளும் அணிந்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவுகிறான், ஆனால் அவனும் அவனது முதலாளி அளவுக்கே சோம்பேறி. ஆனால் ஒரு குடியானவனுக்கே உரிய வகையில் ஸஹார் புத்திசாலியாக இருக்கிறான் என்றால் அபுலோமாஃப் புத்திசாலித்தனத்தின் எதிரிடை: அவன் உன்னத வெகுளி, ஒரு சிறிதும் ஏமாற்றத் தெரியாதவன், அவனைச் சுற்றியுள்ள, அவனைச் சுரண்டி வாழ்பவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாதவன். அவன் மூடனல்ல, அவன் படித்தவன்தான், அவனது தோற்றம் வசீகரமாக இருக்கிறது, அவனது estate (அவன் அங்கு போவதேயில்லை), அவன் கண்மூடித்தனமாக கொள்ளையடிக்கப்படுகிறான் என்றாலும், அவன் வாழ்வதற்கு தேவையான அளவு கொடுக்கிறது. அவன் அசக்தன் என்பதுதான் விஷயம், சந்தேகம், காழ்ப்புகள், இலட்சியங்கள் முதலானவற்றில் இருந்து அவனது சாந்தம் நிறைந்த நற்குணம் அவனைக் காக்கிறது. வேறு சொற்களில் சொல்வதானால், அவன் தேறாத கேஸ்- அது போக, ஓர் அழகிய ஆன்மா.
அவனது நெருங்கிய நண்பன் ஷ்டோல்ஸ் (ஷ்டோல்ஸ்) அவனுக்கு நேர்மாறானவன்- சுறுசுறுப்பானவன், களைப்பறியாதவன், விடா முயற்சி செய்பவன் (அது சரி, என்ன இருந்தாலும் அவன் உடலில் பாதி ஜெர்மன் ரத்தம் ஓடுகிறது). அபுலோமாஃப் தன் படுக்கையை, தன் சோபாவை, தன் டிரஸ்ஸிங் கவுனைத் துறப்பதே இல்லை என்றால் ஷ்டோல்ஸ் பயனுள்ள வகையில் ஒரு புயலென ஊரெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறான், ஐரோப்பாவைச் சுற்றித் திரிகிறான், அவ்வப்போது தன் ஊரான St. Petersburg வந்து தன் நண்பனை தூண்டிக் கொண்டிருக்கிறான்… ஏதாவது செய், ஏதோ ஒன்று செய் என்று. உன் எஸ்டேட்டுக்கு போய் அதன் விவகாரங்களைச் சரிப்படுத்து; என்னோடு யூரோப்புக்கு வா, உயர்குடி மக்களோடு நெருங்கிப் பழகு. தன்னால் முடியுமென்றால் அபுலோமாஃப் அதைச் செய்வான், ஆனால் அவனால் முடியவில்லை; ஆமாம், நீ சொல்வது ரொம்பச் சரி ஷ்டோல்ஸ்—ஆனால் இப்போது முடியாது.
ஆனால் பார்த்தால் அப்புறம், தன் நண்பன் மூலம், அவனது காதல் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் பெண்ணைச் சந்திக்கிறான்: அழகிய, அறிவாளியான, ஆழமான உணர்வுகள் கொண்ட ஓல்கா (Olga). அவளால் அவனை உண்மையாகவே நேசிக்க முடியுமா? அவனை அவள் மனம் செய்து கொள்ளப் போகிறாள் என்பது உண்மையாக இருக்குமா? ஆம், அது உண்மைதான், அவன் ஆனந்தத்தால் ஒளிர்கிறான். ஆனா என்ன, அவன் சிந்திக்கிறான், தயங்குகிறான், காலம் தாழ்த்துகிறான், தள்ளிப் போடுகிறான். ஓல்காவோ வாழ்க்கையை நேசிக்கும் இளம் பெண் , காட்சிகளைக் காணவும் செயல் புரியவும் தேடிச் செல்லவும் பேரவா கொண்டவள்.  காலம் கடக்குமுன் அவள் பின்வாங்குகிறாள், இதயம்  வேதனை நிறைந்ததாய் இருந்தாலும் அவள் அறிவு தெளிவாக இருக்கிறது, இறுதியில் தான் வாழ்நாள் முழுதும் இணைந்து வாழ ஏற்றவன்  ஷ்டோல்ஸ்தான் என்பதைக் கண்டடைகிறாள். அவனோடு அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்றாலும் அவள் தன் நோக்கத்தை கேள்விக்குட்படுத்துகிறாள், உள்ளிருந்து அறுக்கும் (ருஷ்ய?) சோகத்த்தில் கிட்டத்தட்ட தன்னையே இழக்கிறாள், தீர்மானமாய் வினை புரியும் ஷ்டோல்ஸ் அவளை அதிலிருந்து வெற்றிகரமாய் மீட்கிறான்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாவல்கள் ஏறத்தாழ எல்லாமே கள்ளக் காதலுடன் விளையாடி, அல்லது, அதற்கு பலியாகும் பெண்கள் நிறைந்தவை என்றால், ஓல்கா விரக்தியோடு விளையாடும் பெண். வாழ்க்கைதான் என்ன? அதன் நோக்கம் என்ன? அதை எவ்வாறு வாழ்வது? அவளிடம் அரசியல் பிரக்ஞை இல்லை- அவள் குண்டு வீசும் அரசின்மைவாதியாகப் போவதில்லை. அவளைச் செலுத்துவது அறிவோ கலையோ அல்ல – அவள் ஒரு George Sand அல்ல. சமூக இலட்சியங்கள் கொண்ட பெண்ணின் நேர் எதிர் அவள். புனைவுலகில், இருப்பியல் சிக்கல் என்று நாம் அழைக்கக்கூடியதன் பிடியில் மாட்டிக் கொண்ட முதல் பெண்ணாய் அவள் இருக்கலாம். அபுலோமாஃப் நாவலின் இரண்டாம் முக்கியச் சரடு, எந்த விதத்திலும் வளர மறுக்கும், எந்த வினையும் புரிய மறுக்கும், நாயகனுக்கு மாறாய் அவள் ஒரு தீவிரத்தன்மையுடன், அனுபவங்களை வலுக்கட்டாயமாய்த் தேர்ந்து வலிமிகுந்த வளர்ச்சிக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறாள் என்பதுதான்.
இல்லற சுகத்தில் திளைத்திருக்கும் ஷ்டோல்ஸ், ஓல்கா இருவரும் தங்கள் பரபரப்பான, பயனுள்ள வாழ்வை இணைந்து வாழ்கின்றனர், நெருங்கிய நண்பனை கிட்டத்தட்ட மறந்து விட்டனர். அபுலோமாஃபைச் சுரண்டி வாழ்ந்த மோசடிப் பேர்வழிகளிடமிருந்து ஷ்டோல்ஸ் காப்பாற்றி விட்டான், ஆனால் காலம் கடக்கையில் அவர்களிடையே தொடர்பே இல்லாமல் போகிறது – ஷ்டோல்ஸ் அவ்வளவு பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறான், அபுலோமாஃப் அவ்வளவு சோம்பேறியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு வழியாக தம்பதியர் இருவரும் அபுலோமாஃப்வை தம் வாழ்வில் இணைத்துக் கொள்ள செயிண்ட் பீடர்ஸ்பர்க் நகருக்குப் போகிறார்கள். அவனை எங்கு விட்டு வந்தார்களோ அங்கேயே அவன் இருப்பதைக் காண்கிறார்கள், அவன் தன் பழைய அடுக்கத்தில் சௌகரியமாக நிலைத்து விட்டான், அந்த அடுக்ககத்தின் உரிமையாளர் ஒரு பெண், அவள் அவனை வழிபடுகிறாள், அவன் மீது நேசம் கொண்டிருக்கிறாள், அவளது வசீகரமான கரங்களும்,  சுவையான சமையலும் அவனது ஆசைகள் மற்றும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்றன, இருவரும் கிட்டத்தட்ட கணவன் மனைவி போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவன் தன் குழந்தைப்பருவத்தின் பாதுகாப்பான, நிர்ப்பந்தங்களற்ற உலகை மீண்டும் அடைந்து விட்டான், அவனுக்காக ஓய்வு ஒழிச்சலின்றி செய்யப்படும் அத்தனையையும் அவன் இயல்பாகவே தனக்குரியதாய் ஏற்றுக் கொண்டு வாழ்கிறான். அபுலோமாஃப்ஷ்சினா உலகை அவன் மீண்டும் உருவாக்கி விட்டான்.
எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் ஒரு ஆண் மகனுக்குத் தந்தையாகி விட்டான், அவனுக்கு ஷ்டோல்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறான். அந்தச் சிறுவனை ஷ்டோல்ஸ் தன்னுடன் இட்டுச் செல்கிறான், அவனும் ஓல்காவும் இனி அவனை வளர்க்கப் போகிறார்கள், தம் உயிர்த் துடிப்பு சக்தியை அவனுக்கு ஊட்டி அவர்கள் அவனை வளர்க்கப் போகிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் எவ்வளவுதான் அபுலோமாஃபின் மந்தத்தன்மையையும் அசக்த கதியையும் கண்டனம் செய்தாலும், தம்பதியர் அவனது “தூய, தூய, இதயத்துக்கு” உரிய மரியாதை அளிக்கத் தவறுவதில்லை. அவனது, “களங்கமற்ற, கறை படியாத ஆன்மா,” என்கிறான் ஷ்டோல்ஸ். ஒரு ருஷ்ய ஆன்மா.
நானும் ஒரு ருஷ்யனாக இருக்க வேண்டும். புத்தகக் குவியல் ஒன்றையும், படிக்கத் தோதான நல்ல விளக்கும் கொடுத்தால், மிகவும் மகிழ்ச்சியாக படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் இருக்கக் கூடிய குணம் எனக்கு இருக்கிறது: நான் ஒரு அபுலோமாஃப். ஆனால் வேலை செய்யாமல் சும்மா இருப்பதை, செய்து முடிக்க எதோ ஒன்று இல்லாமல் இருப்பதை, தாங்கிக் கொள்ள முடியாத ஒரு பக்கமும் எனக்கு இருக்கிறது: நான் ஒரு ஷ்டோல்ஸ். கன்சொரோஃபுக்கு எப்படி, 1859ல், என்னை இவ்வளவு நன்றாக தெரிந்தது?
ஆரம்பம் முதலே அபுலோமாஃப் ஒரு மாஸ்டர்பீஸ் என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. “திறமையில் என்னைவிட கன்சொரோஃப் பத்து மடங்கு உயர்ந்தவர்,” என்றார் சியகாஃப் (chekov). “அபுலோமாஃப் என்னைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது, அதை நான் மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார் டால்ஸ்டொய். தஸ்தாயெவ்ஸ்கி அதை ‘Dead Souls’ மற்றும் ‘War and Peace’ ஆகிய இரு படைப்புகளுக்கும் இணையாய் வரிசைப்படுத்தினார். இவர்களோடு முரண்பட நாம் யார்?
நன்றி – https://lithub.com/robert-gottlieb-on-a-neglected-russian-classic/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.