பாசிசத்தை நிறுத்த முடியாமல் போவது எப்போது?

ஸ்டெஃபான் ஸ்வைகின் வாழ்க்கை

ஜோர்ஜ் ப்ராச்னிக்

ஆஸ்த்ரியாவிலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர் ஸ்டெஃபான் ஸ்வைக், “The World of Yesterday,” என்ற தனது வாழ்க்கைக் குறிப்பின் முதல் வடிவை 1941ஆம் ஆண்டின் கோடைப் பருவத்தில், நாகரீகத்தை இருள் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒவ்வொரு அறிகுறியையும் தலைப்புச் செய்திகள் தெளிவாக்கிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சுரவேக ஆவேசத்தில் எழுதி முடித்தார். ஸ்வைக் நேசித்த ஃப்ரான்ஸ் முந்தைய ஆண்டுதான் நாஜிகளிடம் வீழ்ந்திருந்தது. மே மாதம் ப்ளிட்ஸ் (விமானங்கள் மூலம் கடுமையான குண்டு வீச்சு. பெரும்பாலும் இரவில் நடந்தது) உச்சத்தைத் தொட்டிருந்தது, ஒரே இரவில் ஆயிரத்து ஐநூறு லண்டன்வாசிகள் ஜெர்மானிய விமானப் படை குண்டு வீச்சுக்கு பலியாகியிருந்தனர். ஆபரேஷன் பார்பரோஸா (Barbarossa), அச்சு அணி நாடுகள் சோவியத் யூனியன் மீது மேற்கொண்ட மாபெரும் படையெடுப்பு, கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்களைக் கொல்லப் போவது, ஜூன் மாதம் துவங்கியிருந்தது. ஹிட்லரின் ஐன்ஸ்டாட்ஸ்க்ரொப்பன் (Einsatzgruppen) ,  என்ற நடமாடும் கொன்றழிப்புக் குழு, யூதர்களையும் சிறுமைப்படுத்தப்பட்ட பிற குழுக்களையும், பல சமயம் உள்ளூர் காவல் துறை மற்றும் சாதாரண குடிமக்களின் உதவியுடன், படுகொலை செய்தபடி ராணுவத்தைத் தொடர்ந்து சீறிப் பயணித்துக் கொண்டிருந்தது.
 
ஸ்வைக் கூட ஒரு முன்னேற்பாட்டு நடவடிக்கையாக 1934ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறியிருந்தவர்தான். அந்த தேசத்தில், குறுகிய காலம் நிகழ்ந்த, ரத்தம் பெருக்கெடுத்தோடிய, பிப்ரவரி மாத உள்நாட்டு யுத்தத்தின்போது அரசின் கிருஸ்தவ-பாசிச சான்ஸெலர் எங்கல்பெர்ட் டோல்ஃபுஸ் (Chancellor Engelbert Dollfuss) தனக்கு எதிரான சோஷலிச எதிர்க்கட்சியை அழித்த காலத்தில், இடதுசாரி ஆயுதப்படைகளுக்கு அளிப்பதற்கான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்று ஸால்ஸ்பு(வ)ர்க் (Salzburg) நகரில் இருந்த ஸ்வைகின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அக்காலத்தில் யூரோப்பாவின் முக்கியமான மானுடநேயப் போர் எதிர்ப்பாளர்களில் ஒருவராக கருதப்பட்டவர் ஸ்வைக். போலீஸ் நடவடிக்கையின் பொருளற்ற மூர்க்கம் ஆத்திரமூட்டியதால் அன்றிரவே தன் உடமைகளை கட்டி வைக்கத் துவங்கி விட்டார் அவர். ஆஸ்திரியாவிலிருந்து அவரும் அவரது இரண்டாம் மனைவி லாட்ட-வும்(Lotte) இங்கிலாந்துக்குச் சென்றனர். அங்கிருந்து புத்துலகம் (என அறியப்பட்ட அமெரிக்காவுக்குச்) சென்றனர். அங்கு, அதன் கூட்டத்தையும் கூரான போட்டி மனப்பான்மையையும் அவர் வெறுத்தார் என்றாலும் நியூ யார்க் நகரம் அவரது இருப்பிடமாயிற்று. மான்ஹாட்டனில் பணம், வேலை, தொடர்புகள் என்று அவரிடம் உதவி கேட்டுக் கெஞ்சிய புலம் பெயர்ந்தவர்களின் தேவைகளிலிருந்து சிறிது ஓய்வு பெறும் விருப்பத்தால், 1941ஆம் ஆண்டு ஜூன் மாதம் தம்பதியர் சிங் சிங் சிறைச்சாலைக்கு சற்றே உயரே ஒரு மைல் தொலைவில் இருந்த ஆஸ்ஸினிங் (Ossining) பகுதியில் அடக்கமான, சற்றே இறுக்கமான பங்களாவை வாடகைக்கு எடுத்துக் கொண்டனர். அங்கு ஸ்வைக் வெறி பிடித்தாற்போல்– அவரது வார்த்தைகளில், “ஒரு முறைகூட வெளியே நடை செல்லாது, ஏழு பிசாசுகளைப் போல்”- தன் சுயசரிதையை எழுத ஆரம்பித்தார். ஒரு சில வாரங்களிலேயே கிட்டத்தட்ட நானூறு பக்கங்கள் அருவியெனப் பொழிந்தன. அவரது படைப்பாற்றல் அவரது அவசர உணர்வைப் பிரதிபலிக்கிறது: எதிர்காலத்துக்கான ஒருவகைச் செய்தியாக அவர் தன் புத்தகத்தைக் கருதினார். இது ஒரு வரலாற்று விதி, என்று அவர் எழுதினர், “தம் காலத்தைத் தீர்மானிக்கும் மாபெரும் இயக்கங்களின் ஆரம்பகால துவக்கங்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆற்றல் அதன் சமகாலத்தவர்களுக்கு மறுக்கப்படுகிறது”. இடிபாடுகளிலிருந்து சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியை ஏற்கவிருக்கும் வருங்காலத் தலைமுறையின் நன்மைக்காக, அவர் எப்படி நாஜிக்களின் பயங்கரவாத ஆட்சி சாத்தியமானது, அதன் துவக்கங்களை அறியாத குருடர்களாக தானும் மற்ற பலரும் எவ்வாறு இருந்தனர் என்பதை விவரிக்க வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.
ஹிட்லரின் பெயரை தான் முதல் முறை கேட்டது எப்போது என்பதை தன்னால் நினைவுகூர முடியவில்லை என்பதைக் குறிப்பிடுகிறார் ஸ்வைக். அது குழப்பங்களின் யுகம், மூர்க்கர்களான போராட்டக்காரர்களால் நிறைந்தது. ஹிட்லரின் வளர்ச்சி நிகழ்ந்த ஆரம்ப ஆண்டுகளில், ஸ்வைக் தன் எழுத்தின் உச்சத்தில் இருந்தார், யூரோப்பிய தேசங்களிடையே ஒற்றுமையை வளர்க்க முனைந்த முயற்சிகளின் ஆதரவாளராகப் புகழ் பெற்றிருந்தார். முக்கியமான யூரோப்பிய தலைநகரங்களில் கிளைகள் கொண்ட சர்வதேச பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார், பிற சமூகங்கள், குடிகள் மற்றும் சமயங்களை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் அவற்றுக்கிடையே சுழற்சி முறை மாணவ பரிமாற்றம் நிகழ வேண்டும் என்றார். முதல் உலக யுத்தத்தில் வெளிப்பட்ட தேசீய உணர்ச்சிகள் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய புதிய இனவாத கோட்பாடுகளால் வலுவடைந்திருப்பதை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். வெர்ஸாய் (Versailles) ஒப்பந்தத்தின் விளைவாய் ஜெர்மன் குடிமக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார துன்பங்களும் கீழ்மைப்படுத்தப்பட்ட உணர்வும் பரவலாய் உருவாக்கியிருந்த கோபம் பல்வகைப்பட்ட புரட்சிகர, ரத்தவெறி பிடித்த இயக்கங்களும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய எரிபொருளாய் வளர்ந்திருந்தது.
 
நேஷனல் சோஷலிஸ்டு பேரணிகளில் காட்சிப்படுத்தப்பட்ட நிதி வளங்கள் மற்றும் கட்டுப்பாட்டை ஸ்வைக் காணத் தவறவில்லை- அவர்களின் அச்சமூட்டும், ஒத்திசைவுள்ள பயிற்சிகள், பளிச்சென ஒளிரும் சீருடைகள், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அவர்கள் படையென அணிவகுத்துச் சென்ற சென்ற கார்கள், மோட்டார் சைக்கிள்கள், டிரக்குகள். பெர்ஷ்டிஸ்காடன் (Berchtesgaden) என்ற சிறு சுற்றுலாத் தலம் செல்ல ஜெர்மனியின் எல்லையை அடிக்கடி கடந்து பயணிக்க வேண்டியிருந்தது. அப்போது அவர், “சிறிய, ஆனால் நாளுக்கு நாள் வளரும் எண்ணிக்கையில் ப்ரௌன் ஷர்ட்களும் ரைடிங் பூட்ஸ்களும் அணிந்த இளைஞர் குழுக்களை, ஒவ்வொருவர் சட்டைகளின் கைப்பகுதியில் கண்ணைக் குத்தும் வண்ணத்தில் ஸ்வஸ்திகா,” இருப்பதைக் கண்டார். இந்த இளைஞர்கள் தாக்குதல் பயிற்சி பெற்றிருப்பது தெளிவாய்த் தெரிந்தது என்பதை ஸ்வைக் நினைவுகூர்ந்தார். ஆனால் 1923ஆஅம் ஆண்டு ஹிட்லர் புரட்சி செய்ய முயற்சித்த போது அவர் முழுமையாய்த் தோற்கடிக்கப்பட்டபின் ஸ்வைக் அவரை 1930ஆம் ஆண்டு தேர்தல்கள் வரை போருட்படுத்தவில்லை போல் தெரிகிறது- அந்த ஆண்டு நேஷனல் சோஷலிஸ்டு கட்சிக்கான ஆதரவு பீறிட்டு வெளிப்பட்டது, இரண்டாண்டுகளுக்கு முன் பத்து லட்சம் வாக்குகள்கூட பெறாதவர்கள் இப்போது அறுபது லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார்கள். பொதுமக்களின் ஆதரவின் பொருளென்ன என்பதை இன்னும் புரிந்து கொள்ளாத அக்காலத்தில் ஸ்வைக் தேர்தலில் வெளிப்பட்ட உணர்ச்சிகரமான ஆர்வத்தைப் பாராட்டினார். நாஜிக்களின் வெற்றிக்கு காலத்துக்கேற்ப வளராத ஜனநாயகவாதிளின் பத்தாம் பசலித்தனத்தை குற்றம் சாட்டினார், அக்காலத்தின் தேர்தல் முடிவுகள், “புத்தியற்றவையாக இருக்கலாம், ஆனால் அடிப்படையில் காத்திரமானவை, “உயர்நிலை அரசியலின்” மந்த குணம் மற்றும் குறிப்பற்ற தன்மைக்கு எதிராய் இளைஞர்கள் நிகழ்த்திய ஏற்கத் தக்க கலகம்”, என்றார் அவர்.
 
ஹிட்லரின் முக்கியத்துவத்தை துவக்கத்திலேயே கணக்கில் கொள்ளத் தவறிய தன்னையும் தன் சமகால அறிவுஜீவிகளையும் ஸ்வைக் தன் சுயசரிதையில் மன்னிக்கவில்லை. “எழுத்தாளர்களில் சிலர் ஹிட்லரின் புத்தகத்தை சிரத்தையெடுத்து வாசித்திருந்தாலும் அவர்கள் அவரது செயல்திட்டத்தை எதிர்கொள்வதற்கு மாறாய் அதன் உயிரற்ற உரைநடையின் பகட்டைக் கேலி செய்தனர்,” என்று அவர் எழுதினர். அவர்கள் அவரையும் பொருட்படுத்தவில்லை, அவர் சொல்லின் நேர்ப்பொருளையும் எதிர்கொள்ளவில்லை. 1930களிலும்கூட, “முக்கியமான ஜனநாயக செய்தித்தாள்கள், தம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு மாறாய், ஒவ்வொரு நாளும் அந்த இயக்கம்… கணப்பொழுதில் அழிந்து விடுவது தவிர்க்க முடியாதது,” என்று உறுதியளித்தன. தம் ரசனை மற்றும் உயர்கல்வி அளித்த ஆணவத்தால், அறிவுஜீவி வர்க்கங்கள் “கண்ணுக்குத் தெரியாத சூத்ரதாரிகள்” தயவால் – தன்னலமிக்க குழுக்களும், தனி மனிதர்களும், தனித்து நிற்கும் கவர்ச்சி மிகுந்த இந்தத் தலைமையைத் தம் விருப்பத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் – கல்வியறிவற்ற இந்த “சாராயக்கடை கலவரக்காரன்”, அதற்குள் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெற்றுவிட்டதை சீரணித்துக் கொள்ள முடியாதவர்களாய் இருந்தார்கள். என்ன இருந்தாலும், ஒரு வலுவான அடித்தளமுள்ள சட்டத்தின் ஆட்சி ஜெர்மனியில் இருந்தது, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினர் ஹிட்லருக்கு எதிரானவர்களாய் இருந்தனர், அதன் ஒவ்வொரு குடிமகனும், “மனப்பூர்வமாய் ஆதரவு அளிக்கப்பட்ட அரசியல் அமைப்பு தன் சுதந்திரத்தையும் சம உரிமைகளையும் பாதுகாக்கிறது,” என்று நம்பினார்.
 
உலகின் மனசாட்சி வலிமை குன்றியதில் பிரசாரத்துக்கு ஒரு முக்கியமான இடம் இருந்ததை ஸ்வைக் உணர்ந்திருந்தார். முதலாம் உலக யுத்தத்தின்போது பிரசார அலை அதிகரித்து செய்தித்தாள்கள், பத்திரிகைகள், வானொலி எங்கும் நிறைந்தபோது வாசகர்களின் நுண்ணுணர்வுகள் மழுங்கிப் போனதை அவர் விவரித்தார். “போதை மருந்தால் உசுப்பப்பட்ட உணர்வெழுச்சி” என்று அவர் அழைத்ததைத் தூண்டிய குற்றத்துக்கு நல்லெண்ணம் கொண்ட பத்திரிக்கையாளர்களும் அறிவுஜீவிகளும்கூட கடைசியில் பலியானார்கள்- செயற்கையாய் தூண்டப்பட்ட அந்த உணர்வெழுச்சி, தவிர்க்க முடியாமல் கடைசியில் பெரும் திரள்களின் வெறுப்பிலும் அச்சத்திலும் முடிந்தது. 1914ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் போருக்கு எதிராய் உள்ளத்தைத் தொடும் வகையில் கலைஞர் ஒருவர் குரலெழுப்பிய பின் ஆரோக்கியமான வகையில் எழுந்த போர் எதிர்ப்பை விவரிக்கும்போது ஸ்வைக், அக்கட்டத்தில், “சொல்லுக்கு இன்னமும் ஆற்றல் இருந்தது. பொய்களின் கட்டமைப்பு, அதை இன்னும் ‘‘பிரசாரத்தால்’ கொலை செய்திருக்கவில்லை,” என்று குறிப்பிட்டார். ஆனால் ஹிட்லர், “மானுடநேயத்துக்கு எதிரானவற்றை சட்டமாய் மாற்றியது,” போலவே “பொய் சொல்வதைச் சாதாரண விஷயமாய் உயர்த்தினார்,” என்று ஸ்வைக் எழுதுகிறார். ஆனால் 1939ஆம் ஆண்டில், “எந்த ஒரு எழுத்தாளர் சொன்ன எதுவொன்றும் ஒரு சிறிதுகூட தாக்கம் ஏற்படுத்தவில்லை… புத்தகம், துண்டுப்பிரசுரம், கட்டுரை, அல்லது கவிதை, எதுவும்,” ஹிட்லர் போரை நோக்கிச் செலுத்தியதை எதிர்க்கும்படி மக்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டி உந்தவில்லை’, எனபதை அவர் பதிவு செய்கிறார்.
 
பிரசாரம் ஹிட்லரின் தீவிர ஆதரவாளர்களுக்கு உற்சாகம் அளிக்கவும் செய்தது, அவரது ஆட்சியின் மிகக் கொடூரமான நடவடிக்கைகளுக்கு போர்வையாகவும் பயன்பட்டது. அது உண்மை மீதான நாட்டத்தை விருப்பம் நிறைவேறும் என்ற மயக்கத்துக்கு நிகரானதாக எண்ணச் செய்து அவற்றுக்கிடையே இருக்கும் வேறுபாட்டைக் காண முடியாமல் செய்தது. உலகளாவிய பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண யூரோப்பியர்கள் கொண்டிருந்த ஏக்கம் தர்க்கப்பூர்வமான அவநம்பிக்கையைச் செல்லாக் காசாக்கியது. “உரையாற்றும்போது ‘அமைதி’ என்ற சொல்லை ஹிட்லர் உச்சரிப்பதே, செய்தித்தாள்களை உற்சாகம் கொள்ளவும், அவரது கடந்தகால செயல்கள் அனைத்தையும் மறக்கவும், அப்படியானால் ஏன் இத்தனை வெறித்தனமாக ஜெர்மனி ஆயுதம் தரித்துக் கொள்கிறது என்ற கேள்வியைத் தவிர்க்கவும் போதுமானதாக இருந்தது,” என்று எழுதினார் ஸ்வைக். சிறப்புச் சிறை முகாம்கள் அமைக்கப்படுகின்றன என்ற வதந்திகளைக் கேட்கும்போது, விசாரணையின்றி அப்பாவிகள் கொல்லப்படும் ரகசிய அறைகள் பற்றி கேள்விப்படும்போது, இந்தப் புதிய யதார்த்தம் நீடிக்க முடியும் என்று மக்கள் நம்ப மறுத்தனர் என்பதை ஸ்வைக் பதிவு செய்கிறார். “இது ஒரு துவக்கநிலை, அர்த்தமற்ற ஆத்திரமாக மட்டுமே இருக்க முடியும், என்று ஒவ்வொருவரும் தமக்குச் சொல்லிக் கொண்டனர். இப்படிப்பட்ட ஒரு விஷயம் இருபதாம் நூற்றாண்டில் நீடிக்க முடியாது.” ஹிட்லர் சான்ஸலராகப் பதவியேற்ற சிறிது காலத்தில் ஸால்ஸ்பு(வ)ர்க் மலைகளைத் தாண்டி ஓடைகளைக் கடந்து ஆஸ்திரியாவினுள் அடைக்கலம் புகுந்த முதல் அகதிகளைக் கண்டது குறித்து தனது சுயசரிதையின் மிகவும் மனதை நெகிழச் செய்யும் பகுதியொன்றில், ஸ்வைக் விவரிக்கிறார். “பசியோடும், அலங்கோலமான நிலையிலும் இருந்தவர்கள், கலக்கமுற்றிருந்தவர்கள்… மானுடத்துக்கு எதிரானதிலிருந்து தப்பி இந்த புவி முழுதும் பரவப்போகும் பீதிவாய்ப்பட்ட ஓட்டத்தின் முன்னிலையினர் இவர்கள். விரட்டப்பட்ட அவர்களைப் பார்க்கும்போது நான் அந்த வெளிறிய முகங்களில், ஒரு கண்ணாடியில் பார்ப்பதைப் போல், என் வாழ்க்கையையே கண்டிருக்க வேண்டும், நாமெல்லாரும், நாமனைவரும், இந்த ஒரு மனிதனின் அதிகார மோகத்துக்கு பலியாகப் போகிறோம் என்பதை நான் உணர்ந்திருக்க வேண்டும் என்பது அக்கணம் சிறிதும் புலப்படவில்லை.”
 
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஸ்வைக் மகிழ்ச்சியற்றே இருந்தார். அமெரிக்கர்கள் புலம்பெயர்ந்தவர்களின் துன்பங்களைக் கண்டு கொள்ளாதவர்கள் போல் இருந்தார்கள்; யூரோப் தற்கொலை செய்து கொண்டிருக்கிறது என்று அவர் மீண்டும் மீண்டும் சொன்னார். “மரணத்துக்குப்பின்” வாழ்வது போல் தன் வாழ்வு இருக்கிறது என்று அவர் ஒரு நண்பரிடம் கூறினார். வாழ்வின் மீதான இச்சையை புதுப்பித்துக் கொள்ளும் பெரும்பிரயத்தனமாக அவர் 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரேசிலுக்குப் பயணித்தார். அங்கு, அவரது முந்தைய பயணங்களில், அந்நாட்டு மக்கள் அவரை ஒரு சூப்பர் ஸ்டார் போல் கொண்டாடியிருந்தார்கள். அங்கு, கண்ணுக்கு நேராகவே பல இனங்களும் கலந்து வாழ்வது மானுடம் இனி முன்செல்வதற்கான ஒரே வழியென்று அவருக்கு தோன்றச் செய்திருந்தது. அந்நாட்களில் அவர் எழுதிய கடிதங்கள் நினைவுகூர்தலின் தீராத்துயர் போல, கடந்த காலத்தினுள் பயணம் செய்து அவர் நேற்றைய உலகுக்குத் திரும்பிப் போய் விட்டாற்போல இருக்கின்றன. ஆனால் அவர் பிரேசிலிய மக்களை என்னதான் நேசித்தாலும், அந்த தேசத்தின் இயற்கை அழகை எத்தனை ரசித்தாலும், அவரது தனிமை மேலும் மேலும் சுரவேகம் எய்தியது. அவரது நெருங்கிய நண்பர்களில் பலரும் இறந்து விட்டனர். பிறர் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தனர். எல்லைகளற்ற, சகிப்புத்தன்மை கொண்ட யூரோப்பா என்ற கனவு (என்றும் அவரது உண்மையான, ஆன்மீக தாயகம்) அழிக்கப்பட்டு விட்டது. எழுத்தாளர் ஜூல் ரோமெய்ன்ஸுக்கு (Jules Romains)  ஒரு கடிதத்தில், “நாடு கடத்தப்பட்ட என் அகம், என் பாஸ்போர்ட்டில் உள்ள  ‘நான்’ உடன், இணைத்து என்னை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை என்பதில்தான் என் அகப் போராட்டம் இருக்கிறது,” என்று எழுதினார். 1942ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், லாட்ட-வுடன், ஸ்வைக் அளவுக்கதிகமாக தூக்க மாத்திரைகள் உண்டார். முறைப்படி அவர் விட்டுச் சென்ற தற்கொலைச் செய்தியில், “அறிவார்ந்த செயல்பாடு மிகத் தூய்மையான ஆனந்தத்தையும் தனிமனித சுதந்திரம் புவியின் மிகச் சிறந்த நன்மையையும் அளித்த வாழ்வை” வாழ்ந்துவிட்ட நிலையில், தனக்கு வாய்ப்பிருக்கும்போதே கௌரவமாய் விலகிக் கொள்வது நல்லது என்று தோன்றுவதாக எழுதினார் ஸ்வைக்.
இன்றுள்ள நிலையில் அமெரிக்கா அறச்சீரழிவின் அளவுகோலில் எவ்வளவு கீழ்மை எய்தியுள்ளது என்று ஸ்வைக் தீர்மானிப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். வசீகரமான தலைவர் நமக்குக் கிடைத்திருக்கிறார், அவர் சிறிது கூட வருத்தமின்றி, தொடர்ந்து பொய் சொல்கிறார்- நோய்ப்பட்ட மன நிலையில் இருக்கிறார் என்பதால் இல்லை, அரசியல் போரில் நீண்ட நாள் திட்டமாக, தன் எதிரிகளைச் சரிக்கட்ட, தன் தீவிர ஆதரவாளர்களின் ஆத்திரத்தைப் பெருக்க, குழப்பம் விளைவிக்க. பொய்ச் செய்திகள் மற்றும் பிழைத் தகவல்களின் வெள்ளம் அமெரிக்க மக்களைக் குழப்பி, அவர்கள் உணர்வுகளை செயலிழக்கச் செய்திருக்கிறது. ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆண்டுகளில் எப்படி நல்லெண்ணம் கொண்ட பலரும், “நம்பிக்கை வறட்சி கொண்ட அறமின்மை பிரக்ஞைபூர்வமான உத்தியாய் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணரவோ புரிந்து கொள்ளவோ முடியாதவர்களாய் இருந்தார்கள்,” என்பதை ஸ்வைகின் சுயசரிதையில் வாசிக்கும்போது, நம் தற்போதைய சிக்கலைப் பற்றி நினைக்காதிருப்பது இயலாதது. சென்ற வாரம், மிகத் தீவிரமான குடியேற்றத் தடையொன்றை ட்ரம்ப் கையொப்பமிட்டு பிரகடனப்படுத்தியபோது இந்த தேசத்திலும் உலகமெங்கும் அதிர்ப்புக்குரல் எழுந்ததும், சின்னஞ்சிறு கண்துடைப்பு நடவடிக்கைகள் மற்றும் மறுப்புகளைக் கொண்டு அந்த எதிர்ப்புப் போராட்டங்களை ஆற்றுப்படுத்த அவர் முயற்சித்ததைக் காண்கையில் ஹிட்லரிடமும் அவாது அமைச்சர்களிடமும் ஸ்வைக் கண்ட மற்றுமொரு முக்கியமான உத்தி நினைவுக்கு வந்தது: ஒவ்வொரு புதிய எதிர்ப்புக்குரலும் எப்படிப்பட்ட வகையில் மக்களைச் சென்றடைகிறது என்பதைப் பார்க்கஅவர்கள் தம் மிக மோசமான நடவடிக்கைகளை படிப்படியாக, திட்டமிட்டு அறிமுகப்படுத்தினார்கள். “ஒரு சமயத்தில் ஒரே ஒரு மாத்திரைதான், அதன் வலிமை எப்படிப்பட்ட விளைவை உண்டாக்குகிறது என்பதைப் பார்க்க, உலகத்தின் மனசாட்சி அந்த வீரியத்தை இப்போதும் உட்கொள்ளுமா என்பதைப் பார்க்க, சிறிது காலம் காத்திருப்பு,” என்று எழுதினார் ஸ்வைக், “நாளுக்கு நாள் விஷத்தின் வீரியங்கள் வலுப்பட்டன, இறுதியில் யூரோப் முழுமையும் அதனால் அழியும் வரையில்.”
 
ஆனாலும் இன்றுள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப்பும் அவரது தீய “சூத்ரதாரிகளும்” தம் அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்கான நியமங்களை வசப்படுத்திக் கொள்ளவில்லை என்று ஸ்வைக் குறிப்பிடக்கூடும்.”நேற்றைய உலகு” நமக்களிக்கும் துயரப் பாடங்களில் ஒன்று, பிழைச்செய்திகள் எங்கும் நிறைந்திருக்கும் கலாசாரத்திலும், பல்வகைப்பட்ட பணக்கார சக்திகளால் முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தப்படும் ஆத்திரக்கார தீவிர ஆதரவாளர்கள் ஓய்வொழிச்சலின்றி பொய்யுரைக்கும் வசீகர தலைவரால் சக்திவாய்ந்தவர்களாய் உணரும் அந்தக் கலாசாரத்திலும், மைய அச்சு முறியாதிருக்கக் கூடும். ஸ்வைகின் பார்வையில், ஜெர்மனியின் பேரழிவை உடனே அடையத் தேவைப்பட்ட இறுதி நஞ்சு, 1933ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாய்ந்தது- அன்று பெர்லினில் உள்ள தேசியப் பாராளுமன்றக் கட்டடம் தீக்கிரையானது. அதற்கான பழியை கம்யூனிஸ்டுகளின் மேல் சுமத்தினார் ஹிட்லர், ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் அதை நாஜிகளே நிகழ்த்தினர் என்று இன்றும் நம்புகின்றனர். “ஒரே அடியில் ஜெர்மனியின் அத்தனை நீதியும் நொறுங்கிற்று,” என்று நினைவுகூர்ந்தார் ஸ்வைக். ஒரு குறியீடாய் நின்ற கட்டிடத்தின் அழிவு- உயிரிழப்பற்ற நெருப்பு- அரசு தன் குடிமக்களையே அச்சுறுத்தத் துவங்குவதற்கான பொய்க் காரணம் அளித்தது. விதிவசப்பட்ட அந்த நெருப்பு ஹிட்லர் சான்சலராகிய முப்பது நாட்களுக்குள் ஏற்பட்டது. வினை புரியக்கூடிய சாத்தியம் கொண்ட ஒரு சிறு சன்னல் திறந்திருந்தது என்பதையும், அது எப்படி திடீரென்றும் மாற்றவியலாத வகையில் அறைந்து மூடப்படக்கூடும் என்பதையும் பின்னோக்கிக் கண்ணுறுதலின் வலியே ஸ்வைக்ன் சுயசரிதையின் கூர்வலி ஆற்றல்.
நன்றி: ஜோர்ஜ் ப்ராச்னிக்/ நியுயார்க்கர் பத்திரிகை.
கட்டுரையின் இங்கிலிஷ் மூலம்: George Prochnik: (2017ஆம் ஆண்டு பிப்ரவரி 6 அன்று நியூ யார்க்கர் பத்திரிகையில் வெளியானது.) கட்டுரையை இங்கே பெறலாம்: https://www.newyorker.com/books/page-turner/when-its-too-late-to-stop-fascism-according-to-stefan-ஸ்வைக்
தமிழாக்கம்: சீராளன்
பதிப்புக் குறிப்பு:
ஸ்டெஃபான் ஸ்வைக் பற்றி கட்டுரையாளர் ஜ்யார்ஜ் ப்ரோச்னிக் பங்கெடுத்த இரு உரையாடல்களின் காணொளியை இங்கே காணலாம்: https://www.youtube.com/watch?v=cvL72vyYs6A
https://www.youtube.com/watch?v=EUm22_05JrQ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.