[மக்ஸ்வீனிஸ், 2017- இதழ் எண் 51 இலிருந்து பெறப்பட்ட இங்கிலிஷ் மூலக்கதையின் தமிழாக்கம்: மைத்ரேயன்]
என் மகளுக்கு மருத்துவரிடம் போவது பிடிக்கும். ஏனென்பதை என்னால் விளக்க முடியாது. அவர்தான் ஸாண்டா க்ளாஸ் என்பது போல அவருக்கு அவள் முகமன் தெரிவிக்கிறாள், காகிதத்தாலான மேலங்கியும், மஞ்சள் காலுறைகளும், பூனைப் படம் போட்ட உள்ளாடையும் அணிந்து கொண்டு அங்கே குளிரில் இலேசாக நடுங்கியபடி அமர்ந்திருக்கிறாள். அந்த டாக்டர்– அவரை எனக்குப் பிடிக்கும்; நான் சிறுவனாக இருந்த போது எனக்கு அவர்தான் குழந்தை மருத்துவராக இருந்தார்– முது வயதானவர், வில் போல கழுத்துப் பட்டியும், தோள்களில் கால்சராயைத் தாங்கும் நாடாக்களையும் அணிபவர். அவர் தலையில் அப்படி ஒரு செழிப்பான வெள்ளி முடி. பல பத்தாண்டுகளில் அவருடைய தலை முடி கொட்டவோ, குறையவோ இல்லை (என் முடியோ என் இருபத்தி இரண்டாம் வயதிலேயே உதிர்ந்து குறையத் தொடங்கி இருந்தது; இப்போது எனக்கு நாற்பது வயது), அவர் என் மகளோடு பேசுகையில் அதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
“லிலியன், நீ எப்படி இருக்கே? உன்னைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியா இருக்கு.”
“உங்களைப் பார்க்க எனக்கும் மகிழ்ச்சியா இருக்கு,” அவள் சொல்கிறாள். அவள் சிரிக்கிறாள்.
அவர் தனது உருண்டு நகரும் முக்காலியில் அமர்கிறார், அவளை உற்றுப் பார்க்கிறார், சோதனை மேஜையில் உயரத்தில் அமர்ந்த அவள் அவரைக் குனிந்து நோக்குகிறாள்.
“அவளுக்கு இருமலா இருந்தது,” நான் சொல்கிறேன், அவர்கள் இருவரும் என்னை லட்சியம் செய்யவில்லை.
லில் இருமுகிறாள், அவர் தன் ஸ்டெதாஸ்கோப் நுனிகளைத் தன் காதுக்குக் கொண்டு போகிறார். “என்ன இருக்குன்னு நாம பார்ப்போமே.”
அவள் அவரைத் திருத்துகிறாள், “என்ன இருக்குன்னு நாம கேட்போம்.”
பாராட்டும் விதத்தில் அவளுக்குத் தன் கற்பனையான குல்லாயைச் சாய்க்கிறார், கண்ணைச் சிமிட்டுகிறார், அவளுடைய காகித மேலங்கியின் மேல்புறத்துக்குள் அந்த உலோக வட்டச் சில்லை நுழைக்கிறார். என் புறம் தன் தலையைத் திருப்பியபடி கேட்கிறார். அவர் என்னைப் பார்க்கவில்லை, கவனிப்பாக இருக்கிறார். உலோகச் சில்லை நகர்த்தி, இன்னும் கொஞ்சம் கேட்கிறார்.
லிலியன் நன்றாக இருக்கிறாள். இரண்டு நாட்கள் இருமினாள், அவ்வளவுதான். அவளுக்கு ஏழு வயது, ஆரோக்கியமாக இருக்கிறாள், கொஞ்சம் சிறிய உரு. இது நல்ல நிலையில் இருக்கும் குழந்தைக்கான சோதனை, அவளுக்கு ஃப்ளூ தடுப்பூசி போடுவார்கள், பிறகு அவளுடைய நண்பர் டாக்டர் ஃபிலிப்ஸோடு கொஞ்சம் அரட்டை அடிப்பாள்.
உலோகச் சில்லை இன்னும் கொஞ்சம் நகர்த்துகிறார், என் குழந்தை முன்னாடி நகர்கிறாள்.
“லிலியன்,” டாக்டர் அடங்கிய குரலில் சொல்கிறார், “மூச்சைப் பிடிச்சுக்காதே.”
அவள் சன்னமாக, அவர் பேசியதை வேடிக்கையாகக் கருதிச் சிரிக்கிறாள், என்னைப் பார்க்கிறாள், நானும் கண்ணைச் சிமிட்டுகிறேன், அப்போது அவள் மாற்றம் அடைந்து, கவனம் பெற்று மூச்சு விடுவதைப் பல வினாடிகள் தொடர்கிறாள்.
எல்லாரும் அமைதியாக இருக்கிறோம், லில் சொல்கிறாள், “நீங்க இப்ப என்னோட இதயத்தைக் கவனிச்சுக் கேட்கிறீங்களா?”
டாக்டர் ஆம் என்கிறார்.
அவள் மறுபடியும் அமைதியாக இருக்கிறாள்.
“மூச்சு விடு, லிலியன்,” என்கிறார் அவர்.
“என்னோட இதயத்திலே,” அவள் அவரிடம் கேட்கிறாள், “கடவுளை உங்களால கேட்க முடியறதா?”
“லில்–,” நான் ஆரம்பிக்கிறேன். இந்த மாதிரி விஷயமெல்லாம் அவளுடைய அம்மாவிடம் இருந்து வருவன. அவள் குரலைக் கூட இதில் என்னால் கேட்க முடிகிறது– கடவுள் உன் இதயத்தில் இருக்கிறார், லிலியன்.
ஆனால் டாக்டர் ஃபிலிப்ஸ் இடை மறிக்கிறார். “என்னதுனா,” அவர் சொல்கிறார், என்னைப் பார்க்கிறார். நான் தடை ஏதும் சொல்லவில்லை என்பதாகத் தோள்களைக் குலுக்குகிறேன். “அப்படி நேருக்கு நேராச் சொல்ல முடியாது,” அவளிடம் சொல்கிறார். ஸ்டெதாஸ்கோப்பை அகற்றுகிறார். “நேருக்கு நேர்ங்கறது என்னன்னு தெரியுமா உனக்கு?”
அவள் இல்லை என்று தலையசைக்கிறாள்.
“அப்படின்னா, நான் என் காதால கேட்கிறது உன்னோட இதயத் துடிப்பும், மூச்சுக்காத்து உன் நுரையீரல்லே போய் வர்றதும் மட்டும்தான்னு அர்த்தம். உன்னோட உடம்புல உள்ளே இருக்கிறதை நான் கேட்கிற போது நான் கடவுளைக் கேட்கிறதில்லை, அல்லது நீ என் பேச்சைக் கேட்கிற மாதிரி கேட்கிறதில்லை.”
அது ஒரு நல்ல பதில். நான் நேரடியாகவே இல்லை என்று சொல்லத் தூண்டப்பட்டிருப்பேன்.
அவர் மேலே பேசுகிறார். “ஆனால், உன்னொட மார்புல நடுப்பற உன் இதயம் இருக்கிற இடத்திலே—” அவர் தன்னுடைய மார்பைத் தட்டிக் காண்பிக்கிறார், அப்புறம் லில்லுடைய மார்பைத் தட்டுகிறார். “அந்த இடத்திலே அவங்களோட சந்தோஷத்தை உணர்றதா, ஜனங்களுக்குச் சில சமயம் தோணும், அல்லது அன்பை. பாரு, தேசீய கீதத்தைக் கேட்கும்போது தங்களோட இதயத்தின் மீது அவங்க கையை வைத்துக் கொள்வார்கள், அது முக்கியம்னு காட்டணும்னு அவங்க நினைக்கிறதால அப்படி. உனக்கு தேசீய கீதம்னா தெரியுமா?”
அவள் ஆம் எனத் தலையை அசைக்கிறாள். அது எனக்குப் புதுச் செய்தி.
டாக்டர் ஃபிலிப்ஸ் தன் கையை தன் இதயத்தின் மீது வைக்கிறார், அவளும் அதே போலச் செய்கிறாள். என் மகள், சின்னப் பெண்– சென்ற முறை நாங்கள் இங்கே வந்தபோது அவள் தன் வயதுக் குழந்தைகளோடு ஒப்பீட்டில் பதின்மூன்றாவது சதவீதப் புள்ளியில்தான் இருந்தாள், எடையிலும், உயரத்திலும்– தன் சிறு கையைத் தன் சிறிய நெஞ்சில் வைக்கிறாள், என்னைப் பார்க்கத் திரும்புகிறாள், நானும் என் கையை என் நெஞ்சில் வைக்கிறேன், ஏதோ நாங்கள் எல்லாரும் “ஓ ஸே கான் யூ ஸீ?” என்ற பாட்டைப் பாட ஆரம்பிக்கப் போகிறது போல இருக்கிறது.
“அதனால ஜனங்கள் கடவுள் தங்களோட இதயத்தில இருக்கார்னு சொல்லும்போது, அவங்க ஏதோ விசேஷமா உணர்றதைச் சொல்றாங்க, அது நேரே இங்கே இருந்து வர்ற மாதிரி அவங்களுக்குத் தோணுது.” அவர் தன் கையை அங்கேயே ஒரு கணம் வைத்துக் கொண்டிருந்து விட்டுப் பிறகு தன் முழங்காலில் வைத்துக் கொண்டார், லிலியனும் நானும் எங்கள் கைகளைக் கீழே தொங்க விட்டோம்.
“ஓகே,” என்கிறாள் அவள், “என்னால் அதை உணர முடிகிறது.”
“பிரமாதம்,” டாக்டர் பதிலளிக்கிறார், சோதனையை மேலே தொடர்கிறார். அவளுடைய கண்கள், காதுகள், மூக்கு என்று எல்லாவற்றையும் சோதிக்கிறார், அவளுடைய முழங்காலில் தட்டுகிறார், வழக்கமாகச் சோதிக்கும் எல்லாவற்றையும் செய்கிறார், அவர் வளர்ச்சி அட்டவணையை எடுத்து அவளுடைய எண்களை அதில் உள்ள எண்களோடு ஒப்பிடும்போது, அவள் முப்பத்தி ஐந்தாவது பர்ஸண்டைலுக்கு வந்து சேர்ந்திருக்கிறாள் என்று நாங்கள் அறிகிறோம்.
“இது ரொம்ப அருமை. லிலியன், நீ வளர்ந்துகிட்டு இருக்கே,” டாக்டர் ஃபிலிப்ஸ் அவளிடம் சொல்கிறார். “நீ பெரிஸ்ஸா இருக்கிற சிறுமி இல்லை, ஆனா ஆரோக்கியமா இருக்கே.” அவள் சிரிக்கிறாள், சிரித்தபடியே இருக்கிறாள், அவர் அவளுடைய கையைக் குலுக்குகிறார், என் கையையும் குலுக்குகிறார் – “உங்களுக்கு ஒரு அழகான மகள் இருக்கிறாள், ஜெரெமி”- பின் வெளியே போகுமுன் சிறிது குனிந்து வணக்கம் தெரிவித்து விட்டுப் போகிறார். ஃப்ளூவுக்குத் தடுப்பூசி போட நர்ஸ் உள்ளே வருமுன், நான் அவள் மிகவும் தைரியமாக இருக்கிறாள் என்பதையும், அந்த ஊசி அத்தனை வலிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும் என்கிறாள் லில்.
நாங்கள் அங்கிருந்து நீங்கிப் போகையில் அவள் என் கையைப் பற்றிக் கொள்கிறாள். “நீங்க எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறவர்,” அவள் என்னிடம் சொல்கிறாள். “நீங்க நிஜமா அலட்டிக்கிறவர்.”
“நீ ஒரு மண்டு,” நான் பதில் சொல்கிறேன்.
“நீங்க ஒரு மண்டு, ஜடம், அப்புறம் அலட்டிக்கிறவர்.”
அலட்டிக்கிறவர் என்பது அவளுக்குப் பிடித்தமான வசவு.
“நீ ஒரு சாம்பிராணி,” நான் சொல்கிறேன்.
“நீங்க ஒரு போக்கிரி.”
நாங்கள் இப்படியே ஏச்சுகளைப் பரிமாறிக் கொண்டு போகிறோம், நான் அவளைப் பள்ளிக் கூடத்திற்குத் திரும்ப அழைத்துப் போகிறேன். காரை விட்டு இறங்கும்போது அவள் கத்திச் சொல்கிறாள், “நீங்க ஒரு அசடு!” நான் அவளுக்கு ஒரு முத்தத்தைக் காற்றில் வீசுகிறேன்.
“லிலியன் நல்லா இருக்கா,” பிறகு என் மனைவியிடம் தொலைபேசியில் நான் சொல்கிறேன். “சின்னவள், ஆனா ரொம்பச் சின்னவள் இல்லை.”
“அது நல்ல சேதி,” மே சொல்கிறாள். “நான் அப்படித்தான் இருக்கும்னு நெனச்சேன். அவள் வலுவா இருக்கிற மாதிரிதான் தெரியறது.”
“அவள் எப்படியுமே குட்டியாத்தான் இருக்கப் போறா.”
“ஒருக்கால் அவள் கடைசியிலே நல்லா வளருவாளோ என்னவோ.”
நான் அதை நம்பவில்லை. லில் எதையும் முந்திக் கொண்டு செய்கிறவள்– பல் முளைப்பது, நடக்கிறது, பேசுவது எல்லாவற்றிலும் சீக்கிரம்– அப்புறம் மேயின் பரிவாரமும் சரி, என் குடும்பத்தினரும் சரி, யாரும் அப்படி ஒன்றும் வளர்த்தி என்று சொல்ல முடியாது.
மறுபக்கம் மே மூச்சு விடுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் அதை அவளிடம் சொல்ல முடியாமல் இருக்கலாம், ஆனால் எனக்குத் தெரியும் அவள் அந்தப் பக்கம் இருக்கிறாள், மூச்சு விடுகிறாள். அவள் தன் பெற்றோரின் ரெஸ்டாரண்டில் இருக்கிறாள், நிச்சயமாக நான் கேட்கிறவை நிறைய கடமுடா சத்தங்களும், கூச்சல்களும்தான். அது இரவுச் சாப்பாட்டு நேரம், அதற்குப் பிறகு அவள் எங்கள் வீட்டுக்கு வரவிருக்கிறாளா என்று என் மனைவியிடம் கேட்காமல் நான் கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.
ஆனால் அவளைக் கொஞ்சம் சீண்டுகிறேன். “லில் டாக்டர் கிட்டே, தன்னோட இதய ஒலியைக் கேட்கும்போது அதில் கடவுள் இருப்பதை அவரால் கேட்க முடிகிறதான்னு கேட்டாள்.”
“ஓஹோ,” மே சொல்கிறாள். “கேட்கவே நல்லா இருக்கே, அவர் என்ன சொன்னார்?”
டாக்டரின் பதில் எனக்கு ‘யெஸ் வர்ஜீனியா, தேர் ஈஸ் எ ஸாண்டா க்ளாஸ்’ படத்தை இப்போது நினைவுபடுத்தியது. “நேரடியா அப்படி இல்லை. ஆனால் நீ அப்படி உணர்ந்தாக்க, ஓரளவு கேட்கலாம்னு சொன்னார்.”
இது ஒரு மோசமான பதில். மே அமைதி காக்கிறாள்.
“லில் தான் அதை உணர்வதாகச் சொன்னாள்.”
என் மனைவி வலுவாக மூச்சு விடுகிறாள். “எனக்கு அது பிடிச்சிருக்கு,” அவள் சொல்கிறாள். ஆனால் அதற்கு உடனடியாக என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை, அதனால் அவள் சொல்கிறாள், “உங்களுக்கு அது பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும்.”
“அன்பே, நான் தான் உன்னிடம் சொன்னேன்.”
நாங்கள் இருவருமே, நான் அவளை அன்பே என்று அழைப்பது கேட்கவே எத்தனை புதிராக இருக்கிறது என்று உணர்கிறோம், அது இத்தனை புதிராகத் தெரிகிறது என்பது எனக்கு வருத்தம் தருகிறது.
மே சிலசமயம் வீட்டுக்கு வருகிறாள். ரெஸ்டாரண்டிலிருந்து காய்கறிகளைப் போட்டுப் பொறித்த சோறு எடுத்து வருவாள், அல்லது இனிப்பும்–புளிப்புமான கோழி, அல்லது மூ ஷூ பன்றி மாமிசம் வரும். லிலியனுடைய படுக்கை அறையில் இரண்டு கட்டில்கள் உண்டு, மே அங்கு தூங்கும்போது எனக்குத் தூக்கமே வராது. எங்கள் படுக்கையில் படுத்துக் கொண்டிருப்பேன், மின்சாரத் தாக்குதலுக்கு உட்படுவது போலிருக்கும். மின் தாக்குதல் எப்படி இருக்கும் என்று எனக்கு உண்மையாகத் தெரியாது, ஆனால் முன்னறையிலிருந்து சிறிது தூரத்தில் மனைவி இருக்கையில், பல மாதங்களில் ஒரு முறை கூட அவளைத் தொட அவள் அனுமதிக்காத நிலையில், அந்தப் பெரிய படுக்கையில் படுத்தபடி இருப்பது அந்தத் தாக்குதலுக்கு ஆளான நிலை போலத்தான் இருக்கும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். மின்சாரத் தாக்குதல் அப்படி இராது என்று என்னிடம் சொல்லிப் பாருங்கள், பார்ப்போம்.
வடக்கு மிஷிகனில் இருக்கும் ஒரே ஒரு சீனப் பெண்ணை நான் மணந்து கொண்டிருந்தேன்.
அது உண்மையல்ல. அந்த மாதிரி முட்டாள் தனமாக ஏதாவது சொல்வது எனக்கு வழக்கம். நிஜத்தில், லில்லுடைய பள்ளியில் வேறு இரண்டு ஆசியக் குழந்தைகள் உண்டு, மேலும் இரண்டு கருப்பினக் குழந்தைகள் உண்டு. (அவர்களில் ஒரு குழந்தை கலப்பினக் குழந்தை, லில்லைப் போல), தவிர சில லத்தீனோ குழந்தைகளும், மேலும் சில பழங்குடி அமெரிக்கக் குழந்தைகளும் இருந்தனர். ஆனால் பெரும்பான்மை வெள்ளைக் குழந்தைகளே, ஆனால் வெள்ளை இனமல்லாத குழந்தை அவள் ஒருத்தி மட்டும் இல்லை.
லிலியன் எங்களுடைய தத்தளிப்பான வாழ்நிலையை எதார்த்தமாக எடுத்துக் கொண்டு போவது போல எனக்குத் தோன்றியது. மே வரும்போது அவளைப் பார்ப்பதில் லில்லுக்கு மகிழ்ச்சிதான், ஆனால் மே வராத போது என்ன நடக்கிறது என்று லில் கேட்பதில்லை. சாதாரணமாக இருப்பது போல அவள் தன் பாட்டி/ பாட்டனார்களைப் பார்க்கப் போகிறாள், என்னோடு இதே வீட்டில் வசிக்கிறாள், பள்ளிக் கூடத்துக்குப் போகிறாள், நல்லபடியாகவே இருப்பதாகவும் தெரிகிறாள். ஆனால் இது இப்படியே நிறைய நாட்கள் நீடிக்காது என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. தவிர, மேயிடம் மதம் வந்து சேர்ந்திருக்கிறது, நானோ நம்பிக்கைகளை ஐயப்படும் முரட்டு முட்டாள், குறிப்பாக இப்படி மாற்றம் வந்தது அவளுடைய ஒன்று விட்ட சகோதரியின் குழந்தைக்கு லுகீமியா வந்த பிறகுதான் என்பதாலும் சந்தேகம்.
லுகீமியாவால் குழந்தைகள் இறப்பது இப்போதெல்லாம் நடக்கக் கூடாது. 60, 70 சதவீதம் நோயாளிகள் குணமடைகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம், அந்தக் குணமடையும் பிரிவில் இந்தக் குழந்தையும் இருக்குமென்று நாம் நினைப்போம். ஆனால், ஆல்பர்ட் மற்ற சிறு குழுவில் இருந்தான் என்பதற்கான காரணங்கள் புரிந்து கொள்ளப்பட முடியாதவை. அந்தப் புற்று நோயைத் தவிர அவன் நலமாக இருந்தான், இப்படிச் சொன்னால் அது பைத்தியக்காரத்தனமாக இருக்கும்– ஓ, அவனுக்கு வலுவான நுரையீரலும், இதயமும் இருக்கிறதா? அது பிரமாதமானதுதான், ஆனால் புற்று நோய் அவனை ஒடுக்கும்போது அவனுடைய பிரமாதமான இதர உடல் பாகங்களையும் அது நிறுத்தப் போகிறது.
மேயும், அவளுடைய ஒன்று விட்ட சகோதரியும் மிக நெருக்கமான உறவுள்ளவர்கள், ஆல்பர்ட் இப்படி என்று ஆனபின்னர், அவளுடைய சகோதரி எப்படியோ இந்த பைத்தியக்கார கிருஸ்தவ மந்திரவாதியிடம் போய்ச் சிக்கிக் கொண்டாள். அந்த மந்திரவாதி, ‘சக்தி’ மேலும் கிருஸ்துவின் ஒளி, கிருஸ்துவிடம் உங்கள் பளுவைக் கொடுப்பது எப்படி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தது கூட அத்தனை கெடுதலாக இருந்திராது, ஏனெனில் அவள் (மந்திரவாதி) வழக்கமான சிகிச்சைகளை நிறுத்தி விடும்படிச் சொல்லவில்லை, ஆனால் அந்த பெண்மணியின் உரைகளைக் கேட்பது, எத்தனையோ நேர விரயத்துக்கும், சக்தி இழப்புக்கும் இட்டுச் சென்றது. நான் அவளைப் பார்க்கவில்லை, ஆனால் அவளைப் பற்றிக் கேட்டேன், ஏனெனில் மே–யும் அந்த மாயாவதியிடம் வீழ்ந்தாள்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு ஆல்பர்ட் இறந்த போது, மே லிலியனிடம் அவன் சொர்க்கத்துக்குப் போய் விட்டான் என்று சொல்லி இருக்கிறாள். லிலியன் அது உண்மையா என்று என்னிடம் கேட்டாள், அதனால் நான் சொன்னேன், இங்கு நான் என்னையே மேற்கொள் காட்டுகிறேன், “ஆமாம்.”
வேறு விதமாக, “இல்லை, லில். உன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் இனிமேல் எதுவுமில்லை. அவன் வெறும் மாமிசம், அவனைத் தரைக்குள் புதைக்கப் போகிறார்கள்,” என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் என்னால் சொர்க்கம் என்பது குறித்தும் சிறிதும் உற்சாகம் காட்ட முடியவில்லை. என்றாலும், “ஆமாம்” என்பது லிலியனுக்குப் போதுமானதாக இருந்தது. மேயிற்கு அது போதுமானதாக இல்லை.
அங்கேதான் எங்கள் திருமணம் கரைந்து போகத் துவங்கியது. என் மனைவிக்கு வேண்டுகிற விதத்தில் என்னால் அவளைத் தேற்ற முடியவில்லை. நான் அவளுடைய நம்பிக்கையை இகழ்வாகப் பார்க்கிறேன் என்கிறாள் அவள். அது இகழ்ச்சி என்பதை விட திகைத்துப் போன நிலை என்பது பொருத்தமாக இருக்கும்.
ஆல்பர்ட் இறப்பதற்கு முன், மே கடவுளை நம்பியதில் ஒரு திட்டமோ, முனைப்போ இருக்கவில்லை. கடவுள் என்பது ஒரு ஆறுதல் தரும் கருத்து என்றிருந்தது. அவள் (அமெரிக்காவில்) இரண்டாம் தலைமுறை, ஆனால் அவளுடைய பெற்றோரும் இங்கு சிறு குழந்தைகளாகத்தான் வந்திருந்தனர், அதனால் அவர்கள் எல்லாருமே அமெரிக்காவில் வழக்கமான, மதத்தின் பால் விருப்பு–வெறுப்பற்ற/ சமயச் சார்பற்ற நிலையில்தான் மத விடுமுறை நாட்களை அணுகினார்கள். நாங்கள் எல்லாம் ஏசுவை கிருஸ்த்மஸ் மற்றும் ஈஸ்டர் நாட்களில் அங்கீகரிப்போம், ஆனால் முக்கியமானதாகக் கொண்டாடப்பட்டது மரங்களும், முட்டைகளும், மாயமாக வந்து பரிசுகள் கொடுப்பவர்களும்தான்.
மேலும் அவள் லில்லுடன் பிரார்த்தனைகள் செய்வாள்: “நௌ ஐ லே மீ டௌன் டு ஸ்லீப்.” லிலியன் இசை போன்ற தன் சிறு குரலில், “இஃப் ஐ ஷுட் டை பிஃபோர் ஐ வேக், ஐ ப்ரே த லார்ட் மை ஸோல் டு டேக்,” என அவளோடு சேர்வாள்.
மே பிரார்த்தனைகளைச் செய்வாள், நாங்கள் சில கதைகளைப் படிப்போம், பிறகு நானும் லில்லும் சில பழகின நிந்தைகளைப் பரிமாறிக் கொள்வோம்.
“நீ ஒரு தூங்குமூஞ்சி நத்தை.”
“நீங்க ஒரு முரடர்.”
“நீ ஒரு கோணாமாணாப் பொண்ணு.”
“நீங்க ஒரு அலட்டல் ஆள்.”
பிறகு நாங்கள் விளக்கை அணைப்போம், வாரத்தில் பல இரவுகளில் எங்களுடைய ‘ராணி’ அளவு பெரிய படுக்கையில், என் மனைவியை நான் ஆசையுடன் அணைப்பேன். அது பிரார்த்தனைகள் குழந்தைகள் பாடல்களைப் போல இருந்த, கடவுள் ஒரு ஆறுதல் தரும் கருத்தாக இருந்த காலம், அப்போது நாங்கள் யாரும் ஓர் ஒன்பது வயதுப் பையனின் சவ அடக்கத்திற்கு, முன்பு ஒரு போதும் போயிருக்கவில்லை.
மேயுடைய விடாப்பிடிவாதமான, புதிய நம்பிக்கையையும், முன்கூட்டிக் கணிக்க முடியாத வீட்டு வசிப்பு முறைகளையும் விட்டால், மற்றபடி அவள் ஒரு கெட்டியான நபர், நல்ல தாயும் கூட. அவள் லிலியனை நிறைய கவனிக்கிறாள். இங்கே வந்து அவளைத் தன் ரெஸ்டாரண்டுக்கும், தன் பெற்றோரின் வீட்டுக்கும் அழைத்துப் போகிறாள். பள்ளிக்கூட விவகாரங்களுக்கு வந்து விடுகிறாள், ரெஸ்டாரண்டில் உதவுவதோடு, பல் மருத்துவரின் உதவியாளாக வாரத்தில் முப்பது மணி நேரம் வேலை பார்க்கிறாள். சில சமயம் நான் வீட்டுக்கு வரும்போது, அவள் துணிகளைச் சலவை செய்து கொண்டிருப்பாள், அல்லது முன்புறப் புல் வெளியில் களையெடுத்துக் கொண்டிருப்பாள், இந்த மாதிரி விஷயங்கள் என்னை அப்படியே கொல்கின்றன.
எங்கள் வீட்டு வேலைகளில் மே ஈடுபட்டு நேரம் செலவழிப்பது எனக்குச் சற்று நம்பிக்கை அளிக்கிறது. அவளுடைய சம்பளக் காசோலை எங்களுடைய கூட்டுக் கணக்கில் போய்ச் சேர்கிறது, அவள் தனித் தனியே கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வதில்லை, அல்லது தனக்குத் தனியாக ஒரு இருப்பிடம் தேட வேண்டும் என்று சொல்லவில்லை, (லிலியனுடையை அறையில் உள்ள கூடுதல் படுக்கையில் படுக்காத போது, அவள் தன் பெற்றோரின் வீட்டில் தங்குகிறாள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்) அல்லது விவாக ரத்து வேண்டுமென்று கேட்கவில்லை.
நான் மேயைக் காதலிக்கிறேன். யேசுவே, அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய? அதை நான் அணைத்து விட முடியாது, அதுதான் ஆசையின் கொடுமை. ஆசை என்று நான் சொல்லும்போது வெறும் பாலுறவு ஆசையைச் சொல்லவில்லை. வேட்கையை, அப்படிச் சொல்வது கேலிக் கூத்தாகத் தோன்றாமலிருக்குமென்றால், ஆத்ம வேட்கையைச் சொல்கிறேன். நான் வழக்கமான எல்லாவற்றையும் செய்கிறேன் – லில்லைப் பராமரிக்கிறேன், வேலைக்குப் போகிறேன், வீடு சீரழியாமல் பார்த்துக் கொள்கிறேன் – ஆனால் பல மாதங்களாக நான் கதறிக் கொண்டிருக்கிற மாதிரிதான் இருக்கிறது. இரண்டு ஜெரெமிகள் இணைகோட்டில் இருக்கிறார்கள்: ஒருத்தன் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறான், இன்னொருவன் கதறுவதை நிறுத்த முடியாமல் இருக்கிறான். இப்படித்தான் ஆல்பர்ட்டின் பெற்றோரும் உணர்கிறார்கள் போலிருக்கிறது.
டாக்டர் ஃபிலிப்ஸ்தான் ஆல்பர்ட்டின் பெற்றோர்களை க்ராண்ட் ராபிட்ஸில் இருக்கிற குழந்தைகள் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார், அங்கேதான் அவர்கள் அவனுடைய நோயைக் கண்டுபிடித்தனர். என்ன ஒரு வேலை அது. அவர் அந்த வேலையை இன்னமும் ஏன் செய்து கொண்டிருக்கிறார் என்று நான் வியப்படைகிறேன். அவருக்கு எழுபது வயதாவது இருக்கும்.
லில்லிற்கு ஆறு மாதங்கள் முன்பு தொண்டையில் ஸ்ட்ரெப் கிருமி தாக்கம் ஏற்பட்டபோது, அவர் என்னிடம் சொன்னார், “ஆ ஜெரெமி, சிறுவன் ஆல்பர்ட் இறந்த பிறகு உங்கள் குடும்பத்தைப் பற்றி நான் ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொள்கிறேன்.” அவரிடம் சிகிச்சை பெறும் சிறார்களில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று கேட்டால், அவரால் உடனடியாக அந்த எண்ணிக்கையைச் சொல்ல முடியும் என்று நான் பந்தயம் கட்டுவேன். ஒருவர் குழந்தை வைத்தியராகும்போது, தான் என்னதற்கு ஒப்புதல் தெரிவிக்கிறோம் என்பது அவருக்குத் தெரிந்துதான் இருக்க வேண்டும் என்று எனக்குப் புரிகிறது.
ஆக எப்படி இருந்தாலும், மே யைத் திருப்தி செய்ய வேண்டுமென்று நான் விரும்புவதாலும், அவளை ஃபோனில் தொடர்ந்து பேசிய வண்ணம் இருக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும், அது எனக்குச் சிறிது கவலையையே கொடுக்கிறது என்றாலும், லிலியன் கடவுளைத் தன் இதயத்தில் உணர்வதாகச் சொன்னதை அவளிடம் சொல்கிறேன். ஆனால் லிலியன்தான் என்னத்தை அப்படித் தன் இதயத்தில் உணர்கிறாளாம்?
நான் அவளை ‘அன்பே’ என்று அழைத்ததில் இருந்த புதிரான தன்மையிலிருந்து நானும், மேயும் சற்றுத் தேறிய பின்னர், அவள் அன்று மாலை வீட்டுக்கு வருவதாகச் சொல்கிறாள், ஆனால் அது வெள்ளிக் கிழமை, அதனால் அவள் ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்ப நேரமாகும். எனக்கு அந்த பெரும் கொண்டாட்டம் நேரப் போகிற உணர்வும், உடனே அதைத் தொடர்ந்து வழக்கமான நம்பிக்கையற்றுப் போன உணர்வும் எழுகின்றன, இதுதான் அனேகமாக என் வாழ்க்கையின் நிலைமை இப்போதெல்லாம். இரட்டை ஜெரெமிக்கள்: கதறுபவனும், எப்படியோ போட்டடித்து வாழ்வை நடத்துபவனும்.
இப்போது ஆறு மணி ஆகிறது, நான் போய் அவள் அறையில் லில்லைக் காண்கிறேன், அவளிடம் நாங்கள் ஏரிக்கரைக்குப் போகலாம் என்று யோசனை தருகிறேன். செப்டம்பரில் அங்கே இன்னமும் அருமையாகத்தான் எல்லாம் இருக்கும். நாங்கள் நீந்த விரும்ப மாட்டோம், ஆனால் நான் மணலில் அமர்ந்து, மிஷிகன் ஏரியைப் பார்த்த வண்ணமிருந்தபடி, லிலியனை எந்த நாளிலும் ஓடி விளையாட விடுவேன். நாங்கள் குளிர்காலத்தில் கூட தலைக்குக் குல்லாய்களும், மேலங்கிகளும் அணிந்து கொண்டு, அங்கே போகிறோம். அந்த ஏரி எத்தனை ஆபத்தானது என்பது யோசிக்கவும் அதெல்லாம் பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறது. கோடையிலும், குளிர் காலத்திலும் ஜனங்கள் அங்கே உள்ள படகுத் துறைகளுக்குப் போகிறார்கள், அது அவர்கள் செய்யத் தகாத செயல். அவர்கள் அங்கிருந்து காற்றால் அடித்துத் தள்ளப்பட்டு, கீழே வீழ்ந்து பாறைகளில் தலை மோதி நீரில் மூழ்கி விடுவார்கள்.
லில் ஏரிக்கரையில், கார் நிறுத்துமிடத்தருகே உள்ள பூங்காவில், உயரக் கம்பிகளிலும், ஊஞ்சல்களிலும் விளையாட விரும்புகிறாள். பத்து நிமிடங்கள் அதைச் செய்ய அவளை அனுமதித்து விட்டு, பிறகு அவளை ஏரிக்கரை மணற் பகுதிக்குத் தள்ளிக் கொண்டு போகிறேன். மிஷிகன் ஏரி: அதை எப்படி விளக்குவது? முதல் முறையாக அட்லாண்டிக் கடலை நான் பார்த்த போது, “இது பெரும் ஏரிகளைப் போல இருக்கே!” என்று சொன்னேன். இங்கே வந்திராதவர்களுக்கு இதைப் பற்றி ஏதும் புரியாது. அவர்கள் ‘பெரும்’ என்ற வார்த்தையை விட, ‘ஏரிகள்’ என்ற சொல்லுக்கு அதிகக் கவனம் செலுத்துவார்கள், அதனால் அவர்கள் நிஜமாகவே நாணல் படர்ந்த ஒரு ஆழமற்ற குளத்தைத்தான் கற்பனை செய்து கொள்கிறார்கள். கொஞ்சம் ஏரிக்கரைப் பகுதி பாறைகள் நிரம்பியதுதான், ஆனால் இங்கு கார் நிறுத்துமிடத்திலிருந்து நீர்ப் பரப்புக்கு வரும் தூரத்தில் ஏறத்தாழ பத்து லட்சம் கஜங்களுக்கு வெண்மணல் பகுதி இருக்கிறது. அது அத்தனை அழகாக இருக்கிறது, அதை என்றென்றும் பார்த்துக் கொண்டே இருக்க நான் தயார்.
கரையில் லிலியன் மண்ணுக்குள் தோண்டுகிறாள், அலையடித்து அவளைச் சேரும்போது கூச்சல் போடுகிறாள். தனக்குப் பசிக்கிறதென்று அவள் சொல்லும்போது ஒளி மங்கி நீலமாக இருள் கவியத் துவங்குகிறது, அவள் முழுதும் நனைந்து, நடுங்கிக் கொண்டிருக்கிறாள். அவளை அசையாமல் இருக்க வைத்து, ஈர மண்ணைத் தட்டி நீக்கும் வரை பொறுமையாக இருக்கச் செய்கிறேன், அது அத்தனை பயனுள்ள வேலையாக இல்லை என்ற போதும், பிறகு நாங்கள் வீட்டுக்குத் திரும்புகிறோம். நான் மே பற்றி இன்னும் சொல்லவில்லை, ஆனால் நாங்கள் வீட்டுக்குத் திரும்பும்போது வீட்டில் விளக்குகள் எரிகின்றன, கதவைத் திறக்கும்போது உள்ளிருந்து கதகதப்பான, அரிசிச் சோற்றின் மணம் வீசுகிறது. மேயின் பெற்றோரின் உணவு எங்கள் திருமண வாழ்வின் புலன் அனுபவங்களில் முக்கியமான பங்கு வகித்ததை நான் நினைத்துக் கொள்கிறேன்.
“அம்மா!” லில் கீச்சிடுகிறாள், கதவு திறக்கும் போதே, “நூடில்!”
தன் ஈரமான, மண்ணடர்ந்த கால் சராய்களிலிருந்து நுழை வாயிலிலேயே உலுக்கிக் குலுக்கி விடுபடுகிறாள், எங்கள் பின்னே கதவைச் சாத்தும் முன்னர், நான் அவற்றை முன் வராந்தாவின் மரச் சட்டங்களில் போடுகிறேன். மே தன் ஜீன்ஸின் மீது தன் கைகளைத் துடைத்த வண்ணம், சமையலறையிலிருந்து வெளியே வருகிறாள். லில் அவளிடம் ஓடுகிறாள்.
“ஓ, நீ எத்தனை சில்லுன்னு இருக்கே!” என் மனைவி சொல்கிறாள். “உன்னை குளியல் தொட்டிக்கு உடனே கொண்டு போகணும்.” அவள் என்னைப் பார்க்கிறாள். “ஜெரெமி, நீங்க சாப்பாட்டை உலையடுப்பில் வைத்தால் சூடாக இருக்கும்.”
அவள் என்னிடம் சொல்கிற ஒவ்வொரு கடைசி வாக்கியத்திலும், சிறிது ஊக்கம் கொடுப்பதாக எதையாவது கேட்க விரும்புகிறேன். ஆனால் அவள் வருவதையோ, போவதையோ நான் கேள்வி கேட்கக் கூடாது என்று இருக்கிறது, இடையில் எப்போதோ அவளுக்கு – எனக்கு அது என்ன என்றுகூட எனக்குத் தெரியாது– நிரந்தரமாக என்னை விட்டுப் போவதா என்று தீர்மானிக்க வேண்டும் என்றிருக்கும், என்பது என் ஊகம். அதனால் நான் அவளுக்காகக் காத்திருக்கிறேன். எங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, நான் ஒரு பியரைக் குடிக்கிறேன், இரவுச் சாப்பாட்டைச் சூடுபடுத்துகிறேன், அவள் எங்கள் மகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறாள், நான் அவளுக்காகக் காத்திருக்கிறேன்.
அவர்கள் சமையலறைக்குத் திரும்பும்போது, லிலியன் ஒரு இலேசான, உப்பலான மஞ்சள் நிற இரவு உடுப்பைப் போட்டிருக்கிறாள், அது அவளை கருப்புத் தொப்பியணிந்த வாத்தைப் போலக் காட்டுகிறது, அவள் சிவந்து, மென்மையாக, ஒளிர்கிறவளாகத் தெரிகிறாள். மருத்துவரிடம் போய் வந்த பின் சூடாக்கப்பட்ட சீன உணவு உண்பதும், ஏரிக்கரைக்குப் போய் வந்ததும், இருப்பதிலேயே சிறந்த விஷயங்கள் என்பது போல நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் அப்படித்தான் இருக்கிறது.
இதெல்லாம் அவளுக்கு மிகப் பழக்கமானவை, இந்த வீடு, உணவு, ஏரிக்கரை, டாக்டர். ஃபிலிப்ஸ்– அவர் இறந்தபின் என்ன ஆகும்? – மே, பிறகு நான். சில சமயம் என் பரிதவிப்பான நிலையால், மே நிஜமாகவே விலகிப் போவதாகத் தீர்மானித்தால் அது லில்லையும் காயப்படுத்தும் என்பதை நான் மறந்து விடுகிறேன்.
எனக்கு ஒரு யோசனை உண்டு, அது ஒரே நேரம் ஆறுதலாகவும், கலக்கமூட்டுவதாகவும் இருப்பது. மே விலகிப் போக முடிவு செய்தால், நான் தற்கொலை செய்து கொள்வது போல உணர்வேன், ஆனால் அதைச் செய்ய மாட்டேன், ஏனெனில் என்னிடம் லிலியன் இருக்கிறாள். நான் தற்கொலை செய்யாமல் இருப்பது பிறருக்கும் பயன் தரும்: என் பெற்றோருக்கும், மே–யின் பெற்றோருக்கும் தான் பயன் என்று நான் ஊகிக்கிறேன், பிறகு என்னிடம் வேலை பார்க்கும் சிலருக்கும். ஆனால் லில்லிற்கு நான் தேவைப்படும் அளவு வேறு யாருக்கும் நான் அத்தனை தேவைப்பட மாட்டேன். அதனால் அவள் இல்லையென்றால், மிஷிகன் ஏரிக்குள் நடந்து போய் விடலாம் என்பது எனக்குத் தீவிரமான தூண்டுதலாகவே இருக்கும்.
எங்கள் சமையலறையில் ஒரு மேஜை இருக்கிறது, அதன் ஒரு பக்கம் சுவரை ஒட்டித் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது, அதனால் அதில் மூன்று நாற்காலிகள் போடத்தான் இடம் உண்டு. ஆல்பர்ட்டின் நோய் கண்டுபிடிக்கப்படுவதற்குச் சில வருடங்கள் முன்னர், நாங்கள் இருவரும் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி யோசித்திருந்தோம், ஆனால் இப்போது என் கவனம் எல்லாம் இருப்பதே குறைவதைத் தடுப்பது பற்றி இருக்கிறது. மூன்று பேர் என்பது கச்சிதமாகத் தெரிகிறது. மேயும், நானும் கூடக் குழந்தைகள் தானே.
மே சாப்பாட்டைக் கொண்டு வந்த பிறகு, அமர்கிறாள், தன் உள்ளங்கைகளை இணைத்துக் கொள்கிறாள், லிலியனும் அப்படியே செய்கிறாள். நான் என் கைகளை மடியில் வைத்துக் கொண்டு அவர்களுக்காகக் காத்திருக்கிறேன்.
“அன்பான கர்த்தரே,” என் மனைவி ஆரம்பிக்கிறாள், “இந்த உணவுக்கு உங்களுக்கு நன்றி.” அவள் எங்கள் தேக நலத்துக்கும், சகோதரன் ஆல்பர்ட்டை சொர்க்கத்தில் அன்போடு அணைத்துக் கொண்டதற்கும் அவருக்கு தன் நன்றியைத் தெரிவிக்கிறாள்.
நீங்கள் ஒருக்கால் அவனை இங்கேயே விட்டிருக்கலாம், கடவுளே, என்று நான் நினைக்கிறேன். இந்த மாதிரி விஷயங்கள்தான் மேயுடைய புது கிருஸ்தவ நம்பிக்கையிடம் என்னைப் பொறுமை இழக்கச் செய்கின்றன. ஆல்பர்ட் இறந்து விட்டான், அது சகிக்க முடியாததாக இருக்கிறது, அது ஒன்றும் எந்தத் திட்டத்தாலும் நடக்கவில்லை, ஏனெனில் எவ்வளவு கேவலமான திட்டமாக அது இருக்க வேண்டி வரும்? எனவே பெரிய வேலைதான், கடவுளே, அவனை சொர்க்கத்தில் பார்த்துக் கொள்வதெல்லாம் சரி, ஆனால் அது இரண்டாம் திட்டமாகத்தான் இருக்கும். நிஜமாகச் சொன்னால் அது கடைசி கடைசித் திட்டமாகத்தான் இருக்க முடியும்.
மே முடித்து விடுகிறாள், லிலியன் தன் வழக்கமான “அப்புறம் கடவுளே, எங்கள் மகிழ்ச்சியான குடும்பத்துக்காக உங்களுக்கு நன்றி. ஆ–மென்!” என்பதோடு முடிக்கிறாள்.
அதை நீ கேட்கிறாயா, மே? நம் மகிழ்ச்சியான குடும்பமாம். ஆ–மென்.
“டாக்டர் ஃபிலிப்ஸைப் பற்றி அம்மாவிடம் சொல்லு, லில்.”
“நான் வளர்கிறேன் என்பதையா?”
“அது அருமையான செய்தி. நீ வளர்கிறாய் என்று எனக்குத் தெரியும்.”
“எனக்கும் கூட,” லிலியன் சொல்கிறாள். “எனக்கும் தெரியும்.”
நான் புன்னகைக்கிறேன், மே யின் கண்களைச் சந்திக்கிறேன், கண்ணைச் சிமிட்ட வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது ஆனால் அது ரொம்ப சரசமாடுவதாகத் தெரியும். ஆனாலும், அவள் பதிலுக்குச் சிரிக்கிறாள்.
ஆக, டின்னர் நன்றாக முடிந்தது, இந்தக் கணம் வரை எதிர்பார்க்கக் கூடிய விதமாகவே இருந்தது. மேயும் நானும் நண்பர்களாக இல்லை என்றாலும், பழகியவர்களாக, மரியாதையோடு நடந்து கொள்கிறோம். லில் சளசளவென்று பேசுகிறாள், நாங்கள் இருவரும் ஓரிடத்தில் இருக்கிறோம் என்பது அவளுக்கு குதூகலத்தைக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
அவள் களைத்த போது என்னை எட்டித் தொடுகிறாள். மே, தான் எல்லாவற்றையும் சுத்தம் செய்து விடுவதாகச் சொல்கிறாள், நான் லில்லை குளியலறைக்குத் தூக்கிக் கொண்டு போகிறேன். பல் துலக்கும்படி ஊக்கப்படுத்தி, அவளைப் படுக்கைக்கு எடுத்துச் செல்கிறேன். நான் அவளருகே, படுக்கையின் விரிப்புக்கு மேல், சுவற்றோடு நசுங்கிப் படுத்துக் கொள்கிறேன். அப்பாவாக இருப்பது என்பது இந்த அழகான, சாதாரணமான விஷயம். அந்த நிலையிலேயே ஒண்டிக் கொண்டு, இப்போது லிலியனருகே ஒண்டிப் படுத்திருப்பது போல இருந்து, ஓய்வெடுக்க வேண்டுமென நான் நினைப்பதுண்டு. திருமணத்தைப் பற்றியும் இப்படித்தான் நான் நினைத்திருந்தேன்.
மேயும் நானும் அப்படி ஒன்றும் கிளர்ச்சியூட்டும் வாழ்க்கை நடத்தியதாகச் சொல்ல முடியாது, ஆனால் சாதாரண சூழ்நிலைகளில் நடக்கும் ஒரு காப்பியக் காதல் கதையை நாங்கள் வாழ்வதாக அவளிடம் சொல்வதை நான் விரும்பியிருக்கிறேன். அது வழக்கமானதாக ஆகி விட்டிருந்தது: எங்களில் ஒருவர் சொல்வார், “காப்பியக் காதல் கதை,” அப்போது மற்றவர் சொல்வார், “சாதாரணச் சூழ்நிலைகள்.” லிலியன் பிறந்த பிறகு, மேயிடம் நான் முதலில் சொன்னவற்றில் இது இருந்தது.
நான் விழித்த போது என் கை கடுமையாக மரத்துப் போயிருந்தது, இன்னும் சுவற்றோடு ஒட்டி இருந்தது. நான் எழுந்து, லில்லின் படுக்கையின் ஓரத்துக்கு நகர்கிறேன், என் மரத்துப் போன கையை இன்னொரு கையால் தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறேன். இரண்டாவது படுக்கையில், லிலியனுக்கு எதிர்ப்புறமாகப் படுத்துக் கொண்டிருப்பது, என் மனைவி. பல மாதங்களில் இதுதான் முதல் தடவையாக நாங்கள் இருவரும் ஒரே அறையில் தூங்குகிறோம்.
வெள்ளைத் தலையணையில் அவளுடைய கருப்பு முடி எதிர்நிறமாகத் தெரிகிறது, அதனால் அதை நான் உற்றுப் பார்க்கிறேன். அவள் விழித்துக் கொண்டால் என்ன சொல்வாள்? என் கை மெள்ள உயிர் பெற்றுக் கொண்டிருக்கிறது, எத்தனை நேரம் ரத்தச் சுழற்சி இல்லாமல் இருந்தால் நிஜமான சேதம் நேரும் என்று யோசிக்கிறேன். ஒரு வேளை நிறைய நிறைய நேரமெடுக்கும், ஆனால், எவ்வளவு சுலபமான வழிகளில் எல்லாம் நாம் நம்மையே சேதப்படுத்திக் கொள்ள முடியும் என்பது, எல்லா வெட்டுகளும், சூட்டுக் காயங்களும், ரத்த ஓட்டத்தை நிறுத்துவதும், படகுத் துறையிலிருந்து கீழே வீழ்வதும், அதெல்லாம் மிகவும் அபாயகரமானதாகவும், பீதியூட்டுவதாகவும் தோன்றுகிறது. அல்லது புற்று நோய் வருவதும், நடந்து போய் ஏரிக்குள் மூழ்குவதும்.
மேயை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது, முகம் சுளிக்க வைக்கும் நடத்தையாக இருக்கலாம், என் மனைவியை உற்றுப் பார்ப்பது அப்படி முகம் சுளிக்க வைக்கும் நடத்தை எனக் கருதப்படலாம் என்பது எனக்கு எரிச்சலூட்டுகிறது, அது கொஞ்சம் ஆபத்தானது. நான் கோபப்படும்போது அவள் இன்னும் தூரத்தில் இருப்பவளாகத் தெரிகிறாள்.
நான் அருவருப்பூட்டுபவனாக இருக்க விரும்பவில்லை, எனவே எழுந்து குளியலறைக்குப் போகிறேன், அங்கே கடிகாரம் 3.33 என்று காட்டுகிறது. பாதி இரவில் பைத்தியக்காரத்தனமான தேர்வுகளை நான் யோசிக்கிறேன்: ஒரு நடை போவது, காஃபி போடுவது, இண்டர்நெட்டில் ஒரு காரணமும் இன்றி உலவுவது. நான் மறுபடி தூங்கப் போக வேண்டும், ஆனால் நான் முதலில் ஒரு ஷவர் குளியல் எடுக்கத் தீர்மானிக்கிறேன். அங்கே கண்ணீர் விட்டு அழுவது சுலபம், அது எங்கள் படுக்கை மாதிரி அத்தனை தனிமையை நினைவூட்டும் இடம் அல்ல.
காலையில், நிஜக் காலை, காலை 3 மணி இல்லை– லில் என்னை எழுப்புகிறாள்.
“எழுந்துக்கிறீங்களா, பயந்தாங்கொள்ளி.”
மஞ்சள் நிற இரவு உடுப்பை அணிந்து, என் நெஞ்சின் மீது சாய்ந்துகொண்டிருக்கும் உற்சாகமான காலை நேர வாத்து அவள்.
“அம்மா காலம்பறச் சாப்பாட்டைத் தயார் பண்றாங்க.”
எனக்கு அந்த வாசனை கிட்டியது.
நான் என் கால் சராய்களை இழுத்து அணிகிறேன். மேயின் முன்னால் என் உள்ளாடைகளோடு உலவுவது– கொஞ்சம் அதிகப்படியாக இருக்குமோ, எனக்குத் தெரியவில்லை.
அங்கே காஃபியும், முட்டைத் துவட்டலும், மாவு அப்பங்களும் இருக்கின்றன, என் மனைவி, எங்கள் வீட்டில் தயாரித்தவை. சாதாரணச் சூழ்நிலைகள்.
அவள் குளித்து, ஆடைகள் அணிந்து தயாராகி விட்டாள். லில்லின் உடுப்பு அறையில் அவள் தன் உடைகள் சிலவற்றை வைத்திருக்கிறாள். சில சமயம் அங்கே போய் அவற்றை நான் பார்ப்பதுண்டு. எங்கள் படுக்கையறையில் இருக்கும் உடுப்பறையிலும் அவள் உடைகள் சில உண்டு. ஆனால் அவற்றை அவள் கைவிட்டு விட்டாள் என்று ஊகிக்கிறேன்.
காலை உணவுக்குப் பிறகு லில் ஓடிப் போய் விடுகிறாள், நானும் மேயும் எங்கள் காஃபி கோப்பைகளுடன் மேஜையடியில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்கிறோம். நான் சத்தியமாகச் சொல்கிறேன், என் முகம் சிவக்க ஆரம்பிக்கிறது. என் முகமும், கழுத்தும் சூடாகின்றன, என் காஃபியை நான் கீழே வைக்கிறேன், மே சொல்கிறாள், “நான் ஜூலியோடு நேற்றுப் பேசினேன்.”
ஜுலி ஆல்பர்ட்டின் அம்மா, அவளுடைய ஒன்று விட்ட சகோதரி.
“அவர்கள் வாழ்வைக் கொண்டாடும் விதமாக ஒரு வழிபாடு நடத்த விரும்புகிறார்கள்.”
இன்று செப்டம்பர் 26. ஆல்பர்ட் சென்ற வருடம் அக்டோபர் 3 ஆம் தேதி இறந்தான். இந்த வருடம் அவன் ஆறாம் வகுப்பில் சேர்ந்திருப்பான்.
“வாழ்வைக் கொண்டாடுவதுதான் உடல் அடக்க நிகழ்ச்சி என்று நான் நினைத்தேன்.”
“எனக்குத் தெரியாது. ஏதோ ஒன்று. ஒரு சடங்கு.”
காரணமில்லாமல் நாங்கள் இருவருமே உறுத்தலுக்குள்ளாகி இருந்தோம். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்ட இந்த நிகழ்வால் இப்படித்தான் நாங்கள் ஒருவரோடு ஒருவர் எரிச்சல்பட்டுக் கொண்டிருந்திருக்கிறோம். அல்லது பிரிந்து போய்க் கொண்டிருக்கிறோம். முதலில் மிகக் கவனமாக உரையாடல்கள் நடந்தன, மே ஏன் இப்போது இங்கே தங்குவதில்லை, மதம் பற்றி, பிறகு அமைதி நிலவிய கட்டத்தில் மிக்க கவனமான மரியாதை காட்டல் இருந்தது, அதோடு இப்போது சலிப்பு பீறிடும் கணங்களும் சேர்ந்து வருகின்றன. ஒரு வேளை அடுத்தது நாங்கள் விரோதம் மேலெழும் கட்டத்துக்குப் போவோமோ?
“குடும்பத்தோடு ஏதோ ஒன்று, ஒரு சடங்கு. நாங்கள் இன்னமும் அவனை நேசிக்கிறோம் என்று சொல்லத்தான், மேலும்…. நாங்கள் இப்போது தேறி இருக்கிறோம், அவனும் நல்லபடியாக இருக்கிறான் என்று சொல்ல…”
அவள் இதை ஒரு சவால் போலச் சொல்கிறாள், உண்மை என்னவென்றால், ஆல்பர்ட் நன்றாக இல்லை என்று நான் நினைக்கவில்லை. சாவு என்பது ஒன்றும் பெரியளவு மோசமான விஷயம் இல்லை. மாறாக, அவன் இப்போது எதுவாகவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் இப்படி இருப்பதைத் தவிர்க்க முடியாது. நான் எதையாவது எனக்கு நானே சொல்லிக் கொண்டு நம்புபவனாக மாறி விட முடியாது.
“மேலும், ஜூலி கர்ப்பமாக இருக்கிறாள்.”
“அபாரம்.”
“அப்படித்தானே?”
நான் என்ன நினைக்கிறேனோ அதையே மேயும் நினைக்கிறாள் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஜூலியும் கார்லும் உடலுறவு கொள்கிறார்கள். இப்படி எண்ணுவது கேவலமான வகையில் இல்லை, ஆனால் ஒரு எதார்த்தமான உண்மை என்ற வகையில். ஆல்பர்ட்டின் பெற்றோர்கள் உடலுறவு கொள்கிறார்கள், நாங்களோ ஆல்பர்ட்டின் அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரியும் அவள் கணவனும்தான். நானும் மேயும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவள் என் மீது இன்னும் அன்பு கொண்டிருக்கிறாள் என்றால் அவளுக்கு இப்படி விலகி இருப்பது மிகக் கடினமாக இருக்கும் என்று நான் புரிந்து கொள்கிறேன், அது எனக்குக் கடும் தாக்கம் உண்டாக்குகிறது. அவளும் என்னைப் போலவே மின் தாக்குதலுக்கு உள்ளானவளாக உணர்வாள்.
அல்லது அப்படி நடக்காது. என் மீது அன்பு இல்லாதவளாக ஆகி இருந்தால் அவள் உடனடியாக இங்கிருந்து போய் விடுவாள். லட்சக்கணக்கான தடவைகள் நான் இப்படி உணர்ந்திருக்கிறேன், என்னால் இதை இனிமேல் தாங்க முடியாது. ஆனால் அதையே மேலும் மேலும் தாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன்.
“நீங்க வருவீங்களா? ஆல்பர்ட்டோடதுக்கு– அது என்னவாக இருந்தாலும்?”
“வேறெப்படி? நிச்சயமா.”
“நான் இப்பப் போகணும். என் அப்பா அம்மா கிட்டே பகல் சாப்பாட்டுக்கு வந்து உதவறதாச் சொல்லி இருக்கேன்.”
“நான் சுத்தம் செய்துக்கறேன்.”
“நான் அப்புறம் வந்து லிலியனை அழைச்சுகிட்டுப் போறேன்.”
ஏற்பதாகத் தலையசைக்கிறேன்.
அவள் கிளம்பி விடுகிறாள்.
மேயும் நானும் பதினோரு வருடங்களுக்கு முன்பு சந்தித்தோம். அவள் நான்கு வருடங்கள் இளையவள், அதனால் உயர்நிலைப் பள்ளியில் நாங்கள் சேர்ந்து படித்ததில்லை. பிறகு நான் கல்லூரிக்குப் படிக்கப் போயிருந்தேன், அவள் தன் பெற்றோரின் ரெஸ்டாரண்டில் சமைத்துக் கொண்டிருந்தாள், உள்ளூர் சமூகக் கல்லூரியில் பல் சுத்திகரிப்பு உதவியாளர் பயிற்சி பெற்றாள்.
இது ஒரு சிறு நகரம், ஆனால் எங்கள் புழக்கச் சுற்று வட்டங்கள் சந்திக்கக் காரணமே இருக்கவில்லை, அவள் கார் ஒரு விபரீதமான இடிப்புச் சத்தத்தை எழுப்பும் வரை. நான் தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தேன், ஆனால் எனக்குக் கார்களைப் பற்றித் தெரியும், அதனால் நான் ஊர் திரும்பி வந்து என் அப்பாவோடு வேலை செய்து, தேவையான சான்றிதழைப் பெற்றேன். சில வருடங்கள் கழித்து அவருடைய ஒர்க்ஷாப்பை நான் முழுதுமாகக் கையிலெடுத்துக் கொள்ளத் தயாரிப்பாக, அவரைப் படிப்படியாக பட்டறை வேலைகளிலிருந்து விடுவித்தோம்.
நான் பெரிய உருவுள்ளவன் இல்லை, ஆனால், வழுக்கைத் தலையோடு இருந்தாலும், நான் பார்க்க நன்றாக இருப்பதாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். தன் கார் பற்றி அச்சத்தோடு மே என் கடைக்கு வந்த போது நான் அவளிடம் ஒரு நல்ல அபிப்பிராயத்தைக் கொடுத்திருக்கிறேன். அவள் ஒரு வயதான, பருமனான மெகானிக்கை எதிர்பார்த்திருக்கிறாள் போலிருக்கிறது. ஆனால் கடையின் பின் பகுதியிலிருந்து வந்தது நான், வந்த வேகத்தில் மூச்சிழந்து, முறுக்கும் குறடு ஒன்றோடு நின்றேன். உங்களுக்குத் தெரியுமே, அது ஆண்களில் ஒரு வகை மாதிரி. அவள் கவனித்தாள்.
நானும் கவனித்தேன். மே சிறு உருவுள்ள பெண், ஆனால் அவளிடம் எஃகிரும்பின் உறுதித்தன்மையும் உண்டு. அன்று அவள் கண்கள் ஒரு மாதிரி தறி கெட்ட நிலையில் இருந்தன, அவள் மிக உன்னிப்பாக இருந்தாள். அந்த உன்னிப்பைத்தான் நான் முதலில் கவனித்தேன். எங்களிடையே ஒரு வினாடி ஓர் அங்கீகரிப்பு போல இருந்தது, அதில் பால் கவர்ச்சியும் இருந்தது, ஒரு வினாடி சங்கடம் இருந்தது, பிறகு நான் அவளுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்டேன்.
அதுதான் எங்களுடைய காப்பியக் காதல் கதையின் துவக்கம்.
அந்த இடிப்பு அவளுடைய கார் எஞ்சினின் கடைசிப் பயணத்தின் அறிகுறி. நான் அவளுடைய காரை உதிரி பாகங்களுக்கென விற்கவும், பிறகு ஒரு புதுக் கார் வாங்கவும் உதவி செய்தேன். எனக்கு நன்றி தெரிவிக்க, அவள் ஒரு ஞாயிறு மாலையில், வழக்கமாக மூடியிருக்கும் தங்கள் ரெஸ்டாரண்டை திறந்தாள். எனக்காகச் சமைத்தாள், வேறு யாரும் அங்கு இல்லை, பிறகு நான் அவளுடன் வீட்டுக்குப் போனேன். அவள் நகர மையத்தில் ஒரு கடைக்கு மேலே இருந்த அடுக்ககத்துக்கு அழைத்துப் போனாள்.
ஒரு வருடத்துக்கு நாங்கள் எல்லாப் பருவ காலங்களிலும் ஏரிக்கரைக்குப் போனோம், சீன உணவை உண்டோம், நிறைய உடலுறவு வைத்துக் கொண்டோம். பிறகு நான் அவள் அப்பாவிடம் அவளை எனக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டேன், அப்படிக் கேட்பது எனக்குப் புதிராக இருந்தது, எப்படி என்றால், ஏது, அவள் தனக்கென்று முடிவெடுக்க முடியாதா என்ன? ஆனால் அவர் அதை மிக மெச்சினார். அவர் அத்தனை உற்சாகம் கொண்டிருந்ததால், நான் அவளிடம் சொல்வதற்கு முன் அவர் சொல்லி விடுவார் என்று நான் பயந்தேன், அதனால் உடனடியாக அவளுடைய அடுக்ககத்துக்குப் போனேன், அவள் கதவைத் திறந்ததும் அவளிடம் சொன்னேன், “என்னைத் திருமணம் செய்து கொள்.” நாங்கள் அங்கிருந்து படுக்கை அறைக்கு ஓடினோம், பிறகுதான் மோதிரத்தின் நினைவு எனக்கு வந்தது. அவள் இன்னும் அந்த மோதிரத்தை அணிந்து கொண்டிருக்கிறாள், திருமண மோதிரத்தையும்தான். ஆனால் அவை ஏதோ தற்செயலாக அணியப்பட்டவை போலத் தெரிகின்றன.
இது எல்லாமே ஆல்பர்ட்டையும், கடவுளையும் பற்றி மட்டும் இருக்க முடியாது, ஆனால் ஒருக்கால் எனக்கு அதுபற்றி ஒருபோதும் விளக்கம் கிட்டாது போகலாம். அவள் என்னிடம் திரும்பி வரும் வழியைக் கண்டு கொண்டால், இதுபற்றிய என் அறியும் ஆர்வத்தை நான் அப்படியே விழுங்கிக் கொள்வேன். அது ஓர் உலர்ந்த, பெரிய மாத்திரையை விழுங்குவது போல என்றாலும், ஒவ்வொரு நாளும் விழுங்குவேன்.
ஆல்பர்ட்டின் சவ அடக்கம், குளிர்ந்த, நல்ல வெய்யில் அடித்த ஒரு நாளன்று, ஏரிக்கரையில் நடந்தது. காற்று நிறைய இருந்தது, பாதிரியாரிடமோ ஒரு உதவாக்கரை கம்பியில்லா ஒலி பெருக்கி இருந்தது. லிலியன் அவளுடைய குளிர்காலத்து மேலங்கியும், குல்லாயும் அணிந்திருந்தாள், பாதியில் என் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவளுடைய உதடுகளை என் காதருகே கொண்டு வந்து, மெல்லக் கேட்டாள், “அவர் என்ன சொல்கிறார்?”
நான் அவள் காதருகே என் உதடுகளைக் கொண்டு போனேன். “நாம் எல்லாரும் ஆல்பர்ட்டை மிகவும் நேசித்தோம் என்று சொல்கிறார்.”
அவள் தன் கன்னத்தை என் தோளின் மீது வைத்தாள், பிறகு தலையை மறுபடி உயர்த்தினாள், “வேறு என்ன?”
எனக்குத் தெரியவில்லை. அங்கு ஏகமாகக் காற்றடித்தது, வார்த்தைகளைப் போன்ற ஒலிகளின் மரமரப்பொலி கேட்டது, சில கஜங்கள் தள்ளி அலைகள் அடித்த ஒலி வேறு, அது சற்றும் உதவவில்லை, ஆனால் நான் ஒரு மென்மையான, நம்பக்கூடிய பதிலைக் கண்டு அவளிடம் கொடுக்கும் முன், லில் சொன்னாள், “அம்மா அழுகிறாள்.”
நான் என் மனைவியைப் பார்க்கிறேன். அவள் தன் மூக்கிற்கும், வாய்க்கும் மேல் ஒரு கைக்குட்டையை வைத்து, உறை அணிந்த தன் கையால் அழுத்திப் பிடித்திருக்கிறாள், அவளுடைய உடல் மேலும் கீழும் ஆடி அடங்குகிறது, ஒரு வினாடி கழித்து அது குலுங்கி அழுவதால் என்று நான் புரிந்து கொள்கிறேன். அவளுடைய பெற்றோர் மறுபுறம் அருகில் அமர்ந்திருக்கின்றனர். லிலியனும், நானும் ஒரு புறம் இருக்கிறோம், ஆனால் அவளுடைய துக்கத்தில் ஏதோ தன்னுள் அடங்கியதாக, அந்தரங்கமானதாக இருப்பதாக எனக்குப் பட்டதால் அதில் அவள் தொலைந்து போகக் கூடாதே என்று நான் அச்சப்பட்டேன். அது– என்னதான் துயரமான நேரம் என்றாலும், உண்மையாகச் சொன்னால்– அது எல்லா அளவையும் மீறியதாகப் பட்டது.
லில்லைப் பிடித்துக் கொண்டு, நான் அவளுடைய நாற்காலியில் உட்காருகிறேன், அவளுடைய தோள் மேயைத் தொட விடுகிறேன். லில் தன் கையை நீட்டுகிறாள், நான் மேயின் மடியில் மெதுவாக இறக்குகிறேன், அவள் அங்கே சில வினாடிகள்தான் இருக்கிறாள், பிறகு என் மடியில் மறுபடி ஏறிக் கொள்கிறாள். என் மார்பில் தன்னை ஒடுக்கிக் கொள்கிறாள், நான் என் தோளை என் மனைவி மீது அழுத்தித் தொடுகிறேன். மீதமுள்ள சடங்கு நேரம் பூராவும் அவளுடைய அழுகையை நான் உணர்ந்தேன்.
அது பூராவும் முடியும் வரை அவள் எங்களைப் பார்க்கவில்லை, பிறகு லில்லை நோக்கி ஒரு சிறு புன்னகை மட்டும் புரிகிறாள். அவளுடைய கையைப் பிடித்துக் கொள்கிறாள், நாங்கள் ஏரிக்கரையிலிருந்து துக்கம் காக்கும் இதர நபர்களோடு சேர்ந்து காரை நோக்கி நடக்கிறோம், பாதிரியாரும், ஜூலியும், கார்லும் முன்னே போகிறார்கள், பிறகு அவர்களின் பெற்றோர், பின்னே மற்ற எல்லாரும் தலை குனிந்தபடி வரிசையாகப் போகிறோம். கார்களுக்கு, அங்கிருந்து கல்லறை உள்ள இடத்திற்கு, அந்தக் கண்ணைக் கூச வைக்கும் குளிர்ந்த, பளீரிட்ட சூரிய ஒளியில்– அப்படித்தான் இருந்தது, உணர்வுகளின் செய்திகள் குழம்பிப் போயிருந்தன– ஆல்பர்ட்டின் உடலில் எரிப்புக்குப் பிறகு மீந்தவற்றை ஒரு குழியில் இறக்கப் போனோம். எரிப்பில் மீந்தவை– க்ரிமெயின்ஸ். நாங்கள் புதைகுழி அருகே நின்ற போது அந்தப் பாதிரியார் அந்த வார்த்தையையே சொன்னார்.
நான் உடலை எரிக்கும் இடத்தை, வாஷிங்டன் மாநிலத்தில் ஸ்போகேன் என்ற ஊரில் ஒரு தடவை பார்த்திருக்கிறேன். அது மக்கள் வாழும் ஒரு பகுதியில் இருந்தது, பிரமாதமான அக்கம்பக்கம் இல்லை, ஆனால் பரவாயில்லை எனும்படி இருந்தது. கட்டடத்தின் மேல்புறம் வெளி வந்த அலையலையான கழிவுப் புகையை நாம் காண முடிந்தது. அதைத் தினமும் பார்ப்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உடலை எரித்த பின் எலும்புகளை நொறுக்க வேண்டுமாம், அது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஆக, அவர்களின் மகனின் எலும்புகள் நொறுக்கப்பட்டன, கார்லும் ஜூலியும் குறைந்தது ஒரு தடவையாவது உடலுறவு கொண்டிருக்கிறார்கள் சென்ற சில மாதங்களில். ஆனால் அவர்களுக்கு அதே நெருப்பினூடே நடக்கிறோம் என்ற உணர்வு எழாமல் இருந்திராது. மே என்னவோ தான் தனியாக விடப்பட்டதாக உணர்கிறாள்.
அவள் என்னை இந்த சாப்பாட்டு மேஜையடியில் விட்டுப் போனாள், ஆனால் ஆல்பர்ட்டிற்கான நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறாள். அவள் லில்லை அழைத்துப் போக வரும்போது இன்று மறுபடியும் அவளைப் பார்ப்பேன். இவை எல்லாம் ஊக்கப்படுத்தும், மனதைத் தளர வைக்கும் சிறு சேர்ப்புகள். இவற்றை என்னால் தாங்க முடியவில்லை. ஆனால் தாங்கி நிற்கிறேன்.
நான் எழுந்து லில்லின் அறைவாயில் உள்ளே தலையை நீட்டுகிறேன். அவளும் மேயும் தரையில் அமர்ந்திருக்கிறார்கள். என் மனைவி என் பெண்ணின் தலை முடியை வாரிக் கொண்டிருக்கிறாள். நான் இருப்பதை அவர்கள் கவனிக்கவே இல்லை, நான் அவர்களை அப்படியே இருக்க விட்டு விடுகிறேன்.
நான் சமையலறைக்குத் திரும்பி இருக்கிறேன், அப்போது மே முன் கதவை மூடிக் கொண்டு போவதைக் கேட்கிறேன். லில் ஓடி வருகிறாள், அவளுடைய தலை சீரான ஒரு பின்னலாக இருக்கிறது, ஆனால் அது நீடிக்காது, வந்து அறிவிக்கிறாள், “நாமெல்லாம் அப்புறம் ஏரிக்கரைக்குப் போவோம்னு அம்மா சொன்னாள்.”
இப்படி ஒரு தெளிவில்லாத பெயர்ச்சொல், ‘நாம்’.
“அப்புறம் ஒருவேளை நீங்க அந்த பழைய மரத்தை வெட்ட தாத்தாவுக்கு உதவி செய்வீங்களாம்,” லில் சொல்கிறாள்.
அவள் மேயின் பெற்றோர் வீட்டுக் கூரை மீது தொங்கும் கிளையை வெட்டுவதைச் சொல்கிறாள். முதலில் ஆறுதலுணர்வு, பிறகு குதூகலம், அப்புறம் கோபம் எல்லாம் படு வேகமாக என்னுள் எழுகின்றன. யேசுவே, மே: என்னிடம் பேசு.
அவள் நண்பகல் உணவுக்குப் பிறகு ஏரிக்கரையில் எங்களைச் சந்திக்கிறாள், நாங்கள் மணலில் முழங்காலைச் சுற்றிக் கைகள் இருந்தபடி அமர்ந்திருக்கிறோம். எங்கள் உடல்கள் தொடவில்லை, ஆனால் உடலின் வெப்பம் தொடுகிறது, நாங்கள் இருவரும் ஒருவரொருவரின் காற்றுவெளியில் இருப்பது போல. லிலியன் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறாள், தன் முழங்காலில் மண்டி இட்டு மண்ணை வாரி எடுத்துத் தன் வாளிக்குள் போட்டுப் பிறகு அதைக் கொட்டியபடி, தண்ணீருக்குள்ளும் வெளியுமாக அலைகிறாள்.
“ஆல்பர்ட்டோட நிகழ்ச்சி?” மே சொல்கிறாள். “அது அடுத்த ஞாயிறன்று இருக்கு.”
நான் தலையசைக்கிறேன்.
“கல்லறை அருகே. பலர் சில பிரார்த்தனைகளைச் செய்வார்கள், ஒருவேளை அங்கே ஏதும் பாட்டு இருக்கும், பிறகு-” அவள் தன் கைகளை உயர்த்தி, மறுபடி முழங்காலைச் சுற்றிக் கட்டிக் கொள்கிறாள். “அப்புறம் நாம் ஐஸ் க்ரீம் வாங்கலாம்.”
அவள் என்னைப் பார்க்கத் திரும்புகிறாள். “உங்களுக்கு வர இஷ்டமா?”
“ஆமாம், ஆமாம். எனக்கு இஷ்டம்தான்.”
“அது மத நிகழ்ச்சி.”
“எனக்குத் தெரியும்.”
லில் எங்களைப் பார்த்து கையாட்டுகிறாள், நாங்கள் திருப்பிக் கையசைக்கிறோம், அவள் ஓடிப் போய் குவித்த மணல் மேட்டின் மீது பாய்வதைப் பார்க்கிறோம்.
“ஜூலிக்கு எத்தனாவது மாதம்?” நான் கேட்கிறேன்.
“மூன்று மாதங்களாயிற்று.”
“அடேடே.”
“அவங்க அதைத் திட்டமிட்டாங்கன்னு கூட அவள் சொன்னாள்.”
“அது அவங்களுக்கு நல்லதுதான்.”
“கடவுள் ஆல்பர்ட்டை எடுத்துக்கிட்டாருன்னு நான் நம்பல்லை. நான் அப்படி நம்பறேன்னு நீங்க நினைக்கிறீங்களான்னு எனக்குத் தெரியல்லை.”
நான் அவளைப் பார்க்கிறேன், ஆனால் அவள் நேரே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
இது ஒரு திறப்பாக இருக்கலாம், இல்லை மூடுவதாக இருக்கலாம். “மே, நான் – எனக்கு சொல்லத் தெரியலை. அது எனக்குத் தெரிந்திருந்ததுன்னுதான் தோணுது.”
“நான் அதை நம்பல்லை.”
“அப்ப எனக்குச் சொல்லு. நீ எதை நம்பறேன்னு சொல்லு.”
அவள் என்னைப் பார்க்கிறாள். நான் என் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன், பிறகு அவள் திறந்த இந்த இடைவெளியில் – அது ஒரு திறப்பு என்று நம்புவதை நான் தேர்ந்தெடுக்கிறேன் – நான் சொல்கிறேன், “நான் உன்னைக் காதலிக்கிறேன்.”
“எனக்குத் தெரியும்.”
அப்போது அவள் தன் தலையைக் குனிந்து கொள்கிறாள். என்னால் பார்க்க முடியவில்லை, ஆனால் அவளுடைய கண்ணீரை என்னால் உணர முடிகிறது. அவள் போக்கில் ஒரு நிமிடம் விட்டு விடுகிறேன், பிறகு சொல்கிறேன், “மே, என்னிடம் பேசு.” அது “என்னிடம் சொல்லு, நீ என்னைக் காதலிக்கிறாய்” என்று கட்டளை இடுவது போல ஒலிக்கிறது என்று சிறிது அச்சப்படுகிறேன். ஆனால் அவள் என்னைப் புரிந்து கொள்கிறாள், சொல்கிறாள், “கடவுள் கெட்டதை எல்லாம் நடக்கச் செய்கிறார் என்று நான் நம்பவில்லை, ஆனால் அவை நடக்கும்போது அவர் அங்கே வருகிறார். அந்தப் பாதிரியார் சவ அடக்கத்தின் போது என்ன சொன்னார் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?”
அவர் பேசியதில் ஒரு வார்த்தையைக் கூட அவள் எப்படிப் புரிந்து கொண்டாள்?
“நாம் துக்கப்படும்போது நம்மைக் கடவுள் சந்திக்கிறார், நம்மோடு அப்போது இளைப்பாறுகிறார்?”
அது மிக அழகாக இருக்கிறது, அது ஏன் அத்தனை கவர்ச்சியாக இருக்கிறது என்பது எனக்குப் புரிகிறது.
“அதைத்தான் நான் நம்புகிறேன். நீங்களும் அதைக் கேட்பீங்க, புரிஞ்சுப்பீங்கன்னு நான் நெனச்சேன், வேறொருத்தர் கிட்டே அதைக் கேட்டா அது கொஞ்சம் கூடுதலா நம்பக் கூடியதா இருக்கும்னு நெனச்சேன்.”
“நான் வருந்துகிறேன், ஆனால் அவர் பேசியது எல்லாம் சரியாகவே கேட்கவில்லை.” இப்படிச் சொல்வது தண்டமாகத் தெரிகிறது, நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், அவளுடைய துக்கத்தில் அவளை நான் சந்திக்கவும் அவளோடு இளைப்பாறவும் அவள் என்னை அனுமதிக்க வேண்டும் என்பதே. அவளை நான் என்றென்றும் அணைத்துக் கொண்டிருப்பேன்.
“மே, நான் வருந்துகிறேன்,” என்கிறேன், அவள் எங்கள் மகளையும், பின்னால் இருக்கும் ஏரியையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
***
ஆல்பர்ட்டின் ஏதோ ஒன்றிற்கு முந்தைய இரவு. மே வருகிறாள், நாங்கள் லஸான்யா தயாரிக்கிறோம். லிலியனிடம் பிரார்த்தனை குறித்துச் சொல்லி இருக்கிறோம். நாங்கள் உறவினர்களான ஜூலி மற்றும் கார்லோடும் பிறரோடும் சேர்ந்து ஆல்பர்ட்டுக்கு இன்னுமொரு தடவை வழியனுப்புதல் செய்வோம் என்று விளக்கினேன், அதற்கு அவள் பதிலளித்தாள், “நாம ஏற்கனவே அதைச் செய்துட்டோமே.” அதனால் மே விளக்கும் விதமாக, மொத்தக் குடும்பமும் வந்து ஆல்பர்ட் புதைக்கப்பட்ட இடத்துக்கு வந்து அவனை எல்லாரும் நேசிக்கிறோம் என்று சொல்வதும், கடவுளுக்கு ஆல்பர்ட்டைப் பார்த்துக் கொள்வதற்கு நன்றி சொல்வதும், ஜூலிக்கும், கார்லுக்கும் துயரத்தைக் குறைக்கும், ஏனெனில் அதெல்லாம் நடந்து ஒரு வருடம் ஆகி விட்டது என்று சொன்னதும் அது லில்லுக்குப் புரிந்தது போல இருந்தது.
லஸான்யா இலையுதிர்காலத்து சாப்பாடு, ஒரு வகையில் கொண்டாட்டத்துக்கானது, பிரார்த்தனை முடிந்ததும் நாங்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடவிருந்தோம், ஆல்பர்ட்டின் சவ அடக்கத்துக்குப் பிறகு நாங்கள் பியரோகிகளைச் சாப்பிட்டிருந்தோம், மனிதரின் நித்தியமின்மையை இந்த வகை எரிபொருள் நுகர்வை விட வேறெது அத்தனை அப்பட்டமாக வெளிப்படுத்த முடியும்? நாம் இத்தனை திறமையற்றவர்களாகவும், வலுவற்றவர்களாகவும் இருக்கிறோம்.
நள்ளிரவில் நான் விழிக்கிறேன், லிலியனின் அறையைத் தாண்டி நடக்க ஆரம்பிக்கிறேன். மே அங்கே இல்லை. குளியலறையும் காலியாக இருக்கிறது, கார் கராஜின் கதவைத் திறக்கிறேன், அங்கே அவளுடைய கார் இன்னும் நிற்கிறது. அவள் சமையலறையிலும் இல்லை. முன்னறையைத் தாண்டிப் போகையில் அவள் அழைக்கிறாள், “ஜெரெமி.”
நான் பின்னே நகர்ந்து, நிற்கிறேன். தூரத்து மூலை ஜன்னல் அருகே ஒரு நாற்காலியில் அவள் இருக்கிறாள்.
“என்னால் தூங்க முடியவில்லை,” அவள் சொல்கிறாள்.
“உனக்கு ஏதாவது கொண்டு வரட்டுமா?”
“வேண்டாம்.”
நான் என் உள்ளாடைகளை மட்டும் அணிந்திருக்கிறேன். வெளியில் இருக்கும் ஸ்ப்ரூஸ் மரத்தூடே உள்ளே நிலவொளி சிறிதே கசிகிறது, ஆனால் நான் ஒளி வெள்ளத்தில் நிற்பது போல உணர்கிறேன்.
“நான்”- மறுபடி ஏதோ சொல்லத் துவங்குகிறேன். என்ன அது? நமக்குக் கொஞ்சம் வைன் கொண்டு வரட்டுமா–வா? அவளுடைய பாதங்களைத் தடவிக் கொடுக்கட்டுமா–வா? அவளைக் கட்டிப் பிடித்துக் கொள்ளட்டுமா–வா?
“ஜூலிக்கு என் மேல் வருத்தம்.”
என்னால் அசைய முடியவில்லை. அவளுக்கு அதிர்வு கொடுக்க நான் விரும்பவில்லை. “அவளுக்கு வருத்தமா? ஏன்?”
“அவள் கர்ப்பமாக இருப்பதைச் சொன்ன போது நான் அத்தனை மகிழ்ச்சி காட்டவில்லை, ஆனால் நான் (அப்போது) ஆல்பர்ட்டின் வருஷப் பூர்த்தியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். நான் அதிர்ச்சி அடைந்தேன். அழத் தொடங்கினேன்.”
“ஓ, மே.”
“எங்களோட அம்மாக்களும் அங்கே இருந்தார்கள். நான் சுதாரித்துக் கொண்டேன், ஆனால் நேற்று அவள் என்னிடம் சொன்னாள்– அவள் நிஜமாகவே இதைச் சொன்னாள்– அதாவது அவள் ஆல்பர்ட்டின் சாவை என்னை விட மேலாக எதிர் கொண்டிருப்பதாகவும், நான் ஒரு மன நல ஆலோசகரிடம் சோதிக்க வேண்டும் எனவும் சொன்னாள். ஜெரெமி” – என் பெயர் மறுபடி, எனக்கு மகிழ்வான அதிர்ச்சி– “நான் போகணும்னு நினைக்கிறீங்களா?”
“போகணும்னு நீ நினைக்கிறியா? அது உனக்கு உதவுமா?”
“எனக்கு எப்படித் தெரியும்?”
“நம்மோட இன்ஷூரன்ஸில் இது அடங்கும்.” நான் இதைச் சொல்ல இரண்டு காரணங்கள்: அவள் இதை முயன்று பார்க்கலாம், எங்கள் பங்காகச் சிறிது தொகைதான் கொடுக்கப்பட வேண்டிய செலவாக இருக்கும், மேலும் அந்தக் காப்பீடு எங்களுடையது என்று அழுத்தம் கொடுத்திச் சொல்வது, ஏனெனில் நாங்கள் இன்னும் தம்பதிகள், இந்த வீடு எங்களுடையது, லிலியன் எங்களுடைய மகள் என்பது போல. இது கணிக்கப்பட்ட மறுவினை, ஆனால் போலியானதல்ல.
“நான் உங்களை மோசமாக நடத்துகிறேன் என்றும் சொன்னாள்.”
இதற்கு சரியான மறுவினை ஏதும் இல்லை, நான் பெருமூச்சு விடுகிறேன்.
“நான் வருந்துகிறேன்.”
“மே –”
“அப்புறம் நான் பொறாமை கொண்டிருக்கிறேன். அதுதான் உண்மை. ஜூலியைப் பார்த்து, தன் மகனை இழந்தவளைப் பார்த்து, எனக்குப் பொறாமை. எனக்கு என்ன ஆயிருக்கிறது?”
அவள் இதைச் சொல்லும்போது அழுது புலம்பவில்லை. அது இன்னும் இருண்ட மூலை ஒன்றிலிருந்து வரும் நிலை பிறழாத குரல்தான். அவள் எழுந்து என்னை நோக்கி வருகிறாள், நம்பிக்கை நிரம்பிய குழப்பத்தோடு நான் என் கையை நீட்டுகிறேன். நான் குளிர்வதாக உணர்கிறேன், எனக்குச் சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கிறது, ஆனால் அவள் நான் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருப்பதைப் பொருட்படுத்தவில்லை.
“நான் தூங்கப் போகணும்,” அவள் என்னைப் பார்க்கிறாள், என் கை கீழே மெள்ள இறங்கி விடுகிறது. “ஜெரெமி, நான் வருத்தப் படுகிறேன்.”
காலையில், நொறுக்கப்பட்டவனாக உணர்கிறேன். மேயும் அப்படியே உணர்கிறாள் என நினைக்கிறேன். அவளுடைய கண்களை என் கண்கள் சந்திக்கும்போது, ஏற்கனவே காஃபியாலும், தூக்கமின்மையாலும் தத்தளிப்பாக உணரும் என் இதயம், மிக வேகமாக அதிரத் தொடங்குகிறது. காலை உணவுக்குப் பிறகு நான் தலைவலி என்று சாக்குச் சொல்லி, படுக்கப் போய் விடுகிறேன்.
ஆனால் நான் குளித்து, உடைகளணிந்து 12.30 மணி வாக்கில் தயாராகி விடுகிறேன், லில்லிற்கு அவளுடைய இடுப்புக்குக் கீழே அணியும் மெல்லிய, இறுக்கமான உள்ளாடையை அணிய உதவுகிறேன். மே குளியலறையிலிருந்து வெளியே வருகிறாள், எனக்குப் பிடித்தது என்று அவளுக்குத் தெரிந்த கடல் நீல நிற உடை ஒன்றை அணிந்திருக்கிறாள், ஆனால் எங்கள் மகளின் அறை வாயிலருகே, அவளை நான் ஒரு முறை சாதாரணமாகத்தான் பார்வையிடுகிறேன்.
“லில் கவனி, கால் நுனியில் சுருக்கம் இல்லாமப் போடு.”
அது ஒரு குளிர்ச்சியான, தூறல் போடும் நாள். காலை பூரா மழை பெய்தது, மறுபடியும் ஆரம்பிக்கும் போல இருக்கிறது. கல்லறை இருந்த இடத்தில், மேயின் குடும்பம் எங்களை எடை போடுவதைக் கவனித்தேன்: நாங்கள் சேர்ந்து வந்தோம், நாங்கள் லில்லின் கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம், இன்று நாங்கள் குடும்பம் போலத் தெரிகிறோம். சென்ற வருடத்தில் மேயின் பெற்றோர் எங்களிடம் மிக மரியாதையோடு நடந்து கொண்டிருந்தார்கள், இப்போதெல்லாம் அவர்கள் என்னைப் பார்க்கும்போது கண் சுருக்கி, உற்று நோக்குகிறார்கள், ஏதோ என்னிடம் தேடுவது போல இருக்கும். மே அவர்களிடம் என்ன சொல்கிறாள் என்று யாருக்குத் தெரியும்?
அந்த மந்தமான பாதிரியும் அங்கே இருக்கிறார், ஆல்பர்ட் மருத்துவ மனையில் இருக்கும்போது ஜூலி குழம்பிப் போகக் காரணமாக இருந்த அந்தப் பெண்மணியும் இருக்கிறாள், அந்தக் கிருஸ்தவ மந்திர வாதி. அவள்தான் அது என்று எனக்குத் தெரிகிறது. அதுதான், பூமியின் அன்னை, உலகத்தின் தாய் போலத் தோற்றம் காட்டுவார்களே, அதெல்லாம் அவளிடம் இருக்கிறது: காற்றில் அலைந்தாடும் கத்தரிப் பூ நிற ஆடை, கருப்பும் வெள்ளையுமாக இருக்கும் பின்னல் தலையைச் சுற்றி வருகிறது, கழுத்தில் ஒரு பிரும்மாண்டமான பித்தளைச் சிலுவை தொங்குகிறது. அந்த சங்கிலி அவளுடைய மார்பின் மேலிருந்து பெரிய தாவலாக விழுகிறது, அந்த சிலுவை அவள் எங்களை நோக்கி நடக்கும்போது வயிற்றில் தடக்கென்று இடிக்கிறது– தடக், தடக், தடக்.
“மே, உங்களோட அருமையான குடும்பத்தோடு வந்திருக்கீங்களே.”
பூமியின் அன்னை, மேயின் இரு கைகளையும் எடுத்துக் கொள்கிறார், லில் என்னைப் பார்க்கத் திரும்புகிறாள்.
“இது லிலியனாகத்தான் இருக்க முடியும்.”
லில்லை நான் மேலே தூக்கிப் பிடிக்கிறேன், அவள் என் இடுப்பில் அமர்ந்து அந்தப் பெண்மணியை தீரப் பார்க்கிறாள்.
“அப்புறம் ஜெரெமி, உங்களைச் சந்தித்தது அபாரம்.”
“உங்களைச் சந்தித்தது அருமை.”
“இவர் மார்கரெட்.” மே சொல்கிறாள்.
லிலியன் என்னைப் பார்க்கத் திரும்பி, என்னிடம் ரகசியமாகச் சொல்கிறாள், “நீங்க ஒரு அலட்டல் பேர்வழி.”
“ஷ்ஷ்ஷ்,” நான் சொல்கிறேன், அவளுடைய முதுகில் இலேசாகத் தட்டிக் கொடுக்கிறேன்.
“நான் ஜுலியோடும், கார்லோடும் பிரார்த்தனை செய்து விட்டேன்,” மார்கரெட் சொல்கிறார். அவர் என்னைப் பார்க்கிறார். “நான் முன்பு கிருஸ்தவக் கன்னியாக இருந்தேன்.”
“அது சுவாரசியமாகத் தெரிகிறதே.” உண்மையிலேயே, அது அப்படி இருக்கிறது.
மறுபடி மேயிடம். “அவர்கள் சமாளித்துக் கொண்டு இருக்கிறார்கள். நீ எப்படி இருக்கே அம்மா? நாம கொஞ்ச நேரம் பேசலாமா?”
மே சரி என்று சொல்கிறாள், என்னைப் பார்க்கிறாள், நான் சரி என்று தலையசைக்கிறேன். அவளுடைய குடும்பத்தை அவள் இல்லாமல் என்னால் சமாளிக்க முடியும்.
லிலியனும் நானும் எல்லாரையும் பார்த்து வருகிறோம். அவள் தன் தாத்தா பாட்டிகளைக் கட்டி அணைத்துக் கொள்கிறாள். அவர்கள் உற்று நோக்கி, கண்ணைச் சுருக்கிப் பார்க்கிறார்கள். மேயின் அப்பா என் கையைக் குலுக்கி, என் தோளில் தட்டிக் கொடுக்கிறார். அவள் அம்மா என்னை அணைத்துக் கொள்கிறார், என்னிடம் சொல்கிறார், “ஓ ஜெரெமி, நீங்க இங்கே வந்ததிலே எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் ரொம்ப சந்தோஷப்படறேன்.”
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நான் முகமன் தெரிவிக்கிறேன், மே மற்றும் மார்கரெட் மீதும் ஒரு பார்வை செலுத்திய வண்ணம் இருக்கிறேன், அவர்கள் தூரத்தில் ஒரு மரத்தடியில் தலைகளைக் குனிந்த வண்ணம் இருக்கிறார்கள். ஜூலி மற்றும் கார்ல் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறேன். நல்ல மனுஷி ஜூலி, என் நலனைப் பாதுகாக்க முயல்பவள், அவளுடைய கர்ப்பம் இன்னும் தெரிய ஆரம்பிக்கவில்லை, ஆனால் அவள் தன் வயிற்றின் மீது ஒரு கையை வைத்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள் கல்லறைக் கல்லருகே நிற்கிறார்கள். அவர்களை அணுகுவதில் எனக்குக் கூச்சம் இருக்கிறது, ஆனால் அதை நான் செய்கிறேன். லில் அவர்களை அணைக்கிறாள், நாங்கள் எல்லாரும் கீழே நோக்கிக் கொண்டிருக்கிறோம். அப்படிப் பார்க்காமல் இருக்க முடியவில்ல.
ஆல்பர்ட் யுவான் பார்டெல்ஸ்கி, 2004-2014, நேசிக்கப்பட்ட மகன், பேரன், மருமான், ஒன்று விட்ட சகோதரன், மேலும் நண்பன்
பாதிரியார் இடையில் நுழைகிறார், லில்லும் நானும் நகர்ந்து போகிறோம்.
“ஆல்பர்ட் எங்கே?” அவள் கேட்கிறாள்.
“லிலியன், செல்லம், உனக்கு இது தெரியும்.” எனக்குக் கொஞ்சம் எரிச்சல் எழுகிறது, அதை அடக்குகிறேன். “ஆல்பர்ட் இங்கே இல்லை. அவன் செத்துப் போய் விட்டான்.”
அவள் சுற்றிலும் பார்க்கிறாள். “எனக்குத் தெரியும்.”
மே எங்களோடு சேர்கிறாள், பாதிரியும், மார்கரெட்டும் ஜூலியோடும், கார்லோடும் கலந்து பேசுவதை நான் கவனிக்கிறேன். இங்கு டாக்டர் ஃபிலிப்ஸும், கிராண்ட் ராபிட்ஸில் இருந்த புற்று நோய் மருத்துவரும் வந்து இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
“சவ அடக்கத்தின் போது மார்கரெட் ஏன் வரவில்லை?” நான் மேயிடம் கேட்கிறேன்.
“அவருக்கு இன்னொரு சவ அடக்கம் அன்று இருந்தது. அவருடைய அத்தை.”
“அவர் ஒரு கன்னிகா மடத்தைச் சேர்ந்தவர் என்று என்னிடம் நீ சொல்லவில்லையே.”
“நான் சொன்னேனே.”
பாதிரியார் தன் கையை உயர்த்துகிறார், எல்லாரும் பேசுவதை நிறுத்துகிறார்கள், ஜூலி, கார்லைச் சுற்றி வந்து நிற்கிறார்கள். மார்கரெட்டும், பாதிரியாரும் தலைக்கல்லின் பின்னே நிற்கிறார்கள், மற்றவர்கள் அவர்களைப் பார்க்க நிற்கிறோம்.
“நண்பர்களே,” பாதிரியார் துவங்குகிறார். அவர் ஒரு சாதாரண சூட், டை, மற்றும் தோள் மீது ஒரு வெள்ளைப் பட்டியை அணிந்திருக்கிறார். “ஆல்பர்ட் யுவான் பார்டெல்ஸ்கியின் வாழ்வை நினைவு கூர்வதற்கு நாம் இங்கு கூடியிருக்கிறோம்.” அவர் தன் தொண்டையைச் செருமிக் கொள்கிறார். “நாம் பிரார்த்திக்கலாம்.” அவர் தன் தொண்டையை மறுபடி சரி செய்து கொள்கிறார். “பரம பிதாவே,” அவர் சொல்கிறார், எல்லாரும் சேர்ந்து கொள்கிறார்கள்.
நான் கீழ் நோக்கி லில்லைப் பார்க்கிறேன். அவள் தன் காலணியில் இருக்கும் ஒரு பூச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் கையைப் பற்றிக் கொள்கிறேன். அவளுக்கு மறுபுறம் மே தன் கண்களை மூடிக் கொண்டு, கைகளைக் குறுக்காகச் சேர்த்து வைத்திருக்கிறாள், அவள் நிறைய முன் நோக்கிச் சாய்ந்திருப்பதால், கார்ல் மீது சரிந்து விழுந்து விடுவாள் என்று எனக்குப் பயமாக இருக்கிறது. ஆனால் பிரார்த்தனை முடிகிறது, அவள் மறுபடி நேராக நிற்கிறாள், லிலியனின் மறு கையைப் பிடித்துக் கொள்கிறாள்.
மார்கரெட் எங்களை இருபத்தி இரண்டாவது துதிபாடலுக்குள் அழைத்துச் செல்கிறார். அது சாவின் நிழல் இருக்கும் பள்ளத்தாக்கு பற்றிய பாடல். பிறகு வார்த்தைகள் தெளிவில்லாமல் உச்சரிக்கப்பட்ட ஒரு பாடல் இருந்தது, “என்ன ஒரு நண்பராக இருக்கிறார் யேசு” எனும் அதில் பதினைந்து பேர் இசைக் கருவிகள் இல்லாது பாடினார்கள்– அ கப்பெல்லா வகை இசைப்பு.
இன்னும் சில பிரார்த்தனைகள் இருந்தன, என் மனைவியைச் சுற்றி என் கையைப் போட்டு, அவளுடைய துக்கத்தில் அவளைச் சந்தித்து, அவளோடு அதில் அமைதி தேடினால் எப்படி இருக்கும் என்று நான் அப்போது யோசித்தேன். எல்லாரும் அதைக் கவனிப்பார்கள்.
பாதிரியார் தன் உள்ளங்கையை உயர்த்தி முடிக்கிறார். “கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களைப் பற்றட்டும்.”
அது ஒரு சர்ச்சின் சிறு பிரார்த்தனை போல இருந்தது. பரவாயில்லை, அதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன்.
பிறகு, எல்லாரும் கொஞ்சம் கலந்து உலவினார்கள், அணைப்புகள் இருந்தன, அழுகையும் இருந்தது, ஆனால் அப்போது குளிர் அதிகமாக இருந்தது, எனக்கு காஃபி தேவையாக இருந்தது. லில்லும் நானும் மே வரக் காத்திருந்தோம், அவள் ஜூலியோடு பேசிக் கொண்டிருந்தாள். ஒருவேளை அவர்கள் சமரசமாகிறார்கள் போலிருக்கிறது. ஒருவேளை ஜூலி என்னைப் பற்றிப் பேசுகிறாளோ என்னவோ.
நான் என் மனைவியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மார்கரெட் நெருங்கி வந்து என்னைத் திடுக்கிட வைத்தார், என் முகம் என்ன காட்டிக் கொடுத்தது என்பதை அவர் பார்த்தார் என்பது அவர் முகத்தில் தெரிந்தது. ஏனெனில் முதலில் அவர் ஏதும் சொல்லவில்லை, என்னைப் பார்த்து சோகமான, உதடுகள் அழுந்தி மூடிய புன்னகை ஒன்றைத்தான் காட்டினார்.
“ஜெரெமி,” அவர் சொன்னார்.
“ஹெல்லோ.”
“உங்களிடம் பேசட்டுமா என்று நான் மேயிடம் கேட்டேன்.”
“ஓகே.” என் இதயம் வேகப்படத் துவங்கியது.
“இப்போது எல்லாமே கஷ்டமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.” அவர் லிலியனைப் பார்க்கிறார்.
“லில், போய் பாட்டியோடு கொஞ்ச நேரம் இருந்து விட்டு வா.” அவளுக்கு மேயின் அம்மாவைச் சுட்டிக் காட்டுகிறேன், அவள் ஓடிப்போகிறாள்.
“ஜெரெமி, உங்களுக்கு நான் அத்து மீறுவதாகத் தோன்றலாம், ஆனால், மே முயற்சி செய்கிறாள் என்று நான் நினைக்கிறதை உங்களுக்குச் சொல்ல விரும்பினேன். ஒரு சம்பவத்தால் நமக்கு எழும் ஓர் உணர்ச்சி ஏன் அப்படி எழுகிறது என்பது சில சமயம் நமக்குப் புரியாது. அது நிஜமான மர்மம்தான்.” அவருடைய பேச்சு ஒத்திகை பார்த்துச் செய்தது போலிருக்கிறது, நான் ஏதும் சொல்லாததால் அவர் தொடர்கிறார். “நீங்கள் கார்களின் பிரச்சினைகளைக் கண்டு பிடிக்கும் மெகானிக்காக இருப்பது போல, நான் மனிதர்களின் ஆன்மாவில் எழும் பிரச்சினைகளுக்கான மெகானிக் என்று என்னைப் பற்றி நினைக்க விரும்புகிறேன்.” அவர் தன் கைகளை மேல் நோக்கி வீசுகிறார். “ஆனால், நீங்கள் கண்களை மேல் நோக்கி உருட்டுமுன்-”
நான் ஏற்கனவே அதைத் துவங்கி இருந்தேன்.
“நீங்கள் கண்களை உருட்டுமுன் நான் சொல்லி விடுகிறேன், எனக்கும் சில சமயம் பிரச்சினை என்னவென்று கண்டு பிடிக்க முடிவதில்லை.”
நான் அவரைப் பார்த்த வண்ணம் இருக்கிறேன்.
“மேயினுள் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்று என்னால் விளக்க முடியாது, ஆனால் அவள் துன்பப்படுகிறாள் என்று எனக்குத் தெரியும்.”
ஆமாம், பெரிய கண்டுபிடிப்புதான்.
“உங்களிடம் என்ன சொல்லப் போகிறேன் என்று நான் அவளிடம் சொல்லவில்லை. உங்கள் திருமணத்தில் இப்போது இருக்கிற எதிரும் புதிருமான நிலையை ஊதிப் பெருக்குவது என்னவென்றால், அவள் மிக ஆழத்தில் இறங்கி விட்டிருக்கிறாள், அதை எப்படி நிறுத்துவது என்று அவளுக்குத் தெரியவில்லை.”
மார்கரெட்டை வெறுத்து அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் நான் அங்கு ஆணியடித்தது போல நிற்கிறேன். “அது சுலபமாக இருக்கணுமே,” என்கிறேன். ஆனால் அது உண்மையல்ல என்று எனக்குத் தெரிகிறது.
“நான் அப்படி நினைக்கவில்லை.”
“நான் என்ன செய்யணும்?” அவருக்கு ஒரு சவால் எழுப்புவது போல இதைக் கேட்கிறேன், அதே நேரம் உண்மையைச் சொன்னால், அவருக்கு ஏதும் வழி தெரிகிறதா என்று பார்க்கவும் நினைக்கிறேன்.
அவர் தன் தலையை ஆட்டி மறுக்கிறார். “இதற்கு ஒரு விடையும் இல்லை. என்னால் சொல்ல முடிவதெல்லாம், இப்போதிருப்பதுதான் முடிவு என்றில்லை.”
அவர் இப்படி விடை தராமல் ஜாக்கிரதையாக இருப்பதில் எனக்கு எந்தத் தேறுதலும் கிட்டவில்லை என்று சொல்ல விரும்புகிறேன், ஆனால் உண்மையில் இதில் எனக்கு ஏதோ கிட்டுகிறது, அதனால் மார்கரெட்டிடம், இந்த அன்னியரிடம், கேட்கிறேன், “மேயிற்கு இன்னொரு குழந்தை வேண்டுமா?”
அவர் பார்வையை அகற்றி வேறுபுறம் நோக்குகிறார், தன் கைகளை இடுப்பில் வைக்கிறார், அவருடைய பக்கவாட்டுத் தோற்றத்திடம் நான் விளக்குகிறேன், “ஜூலியைப் பார்த்துத் தான் பொறாமைப்படுவதாக அவள் சொன்னாள்.”
எண்ணக் கூடிய வினாடிகளுக்கு மார்கரெட் மௌனம் காக்கிறார். நான் அவற்றை எண்ணுகிறேன், ஏழு எண்ணி முடிவதற்குள் அவர் சொல்கிறார், “குழந்தைகள் உங்களை மீட்க முடியாது,” சொல்லி, என்னை மறுபடியும் நோக்குகிறார்.
“எனக்குத் தெரியும்.”
ஆனால், அது பதில் இல்லை என்றாலும், அது ஒருவேளை உண்மையாக இருக்கலாம், அதில் பொதிந்திருப்பது மே என்னோடு சேர்ந்து இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறாள் என்பதுதான், இல்லையா?
“அந்தக் கேள்வியும் சுலபமானதல்ல. “வேண்டும்” என்பதை வரையறுங்கள், பார்ப்போம்.” மார்கரெட் எரிச்சல்பட்டதைக் காட்டுகிறார், ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. “எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், பதில் என்பதாக, “ஆமாம்” என்றும், “இல்லை” என்றும் சொல்லலாம். அல்லது “ஆமாம், அதோடு கூட, பொறுக்க வேண்டும்” எனலாம். உங்களுக்கு நான் சொல்வது புரிகிறதா?”
இது நான் லிலியனிடம் சொல்வது போல இருக்கிறது: யாராவது சமைக்கும் போது அடுப்பைத் தொடாதே. நான் சொல்றது உனக்குப் புரிகிறதா?
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்க்கிறோம்.
“ஜெரெமி, நான் சொல்வது, அது சம்பந்தமில்லாத விஷயம் இல்லை, ஆனால் மிக நிறைய பொறுமை வேண்டும் என்பது என் ஆலோசனை.”
இன்னும் எத்தனை வருடம் பொறுமை வேண்டும், மார்கரெட்? அவருடைய தோளுக்கு மேலாக நான் மேயைப் பார்க்கிறேன், மார்கரெட்டும் திரும்பி அவளைப் பார்க்கிறார்.
“உங்களுக்கு என் நன்றி,” நான் சொல்கிறேன்.
அவர் திரும்பி என்னைப் பார்க்கிறார். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு சொல்கிறார், “நல்லது ஜெரெமி. ஆனால் நான் உண்மையாகத்தான் சொன்னேன். இதற்கு சுலபமான விடை ஏதும் இல்லை.”
“நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.”
அவர் நெடுமூச்சு விடுகிறார். என் கைகளைப் பற்றுகிறார், “உங்களுக்கு அமைதி கிட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”
“நன்றி.”
அவர் என் கைகளை அழுத்தி விட்டு, பிடியை விடுகிறார். குனிந்து வணக்கம் சொல்வது போலத் தலையை அசைக்கிறார். திரும்பி, நடந்து அகல்கிறார், என் நிலையில் சிறிது நம்பிக்கையைக் கூட்டும் சிறு துண்டுச் சான்று மட்டும் கிட்டிய நிலையில் விடப்பட்டிருக்கிறேன். ஆனால் இது ஒரு பதில் இல்லை, பதில் கிட்டுவதும் சுலபமாக இராது.
மேயின் பெற்றோரைத் தேடிப் பிடிக்கிறேன், அவர்களை லிலியனை ஐஸ்க்ரீம் கடைக்கு அழைத்துப் போகும்படி கேட்டுக் கொள்கிறேன். மே என் பக்கம் தானாக வரட்டும் என்று விடுகிறேன். “லில் உன் அப்பா, அம்மாவோடு போயிருக்கிறாள்,” அவளிடம் சொல்கிறேன், அவள் தன் புருவங்களை உயர்த்துகிறாள், ஆனால் ஏதும் சொல்லவில்லை.
நாங்கள் காருக்குச் சென்று உள்ளே அமர்கிறோம், ஐஸ்க்ரீம் கடைக்குப் போகும் வழியிலிருந்து மாறி ஏரிக்கரையில் நான் போய்ச் சேரும்போது, அவள் மௌனமாக இருக்கிறாள். கடந்த வருடத்தில் எனக்குக் கிடைத்த ஒரே ஒரு பயனுள்ள துப்பு அதுதான் என்பதால், நேரடியாகவே அவளிடம் கேட்கிறேன், “உனக்கு இன்னொரு குழந்தை வேண்டுமா?”
அவள் உடனே பதில் சொல்வாளென்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவள் பதிலளிக்கிறாள்: “இந்த நேரத்தில் அப்படி விரும்புவது விசித்திரமானதுதான், எனக்குத் தெரிகிறது.”
என் இதயம் மறுபடி தானாகிறது. இப்போது அது துரிதப்பட்டிருக்கவில்லை, ஆனால் பெரியதாக, மிகவும் பெரியதாக ஆகி இருக்கிறது. ஏரி எதிரே பிரும்மாண்டமாக இருக்கிறது, சாம்பல் நிறத்தில் வெள்ளை நுரை உச்சிகளுடன் அலைகளோடு, அதன் ஒரு புறம் அருகில் இருக்கும் மலைமுகடுகளுடன் பிரித்துப் பார்க்க முடியாதபடி இணைந்தும், மறுபுறம் தூரத்து மலை முகடுகளுடன் இணைந்தும், எதிரே தொடுவான் வரை விரிந்தும் கிடக்கிறது. சில மனிதர்களுக்கு மலைகள் தேவை, சிலருக்கு சமதளப் ப்ரெய்ரி புல்வெளிகள், வேறு சிலருக்கு நகரங்கள், எனக்கு இந்த ஏரி தேவை.
“மார்கரெட் அதை உங்களிடம் சொன்னாரா?” மே கேட்கிறார்.
“நீ சொன்னாய், மே. நேற்று இரவு, நீ ஜூலியிடம் பொறாமை கொண்டிருப்பதாகச் சொன்னாய்.”
“நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.”
“எனக்குப் புரியும்படி சொல்லு.”
“என் கருத்து என்னவென்றால், அது பற்றி நான் குற்ற உணர்வோடு இருக்கிறேன், ஜெரெமி.”
“ஆனால் நீ ஜூலிக்கு ஆதரவாகவும், அது பற்றி சந்தோஷமாகவும் இருக்க முடியாதா?” நான் என் குரலைத் தாழ்த்திக் கொள்கிறேன். “நாம் இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும்.”
அவள் தலையசைத்து மறுக்கிறாள். “தயவு செய்து, நாம் இப்போது இதைப் பேசாமல் இருக்கலாமா? நாம் எங்கே போனோம் என்று மற்றவர்கள் யோசிப்பார்கள்.”
“எனக்கு நீ வேண்டும்,” நான் சொல்கிறேன், அது ‘உதவுங்க’ அல்லது ‘தண்ணி, தண்ணி’ என்று கெஞ்சுவது போல இருக்கிறது.
என்னைப் பார்க்காமல், மே பதிலளிக்கிறாள், “ஜூலி மீது எனக்குப் பொறாமை எழக் காரணம், அவளுக்கு அவள் மண வாழ்வு இருக்கிறது, கார்ல் கடவுளை நம்புகிறார். பிறகு, ஆமாம், இப்போது அவள் கர்ப்பமாகி இருக்கிறாள், நான் அதற்காகவும் பொறாமைப் படுகிறேன்.”
அந்த இடத்தில் எங்களுடைய மூச்சுக் காற்றுகள் மட்டுமே இருக்கின்றன, மற்றும் அலைகளின் முனகல்கள் எங்கள் காரால் மட்டுப்பட்டும் கேட்கின்றன. மேலும் என் இதயமும் அந்த இடத்தில் இருக்கிறது.
“எனக்குப் போகணும்,” அவள் சொல்கிறாள். “நாம ஐஸ்க்ரீம் சாப்பிடப் போகிறதா இருந்தது.”
“ஆனால் இதை எனக்குச் சொல்லு, நீ நம்பறதை நான் நம்பல்லைங்கறது என்ன அத்தனை மோசமான விஷயமா?”
“உங்களுக்கே தெரியும் அது மட்டுமில்லைன்னு, நீங்க அதைக் கேவலமா நினைக்கிறீங்க. நான் உங்களை இக்கட்டிலே மாட்டி விடறேன்.”
“இல்லை.”
“ஆமாம். நான் நிஜமா அப்படித்தான் நினைக்கிறேன்.”
இப்போது அவள் என்னைப் பார்க்கிறாள், அவ்வளவு தீவிரமாக இருக்கிறாள், ஒருவேளை என் வாழ்க்கை இங்கே முடிந்து போய் விட்டதோ. நான் எனக்கே நினைவுபடுத்திக் கொள்கிறேன், மிஷிகன் ஏரிக்குள் நடந்து போகாமல் என்னைத் தடுக்க என்னிடம் லிலியன் இருக்கிறாள் என்று.
“நான் வருந்துகிறேன்,” நான் சொல்கிறேன். “என்ன செய்யறதுன்னு எனக்குத் தெரியல்லை.”
அவள் வேறுபுறம் திரும்பிக் கொள்கிறாள். “உங்களிடம் மார்கரெட் என்ன சொன்னார்?”
“ஒண்ணுமில்லை. நான் பொறுமையா இருக்கணும், இப்ப எல்லாம் முடிஞ்சு போயிடுத்துன்னு எடுத்துக்க வேண்டாம்– “
“ஹ்ம்ம்,” என்கிறாள். அது ஒரு வார்த்தை கூட இல்லை. அதற்கு என்ன வேண்டுமானாலும் அர்த்தமாக இருக்கலாம். “அவர் உங்களிடம் பேசியது நல்லதா கெட்டதான்னு கூட எனக்குத் தெரியல்லை.”
“நீயும் அவரும் எப்படித்தான் சந்திச்சீங்க?” நான் பிடி தேடித் துழாவுகிறேன், என் குரலில் இருக்கும் கிறீச்சொலி எனக்குக் கேட்கிறது.
மே மூச்சை உள்ளிழுக்கிறாள். “உண்மையாகவே இதை நான் முன்னாடி விளக்கினேன்னு நினைக்கிறேன். அவர் மருத்துவ மனையிலிருக்கும் மத ஆலோசகர். அப்படின்னா, இன்னக்கிக் காலையில அவர் க்ராண்ட் ராபிட்ஸிலிருந்து காரோட்டி வந்திருக்கிறார்னு அர்த்தம்.”
“அவர் செய்தது பெரிய காரியம்.” அது அரியதுதான், ஒரு வழிப் பயணமே இரண்டு மணி நேரமெடுக்கும்.
“மே, “நான் மென்மையாக, மிக மென்மையாகச் சொல்கிறேன். “நாம என்ன செய்யணும்?” நான் அவளைப் பார்க்கிறேன், அவள் பற்களைக் கடித்துத் தாடையை இறுக்குகிறாள், பிறகு தளர விடுகிறாள்.
“நாம என்ன செய்யப் போறோம்?” இந்த முறை நான் கிசுகிசுக்கிறேன்.
“சில நேரம் நாம விரும்பறது அசௌகரியமா இருக்கும், ஜெரெமி. இன்னொரு குழந்தை–,” அவள் நிறுத்தி விட்டு, பெருமூச்சு விடுகிறாள், நான் அப்போது சொல்ல விரும்புகிறேன், நான் உன்னைக் காதலிக்கிறேன். நான் சொல்ல விரும்புகிறேன், காப்பியக் காதல் கதை.
இது முடிஞ்சு போச்சுன்னு நினைக்கறது அவசியமில்லை. பொறுமையாயிரு. பொறுமையாயிரு.
நான் என் மனைவியை நோக்கிச் சாய்ந்து, என் உதடுகளால் அவள் தோள்பட்டையைத் தொடுகிறேன், முத்தமில்லை அது. அவள் சுருங்கிக் கொள்ளவில்லை, நான் நேராகிற போது, அவள் மறுபடி பெருமூச்சு விடுகிறாள், அதற்கு எதுவும் பொருளில்லாமல் இருக்கலாம். அது அவள் மூச்சு விடுகிறதாகவும் இருக்க முடியும்.
*****
கதாசிரியர் ஹாட்லி மூர் பற்றிய குறிப்புகள் விடுபட்டுள்ளனவே?
சேர்க்கிறோம். பொதுவாக அதைக் கொடுப்போம், இந்த முறை ஏன் விடுபட்டது என்று தெரியவில்லை.
பதிப்புக் குழு