யுவன் – கதைகளில் அவிழும் மத்ரோஷ்கா பொம்மைகள்

தமிழுக்கு சிறுகதை வடிவம் வந்து சேர்ந்த இந்த சுமார்  நூறு ஆண்டுகளில் தற்போது நாம் அடைந்திருக்கும் இடம் மதிக்கப் படக்கூடிய ஒன்றே என்று தாராளமாக சொல்லலாம். குறிப்பாக இந்திய மொழிகளில் வங்காளம் இலக்கிய கலை வகைமைகளில்  நமக்கு சற்றே முன்னோடியாக வளர்ச்சி கொண்டது என்றே சொல்லவேண்டும். தென்னக அளவில் மலையாளம் நல்லிலக்கிய அடையாளம் கொண்டது. தமிழ் அதனுடைய பழைமையில் இருந்து எழுந்து வளர்ந்து நவீனத்தை வேகமாகவே சுவீகரித்திருக்கிறது. குறிப்பாக ரஷ்ய மொழி உள்ளிட்ட ஐரோப்பிய நவீனங்களை தமிழுக்கு மொழிபெயர்த்த பலருக்கும் இன்றைய நம் நவீனம் கடமைப்பட்டிருக்கிறது.

கதைக் கருக்கள்சொல்லும் முறை, மொழி, கட்டமைப்பு, அல்லது சிதைப்பு, சோதனை முயற்சி  என பல வகையிலும் இன்று  விரிந்து வளர்ந்துகொண்டிருக்கிறது. சொல்லி அலுத்துப் போகாத பாரதி தொடங்கி , மௌனி, லாசரா, திஜாரா, குபரா, கிரா, என நீண்டு, சமகாலத்தில் சுரா, நகுலன் வகைகளில் நீண்டு, சுஜாதா, பாலகுமாரன் போன்ற பாணிகளை உருவாக்கி, இன்றைய எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா, மேலும் கோணங்கி, பா.வெங்கடேசன், இரா.முருகன், விமலாதித்த மாமல்லன் போன்ற மாயத்தன்மையும் அபூர்வமும் குழைந்த வகை எழுத்துக்களோடு (இது பட்டியலிடல் அல்ல. ஒரு கவனக்  குறிப்புக்காகவேநீளும் ஆற்றொழுக்கில், சிலர்ஒரு குறிப்பிட்ட அசைவில், பட்டகமுகப்பில் எதிரொளிக்கும் கணத்தை தவறவிட்ட வைரங்களை போல –  நமது கவனத்தில் இருந்து தப்பி விட்டிருப்பார்கள். அப்படியான வரிசையில் ஒரு எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் என்று சொல்லத்தோன்றுகிறது.

தனது கதை சொல்லல் முறைக்கு ஒரு தனி விளிம்பு ஒழுங்குகளை உண்டாக்கிவிட்டவராக நிற்கிறார். வார்த்தைகளும் மொழியும் மட்டுமே கவனம் கொள்ளத்தக்க படைப்புகளை பெற்று உயர்ந்து நீண்டகாலம் நின்றுவிட முடியாது. சொல்லும் காலம், முறை, மொழி இவற்றில் தனக்கே உரிய ஒரு வடிவத்தைகுறுகிவிடாமல்  அமைத்துக்கொண்டிருக்கிறார்.

நான்ஒளிவிலகல்என்ற இந்த முந்தைய அல்லது முதல் தொகுப்பை, இவருடைய நீர்பறவைகளின் தியானம் தொகுப்பை படித்த பிறகுதான்  படித்தேன்தந்தி போல சொல்லவேண்டும் என்றால்  நீ.தி.தொகுப்பில் முதிர்ச்சி அடைந்திருக்கிறார். அல்லது முதிர்ந்த வாசகன் தன்னை அடையாளம் காணவைக்கிறார்.

பொதுவான தளத்தில், இவரது கதைகளுக்கு இரண்டு வித அடையாளங்கள் உள்ளன. கதைக்குள் கதைகளை சுருட்டி விரிக்கும் பண்பு. அதனால் படித்துக்கொண்டே போகும்போது கடியாரத்தின் சுருண்டு இறுகிய ஸ்ப்ரிங் மெதுவாக நெகிழ்ந்து கொடுப்பது போல, கதை மெல்ல நெகிழ்ந்து விரிந்துகொண்டே போகும். மேலும் ஒருவித மாயத்தன்மை அல்லது அசாதாரணம் கொண்ட கதைக்களங்கள் மற்றும் கதைக்குள் கதையைரம்மியில் ஜோக்கர் போலமாற்றி மாற்றி செருகிவைத்திருப்பதால், நேர்கோட்டில் கதை நகராதது மட்டுமல்ல, வாசித்தபின் பிறருக்கு சொல்வதும் சிலாக்கியமான ஒன்று அல்ல. ஒரு இசைக்கோர்வையைப் போல நம்மளவில் அதை அனுபவிப்பது ஒன்றே சாத்தியம். அதுவே சரியானது கூட.

நீ.தி. தொகுப்பில், கதைகளுக்குள் கதைகள் முளைப்பது வெகு இயல்பாக அமைந்து வருகிறது. அதே சமயம் ஒளிவிலகல் தொகுப்பிலும் அப்படியே அமைந்தாலும், கதையின் களம் அல்லது வடிவம், இப்படியான கதை சொல்லல் முறைக்கு தகுந்தபடி அமைத்துக்கொண்டிருக்கிறார். உதாரணமாக  ‘மேஷபுராணம்’  கதையில் ஒரு பழைய புத்தக கடையில் வாங்கிய புத்தகம் ஓலைச்சுவடி போன்ற டைரிக்குறிப்பு போல இருப்பதும், அதில் அத்தியாயம் அத்தியாயமாக படிப்பதுமாக, தனித்தனி கதைகளை சொல்வதற்கு ஒரு உபாயமாக அமைந்துள்ளது. உத்திகள் உபாயங்களாக மாறிவிடும் போது அவை மேலெழுவதில்லை. ஆனால் அப்படி இல்லாமல் ஒரு மலரின் பல இதழ்கள் போல விரியும் தன்மை கொண்ட கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. உதாரணமாகதாயம்மா பாட்டியின் நாற்பத்தொரு கதைகள்’

ஆனால் இந்தவிதமான சொல்லல் முறை தனித்துவத்தோடும், ஈர்ப்பை இழக்காமலும் இருக்கிறது. குறிப்பாக மிக மெலிதாக கசிந்து வெளிப்படும் நகைச்சுவை. மேலும் ஒரு கவிஞராக இருந்து சிறுகதை எழுதுபவராக இருக்கும்போது, சொற்களை பதட்டமில்லாமல் கோர்த்துக்கொண்டு போகிறார். அதே சமயம் கவிதையின் அலங்கார சொற்களோ, பூடக நிழல்தன்மைகளோ  படிந்துவிடாமல் உள்ளன.

ஒரு சில ஒற்றை வரிகளில், பெரும் மனவெடிப்பை உண்டுபண்ணி விடுகிறார். அது வாசிப்பவரின் மன அலைவரிசையைப் பொறுத்தது என்றாலும், அந்த எளிமையாக ஒரு கனமான விஷயத்தை சொல்லிப்போவது அசோகமித்திரனை நினைவூட்டுகிறதுஉதாரணமாக பாட்டி பேரனிடம் கதைகள் சொல்கிறாள். சில கற்பனைகள். சில வாழ்வின் உண்மைகள். அனுபவங்கள்அதில் பாட்டி தான் அந்த காலத்தில் இருந்த கிராமபோனைப் பற்றியும், தான் பாடிய நாட்களிப் பற்றியும் சொல்லும்போது – “அதை விடு.. இதைப் பாடும்போதெல்லாம் எனக்கு என் பெரியண்ணா ஞாபகம் வந்துவிடும். சீர் கொடுப்பதற்காக வந்து செருப்படி வாங்கிக்கொண்டு போனானே.அந்த உத்தமன் முகம் கூட எனக்கு மறந்துட்டதேடா கிருஷ்ணா. எவ்வளவு செல்லமா வச்சிருப்பான் என்னை.பாவி. நான் அன்னிக்கே செத்திருக்க வேணாமா சொல்லுஎன்பாள். இதைப் படித்து விட்டு என்னால் மேலும் படிக்க முடியாமல் மனம் அலைக்கழித்தது. நீர்பட்ட பஞ்சு போலானது மனம்.   ஒரு தனி சிறுகதைக்குரிய அழுத்தமும், உயிர்ப்பும் உடைய வரி இது.  இதைப்போல பல வரிகள் இந்த தொகுப்பில் உள்ளன.

மற்றொரு இடத்தில்  தாயம்மா  மிகுந்த நகைச்சுவையோடு ஆனால் சாதாரணமாக சொல்லுவாள். ஒரு பந்தியில் பரிமாறும்போது ஒருவர் வேட்டையை மடித்து கட்டிக்கொண்டு அப்பளம்  பரிமாறுவார். அதை பாட்டி இப்படி சொல்கிறாள் – “ நாசமாய் போனவன் அன்னைக்கு கெளபீனம் கட்டிக்கொள்ள மறந்துட்டான் போலிருக்கு. குனிஞ்சு குனிஞ்சு பரிமாறுகிறான். பொம்பளைகளானா ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பார்த்து சிரிக்கிறார்கள். ஆம்பளைகளுக்கு அவன் மேல் மேல் என்ன கடுப்போ. ஒருத்தனாவது அவனுக்கு சொல்லணுமே. உங்க மீனாட்சி சித்தி சும்மா இருக்க மாட்டாளோ…. மாமா.. அந்த வரிசைக்கு கொஞ்சம் வேணுமாம். இந்த வரிசைக்கு வேணுமாம் னு ஒரு வரிசையிலே ஒருத்தருக்கும் பாக்கி இல்லாமல் எல்லாருக்கும் தரிசனம் செஞ்சு வைச்சா “.

இன்னுமொரு இடத்தில் நகைச்சுவை என்று அறிவதற்குள் வருத்தம் தொற்றிக்கொள்ளும் நிகழ்வை கதையாக சொல்லும் பாட்டிநாலு வீடு தள்ளி ஒருத்தி இருப்பாள். காந்தின்னு பெரு. கிளி போல இருப்பாள். அவளுக்கு மாமியார் கொடுமை அதிகம். ஏதோ விசேஷத்துக்காக வத்தலகுண்டு போய்விட்டு திரும்பும்போது இரவில் காட்டு வழியில் மாட்டிக்கொண்டுவிடுகிறாள். இருட்டு. உடம்பெல்லாம் நகைகள். வழி மறைச்சுட்டான். கத்தியை காட்டறான். இவை சொன்னாளாம். ஐயா உனக்கு புண்ணியமாக  போகுமட்டும். என்னை என்ன வேணா செய்துக்கோ..என் நகைகளை மட்டும் தொட்டுடாதே. என் மாமியாயர் என்னை கொன்னே போடுவா. அவனும் நாணயஸ்தன் போலிருக்கு. என்ன வேணுமோ அதை செய்துட்டு ஊர் எல்லை வரை கொண்டு வந்து விட்டுட்டு போயிருக்கான். மாமியாரும் வந்தவுடனே கேட்டாளாம். இந்த இருட்டிலயா வருவது ஒரு பொம்பளை. நகையெல்லாம் பத்திரமா இருக்கோ? மறுநாள் ஆத்தங்கரைல  எங்கிட்ட தனியாச் சொல்லி அழுதாள் பாவம்.

மேற்சொன்ன மூன்றுமே இந்த சிறுகதையில் வரும் நாற்பது குட்டிக் கதைகளில் வருபவை. இப்படி காற்றுக்கு ஆடும் மணியில் மெல்லொலி எழுவது போல, நிறைய  சின்ன சின்ன பிரகாசங்கள் உள்ளன இவரது கதைகளில்.

மேலும் சில வகை கதைகள் மத்ரோஷ்கா ரஷ்ய பொம்மைகள் போல் ஒன்றுக்குள் ஒன்றாக அடங்கி அடங்கி எடுக்க எடுக்க  தம்மளவில் முழுமையாக  வெளிப்படுகின்றன. உதாரணமாக   “‘நச்சுப்பொய்கைகதை. இதில் நான்கைந்து கதைகள் ஒன்றைத் தழுவி ஒன்றாக ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளன. இவருடைய கதை சொல்லும் பாங்கையே பொதுவாக இப்படிக் குறிப்பிடலாம் என்றே தோன்றுகிறது.

மச்சக்காளை  தற்கொலை செய்து கொள்வதற்காக நீண்ட தூரம் செல்ல  சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்லும்போது ஒரு ஆடு தவிப்புடன் இருப்பதை கண்டுகுழைஒடித்து போட்டுவிட்டு போகும்போது அது சினையாடு என்று அறிகிறான்ஓய்வெடுக்கலாம் என போகும்போது குங்கியலிய சாமியாரின் குடிசையில் அவரைப் பார்க்கிறான். அவரிடம் அழுகிறான்.

அவர் தனது கதையை சொல்கிறார். டக்ளஸ் துரை காலத்தில் அவருடைய அப்பா பெரிய மனிதர். துரை ஊரில் இருக்கும் பெண்களை கேட்ட்க தினம் ஒருவராக அனுப்பி வைப்பது இவர் வேலை. ஒரு நாள் தனது மகளின் மேல் துரை கண் படுகிறது. இவர் ஊருக்கு ஒரு நியதி எனக்கு ஒரு நியதி இல்லை. இது ஊர் நன்மை விஷயம் என்கிறார். அம்மா கதற மகனான இவன் ஊற விட்ட புறப்பட்டு போய்விடுகிறார்.

அப்படி போகும்போது ஒரு பந்தலின் கீழ் இருக்கும் ஒரு பரதேசியை பார்க்க அவர் வயிற்றுக்கு சோறிட்டு தனது கதையை சொல்கிறார். காசிக்கு போய்விட்டு ரயிலில் திரும்பும்போது ஓரிடத்தில் வறியவர் கூட்டம் ஏறி நிரம்பி வழிகிறது. அனைவருமே தொழுநோயாளிகள். இடம் துர்நாற்றம் எடுக்க ஆரம்பிக்க அவருக்கு அருவருப்பு எழுகிறது. அப்போது தொழுநோய் உள்ள தாய் தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருக்கிறாள்.”தேய்ந்து அழுக்கிக் கொண்டிருக்கும் தேகத்தில் இருந்து அமிர்தம் சுரந்து மற்றொரு தேகத்தை வளர்க்கப் பாய்ந்து கொண்டிருந்த அந்தக் கணம் தேவகணம்என்று அவருக்கு உண்டாக அருவருப்பு நீங்கி மறைகிறது. அப்போது கை மணிக்கட்டு வரை வெட்டுப்பட்ட ஒருவனும் அவனது மனைவியும் இவனைக்கண்டு மெலிதாக புன்னகைக்க, இவன் அவனிடம் சென்று என்ன சீடனாக ஏற்றுக்கொள் என்கிறார்.

அவன் தான் துறவி அல்ல என்றும் தன்னைப் பற்றி கதை சொல்கிறான். ஏற்றம் இறக்கும்போது விழுந்து இறந்து போன அவனை அண்ணிதான் சிறுவயதிலே  முதலே வளர்கிறாள். இவன் வாலிபம் பெறும்போது அவன் பார்வை மாறுகிறதுசேலை விலகி படுத்திருக்கும் அண்ணியை ஸ்பரிசிக்கிறான். அவள் உடையை சரி செய்யாமல்.. பதறாமல்.. நான் உன் தாயல்லவா என்று கேட்கிறாள். எழுந்து அவனை அணைத்துக் கொள்கிறாள். அதன் அர்த்தம் தாய்மையாக விரவி அவன் சட்டென எழுந்து சென்று அச்சக எந்திரத்தில் இரண்டு கைகளையும் ஒருசேரக் கொடுத்து கைகளை சந்தோஷமாக வெட்டிக்கொள்கிறான். இவனை உடனிருந்து பணிவிடை செய்யும் அந்த பெண் இப்போது தனது கதையை சொல்கிறாள்.

நடனம் பயிலும் அவளை தாசியார் குலம் இழுத்து தள்ளுகிறது. ஆயினும் அவள் தானாக யாரையும் ஏற்காமல் வருபவர்களை தன்னோடு இருக்க வைத்து திருப்தி செய்கிறாள். ஒரு நாள் இரண்டு போக்கிரிகள் இவளை துரத்த இவள் குளத்தில் விழுந்துவிடலாம் என்று செல்ல படிக்கட்டில் கைகள் இழந்த இவனை காண்கிறாள். காப்பாற்ற சொல்ல அவர் அந்த போக்கிரிகளை பார்க்கிறான். அவர்கள் அவன் கையற்றவன் என்று தெரிந்தும் ஏனோ பதறி ஓடிவிடுகிறார்கள். அவள் இவனை வரித்துக்கொள்கிறாள். அவர்களிடையே வேறுவித எந்த உறவும் இல்லை. ஒருவருக்கு ஒருவர். இவன் அவளுடைய வீட்டிலேயே இருக்கிறான். சமயத்தில் வேறு யாராவது அவளுடன் இருந்தால் இவன் வெளியே வந்து படுத்துக்கொள்வான். இப்படி இருக்க ஒருநாள் யாரோ ஒருவன் முரடனாக அவள் வீட்டுக்குள் வருகிறான். படுத்துக்கொண்டு விடுகிறான். மறுநாள் எழுந்து முரட்டுத்தனமாக நுழைந்து விட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவன் தன கதையை சொல்கிறான்.

அவனுடைய இரண்டாவது மனைவி ஒரு சலவைக்காரனுடன் தொடர்பில் இருக்கிறாள். அதை கண்டிக்கும்போது அவள் சொல்கிறாள் நான் உனக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. நான் ஒரு கடற்பறவைசிலவித தாக்கங்களை நீ தணிக்காதபோது நான் அதை வேறு உகந்த இடத்தில் பெற்றுக்கொள்கிறேன். குற்ற உணர்ச்சி இல்லை என்கிறாள். சாவது மேல் என்கிறாள். அவளை கொலை செய்யலாம் என்றால் அவள் சொல்வது நியாயமாக இருக்கிறது. அப்போது குழந்தை பேறு இல்லை என்பதால் தன்னை மாய்த்துக்கொண்ட முதல் மனைவி நியாபகம் வருகிறது. இந்த இருவரையும் கொலை செய்துவிடலாம் என்று எண்ணினாலும் அந்த பதற்றம் குறையவேண்டும் என ஒரு பந்தலுக்குள் சென்று உட்கார அங்கே ஷெனாய் வாத்திய இசை அவனை மாற்றுகிறது.

இப்போது ஒரு முஸ்லிம் ஷெனாய் வாத்திய காரர் (லேசான துயரம் தோய்ந்த  தேஷ் ராகம் பாடிக்கொண்டு) தான் தனது கதையை சொல்கிறார். ஆறு மகன்கள் என்று சொல்லி ஆரம்பித்து எனக்கு ஏழாவது மகன் இருக்கிறான். பாலகிருஷ்ணன். மயிற்பீலியுடன் எனது இசையைச் சாதகம் செய்யும்போது தலையை ஆட்டிக்கொண்டு ரசித்து கேட்பான் என்று சொல்லி தனது குருநாதர் பற்றி சொல்லுகிறார். (வாசிக்கும் நமக்கு இது பிஸ்மில்லாகானை தெளிவாக குறிப்புணர்த்துகிறது).

அப்போது அவருடன் உடனிருக்கும் சரபேஸ்வரர் கோவில் பட்டர் ஒரு கதை சொல்கிறார். மாயக்குளத்தில் மூழ்கிப் போன தம்பிகளை மீட்க தருமன் யட்சனுக்கு பதில் சொல்லும் கதை. இத்துடன் சிறுகதை முடிகிறது.

இப்போது நமக்கு மத்ரோஷ்கா ரஷ்ய பொம்மை பிடிபடுகிறது அல்லவா.


அப்பா சொன்ன கதைஎன்றொரு சிறுகதை. இதில் திருடனான அவர் பாகம் பிரிக்கும் முன் தனது நான்கு மகன்களுக்கும் ஒரு நியதி சொல்கிறார். ஓவொருவரும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று தமது அனுபவங்களை சொல்லவேண்டும். ஒவ்வொருவரும்கால்திருடன், அரைத்திருடன், முக்கால் திருடன், முழுத்திருடன்திரும்பி வந்து  தமது அனுபவங்களை கதையாக்கி சொல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது.

கடல்வாழ் கவிதை தொகுப்பு என்ற கதையில் சுகவனம் நீண்ட கடிதங்களை நண்பனுக்கு எழுதும் பழக்கம் கொண்டவன். அதில் வெவ்வேறு விஷயங்கள்பெங்குவின் கதை மொழிபெயர்ப்பு, என்ற வடிவில் பலவற்றை அடக்கியுள்ளது. கவிஞனின் கதை (அகிமோட்டோ), காணுதலின்  வரம், நாடோடிக்கதை, பழிக்குப் பழி, தேர்வு.. என்று சில. ஒவ்வொன்றுமே மொழிபெயர்ப்புக்கு கதைகள் என்று சொல்லப்படும் கதைகள்போர்ஹேஸின் சில கதைகளில் உள்ளது போல இது நிஜமா புனைவை என்று மயக்கமூட்டும் படியான முறையில் சொல்லப்பட்டுள்ள கதைகள்.

ஊர் சுற்றிக் கலைஞன் என்ற சிறுகதை. ‘டெல்லிக்கு செல்லும் ஒருவன் அங்கே ஹரித்துவார் செல்ல பேருந்தில் பயணிக்க, வழியில் நிலச்சரிவினால் வண்டி நிற்கிறது. இவன் இறங்கி நடக்கிறான். அங்கே ஒரு மாயப் புனைவு பிறக்கிறது. இசை மற்றும் எழுத்து மேல் ஆர்வம் உள்ள இவன், யாரோ ஒரு ஆளிடம் பேச்சுத்துணைக்கு பேசும்போது அவன் தான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று தனது கதையை சொல்கிறான். இதற்கிடையே மேடான சாலையில் ஏறிவரும் பெண்ணை சந்திக்கிறான். பேசுகிறான். இருவரும் ஆறு மாதம் வாழ்ந்து கழிக்கிறார்கள். அப்போது பஸ் ஹார்ன் அடித்து கிளம்பலாம் என்கிறது. அந்த ஆள் தான் ஒரு புல்லாங்குழல் கலைஞன் என்றும் தனது பக்க வாத்திய காரனின் மேதைமை குறித்து சொல்கிறான். (தபலா வாசிக்கும் அவனிடம்.. அரக்கனே.. உன்னிடம் இருப்பது பத்து விரல்களோ.. அல்லது நூறா?). அந்தப் பெண் இறந்த பயணிகளில் ஒருத்தியாக உணரும் நேரத்திலிருந்து புல்லாங்குழலை விட்டுவிடுகிறான். இதனிடையே ஒரு பைத்தியக்காரன் கொடுத்த சங்கில் கேட்ட நாடகத்துக்கு பின் தபலாவையே சகா விட்டுவிடுகிறான். பிறகு புல்லாங்குழல் இசையை காஞ்சனாதேவி என்கிற சரோட் கலைஞர் சொல்லி வலது பக்கம் இன்றி இடதுபக்கம் குழலை பிடித்து வாசிக்க சொல்கிறார். அதில் ஒரு பேரனுபவம் கிடைக்கிறது. இதை சொல்கையில் குழலில் இருந்து இதுவரை இசை பொழிந்தது.. இப்போது வெளியில் இருந்து இசை அருவி கழலுக்குள் பாய்கிறது என்று எழுதுகிறார். பூப் ராகம். மார்வா ராகத்தின் பிரிவாற்றாமை, லேசான சோகம் கலந்த தேஷ் என்று இந்துஸ்தானியின் ருசியை அவ்வப்போது புள்ளி காட்டி செல்கிறது எழுத்து. இதெல்லாம் சொன்ன பிறகு பெயரை கேட்கும்போது சொல்ல மறுக்கும் அந்த வழிப்போக்கன் ஆள் தான் சொன்னது எல்லாமே நேரத்தை சுவாரசியமாக போக்க சொன்ன கதை என்றும், நம்பிவிட்டாயா என்றும் சிரித்துப் போகிறார். பேருந்து கடந்து செல்லும்போது அந்த ஆள் சென்ற புதரின் மறைவில் இருந்து அற்புதமான புல்லாங்குழல் இசை கிளம்புகிறது என முடிகிறது கதை. இந்த கதையில் இருந்து விலகி நான், மார்வா ராகத்தை தேடிக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இதுதான் இவருடைய கதைகளின் உப பலன்கள் எனலாம்.

சுழல் நாணயம்கதையில்  ஒரு விஷயத்தைத் தீர்மானிக்க நாணயத்தை சுண்டி விடும் முறையை எடுத்துக்கொண்டு தனது ஸ்நேகிதியிடம் நட்பு தொடர்வது குறித்து நாணயம் சுண்டி விட, அது வழக்கம்போல எதிர்பார்ப்பதற்கு மாறாக விழ, நாணயம் தரையை தொடும் பகுதிக்கு பூமிக்கு பின்னால் என்று கதை மாயம்கொண்டு விரிகிறது. இதில் சுழல் என்ற வார்த்தை சுழல்வது என்றும், நீர்ச்சுழல் போல் சுழன்று அமிழ்வது என்றும் இருபொருள் குறிப்பது கவிஞர் யுவனின் சித்துவேலை.

ஒளிவிலகல்என்ற கதை சித்தம் பிறழ்ந்த ஒருவனை அல்லது அப்படி தோன்றும் அவனது மனைவி மனநல மருத்துவரிடம் கொண்டு வருகினாள். அவரது பிரச்சனை கனவு. பாதியில் நின்று போகும் கனவு மீண்டு மறுபடி விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது. அதனால் அது எங்கோ இருக்கும் ஒரு உண்மை என்று நம்புகிறார். கனவுக்குள் கனவு என்று போய் தப்பிக்க வழி இல்லாமல் போய்விடும் என அஞ்சுகிறார்.

சோழர்காலம்,பெருவழுதி, பூங்குழலி, இவரே ஒரு ஒற்றன் என்று சொல்லிக்கொண்டே போகிறார். சக ஒற்றனை ஒரு ஒருதலைக்காதலின் பொருட்டு கொன்றுவிட்டு சோழ தேசத்தின் காட்டுக்குள் நுழைந்து வெளிப்படும்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறார். அங்கே விருச்சிக ஸ்தபதி ஒரு பெண்ணின் பின் பக்கத்தை மற்றும் பார்க்கக் கிடைத்து அதை வைத்து முன்புறத்தை ஊகித்து வடிக்கும் சிற்பம் ஒரு ப்ரியம்வதா என்ற இளவரசி. அவளுக்குத் திருமணம் கூடாமல் போய் இந்த கனவு காணும் ஆசாமி கனவிலேயே அந்த சுயம்வரத்துக்கு போகிறார். இதை ஏன் உங்கள் மனைவியிடமே சொல்ல கூடாது என்று மருத்துவர் கேட்கும்போதுஒரு பெண் தனது கணவன் வேறு பெண்ணை மணம் புரிவதை எந்த பெண் ஏற்றுக்கொள்வாள் சொல்லுங்கள்?” என்று கேட்கிறார். இங்குதான் அவர் கனவை நனவாகக் கொள்ளும் அபாயமும் தெரிகிறது.

ஒரு இடத்தில் அவர் மருத்துவரிடம் சொல்கிறார்..கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கே இவ்வளவு அலுப்பாக இருந்தால் அத்தனை இடத்துக்கும் அலைந்து கொண்டிருக்கும் எனக்கு எவ்வளவு அலுப்பு இருக்கும்? அவஸ்தையின் ஆழத்தை சொல்லும் இந்த வரிதான் பிரச்சனையின் துளி.
 இப்படியே கதை சென்று சரியாகிவிடும் என்று  எண்ணியபடி நிற்கும் கதை. இதில் மருத்துவர் இவரைஇதையெல்லாம் எழுதவேண்டும்என்றும் அதில் உவப்பான இடத்தில் கதையை முடித்துவிடலாம். அதனால் இந்த சிக்கல் வராது என்றும் சொல்கிறார். இதில் உள்ளது நிஜம் கலந்த ஒரு அங்கதம். கனவுக்கும் பைத்திய மனநிலைக்கும் எழுதுவதற்கும் ஒரு விஷமமான இழையை இந்த கதையில் விட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.

கானல் நீர் போல இல்லாத ஒன்று இருப்பது போல தோன்றுவது காட்சிப்பிழை. இருப்பது இல்லாமல் போவது மாயம். ஆனால் காண்பது அல்லது உணருவது சற்று விலகி அல்லது மாற்றம் கொண்டு தெரிவது தோற்றப்பிழை. இதற்கு காரணம் ஊடக மாறுபாடு. அறிவதற்கும் உணர்வதற்கும் இடையே உள்ள மயக்கம். கண்ணாடி தம்பளரில் வைத்த உறிஞ்சுகுழாய் போல, ஒடிந்து காணப்படும் நிலை. கனவு, ஒரு ஊடகம் என்று இந்த ஒளிவிலகல் கதையில் தோன்றுகிறது. விழிப்பு நிலையின் தாக்கம் அல்லது விருப்பங்கள் எனும் அறிவியலாக இருந்தாலும் சரி –  கனவு நிலையில் தன்னை முற்றிலும் மறந்து கனவுண்டு, ஆனால் அந்த  கனவை விழித்தபின் சொல்ல முடியும்போது தன்னுடைய தான் இழக்கப்படவில்லை, ஆனால் அது நீ அல்ல என்றுசொல்லும் வேதாந்த விளக்கமாக இருந்தாலும் சரிகதை இந்த இருநிலைகளின் ஒளிப்படமாக இருக்கிறது. கதை என்ற அளவில் சாமானிய ஒன்றாக இருந்தாலும், ஒளிவிலகல் என்ற தலைப்பும், கதைகளில் வரும் கனவு நிலையும் பொருத்திப் பார்க்கும்போது, புரிதல் அல்லது புரிதலின் முனைப்பு கதையை விட்டு நழுவி வேறு எங்கோ சஞ்சரிக்கிறது.

இவரது இன்னொரு சிறுகதை சாதுவன் கதை. இந்தக் கதையில் ஒரு சுவாரசியம் உண்டு. கதை சொல்பவன் ஒரு கதை எழுத்தாளன். தனது நண்பன் இஸ்மாயிலிடம் படித்துக்காட்டி அவனது அபிப்ராயங்களை அனுசரிக்க கூடியவன். அதற்கு தகுந்தபடி இஸ்மாயில் ஆழமான வாசகன். அப்போது தான் சாதுவன் பற்றி எழுதி இருப்பதாக இஸ்மாயிலிடம் சொல்ல சிறுகதை துவங்குகிறது. சாதுவன் என்பவர் அலுவலகத்தில் முன்பு இருந்த ஒரு அலுவலர். நிறைய வாசிப்பவர். பேசுபவர். அவரைப் பற்றி அவர் சொன்னவைகளைப் பற்றி கதை கிளம்புகிறது. இடையிடையே இந்த இரு நண்பர்களும் அவர் சொன்னதான பழைய விஷயங்களை பற்றி இடைவெட்டாக பேசிக்கொண்டே இதையும் சேர்த்துக்கொள்ளலாம் என்பார்கள். இப்படிப் போக போக சாதுவன் இந்த இருவரிடமும் ஒருவரைப் பற்றி மற்றவரிடம் பகிர்ந்து கொண்டவற்றை இவர்கள் பரிமாறிக்கொள்ளும்போது அவர்களே அறியாத ஒரு சாதுவன் காணக் கிடைக்கிறார். மேலும் அவர் சொன்னதாக இஸ்மாயில் சொல்லும் மூன்று விஷயங்கள் கூட பேசப்படுகின்றன. இறுதியில் இதை எழுதினால்  எங்கோ இருக்கும் சாதுவன் படித்தால் (அவர் வாசகராயிற்றே) தன்னைத்தான் எழுதி இருப்பதாக வருத்தப்பட்டு விட்டால் என்று இவன் சொல்லும்போது, இஸ்மாயில் சொல்கிறான். தான் சொன்ன அந்த மூன்றுமே சாதுவன் சொன்னவை அல்ல. ஒன்று தனது நண்பனின் அனுபவம், மற்றொன்று தெலுகு டப்பிங் பட க்ளைமாக்ஸ், இன்னொன்று ஒரு புத்தகம் படித்தபோது தோன்றியது என்கிறான். இதில் கதை ஒரு ஜப்பானிய கைவிசிறிபோல விரிந்துகொடுத்து ஒவ்வொரு கதையாக வெளிப்படுகிறது. சாதுவன் பற்றிய கதையில் சாதுவனும் இருக்கிறார்.மேலும் ஒரு கதை உருவாகும்போது அது தனக்கு உகந்த விதத்தில் உள்ள பிறவற்றை வெளியில் இருந்து வாங்கிக்கொண்டு விரியும்போது உருவாவதே ஒரு புனைவுமடங்கிய  கைவிசிறி விரிந்து  சட்டென முழு விசிறியாகும் தருணத்தை இந்த கதை தருகிறது. மேலும் இதில் எழுதுபவன் சொல்லும் விஷயங்கள் மட்டுமே தனித்தனியாக உரையாடல் இடையே இருக்கிறது. உண்மையில் சாதுவன் பற்றிய கதையின் வாசிகன்தான் தனக்குள் கோர்வையாக உருவாக்கிக்கொள்ளவேண்டும்.அப்போது ஒருவேளை அவன் தனக்கு தோன்றும் ஒன்றிரண்டையும் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

சுநீல் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை கதையில் முதியவர் ஒருவர் வெளிநாடு சென்று தப்பித்து வந்த தன் பால்யகாலத்தை விவரிக்கையில் அதில் சிலவற்றை புனைந்து சொல்வார். அது கேட்பவருக்கு புரிந்துவிடும். இந்த இடத்தில துப்பாக்கி சப்தம் கேட்டு நீங்க தப்பிச்சு போவிங்களே என்பதுபோல ஏதோ சொல்வார். இந்த கிண்டலின் பின்னால் இருப்பது  ஓடைகள் சேர்ந்து நதியாகிவிடுவது போல, ஒரு புனைவின் நெடிதான். இந்த சாதுவன் கதையில் கூட ஒரு வரி வரும்ஆனா ஒன்னு தெரிஞ்சுக்குங்க Truth is stranger than fiction” என்று.

சில மாதங்கள் முன் லாவண்யாவின் ஏற்பாட்டில் நடந்த சிறுகதை இலக்கியக் கூடலில் சூத்ரதாரி கோபாலகிருஷ்ணன் எழுப்பிய ஒரு கேள்விநீங்கள் ஒரு உண்மைச் சம்பவத்தைக் கதையாக எழுதும்போது என்ன செய்வீர்கள்?” யுவனின் இந்த கதை அந்த கேள்விக்கு வரும் பதில்களுக்கு ஒன்றானதாக இருக்கும்.

இதில் பதினோரு கதைகள் உள்ளன. எல்லாவற்றையும் சொல்லும் நோக்கம் இந்த பதிவுக்கு இல்லை. இந்த சிறுகதைகளின் வழியே நாம் காணும் யுவன் சந்திரசேகரின் கதை சொல்லும் பாங்கும் அதன் இடமும் பற்றிய எண்ணங்கள்தான  அதே சமயம் தொகுப்பில் இப்படி கதைகளை தொடர்ச்சியாக  படிக்கும்போது, கதையில்  கதை அல்லது கதையிலிருந்து கதை என்பதை அனுமானித்து விடும்போது, போகப்போக சலிப்பு ஏற்பட்டுவிடக்கூடும். ஆகவே ஒரே வாசிப்பில் தொகுப்பை படிப்பதைவிட, அவ்வப்போது ஒன்றை படிப்பது இந்த சலிப்பை தவிர்க்கும்.

இந்த தொகுப்பிற்கு யுவன் எழுதிருக்கும் தன்னுரையான முன்னுரை செறிவான ஒன்று. கவிதைக்கும் புனைவுக்கும் உண்டாகிவிடக்கூடிய துல்லியமான வித்தியாசங்களை சொல்கிறார்.

சாதுவன் கதையில் இஸ்மாயிலிடம் சொல்வதாக ஒரு வரி வருகிறது.”ஏண்டா மடையா .வியாசமா எழுதறோம்.. இதெல்லாம் வாசகன் கண்டுபிடிக்க விட்டுட வேண்டாமா?”

தொகுப்பின் முன்னுரையில் ஒரு வரி வருகிறதுஇந்த தொகுப்பு வெளியாகும் நேரத்தில் புனைகதை சம்பந்தமாகவும் சற்று சிடுக்கான மனநிலையே இருக்கிறது. சரி இவற்றை நிர்ணயம் செய்யும் பணி வாசிப்பவர்களுடையதுதானே தவிர, என்னுடையதல்லவே.

இந்த இரு வரிகளை இரு கூழாங்கற்களாக கொண்டு அதன் மேல் ஏறிநின்றுபார்க்கமுயலுகிறது இந்த கட்டுரை.

ஒரு சிறுகதையைப் படித்த பிறகு அது தரும் அனுபவம் என்பது மதிப்பீடுகளாகவோ, நீதிநெறிகளாகவோ, உணர்ச்சிகளாகவோ, ஒரு எண்ணம் அல்லது சம்பவத்தின் குறுக்குவெட்டாகவோ இல்லாமல் கதை படித்து முடித்தபின்னும் கிடைப்பது கதைகளே என்பது ஒரு வித்யாசமான  நிலை அல்லவாஅதுவே யுவன் சந்திரசேகர் என்று சொல்வேன்.ஒளிவிலகல்
 யுவன் சந்திரசேகர்
காலச்சுவடு பதிப்பகம்
இரண்டாம் பதிப்பு 2004

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.