எங்கெங்கு காணினும்…

“யாரு?” வாசற்கதவைத் திறந்து கொண்டே கேட்டாள்.
“நீ யாருன்னு உனக்குத் தெரியுமா?”என்றார் அங்கு நின்றிருந்த கிழவர்.
“என்ன?” தூக்கக் கலக்கத்தில் புரியாமல் கேட்டாள்.
“எதை என்னன்னு கேக்கற?”
அவளுக்குள் சோம்பல் முறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த  தூக்கம் அறை வாங்கினாற் போல் விழித்துக் கொண்டது.
“ஹலோ” என்றாள் கோபமாக. என்ன நடக்கிறது இங்கே?
“பேசும் போதே அன்னிய பாஷை எதுக்கு?”
“ நீங்க மட்டும் என்னவாம்?”
“ம்.. இது சரியான பதில்! நான் நினைச்சதை  விட நீ பரவாயில்லையே!! ஆனா நம்ம நாட்டு மொழி எதுன்னாலும் பரவாயில்லை”
தூக்கம் கலையாத இந்த அதிகாலைப் பொழுதில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்,  கதவைத் தட்டித் தொந்தரவு கொடுக்கிற முன் பின் தெரியாத இந்த கிழவரைத் துரத்தாமல்?
அதற்குள் கிழவர் திண்ணையில் சாவகாசமாக , சௌகர்யமாக உட்கார்ந்து கொண்டார்.  அவள் மனதுக்குள் சுமந்து கொண்டு திரிந்த கிராமத்தின் ஒரு துளி , இங்கு நகரத்தில் திண்ணையாக துளிர்த்து இருந்தது .சோடியம் விளக்கின் வெளிச்சம் மஞ்சளாய் திண்ணையையும், தெருவையும் நனைத்திருந்தது. காலைப் பொழுது தயங்கினாற் போல் மெல்ல வந்து கொண்டிருந்தது. எதிர் சாரி மரங்கள் விழித்துக் கொண்டு அவர்கள் இருவரையும் உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தன. தூக்கம் கலையாத சின்னக் குழந்தை போல் தெரு லேசாக புரண்டு மறுபடியும் தூக்கத்தில் ஆழ்ந்தது.
“உங்களுக்கு என்ன வேணும்?”
அவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே கிழவர் “ நிஜமாவே நீ நம்பறயா, யாருக்காவது வேணுங்கிறதை யாராவது  உண்மையிலேயே குடுக்க முடியுமா?”
தலை சுற்றுவது போல இருந்தது, கதவைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.
“இப்ப என்னன்னா…..”
“அதெல்லாம் சரி! நீங்க யாருன்னு தெரியலயே?”
“ஒத்தரை எனக்குத் தெரியும்னு சொல்றதே மாயை! யாரையுமே நமக்குத் தெரியாதுங்கறதுதான் உண்மை! ஒரு வேளை ஒரு 0.01% அளவு வேணா ஒத்தர் யாருன்னு தெரிஞ்சுக்கலாம்”
“அந்த 0.01%  அளவுல நீங்க யாருன்னு சொல்லுங்க!”
“அடடா! நீ உண்மையிலயே கெட்டிக்காரிதான்”
யாராவது புகழ்ந்தால் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை அதை தெரிந்து கொண்டுதான் கிழவர் புகழ்கிறாரோ என்ற சந்தேகம் வந்ததும்,
கொஞ்சம் குரலில் கடுமை காட்டி “சொல்லுங்க!” என்றாள்.

அதற்குள் பவழ மல்லி மரத்திலிருந்து இனிமையான சீட்டி ஒலி போல குரல் கொடுக்கிற பறவை கூவ ஆரம்பித்தது.  ஐந்தரை மணிக்கு சரியாக   ஆரம்பித்துவிடுகிறது. கனவும், நனவும் சேர்ந்து நெய்த அந்த கணத்தில் அந்த பறவையின் குரல் வண்ணத்தை இழைத்தது. அவள் காணாமல் போய் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  விழிப்பில் பறவை மீண்டும் கூவியது.
“அக்கா! அந்த பறவை ஏங்க்கா கண்ணுக்குத் தெரியமாட்டேங்கறது?”
“எல்லாம் தன்னைத்தானே காப்பாத்திக்கணுங்கற அடிப்படை பய உணர்ச்சிதான்”
“நான் ஒண்ணும் பண்ணமாட்டேனே அக்கா. சும்மா பாக்கத்தானே போறேன்”
“அதுக்கு எப்படி அது தெரியும்?”
நானும், கலா அக்காவும் பிள்ளையார் கோவிலுக்கு போய்விட்டு ஆற்றங்கரைக்குப் போய்க் கொண்டிருந்தோம்.
“ஏங்க்கா பறவைக்குக் கூடத்தெரியறது தன்னைக் காப்பத்திக்கணும்னு , மனுஷனுக்கு ஏங்க்கா தெரியல?”
அக்கா சட்டென்று பாதையில் நின்றாள்.”ஏண்டி! உன்னை யாரவது ஏதாவது பண்ணினாளா?”
“இல்லக்கா, என்னை இல்ல, அந்த நாணா இல்லை அவனை…. பாவம்கா அவன்!
நேத்திக்கி தெருவோட போறவனை பக்கத்தாத்து மாமா நாலு பேரும்  கடோத்கஜனாட்டம் சுத்தி நின்னுண்டு இங்க வாடா! இங்க வாடா ன்னு   பிடிச்சு இழுத்தா. அவன் எப்பவுமே போட்டுக்கற மாதிரி, பின் பக்கம் நஞ்சு போன பழய , அவனுக்கு பொருந்தாத பெரிய சைஸ் காக்கி கலர் அரை டிராயர் போட்டுண்டு இருந்தான், அதுக்கு பட்டன் எதுவும் இல்லை.மேல சட்டை கிடையாது. நழுவிவிழற டிராயரை அருணா கயிறு மாதிரி ஒண்ணுனால சுத்திக் கட்டி முடிச்சு போட்டிருந்தான்.
எங்கடா போயிண்டிருக்கன்னு சொல்லிண்டே ஒரு மாமா அவனைப் பிடிச்சார்.   “இந்த கேள்விக்கு பதில் சொன்னயின்னா உன்னை விட்டுடறோம். இல்ல படவா! உன் டிராயரை அவுத்து விட்டுடுவேன்” அப்படின்னார்  ராமு மாமா, பாக்கி மாமால்லாம் கிக்கிக் கிக்னு சிரிச்சா. இவன் பாவமா கெஞ்சறான். “இல்ல மாமா விட்டுடுங்கோ நான் போறேன், தயவு செஞ்சு விடுங்கோ மாமா”
இன்னொருத்தர் ”உங்க அக்கா எங்கடா இரண்டு நாளா வரக்காணும் வேலைக்கு?”அப்பிடின்னார்.  உனக்குத்தான் தெரியுமே அவன் அக்கா அவாத்துல சமையல் வேலைக்கு சுத்துக்கார்யம் ஒத்தாசை பண்ணிண்டு , சாப்பாடு பரிமாறி, சாப்பிட்ட இடத்தை சுத்தம் பண்ணி, சொல்ற வேலையெல்லாம் செய்வா. பாவம்! பள்ளிக்கூடம் போயிண்டு இதெல்லாம் செய்றது கஷ்டம், இல்லக்கா?.”
“ஆமா! பாவம்தான்! என்ன பண்றது?” பெரு மூச்சு விட்டாள் ”சொல்லு! அப்பறம் என்ன ஆச்சு?”
“அதுக்கு அவன் ’இல்ல மாமா! அவ தூரம்’னான். “அப்பிடியா?ஆயிருக்கப் படாதே?” அப்பிடின்னார், மணி மாமா. எல்லாரும் ஓன்னு சிரிச்சா.ஏங்க்கா?”
கலா அக்கா பதில் சொல்லாமல் என்னைப் பார்த்தாள். முகம் அழுகையிலும் , கோபத்திலும் சிவந்தது.
நான் தொடர்ந்தேன் “இவன் கண்ணுல ஜலம் தளும்பறது. அவன் கையை மாமா விடவேயில்லை. விடுங்கோ மாமா! விடுங்கோ மாமான்னு கெஞ்சறான்.”படவா! கேள்வி இதில்லைடா? இட் அது பட்டானால்வாட் என்ன?”தெரியல மாமா! தெரியல மாமா விடுங்கோ” ”அப்ப அவுத்துதான் ஆகணும்”னு ராமு மாமா இரண்டு கையையும் பிடிச்சுக்கறார். இன்னொருத்தர் அவுக்கப் பாக்கறார்.
நான் எங்காத்து திண்ணையிலேந்து பாத்துண்டிருந்தேன். அழுகை, அழுகையாக வந்தது.திண்ணையை விட்டு சட்னு இறங்கி அவா கிட்ட போய் “மாமா! பெரிய பண்ணை மாமா வந்துண்டிருக்கா. ராமு மாமா எங்கன்னு கேட்டா”ன்னேன்.சட்னு கவனம் கலஞ்சு கையை விட்டுட்டு “எங்கடி?” ன்னார். ”இதோ தெரு முக்குக்கு வந்துட்டர்,  ஓடுறா நாணா ! ஏதொ சாமான் வண்டிலேந்து எடுக்கணுமாம்”னேன். அவன் ஓடினான். நானும் சட்னு எங்காத்துக்குள்ளே புகுந்துண்டு கதவை சாத்திண்டேன்.
மாமாவெல்லாம் வெளியில வந்து பாத்துட்டு”என்ன வண்டியை காணுமே!”ன்னா. “முச புழுக்க மாதிரி இருந்துண்டு  இந்த குட்டிக்கு கொழுப்பை பாத்தியா” ன்னார் மணி மாமா. ஏக்கா இப்படியெல்லாம் பண்றா? பாவம்கா அவன்”
கலா அக்கா முகம் கலங்கியது “ஏழையை கண்டா மோழையும் பாயும் ங்கறதுவாஸ்தவமான பேச்சு! நீ நல்ல காரியம் பண்ணின! வாழ்க்கையில தைரியம் , சாதுர்யம், தப்பை தட்டிக் கேக்கற நேர்மை எல்லாம் ரொம்ப அவசியம். அதே சமயம் அசட்டு பிசட்டுன்னு எதிலயும் மாட்டிக்காம கவனமா இருக்கறதும் முக்கியம்” என்று தலையை தடவிக் கொடுத்தாள்.
கலாஅக்காதான் எத்தனை அழகு? கோவில்ல கருவறையில இருக்கற அம்மன் மாதிரி! நீண்டு சரிந்த இமைபீலியோடு கூடிய கரிய கண்களும், குமிண்சிரிப்போடு கூடிய இதழ்களும்   சின்ன இடுப்பும், கோவில் சிலைதான் அக்கா!
முன்னிருட்டு சூழ்ந்து வருகிற சாயாங்காலப் பொழுதில் அக்கா வீட்டுக்குள் நுழைகிறேன், மின்சாரம் இல்லை. அக்கா சாமி விளக்கு ஏத்தி விட்டு ,  திண்ணை மாடப் பிறையில் வைப்பதற்காக கையில் சின்ன அகல் விளக்கோடு வருகிறாள். மெல்லிய கருப்பு நைலான் துணி மாதிரியான அழகிய இருட்டில் அந்த வீடே கோவில் கர்ப்பகிருஹம் போல இருக்கிறது.அக்கா முகத்தில் பொன் வெளிச்சமும் ,நிழலும். அக்கா.. …அக்கா….. நீ ஏண்டி இப்படி இருக்கிறாய்?  திண்ணையில் விளக்கை வைத்துவிட்டு அக்கா வருகிறாள்.
அக்கா கேட்கிறாள் “ஏய்! நான் உனக்கு ஒரு டான்ஸ் ஆடிக் காண்பிக்கட்டுமா?” நான் பேச்சே வராமல் தலையை ஆட்டினேன்.
அவள் ‘சாதுர்யம் பேசாதடி , என்சலங்கைக்கு பதில் சொல்லடி ‘ பாட்டுக்கு ஆடினாள்.  அது பரத நாட்டியமா இல்லையா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை.அவளின் சிலை போன்ற உடலும் . நளினமான அசைவுகளும், அந்த இருட்டும் , சாமி அலமாரியிலிருந்த குத்து விளக்கு வெளிச்சமும்  எனக்குப் பரவசத்தையும், சோகத்தையும் ஒருங்கே அளித்தன.
இவ்வளவு அழகான அக்காவுக்கு கல்யாணமாம்! கலா அக்கா , நீ ஒருத்தனை கல்யாணம் செய்து கொண்டு, அவனுக்கும் , அவன் வீட்டாருக்கும் சமைத்துப் போட்டுக் கொண்டு, பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து, சமையல் உள்ளை அலம்பி, பாத்ரூமை பிளீச்சிங்க் பவுடர் போட்டு கட்டை விளக்கு மாற்றால் தேய்த்து தேய்த்து அலம்பிண்டு, குழந்தைகளைப் பெத்துண்டு வயசாகி…… இதுக்காகவா பிறந்திருக்கிறாய்?  நீ இதுக்கெல்லாம் அப்பாற்பட்டவளில்லையோ? மேம்பட்டவளில்லையோ? உன்னோட அழகும், அறிவும்,சாமர்த்தியமும், சமத்தும்,பேச்சும்  இதுக்கா செலவழியணும்.? மானிடர்க்கென்று பேச்சுப் படில் வாழ்கிலேன்னு நீ சொல்லியிருக்க வேண்டாமோ? இந்த கடைசி இரண்டு , மூன்று வாக்கியங்கள், அப்போது வார்த்தைகளில் சிக்காத வெறும் குழப்படியான  உணர்வுகளாக மட்டுமே இருந்தன. இப்போது யோசித்து எழுதும் போது அதை இன்னும் கூர்மையாக்குகின்றேனோ?
நீ இப்ப எங்க இருக்க? ரொம்ப  வயசாகி கிழவியா போயிருப்பன்னு நினைக்கவே பிடிக்கலையே!
 
“உனக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகின்றன?”ஷாரன் கேட்டாள்.
“முப்பத்தியேழு வருஷம்” என்றேன் நான்.
அவள் புருவங்களை உயர்த்தி “வாவ்!”என்றாள்.
“உங்கள் நாட்டில் நீங்கள் கல்யாணம் பண்ணிக் கொள்வதை எப்படி தீர்மானிக்கிறீர்கள்?”
“அப்பா, அம்மா தீர்மானித்தார்கள், நாங்கள் கல்யாணம் செய்து கொண்டோம்” நான் சிரித்தேன்.
தொண்ணூறு சத வீத அமெரிக்கர்களே கேள்விப் பட்டிராத அந்த சின்ன  அமெரிக்க ஊரில் (பாக்கி இருந்த பத்து சதவீதத்தினர் பள்ளிக்கூட புவியியல் வகுப்பில் மழை மறைவு பிரதேசத்திற்கான எடுத்துக்காட்டாக அளித்திருந்த பட்டியலில் அந்த ஊர் இருந்ததை நினைவு கூர்ந்தார்கள் ) அவள் பார்த்த முதல் இந்திய குடும்பம்  என் பெண்ணுடைய குடும்பம்தான். அவள் என் பெண்ணின் குழந்தைகளை கவனித்துக் கொள்கிற செவிலித்தாயாக எங்களுக்கு அறிமுகமானாள். அவளுக்கு இந்தியா என்றொரு நாடு இருக்கிறது என்கிற அளவில் மட்டுமே இந்தியா அறிமுகமாகி இருந்தது.
“எப்படி?”என்றாள் ஆச்சரியமாக.
“பெண்ணுக்கு கல்யாணம் பண்ண வேண்டும் என்ற யோசனை வந்தவுடன், தங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லாரிடமும் , அவளுக்கு தகுந்த நல்ல பையனை கண்டு பிடிக்கும்படி சொல்லுவார்கள். அப்படி கண்டு பிடித்தவுடன் பையனுடைய குடும்ப பின்னணி, உறவினர் பற்றிய விபரங்கள், சமூக அந்தஸ்து, பொருளாதார நிலைமை, பாரம்பரியம், பையனுடைய வேலை, படிப்பு, சம்பளம்,பழக்க வழக்கம், எல்லாவற்றையும் விசாரிப்பார்கள். தங்களுக்கு பிடித்தது போல இருந்தால் இரு குடும்பத்தாரும் முதலில் பார்த்துக் கொள்வார்கள், பின்னர் ஒரு நல்ல நாளில் பையனும் , பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்வார்கள் .இரு பக்கமும் சரியென்று நினைத்தால் கல்யாணம்……”
இதில் முக்கியமான விஷயங்களான ஜாதியையும் ஜாதகத்தையும் சொல்லவில்லை , அவளுக்கு புரியும் படி சொல்வது எப்படி என்று தெரியவில்லை.
“ வாவ்! தட் சவுண்ட்ஸ் இன்ட்ரெஸ்டிங்க்! நீங்களிருவரும்  என்னபேசினீர்கள், முதன் முறை பார்த்த பொழுது? கல்யாணத்திற்கு முன்னால்  டிட் யூ டேட் ஃபார் சம் டைம்?”
“ம்..ஹூம். பேசவில்லை. டேட்டும் இல்லை ஒரு மண்ணாங்காட்டியும் இல்லை”
“ஆனால் எனக்குத் தோன்றுகிறது, உங்கள் கல்யாண முறை சரியென்று! இப்படி பல விஷயங்களை பல பேர் யோசித்து செய்யும் போது அந்த உறவு நீண்ட நாட்களுக்கு நிலைத்து இருக்கும் என்று”
அவள் சொன்ன போது எனக்கு கஷ்டமாக இருந்தது.அவள் முதல் கல்யாணம் முறிந்து போய் இப்போது இரண்டாம் கணவருடன் பத்து, பதினைந்து வருடங்களாக இருக்கிறாள். முதல் கணவன் வார்த்தைகளால் அவளை மிகவும் காயப் படுத்திக் கொண்டே இருந்தான் என்பதைத் தவிர அவள் அதைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை.
அவள் சொன்னாள் “எனக்கு அந்த உறவு முறிந்த போது ஒரே ஒரு விஷயம்தான் கஷ்டமாக இருந்தது, இனி என் மாமனாரை அதிகம் பார்க்க முடியாதே என்பதுதான் அது. அவர் ஒரு அற்புதமான மனிதர். சிறு வயதிலேயே அப்பாவை இழந்த எனக்கு ஒரு அருமையான அப்பாவாக இருந்தார். அந்த வீட்டிலேயே அவர்தான் என்னை அதிகம் புரிந்தவராக, என் மேல் உண்மையான பிரியம் உள்ளவராக இருந்தார்.  அவரை மட்டும் என்னோடு அனுப்பிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். “அழகாக சிரித்தாள். அவளைப் போல அன்பே உருவான, உணர்வுசார் நுண்ணறிவும், ,நுட்பமும், நயமும், இங்கிதமும் நிறைந்த நல்ல மனுஷிக்கு   ஏன் இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தது?
‘இந்த இரண்டாவது திருமண உறவு பரவாயில்லை என்றாலும் கூட இதிலும் நான் இந்த உறவை தக்க வைத்துக் கொள்ள நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது, பரவாயில்லை ! என்னால் முடியும்’ என்று முன்னரே சொல்லியிருக்கிறாள்.
“ம்.. நீ சொல்லு! உன் கல்யாணத்தைப் பற்றி  நீ என்ன நினைக்கிறாய்?”
உண்மையிலேயே ஒரு வெற்றிகரமான  திருமண உறவுக்கான தவறில்லாத சூத்திரம் ஒன்றை அறியும் ஆவல் அவள் குரலில்.
என்னை உள்ளுக்குள் தொகுத்துக் கொண்டு சொல்லத் தொடங்கினேன்.
“நான் சொன்ன திருமண முறை இப்போது வெகுவாக மாறி விட்டிருக்கிறது. தன் துணையை தானே தீர்மானிக்கும் முறையை இன்றைய சில இளைஞர்களும் ,  சில பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே அம்மா அப்பா தேர்ந்தெடுத்தாலும். பையனும் , பெண்ணும் அறிமுகமாகி, நன்றாக பேசி பழகி , பிடித்தால் மட்டுமே திருமணம் என்பது ஓரளவு பரவலாகி வருகிறது.  நான் சொன்ன என் காலத்து திருமண முறை கூட பெரும்பாலான மத்திய தர குடும்பங்களில் மட்டும்தான். மிக மேல் மட்டத்தினருக்கும், கீழ்  வர்க்கத்தவருக்கும், அதை காட்டிலும் அதிகமான, சுதந்திரமான தேர்வு இருந்தது.
என் கல்யாணத்தைப் பற்றி….ம்… என்ன சொல்ல?  இவர் ஒரு நல்ல மனிதர். குடும்பத்தினரின் வளமான வாழ்க்கைக்காக கடுமையாக உழைத்தவர். கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாதவர். ரொம்ப நல்லவர்!
ஆனால் நாங்கள் இருவரும் முற்றிலும் வேறுபட்ட ஆளுமைகள், எங்களின் , ரசனைகள், மதிப்பீடுகள், பார்வைகள் எல்லாமே வேறு, வேறு. நிச்சயமாக தோல்வி இல்லை. ஆனால் வெற்றியா ?…..தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நிறைய சமரசங்கள் செய்து கொண்டிருக்கிறேன், அவரும் அது மாதிரி , ஏன் அதைக் காட்டிலும் அதிகமாகக் கூட செய்திருக்கலாம். அதனால் எனக்குத் தோன்றுவது என்னவென்றால், சமரசமில்லாத உறவுகளே இல்லை, குறிப்பாக திருமண உறவுகள், என்பதுதான். எவ்வளவு, எதில் என்பதுதான் கேள்வி. சமரசம் செய்து கொள்ளவே முடியாத சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள  நிர்பந்திக்கப் படும் போது முறிவு மட்டுமே முடிவாகி விடுகிறது. இல்லையா?”என்றேன்.
அவள் தலையை  மெல்ல அசைத்து தன் ஆமோதிப்பை வெளிப்படுத்தினாள்.
“அப்படி இல்லாத ஒரு இலட்சிய மண உறவு, சாத்தியமா? நான் பார்த்ததில்லை,  எங்காவது இருக்கக் கூடுமா ?” நான் கேட்டேன்.
ஷாரன் சொன்னாள் “ எனக்கு அந்த நாள் நினைவு இருக்கிறது. எனக்கு பனிரெண்டு வயது.  காலை பதினோரு மணி இருக்கும். கணக்கு வகுப்பில் ஆசிரியை என் அருகில் வந்து தோளில் கை வைத்து மெதுவாக ‘நீ கொஞ்சம் வெளியே வருகிறாயா? “ என்றார். வெளியே போகும் போது “உன் அம்மாவும் , தாத்தாவும் வந்திருக்கிறார்கள்”என்றார்.
தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்த தாத்தா ரொம்ப வயதானவராக தளர்ந்து தெரிந்தார். அம்மா முகத்தில் அழுத்தமும், ஆழமான சோகமும்.
“என்னம்மா?’என்று ஓடினேன். “தாத்தா! என்ன ஆயிற்று?”
“ஒன்றுமில்லை கண்ணே வா!” என்றார்.
காலையில் பார்த்தபொழுது கூட பாட்டி நன்றாகத்தானே இருந்தார்? பாட்டி .. பாட்டி உங்களுக்கு என்ன ஆயிற்று? நான் இன்று காலை உணவு சாப்பிடும் பொழுது சமையலறையில் அவரும் , நானும் மட்டும் தனியே இருந்தோம். அப்படியான காலைப் பொழுதுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
பாட்டி எனக்குப் பிரியமான சினேகிதி. எங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவும், சிரிக்கவும் எத்தனையோ இருந்தன. அன்று காலை என்ன பேசினோம் என நினைவு கூற முயன்றேன். சுத்தமாக நினைவு வரவில்லை.அப்படி நினைவு வராமல் போனது பாட்டிக்கு  நான் செய்கிற துரோஹம் என்று நினைத்தேன் . அழுகையாக வந்தது.
அம்மாவும், தாத்தாவும்  காரில் பேசாமல் வந்தார்கள். ஒரு விதத்தில் அது எனக்கு சௌகர்யமாக இருந்தது. வீடு வந்ததும் , உள்ளே வேகமாக ஓடினேன். சமையலறை கதவு வழியாக உள்ளே நுழைந்தேன். பாட்டி!!!  சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபடி யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்!!
“பாட்டி!” ஓடிப் போய்க்கட்டிகொண்டேன் அழ ஆரம்பித்தேன். ”நல்ல வேளை! உங்களுக்கு ஒன்னும் ஆகலையே!” என்றேன்.
“என் கண்ணே”பாட்டி என்னைக் கட்டிக்கொண்டு தலையை தடவிக் கொடுத்தார். சட்டென்று ஏதோஉறைத்து “அப்ப  யாருக்கு…” அம்மா நாற்காலியில் அமர்ந்து தலையை குனிந்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.
வரவேற்பு அறையில் குழுமியிருந்த யாரையும் பார்க்காமல் அப்பாவின் அறைக்குப் போனேன். அங்கே அப்பா!……பெருங் குரலெடுத்து அழ ஆரம்பித்தேன்..காலையில் பள்ளிக்குப் போகும் பொழுது எப்பொழுதும் ஜோக்கடித்து சிரிக்கும் அப்பா , என் இனிய அப்பா, நட்பான அப்பா, கதை சொல்லுகிற அப்பா, விளையாடுகிற அப்பா  இனி என்றும் இல்லை என்பதை மனதும் அறிவும் உணர்ந்து ஏற்றுக் கொள்ள பல மாதங்கள்பிடித்தது.
அப்பொழுது அம்மாவுக்கு முப்பத்தெட்டே வயது, முழு நேர குடும்பத்தலைவியாக மட்டுமே இருந்த அவளுக்கு மூன்று குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு. உலகமே தெரியாமல் இருந்த அம்மா  ஒரு வேலையை தேடிக் கொண்டாள். எங்களனைவருக்கும் தாத்தா பாட்டி பெரிய ஆதரவு .ஐடஹோவில் தாத்தா பாட்டியின் பண்ணை வீட்டில் வசிக்க ஆரம்பித்தோம்.
நானும், என்சகோதரியும் அப்பா இறந்த சில வருடங்களில் பல முறை அம்மாவிடம் மறு மணம் புரிந்து கொள்ளும்படி கூறியிருக்கிறோம். அம்மா சொன்னாள், ‘உங்கள் அப்பா இருந்த இடத்தில் வேறு யாரையும் என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. நானும் அவரும் வாழ்ந்த வாழ்வு  அப்படி! அவர் மாதிரி ஒரு அற்புதமான ,அன்பான, மனைவியின் மீது மதிப்பும் கௌரவமும் நிறைந்த மனிதருடன் நான் வாழ்ந்த வாழ்வுக்குப் பிறகு வேறு யாருடனும் நான் வாழ விரும்பவில்லை” அப்படியே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அம்மாவுக்கு இப்பொழுது வயது எண்பது.” ஷாரன்  சொல்லி முடித்தாள்.
சாரதா பாட்டி அப்படித்தானே இருந்தார்?
“பாட்டி! உங்க ளுக்கு தாத்தா மூஞ்சி நினைவில இருக்கோ?’
சாரதா பாட்டி அம்மாவின் அம்மாவிற்கோ அப்பாவிற்கோ அத்தங்கா ( அத்தை பெண்) அதனால் அவர் எல்லாருக்குமே அத்தங்கா பாட்டி.
ஒரு குழந்தை கூட பெறாத சாரதா பாட்டிதான் வீட்டில் அத்தனை பிள்ளைப் பிறப்பிற்கும் உதவிசெய்தாள்.அத்தனை குழந்தைகளுக்கும் அவள்தான் செவிலித்தாய். வீட்டின்  சமையல் வேலைகளோ, மாட்டு வேலைகளோ, வயல் வேலைகளோ, கல்யாணங்களோ, பாட்டியின் கைபடாமல் எந்த வேலையும் நடந்ததில்லை.
பொதுவாக அம்மா வீட்டுப் பேரிடம் அவ்வளவு நெருக்கமோ, மதிப்போ காட்டாத அப்பா கூட சொல்லுவார்” நார்மடிப் புடவைக்குள் இருக்கிற அந்த சின்ன ஒல்லியான தேகத்திற்குள் இத்தனை சக்தியா?அவள் மனுஷியா? யந்திரமா?  இஷிணி தேவதையா? களைப்போ, அலுப்போ காட்டாமல் அவள் செய்கிற வேலைகளை நினைத்துப் பார்த்தாலே மூச்சு மூட்டுகிறதே!”.
காலை வெயில் முற்றத்திலிருந்து தாழ்வாரத்துக்கு வர ஆரம்பித்திருந்தது. பாட்டி சந்தனக் கல் மேடையில் பூஜைக்கு சந்தனம் இழைத்துக்  கொண்டே எனக்குப் பதில் சொன்னார்.
“ஓ! ரொம்ப நன்னா நினைவில இருக்கே! ராஜாமாதிரின்னா இருப்பர்.  நெஞ்சும் மாரும் தேக்குப் பலகையா இருக்கும்! சுருள் சுருளா அலை அடிக்கற  தலை ! தெருவில இறங்கி நடந்தார்னா எட்டுக் கண்ணும் விட்டெறியும்! என்னம்மா இருப்பர் தெரியுமா?அவருக்கு என்னிக்கும் இருபத்திரண்டு வயசுதான். எனக்குத்தான் எம்பது!” பாட்டி பொக்கை வாய் புன்னகை புரிந்தாள். ஆனால் இப்ப தோன்றுகிறது அப்படி தனியாக வாழ்ந்தது பாட்டியின் தேர்வுதானா?
நான் கலா அக்கவைப் பார்த்ததும் , சாரதா பாட்டியுடன் பேசியதும், ஷாரனுடன்  எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதும் , இந்த ஒரு வாழ்க்கையிலா? இந்த ஒரு பிறவியிலா? அறுபது வருடங்களும், தஞ்சாவூர் பக்கத்து கிராமமும், அமெரிக்க கிராமமும்  ,மனிதர்களும் ஒன்றோடொன்று கலந்து…….
ஷாரன் அம்மா நார்மடி புடவையுடன் திருவாரூர் பக்கத்து கிராமாந்திர வீட்டில் குழந்தையை குளிப்பாட்டினார், நெல்லைப் புழுக்கினார், இரண்டு படி வெங்கலப் பானையை அடுப்பில் ஏற்றினார்,மஹிஷாசுர மர்தினி சுலோகம் சொன்னார்.
சாரதா பாட்டி பாண்ட் , ஷர்ட்டில், குதிரை மீது ஏறி ஐடஹோ பண்ணையை மேற்பார்வை பார்த்தார். சின்ன குழந்தைகளின் பள்ளியில் உதவியாளாராக இருந்தார். வால் மார்ட் ஸ்டோரில் சாமான்களுக்கு பில் போட்டார்.
கலா அக்கா அழகிய நவீன உடையில் தெளிவான ஆங்கில உச்சரிப்பில் தொலைக் காட்சி சானலில்  பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, (ஆண் குழந்தைகளுக்கும்) எதிரான பாலியல் வன்முறையை எதிர்த்து நடைமுறை படுத்த வேண்டிய புதிய சட்டங்களையும் , அதி வேக நீதி மன்ற  நடவடிக்கைகளையும், தீர்ப்புகளையும் பற்றிப் பேசினாள். இன்னொரு சானலில் பரத நாட்டியம் ஆடினாள்.
ஷாரன் குழந்தைகளுடனும், அவளின் அன்பான கணவனுடனும்  இந்தியா வந்தாள். அங்கு ‘கண்ணூஞ்சல் ஆடினாள் காஞ்சன மாலை”என்று மாமிகள் பாட ஊஞ்சல் ஆடினாள், மடிசார் புடவையில் திருமாங்கல்யம் கட்டிக் கொண்டாள்.மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குப் போய் குங்குமம் வாங்கி தாலியில் வைத்துக் கொண்டு கண்ணை மூடி சாமி கும்பிட்டாள்.
நான் முதுகில் பையை சுமந்து கொண்டு மலை ஏறினேன், பசிய , மெல்லிய இருட்டோடு கூடிய காடுகளில், பச்சை மணத்தையும், மண் வாசனையையும் நுகர்ந்து கொண்டு, இலைகளில் சருகுகளில் கால் புதைய புதைய நடந்தேன்,  மனிதர் பாதம் படாதபெருங்காட்டுக்குள் , ஹோவென்று விழுகிற பேரருவியில் குளித்தேன், சத்யஜித் ரேயுடன் பதேர் பாஞ்சாலி இயக்கினேன், தஞ்சாவூர் பெரிய கோபுரத்தின் மேல் நின்றேன், விமானத்திலிருந்து பாராசூட்டில் குதித்தேன், நதியைப் பார்த்துக் கொண்டிருந்த மர வீட்டின் பால்கனியில் அமர்ந்து கதைகளை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தேன். இன்னும்…….இன்னும்….
“அம்மா! நீ இன்னிக்கு ஏதாவது எழுதினயா?”
வர்ஷா கேட்டாள், சக்கர நாற்காலியின் அருகில் அமர்ந்தபடி. அம்மா பக்கவாதத்தால் பாதிக்கப் படாத கையினால் கணினியைக் காட்டினாள்.
வர்ஷா படிக்கத் தொடங்கினாள்.
“யாரு?” வாசற்கதவை திறந்து கொண்டே கேட்டாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.