தனித்தலைந்தது நிலவு

இங்கு நிலவும் சூழல்களையும்,எங்கள் எண்ணங்களையும், கடலுடனான எங்கள் பேச்சுக்களையும் அப்படியே எழுதியுள்ளோம்.நீங்கள் மிகவும் படித்தவர் என்பதாலும், அறிவுக்கூர்மை மிக்கவராக இருப்பதாலும் இப்படி எழுதத் துணிந்தோம்.
மேகங்களை இருள் திரையெனப் போர்த்தி மறைந்து கொண்டது வானம்.மடிப்புமடிப்பாகக் கவிந்து கொண்டே வந்த மேகங்கள்  நிலவின் ஒளியினை மறைத்து மின்னலென வெட்டிச் சிரித்தன.அதன் கோர்வைகள் போல் இடியும் முழங்கியது.ஆர்ப்பரித்து அலைக்கரங்கள் கொட்டியது கடல்.கவிழ்ந்து வரும் வானம் தன்னைத் தொட வருகையில் விரைந்து கரையை மீதூறப் பார்த்தது கடல்.அந்த இருளில் நீலத்தைத் தொலைத்து விம்மின வானும், கடலும்.
இடப்பெயர்ச்சி உயிரினங்களுக்கு மட்டும்தானா?வானுக்குள் கடலும்,கடலுக்குள் வானும் ஏன் வரக்கூடாது?மண்ணில் வளரும் கடலும், விண்ணில் தொடரும் வானும் இடம் மாறினால்,எங்கும் உறையும் தெய்வங்களுக்கு இடம் பெயர்வதின் அதிர்ச்சி புரியுமா?இல்லை, அவை வேறு உலகங்களை ஆளப் போய்விடுமா?.காட்சிப்பிழை மலிந்துவிட்டதென்று காணாமல் போய்விடும் போலும்.மண்பொம்மையைக் கொடுத்துவிட்டு உடைக்காமல் விளையாடு என்று மனிதனிடம் சொல்லிவிட்டு விடுமுறையில் போய்விட்ட தெய்வங்கள்.ஆனால்,மிக இரகசியமாக கடலை உந்தி மண்ணைத் தின்னச் சொல்லிவிட்டுத்தான் போயிருக்கின்றன.மேலிருந்து பொழிந்து அலைக்கழிக்கும்,கீழிருந்து விழுங்கி கொக்கரிக்கும் இந்த சூதாட்டத்தின் நியதிகளை வகுத்தவர் யார்?
‘கடலே,உன் வயிற்றில் ஏதோ நெருப்பு இருக்கிறதாமே? மண் கொண்டா அதை போக்குகிறாய்? இன்னும் எத்தனை கிராமங்கள் வேண்டும் உன் பசிக்கு? உள்ளே உறங்கும் நகரங்களின் கணக்கிருக்கிறதா உன்னிடம்?கண்ணறியாமல் வானிற்கும் பங்கு போடுகிறாய் போலும்.இந்த வாரியூர் உனக்கு என்ன கெடுதல் செய்தது?நாற்பது வருடங்களாக செத்துச்செத்துப் பிழைக்கிறோம்.நாங்கள் பிறந்த மண்.கைகளால் துழாவி பிஞ்சு விரல்களின் நுனியில் நாங்கள் சுவைத்த மண்.கடலரிசியும்,காட்டுக்கீரையும்,சில நேரங்களில் தக்காளியும் விளைந்த மண்.பொம்மை மணமேடை கட்டி,பெண்ணென ஆணென குச்சிகள் நட்டு,பொம்மை மண்பானையில் சமைத்து, மண் இலைகளில் விருந்துண்ட சிறுவர்களை உனக்குப் பிடிக்கவில்லையா?
பாண்டியும், நண்டுப்பிடியும்  கடற்கரையில் நாங்கள் ஆடியது பெருங்குற்றமா?
படகேறிச்சென்று மீன்களோடும்,முகம் நிறையச் சிரிப்போடும் வரும் செபாஸ்டியன் அன்று நீ தின்ற தன் மணல் வீட்டைத் தேடி எப்படி ஓடினார்? சிப்பிகள் பொறுக்கி மாலை கோர்க்கும் க்ரிஸ்டினா அழுது கொண்டே உன்னைப் பார்த்துக் கொண்டு நின்றாளே, அப்பொழுது கூட உன் பசி தீரவில்லை. மனிதர்களை இழப்பது சோகம்,ஆனால், மண்ணை இழப்பது வாழ் நாள் முழுதும் பாரம். மனிதர்களால் தங்கள் வாழ் நிலத்தைப் பெயர்த்து எடுத்துச் செல்ல முடியுமானால், எவ்வளவு நன்றாக இருக்கும்?    நாற்றுப் படுகையிலிருந்து வயல் நடவிற்கு பயிர் தான் வரும், நிலம் வருமா கேட்டுச் சொல் அலையே!
முதுபெரும் ஊராம் இது.சிறு வணிகக் கப்பல்கள் வந்து போய் செழிப்பாக இருந்திருக்கிறது  ஒரு காலத்தில் என்று நீலாப்பாட்டி சொல்கிறார்.வெண் நுரை கட்டியம் சொல்ல நீலப் புடவை அணிந்து நீ அரசகுமாரியென எங்களை அணைக்க வருவாய்.நாங்கள் ஆவலாய் நிற்கையில் உன் மிடுக்கு குலைந்துவிட்டதென திரும்பிப் போவாய்.எங்களைப் பற்றி அலைச் செய்தியாக வானுக்கும் தெரிவித்திருப்பாய் போலிருக்கிறது.காற்றின் துணை கொண்டு நீ ஆடிய தாண்டவம் வான் வகுத்த வழி.தட்டோலைக் கூரைகளும்,மூங்கில்களும் முறிய மண் குழைத்துக் கட்டிய வீடுகளோடு நிலமும் அல்லவா காணாமல் போயிற்று?உள் வாங்குவாய் எனக் காத்திருப்போம்;நீயும் சிறிது நாள் அமைதியுறுவாய்.நாங்கள் நீந்திக் களிப்போம்; கட்டுமரங்கள் மீண்டும் கட்டப்படும்.புராதனக் கட்டடங்களின் எச்சம் எங்கள் இருப்பிடமாகும்.
கொட்டுமுழக்கும்,பறைமேளமும்,எங்கள் கடற் சங்குகளும் ஓங்கி ஒலிக்க மண்ணால் உன்னைச் செய்து நீலக் கொடிகளால் வனைந்த கைத் தொட்டிலில் கிடத்துவோம்.மிகப் பெரிய மீனை,உனக்கு படையலிடுவோம்.சவுக்கு மரத்தினை வெட்டிக் கிடத்தி உன் மேல் மிதக்கவிட்டு என்னென்வோ சொல்லிக் கூவுவோம்.பம்மிப்பம்மி உன் அலையோசை கேட்கும்.பிறகு நடுக்கடலின் அமைதியென நிலைக்கும்.நாங்கள் நம்பிக்கை கொண்டு திரும்புவோம்.
மீனும், சவுக்கும் உனக்கு எந்த மூலைக்கு?நீ சீறி எழுவாய்.உன் மீது குழந்தைகள் கட்டிக் கொண்டு விளயாடிய பொம்மைகள் மிதக்கும்;அவர்கள் உடல்களை எங்கோ கொண்டு சென்றிருப்பாய்.வெறிகொண்டு மண்சுவற்றைப் பிடித்தபடி பெரியவர்கள் போய் கரைந்திருப்பார்கள்.நீ ஒளிரும் நீலத்துடன்,வான் தேவதைகளின் பிரதிபலிப்புடன் ஒன்றும் அறியாதது போல் இருப்பாய். ஆனால் நீ எவ்வளவு தூரம் எங்கள் வசிப்பிடத்திற்குள் வந்திருக்கிறாய் என நாங்கள் விக்கித்துப் போவோம்.’
மேலும் சொல்வோம்.
மாவட்ட ஆட்சியர் நீலகேசி தன் எதிரே நின்றிருந்த அந்த இளைஞனைப் பார்த்தாள்.அடர் நீலவண்ண லுங்கியும்,அதே வண்ணத்தில் மேல்சட்டையும் அணிந்திருந்தான்.கண்கள் குழந்தைகளுடையதைப்போல் வியப்பில் விரிந்து பார்த்துக்கொண்டிருந்தன.இன்று காலை  அலுவலகப் படியில் அவள் ஏறிக்கொண்டிருக்கையில் திடீரென்று காலில் விழுந்தவன் அவன்.காவலர்கள் அவனை முறுக்கிப் பிடித்தனர்.அவன் திமிறாமல் நின்றதும், அவன் கண்கள் அவளையே பார்த்ததும் அவள் எங்கே மாற்றலாகிப் போனாலும் மறக்கக் கூடியதில்லை.அவனை முழுமையாக சோதனையிட்டு அவனிடம் ஆயுதங்கள் ஒன்றுமில்லை என்று உறுதி செய்த பிறகு அவனிடம் இருந்ததாக அவர்கள் சில காகிதங்களை மட்டும் அவளிடம் கொடுத்தனர்.அவனை கண்காணிப்பில் வைக்குமாறும் தன் கணக்கில் காலை உணவு தருமாறும், மதிய உணவு இடைவேளையில் இதைப் பற்றி பேசலாம் எனவும் அவள் சொன்னாள்.’காத்துக்காத்து நாளாச்சு;நாலு மணி ஒன்னுமில்ல’என்றான்;காவலர் அவன் வாயில் அடித்தனர்.துளிர்த்த குருதியை நாவால் சுழட்டி உள்ளிழுத்தவன்’    நல்ல ரத்தம் இங்கன விழக்கூடாதில்ல’ என்று சிரித்தான்.மீண்டும் அடிக்கப் போன காவலாளிகளைஅவள் எச்சரித்தாள்.’மதியம் வா’ என்று சொல்லிவிட்டு தன் வேலைகளில் மூழ்கிய அவளுக்கு மதிய உணவின் போதுதான் மீண்டும் நினைவு வந்தது.செயலாளர் சொன்னதைப் பொருட்படுத்தாமல் அவனை ‘செக்’ செய்து அனுப்பச் சொன்னாள்.
‘’உன் பேர் என்ன?”
‘முத்துராசு’
“எந்த ஊர்? என்ன விஷயம்?”
‘உங்க கைல உள்ள பேப்பர்ல எல்லாம் இருக்குதுங்க’
“இது கலெக்டர் ஆஃபீஸ். கதை போட்ற இடமில்ல”
‘எங்க உயிரு கதையாட்டம் தெரியுதாங்காட்டியும்?’
“இந்தப் பாரு.ஒழுங்கா ஊருபோய்ச் சேரு.இல்ல,சுருக்கமா விவரம் சொல்லு. எனக்கு நேரமில்ல”
‘அதாங்க,மச்சகன்னி எழுதிக் கொடுத்து உங்கள பாக்கச் சொல்லித்துங்க.எங்க ஊரை கடல் எடுத்துக்கிட்டே போகுது.நாங்கஉங்களுக்கு மனு கொடுத்துக் கொடுத்து கடலுக்கு காவு கொடுத்துக் கொடுத்து சலிச்சுட்டோங்க.எங்க மக்க குடியேறி பொழைக்க இடம் வேணுங்க;வேல செய்ய,மத்த குடி மாரி வாழ வழி வேணுங்க’
“யார் அந்த மச்சக்கன்னி?பெடிஷனுக்கு பதிலா கதை எழுதியிருக்கா?இப்படியெல்லாம் செஞ்சா யாரும் உதவ மாட்டாங்க”
‘இல்லீங்க.உங்களுக்கு இப்படியே படிச்சு பளக்கங்களா அதான்,ரோசிச்சு ரோசிச்சு  எழுதிச்சுங்க.இன்னிய நா மட்டு ஒன்னும் நடக்கலீங்க.அதான்.’
“சரிய்யா, வெளியில உக்காரு. நான் ஃபைல பாத்துட்டு சொல்றேன்”
‘அம்மா, அரசாண கூட இருக்குதும்மா’
“நாந்தான் பாக்கறேங்கறேனே,சும்மா பேசிட்டே இருக்காதே.மச்சக்கன்னி யாரு? படிச்சவ மாரி எழுதியிருக்கா”
‘அம்மா, அவள நீங்க பாக்கத்தானே போறீங்க’
அவள் அந்த வாரியூர் போகப்போகிறாள் என்றவுடன் அந்த அரசாணை தேடப்பட்டது.கண்ணீரில் எழுதிய உளுத்துப் போன மனுக்கள் திரட்டி அடுக்கப்பட்டன.கிராம நிர்வாக அலுவலர்,வருவாய்த்துறை அதிகாரி,மண்டல இயக்குனர் அலுவலக ஆணையர் யாருக்கும் எதுவும் முழுமையாகத் தெரியவில்லை. யாருடைய எல்லை என்பதில் காவல் நிலையங்களுக்குள் சச்சரவு வந்தாலும் கலக்டரே போகிறார் என்பதால் உடன் வந்தார்கள்.மைய நகரத்தின் தென் கிழக்கு மூலையில் இருந்த வாரியூர் இவர்களின் வரைபடங்களில் கிழக்கே வரையப்பட்டு அப்படி ஒரு ஊரே இல்லை என்று பி டபில்யூ டி,கிராமப் புனரமைப்புத் துறை பதிவு செய்திருந்தது. காரணம் மிக எளிமையானது-வரும்படியும் வாக்குகளும் சொல்லும்படி இல்லையே!முத்துராசு அவளுடன் வருவதை தடுக்க அவர்கள் மிகவும் முயன்றனர்.அவள் செயலாளர் வானிலை ஆய்வு மண்டலத்தைத் தொடர்பு கொண்டு கடற்சீற்றம் இரு நாட்களுக்கு இருக்காது எனத் தானாகவே கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டார்.
‘உங்க காரெல்லாம் போகாதுங்க;ஜீப்ல வாங்க அப்பைக்கும் ரண்டு கல்லு நடக்கணும்’
‘மேம்,நாங்க பாத்துவரோம்.நீங்க வர வேணாம்’
“இல்ல, பரவால்ல, உங்களுக்கு நாப்பது வருஷமா நேரமில்ல இப்பக்கூட நீங்க வரணும்கறது ஒன்னும் அவசியமில்ல. நா போகத்தான் போறேன்”
அவரவர்கள் பயந்து கொண்டு கிடைத்த வாகனங்களில் ஏற அவளும், முத்துராசுவும், அவள் செயலரும் ஜீப்பில்  போனார்கள்.
‘‘சுனாமியைப் போலவா வருகிறது?” என்று கேட்டாள் அவள். ‘அப்படித்தாங்க தோணுது; ஆனாக்க,அது எப்பவோ நடப்பதுங்க, இது கரம் வெச்சுக்கிட்டு கடலு மண்ண, மக்கள திங்குறமாரி இருக்குங்க; கடலு கர மீறி மீறி உள்ள வரதுங்க.மச்சக்கன்னி சொல்லுது-எங்கனயோ பெரிய கடலுக்குள்ள சுழல் அழுத்தங்க வரதாம்-அது விஞ்சி விஞ்சி எங்க நிலத்தை அறஞ்சு அடிச்சு இழுக்குதாம்.அதுக்குக்கூட உங்க மாரி ஆளுங்க தான் காரணமாம், உங்க சொகத்துக்காக காத்துல ஓட்டஓட்டையா போட்டு வெப்பத்தை அதிகமாக்கிட்டீங்களாம்.அது சொன்னா சரியா இருக்குமுங்க. அதுதாங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கு.’நாங்க அதயாவது வெளில போயி புழச்சிக்கிட,எங்க தலயாணப் படி இருக்கோம்’ணு சொன்னா ‘உன்ன வுட்டு, ஊர விட்டு போமாட்டேங்குது.நமக்கு நம்மூருக்கு வடகிழக்கால நிலம் ஒதுக்கியிருக்காங்க,அதுல நம்ம குடியேத்தற வர நா போமாட்டேன்’அப்படின்னு கதைக்குதுங்க.’
சிற்சில இடங்களில் நெடுந்தாள்கள் ஆடிய கடலரிசிப் பயிர்களையும் பசலைக்கொடி போன்ற கீரைகளையும்,மணல் திட்டுக்களையும், மேடுகளையும், குட்டி மண்சுவர்களையும்,தனியே ஏதோ சொல்வது போல் நின்ற ஒற்றைப் பனையையும்,தங்கள் அனைவரையும் பார்த்தவுடன் ஓடிவரும் வெள்ளந்தி மக்களையும் பார்த்த நீலகேசி இனம் புரியாத உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டாள்.கடலில் இறங்கப் போவதற்கு முன் சூரியன் வானில் மஞ்சளென,செம்மையென வண்ணம் தீட்டினான்.அவன் எஞ்ச விட்டிருந்த நீர்த்த குருதி ஒளியில் சிவப்புக்கல் மூக்குத்தி அணிந்து வானையும், நிலத்தையும் அளக்கும் விழிகளுடன் நின்ற மச்சக்கன்னியைப் பார்த்தாள் நீலகேசி.அவளை மச்சக்கண்ணி என்றல்லவா சொல்ல வேண்டும் என எண்ணிணாள்.அவள் தயக்கம் காட்டாமல் ஓடிவந்து முத்துராசுவை அணைத்துக்கொண்ட போது தன் விழிகளில் நீர் ஏன் திரள்கிறது என அந்த மாவட்ட ஆட்சியருக்குப் புரியவில்லை, ஆனால்,அந்த அன்பின் கனம் பாரமாக நெகிழ்த்தியது.
மச்சக்கன்னி அருகே வந்து வணங்கினாள்; மற்றொரு காகிதத்தை அளித்தாள்.
அலைபேசியின் மின்னல் ஒளியில் நீலகேசி அதைப் படித்தாள்.
‘எங்கள் பண்பின் காரணமாக நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்கிறோம், நீங்கள் கடமையைத்தான் செய்கிறீர்கள் என்றாலும்.கடல் உண்ணாமல் விடப்பட்டிருக்கும் எச்சங்கள் நாங்கள் என உங்களுக்குப் புரிந்திருக்கும்;நாங்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு இங்கிருந்து செல்லத்தான் வேண்டும், ஆனால், அந்த மோகூரில் ஒன்றுமில்லை.நிலத்தைப் பண்படுத்தவும்,பொதுக்கிணறு தோண்டவும்,எங்களை நூறு நாள் வேலைத்திட்டத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.வரகூரிலிருந்து மின்சாரம் நீங்கள் தருவிக்க வேண்டும்.அவ்வூரின் பெரும் ஏரியிலிருந்து ஒரு வாய்க்கால் வெட்டித் தரவேண்டும்.150 சதுர அடியில் 100 வீடுகள், பயோ கழிப்பறைகள், புதர் மண்ணில் செழிப்பு வர ஆட்டுப்பட்டியும், மாட்டுப்பட்டியும் ஊருக்கு பொதுவாக வேண்டும்.நாங்கள் மீன் உண்டு பழகியவர்கள்;பாலை விற்று மீன்கள் வாங்கிக் கொள்வோம்.பொதுக்கிணறிலும், வாய்க்காலிலும் மீன்களை வளர்த்துக் கொள்வோம்.சிறுவர்களுக்கு நான் படிப்பும், முத்துராசு விளையாட்டும் சொல்லித்தருவோம்.நாங்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களே.’
“உனக்கு இப்படியெல்லாம் எழுத எப்படித் தோன்றிற்று?”
‘வேறு வழியில உங்களக் கூப்டமுடியலம்மா’
“எல்லாத்தையும் யோசிச்சிருக்கே;இவங்கள கூட்டிக்கிட்டு மோகூர் போயிருக்கலாமில்ல?”
‘அம்மா,பொட்டலாக் கிடக்குது ஊரு.பாடுபட ஆளிருக்கு,பணத்துக்கு எங்க போவ நாங்க?’
பேசிக்கொண்டு இருக்கையிலேயே கடலின் ஓலம் கேட்டது.எழும்பி மேலெழும்பி உயிர் குடிக்கும் வேட்கையுடன் சினந்து சீறி வந்த கடல்.நீலகேசியை அந்தக் காட்சி பேரச்சமென,பெருந்தரிசனமென மருட்டியது.அவளை அலாக்காகத் தூக்கிக் கொண்டு பெரு மேட்டை நோக்கி முத்துராசு ஓடினான்.அனைவரும் தெறித்துஓடினர். கொத்தாகக் குழந்தைகள அள்ளிய மச்சக்கன்னி தன்பலம் கொண்டமட்டும் அவர்களை மேட்டை நோக்கி வீசினாள்.அவள் கால்களைப் பற்றிய கடல்,உடல் முழுதையும் கேட்டது.முத்துராசு ‘கன்னி’ என்று கூவிக்கொண்டு கடலை நோக்கி உருண்டான்.
மோகூரில் குடியேற்றம் நடந்தது-சில ஓலைக் குடிசைகள், சிறு ஆழ்துளைக்கிணறு,அது கக்கும், உப்பு நீர்.நீலகேசி மாற்றப்பட்டாள்-முன்னடவடிக்கை எதுவும் எடுக்காமல் வாரியூர் சென்று இரு உயிர்களை அவள் பலி கொடுத்துவிட்டாள் என்று.தன் விண்மீன் கூட்டங்களை விட்டுவிட்டு சோகத்துடன் தனித்துவந்த நிலா மச்சக்கன்னியையும், முத்துராசுவையும் பார்த்துவிடக் கூடுமா என்று அலைந்தது.கடலின்மடியில் துயிலும் அவர்களுக்கு மோகூர் என்ன, வாரியூர் என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.