அத்தியாயம் – 22
சபாபதி வீட்டை விட்டுத் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். அந்தப் பசு மாடு இன்னும் அந்த இடத்திலேயே ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தது. ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரன் ‘ஓரம், ஓரம்’ என்று சத்தம் போட்டுக் கொண்டே போனான். அவன் இத்தனை நாட்களும் பெரிதாக நம்பியிருந்ததைச் சபாபதி ஒன்றும் இல்லாமலாக்கி விட்டார். இனி என்ன செய்வது. யோசித்துக் கொண்டே மேலக் கோபுர வாசல் தெரு முனைக்கு வந்தான். இடது புறம் திரும்பி நடந்தான். இசையகம் கடை திறந்திருந்தது. இசைத்தட்டுக்கள் விற்பனை செய்கிற கடை அது. மூன்று பேர் கடைக்குள் இசைத் தட்டுக்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். சினிமா பாடல் இசைத் தட்டுக்களுடன், கர்நாடக இசைத் தட்டுக்களும் விற்பனைக்கு இருந்தன. சோமுவும் இசையகத்திற்குள் நுழைந்தான். இசைத்தட்டுக்களை வாங்குகிற எண்ணமே இல்லை. ஆனால் என்ன செய்வது என்று தெரியாத தத்தளிப்பில் அதனுள் நுழைந்தான்.
டி. எம். சௌந்திரராஜன் பாடிய இசைத் தட்டை ஒருவர் ஓட விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். கண்ணாடிக் கதவு இருந்தது. அதனால் வெளிச் சத்தமே கடைக்குள் கேட்கவில்லை. “என்ன சார் வேணும்?” என்று கடைப்பையன் கேட்டான். “இல்லை …சும்மா பாக்கத்தான் வந்தேன்..” என்று சொன்னான். அதற்குள் அந்தப் பாடல் நிறுத்தப்பட்டு வேறொரு பாடல் ஓட விடப்பட்டது. மனம் எதிலும் ஒட்டவில்லை. கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு தெருவில் இறங்கினான். எங்கிருந்தோ ஊதுபத்தியின் மணம் வந்தது. எதிர்த்த ஃபண்ட் ஆபீஸ் வாட்ச்மேன் பத்துமணியைக் குறிக்க, காம்பவுண்டுச் சுவரை ஒட்டித் தொங்கவிடப்பட்டிருந்த பெரிய வெங்கலச் சேகண்டியை மரச் சுத்தியலால் தட்ட ஆரம்பித்து விட்டான். இனி என்ன எல்லாம்தான் முடிந்து விட்டதே. பேசாமல் அப்பாவையும், அண்ணனையும் போல் கடையில் போய் உட்கார வேண்டியதுதான். அப்பா, மீனா, கூத்தியார் குண்டு மாமா எல்லாரும் இதைத்தானே விரும்புகிறார்கள்? அப்பவுடனும் அண்ணனுடனும் சேர்ந்து கடையைக் கவனித்துக் கொள்வதில் என்ன தவறு? அது குடும்பத் தொழில். குறிப்பாக மீனா ரொம்பச் சந்தோஷப்படுவாள்.
ஆவணி மூல வீதி முனையில் தி.மு.க. வின் சுவரொட்டி ஒட்டியிருந்தது. மதுரை முத்து தலைமையில் திலகர் திடலில் பொதுக் கூட்டம். அமைச்சர் செ. மாதவன் பேசுகிறார். சிவகங்கை சேதுராசனின் கச்சேரியும் இருந்தது. அந்தச் சுவரொட்டியைப் படித்ததும் மீண்டும் அரசியல் ஞாபகம் வந்தது. தி.மு.க. வில் சேர முடியுமா? தி.மு.க. ஆளும் கட்சி. தி.மு.க. வில் சேர்ந்து என்ன செய்வது? தி.மு.க.வை நம்பி ஓட்டளித்த மக்களுக்கு அந்தக் கட்சி என்ன செய்து விட்டது? காங்கிரஸ் ஆட்சியின் தொடர்ச்சியாகத்தானே தி.மு.க. வும் ஆட்சி செய்கிறது. வர்க்கமில்லாத சமுதாயம் அமையவில்லையே. ஆனால் ரஷ்யாவிலும், சைனாவிலும் கூட வர்க்க பேதம் ஒழியவில்லை என்கிறாரே சபாபதி. ஒரு வேளை அது வெறும் மாயையோ? எந்தச் சமுதாயமாக இருந்தாலும், ஒருத்தனுக்கு மேலே ஒருத்தன் என்று அதிகாரம் செய்கிறவன் இருக்கத்தானே செய்வான்? நாம் இத்தனை நாளும் நம்பி, மார்க்சியத்தின் பின்னே அலைந்தது வெறும் கானல் நீரைத் தேடி அலைந்தது போலத்தானா?
நாகப்பட்டிணம் ஒரிஜினல் மிட்டாய் கடையைத் தாண்டி நடந்தான். வரிசையாக லாட்ஜ்கள் இருந்தன. சங்கீத வினாயகர் கோவிலுக்குப் பின்னாலுள்ள டீக்கடையில் டீயும் வடையும் நன்றாக இருக்கும். அந்தக் கடையில் எப்போதும் கூட்டம்தான். இரண்டு ஆம வடை வாங்கினான். மொறு மொறுவென்று இருந்தது. வடையைச் சாப்பிட்டு விட்டு டீயும் குடித்தான். காசைக் கொடுத்து விட்டுத் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சங்கீத வினாயகர் கோவிலுக்குப் பின்னால் நின்ற அரச மரம் காற்றில் சலசலத்தது. அரச இலைகளுக்கென்று ஒரு சத்தம் இருக்கிறது. அந்தச் சத்தம் மென்மையாகக் காதுக்குள் புகுந்தது. அந்த மரத்துக்கு எத்தனை வயதிருக்கும்? அதற்கு உலகில் எந்த எதிர்பார்ப்புமில்லை. எந்தக் குழப்பமுமில்லை.
இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன் கடையில் பேப்பர் பண்டல்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு வயசாளி பிளாட்பாரத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். கடை ஆள் ஒருத்தர், இறங்குகிற பேப்பர் பண்டல்களை பிளாட்பாரத்தின் மீது நின்று சரி பார்த்துக் கொண்டிருந்தார். பண்டல்களை இரண்டு பேர் லாரியிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த கருப்பு பனியன் வியர்வையில் உடம்போடு ஒட்டிக் கிடந்தது. அவ்வளவு பண்டல்களையும் இறக்க எவ்வளவு நேரமாகுமோ தெரியவில்லை.
இம்பீரியல் தியேட்டர் முன்னால், பாயின் ஜிகர்தண்டா கடை இருக்கிறது. வடையும், டீயும் குடித்து வயிற்றை நிரப்பியிராவிட்டால், பாயின் கடையில் ஜிகர்தண்டா வாங்கிக் குடிக்கலாம். பாயுடைய கை விரல்கள் எப்போதும் தோல் உரிந்தே இருக்கும். புது மண்டபத்துக்குள் இறங்கி நடந்தான். வரிசையாக நோட்டுப் புத்தகம் விற்கிற கடைகள். நடுமண்டபம் பூராவும் தையல்காரர்களால் நிரம்பியிருந்தது. நோட்டுப் புத்தகக் கடைகளினூடே சென்றபோது வெயிலின் வெக்கையே தெரியவில்லை. புது மண்டபமே எப்போதும் குளிர்ச்சியாகத்தான் இருக்கும். நடந்து செல்லும்போது, தையல் மிஷின்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. தையல் மிஷின்கள் ஓடுகிற சத்தம் இல்லாவிட்டால் புதுமண்டபமே களையிழந்து விடும். புது மண்டபத்தை விட்டு வெளியே வந்து ஏழு கடல் தெருவைப் பார்க்க நடந்தான்.
கடையில் சுப்பிரமணிய பிள்ளை கல்லாவில் அமர்ந்திருந்தார். குற்றாலம் கவுண்டரில் உட்கார்ந்திருந்தார். தெட்சிணா இரண்டு பெண்களிடம் சேலைகளை எடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்தான். கிட்டு மாமாவும், ரங்கராஜனும் பிரித்துப் போட்டிருந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தனர். சோமு கடைக்குள் ஏறியதைப் பார்த்ததும் சுப்பிரமணியப் பிள்ளைக்கு ஆச்சரியமாக இருந்தது. சோமுவே கவுண்டருக்குள் ஏறி நின்று கொண்டான். சுப்பிரமணியப் பிள்ளை மீனாட்சி சுந்தரேஸ்வரரையும், அம்மனையும் மனதுக்குள் நினைத்துக் கொண்டார். கடவுள்தான் சோமுவுக்கு நல்ல புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்று அவர் நினைத்தார்.
சோமு ஒழுங்காகக் கடைக்குப் போக ஆரம்பித்து ஒரு வாரத்துக்கு மேலாகி விட்டது. சீதா பவனமே சந்தோஷப்பட்டது. மீனா இந்த விஷயத்தை கூத்தியார் குண்டுவுக்குப் போன் போட்டு அப்பாவிடம் சொன்னாள். மறுநாள் காலை லெட்சுமண பிள்ளை தன் மருமகன் சோமுவிடம் வெகுநேரம் பேசினார். சோமுவே துரைப்பாண்டிக்குப் போன் செய்து தான் இனிமேல் எதிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதைத் தெரிவித்தான். துரைப்பாண்டிக்கு அந்தப் பிச்சாண்டியை அப்புறம் பார்க்கவே முடியாத ஆச்சரியத்தை விட, சோமு விலகிச் சென்றதுதான் நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. துரைப்பாண்டிக்கு எதுவும் புரியவில்லை.
மறுநாள் காலை சோமு வழக்கம்போல் அப்பாவுடனும், அண்ணனுடனும் கடைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது, துரைப்பாண்டியிடமிருந்து போன் வந்தது. அப்பாவையும், அண்ணனையும் புறப்படுமாறு சொல்லி விட்டு, ‘இந்த போனைப் பேசிவிட்டு கடைக்கு வந்து விடுகிறேன்,’ என்றான் சோமு.
“என்ன சோமு இந்த மாதிரிப் பண்ணிட்டே?…” என்று கேட்டான் துரைப் பாண்டி.
“இதெல்லாம் வேண்டாம்ன்னு சபாபதி சொன்னார். ஒங்கிட்டேயும் சொல்லச் சொன்னார்…” என்றான் சோமு.
“சபாபதியா சொன்னாரு?.”
“ஆமா… சாரு மஜும்தார் சொல்றதிலே எனக்கு நம்பிக்கை விட்டுப் போச்சு. மார்க்ஸிசத்து மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லை. அதெல்லாம் நடக்காத காரியம்..”
“சபாபதியோட மிடில் கிளாஸ் வர்க்கக் கண்ணோட்டம் சரியில்லே. அவர் ஒன்னைப் பிரெய்ன் வாஷ் பண்ணியிருக்காரு சோமு.”
“அவரும் இப்படித்தான் என்னைச் சொன்னாரு. நாம எல்லாரும் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கோம்னு சொல்றாரு.”
“இதெல்லாம் நம்மளோட வர்க்க குணம். ஆனால், அதையெல்லாம் மீறி நிலப் பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும் தூக்கி எறியணும். இது காலத்தோட கட்டாயம். நாம இதைச் செய்யலைன்னாலும் வேற யாராவது வந்து செய்யத்தான் போறாங்க… மார்க்ஸையும், லெனினையும் படிச்ச நீ இப்பிடிப் பின் வாங்கக் கூடாது,” என்றான் துரைப்பாண்டி.
ரஷ்யாவிலேயும், சீனாவிலேயும் என்ன நடக்கிறது என்று சொன்னதை எல்லாம் அவனிடம் சொன்னான். “அதையெல்லாம் நீ நம்புறியா சோமு? இதெல்லாம் முதலாளித்துவத்தின் பிரசாரம். அவர் முதலாளித்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிறாரு. நாம புரட்சிகரவாதிங்க. இதை எல்லாம் நாம் எதிர்த்துதான் நிக்கணும் சோமு…”
“நீ என்ன வேணும்னாலும் சொல்லு. எனக்கு இதெல்லாம் ஒத்து வராது. நான் வரலை..” என்று ஒரேயடியாகச் சொல்லி விட்டான் சோமு. அதற்குப் பிறகு துரைப்பாண்டியிடமிருந்து போனே வரவில்லை. அன்று சோமு துரைப்பாண்டியிடம் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த மீனா, அவன் பேசி முடித்ததும், “யார் கிட்டப் பேசினீங்க?…” என்று கேட்டாள். புருஷனின் மனதை எங்கே கலைத்து விடுவார்களோ என்று அவளுக்குப் பயம்.
“ஒனக்கு எதுக்கு அதெல்லாம்?.. தெரிஞ்ச பையன் தான்..”
“கண்ட கண்ட ஆட்களுக்கும் எதுக்கு நம்பரைக் குடுக்கீங்க?…”
”அவன் ஒண்ணும் கண்ட ஆளு இல்ல, அதான் தெரிஞ்சவன்னு சொல்லுதேன்லா. ஒனக்கு எதுக்கு இதெல்லாம்? .. சரி.. நான் கடைக்குப் பொறப்படுதேன்.. அம்மா போயிட்டு வாரேம்மா… “ என்று ஓங்கிக் குரல் கொடுத்துச் சொல்லி விட்டுப் புறப்பட்டான். கடைக்குப் புறப்பட்ட சோமுவைப் பார்த்து நடை வாசலில் உட்கார்ந்திருந்த சரோஜா சிரித்தாள். செல்லமாக அவள் தலையில் தட்டி விட்டுப் போனான் சோமு. மீனா அவன் போவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். ஏதோ ஒரு இனம் புரியாத பயம் அவளுக்குள் இருந்து கொண்டே இருந்தது.
அத்தியாயம் -23
இது நடந்து ஒரு பத்து நாளிருக்கும். சோமு அப்பா, அண்ணனுடன் தினசரி கடைக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். ஒரு நாள் அதிகாலை நாலரை மணிக்கு சீதா பவனத்திற்கு எதிரே போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. ராஜி வழக்கம் போல அத்தையுடன் எழுந்து புறவாசலில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். சீதா, காபி போடுவதற்காக அடுப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தாள். முன்வாசல் பெரிய கதவு திறந்தே இருந்தது. அழிக் கதவு மட்டும் சாத்தியிருந்தது. வீட்டில் சீதாவையும், ராஜியையும் தவிர வேறு யாரும் எழுந்திருக்கவில்லை. ஒரு போலிஸ்காரர் அழிக்கதவைப் பலமாகத் தட்டினார். அவர் மஃப்டியில் இருந்தார். யாரோ கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டு அடுக்களையிலிருந்து சீதா எட்டிப் பார்த்தாள். “சோமு இருக்கானா?..” என்று அவர் சத்தமாகக் கேட்டார். வேகமாக வாசல் பக்கம் வந்தாள் சீதா. கதவைத் திறக்காமலேயே “யாரு நீங்க?…” என்று கேட்டாள். “இது சோமு வீடுதானே?”
“ஆமா… என்ன வேணும்?” “அவனை விசாரிக்கணும். அவனை வரச் சொல்லுங்க.”
வந்தவர் உயரமாக, வாட்ட சாட்டமாக இருந்தார். “என்ன விசாரிக்கணும்?….” என்று கேட்டாள்.
“ஏம்மா, வீட்டுல அவன் இருக்கான்ல… அவனை வரச் சொல்லும்மா…”
சீதாவுக்கு உடல் நடுங்கிற்று. மச்சுப் படியேறி, அங்கே படுத்திருந்த புருஷனை எழுப்பினாள் சீதா. “யாரோ ஒசரமா ஒரு ஆளு வந்து சோமைக் கேக்காரு. எந்திரியுங்க…” என்று பதறினாள். “யார் அது?” என்று சொல்லிக் கொண்டே எழுந்தார் சுப்பிரமணிய பிள்ளை. அதற்குள், ஏதோ சத்தம் கேட்கிறதே என்று ராஜியும் வாசல் பக்கம் வந்து விட்டாள்.
படியிறங்கி வந்த சுப்பிரமணிய பிள்ளை வாசலுக்கு வந்தார். தூக்கச் சடவு இன்னும் போகவில்லை. “நீங்க யாரு? என்ன வேணும்?…” என்று அவரிடம் கேட்டார் சுப்பிரமணிய பிள்ளை.
“யாருய்யா இது? ஆள் ஆளுக்கு வந்து கேட்டுக்கிட்டு இருக்கீங்க? சோமை அனுப்பி வையி…” தன்னை மரியாதை இல்லாமல் ஒருமையில் அழைத்ததும் சுப்பிரமணிய பிள்ளைக்குக் கோபம் வந்து விட்டது. “என்ன மரியாதை இல்லாமே பேசுதே… யாருய்யா நீ?” என்று அவரும் ஒருமையில் பேசினார்.
“சோமு யாரு… ஒன் மகனா?..”
“ஆமா?”
“அவனை விசாரிக்கணும். இன்ஸ்பெக்டர் அய்யா கூட்டிட்டு வரச் சொன்னாரு..”
“விசாரணைக்கு நேரங்காலம் இல்லியா? எந்த போலீஸ் ஸ்டேஷன்?..”
“அதெல்லாம் ஒனக்கு எதுக்குய்யா? ஆள அனுப்பு… “ என்றார் அந்தப் போலீஸ்காரர். அதற்குள் இன்னொரு போலீஸ்காரர் வந்தார். அவர் கோபமாகப் பேசிக் கொண்டிருந்த சுப்பிரமணிய பிள்ளையிடம், “ஒரு விசாரணைக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வந்து விட்டுருவோம்…” என்றார் அவர்.
“எந்தப் போலீஸ் ஸ்டேஷன்னு கேட்டா சொல்ல மாட்டேங்கிறீங்க?”
“திலகர் திடல் போலீஸ் ஸ்டேஷன்…”
“சரி … நானே அப்புறமா அவனை அங்க அனுப்பி வைக்கிறேன். “
“அதெல்லாம் முடியாது. இப்பமே வேணும். ..”
அவர்களிடம் பேசிப் பிரயோஜனமில்லை என்று அவருக்குப் பட்டது. அதற்குள் சீதாவே சோமுவை எழுப்பி விட்டாள்.
சோமு மீனாவும் தூக்கக் கலக்கத்துடன் வந்தனர்.
“விசாரணைன்னா, என்ன விசாரணை, எதுக்கு, என்ன ஏதுன்னு ஒண்ணும் சொல்லாம கூப்புட்டா என்ன நியாயம்?…” என்று கேட்டார் சுப்பிரமணிய பிள்ளை.
“அதெல்லாம் ஒனக்கு எதுக்கு? அனாவசியமாப் பேசாதே… இவன் தான் சோமுவா?…” என்று அங்கே வந்து நின்ற சோமுவைப் பார்த்துக் கேட்டார் அந்தப் போலீஸ்காரர். சோமுவே, “ஆமா, நான் தான் சோமு…” என்றான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “வா… ஸ்டேஷனுக்கு வா… உன்னை விசாரிக்கணும்…”
“விசாரணையா?…” என்றான்.
“அதைத்தான்டா நானும் கேட்டுக்கிட்டு இருக்கேன். .. மரியாதை இல்லாமேப் பேசுதாங்கடா…” என்றார் சுப்பிரமணிய பிள்ளை.
சோமுவைக் கையைப் பிடித்து இழுத்தார். குடியிருக்கிறவர்கள் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்து பார்த்தார்கள். சோமு சொன்னதெல்லாம் எடுபடவில்லை. வெறும் வேட்டியுடன் இருந்தான். “சட்டை போட்டுட்டு வாரேன்…” என்றான். “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… இப்பிடியே வா…” என்று அவனைப் பிடித்து முன்னே தள்ளினார்.
“ஏன் இப்படி இழுக்கிறீங்க? அவனுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா உங்களைச் சும்மா விட மாட்டேன்…” என்று சொல்லிக் கொண்டே அவர்களின் பின்னால் போனார் சுப்பிரமணிய பிள்ளை. சீதாவும், மீனாவும் அழுதார்கள். ராஜி அத்தையின் தோளைப் பிடித்துக் கொண்டு நின்றாள். சீதா பவனமே மிரண்டு போய் நின்றது.
ஜீப் அவனை ஏற்றிக் கொண்டு ஊரை விட்டு எங்கோ வெளியே சென்றது. ஒரு அரை மணி நேரத்துக்குப் பிறகு ஒரு கட்டிடத்தின் முன்னால் போய் நின்றது. பொழுது மங்கலாக விடிந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார்கள். ஒரே ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. எந்த ஊர், எந்த இடம் என்று நிதானிக்க முயன்றான். “போயி அவனுகளோட உக்காரு…” என்று கையை நீட்டிச் சொன்னார். அவர் கையை நீட்டிய இடத்தில் நாலைந்து பேர் இருப்பது மங்கலாகத் தெரிந்தது.. “வா.. சோமு..” என்ற துரைப்பாண்டியின் குரல் கேட்டது. ஒரு வித ஆச்சரியத்துடன் அவர்கள் இருந்த பக்கம் போனான். ஸ்டடி சர்க்கிளுக்கு வருகிறவர்களெல்லாம் இருந்தனர். எல்லாருமே வெறும் ஜட்டி, அண்டர்வேருடன் இருந்தார்கள். “நீயும் உன் வேட்டிய அவுருடா..” என்றார் போலீஸ்காரர். சோமு அவமானத்தால் கூனிக் குறுகினான். வேட்டியை அவிழ்க்காமல் தயங்கினான். அவரே அவன் இடுப்பிலிருந்த வேட்டியை உருவினார். சோமுவுக்கு அழுகை வந்து விட்டது. முகத்தை இரு கைகளால் மூடிக் கொண்டான். துரைப் பாண்டியும் இன்னும் இரண்டு பேரும் “சாரு மஜும்தார் வாழ்க… மாவோ வாழ்க…” என்று கத்தினார்கள். போலீஸ்காரர் அவர்களைக் காலால் உதைத்தார். திரும்பவும் கோஷம் போட்டார்கள். மூலையில் சாத்தி வைத்திருந்த கம்பை எடுத்து அடித்தார். சோமுவின் கழுத்திலும் அடி விழுந்தது. வலித்தது.
சாரு மஜூம்தார் கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் கைது நடவடிக்கைகள் நடந்தன. அப்புவும், அவரது நண்பர்களும் கோயமுத்தூர், தர்மபுரி பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் அஜிதா, அவளது தந்தை குன்னிக்கல் நாராயணன், அம்மா மந்தாகினி எல்லாரும் கைதாகினர். நாள் கணக்காக போலீஸ் கஸ்டடியில் இருந்தனர்.
சோமுவை போலீஸ் அழைத்துக் கொண்டு போன அன்று சுப்பிரமணிய பிள்ளையும், பெரியவன் குற்றாலமும் திலகர் திடல் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்கள். அங்கே சோமு இல்லை. டூட்டியில் இருந்த எஸ். ஐ. அந்த வழக்குக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றார். எஸ்.பி. ஐப் போய்ப் பாருங்க என்றார். வக்கீல் சங்கர சுப்புவை அழைத்துக் கொண்டு தல்லா குளம் போனார்கள். பத்து மணிக்கு மேல்தான் அதிகாரிகளைப் பார்க்க முடியும் என்றார்கள். “அப்பா நீங்க கடைக்குப் போங்க. நானும் வக்கீலும் பார்த்துக்கிடுதோம்…” என்று குற்றாலம் சுப்பிரமணிய பிள்ளையை அனுப்பி வைத்தார்.
உயர் அதிகாரி “கோர்ட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. அங்க போயிப் பாருங்க…” என்றார். பனிரெண்டு மணிக்கு மேல் சோமுவையும் மற்றப் பையன்களையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார்கள். அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் கூட வந்திருந்தனர். எல்லோருக்கும் இடுப்பில் மட்டும் துணி இருந்தது. மேலே எதுவும் இல்லை. ஒரு வாரம் போலிஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க மாஜிஸ்ட்ரேட் அனுமதித்தார். குற்றாலம் ரொம்பச் சாது. கண்ணீர் விட்டு அழுதான். வக்கீல்தான் அவனைத் தேற்றினார். எப்படியோ ஒரு சட்டையை மட்டும் சோமுவிடம் கொடுக்க முடிந்தது. வாங்கி வைத்திருந்த இட்லியைத் தர முடியவில்லை. வேனில் ஏற்றும்போது பையன்கள் கோஷம் போட்டார்கள். சோமு போலீஸ்காரர்கள் அவர்களை எங்கே கொண்டு போய் விசாரிப்பார்கள் என்பதைச் சொல்ல மறுத்து விட்டனர்.
கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், இந்திய ராணுவத்திற்கு எதிராகச் சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சோமு விசாரணை அதிகாரியிடம், தான் விபரம் தெரியாமல் அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டதாகவும், தனக்கு அவர்களுடைய கொள்கைகளில் இப்போது நம்பிக்கை இல்லை என்றும் சொன்னான். துரைப்பாண்டியைத் தவிர, மற்றப் பையன்கள் போலீஸுக்குப் பயந்து பின் வாங்கி விட்டனர். துரைப் பாண்டி மட்டும் ‘சாரு மஜும்தார் தான் என் தலைவர்,’ என்று சொன்னான். ஒரு வாரத்திற்குப் பிறகு சோமு உள்பட எல்லாரிடமும், ‘இனிமேல் அரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டம் போட மாட்டோம். புரட்சியைப் பற்றிப் பேச மாட்டோம்,’ என்று எழுதி வாங்கிக் கொண்டு வெளியே விட்டனர். துரைப் பாண்டி, எழுதித் தர முடியாது என்று சொல்லி விட்டான். அவன் மீது அரசு வழக்குத் தொடுத்தது.
சோமுவை விடுவித்து விட்டனர். அவன் வீட்டுக்கு வந்த பிறகு சபாபதி ஒருநாள் அவனை வந்து பார்த்தார். “ஏதோ இந்த மட்டோட விட்டாங்களே,” என்றார். சோமு வழக்கம்போலக் கடைக்குச் செல்ல ஆரம்பித்தான். அதற்குப் பிறகு சீதா பவனத்தில் எவ்வளவோ நடந்து விட்டன.
இப்போது 2018. சோமுவுக்கு 77 வயதாகி விட்டது. செண்பக் குற்றாலத்துக்கும் 80 வயதாகி விட்டது. சுப்ரமணியப் பிள்ளையும், சீதாவும் இறந்து விட்டார்கள். அண்ணன், தம்பி இரண்டு பேரும் ஒரே குடும்பமாகத்தான் சீதா பவனத்தில் இன்னமும் இருக்கிறார்கள். கடையை விரிவுபடுத்தி விட்டார்கள். செண்பகக் குற்றாலத்துக்கு ஒரு பெண்ணும், ஆணும். மூத்த பெண்ணை திருச்செந்தூர் பக்கம் ஆறுமுக நேரியில் கட்டிக் கொடுத்திருக்கிறது. அடுத்தவனுக்குக் குற்றாலம், அப்பாவுடைய பேரைத்தான் விட்டிருந்தான். அவனும் சோமுவுடைய மகன் சீதாராமனும் சேர்ந்துதான் வியாபாரத்தைக் கவனித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகளும் பிறந்து விட்டன.
கோபால் பிள்ளை, சபாபதி எல்லாம் இறந்து விட்டார்கள். பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற பிறகு ஸ்ரீவில்லிப் புத்தூரில் போய் குடியேறினார். பிறகு அவரைப் பற்றிய தகவலே தெரியவில்லை. துரைப்பாண்டிக்கு நாலு வருடம் தண்டனை கிடைத்தது. தண்டனை முடிந்த பிறகு வெளியே வந்த அவன் திருமணமே செய்து கொள்ளவில்லை. எப்போதாவது சோமுவைச் சந்திக்க வருவான். அப்புவை போலீஸார் என்கௌண்டரில் கொன்று விட்டார்கள் என்று பேச்சு அடிபட்டது.
இந்த 2018 லும் எத்தனையோ கட்சிகள், கருத்துக்கள் உருவாகி மனிதர்களைப் பீடித்துள்ளன. அரசியல் கருத்து, ஆன்மீகக் கருத்து, பொருளாதாரக் கருத்து, கல்வி பற்றிய கருத்து என்று ஆயிரக் கணக்கான கருத்துக்களும், நிறுவனங்களும் பல்கிப் பெருகியுள்ளன. தங்களுக்குப் பிடித்தமான கருத்துக்களே சதமென நம்பி, மனிதர்கள் மோதிக் கொள்கிறார்கள். இப்படித்தான் உலகம் தன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
(முற்றும்)
Ω Ω Ω Ω