[கோவை தொழில் நுட்பக் கல்லூரி (CIT) தமது முன்னாள் மாணவர்களில் சிறந்து விளங்குபவர்களை ஆண்டு தோறும் தேர்ந்தெடுத்து Distinguished Alumni Award எனும் விருது வழங்கி வருகிறது. 2018–ம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு பெற்ற மு.இராமனாதன், 10.03.2018 அன்று விருதைப் பெற்றுக் கொண்டு ஆற்றிய உரை]
அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்!
37 ஆண்டுகளுக்கு முன்னால் இதே மேடையில் இதே போன்ற ஒலி வாங்கிகளுக்கு முன்னால் பலமுறை பேசுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் ‘அன்பு நெஞ்சங்களே!’ என்று விளித்துத்தான் பேசத் தொடங்குவேன். இப்போது ஹாங்காங்கிற்குப் போய் 20 ஆண்டு காலம் ஆகிவிட்டது. அங்கும் பல தமிழ் மேடைகளில் பேசக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. அங்கேயும் எல்லா மேடைகளிலும் ‘அன்பு நெஞ்சங்களே!’ என்கிற முகமனோடுதான் என் உரை துவங்கும். நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள், ‘ஏன் அப்படித் தொடங்குகிறீர்கள்?’ என்று. நான் சொல்வேன்: ‘அன்பு நெஞ்சங்களே என்ற அந்த விளியில் C ITயின் சிநேகமும் நேசமும் கவிந்திருக்கிறது’.
வாழ்க்கை ஒரு CIT மாணவனை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சேர்க்கலாம். எனில் CIT நாட்களே அவன் வாழ்நாளின் வசந்த காலமாக இருக்கும். CIT வளாகமே அவனுக்கு வாழ்க்கையை எதிர்கொள்கிற ஆற்றலை வழங்கியது.
வாழ்க்கை என்னை இப்போது மும்பைக் கடற்கரையோரம் கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது. நான் பணியாற்றுகிற ஹாங்காங் நிறுவனம் மும்பைக் கடற்கரைச் சாலைத் திட்டத்தின் பொறியியல் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. நான் இந்த திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதல் முறையாக கடலுக்கடியில் சுரங்கப் பாதை அமைக்கப்படும். மும்பை நகரில் இரண்டாவது தொங்கு பாலம் அமைக்கப்படும்; நீளம் 250 மீட்டர். 70 ஹெக்டர் கடலோரத் தாழ் நிலம் நிகர்த்தப்படும். அதில் 20 ஹெக்டரில் எட்டு வழிச் சாலைகள் அமைக்கப்படும். 50 ஹெக்டர் நிலப்பிரப்பில் பூங்காக்களும், நடைபாதைகளும், மைதானங்களும், உருவாக்கப்படும். ஹாங்காங்கில் சுரங்கங்களிலும், மெட்ரோ ரயில் நிலையங்களிலும், நெடிதுயர்ந்த கட்டிடங்களிலும், நிலம் நிகர்த்துகிற பணிகளிலும் பெற்ற அனுபவமே இப்போது என்னை மும்பைக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. மும்பையின் வாகன நெரிசலைக் குறைக்கிற, மும்பைக் கடற்கரையின் முகச்சாயலையே மாற்றப் போகிற இந்த முன் மாதிரித் திட்டத்தில் பங்கு கொள்கிற பேறு எனக்குக் கிடைத்ததற்குக் காரணம், CIT-ல் நான் பெற்ற கல்வியே. வகுப்பறைக்குள் பொறியியலும், வகுப்பறைக்கு வெளியே வாழ்வியலுமாகக் கற்ற கல்வியே.
இப்போது மும்பையில் வசிப்பதால் நானும் என் மனைவியும் சுற்றியுள்ள இடங்களையும் பார்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். சென்ற வாரம் அவுரங்காபாத்திற்குப் போனோம். அங்கிருந்து அஜந்தாவிற்கும் எல்லோராவிற்கும் போனோம். அஜந்தாக் குகைகள், ஓவியங்களுக்கும் எல்லோராக் குகைகள், சிற்பங்களுக்கும் பேர் போனவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் குகைகளை எப்படி உருவாக்கினார்கள்? மலைகளை வெளியிலிருந்து உள்நோக்கியும், மேலிருந்து கீழ் நோக்கியும் சிறுகச்சிறுக உடைத்திருக்கிறார்கள். இந்தக் குகைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்று தளங்கள் கொண்டவை. விகாரங்களும், பிரகாரங்களும், கோபுரங்களும், அறைகளும், மண்டபங்களும், கருவறைகளும் கொண்டவை. இதன் தூண்கள், சுவர்கள், கூரைகள் – எங்கெங்கிலும் சிற்பங்கள். இங்கேயுள்ள சிறிதும், பெரிதும் மிகப் பெரிதுமான சிற்பங்களைச் செதுக்குவது மிகவும் சவாலானது. ஏனெனில் சிற்பி தவறிழைக்கவே கூடாது. நாம் காகிதத்தில் எழுதுகிறோம். பிழையிருந்தால் அதை அழித்தோ, அடித்தோ எழுதலாம். காகிதத்தையே கசக்கி எறியலாம். கணினி இன்னும் வசதியானது. தட்டச்சு செய்யம் போது தவறு நேர்ந்தால், கவலையே வேண்டாம், Back Space விசை இருக்கிறது. அழிக்கலாம். மீண்டும் எழுதலாம்.
இன்று மாலை CIT வளாகத்திற்குள் நுழைந்தபோது எனக்கு ஒரு வினோதமான ஆசை எழுந்தது. CIT-யிலிருந்து நான் வெளியேறி 37 ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘இந்த 37 ஆண்டுகளையும் ஒரு Back Space விசையால் பின்னோக்கி அழித்துவிட்டு மீண்டும் ஒரு CIT மாணவனாக ஆக முடியுமா?’ என்று. அது முடியாது. கால இயந்திரங்கள் கதைகளில் மட்டுமே இயங்கக் கூடியவை. காலம் முன்னோக்கி மட்டுமே செல்லும். பாரதி சொன்னான்: ‘சென்றதினி மீளாது’. இந்தக் குகைக் கோயிலை உருவாக்கிய சிற்பிகளுக்கு முன்னால் இருந்த சவாலும் அதுதான். ஒருமுறை அவனது உளி தவறாகக் கொத்தி விட்டாலும் அந்தச் சிற்பம் பாழாகிவிடும். குகைகளின் சுவர்களையோ, தூண்களையோ, கூரைகளையோ மாற்ற முடியாது. நமது வாழ்க்கையும் அப்படித்தான். ஒவ்வொரு நாளும் செதுக்கினால் செதுக்கியதுதான். மாற்றமுடியாது. நமது வாழ்க்கையும் அதனால்தான் சவாலானதாக இருக்கிறது. நமது வாழ்க்கையில் நல்ல சிற்பிகளும் இருக்கிறார்கள். சுமாரான சிற்பிகளும் இருக்கிறார்கள். நம்மில் குறைவாகத் தவறிழைத்தவர்கள் சாதனையாளர்களாகக் கருதப்படுகிறார்கள். எல்லோரையும் போல இந்த 37 ஆண்டுகளில் நான் பலவற்றை செதுக்கிச் செதுக்கி காலத்தால் முன்னகர்ந்து கொண்டு இருக்கிறேன். அதில் இரண்டு சம்பவங்களை இந்த மாலை நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொண்டு விடைபெறலாம் என்று நினைக்கிறேன்.
1995–ல் நான் ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தேன். இந்தியாவில் பெற்ற பட்டங்களை அவர்கள் அங்கீகரிப்பதில்லை. அங்குள்ள பொறியியல் அமைப்புகள் நடத்துகிற பட்டயப் பொறியாளர்களுக்கான போட்டித் தோ்வில் தேர வேண்டும். நான் முதலில் Hongkong Institute of Engineers நடத்துகிற பொதுவியல் துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து பிரிட்டனின் Institute of Structural Engineers நடத்தும் தேர்வுக்குத் தயாரானேன். இது சற்றுக் கடினமானது. ஏழு மணி நேர எழுத்துத் தேர்வு. Concrete Building Structures, Steel Structures, Bridge Structures, Offshore Structures இவை தவிர Miscellaneous Structures என்கிற வகையில் வகை மாதிரிக்கு ஒன்றாக ஆறு கேள்விகள் இருக்கும். இதில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதைக் குறித்து அறிக்கை எழுத வேண்டும். வடிவமைக்க வேண்டும். படம் வரைய வேண்டும். கட்டுமான நடைமுறைகளைப் பட்டியலிட வேண்டும். ஒப்பந்தக் கூறுகளை விவாதிக்க வேண்டும். எல்லாவற்றையும் விதிக்கப்பட்ட ஏழு மணி நேரத்திற்குள் இருந்த இடத்தில் இருந்தபடியே முடிக்க வேண்டும்.
ஹாங்காங்கில் நெடிதுயர்ந்த கான்கிரீட் கட்டிடங்கள் அதிகம். ஹாங்காங்கில் இந்தத் தேர்வு எழுதுபவர்களில் 90 சதவிகிதம் பேர் கான்கிரீட் கட்டிடத்தையே தேர்ந்தெடுத்துப் படிப்பார்கள். நானும் அதையேதான் செய்தேன். ஒவ்வொரு கேள்வியிலும் ஒரு A4 பக்க அளவில் வடிவமைக்க வேண்டிய Structure பற்றிய குறிப்புகள் இருக்கும். எதிர்ப் பக்கத்தில் ஒரு Outline Sketch இருக்கும். நான் தேர்வெழுதிய ஆண்டில் கான்கிரீட் கட்டிடத்திற்கான குறிப்புகள் மட்டும் இரண்டு பக்கங்களுக்கு மேல் நீண்டது. வரைமுறைகள் ஏராளமாக இருந்தன. அவற்றுக்கு உட்பட்டுத்தான் வடிவமைக்க வேண்டும். அதுவும் ஏழு மணி நேரத்திற்குள். நான் முக்கியமான முடிவெடுக்க வேண்டிய தருணமாக அது அமைந்து விட்டது. மேஜையில் உளியும் சுத்தியலும் இருந்தன. நான் அந்தக் கேள்வியைத் தெரிவு செய்வதில்லை என்று முடிவெடுத்தேன். என் முன்னால் 6¾ மணி நேரம் இருந்தது. Steel Structures, Bridge Structures, Offshore Structures எதற்கும் நான் தயாராக இல்லை. Miscellaneous Structure-ல் என்ன கேள்வி என்று பார்த்தேன். Flood Alleviation Tank. ஒரு நகரின் மழைநீர் வடிகால்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலான மழையையே வெளியேற்றும். கூடுதல் மழை பொழிந்தால் மேலதிக வெள்ளத்தை இந்த Tank-இற்குள் கடத்தி விடுவார்கள். நகரில் மழை நீர் வடிந்த பிறகு, இந்த பாதாளத் தொட்டியிலிருந்து அல்லது நீர்த் தேக்கத்திலிருந்து நீரை வெளியேற்றுவார்கள். இந்தியாவில் இப்படியான தொட்டிகள் கட்டப்படுவதில்லை. அப்போது ஹாங்காங்கில் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் கீழ் அப்படியான தொட்டியொன்றைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். நான் அதைப் பார்த்திருந்தேன். அந்தக் கேள்வியை எதிர் கொள்வது என்று முடிவெடுத்தேன். என் முன்னால் 6½ மணி நேரம் இருந்தது. உளியைக் கையில் எடுத்தேன். வழக்கமாக ஹாங்காங்கில் 30 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். அந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 9 சதவிகிதமாகக் குறைந்தது. பலரும் கடினமான கான்கிரீட் கட்டிடத்தின் சுவரில் மோதிக் கொண்டதுதான் காரணம். தேர்வானர்களின் பட்டியல் வெளியான போது சீனப் பெயர்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான தமிழ்ப் பெயரும் இருந்தது.
அப்போது எனக்குக் கம்பன் நினைவுக்கு வந்தான். இலங்கையிலிருந்து திரும்புகிற அனுமன் இராமனிடம் “கண்டேன் சீதையை” என்று சொல்லுகிற பாடல் மிகவும் புகழ் பெற்றது.
கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்
தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்
அண்டர் நாயக இனித் துறத்தி ஐயமும்
பண்டுள துயரும் என்று அனுமன் பன்னுவான்
இந்தப் பாடலுக்கு ஏராளமான உரையாசிரியர்கள் பொருள் எழுதியிருக்கிறார்கள். வரிக்கு வரி விளக்கம் சொல்லியிருக்கிறார்கள். அனுமன் “சீதையைக் கண்டேன்” என்று சொல்லியிருந்தால் “சீதையை” என்று சொன்னதும் அனுமன் கண்டானா இல்லையா என்கிற பதற்றம் இராமன் மனத்தில் தோன்றிவிடும் என்பதால்தான் “கண்டேன் சீதையை” என்று அனுமன் சொன்னான் என்று போகும் அவர்களது பொழிப்புரை. ஆனால் அனுமன் எப்படி வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம். ஏனெனில் அதற்கு முந்தைய பாடலிலேயே அனுமன் இராமனுக்குக் குறிப்புணர்த்தி விடுகிறான். அனுமன் வந்ததும் எப்போதும் செய்வது போல் இராமனை வணங்காமல் சீதாப் பிராட்டி இருக்கிற தென் திசையை நோக்கி வணங்குகிறான். இராமனுக்குப் புரிந்துவிடுகிறது. அனுமன் சீதையைப் பார்த்து விட்டான். அவள் தென் திசையில் உள்ள ஒரு இடத்தில் இருக்கிறாள்.
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்தன்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலைவன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்.
என்பது பாடல். ஏந்தலை–இராமனை–தொழாமல், தையல் இருக்கிற திசையை நோக்கி “வையகம் தழீஇ நெடிது இறைஞ்சுகிறான்”. இங்கே வையகம் என்பது நிலம். தன் உடம்பின் சகல பாகங்களும் நிலத்தில் படும்படியாக– வையகம் தழீஇ நெடிது– தென் திசை நோக்கி அனுமன் வணங்குகிறான்.
இந்தப் பாடல் என் நினைவுக்கு வந்தது. Institute of Structural Engineers- இன் தேர்வுப் பட்டியலில் என் பெயரைப் பார்த்ததும் ஹாங்காங்கிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் இருக்கும் CIT-யை நோக்கி வையகம் தழீஇ நெடிது இறைஞ்சினேன்.
ஆக, சரியான நேரத்தில் முடிவெடுப்பது ஒரு வகையான செதுக்குதல் என்றால், நிதானமாகவும், நீண்ட காலமும் செதுக்குவதும் பல சந்தர்ப்பங்களில் அவசியமாகிறது. அப்படியான ஒன்றுதான் ஹாங்காங் தமிழ் வகுப்புகள்.
தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்கிற எல்லா நாடுகளிலும் பிள்ளைகளுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் முயற்சி நடந்து வருகிறது. எனில் வெற்றி பெற்றவர்கள் சிலரே. ஏன்? புலம் பெயர்ந்து வாழ்கிற நாட்டில் உள்ள பெரும்பான்மைச் சமூகத்தினருக்கு நமது முயற்சியைக் குறித்து சாதகமான கருத்தை உருவாக்க வேண்டும். நாங்கள் அதைச் செய்தோம். சீனச் சமூகத்தின் பிரமுகர்களை, சட்டமன்ற, நகராட்சி உறுப்பினர்களை, கல்வியாளர்களை, பள்ளிக் கல்வித்துறைச் செயலர்களை தமிழ் வகுப்புகளுக்கு அழைத்து வந்தோம். தமிழ் வகுப்பின் அமைப்பாளர்கள் அந்தக் கூட்டங்களில் என்னைப் பேசுமாறு கேட்டுக் கொண்டார்கள். நான் பேசினேன். “அந்நிய மண்ணில் வளரும் எங்கள் குழந்தைகளுக்கு எங்கள் பண்பாட்டைக் கற்றுத்தர விரும்புகிறோம். அதற்குத் தாய்மொழிக் கல்வி முக்கியமானது. எல்லோருக்கும் அவரவர் தாய்மொழி பிரியமானது. எனில் தமிழர்களுக்கு தாய்மொழியானது கூடுதல் சிறப்புமிக்கது. ஏன்? தமிழ் ஒரு செம்மொழி. செம்மொழியாவது யாது? தொன்மையானதும், பிற மொழிகளின் துணையின்றி தனித்தியங்க வல்லதும், பெரும் இலக்கிய வளம் கொண்டதுமான மொழியே செம்மொழி. சீனம், சமஸ்கிருதம், அரபி, கிரேக்கம், இலத்தீன் ஆகியன பிற செம்மொழிகள்.”
“நாங்கள் தமிழர்களாகப் பிறந்தது, எதேச்சையாக இருக்கலாம். ஆனால், ஒரு செம்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றிருக்கிற பேறு எங்களுக்கு வாய்த்திருக்கிறது. இதை அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றிக் கொடுக்காவிட்டால் வரலாறு எங்களை மன்னிக்குமா?” என்று சீனப் பிரமுகர்களைப் பார்த்துக் கேட்டேன். அவர்களுக்குத் தமிழின் மீதான மதிப்பு உயர்ந்தது. எங்கள் மீதும் நம்பிக்கை வந்தது. எங்கள் தமிழ் வகுப்புகளுக்கு எல்லா உதவிகளையும் செய்ய முன் வந்தார்கள். இப்போது 14 –வது ஆண்டாக, தொடர்ச்சியாக, ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன. பல்லூடக வசதிகளுடன்கூடிய ஒரு பெரிய பள்ளியின் ஆறு வகுப்பறைகளில் 130 பிள்ளைகள் படிக்கிறார்கள். 12 தன்னார்வ ஆசிரியைகளும், 10 அமைப்பாளர்களும் மெய் வருத்தம் பாராது உழைக்கிறார்கள். எங்களது நிதானமான அணுகுமுறை தமிழ் வகுப்பை செம்மையாகச் செதுக்கி வருகிறது. CIT எனக்களித்த தமிழ் என்கூடவே வருகிறது.
இந்த அரங்கத்தில் CITயின் பல முன்னாள் மாணவர்கள் இருக்கிறீர்கள். பல இறுதியாண்டு மாணவர்களும் இருக்கிறீர்கள். விரைவில் இந்த மாணவர் என்கிற தகுதியிலிருந்து முன்னாள் மாணவர் என்கிற தகுதியைப் பெறப் போகிறீர்கள். உங்களுக்கு நான் சொல்வதெல்லாம் இதுதான்: உங்கள் முன் வாழ்க்கை விரிந்து கிடக்கிறது. நீங்கள் உடனடியாக முடிவெடுத்துச் செதுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் வரும். நின்று நிதானமாகச் செதுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் வரும். சூழலை எதிர்கொள்ளுங்கள். எதற்கும் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை; ஏனெனில் CIT உங்கள் கைகளில் உளியையும் சுத்தியலையும் கொடுத்தனுப்புகிறது.
முன்னாள் மாணவர்களில் சிறந்து விளங்குபவருக்கான இந்த விருதிற்கு என்னைத் தெரிவு செய்த விருதுக் குழுவினருக்கு நன்றி செலுத்துகிறேன். CIT முன்னாள் மாணவர் சங்க அமைப்பாளர்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். இந்த விருதுக்கு என்னை விண்ணப்பிக்கச் சொல்லித் தொடர்ந்து வற்புறுத்தி வந்தவர், எனதன்பு நண்பர் பேராசிரியர் டாக்டர் சிவலிங்கம். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
கடந்த வாரம் முதல்வர் டாக்டர் செல்லதுரை அவர்களிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. இந்த விருதுக்கு உங்களைத் தெரிவு செய்திருக்கிறோம் என்று. நான் உடனே என் மனைவியிடம் சொன்னேன், “CITன்னு சொன்னா சும்மாவே நிலத்திலே கால் பாவாது; இதிலே இது வேறயா” என்று சொல்லி வாழ்த்தினார். என்னுடன் 30 ஆண்டுகளாகப் பயணிக்கிறார். அவருடைய இரண்டு சிநேகிதிகள் மும்பைக்கு வந்திருப்பதால் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அவரை இந்தக் கணத்தில் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.
எனக்கு இரண்டு பிள்ளைகள், வளர்ந்த பிள்ளைகள். வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். உலகத்தின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் அவர்களுக்கு இடம் கிடைத்தது. அவர்களது படிப்பிற்கு நாங்கள் இரண்டு பேரும் யாதொரு ஒத்தாசையும் செய்தது கிடையாது. இன்னுஞ் சொல்ப் போனால், அவர்கள் என்னென்ன பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தார்கள், அதில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றார்கள் போன்ற எந்த விவரமும் எனக்குத் தெரியாது. அவர்கள் சுயேச்சையாக விரும்பிய பாடங்களை விரும்பிய வண்ணம் படித்தார்கள். அது என்னுடைய புத்தியிலிருந்து உருவானதல்ல. CIT-யில் அப்படியான சுயேச்சையான கல்விக்களம் இருந்தது. அதனால், சுயமாகப் படிப்பதன் மதிப்பு எங்களுக்குத் தெரிந்திருந்தது. அதைத்தான் நான் பிள்ளைகளுக்கும் கடத்தி விட்டேன். இரண்டு பேரும் இன்று காலை என்னை அழைத்து வாழ்த்தினார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்.
CIT-யில் இருந்த ஐந்தாண்டுக் காலமும் தமிழ் மன்றத்தில் ஊக்கத்தோடு செயல்பட்டேன். அதற்குத் துணை நின்றவர்கள் பலர். அதில் மூன்று பேர் இங்கே வருகை தந்திருக்கிறார்கள். அன்றும் இன்றும் எங்கள் அன்பான முதல்வர் பேராசிரியர் மெள.குருசாமி அவர்கள்; நாங்கள் படித்தபோது தமிழ் மன்றத்தின் ஆசிரியப் பொறுப்பாளராக இருந்த பேராசிரியர் ப.ஆறுமுகம் அவர்கள்; முதல்வரின் தனி உதவியாளராகப் பணியாற்றிய திருவாளர் சாமிநாதன் அவர்கள் – இந்த மூன்று பேரின் ஆசி எனக்கு என்றென்றும் உண்டாகும். .
நண்பர்களே! உற்சாக மிகுதியால் விதிக்கப்பட்ட கால அளவைக் கால் அதிகமான நேரம் எடுத்துக் கொண்டு விட்டேன். அதற்காக மன்னிப்பைக் கோருகிறேன். இத்துணை நேரம் பொறுமையாகச் செவி மடுத்தீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, வாய்ப்புக்கு நன்றி பாராட்டி, விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
தன் நினைவுகளையும், உணர்வுகளையும் சாதனைகளுடனும் அனுபவங்களுடனும் மிகவும் அருமையாகப்பின்னி அன்புடன் பகிர்ந்து இருக்கிறார் மு.ரா. வாழ்த்துக்கள்!