அகவல், அறிவியல், அக உடல்

அம்மா என்பது உறவிற்கும், பொதுஅழைப்பிற்கும் பொருந்துவது.பாட்டி என்பது உறவில் இணைவது போல் பொதுவில் இணைவதாகத் தோன்றவில்லை. ஆனால்,தமிழில் அனைவருக்குமான ஒரு பாட்டி இருக்கிறார்; அவர் ஒளவை மூதாட்டி என்று குறிப்பிடப்படுகிறார்.
ஒளவைப் பாட்டியின் காலத்தினைக் குறித்து பல கேள்விகளும், விளக்கங்களும் உள்ளன. இக்கட்டுரையில் அதற்குள் செல்லும் தேவையில்லை. அவரது அகவல் காட்டும் சித்திரங்களைப் பார்க்கும் முயற்சி இது.
அவரின் ‘வினாயகர் அகவல்’ ஒரு யோக நூலாகக் கருதப்படுகிறது.
72 வாக்கியங்களுள்ள அது, உடலின் ஒன்பது வாயில்களைக்(7+2=9) குறிப்பிடுவதாக யோக மரபினர் சொல்கிறார்கள்.
மயில் அகவும்;குயில் கூவும். ஆனால், யோகியருக்கோ ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், மயில் குயிலாச்சுதடி’எனும் அனுபவம் வாய்க்கிறது. மயில் அகவுவது போல் சந்தம் அமைந்திருப்பதால் இந்த வினாயகர் துதி, வினாயகர் அகவல் எனப்படுகிறது.அவரை விட மேலான தலைவர் இல்லையென்பதைக் குறிக்கவே’வி’நாயகர் எனவணங்குகிறோம்.
‘சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட’ எனத் தொடங்குகிறார் ஒளவை. இதில் பாதச் சிலம்பு பாடும் பல்லிசை என்பது அதிர்வலைகளால் தோன்றிய உலகத்தைக் குறிக்கிறது. நம்முடைய வேதங்களை’சப்தப் ப்ரமாணம்’ என்றே சொல்கிறோம். சப்தத்திலிருந்து தூய மாயை, இயல்பு மாயை, இரண்டும் கலந்த மாயை என்ற மூன்றும் தோன்றித்தான் புவி அமைந்தது, புவனமும் அமைந்தது. ‘பெரு வெடிப்பு’ என அறிவியலாளர்கள்  ஓசை அதிர்வலைகளைக் கொண்டு உலகின் தோற்றத்தைக் கணக்கிடுகிறார்கள்.’லிகோ’ செய்து கொண்டிருப்பது அதுதான். குளிர்ந்த சந்தனப் பூம்பாதங்கள் – தீ குளிர்ந்து இவ்வகிலம் நுண்ணிய அலைகளால் உண்டானதை மட்டும் குறிக்கவில்லை; நம் உடலின் நரம்புகள் சென்றடையும் முடிவையும் அவைகள் பூமியிலிருந்து எதிர்மின்ணணு ஆற்றலைப் பெற்றுக்கொள்ளும் தன்மையையும் சொல்கின்றன. கால்களில் திறன் மையங்கள் இருப்பதை அறிவியல் ஒத்துக் கொள்கிறது. பாதங்கள் நேரே பூமியில் படும் பொழுது ஆற்றல் மையங்கள் சார்ஜ் ஆகின்றன.
‘பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்’ உடல் பருமனாக இருப்பவர்களைப் பார்த்து சிரிக்காதவர்கள் குறைவே; அவ்வடிவினரான கணபதியை வணங்கும் தெய்வமெனச் செய்து பல வடிவங்களை ஏற்கச் செய்த நம் வழிபாட்டு முறை உளவியல் சார்ந்தது.பானை வடிவம் உலகத்தின் உருவத்தை, அதாவது உருண்டை என்பதையும், பேரண்டங்கள் கொண்ட பெரும் வயிறெனவும் சுட்டுகிறது. அறிவியல் போராடி நிறுவிய உண்மை இது.
‘பெரும் பாரக் கோடு’உறுதி மிக்க ஒற்றைத் தந்தம்.வலது பக்கம் தந்தம் குறைந்தும், இடதில் எழும் பிறை நிலவெனவும் அவன் ஆண்- பெண்ணென ஒன்றேயாகத் தோற்றம் தருகிறான் என்கிறது யோக நூல். இருபத்தி மூன்று ‘க்ரோமோசோம்களில்  இருபத்தியிரண்டில் ஆணிற்கும், பெண்ணிற்கும் ‘எக்ஸ், எக்ஸ் என்றுதான் அமைகிறது. ஒன்று மட்டும் ‘எக்ஸ்’வொய் என ஆனால் கரு ஆண் சிசுவாகிறது என்கிறது அறிவியல்.
கீழே இணைத்துள்ள பேரா தைராய்டின் அறிவியல் படத்தினை கவனிக்கவும். ‘வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்’. இந்த முகம் காட்டும் குறியீடுகள் பல-கம்பீரம், ஞானம். அதில் சித்தம் கனிந்து செந்தூரமாய்த் திகழ்கிறது.மனிதன் கையால் எடுத்து பின்னர் வாய்க்குள் இட்டு உண்பதைப் போல்,யானையும் தும்பிக்கையால் எடுத்து பின்னர் வாய்க்குள் செலுத்தும். இப்படி உணவு உண்ணும் முறையை ஏனைய உயிர்களிடத்தில் காண இயலாது.

அதைப் போலவே முத்து, கடலில் சிப்பியில் விளையும் என்றே அறிந்திருக்கிறோம்.அது மூவிடங்களில் விளையும்- சிப்பி, மூங்கில் மற்றும் யானையின் மத்தகத்தில், அதாவது, கும்பத்தில்.ஒன்பது இரத்தினங்களில் முத்து ஒன்றே குளிர்ச்சி தரும். ’Pineal glands’- இந்த நாளமில்லாச் சுரப்பி உடலின் குருதிக்கொதிப்பை சமன் படுத்துகிறது. அதை யோகம் மூன்றாம் கண் எனக் கூறுகிறது
‘அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடி கொண்ட நீல மேனியும்’
எழுத்தாணி (சிருஷ்டி) மோதகம் (காத்தல்)அங்குசம்(அழித்தல்) பாசம் (மறைத்தல்) அமுதகலசம்(அருளல்)இவை அவரது ஐந்து கரங்கள்.
யோகம் சொல்கிறது- 36 கருவிகளுடன் இன்பங்கள் அனுபவிக்கப் படுகின்றன,(படைப்பு) கனவில் இதைக் காண்பது ஸ்வப்னம்(கனவு),கனவும் நினைவுமென நிழலெனத் தோன்றிமறைவது (சம்ஹாரம்)உயிர்வாயுவை கட்டுக்குள் நிறுத்துவது துரியம், ஒரு கருவியும் இல்லாமல் அறிவின்மை நீங்கி அருளில் அமிழ்வது ஆனந்தம்.உடலின் செயல்பாடுகள், மனம் மற்றும் மூளையின் செயல்பாடுகள்,மூச்சுப் பைகளை  தூயக் காற்றால் நிரப்பி நிறுத்துவது என்பவை அறிவியலும் காட்டும் உண்மைகள்.
‘நான்ற வாயும், நாலிரு புயமும்’. யானைக்கு மட்டும்தான் வாயை மூடிக்கொண்டு தும்பிக்கை இருக்கிறது; மனிதர்களுக்கு உதடுகள் வெளிப்புறத்தில் அமைந்து வாயை மூட உதவுகிறது.கீழ் நோக்கித் தொங்கும் வாயால் மௌனமே பெரும் பேறு எனக் காட்டுகிறது.அறிவியல் இதன் அதிசயத்தை இன்றுவரை உணரவில்லை.மௌனம் சொல்லும் வேதமென யோகம் இதை வகைப்படுத்துகிறது.’pituitary body’’ மூளையில் அமைந்துள்ளதை, அதன் கட்டுப்பாட்டுத் திறத்தை ஒளவை மும்மதச் சுவடாகச் சொல்கிறார்.விழைவு, ஆற்றல், செயல் இதற்கு ’pituitary body’யின் தயவு தேவை என அறிவியலும் சொல்கிறது
மனிதர்கள் தங்கள் காதுகளை தன்னிச்சையாக அசைக்க முடியுமா?யானைகளுக்கும், மாடுகளுக்கும் மட்டுமே முடியும். அதிலும் மாடுகள் காதுகளை எப்போதும் அசைத்துக் கொண்டே இருக்காது.முறம் போன்ற காதுகள், கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளுகின்றன. இது சாரூபத்தை அளிப்பதாக யோக நூல் சொல்கிறது.அசையாத காதுகள் ஆயுள் முழுதும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்றும் பிற உறுப்புகளில் தேய்மானம்தான் நிகழ்கிறது என்றும் அறிவியல் சொல்கிறது.
‘சொற்பதம் கடந்த துரிய மெய்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே’
யோகம் ஐந்து நிலைகளை இவ்வாறு குறிப்பிடுகிறது- விழிப்பு நிலை,கனவு நிலை,ஆழ் நிலை,உள் ஆழ் நிலை,மற்றும்அருள் நிலை.
மன நிலைகளையும், துயில் மற்றும்மூளைச் செயல்பாட்டு நிலைகளையும் அறிவியலும் இவ்வாறே அணுகுகிறது.மனதை மூச்சின் மூலம் அறியவும், அதை ஆவணப்படுத்தவும், ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்தவும் அறிவியல் இதன் மூலமாகவே செல்கிறது. எடுத்துக்காட்டு சோதனை முயற்சிகளில் மூச்சுப் பயிற்சியும், தியான முறையும் ஒரு குழுவிற்கு பயிற்றுவிக்கப் பட்டு அதன் முடிவுகள் பதியப்பட்டன.அந்த குழுவில் இருந்தோரின் உயர் இரத்த அழுத்தம் சமனிலையை அடைந்தது. மற்றொரு குழுவில் வழக்கிலுள்ள மருந்துகள் பயன் படுத்தப்பட்டன. வியத்தகு மாற்றம் ஏதுமில்லை. மனதானது மூச்சில் நின்று நிரைந்து சித்தம் அருள் உணர்வில் ஒன்றி நிற்கும் துரியமும், மெய்யறிவும் தான் ஒளவையும் சொல்வது.
அப்பர் திருத்தாண்டகத்தில்

“நற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி
நலஞ்சுடரே நால் வேதத்தப்பால்
நின்ற சொற்பதத்தார் சொற்பதமும்
கடந்து நின்றசொலற்கரிய
சூழலாய் இது உன் தன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சம் தன்னுள்
நிலவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே!யானுன்னை விடுவேனல்லேன்!
கனக மாமணி நிறத்தென் கடவுளானே”

அவ்வளவு பெரிய உருவத்திற்கு சின்னஞ்சிறு மூஞ்சூறு எப்படி வாகனமாக இருக்கிறது? இதுவும் ஒரு குறியீடே!குண்டலினிக் கனல் குறுகுறுவென்று மேலேறிப் படர்வதை இது குறிக்கிறது.யோக நெறியின் படி ஓங்கார ஐந்தெழுத்து மூலாதாரத்தில் தோன்றி, ஸ்வாதிஷ்டானம்,மணிபூரகம் (நாபி), அனாகதம்(இதயம்), விஷுத்தி(கழுத்து), புருவ மத்தி(ஆக்ஞா) என்ற சக்கர நிலைகளிலே சுஷூம்ணா நாடி வழியே செயல் படுகிறது. இவை நம்முடைய முக்கியமான ஏழு சக்கரங்களையும் நாளமில்லாச் சுரப்பிகளையும், அதன் செயல் பாடுகளையும் சுட்டுகின்றன. இந்த ஆறு ஆதாரங்களும்(சகஸ்ராதாரம் மிக மேம்பட்ட நிலை என்பதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை) வீணைத்தண்டின் அடியிலிருந்து செங்குத்தாக நட்டு வைத்த அங்குசம் போல் புருவங்களின் மத்திவரை ஆங்காங்கே இருக்கின்றன. இந்த ஆறையும் சுஷூம்ணா இணைத்துக் கொண்டிருக்கிறது.உயிர்ச் சுருளும் அதனுள் பொதிந்திருக்கும் கருச் செய்திகளும், உயிரை உயிரினங்கள் உண்டாக்குவதையும்,அதன் வெளிப்படையான செயல் கருவிகளும், உள்ளே அவற்றை இயக்கும் செயல் ஊக்கிகளும்,அவற்றைச் சீராக்க செலுத்தப்படவேண்டிய உயிர்வாயு போன்றவற்றைப் பற்றியும் அறிவியல் பேசுகிறது; அதற்கும் அப்பால் ஆன்மீகம் சொல்கிறது.
ஒளவை சொல்கிறார், ‘இடை பிங்கலையின் எழுத்தறிவித்துக், கடையிற்சுழுமுனை கபாலமும் காட்டி, மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி, குண்டலி கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலை காலால்(காற்று) எழுப்பும் கருத்தறிவித்தே..’
மூன்று நாடிகள்- ஆதவன், சந்திரன், அக்னி.  ஆறு சக்கரங்கள் மூன்று மண்டலங்களாகப் பிரிந்திருக்கின்றன. மூலாதாரமும், ஸ்வாதிஷ்டானமும், அக்னி மண்டலத்தில் வருகின்றன; மணிபூரகமும், அனாஹதமும், சூர்ய மண்டலத்திலும், விஷுத்தியும், ஆக்ஞாவும், சந்திர மண்டலத்திலும் வருகின்றன.மூலாதாரத்தில் உள்ள குண்டலினி, இதயத்தில் உள்ள சூரிய மண்டலத்தில் ஊடுருவிச் சென்று, அதற்கு மேல் உள்ள சந்திர மண்டலத்தை அடைந்து அங்கு இருந்து கொண்டு உடலிலுள்ள 72000 நாடிகளிலும் உயிர்ப்பைச் செலுத்தி தன்னுடைய இடமான மூலாதார சக்கரத்திற்கு வந்து பாம்பு போல் சுருட்டி படுத்து தொங்கிக்கொண்டிருக்கிறது. Supra Renal Glands to Pituitary என்று இதைத்தான் அறிவியலும் சொல்கிறது.உயிர் மூலக் கூறு, அதில் பதியப்பட்டுள்ள செய்தி, வயிற்றில் சுரக்கும் அமிலம், உணவைப் பெற்று பல்வேறு சுரப்பிகளின் துணையோடு உடல் முழுதும் அது அளிக்கும் ஆற்றல், சுவாசப் பைகள் விரிந்து நிறைந்து அவை பெற்றுத்தரும் உயிர் வாயு, அதனால் மாசகற்றப்படும் குருதி, உள்ளத்தின் சமன் நிலை உயிரை ஓம்புதலும், உயிரின் சமச் சீர் உள்ளத்தை ஓம்புவதும் நடக்கிறது.

‘அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி’

மூலாதாரத்திலிருந்து இரண்டு விரல் அளவிற்கு மேல் நான்கு கோணம் (சதுரம்) அதன் நடுவே ஒரு முக்கோணம். நாலிதழ் தாமரை அங்குள்ளதென யோகம் சொல்கிறது. அதையே அக்னி மண்டலம்  என்கிறோம்.நாபிக்கு நான்கு விரல் அளவிற்கு மேல் இதயம் அமைந்துள்ள இருப்பிடத்தில் ஒரு அறு கோணம். அதனுள் எட்டு இதழ் கொண்ட தாமரை – இது சூர்ய மண்டலம். தலையின் நடுவே அமுதம் பொழியும் சந்திர மண்டலம்.
இங்கே அறிவியல் சொல்லும் ஒரு செய்தியை ஆங்கிலத்தில் பார்ப்போம்
Suprarenal glands-Two small flattened bodies of yellowish colour, situated at the back part of abdomen behind the peritoneum and immediately above and in front of the upper end of each kidney. The right one is somewhat triangular and the left is more semi lunar.That triangular one’s base is directed downwards.

‘இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகமாக இனிதெனக் கருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி’

ஆறு ஆதாரங்களில் நடுவிலிருந்து செயல்படும் சக்கரம்; உடற்கூறு இதை உறுதி செய்கிறது.16 கலைகளுடன் அது இருக்கும் நிலையினையும், வெவ்வேறு உறுப்புகளின் ஒருங்கிணைந்த செயல் முறைகளையும், அவை வெளிப்பாடான செயல்களாகவும்(பேசுதல் முதலானவை)  உள்ளே நடப்பவைகளாகவும்(எண்ணம்) திகழ்கின்றன.
‘சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி,’ ஒலியின் அதிர்வலைகளால் உண்டான அகிலம் சித்தத்தின் உள்ளே காட்சி அளிப்பதை எத்தனை நுண்மையாகச் சொல்கிறார்!
யோக நூல் மட்டுமன்றி உடல் மற்றும் உளவியல் நூலாக இதைப் பயில வேண்டும். இதனுள் பொதிந்து கிடக்கும் பொருளை அறிவது அத்தனை சுலபமல்ல.ஆனாலும், உடல் நலத்தையும், உள நலத்தையும் பேணுவதற்கு அகவல் ஒரு அருமருந்து. வாய்விட்டுப் படித்து மனத்தினில் நினைக்க ஆயிரம் தாமரை மலரும்.
‘தத்துவ நிலையைத் தந்தென்னை ஆண்ட வித்தக வினாயகா விரை கழல் சரணே!’
சித்தர்கள் யோக நெறி உடல் மற்றும் உயிர் ஓம்புவதைப் பேணுகிறது. ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்று சொல்கிறது. வெளித் தோன்றும் உடலையும், அக உடலையும் அவதானித்து அது சொல்லும் செய்திகள் இன்னமும் தெளிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டால் அழிவின்றி ஆக்கம் கூடலாம்.
 

வரைபடம் 2 – ஆறு சக்கரங்கள்
உசாத்துணை
1. விநாயகர் அகவல்
2. படங்கள்: https://theodora.com/anatomy; https://mahaperiyavaa.files மற்றும் இஷா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.