யாதும் ஊரே, யாவரும் கதை மாந்தர்


“உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” மற்ற கல்விகளை விட உயர்ந்தது என ஒரு திருக்குறள் (140) கூறுகிறது. பணி நிமித்தமாக உலகெலாம் வசித்து, தன் அனுபவங்களைப் பிறர் வாசிப்பதற்குக் கதைகளாய், அக்கதைகள் மூலம் குறள் கூறும் உயர்கல்வியை மயக்கும் மொழியில் அளித்தவர் திரு. முத்துலிங்கம்.  பல நாடுகளில் வசிக்க நேர்ந்து அவர் தேர்ந்தெடுத்த கதைசொல்லியாகவும் வாய்த்தது, தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த ஒரு வரம். “மகா பாரதத்தில் போர்க் காட்சிகளைக் காணவியலா திருதராட்டினனுக்கு சஞ்சயன் போல,” பல நாடுகளுக்கும் போக வாய்ப்பில்லாதவர்களுக்கு, தான் வசித்த நாடுகளில் தாம் கண்டதையும், அனுபவித்ததையும் சுவையான கதைகளாக காட்சிப் படுத்திக் கொண்டே போகிறார். ஒரு கதை சொல்லியாய் இருப்பது மற்ற படைப்புத் தொழில்களை விட சிரமம் வாய்ந்தது. ஒவ்வொரு கதையும் மற்றவர் தொடாத ஒரு விசயமாகவும், புதிய மொழியாகவும் இருக்கவேண்டும். இச்சிரமத்தை வென்று 140-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல கட்டுரைகள், சில நாவல்கள், மற்றும் உலக எழுத்தாளர்களிடம் சுவையான நேர்காணல்கள் என்று 60-ஆண்டுகளில் இவர் தொட்டிருக்கும் தளங்கள் இதுவரை வேறு எவருக்கும் வாய்க்காதது. அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே சில நிமிடங்களில் சொல்ல முயல்வது, கம்பன் சித்தரிக்கும் “பாற்கடலைப் பருக முயலும் பூனையின் பேராசைக்கு ஒப்பானது.” பேராசைச் சுழல் யாரைத்தான் விட்டது? இவரின் கதைகளில் வரும் பெரும்பாலான சம்பவங்கள், அவற்றில் வந்து போகும் மனிதர்கள், சில வேளைகளில் மிருகங்கள் என்று எல்லாமும் உண்மையாக நடந்திருக்கக் கூடுமோ என்கிற மயக்கத்தை வாசகருக்கு அளிக்கின்றன. அவற்றில் இருந்து சிலவற்றை இங்கே காணலாம்.
திரு. முத்துலிங்கத்தின் பிறந்த ஊரான கொக்குவில்லில் இருந்தே ஆரம்பிக்கலாம். “கோடைமழை” என்கிற சிறுகதையில் அம்மாவின் நகையைக் களவெடுத்து அடகு வைக்க வரும் 20 வயது இளைஞனும், அந்த கிராமத்தில் வட்டிக்கு விட்டே பிழைப்பு நடத்தும் கிழவியும் இருக்கிறார்கள். வெவ்வேறு காரணங்களுக்காக வீட்டுப் பெண்களின் நகைகளைக் காலகாலமாக திருடும் ஆண்களை இளைஞன் பிரதிபலிக்கிறான். ஆனால் ஒரு வாய்ப்புக் கிடைக்கும் போது, சொந்த மகளிடமே வட்டிக்குவிட பணம் பிரட்ட கிழவி கிளம்புவது வாசகருக்கு எதிர்பாராத அதிர்ச்சியை கொடுக்கிறது. அப்பேர்ப்பட்ட கிழவிக்கு தண்டனை தருவது போல இளைஞன் முன்னம் அடமானம் வைத்த நகை பித்தளையாய் மாறிப் பல்லை இளிக்கிறது.
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆனது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் குரங்கு பிடிக்கப் போய் குபேரன் ஆன ஆப்பிரிக்கக் குடிமக்களை ‘ஞானம்’ சிறுகதையில், மேற்கு ஆப்பிரிக்காவின் சியரா லியோனில் சந்திக்கலாம். ‘கொலபஸ்’ என்கிற அபூர்வ வகைக் குரங்குகளை ஆராய்ச்சி செய்ய வரும் மாணவர்கள், அவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்து குரங்குகளைப் பிடிக்க உதவும் மென்டே இன ஆப்பிரிக்க மக்கள் என்று கதை போகும். அதிலும் அம்மக்களின் தலைக் குடிமகன் கூரையில் கோழிகளை தலைகீழாகக் கட்டி, அவை இறக்கைகளை அடிக்கும் போதெல்லாம் விசிறிகளாகப் பயன்படுத்தும் காட்சி நாம் இதுவரைக் கண்டிராதது. அவர்களின் விருப்ப உணவுகள் கோலா நட்டும், குரங்கு இறைச்சியும்.
ஆந்தை என்றால் அம்மக்களுக்கு ‘பேய்ப்பறவை’ என்று அலர்ஜி. ஆப்பிரிக்கச் சிறுவர்களை மனிதர்களாக மாற்றும் சடங்குகளை செய்வதற்கென்றே கட்டப் பட்டுள்ள ஒரு குடிசையிலே அம்மக்கள் ஓர் ஆந்தையை அதன் குஞ்சுகளோடு கண்டு, அதைக் கொல்ல முடிவெடுக்கிறார்கள். ஆராய்ச்சி மாணவன் டேமியனுக்கோ ஆந்தைகள் அற்புதமானவை. அதுவும் கணகளைத் திருப்பாமல் கழுத்தை மட்டும் திருப்பி இரையைத் தேடவல்ல, இருட்டில் திசையறியும் காதுகளும், ஒலிமூலமே திசையறியவேற்ற உடம்பும், சத்தம் போடாமல் பறக்கும் வல்லமை கொண்ட செட்டைகளும் கொண்டு, இரவு வேட்டையில் கில்லியாகவும், பிடித்த இரையை முழுதாக விழுங்கி பின் சக்கைகளை துப்பிவிடும் வல்லமையும் கொண்ட ஆந்தைகள் அற்புதமானவை.
அவனும், அவன் நண்பனும் சேர்ந்து ஓர் இரவு அந்த ஆந்தைக் குடும்பத்தைத் தப்புவிக்கிறார்கள். ஆந்தையில்லாக் குடிசையை எரித்து அம்மக்கள் நிம்மதி கொள்ள, அவ்வைபவத்தைப் பார்த்துவிட்டு வரும் மாணவர்கள் பிடிபட்ட குரங்குகள் எல்லாம் மாயமாய் மறைந்து போனதை எண்ணி நிம்மதி இழக்கிறார்கள்.
அப்படியே கிழக்கு ஆப்பிரிக்காவின் சூடானுக்கு வந்தீர்களானால், “பருத்திப்பூ” கதை உங்களைத் தண்ணீராலோ அல்லது கண்ணீராலோ நனைத்து விடும். சூடானில் கெஸீரா நீர்ப்பாசனத் திட்டத்தில் உயர்பதவியில் இருந்த நீர்வள நிபுணர் குணசிங்கம் எதையும் சிக்கனமாய் பயன்படுத்துவதை தன் சுபாவமாகக் கொண்டவர். சூடான் நாட்டு வழக்கங்களாகிய, காலை உணவு ஃபூல், அந்நாட்டு உடை ஜிலேபியா போன்றவற்றை பழக்கப்படுத்திக் கொண்ட அவருக்கு, அந்நாட்டு மக்கள் வேலை செய்யும் முறைமைக்கு மட்டும் மாறாமால், தன் இயல்பாய் இருப்பதால் ஒரு சிக்கல் நேருகிறது. புதிதாக வாய்க்கால் போடும் பொறுப்பில் இவர் இருக்கும் போது, தண்ணீருக்காக ஒவ்வொரு நாளும் இரண்டு மைல்கள் நடந்து போகும் ஒரு (ஜூபா இனத்துக்) கிழவியின் பரிதாபம் இவரை உலுக்குகிறது. மனம் கேளாமல், புதிய வாய்க்காலை வரைபடத்தில் இருந்தபடி வெட்டாமல், கிழவியின் குடிசைக்கு அண்மையாய்ப் போகும்படி செய்துவிடுவார். கிழவிக்கு சுலபமாய் தண்ணீர் கிடைத்து மனம் குளிர்ந்தது மட்டும் அன்றி, அவள் குடிசை அருகே இவருக்கு மிகவும் பிடித்த பருத்திப்பூத் தோட்டமும் உண்டாகிறது. இதனால் வாய்க்கால் திட்டச் செலவு 16% அதிகமாகி விடும். விளக்கம் கேட்டு கடிதம் வர, இவர் நேர்மையாக பதிலளிக்க அது விசாரணைக் குழு என்று வில்லங்கமாய் மாறி, இவர் வேலைக்கே வேட்டு வைக்கிறது. இப்படியாக கதியற்ற ஏழைக் கிழவிக்கு வாய்க்கால் மூலம் வாழ்வு கொடுத்துவிட்டு, இன்னும் ஒரு வருடம் சூடானில் இருந்து, தன் மகள் பள்ளி இறுதி வகுப்பு முடிக்க வேண்டிய திட்டத்தை கெடுத்துக் கொள்கிறார்.
பாகிஸ்தான் வடமலைப் பிராந்தியத்தில் நடக்கும் “வம்ச விருத்தி” கதையில் வரும் அஸ்காரி என்பவரின் தலையாய பிரச்சினை ஒரு ஆண் மகனைப் பெற்றெடுப்பது. நீண்டகாலமாக இரண்டு மனைவிகள் மூலம் முயற்சித்து, ஏழு பெண்குழந்தைகளுக்குப் பின் தவமிருந்து பெற்ற ஒரே மகன் அலி. அவன் வளர்ந்து 12 வயது அடைந்ததும் அவனுக்கு “வளர்ந்துவிட்ட ஆண்மகன்,” என்ற பட்டம் வாங்க, கிராம வழக்கப்படி வேட்டைக்குப் போகிறார்கள். அதுவும் ஒரு மலையாட்டை வேட்டையாட ஒரு “அதிர்ஷ்டமான துப்பாக்கியோடு” போவார்கள். முன்னொரு காலத்தில், அழகுக்கே இலக்கணமாய விளங்கிய அஸ்காரியின் அம்மாவைப் பார்த்து ஒருகணம் உன்மத்தமான அவ்வூர்ப் பால்காரன் அவளைப் பார்த்தபடியே சீப்பால் தன் தலையை வார, பின்னர் சேதியைக் கேள்விப்பட்ட அஸ்காரியின் தந்தையின் கரத்தால் அப்பால்காரனின் உயிரை வாங்கிய துப்பாக்கி அது. உலகிலேயே அந்தப் பகுதியில் மட்டுமே வசிக்கும் சாம்பலும் பழுப்பும் கலந்த நிறத்தில், இரண்டரை அடி உயரமும், நேரான கொம்புகளும் கொண்ட, பாறைக்குப் பாறை லாகவமாகத் தாவும் திறனும் கொண்ட அருகிவரும் அபூர்வ இனத்தைச் சேர்ந்த மலையாடுகளின் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைத்து, தன் வம்சத்தைத் தடையின்றித் தொடர வழி செய்துவிட்டு ஊர் திரும்புவார்கள்.
ஆஃப்கானிஸ்தான் கிராமங்களில், தாலிபான்கள் நான்கு இஞ்ச்க்கு குறைவாக தாடியுள்ளவர்களை “மதத் தேவை” காரணமாகச் சிறையிடுவார்கள். ஆனால் ரஸீமா போன்ற இளம் விதவைகளின் மனிதத் தேவைகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள். பள்ளித் தோழனும் அழகனுமான காசிமின் ஆசைக்கு ஒருமுறை அவள் இணங்கிப் போகிறாள். எப்படியோ இதைத் தெரிந்து கொண்ட ரஸீமாவின் 18-வயது மைத்துனன் நியாசிக்கும் காசிமுக்கும் ஏற்படும் ஒரு தகராறு, அதன் காரணமாக காசிமின் துப்பாக்கியால் கொல்லப் படும் நியாசி, அதன் தண்டனையாக ரஸீமாவின் மாமனாரால் கொல்லப் பணிக்கப் படும் காசிம்,  அல்லாவின் கருணையினால் காசிம் அதிலிருந்து தப்பிப்பது, இப்படி எல்லாமே “யதேச்சையாக” நடைபெறுகின்றன. மிக முக்கியமாக சமுத்திரத்தில் மிதக்கின்ற, ஒன்றையொன்று ஒரு கணம் தொட்டு மீண்டும் பிரிந்த இரு மரத்துண்டுகள் எப்போதாவது மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பிருப்பது போல ரஸீமா மீண்டும் ஒருமுறை காசிமை சந்திக்க நேரிடலாம். ஆஃப்கானிஸ்தான் பிறந்த ஒரே காரணத்திற்காக அதுவரை அவள் காத்திருப்பாள்.
சரிக்குச் சமமான எதிரி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்த எதிரியும் நமக்குத் தெரியாமல் கணகாலமாய் இருப்பது நல்லதல்ல. கென்யாவில் வடிவான மனைவி எமிலியோடு வசிக்கும் ம்வாங்கிக்கு அப்படி ஒரு சமமான எதிரியாக பதினாலு அடி நீளமுள்ள ஆப்பிரிக்காவின் கறுப்பு மம்பா பாம்பு வாய்க்கிறது. பசியெடுக்கும் போதெல்லாம் அவரின் கோழிப் பண்ணையிலிருந்து சாவகாசமாக வந்து முட்டைகளைச் சாப்பிட்டு விட்டு போகிறது.  தன சீனியர் சர்டிஃபிகேட் செகண்ட் டிவிஷன் மூளையைப் பயன்படுத்தி ஃபீவர் மரக் கொம்பு உட்பட பல உபாயங்களை எவ்வளவுதான் முயன்றும் தன் எதிரியை ம்வாங்கியால் வெல்ல முடிவதில்லை. இறுதியாக பக்கத்து வீட்டுக்காரர் யோசப்பின் யோசனைப்படி பிங்பாங் பந்துகளை முட்டைகளோடு கலந்து வைத்து தன் எதிரியை சூழ்ச்சியால் கொல்கிறார். சூழ்ச்சிகளால் வெல்லப் படும் வெற்றிகள் ருசிப்பதில்லை என்பதை ஒரு இதிகாசமும் தெரியாதபோதிலும் கற்றுக் கொள்கிறார்.
தகப்பன்கள் செய்யும் தவறுகள் பிள்ளைகளை எப்படிப் பாதிக்கும் என்பதை ஒட்டகம் கதையில் சோமாலியா கிராமத் தலைவர் நூரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். சோமாலியாவில் மனிதர்களை விட ஒட்டகங்கள் அதிகம் பொதி சுமக்க பயன்படுத்தப்படும். அவற்றின் தடிமனான கண் இமைகள். மணற்புயல் அடிக்கும் போதெல்லாம் அவற்றின் கண்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும். கிராமத்திற்கு என்ன வேண்டும் எனக் கேட்ட ஐ.நா. ஊழியர்களிடம் ஆழ் கிணற்றுக்குப் பதிலாக மசூதியை நூர் கேட்க, கிணறு 8 மைல்கள் தள்ளிப் பக்கத்து கிராமத்துக்குப் போய்விடும். மகள் மைமுன் தினமும் ஒரு ஒட்டகம் போல, 16 மைல்கள் நடந்து தண்ணீர் பாவிக்க வேண்டி வருகிறது. தந்தை செய்த தவறின் விளைவால் மணம் செய்ய தனக்குப் பிடித்தமான இளைஞன் அலிசாலாவை தியாகம் செய்துவிட்டு 50 வயது முதியவரான நபதூன் என்பவரை மைமுன் தேர்ந்தெடுப்பது சில நாட்களில் வற்றக் கூடிய கண்ணீரோடும் வாழ்நாள் முழுதும் வற்றாத தண்ணீரோடும் வாழ்வதற்காக.
எட்டா தூரத்தில் உச்சாணிக் கொம்பில் காய்த்துத் தொங்கும் பழத்திற்கு இருக்கும் மவுசு, வலிய வந்து உங்கள் மடியில் விழுந்து என்னை உண்ணு என வேண்டுகோள் விடுக்கும் பழத்திற்கு இருப்பதில்லை.  பூர்வீகம் கதையில், பிரான்ஸ் தேசத்தில் நடைபெறும் ஒரு பட்டறையில் போஸ்னியாவில் வேலை செய்பவர், சோமாலியா அகதிகள் காப்பாளர், பாப்புவா நியூகினியைச் சேர்ந்த குடிநீர் நிபுணர், கியேவ் (Kiev) நாட்டிலிருந்து வரும் அனா சேரகேவ் எனப் பலநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் அனா காண்போரைக் கவரும் வசீகர அழகுடையவள் அவள். கடைசி நாள் இரவு உணவின் போது, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போகும் வைனின் அளவிற்கேற்ப தன் மனதைத் திறக்கிறாள். இளமைக் காலத்தில் அனாவின் கற்பைக் காப்பாற்ற வேண்டி  ஆண் சிநேகிதர்களுடன் சேர விடாத அம்மாவைப் பற்றி கதைப்பாள். ஒரு எதிர்பாராத தருணத்தில் தன் கன்னிமையை கலைக்க யாராவது வருகிறீர்களா என்று அழைப்பும் விடுப்பாள். கதையின் ஆரம்பம் முதலே அவளின் அழகில் மனதைப் பறிகொடுத்து, ஒரு இரவு அவளுடன் நடனமும் ஆடி, முடிந்தால் தனிமையில் சந்திக்க ஆவலாய் இருக்கும், நெருக்கமான போஸ்னிய இளைஞன் உட்பட எவருக்கும் அவள் அழைப்பை ஏற்கும் தைரியம் காணாது. உச்சகட்டமாக தன் கவர்ச்சியான (செயற்கை) மார்புகளை பிய்த்து இளைஞன் மற்றும் கதைசொல்லியின் முகத்தில் எறிகிறாள் அனா. அவளின் முழுப் பெயர் அன்னலட்சுமி சேரகோவ் என்பதும்  அவள் கேன்சரால் 10 வருடங்கள் அவதிப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து இறக்கப் போகிறாள் என்பது யாருக்கும் அப்போது தெரியாது.
மாணவர்கள் திருடி ஆசிரியரிடம் அகப்படும் கதைகள் நீங்கள் கேள்விப் பட்டிருக்கக் கூடும். ஆனால் எங்காவது மாணவர் முன் ஆசிரியர் திருடிப் பார்த்திருக்கிறீர்களா? வாருங்கள் வட அமெரிக்காவின் ஒரு இலையுதிர் காலத்திற்கு. 20 வயதான ஒரு கல்லூரி மாணவி தன் பேராசிரியர் கொடுத்த ஒரு புராஜக்ட்டை முடிப்பதற்காக அத்துறையில் ஒரு காலத்தில் சிறந்து விளங்கி, ஆனால் தன் ஹிப்பி வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்ள விரும்பாமல் வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட வேறு ஒரு முன்னாள் பேராசிரியரை மிகுந்த சிரமத்திற்கிடையே கண்டு பிடித்து அணுகுகிறார். வேண்டியதற்கும் மேற்பட்ட உதவிகளை இந்த ஹிப்பி ஆசிரியர் வழங்கிய பின் தனக்கு ஒரு வேளை இரவு உணவு வாங்கித்தர மாணவியை வேண்டுவார். ரெஸ்றாண்டில் போய் உணவு வாங்கித் தர வசதியில்லை, ஆனால் தன் வீட்டிற்கு வரவழைத்து தன் கையாலே சமைத்து மாணவி அந்த ஆசிரியருக்கு உணவு படைப்பார். ஒரு வாரம் கழித்து, ஒரு புத்தக கடைக்குத் தன்னை அழைத்துப் போகும்படி மாணவியை ஆசிரியர் வேண்டுவார். (ஹிப்பித் தோற்றத்தில் இருக்கும் அவரை அக்காலத்தில் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்).புத்தகக்கடையில் சில நேரம் செலவழித்துப் பின் வெளியே வந்த பின்னர், தன் மேலங்கியின் உள் பாக்கெட்டில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து மாணவியிடம் கொடுத்து, தன் அன்பளிப்பாக ஏற்றுக் கொள்ளச் சொல்வார். அந்தப் புத்தகத்தை திருடினீர்களா என்று கேட்ட மாணவிக்கு, “உனக்கு ஒரு பரிசு தர விரும்பினேன், ஆனால் என்னிடம் காசில்லையே,” என்பார் பரிதாபமாக.
தன் பிள்ளைகளை அதுகள் பாட்டிற்கு விளையாட விட்டுவிட்டு வீட்டு வேலை, அல்லது வயல் வேலைகளைப் பார்ப்பது சொந்த நாட்டில் செல்லுபடியாகலாம். ஆனால் புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் கவனமாய் இருக்க வேணும் என்கிற பாடத்தை ஷாப்பிங் மாலில் தனியே குழந்தையை விட்டு விட்டு ஷாப்பிங் போவதால் ஒரு லலிதகுமாரி படும் அவதி. குழந்தை நல வாரிய அலுவலர், காவலர்கள் மூலம் படும் இன்னல்களையும், பரிதாபமாய் அழுது கொண்டிருந்த குழந்தைக்கு உதவப் போய், பிள்ளை கடத்தல்காரன் என்று லலிதகுமாரியால் பட்டம் பெறும் லோகநாதனையும் இங்கே நமக்கிடையேதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
எளிய கதைகளாய்த் தோன்றும் சில கதைகள் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணமாக அமெரிக்கக்காரியாக விரும்பிய இலங்கைப்பெண் மணமுடித்த வியட்நாமிய கணவன் மூலம் குழந்தை பெற முடியாததால், ஆப்பிரிக்க ஆணிடம் இருந்து பெற்ற உயிர் அணுக்கள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வாள். அக்குழந்தையின் நிலம் எது?
இவரின் நேர்காணல்களும் சுவையில் கதைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. கனடாவில் வாழும் ஐரிஷ் வம்சாவழியைச் சேர்ந்த ஸ்டெஃபான் ஹனிக்கனிடம் 865க்கும் மேலான இசைக் கருவிகள் உள்ளன எனக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கிறார். ஸ்டெஃபான் சென்னையிலே பிரபலமான லக்ஷ்மன் ஸ்ருதி இசைவாத்தியக் கூடத்துக்கு ஒருமுறை போயிருக்கிறார். அவர் சென்ற சமயம் யப்பானிய சுற்றுலாக்காரர் ஒருவர் சாரங்கி வாத்தியத்தை சுட்டிக்காட்டி அது என்னவென்று விசாரித்திருக்கிறார். விற்பனைக்காரருக்கு அதன் பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. ஸ்டீஃபான் அந்த வாத்தியம் சாரங்கி என்று சொன்னது மட்டுமல்லாமல் அதன் சரித்திரத்தை கூறி உடனேயே சுருதி கூட்டி வாசித்துக் காட்டியிருக்கிறார். யப்பானிய பயணிக்கு பிடித்துவிட்டது.  யோசிக்காமல் காசு கொடுத்து வாத்தியத்தை வாங்கிப்போனார். தமிழ்நாட்டுக் கடையில், ஒரு வடநாட்டு வாத்தியத்தை, கனாடாவிலிருந்துபோன ஐரிஸ்காரர், யப்பானிய சுற்றுலாக்காரருக்கு விற்று சாதனை படைத்தார். இசைக்கூடத்துக்கு சொந்தக்காரரான இரு சகோதர்கள் அவருக்குச் சந்தனமாலை அணிவித்து கௌரவித்தார்கள்.
அவரிடம் எடுத்த பேட்டியில் ’மனிதகுலத்துக்கு இத்தனை இசைக்கருவிகள் தேவையா என்று கேட்கிறார். அதற்கு ஸ்டெஃபான் “இசை என்பது பெரிய ஆற்றுவெள்ளம் போல. அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கிறது, அவரவர் தேவைக்கு ஏற்றபடி விதவிதமான பாத்திரங்களில்(இசைக்கருவிகளில்) பிடித்து இசையை அருந்துவர். எல்லாரும் எடுத்தபின்னும் இசை நதியாக ஓடிக் கொண்டே இருக்கும் என்கிறார். பல வாத்தியங்களை அனாவசியமாக வாசிக்கும் தனக்கு நாதஸ்வரம் தான் மிக்கச் சவாலான வாத்தியம் என்றும் கூறியிருப்பார்.  800-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை வாசிக்கும் ஓர் அபூர்வ இசைக் கலைஞன் நாதஸ்வரத்தை கற்றுத் தேற கடினமான வாத்தியம் என்று கூறியதை வரலாற்றில் இந்த நேர்காணல் மூலம் பதிய வைக்கிறார்.
ஒரு படைப்பாளியின் முதல் நோக்கம் படைக்கும் போது அது கொடுக்கும் இன்பம். 2வது நோக்கம் சகமனிதனோடு அந்த இன்பத்தைப் பகிர்ந்துகொள்வது. படைப்புகளின் ஆதாரமாக உயிர் நேயம் அமைய வேண்டும்.  “அப்படைப்பு உண்மையை நோக்கிய ஒரு பயணமாகவும் அமைதல் கூடுதல் சிறப்பு. வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரியாத மூலை முடுக்குகளைக் கண்டுபிடித்து அதிகம் தெரிந்துகொண்டு வாழ்க்கையோடு நெருக்கத்தை உண்டுபண்ணிக் கொள்வது, சிந்திக்க வைப்பது. மனித உயிரின் சிந்தனையைத் தூண்டி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அதை நகர்த்துவது” என்று இலக்கியத்தை முத்துலிங்கம் வரையறுக்கிறார்.
அவ்வரையறையின் படி தன் கதைகள், கட்டுரைகள், நேர்காணல்களை “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றைப் பின்பற்றி மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளையும் பாத்திரங்களாக தம் ஆக்கங்களில் படைத்து, நமக்கெல்லாம் உலகத்தோடு ஒட்ட ஒழுகும் உயர்கல்வியை அளிக்கும் ஒரு பல்கலைக் கழகமாக விளங்குகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.