உறவு
வாலாட்டி மேலேறிக் குழைந்து எச்சில்படுத்திய
நாய்க்குட்டிக்கு நல்லவேளையாக நான் இருந்தேன்.
என் பசி
கோபம்
சோகம்
தீட்டு நாட்கள்
சோம்பல்
உறக்கம்
என எல்லாமும் அதற்குப் புரிந்தது போல் எதிர்வினையளித்தது.
கண்ணீர் உகுத்த நாளொன்றில்
பிரிவென்று சொல்லிக்கொள்ளவாவது
அவன் உறவொன்றை அளித்து
இம்மட்டுமாய் எனக்கருளிய தேவனுக்கு நன்றி
எனப் புலம்பியதை அது பார்த்துக் கொண்டிருந்தது.
வாலாட்டி மேலேறிக் குழைந்து எச்சில்படுத்தும்
நாய்க்குட்டியாக நான் இருந்தேன்
நான் என ஒருவரும் இல்லை.
***
குடுவை உலகம்
குடுவையில் நீந்தும் மீன்
மேலெழும்பி மூச்சுவிட்டுச் செல்கிறது
கூழாங்கற்களைக் கொண்டாட்டமாக உரசுகிறது
இளையராஜா பாடல் கேட்கிறது
சிதறிப்போடும் மீன் உணவைக் கொரித்துத் தின்கிறது
குடுவைக்குள் மிதந்து தூங்குகிறது
திடுமெனக் கண்ணாடி வழியாக
மீன்முகம் காட்டிப் பழித்துக் கேட்கிறது
எங்கே என் உலகமென.
– சுபத்ரா
***
பால்யத்தின் பதிலிகள்
நான் உண்மையாகவே
வருத்தப்படவில்லை என்பதால்
பதிலிகளை உற்பத்தி செய்து நேரத்தை விரயமாக்காதீர்கள்.
நம்முள்ளிருப்பது
காதலோ,
கடமையோ,
செய்நன்றியோ அல்ல என்பதால்
நம் ஸ்னேகம்
ஆற்றில் விழும் துளிகளென
காலத்தில் விழுகிறது.
இருபத்தோராம் நூற்றாண்டின்
தர்மத்தின் முன் நம்மால் என்ன செய்யமுடியும்?
தன் உணவு
தன் உடைமை தவிர
எஞ்சியவை சுமை,
என்பதால்
நாம் நிறுத்திவிடலாம்.
முடிந்தால் பால்யத்தின்
குளிர்புன்னகையோடும்,
கண்களோடும் வரலாம்.
வந்தாலும்கூட நம்மால் நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.
என்பதால்
நாம் நிறுத்திவிடலாம்.
நாம் வரும் நம்பாதைகள்
நமக்காக மட்டுமேயானதால்
நீண்டநாள் நடக்காத பாதை
அடர்ந்து செழித்து பாதையல்லாமலாகிவிட்டது
என்பதால்
நாம் நிறுத்திவிடலாம்.
நாம் காலைஔியாயிருந்து
பிரிந்த கீற்றுகளென்பதால்
ஆதியிலல்லாதுஎங்குமே
சந்திக்கும் புள்ளியில்லை…
என்பதால்
நாம் நிறுத்திவிடலாம்.
ஈரமில்லாத நம் சம்பிரதாயங்களில்
எங்குமே நாமில்லை என்பதால்
நாம் நிறுத்திவிடலாம் நம்பதிலியான
இப்போதைய நம்மை.
– கமலதேவி
***
வே.நி.சூர்யா
– மத்தியானக் கனவு
ஒரு ஆப்பிளின்
மத்தியில் கட்டியணைத்துக்கொண்டிருந்தோம்
அப்பொழுது அவ்வளவு காதல் இருந்தது
கூடை பின்னுவதைப் போல
அது நம்மை முடிச்சிட்டுக்கொண்டிருந்தது
மஞ்சள் பறவைகளும்
சில மேகங்களும்
ஆப்பிளின் வானத்தில் அலைந்துகொண்டிருந்தன
இறுக்கத்தை தளர்த்தாமல்
அதை பார்த்தோம்
தூரகிழக்கிலிருந்து அசரரீ ஒலித்தது
கத்தியொன்று வரப்போகிறதென
கல்லாய் போவென எங்களை நாங்களே சந்தோஷமாக
சபித்துக்கொள்ளத் தொடங்கினோம்
புதிரானவற்றின் ஆயுளென தொடர்கிறது இறுக்கம்