1
பறவையை புகைப்படம் எடுப்பது
அத்தனை எளிதான ஒன்று அல்ல
சிறிய நுணா மரத்தின் மீதோ
உடை மரத்தின் மீதோ
அமர்ந்து இயல்பிற்கு திரும்பிய பிறகு
மரத்தோடு மரமாக
அசையாமல் நின்று கொள்ள வேண்டும்
முடிந்தால் கற் சிலை போல
மீனுக்கு காத்திருக்கும்
ஒற்றைக்கால் கொக்கு போல
குழந்தைக்கு வண்ணத்துப் பூச்சி
பிடித்துக் கொடுக்க முயலும் தந்தையைப் போல
நின்று கொள்ளலாம்
சில சமயம் பகீரத தவமிருக்க வேண்டியிருக்கும்
சொற்களை இணைத்து கவிதையாக்கும்
கவிஞனின் பொறுமை தேவைப்படும்
என்னதான்
உங்கள் நிழற் படக்கருவியின்
சதுர வானத்திற்குள்
அபபறவையைக் கொண்டு வந்து
சொடுக்கிடுவதற்கு கண நேரம் முன்பு
அந்த பறவை சட்டென்று விரிவானம் ஏகி விடுகிறது
பறவைகள் ஒரு போதும்
சட்டத்திற்குள் அடங்க விரும்புவதில்லை
2
ஜன்னல் சாளர இடுக்குகள்
டியூப் லைட் ஹோல்டர்
பியூஸ் கேரியர்
சிலிண்டரின் அடிப்பகுதி
வாஷ் பேசின் மறைவிடங்கள்
சுவர்க் கடிகாரத்தின் பின்பக்கம்
சுவரில் தொங்க விடப்பட்ட புகைப்படங்களின்
மறைவிடச் சுவர்
பல்லிகளை விரட்டினால்
வீட்டில் ஒளிவதற்கு ஏராளம் இடங்கள் உண்டு
விரட்டும் போதெல்லாம்
மனதில் ஒளிந்து கொள்ளும்
அடங்கா காமத்தை போல
3
குழந்தைகளை கொஞ்சுபவனுக்கு
கன்றின் தலையை நக்கும்
பசுவின் கண்கள்
மேலாளர் அறை வாயிலில்
நிற்கும் ஊழியனுக்கோ
வாலைக் குழைக்கும் நாயின் கண்கள்
சீறி விழுபவனுக்கு
பிளந்த நாக்குடைய
நாகத்தின் கண்கள் முளைக்கின்றன
மனம் துவண்டு அழுபவனுக்கு
குளம்பில் முள் தைத்த மறியின் கண்கள்
தற்சாவை நேர்ந்தவனுக்கு
கடைசியாய் அழிந்த டைனோசரின் கண்கள்
காமத்தை இறைஞ்சுபவனுக்கு ஓநாயின் கண்கள்
பிரயாணம் கிளம்பியவனுக்கோ பறவையின் கண்கள்
மனிதனின் கண்கள்
எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை
4
ராஜஸ்தான் படுக்கை விரிப்பில்
துதிக்கை உயர்த்தியபடி காணப்படும்
நுட்ப்பமான சித்திரத் தையல் யானை
மனதிற்கு அணுக்கமாக இருக்கும்
குற்றாலநாதர் கோவில் வாசல்
கல் யானையில் குழந்தைகளை அமர்த்தி
குதூகலித்தது உண்டு
கடை வீதியில் காசு வாங்கிக் கொண்டு
மனிதர்கள் சிரத்தில் கை வைத்து
ஆசி வழங்கும் யானை கண்டு
மகிழ்ந்திருக்கிறோம்
மரத்தடிகள் தூக்கும் யானைகள்
சர்க்கஸில் சைக்கிள் ஓட்டும் யானைகள்
சுற்றுலாப் பயணிகளை
சவாரி அழைத்துச் செல்லும் யானைகள்
பல்லக்கில் கடவுளை ஊர்வலமாக
அழைத்துச் செல்லும் யானைகள்
இன்னும் பல யானைகள் அறிந்திருப்பீர்
கானகம் நடுநடுங்க
வரிப்புலியை தன் வெண்கோடுகளால்
குத்திக் கொல்லும் களிற்றினை
நிச்சயமாக
யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள்
-அன்பழகன் செந்தில்வேல்
***
கமலதேவி
நூல்சுற்றும் உருளை
மொழுமொழுக் கன்னங்களும்
இடையே குருவி வாயும்
மேல்வரிசையின்
இருமுயல் பற்களும்,
அணைத்துக் கொள்ள வசதியான
உயரமும்,
தழுவலின் இயல்பான ஏற்பும்…
அத்தனை உறவுச் சிக்கல்களையும்
ஒற்றை நூலென மாற்றும்.
மரகதக்கீற்று
வெய்யோன் எழுந்துவிட்ட நேரத்தில்
தென்னங்கீற்றில் சிறகுநீவி
ஒருகுரல் கொடுத்துப் பின் பறந்த காகம்
ஆட்டிய அசைவின்முடிவில்
கீற்றில் நுனியில் வந்தமர்ந்த
மஞ்சள் மையெழுதிய விழியான்
மெல்ல நடுத்தண்டில் அடிமட்டைவரை
நடந்து காணாமல் போக
ஒளி வழிந்த ஈற்றுகள் சிறகசையக்
காத்திருந்தது மரகதக்கீற்று.
அதேமுற்றம்
வெள்ளைவெயிலில் என்றும் போல இன்றும்
முடக்கு வீட்டுத்திண்ணையில் தாயக்கட்டைகளின்
இரட்டை ஒலிகேட்கும் மதியத்தில்
வலதுபுற வீட்டுமுற்றத்தில் காய்கின்றன…அம்மாயி இறப்புக்குவாங்கி எஞ்சிய
கடுகு, வெந்தயம், சீரகம், பயறுகள்,
மிளகு, மிளகாய் என…
இருள்அறையிலிருந்து இப்போதுதான் வெளிவந்த
சால்கள் ஒருஓரமாய் வாயைவிரித்தபடி ஒருபுறமாய்
சாய்ந்தாடிக் கொண்டிருக்கின்றன நிலை கொண்ட பின்
அம்மாயியைக் கேட்கக் கூடுமோ?
காத்திருப்பு
கொல்லிமலையின் வடமேற்கில் இறங்கிய
ஔியான் அங்கிருந்து பச்சைமலை வரை ஔித்திரை விரித்தான்.
இரண்டாம் தளத்திலிருந்த எனக்கு திரையின் மேற்குஓரத்தில்
கிளைவிரித்த அரசு இலைகள் எல்லாம் சலசலக்க
அசையாமல் அடர்பச்சையில்.
இடையிலிருந்த ஔிவானத்திரையில் இருகிருஷ்ணபட்சிகள் வட்டமடித்து
இறங்கி மறைந்ததும் காகங்கள் சுற்றி வந்தன.
மேலும் அடர்ந்தது வானம்…கருமேகங்கள் சூழ ஏதோ ஓர்
அறியா ஊற்றுக்கண்ணிலிருந்து வழிந்து நிறைந்தது இருள்.
இன்னும் முழுமையாய் விலகவில்லை ஔி
கீழே காத்திருக்கிறது நிலம் தீராத தாகத்தோடு.
தவறலாம்..வானம் பொய்ப்பதில்லை தானே.
மழைமாலை
நீண்ட கோடை விடைபெறும் சீற்றமழை மாலை.
நினைத்திருக்கும் இந்த நொடிகள் ஒன்றில் சூழ்ந்தது இருள்.
கிணற்றுக்கு குளிக்கப் போயிருந்த அய்யாவை எப்படிவருவாரென
அவரைத் திட்டிக்கொண்டிருந்த அம்மா கதவுகளை மூடிக்கொண்டிருக்க,
தம்பி வந்து வீராவேசம் பேசறத கேட்கமுடியாது என்றபடி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அறுபதுவருசமா இருக்கற ஊரு அவருக்குத் தெரியாதா? என்று நான்.
அடர்ந்தமழையில் ஸ்கூட்டி தெரியவில்லை
உள்ளேவந்து துவட்டி அமர்ந்து திரும்பிப் புன்னகைத்தார்.
அந்தக் கணம்
அனைத்தும் செய்ய முடிந்த இளவயதுஅய்யா இவர்.
மறுபடி திரும்பினார்.
நன்றி சொல்லவேண்டும் இந்தக் கணத்திற்கும்,
கருப்புச் சாயத்திற்கும்.
***
வணக்கம் கமல தேவி,
உங்கள் எழுத்து நடை மிக அழகாக உள்ளது. நீங்கள் நாமக்கல் மாவட்டம் என்று நினைக்கிறேன். பல சமயங்களில் என் பால்யத்தையும், நான் கடந்து வந்த பாதைகளையும் நினைவுபடுத்தி விடுகிறீர்கள். புத்தகம் ஏதேனும் எழுதி இருக்கிறீர்களா என்ரு தெரியப்படுத்தவும். நேரில் சந்திக்கவும் ஆவல்.
நன்றி கலந்த அன்புடன்,
இவண்
செல்வகேசவன் தியாகராஜன்
(இது அவர் இங்கிலிஷில் எழுதிய தமிழ்க் கடிதத்தின் தமிழச்சு வடிவு. பதிப்புக் குழு தமிழில் தட்டச்சியது.)
வணக்கம் நண்பரே,
நன்றி.இன்னும் புத்தகமாக வரவில்லை.
கமலதேவி