அறிவிப்புகள்

சுனில் கிருஷ்ணனுக்கு யுவ புரஸ்கார் விருது

சொல்வனம் இதழில் 2012 ஆம் ஆண்டு முதல் பல கட்டுரைகளும், சிறுகதைகளும் நரோபா எனும் புனைப்பெயரில் எழுதி வரும் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ள செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் சொல்வனம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.  யாவரும்.காம் பதிப்பகம் வெளியிட்ட “அம்புப் படுக்கை” எனும் சிறுகதைத் தொகுப்புக்காக அவர் இந்தப் பரிசைப் பெறுகிறார். 2012 ஆம் ஆண்டு “அகிம்சையின் வெற்றி” எனும் கட்டுரையை முதலில் பிரசுரித்தவர், தொடர்ந்து, ஆரோகணம், காளிங்க நர்த்தனம், பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும், திமிங்கலம் எனப் பல சிறுகதைகளை சொல்வனத்தில் எழுதியுள்ளார்.

இது தவிர பதாகை இணைய இதழிலும், ஆம்னிபஸ் இணைய தளத்திலும்  அவர் தொடர்ந்து பங்கு கொண்டு வந்துள்ளார். காந்தி டுடே எனும் காந்திய சிந்தனைத் தொகுப்பு தளத்தை நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார்.

ஆயுர்வேத மருத்துவராகவும் பணியாற்றிவரும் சுனில் கிருஷ்ணனுக்கு சொல்வனம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பயணத்தில் சிறு பங்கினை ஆற்றிய சொல்வனம் பெருமை கொள்ளும் தருணம் இது!

****
வண்ண நிலவனின் நாவல்- எம்.எல்- நிறைவு பெறுவது குறித்து:
பல மாதங்களாக சொல்வனத்தில் வண்ண நிலவனின் நாவல், ’எம். எல்’ பிரசுரமாகி வந்தது. இந்த இதழில் அந்த நாவல் நிறைவு பெறுகிறது. சொல்வனம் வெளியிட்ட முதல் நாவல் தொடர் இது.  அரசியல் நாவல்கள் சமீப காலத்தில் நிறையவே தமிழில் வெளி வந்துள்ளன. அவற்றிலிருந்து வேறுபட்டதாகவும், சாதாரண மனிதர்களின் வாழ்வின் ஏராளமான அன்றாட நடவடிக்கைகள் பற்றிய விவரணைகளின் செறிவோடும் இந்த நாவலை நடத்தி இருக்கிறார் வண்ண நிலவன். காலம் தப்பாமல் ஒவ்வொரு இதழுக்கும் தன் கைப்பிரதியைக் கொடுத்து உதவிய வண்ண நிலவன் அவர்களுக்கு சொல்வனம் பதிப்புக் குழுவினர் தம் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரதிகளை வண்ண நிலவனிடம் பெற்று வருவதோடு அப்பக்கங்களைத் தட்டச்சியும் உதவி ந.பாஸ்கர், ஷிவ்சங்கர் ஆகியோருக்கும் எங்கள் நன்றி.
****
அஸ்வத் எழுதிய ‘தொல்வெளியிலிருந்து ஓர் இசை’ – கட்டுரைத் தொடர் முடிவு குறித்து:
தமிழிலக்கியத்தில் முற்றிலும் புது வகைக் கருத்துகள், சிந்தனைகளைக் கொடுக்கும் பல கட்டுரைத் தொடர்களைச் சொல்வனம் வெளியிட்டு இருக்கிறது. இவை எவை போலவும் இல்லாத ஒரு அபூர்வமான கட்டுரைத் தொடர் அஸ்வத் நாராயணன் எழுதிய  ‘தொல்வெளியிலிருந்து ஓர் இசை’ என்பது.  இதை எப்படி வகை பிரிப்பது என்று துவக்கத்திலிருந்து இறுதி வரை எங்களுக்கு ஓர் முடிவின்மைதான் இருந்திருக்கிறது. இது கர்நாடக இசை பற்றியது, ஒரு இளம் மேதை பற்றியது, சிறுவனாக இருந்ததிலிருந்து இளைஞனாக வளர்ந்த நிலை வரை ஓர் இளம் ஜீவன் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது, இன்னும் சிறிது அவலச் சுவை வேண்டுமெனில் நம் கலைப் பரப்பில் என்னென்ன விதமான கசப்புகள் நிலவுகின்றன  என்றும் சுட்டுவதாகவும்  இதை நாம் பார்க்கலாம்.
ஒரே நேரம் பண்டை உலகத்தின் சுவடுகளை இன்றும் சுமந்திருக்கும் நம் பண்பாடு, கலை, சிந்தனை வெளியிலும் சஞ்சரித்து, இன்றைய பெருநகரங்களின் கடுமை நிறைந்த வெளியிலும் உலவி, அரூபமான கலையின் நுட்பங்களிலும் திளைத்து வந்திருக்கிற கட்டுரை இது.
கட்டுரையாளர் நம் அனைவருக்கும், தமக்கும், தம் குடும்பத்தினருக்கும் கடைசியில் வேண்டுவது அமைதிதான். அதுவும் ஒலியில்லாத அமைதி அல்ல, அனைத்து மனிதருக்கு வர வேண்டிய சாந்தியைக் கேட்டு முடித்திருக்கிறார்.
இத்தனை மாதங்கள் இக்கட்டுரைத் தொடரை காலக் கெடு தப்பாமலும், துல்லியமான பிரதியாகவும் அனுப்பி முடித்துக் கொடுத்த அஸ்வத் அவர்களுக்கு எங்கள் நன்றி. இளைஞர் ஆதித்யா தன் இசைப் பயணத்தில் மேன்மேலும் சிகரங்களைத் தொடட்டும், நாம் கேட்டு மகிழலாம்.
***
சொல்வனம் 200 ஆவது இதழ் பற்றி :
சென்ற இதழில் ஒரு அறிவிப்பு கொடுத்திருந்தோம். சொல்வனம் தன் 200ஆவது இதழை சற்றேறக் குறை நவம்பர் மாத நடுவில் வந்தடையும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த இதழை ஒரு சிறப்பிதழாகவும், சிறப்பிதழின் கருவாக ‘திருநெல்வேலி’யையும் வைத்திருக்கிறோம். நகரம், மாவட்டம், ஒரு ஜீவநதியின் நெடும் பயண நிலம் என்று பல வகைகளில் இந்தச் சிறப்பைப் பற்றி நாம் யோசிக்க முடியும். அந்த நிலப்பரப்பின் மாந்தர் வரலாற்றூடே தமிழ்நாட்டுக்கு அளப்பரிய செல்வங்களைக் குவித்திருக்கின்றனர்.
அந்த நிலப்பரப்பைத் தம் சொந்த மண்ணாகக் கருதுவோரும், அங்கு வசித்து அதை நேசிக்கத் தலைப்பட்டோரும், அதன் அரிய கலைப் படைப்புகளை ரசித்து மகிழ்ந்தோரும் என்று எவ்வகையினராக இருந்தாலும் அந்த நிலப் பரப்புடைய சிறப்பிதழுக்கு எழுதலாம்.
உங்கள் படைப்புகளை இப்போதிருந்தே கொடுக்கத் துவங்கினால் இதழை நன்கு திட்டமிட எங்களுக்கு உதவியாக இருக்கும்.
***