அண்டவெடிப்பின் ஆதி நொடி துவங்கி, யாதொரு இயக்க நேர்தலின் நிமித்தம் நிலைகுலைவா ஒழுங்கமைவா என்று ஆராய்வது அறிவியல். அதையும் கடந்து உயிர்களின் உருபுகளில் மேல் காலத்தின் திரிபுகளால் ஊழ் வந்தமர்ந்து உலா போவதன் ரகசியம் உணர முயல்வது ஆன்மீகம். ஆன்மீக ஊஞ்சலில் முன்னும் பின்னுமாய் ஊனை இயக்குகிறது வயது. அந்த ஆட்டத்தில் அனுபவம் பெறுகிறது மனது. அனுபவங்களை ஒன்றன் மீது ஒன்றாய் அகத்தின் மீது அடுக்கி வைத்துக் கொண்டே போவதனால் தான் வயதுக்கு அகவை என்ற சொல் ஏற்பட்டதோ? அகவையின் அடுக்குகளின் இடையில் தான் ஆன்மீக ரகசியம் மறைந்திருக்கிறதோ? அல்லது ஆன்மீக அடுக்குகளின் இடையே அகவையின் ரகசியம் மறைந்து கிடக்கிறதோ? ரகசியம் என்பதே அடுக்குகளின் அடியில் மறைந்திருப்பது தானே? எனவே ஆன்மீகம் என்பதே தனித்த பொருள் தராமல் வெவ்வேறு பொருள் அடுக்குகள் கொண்டதாய் இருக்கிறது. நினைத்தபோது இதை கையாளும் திறம் மனித உயிருக்கு இல்லை. காலம் மனது வைத்தாலன்றி நாம் ஆன்மீகத்தின் எந்த அடுக்குகளுக்கும் நுழைவது சாத்தியமன்று. எனவே தான் நம்மில் பெரும்பாலோருக்கு கோயில் வேண்டுதல்களுடன் ஆன்மீகத்தின் எல்லை நின்று விடுகிறது. காலம் எப்படி நம் மீது மனது வைக்கும்? மேற்சொன்ன ஊஞ்சலே காலத்தச்சன் கைவண்ணம் தானே…ஒப்பனை பூச்சுக்கள் மிகுந்த இளமையின் கற்பனைகள் கூட ஆன்மீக அடுக்குகளுக்கு காலம் நம்மை ஆயத்தம் செய்வது போன்றதே…
பிரபஞ்சமெங்கும் பரவியிருக்கும் பருப்பொருட்களை புலன்கள் உராய்வதால் காட்சிகள் உருவாகின்றன. புறக்காட்சிகளுடன் புலன்கள் உரையாடும் காலத்தை செயல் எனவும், அதை அகம் உள்வாங்கும் காலத்தை அனுபவம் எனவும் கொள்ளலாம்.. பார்க்கப்படுவதே பார்க்கப்பட்டதன் செயல். பார்த்தலின் செயலே பார்க்கப்பட்டதன் அனுபவம். காட்சியும் காலமுமே அனுபவத்தின் பரிமாணங்களை நிர்ணயம் செய்கின்றன. எனவே தான் ஒரே காட்சி, கால மாறுபடுகளில் வெவ்வேறு அனுபவங்களை அதே மனதிற்கும் கால மாறுபாடுகளற்ற நிலையிலும் வெவ்வேறு மனங்களுக்கும் தருகின்றன. கேள்விகள் தாரா அனுபவமில்லை. கேள்விகற்ற அனுபவம், மனம் உணர்வுநிலையில் நின்று விட்டதையே குறிக்கும். பெரும்பாலும் மனம் மகிழ்ச்சியின் பொழுதுகளில் இவ்வாறே நின்று விடுகிறது. துன்பியல் அனுபவங்களே பெரும்பாலும் கேள்விகளை தூண்டி விடும் ஊக்கிகளாய் இருக்கின்றன. அவையே ஆன்மீக அடுக்குகளின் இணைப்புக்களாய் நாளடைவில் உருமாற்றம் அடைகின்றன. இந்த அருமாற்றம் எப்படி நம்முள் நடைபெறுகிறது?
அனுபவங்களின் வழியே கேள்விகள் பிறக்கின்றன. கேள்விகள் நம்மை தத்துவங்கள் நோக்கி இட்டுச்செல்கின்றன. தத்துவங்களில் கிடைக்கும் தெளிவு நம்பிக்கைகளை உண்டாக்குகிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய நம்பிக்கைகளின் கோர்வை மரபாக காலத்தின் வசம் சேர்கிறது. விருப்பமுற்றோ விருப்பமற்றோ காலத்தின் அடிதொழும் மானுடம் அத்தகைய மரபுகளில் ஒன்றை பற்றிக் கொண்டுதான் கடைந்தேறும் வழி காண முயல வேண்டியிருக்கிறது. அனுபவங்களில் துவங்கி மரபில் முடியும் இந்த தொடரியில் இருப்பவையே அடுக்குகளாய் அமைவுறுகின்றன. மனதுள் உணர்வையும், அது காண பொருளையும், பொருள் மீது செயலையும், செயல் மீது நொடியையும், நொடி மீது அனுபவத்தையும் ஏற்றி வைக்கிறது காலம். இருபெரும் இந்து மரபுகளான பக்தி மரபும் ஞான மரபும் இத்தொடர் சுழற்சியின் வினையெச்சங்களே…பக்தியின் விளிம்பில் ஞானமும் ஞான விளிம்பில் பக்தியுமாய் இருபெரு மரபுகள் ஒன்றுக்கொன்று ஆன்ம வட்டத்தின் ஆரம் வரைய இரு புள்ளிகளாய் தனித்தும், சுழற்சியின் போக்கில் ஒன்றுக்குள் மற்றொன்றுமாய் இருப்பது அழகிய முரண் மட்டுமல்ல ஆன்மீக அரணும் கூட…
“ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே” என்பது பக்தி. “னே” வை “தே”வாக்கி “ஆழ்ந்து அகன்ற நுண்ணியதே” என்றால் ஞானம். ஓரெழுத்து என்றாலும் பயணிக்கும் திசையை புரட்டிப் போடும் வித்தியாசம் உண்டு. முன்னது கடவுள். பின்னது தத்துவம். வினையின் அனுபவத்தை, அனுபவத்தின் விளைவை, ஆழ்ந்து அகன்ற நுண்ணியனிடம் “விட்டு விடுவது” பக்தி. அனுபவத்துடன் தானும் ஆழ்ந்து அகன்று அந்த நுண்ணியதின் பொருண்மையையோ பொருண்மையின்மையையோ கண்டறிய முயல்வது தத்துவம். பக்தியின் விளிம்பில் தத்துவம் நமக்கென காத்து நிற்கிறது. அது மேலும் மேலும் அதன் பாதைகளை கேள்விகளின் மூலம் வகுத்துக் கொண்டே செல்கிறது. தத்துவ அலைச்சலின் எந்தக் கட்டத்திலும் நாம் பக்தியின் விளிம்பில் மீண்டும் வந்து விழும் வகையிலேயே காலம் இதனை கட்டமைத்திருக்கிறது. விழுதலின் பயம் பக்தியின் பலம். விழுந்தெழுதலின் அனுபவ விழைவு ஞானத்தின் பலம். இந்த இருவகை மரபுகளுமே தரிசனத்தை அடிப்படையாக கொண்டே தங்கள் அடுக்குகளை நிர்மாணம் செய்திருக்கின்றன.
தரிசனம் என்பதன் பொருள், அடுக்குகளின் தன்மை பொறுத்து, மரபுகளின் நோக்கம் பொறுத்து வேறுபடுகிறது. இருப்பினும் அதன் சாரம், புற அனுபவத்தின் வழியெ அகம் காணும் பரவசமே…. பக்தி மார்க்கத்தின் முதல் அடுக்கில் சாமானியன் கோயிலுக்குள் காணும் கடவுள் உருவம் அவனை பொறுத்தளவில் தரிசனமே. ஞான மார்க்கத்தில் இறுதி அடுக்கில் மனம் இன்மையின் அன்மையை அடைவதும் தரிசனமே. சாரம் ஒன்றெனினும் ஆழம் வேறன்றோ?
தரிசனம் தத்துவத்தில் நிகழ்ந்தால், அது நம்மை மற்றுமொரு கேள்வி நோக்கியே நகர்த்தும். மீண்டும் ஒரு தத்துவம்… மீண்டும் ஒரு தரிசனம்… மீண்டும் ஓரு பரவசம்…இத்தனை சுழற்சிகள் இருந்தும் ஒருகாலும் நாம் புதிதாய் ஒரு தரிசனத்தை உருவாக்க இயலாது. அவை காலத்தின் கரங்களால் ஆதி தொட்டு ஞாலமெங்கும் பதியன் செய்யப்பட்டிருக்கின்றன. அவிழ்வதற்கு முந்தைய நிலை மொட்டுக்கள் போல் அவை நொடிகளின் நுனியில் நமக்கென காத்திருக்கின்றன. பார்வையின் பரிமாணங்களுக்கேற்ப, மரபுகளின் வழியே, நாம் நிற்கும் ஆன்மீக அடுக்குகளைப் பொறுத்து அவை நம்முன் மலர்கின்றன. அதை நாம் கண்டடைவதும் காணாமல் விடுவதும் காலத்தின் நிகழ்தகவே…தரிசனத்தின் விசித்திர பண்பு யாதெனின் மொட்டு காலத்தினுடையது. மலர்ச்சி நம்முடையது. தரிசனங்களின் மூலம் என்னவாக இருக்க இயலும்? ஒரு தரிசனத்திலிருந்து மற்றொரு தரிசனம், ஒரு பரவசத்திலிருந்து மற்றொரு பரவசம்…இவ்வாறு பயணித்து பயணித்து கால அலகின் நுண்ணிய துகள்களையும் பிளந்து கொண்டே போய், பரவசங்களை கடந்து கொண்டே போய், இன்மை நோக்கி நகரும் பயணக் கோட்பாடு தான் ஆதி தரிசனமோ? இதைத்தான் பக்தி மரபு, கடைந்தேற பல ஜென்மம் ஆகுமென்றும், ஞான மரபு “ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல ஏக வெளிக்குள்ளே இருப்பது எக்காலம்?” என்றும் சொல்கிறதோ…?
காலத்தை அடிவேராய் கொண்டு, வினைகளே கிளைகளாய், செயல்களே இலைகளாய் படர்ந்து விரிந்து செறிந்து உதிர்ந்து நம்முன்னேயும் நம்முள்ளேயும், ஆன்மீக அடுக்குகளை கடக்க விழைந்து மெல்ல அசைகிறது அக மரம். அது ஒரு பிப்பல மரம்.