தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-12


 
 
 
 
 
 
 
அத்தியாயம் 32
இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கும் போது தற்செயலாக ஒரு நீண்ட நாள் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் தொடர்பு கொண்ட வேறு இரு நண்பர்களிடமும் இவரிடமும் இந்தத் தொடர் பற்றிப் பேச்சு வாக்கில் தெரிவித்திருந்தேன். மூவரும் படித்துவிட்டு ஒரே குரலில் என்னிடம், “ஏன் இவ்வளவு வெறுப்பு?” என்று வினவினார்கள். என்னை நீண்ட நாளாகத் தெரிந்திருப்பதால் இது இத்தொடரின் தென்படும் துவேஷம் அவர்களுக்கு என் இயல்புக்கு மாறான முரணாகத் தோன்றியிருக்க வேண்டும். மூன்று பேரும் ஒரு மித்த குரலில் சொல்லியிருப்பதால் அது உண்மையாகவே இருக்க வேண்டும். இதைத் தவிர வேறோர் நண்பரும் தானாகப் படித்து விட்டு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வெறுப்பை நான் பார்க்கவில்லை; பிள்ளையைப் பற்றித் தகப்பன் வெளிப் படுத்தும் ஆதங்கத்தையும் ஆற்றாமையையும் நான் பார்த்தேன்என்றார். இவர் கூறுவதும் உண்மையாக இருக்கலாம்.
நான் மேற்கூறிய ஒரு நண்பரிடம், “தொடர் எழுதப் போகிறேன்என்று முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். அவர் என்னிடம், “ஆதித்யாவோட சங்கீதத் திறமையை மட்டும் எழுதினாப் போறாது. அவன்ட்ட இருக்கற குறைபாடுகளையும் நீ எழுதணும்என்று கேட்டுக் கொண்டார். சற்று ஊன்றிப் பார்க்கும் போது இவர் கூறியதைக் கட்டுடைத்துப் பார்க்கும் போது இவர் ஆதித்யா ஒரு சங்கீத விற்பன்னன் என்று விளம்பரப் படுத்தப் படுவதை விரும்பாமலும் மாற்றுத் திறனாளி என்கிற வகையில் தான் விளம்பரப் படுத்தப் படவேண்டும் என்று நினைப்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் இயல்பில் உள்ள கூறு என்னவென்றால் அறிவுத் திறனுக்கும் மேதைமைக்கும் தானும் தன் குடும்பமும் வம்சாவளியினரும் தான் மொத்த குத்தகை என்று நினைப்பது தான். அதனால் அவர் வார்த்தைகளில் நான் ஆச்சரியம் அடையவில்லை. 
இன்னொரு நண்பர் என்னிடம் நீங்கள் எழுதுவது எல்லாம் அவனுக்குப் புரிகிறதா?” என்று கேட்டார். அவர் சினிமாப் பாடல்களில் பெரிய காதல் கொண்டவர். இந்த நண்பருக்குப் பல முறை ஏற்கெனவே நான் ஆதித்யாவின் ஒலிப் பேழைகளையும் கச்சேரியின் வலைக் கண்ணிகளையும் அனுப்பியதுண்டு. அவர் நான் அனுப்பியவற்றைக் கேட்க வேண்டாம் பொருட்படுத்தக் கூடத் தயாராக இல்லை. இத்தனைக்கும் இவருக்கு கர்நாடக சங்கீதத்தில் மிகப் பெரிய தோய்வு என்று சொல்ல முடியாது. கேட்பார் அவ்வளவு தான் கண் முன்னே ஒரு திறமை பளிச்சிடுவதை அங்கீகரிக்க இவருடைய அகங்காரம் இடங்கொடுக்கவில்லை. அதே சமயம் நான் எழுதுவது ஆதித்யாவிற்குப் புரிகிறதா?’ என்கிறார்! ஆரம்ப நாட்களில் ஆதித்யா பல் வலி என்று அழுத போது எங்களிடம் ஒரு மாமி உனக்கெப்படித் தெரியும்? அவன் சொன்னானா?” என்று கேட்ட மாதிரித் தான் இதுவும். இப்படிக் கேட்டதன் மூலம் என்னைப் புண்படுத்துகிறோம் என்கிற பிரக்ஞை கூட அந்த நண்பருக்கு இல்லாதது தான் விநோதம். 
இன்னும் சில வகையினர் ஆதித்யாவை பிடித்து ஒரு விஷேடப் பள்ளி அல்லது அரங்கில் தள்ளுவதிலேயே குறியாக இருப்பார்கள். கடலூர்ல ஒரு லேடி பள்ளிக் கூடம் நடத்தறா. உன் பையனை அங்க போட்டா அவன் இஷ்டத்துக்குப் பாடிக்கலாம்; இருந்துக்கலாம்என்பார்கள். இவர்கள் ஆதித்யா பாடுவதை அரங்கேற்றத்திலோ கச்சேரிகளிலோ நேரடியாகக் கேட்டிருப்பவர்கள். அதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. இது போன்ற ஒரு வட்டத்துக்குள் தான் ஆதித்யா மாதிரிக் குழந்தைகள் அடைபட்டுக் கிடக்க வேண்டும். ஆதித்யாவுக்காக நான் மாட்டிக் கொண்ட பல குருநாதர்களில் ஒரு குருநாதருக்கு ஆல் இந்தியா ரேடியோவில் நண்பர்கள் உண்டு. அவரிடம் ஆதித்யாவுக்கு ஆடிஷனுக்குஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டேன். அவர் நன்னா இருக்கறவாளுக்கே நடக்க மாட்டேங்கறது….என்றார். இவர் வந்த புதிதில் யாரும் நினைத்தே பார்க்க முடியாத ஒரு தொகையைப் ஃபீஸாகக் கேட்டு வாங்கிக் கொண்டு டெவலப் பண்ண முயற்சி பண்றேன்என்றவர். நாலு வகுப்பு போனவுடன் என்னிடம், “சார் ஊத்து மாதிரி ஸ்வரம் கொட்றது சார். எப்படி சார்?” என்று வியந்து போனார். இவர் தான் நன்னா இருக்கறவாளுக்கே நடக்க மாட்டேங்கறது…….என்கிறார்!
எங்கே தவறு? வேண்டுமென்றெ செய்கிறார்களா? அல்லது எங்கள் இயலாமையைப் புரிந்து கொண்டு தலைமேல் ஏறி உட்காருகிறார்களா? நான் குறிப்பிடும் குருநாதர் ஆதித்யா ஸ்வரங்களில் போடும் கணக்குகளை மீண்டும் மீண்டும் தாளக் கட்டுகளில் சொல்லச் சொல்லிக் குறிப்பெடுத்துக் கொண்டு தன் கைபேசியில் பதிவு செய்வார். அதை எங்கே உபயோகப் படுத்திக் கொள்கிறார் என்பது இன்று வரை எனக்குப் புரியாத மர்மமே. அடுத்த முறை ஆதித்யா அதே ராகத்தில் அதே கீர்த்தனையில் ஸ்வரம் பாடினால் தாளக் கணக்குகள் சுத்தமாக மாறியிருக்கும். இதே குருநாதர் என்னிடம் ஒரு மனநல மருத்துவமனையைக் குறிப்பிட்டு அங்கே முயற்சி செய்யுங்களேன்என்று சொன்னார். ஆதித்யா அவதார புருஷன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்!
குருநாதர்கள் எல்லோரும் தியாகராஜ ஸ்வாமிகள் என்று தம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தியாகராஜ ஸ்வாமி லோகாயதமாகப் பணம் சம்பாதிக்காமல் உஞ்சவிருத்தி எடுத்து ஜீவனம் செய்து வந்தவர். சரபோஜி மகாராஜா தனம் சமர்ப்பித்துச் சபையில் வந்து பாட அழைத்த போது நிதி சால சுகமாஎன்று பாடியவர். இவருடைய மேன்மையை இன்றிருக்கும் குருநாதர்களுடன் எந்த வகையில் ஒப்பிட முடியும்? மனமெல்லாம் பணம் புகழ் செல்வாக்கு; வாயில் மட்டும் ஆன்மீகம் தெய்வீகம்! ஜானகி ராமன் எழுதுவாரே நடன் விடன் காயகன்என்று அது போல் தான் பெரும்பாலானவர்கள் நடந்து கொள்கிறார்கள். இதனால் தானோ என்னவோ காந்தர்வ வேதம் என்று புகழப் பட்டாலும் சங்கீதத்தை வேத அத்யயனத்துக்கு ஒரு படி தாழ்த்தித் தான் வைத்திருக்கிறார்கள்.
 இந்தியாவைப் பொறுத்தவரை அமைப்பில்லாத துறைகளில் இது தான் நிலை. மத்திய அரசு வேலை அல்லது மாநில அரசு வேலை என்றால் ஒரு அமைப்பு இருக்கிறது; சீரான இடைவெளியில் சம்பளம் வருகிறது. குறிப்பிட்ட மணிநேர வேலை. வருடா வருடம் சம்பள உயர்வு பதவி உயர்வுக்கான தீர்மானமான சட்ட திட்டங்கள். இவற்றில் திருப்தி அடையவில்லை என்றால் குறைகளைத் தெரிவிக்கத் தெரிந்தெடுக்கப் பட்ட அமைப்புகள். அதுவும் திருப்தி தராத  பட்சத்தில் குழுவாகப் போராடக் களம். இவை எதுவுமே கர்நாடக சங்கீத வல்லினங்களிலோ சினிமா போன்ற மெல்லினங்களிலோ கிடையாது. ஆங்காங்கே இருக்கும் குருபீடங்கள் வைத்தது தான் சட்டம். தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் சிலவற்றில் சில சினிமா நடன இயக்குநர்கள் வருகிறார்கள். அவர் என்ன பந்தா பண்ணுகிறார்கள்! அவர்களை பார்த்து நடன உதவியாளர்கள் பயந்து நடுங்குகிறார்கள்! பத்திரகிரியார் தனக்கு முன் முக்தி அடைந்ததைப் பட்டினத்தார் அதிர்ச்சியுடன் உள் வாங்கினாலும் அதன் பிறகு தன் முக்திக்கான வழிமுறைகளை மாற்றிக் கொண்டார்; மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அது போல் இப்போது நடக்குமா என்றால் சந்தேகம் தான்.
ஆதித்யா போன்ற குழந்தைகளுக்கு ஒரு துறையில் திறமை அதீத வளர்ச்சி அடைந்திருப்பதால் வேறு சில துறைகளில் கொஞ்சம் குறை இருப்பது தவிர்க்க முடியாது தான். அப்போது குடும்பமும் சமூகமும் என்ன செய்ய வேண்டுமென்றால் ஒத்துழைத்து அவர்களை பொது வெளியில் தான் இழுத்து விட வேண்டும். இதற்காகத் தான் விஷேடப் பள்ளிகள் சில வருடங்கள் பயிற்சி அளித்த பின் எல்லோருக்குமான பள்ளியில் அவர்களை கோர்த்து விட்டு விட வேண்டும் என்கிறார்கள். அது நடக்கிறதா என்றால் சந்தேகமே. ஒரு முறை விஷேடப் பள்ளி என்றால் வாழ் நாள் பூரா அங்கே தான் காலம் கழிக்க வேண்டும் என்று சமூகம் நினைப்பது எவ்வளவு பெரிய சாபக்கேடு?.
இந்த விசேடப் பள்ளிககுக்கு நான் சென்றிருக்கிறேன். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், வாய் குழறி நடக்க முடியாத குழந்தைகள், கட்டுப்பாடு இல்லாமல் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகள், மங்கோலாய்ட் இந்தக் குழந்தைகளுக்குமான பள்ளிகள் இவற்றில் டிஸ்லெக்ஸியா ஆடிஸத்தின் ரேகைகள் உள்ள குழந்தைகளுக்குத் தனிப் பள்ளி கிடையாது. நான் முதலில் குறிப்பிடும் குழந்தைகள் தங்களின் வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள நீண்ட வருடங்கள் பிடிக்கும். இவற்றுடன் சுயசார்புள்ள ஆனால் சிறு சிறு குறைபாடுள்ள குழந்தைகளை எப்படிச் சேர்க்க முடியும்?
இதில் இன்னொரு கொடுமையும் உண்டு. இந்த விஷேடப் பள்ளிகளிலிருந்து விஷேப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்க வீட்டிற்கு வருவார்கள். இவர்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் மாணவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதற்கெல்லாம் வரை முறை கேள்வி கேட்பாடு ஒன்றும் கிடையாது. ஃபீஸ் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று வாங்கிக் கொள்வார்கள். அவர்களுக்குள் நிலவும் போட்டியால் அந்தப் பள்ளியில் வேலை பார்க்கும் எழுத்தர் தட்டச்சர் எல்லோரும் ஆசிரியர்கள் என்கிற போர்வையில் வந்து விடுவார்கள். நாம் கண்டு பிடிப்பதற்குள் நாளாகி விடும்.
ஆதித்யாவை ஓரிரு முறைகள் இது போன்ற பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். அங்கிருக்கும் குழந்தைகள் போடும் சத்தத்தில் ஆதித்யா அவர்களை உஷ் உஷ்என்று அடக்கிக் கொண்டிருந்தான். முதலுக்கே மோசம் ஆகி விடும் போல் ஆகிவிட்டது. எங்களுக்குப் பரிந்துரைத்திருந்த நண்பரும் இதையெல்லாம் பார்த்து விட்டுத் தீர்மானமாக எங்களிடம் இது போன்ற இடங்கள் ஆதித்யாவிற்கு சரிப்படாது; தேவையும் இல்லை. நீங்கள் வீட்டிலேயே பார்த்துக் கொள்வது தான் நல்லதுஎன்று சொல்லி விட்டார்.
வீட்டிற்கு வழக்கமாய் வரும் ஒரு ஆசிரியர் பரிட்சையில் ஆதித்யாவிற்கு உதவ முடியும் என்பதைச் சூசகமாக உணர்த்தினார். பின்னர் மெதுவாக என்னிடம் அவர் அன்னைக்கு வீட்டின் பேரில் மூன்று லட்சம் ரூபாய் கடனிருப்பதாகவும் தெரிவித்தார். எனக்கு முதலில் புரியவில்லை. அந்த அன்பர் அந்த மூன்று லட்சம் ரூபாயை நான் கொடுக்க வற்புறுத்தியிருக்கிறார். அந்த வருட முடிவில் ஆதித்யாவைத் தவிர மற்ற எல்லா மாணவர்களும் பரீட்சையில் தேறியிருந்தார்கள். ஆதித்யா பரிட்சையில் தேறுவதற்கான விலை ரூபாய் மூன்று லட்சம். அதை நான் கொடுக்காததால் அந்த முறை ஆதித்யா பரீட்சையில் தேறும் வாய்ப்பினை இழந்தான்.
ஹெலன் கெல்லருக்கு ஒரு அருமையான கவர்னஸ்அமைந்தார். குடும்ப உறுப்பினர்களைத் தவிர வாழ்வியல் முறைகளைக் கற்றுக் கொடுக்க அந்த நாட்களில் பிரபுக் குடும்பங்களில் கவர்னஸ்ஸை அமர்த்துவது உண்டு. சுய சரித்திரம் எழுதும் பிரபலங்களில் ஒன்றிரண்டு பேர் அவர்கள் ஆரம்ப நாட்களில் உருப்பெறுவதில் கவர்னஸ்மாதர்கள் எப்படிப் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார்கள் என்று விவரித்திருக்கிறார்கள்.
 அரசில்லா நிறுவனம் நடத்தும் ஒரு நண்பரிடம் ஆதித்யாவின் உரையாடல் திறமையை மேம்படுத்த ஒரு நபர் கேட்டிருந்தேன். அவரும் ஒரு பெண்ணை அனுப்பி வைத்தார். அந்தப் பெண் வந்தவுடனே ஆதித்யா அவளுக்குப் பாட்டு கற்றுக் கொடுப்பது என்று ஆரம்பித்தான். ஏதாவது ஒரு புத்தகத்தின் ஏதாவது பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு பாட்டைப் பாடுவான். இந்தப் பெண் ஆதித்யாவிற்கு எல்லோரும் சாப்பிடும் உணவைக் கொடுக்கக் கூடாது; குறிப்பாகப் பால் சம்பந்தப் படும் ஒன்றையுமே கண்ணில் காண்பிக்கக் கூடாது என்று ஆரம்பித்தது. இந்தப் பெண்ணே உணவு சரி விகித நிபுணர் ஒருவரையும் சிபார்சு செய்தது. நாங்களும் நண்பர் சொல்லித் தான் இந்தப் பெண் இது போல் நடந்து கொள்கிறது போலிருக்கிறது என்று நினைத்து அந்த நிபுணரைச் சந்தித்தோம். அவர் பால் வெண்ணெய் நெய் இதெல்லாம் தவிர்க்கச் சொன்னார். கோதுமைப் பொருட்களும் கூடாதென்றார். பாலுக்கு பதிலாக சோயா பால் உபயோகித்துக் கொள்ளலாம் என்றார். இதைக் கொஞ்ச நாள் முயன்று பார்த்ததில் ஆதித்யாவிற்கு நூல் நூற்றாற் போல் ஆகி விட்டது. சீக்கிரமே களைப்படைய ஆரம்பித்தான். எங்களுக்குக் கவலை பிடித்ததில் எங்களிடம் இந்தப் பெண்ணை அறிமுகப் படுத்திய நண்பரைத் தொடர்பு கொண்டு நடந்ததைத் தெரிவித்தோம். அவர் திடுக்கிட்டுப் போனார். அவளைக் கான்வர்சேஷன்டெவலப் பண்ணச் சொல்லித் தானே அனுப்சேன்என்றார். என்ன நடந்ததென்றால் அந்தப் பெண் குடியிருந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டுப் பெண்மணியின் குழந்தை விஷேடக் குழந்தை என்பதால் அதற்கு இது போன்ற வைத்தியங்கள் நடந்திருக்கின்றன. அதை ஏதோ அரைகுறையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தப் பெண் எங்களிடம் அதைக் கிளிப் பிள்ளை மாதிரி வந்து ஓதியிருக்கிறது. அந்த உணவு முறை, அந்தப் பெண் வகுப்புகள் இரண்டையும் ஒரு சேர ஒழித்துக் கட்டினோம்.
ஆதித்யா அருமையாகப் பாட்டு சொல்லிக் கொடுப்பான். மற்ற சமயங்களில் பொறுமை இல்லாமல் நடந்து கொள்கிறவன் பாடல் கற்பிக்கும் போது அளவு கடந்த நிதானத்தையும் பொறுமையையும் கடைப் பிடிப்பான். நாம் எவ்வளவு முறை தப்பு செய்தாலும் அவ்வளவு முறை மீண்டும் மீண்டும் பாடித் திருத்துவான். சலிப்படையவே மாட்டான். இது போல் நான் அவனிடம் ஐம்பது கீர்த்தனங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன். சில அரிதான கீர்த்தனைகளும் அடக்கம். நெனருஞ்சராஎன்று ஒரு தியாகராஜ கீர்த்தனை. இதை சுமார் முப்பது வருடங்களுக்கு முன் கான சரஸ்வதி பாடிக் கேட்டிருக்கிறேன். அதைக் கேட்டதிலிருந்து அது எங்காவது கிடைக்குமா என்று அலைந்தேன். நீண்ட வருடங்களூக்குப் பிறகு மாண்டலின் ஸ்ரீநிவாஸ் வாசிப்பைக் கேட்டு மெய் மறந்தேன். (இப்போது நிறைய பேர் பாடுகிறார்கள்). இது சாருகேசி என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் ஆதித்யாவிடம் கேட்ட போது அவன் சிரித்துக் கொண்டே சிம்ம வாஹினிஎன்றான். சரஸாங்கியின் ஜன்யமாம். சரஸாங்கி 27 ஆம் மேளம். சாருகேசி 26 ஆம் மேளம். தங்கை பெண்ணை அக்காள் என்று அவ்வளவு நாள் நினைத்திருக்கிறேன்!
அதை அவனிடம் கற்றுக் கொண்டேன். பின்னொரு நாள் தியாகராய நகரில் ஒரு சபாவில் ஒரு வளரும் கலைஞர் பாடிக் கொண்டிருந்தார். நானும் ஆதித்யாவும் கேட்டுக் கொண்டிருந்தோம். பக்கத்தில் ஒரு மனிதரும் அவர் பையனும் வந்து உட்கார்ந்தார்கள். அந்த மனிதரை எனக்கு முன்பே சற்று அறிமுகம்.
மின்னணு ஹார்மோனியம் வாசிப்பில் அந்தப் பையனை பிரபலமாக்க முயன்று கொண்டிருந்தார் அவன் தந்தை. மழலை மேதை என்று எங்கு பார்த்தாலும் விளம்பரம். தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக அந்த சமயத்தில் பெரிய பெரிய புகைப் படங்களுடன் பையனை விளம்பரப்படுத்தி மாநகராட்சிக் கழிப்பிடம் கூட விடாமல் போஸ்டர் ஓட்டியிருந்தார்கள். பையன் வாசிப்பில் பெரிதாகப் பழுது சொல்ல முடியாது தான். அவனின் தந்தை குதிரைக்குக் கடிவாளம் கட்டியது போல் பையனை முன்னுக்குக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தார்.
அவன் அன்னை பெரிய இசைவாணரிடம் ஒரு நாள் வகுப்புகளைப் பற்றிக் கேட்பதற்காகச் சென்றிருக்கிறார். அன்று பெரிய இசைவாணரிடமிருந்து என் மனைவிக்கு ஆதித்யாவை உடனடியாகக் கூட்டி வரும்படி அழைப்பு வந்தது. என் மனைவியும் ஆதித்யாவைக் கூட்டிக் கொண்டு சென்றிருக்கிறாள். யாராவது இசை மேதை என்று மார்தட்ட  வந்தால் அவர்களை அடக்க ஆதித்யாவைப் பெரிய இசைவாணர் உபயோகித்துக் கொள்வதைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். அந்தப் பிள்ளை அப்போதெல்லாம் மழலை  மேதை என்று அறியப் பட்ட இன்னொரு இசைவாணரிடம் வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்திருக்கிறான். அதைப் பற்றியெல்லாம் அவன் அன்னை குறிப்பிட்டுக் கொண்டிருந்தாராம். பையனைப் பற்றிக் குறிப்பிடும் போது ராத்திரி தூங்கிண்டிருப்பேன் சார். வந்து எழுப்புவான். ரமணி சார் புல்லாங்குழல் கேக்கணும்மாஅப்படிம்பான் சார். சிடியை எடுத்துப் ப்ளேயர்ல போட்டுக் குடுப்பேன். கேட்டிண்டிருப்பான்…………என்று கூறியிருக்கிறார். பையனின் குருநாதர் சரியாக வகுப்புகள் எடுப்பதில்லை என்று அவர் வருத்தப் பட்டிருக்கிறார். (எல்லா இடங்களிலும் இதே கதை தான் போலிருக்கிறது!) பெரிய இசைவாணர் சிரித்துக் கொண்டே ஏன் ஊர்ல தான இருக்கார்?” என்று கேட்டிருக்கிறார்.
இந்தப் பின்னணியில் நான் பணியாற்றும் வங்கியில் இந்தப் பையனுக்கு சுதந்திர தினத்தன்று ஒரு கச்சேரி ஏற்பாடு செய்து கொடுத்தேன். குடும்பமாக வந்து கச்சேரியை வழங்கி விட்டுப் போனார்கள். இந்தப் பையனின் தந்தையிடம் தன் மகனை சங்கீத உலகத்துக்குள் செலுத்த ஒரு மூர்க்கத்தைப் பார்த்தேன். அதே மூர்க்கத்துடம் இவர் எல்லா இடங்களிலும் கையில் பையனின் திறமை விபரங்களுடன் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு முறை வீதியில் சென்று கொண்டிருந்த என்னிடமே ஒரு நோட்டீஸை நீட்டினார். நான் ஏற்கெனவே இருந்த  அறிமுகத்தை வைத்து அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேச முயன்றேன். ஒன்றும் நடக்கவில்லை. கவனமேயில்லாமல் ஓ அப்படியா?” என்று கேட்டுக் கொண்டு என் பையனை மறந்திடாதீங்கோ சார். கச்சேரிக்கு அவசியம் வந்துடுங்கோஎன்று சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் குறிப்பிட்டிருந்த கச்சேரியில் இவரும் பையனும் எங்கள் பக்கத்தில் உட்கார்ந்த போது வித்வான் சதாமதிம்என்கிற கீர்த்தனையை ஆரம்பித்தார். பையனின் தந்தை என்னைப் பெருமை பொங்கப் பார்த்துக் கொண்டே பையனிடம் என்ன ராகம்?’ என்று கேட்டார். பையன் விகல்பமில்லாமல் எங்களைப் பார்த்துக் கொண்டே அப்பா! ஆதித்யா!என்றான். அவர் அதைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் மீண்டும் ராகம் என்ன என்று துளைத்தெடுத்தார். பையன் பதில் சொல்கிற வழியாக இல்லை. ஆதித்யா பொறுத்துப் பார்த்து விட்டுப் புன்னகையுடன் கம்பீர வாணிஎன்றான். பையனின் தந்தை பையனைக் கூட்டிக் கொண்டு அவசரமாகக் கிளம்பிப் போனார். அன்றைக்குப் பையனுக்குப் போதாத நாளாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன்.
இந்தக் கீர்த்தனையை அப்போது தான் கேட்கிறேன். அதற்குப் பின் இக் கீர்த்தனையை ஆதித்யாவிடம் கற்றுக் கொண்டேன். இக் கீர்த்தனையை நான் பாடும் போதெல்லாம் தந்தை பையனை இழுத்துக் கொண்டு அவசர அவசரமாக ஓடியது நினைவுக்கு வந்து நகைப்பை விளைக்கிறது!
அத்தியாயம் 33
ஆதித்யாவின் குரல் நன்கு அமர்ந்து இப்போது உச்சத்தில் இருக்கிறது. இப்போது இவனுக்கு நியாயமாகப் பார்த்தால் கச்சேரிகள் நிறைய செய்ய வேண்டிய காலம். 12.03.2017 அரங்கேற்றம் முடிந்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஆகியும் யாரும் கதறிக் கொண்டு வாய்ப்புத் தர முன் வரவில்லை. பெரிய அளவில் அதைப் பெரிய வேலையாக எடுத்துக் கொண்டு சிபாரிசு செய்ய குருமார்கள் தயாராக இல்லை. இவனுடன் ஆரம்பித்த பலர் இன்று ஓரளவுக்காவது பிரபல்யம் ஆகிச் செயலாக இருக்கிறார்கள். ஆதித்யா மட்டும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறான்.
எங்கள் ஊரில் மாமூண்டியா சேர்வை என்று ஒரு பாராக் காவல்காரர் அரண்மனைச் சேவகம் செய்து கொண்டிருந்தார். சங்கீதத்தில் குறிப்பாக லய வாத்யத்தில் பெரிய ஈடுபாடு. சங்கீத்தையே உபாசிக்க வேண்டும் என்று மாரியப்பத் தவில்காரர் என்பவரிடம் போனார். மாரியப்பத் தவில்காரர் தவில் உனக்கு சரிப் படாது; அது எங்கள் ஜாதிக்காரர்கள் தனிச் சொத்து என்பதால் உன்னை விட மாட்டார்கள். நீயே ஒரு வாத்யத்தை கண்டு பிடித்து அப்யாஸம் செய்என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு தான் மாமூண்டியா சேர்வை உடும்புத் தோலைக் கட்டிக் கஞ்சிரா என்று புதிதாக ஒரு வாத்தியத்தை உண்டாக்கி  அதில் அப்யாஸம்  செய்து மகா லய வித்வானாக உயர்ந்தார். அவரைப் பெரிதும் பாராட்டி ஊக்குவித்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த நாராயணசாமி அப்பா என்கிற லய வித்வான். ஆதித்யாவைப் பொறுத்தவரை மாரியப்பத் தவில்காரர் போன்றோ நாராயணசாமி அப்பா போன்றோ குருநாதர்கள் அமையவில்லை என்பது தான் சோகம். இது போன்ற குருநாதர்கள் இல்லாவிட்டாலும் உயர்த்துவதற்காவது சந்தையில் சில ஆர்வலர்கள் வேண்டும். இந்தியச் சூழலில் இதற்கான வாய்ப்புகள் கம்மி. எங்கு சென்றாலும் குருநாதர் யார் என்கிறார்கள். குருநாதர் பெயரைச் சொன்னால் அவரிடம் நேரடியாகவோ மறைமுகவோ தொடர்பு கொள்கிறார்கள். அப்போது குருநாதரின் வார்த்தை தான் சிஷ்யனின் எதிர்காலத்தையே  தீர்மானிக்கிறது. பெரிய இசைவாணர்கள் போன்ற செல்வாக்கானவர்கள் சொன்னால் இசையுலகமே ஸ்தம்பிக்கிறது எனும் போது என்ன திறமை இருந்து என்ன நடந்து விடப் போகிறது என்கிற ஆயாசம் தான் ஏற்படுகிறது.
டிகே கோவிந்த ராவிற்கு இது நடந்தது என்பார்கள். ஜிஎன்பியின் ஒலிப் பதிவுகளை சங்கீத உலகின் முடிசூடா மன்னராகிய ஒரு வித்வான் ஒழித்துக் கட்டினார் என்பார்கள். மதுரை மணியின் சிஷ்யர் திருவெண்காடு ஜெயராமன் கச்சேரிக்காக யாரிடமும் போய் நிற்க மாட்டார் என்பார்கள். கூப்பிட்ட இடத்தில் மட்டும் பாடுவார் என்பார்கள். புதுக்கோட்டையில் நரசிம்ம ஜயந்தியில் வந்து பாடுவார். கொண்டை ஊசி நாமமும் பஞ்சகச்சமுமாக வந்து ஆத்மார்த்தமாகப் பாடுவார். அப்படியே பாடிக் கொண்டு மூன்றாம் பேர் அறியாமல் போய்ச் சேர்ந்து விட்டார்.
கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு நபரிடம் தொடர்பு கொண்டேன். இந்த நண்பர் ரமணரின் பெயரால் விளங்கி வரும் தியான மையத்தில் இசைக் கச்சேரிகளைத் தெரிவு செய்து ஏற்பாடு செய்பவராக இருக்கிறார். இவர்களின் அரங்கத்தில் ஆதித்யாவைப் பாட வைக்கலாமே என்று நினைத்துத் தொடர்பு கொண்டேன். வயதானவர். இனிமையாகப் பேசிக் கொண்டிருந்தார். சள சளவென்று பேசிக் கொண்டிருந்தவர் பாடவும் செய்தார். அந்தக் காலத்தில் பாட்டு  கற்றுக் கொண்டாராம். பேச்சு வாக்கில் யார் குருநாதர்?’ என்று கேட்டார். நான் பெரிய இசைவாணரின் பெயரைச் சொன்னேன். ஓ எனக்கு நன்னாத் தெரியுமே!என்று கூறியவர் அதற்குப் பின் நான் சில நாட்களுக்குப் பிறகு அவருடன் பேச முயன்ற போது பல முறை நிராகரித்த அழைப்புகளுக்குப் பிறகு என் மீது வள்ளென்று விழுந்தார். எப்போ வேணா சான்ஸ் குடுப்போம்; பத்து வருஷம் கூட ஆகலாம். சும்மா சும்மா ஃபோன் பண்ணித் தொந்தரவு பண்ணக் கூடாதுஎன்று. எப்படி! நான் பணம் கேட்கவில்லை பக்க வாத்தியங்கள் நானே ஏற்பாடு செய்து கொள்கிறேன். இடம் மட்டும் தான் அவர்கள் தருகிறார்கள். அதற்கே இப்படி! அதுவும் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் பகவத் ஸ்வரூபமாகவே மதித்து உயிர் வாழ்ந்த ரமணரின் பேரால் நடத்தப் படும் மன்றத்தில்! என்னுடன் பேசிய பிறகு இந்த மனிதர் பெரிய இசைவாணரைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அவர் தான் அவர்கள் ஆதித்யா பாட அனுமதிப்பதைக் கலைத்திருக்க வேண்டும்.
கொஞ்ச நாட்களுக்கு முன் எல்லா சபாக்களுக்கும் ஆதித்யாவின் பயோ டேட்டாவையும் யுட்யூப் கண்ணிகளையும் மின்னஞ்சலில் அனுப்பி வாய்ப்பு கேட்டிருந்தேன். யாரும் லட்சியமே செய்யவில்ல. ஒரே ஒரு சபாக்காரர் மட்டும் ஆஸ்திரேலியாவிலிருந்து பதில் போட்டிருந்தார். ஆதித்யாவின் முன்னேற்றத்தை நாங்கள் ஸ்வாரஸ்யத்துடன் கண்காணிக்கிறோம்,என்று. இதற்கு என்ன அர்த்தம்? கச்சேரி செய்ய அழைப்பாராமா மாட்டாராமா? யார் கேட்பது? இந்தப் பல்வேறு சபாக்களின் முகவரிகளை ஒரு அட்டவணைப் புத்தகத்திலிருந்து எடுத்திருந்தேன், இது உபயோகமாக இருக்கும் என்று. போன டிசம்பர் ஸீஸனில் இதை விலைகொடுத்து வாங்கினேன். தங்குமிடம் முதற்கொண்டு மைக் செட் வரை விபரங்கள் பல்வேறு வித்வான்கள் சபாக்கள் சங்கீதப் பள்ளிகள் அரங்கங்கள் போன்று விரிவாக விபரங்கள் அடங்கிய இந்தப் புத்தகம் வருடா வருடம் வெளியிட்ட உடனே விற்றுத் தீர்ந்து விடுகிறது. கச்சேரி செய்ய வேண்டாம், இது போல் ஒரு புத்தகம் போட்டாலே போதும் என்று தோன்றுமளவிற்கு இதில் பணம் உள்ளது என்று நம்பும் படிக்குத் தான் இந்தப் புத்தக விற்பனை அமைந்துள்ளது. இதில் ஆதித்யாவின் பெயரைப் போடலாமே என்று தொடர்பு கொண்டேன். அதற்கு ஒரு சிறிய தொகையை கட்டணமாக அந்தப் புத்தகத்திலேயே குறிப்பிட்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து வந்த பதில் புத்தகத்தில் இடம் பெற வேண்டுமென்றால் சென்ற வருடத்தில் சென்னையின் பிரதான சபாக்களில் எட்டு கச்சேரிகளாவது செய்திருக்க வேண்டும்’ என்பது தான். நான் அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த போது அதிகம் கேள்விப் படாத பெயர்களே இருந்தன. ஒரு கச்சேரியாவது செய்திருப்பார்களா சந்தேகமே. நான் அமைப்பாளருக்கு, ‘புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் உங்கள் விதியின் கீழ் வருகிறார்கள் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்என்று எழுதினேன். அதற்கு அவர் சென்ற வருடங்களில் எல்லா பெயர்களையும் போட்டுக் கொண்டு தான் இருந்தோம். ஏற்கெனவே இடம் பெற்ற பெயர்களை நீக்க முடியாது. நான்கு வருடங்களாக இந்த விதியைப் பின்பற்றி வருகிறோம்,என்று பதில் போட்டிருந்தார்.
எப்போதாவது அபூர்வமாக விநோதமான கச்சேரிகள் வரும். ஒரு முறை நண்பர் ஒருவர் மூலமாகச் சென்னை  புறநகரில் பெரிய ஆசிரமம் ஒன்றை நடத்தி வரும் சாமியார் ஒருவரின் அழைப்பிற்காக ஆசிரமம் சென்றிருந்தோம். சென்னையிலிருந்து சுமார் 30-35 கி.மீ இருக்கலாம். நல்ல வெயிலில் மதியம் சுமார் மூன்று மணிக்குக் கச்சேரி. நாங்கள் போனபோது சாமியார் ஒரு பெரிய ஹாலில் குடும்பம் குடும்பமாகச் சந்தித்துக் கொண்டிருந்தார். இந்த சாமியாரும் இன்னொரு சாமியாரும் தொலைக் காட்சி விவாதம் ஒன்றில் பங்கு பெற்று ஒருவருடன் ஒருவர் அடித்துக் கொண்டு அது பல வருடங்களுக்கு முன் பெரிய களேபரமாக இருந்தது.
நான் போன போது எங்களை வழிகாட்டிச் சென்ற அமைப்பாளர் சாமியார் குடும்பம் குடும்பமாகக் குறை கேட்ட பின்னரே கச்சேரி செய்ய அநுமதிப்பார் என்றும் அது வரை நாங்கள் காத்திருக்க வேண்டியது தான் என்றும் கூறினார். அப்போது சாமியார் பேச ஆரம்பித்திருந்தார் மைக்கில். எப்படி தான் யாருக்கும் குருவாக முடியாதென்றும் எல்லோருக்கும் நண்பனாக வழி நடத்துபவராகவே அமைய முடியும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு இவர் என்ன இப்படிப் பெரிதாக ஆரம்பிக்கிறாரே; இது முடிந்து குறை கேட்பு முடிந்த பின் கச்சேரி ஆரம்பிக்க வேண்டுமென்றால் நீண்ட நேரம் ஆகுமே; அதுவரை ஆதித்யா பொறுமையாக இருக்க வேண்டுமேஎன்றிருந்தது. அந்த உரை முடிந்தவுடன் அமைப்பாளர் நாங்கள் வந்திருக்கும் செய்தியை அவரிடம் தெரிவிக்கச் சென்றார். என்ன ஆச்சர்யம்! நான் மனதில் கொண்டிருந்த கவலையை அவர் படித்து விட்டார் போலிருக்கிறது. அமைப்பாளரிடம் கச்சேரியை உடனே ஆரம்பித்து விடக் கூறி விட்டார். குறை கேட்பைக் கச்சேரி நடக்கும் போதே வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்.
சென்ற அத்யாயத்தில் நான் குறிப்பிட்டிருந்த சதாமதிம்என்கிற கீர்த்தனையை  ஆதித்யா அந்தக் கச்சேரியில் சவுக்க காலத்தில் பாடினான். மிகவும் சௌக்யமாக அமைந்தது. கச்சேரி நடக்கும் போது வந்திருந்த பல குடும்பத்தினர் ( சுமார் 100 குடும்பங்கள் இருக்கலாம்) அவரிடம் சாக்லேட்களை வழங்கிக் குறை தெரிவித்து ஆசி பெற்றுக் கொண்டிருந்தனர். அவரும் அவர்களுக்குச் சாக்லேட்டுகளும் ஆசிகளும் வழங்கிக் கொண்டிருந்தார். கச்சேரி முடிந்தவுடன் நாங்கள் எல்லோரும் அவர் காலில் விழுந்து வணங்கினோம். அவர் ஆதித்யாவின் கையில் ஒரு கவரைத் திணித்தார். அதில் மூவாயிரம் ரூபாய் பணம் இருந்தது! வழிகாட்ட வந்தவர் எங்களை சாப்பிட வற்புறுத்தி ஏற்பாடு செய்து சாப்பிட்டவுடன் தான் விடைபெற்றார். இந்த ஒரு கச்சேரியில் தான் ஆதித்யா தன் ஊதியமாக ஒரு சேர ஒரு பெரிய தொகை பெற்றான்.
பெரிய இசைவாணர் நல்ல மூடில்இருக்கும் போது நல்லவிதமாய்ப் பேசிக் கொண்டிருப்பார். அப்போது ஒரு முறை எங்களிடம் கச்சேரி எப்படிச் செய்யணுமோ அப்படிக் கரெக்டா செய்யறான் ஆதித்யா. ஒரு குத்தம் சொல்ல முடியாது. ப்ரமோட் பண்ண வேண்டியது தான் பாக்கிஎன்றார். மற்ற மாணவர்களிடம், “இவ்வளவு ப்ராக்டிஸ்பண்றேள். எவ்வளவு தப்பு வர்றது? ஆதித்யா எப்பவாவது கச்சேரி பண்றான். ஒரு மிஸ்டேக்இருக்கா பாரு,என்பார். கடைசி வரையிலும் என் கூடவே இருக்கப் போறவன் ஆதித்யா மட்டும் தான்,என்பார். நீங்க நினைக்கிற மாதிரி அவன் ஒண்ணும் அப்பாவி கிடையாது. ஏதாவது விஷயத்தை வெளியில விடறானா பாருங்கோ. எங்களையெல்லாம் போட்டுப் பாக்கறான்,என்பார். ஆதித்யாவை எப்படிக் கையாள வேண்டும் என்பது அவருக்குத் துல்லியமாகத் தெரிந்திருந்தது. எ ப்யூட்டிஃபுல் மைண்ட்அப்படீன்னு ஒரு புஸ்தம் இருக்கு. படிச்சுப் பாருங்கோ,என்பார். நோபல் பரிசு வாங்கிய ஜான்நாஷ் என்கிற பெரிய பொருளாதார கணித மேதையைப் பற்றிய புத்தகம் அது. இவ்வளவெல்லாம் தெரிந்தவர் எங்களை ஏன் அப்படிப் படாத பாடு படுத்தினார் என்கிற விஷயம் மட்டும் இன்று வரை புரியவில்லை. ஆதித்யா பற்றிப் புரியாத விஷயங்களும் அவருக்கு உண்டு என்று தான் கருதுகிறேன். அவனை அப்படியே தானே கற்றுக் கொள்ள  விடுவது நல்லதா அல்லது பிடித்து உரைத்துப் புகட்ட வேண்டுமா என்கிற சந்தேகம் அவருக்கே இருந்தது என்று நினைக்கிறேன். ஆதித்யா கற்றுக் கொள்ளும் முறைகளும் கணக்குப் போடும் முறைகளும் எப்படி வருகின்றன என்று பெரிய இசைவாணர் முதற் கொண்டு சங்கீத விற்பன்னர்கள் அனைவரும் புரிந்து கொள்ளத் திணறினார்கள் என்று தான் கருத இடம் இருக்கிறது. மிகவும் பெருந்தன்மையாகவும் முதிர்ச்சியுடனும் எதிர் கொண்டவர்களும் இருக்கிறார்கள். பாண்டிச்சேரியில் இருந்தபோது அவனுக்குக் கற்பித்த வைணிகர், நடனப் பள்ளியில் சில நாட்களே இருந்த குழிக்கரை வில்வலிங்கம் போன்றோர் பிரமிப்புடன் எதிர் கொண்டார்கள் என்றாலும் ஆதித்யாவின் மேதைமையை வாழ்க்கையின் போக்கிலேயே தான் எதிர் கொண்டார்கள்.
ஆதித்யா கச்சேரி செய்வதே ஒரு புதிரான அனுபவம் தான். கச்சேரி என்று சொல்லி விட்டால் முதலில் ஜாபிதா தயார் செய்வான். அந்த ஜாபிதாவில் இத்தனை பாட்டுக்கள் என்று சொல்வதுடன் நம் வேலை முடிந்தது. என்னென்ன பாட்டுக்கள் என்பதிலிருந்து எதில் ஆலாபனை, எதில் நிரவல் கற்பனாஸ்வரம் தனியாவர்த்தனம் என்பதை மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பான். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் கச்சேரி அமைப்பாளர்கள் அவன் குறிப்பிட்டதற்கு மேல் பாடச் சொன்னால் பாட மாட்டான். பாட வைக்க முடியாது. அதே போல் பாதியில் யாராவது நிறுத்தச் சொன்னாலும் நடக்காது. முழுவதும் பாடி விட்டுத் தான் எழுந்திருப்பான். ஒன்றிரண்டு இடங்களில் இதனால் பிரச்னைகள் முளைத்திருக்கின்றன. குறிப்பாக ஆதித்யா கச்சேரிக்குப் பின் வேறு நிகழ்ச்சி அல்லது கச்சேரி இருந்தால் அவர்கள் அவசரப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆதித்யா கச்சேரியை முடிக்கட்டும் என்கிற பொறுமை இருக்காது.
கச்சேரிக்கு ஒத்திகை என்று கஸரத் வாங்க முடியாது; கூடாது. ஏனென்றால் அவன் கச்சேரியில் விஸ்தாரமாகப் பாட உத்தேசித்திருக்கும் சங்கதிகளை ஒத்திகையில் பாடி விட்டான் என்றால் அவனுக்குக் கச்சேரியில் ஸ்வாரஸ்யம்  போய் விடும். ஏனோ தானோ என்று பாடிவிட்டு எழுந்து விடுவான். நான் எப்போதுமே அவன் பாடிவிடுவான்; கவலைப் படாதே’ என்று என் மனைவியிடம் சொல்லுவேன். அவள் கச்சேரி அன்று மிகவும் பதட்டமாக ஆகி விடுவாள். பாடல்களை அவனை வற்புறுத்தித் தொகையறாவாகச் சொல்லச் சொல்லுவாள். அவன் சொல்லி முடித்தபின் தான் ஓய்வான். பாடச் சொல்லுவதும் உண்டு. பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு ஸ்டாப் வாட்சை’ வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடிகிறதா என்று பார்த்துக் கொண்டே இருப்பாள்.
ஒரு முறை ஆதித்யா ஜாபிதா தயார் செய்து விட்டால் அதில் குறைக்கவோ கூட்டவோ முடியாது வேறெந்த மாற்றமும் செய்ய அநுமதிக்கமாட்டான். நாம் மிகவும் வற்புறுத்தினால் ஜாபிதாவையே மாற்றி விடுவான். ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த  பாடல்களுக்கு பதிலாக முற்றிலுமே புதிய பாடல்களாக இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு முறை ஜாபிதாவில் இடம் பெறும் பாடல்கள் புதிது புதிதாக இருப்பதால் மண்டையைப் பிய்த்துக் கொள்கிற நிலை தான். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் சொந்த சாகித்யங்களையும் நுழைத்து விடுவான். கண்டு பிடிக்க முடியாது. தெலுங்கில் அல்லது சமஸ்க்ருதத்தில் இருக்கும். முத்திரையை எப்போதுமே தியாகராஜ  என்று போட்டுக் கொள்கிறான். ஒருமுறை டெல்லியில் சாடிலேனி கணபதி’ என்று ஒரு தெலுங்குக் கீர்த்தனையைப் பாடினான். பெரிய பஞ்சாயத்துக்குப் பிறகு பாடிக் கொள்ள அநுமதித்தோம். 
கச்சேரி முடிந்து நாங்கள் கிளம்பும் போது ஒரு அன்பர் தயக்கத்துடன் என்னை நெருங்கினார். சாடிலேனி கணபதின்னு ஒரு கீர்த்தனை பாடினானே யாரோடது? என்றார். ரொம்பப் பிடித்துப் போய் கேட்கிறார்’ என்று நினைத்துக் கொண்டு அவனோட சொந்த சாகித்யம்” என்றேன். அவர் விடாமல் தியாகராஜன்னு முத்திரை வர்றதே? என்றார். “அவனுக்கு தியாகராஜர்ன்னா ரொம்பப் பிடிக்கும். அதனால தியாகராஜர்  பேரைப் போட்டுண்டிருக்கான்” என்றேன். அவர் நம்பாமல் என்னை சற்று நேரம் பார்த்து விட்டு நகர்ந்தார்!
இதே போல் கச்சேரியில் எந்தப் பாட்டிலும் அங்கே தோன்றியபடி சிட்டாஸ்வரம் பாடுவான். இது வயலின்காரர்களுக்குப் பெரிய பாடு. தயார் நிலையிலேயே இருந்து சமாளித்து வாசிக்க வேண்டும். ஆனால் பக்கவாத்ய வாசிப்பில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதைச் சமன் செய்து விடுவான். ராகத்தை மாற்றுவது மட்டும் ஒத்து வராது. ஒரு முறை வரமுவில் ஒரு கீர்த்தனை பாடினான். வயலின்காரர் இந்தோளத்தில் தொடர்ந்து கொண்டிருந்தார். அவனுக்குப் பொறுக்கவில்லை. நிறுத்தி விட்டு வரமு ஸ்வரஸ்தானத்தைக் கூறினான். நல்ல வேளையாக வயலின் காரர் நல்ல சீனியர்- பெரிதாகப் பொருட்படுத்தாமல் மேலே சென்றார்.
பல வருடங்களுக்கு முன் பிரேஸிலில் மருத்துவம் பார்த்த ஸே அரிகோ’ என்கிற மருத்துவரின் கதை நினைவுக்கு வருகிறது. இவர் படித்தது பள்ளிப் படிப்பு மட்டுமே. இவர் சுரங்கங்களில் வேலை பார்த்து வந்தார். தாங்க முடியாத் தலைவலி, தூக்கமின்மை இவற்றால் தவித்த இவருக்கு ஒரு நாள் டாக்டர்! ஃபிரிட்ஸ்’ என்கிற மருத்துவரின் தரிசனம் மனக் கண்ணில் தோன்றியது. அந்த மருத்துவர் இவர் உடம்பில் இறங்கியதாகப் பேச்சு. அன்றிலிருந்து அரிகோ மருத்துவம் செய்ய ஆரம்பித்தார். சாதாரண சமையலறைக் கத்திகள் ஊசிகள் இவற்றைக் கொண்டு இவர் கான்ஸர்  கட்டிகளை அகற்றுவது போன்ற சிக்கலான  அறுவை சிகிச்சைகளையும் செய்ய ஆரம்பித்தார். இவர் மருத்துவத்தில் ஏராளம் பேரை குணப்படுத்தி இருக்கிறார்.
இவர் மருத்துவம் செய்யும் போது உடல் மொழியே மாறி விடுமாம். ஒரு மருத்துவருக்கே உள்ள தீவிரமும் கர்வமும் இவரிடம் தென்படுமாம். பேசுகிற மொழியும் அவர் உடலில் புகுந்த மருத்துவர் பேசிய மொழியாகவே மாறி விடுமாம். ஆதித்யாவும் கிட்டத்தட்ட இப்படித் தான். மற்ற சமயங்களில் குழந்தை போல் நடந்து கொள்வான் சங்கீதம் என்று வந்து விட்டால் இருபது வருடங்கள் செயலாக இருந்த ஒரு சங்கீத வித்வான் போல் தான் நடந்து கொள்வான். அப்போது அவனிடம் தெரியும் தீர்மானமும் கம்பீரமும் கர்வமும் ஒரு தேர்ந்தெடுத்த வித்வானின் குணக் கூறு போல் தான் இருக்கும்.
மறு ஜென்மம் என்று ஒரு வேளை இதைத் தான் சொல்லுகிறார்களோ என்று தோன்றுகிறது. திருவள்ளுவர், ‘இருவேறு உலகத்து இயற்கை  திரு வேறு தெள்ளியராதல் வேறு’ என்று கூறுகிறாரே இதைத் தான் குறிப்பிடுகிறார் போலும்!
***
 

One Reply to “தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-12”

  1. This is an absorbing journal which, while narrating the extra-ordinary experiences of an ordinary but utterly tireless and strong-willed couple in promoting their musical prodigy of a son, also holds a mirror up to the crass materialism and cynicism that rules the current Carnatic music mileu in Chennai and other places highlighting, in particular, the callousness and narcissism of a few musical celebrities (it’s a pity that these villains cannot be named and shamed) and their abject indifference not only to their sacred duties as “Guru” but even to a sense of basic human decency.
    The ‘story’ is, however, not all about despair. It contains, as well, interesting sketches of strange human behaviour and of humorous incidents, and is told with the skill of a novelist marvelously gifted in characterization.
    Above all, this serial by Aswath is invaluable as a painstaking and factual ‘guide’ to any young and gifted Carnatic musician aspiring even to just get a fair look-in, leave alone make it to the top of the heap.
    I hope this chronicle is soon published in book-form as well so that it can reach and benefit a bigger audience.
    Congrats, and thank you Aswath (& Solvanam) for giving me this great opportunity to read this work.

Comments are closed.