சாதாரண வருஷத்துத் தூமகேது – பாரதியார்

1986-ல் comet என்னும் இந்த நட்சத்திரம் பூமிக்கு அருகில் வந்தது. அடுத்து 2061ல் எதிர்பார்க்கலாம். ஆனால், வருடத்திற்கு ஓரிரு முறை அதைப் பார்க்கலாம். அவ்வாறு மே மாதத்தில் தெரிந்ததை இடா அக்வாரிட் விண்கல் பொழிவு (Eta Aquarid meteor shower) என அழைக்கிறார்கள். அதன் படங்களை இங்கே பார்க்கலாம்.
ஹாலி வால் நட்சத்திரத்தைக் குறித்து பாரதியார் ‘சாதாரண வருஷத்துத் தூமகேது’ என்ற தலைப்பில் கவிதை எழுதியிருக்கிறார்:

சாதாரண வருஷத்துத் தூமகேது

தினையின் மீது பனை நின்றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்
கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மை கொண்டிலகும்
தூம கேதுச் சுடரே, வாராய்.
எண்ணில்பல் கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்தநின்னொடுவால் போவதென் கின்றார்.
மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க் கேதும் இடர்செயா தேநீ
போதி யென்கின்றார்; புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் றனரால்.
பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;
உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே
தெரிந்தனம்; எம்முளே தெளிந்தவர் ஈங்கில்லை
வாராய், சுடரே! வார்த்தைசில கேட்பேன்:
தீயர்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்தி நீ
போவையென்கின்றார்; பொய்யோ, மெய்யோ
ஆதித் தலைவி யாணையின்படி நீ
சலித்திடுந் தன்மையால், தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாப் புனைதற் கேயென
விளம்புகின்றனர்; அது மெய்யோ, பொய்யோ?
ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒருமுறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்,
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையுமென் கின்றார்; மெய்யோ, பொய்யோ?
சித்திகள் பலவும் சிறந்திடு ஞானமும்
மீட்டும்எம் மிடைநின் வரவினால் விளைவதாப்
புகலுகின்றனர்; அது பொய்யோ, மெய்யோ?