வெற்றிட நிலைகள்

…வெற்றிட நிலை என்பது க்ஷணம் தோன்றி மறையும் நிலையில் இருக்கையில், உக்கிரமான அலைப்புகளுக்கு ஆளாகும் பல துகள்களை நிச்சயமாகக் கொண்டிருக்க வேண்டும். … வெற்றிடத்தின் மொத்த சக்தி என்பது எல்லையற்றது (முடிவிலி)….

— பி. ஏ. எம். டிராக், “க்வாண்டம் மெகானிக்ஸ்”
 
நீங்கள் கதவைத் தயக்கத்தோடு திறக்கிறீர்கள், பிறகு இரண்டு அறிவியலாளர்கள் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அந்த சோதனைக்கூடத்துக்குள் நுழைந்து நடக்கிறீர்கள். அவர்களுக்கு உங்களைத் தெரியும் போல இருக்கிறது. ஒருக்கால் நீங்கள் ஒரு அறிவியல் எழுத்தாளர், மிக அரிதானவையும், சிலருக்கே புரியக் கூடியவையுமான அறிவியல் கண்டு பிடிப்புகளைக் கூட அவை குறித்து ஒரு உற்சாகத் துடிப்போடு விவரித்து எழுதக் கூடிய திறமையுள்ளவர் என்று அறியப்பட்டவரோ என்னவோ. அல்லது நீங்கள் ஒரு நண்பர் மாத்திரமோ, அல்லது இருவரையும் வெகு காலம் முன்பிருந்தே அறிந்தவரோ. எதானாலும் அவை இப்போது ஒரு பொருட்டல்ல.
மூத்தவரான அறிவியலாளர் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். அந்தப் பெண்மணி உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளர், அப் பெருமைக்கு முழுத் தகுதியும் அவருக்கு உண்டு, தனக்கு முந்தைய இயற்பியலாளர்கள் பலரின் உலகப் பார்வைகளைச் சுலபமாகவே தகர்த்து விட்டு, தன் கருத்துப்படி எது அழகானதோ அதற்கேற்ப பேரண்டம் குறித்த கருத்துகளை மறு நிர்மாணம் செய்தவர். வயதான பிறகு, அவர் ஜாக்கிரதையுணர்வு கூடியவராகவும், முன்போல ஊக விசாரங்களுக்கு அத்தனை இடம் கொடாதவராகவும் ஆகி விட்டார் என்று சிலர் இப்போது சொல்கிறார்கள். அவருடைய முடி குட்டையாக வெட்டப்பட்டுள்ளது, இப்போதுதான் நரைக்கத் துவங்கி இருக்கிறது. அவரை ஸீலியா என்று அழையுங்கள். வேறென்னவாக அவர் இருந்தாலும், அவர் ஒரு நண்பர். உங்களுக்கிடையில் பதவி ஸ்தானங்களும், மரியாதை கலந்த விளிப்புகளும் அவசியம் இல்லை.

இளைய அறிவியலாளரோ, இப்போதுதான் படித்து முடித்துப் பட்டம் வாங்கியவர் போல இருக்கிறார், தொற்றிக் கொள்ளும் உற்சாகத்துடனும், எல்லையில்லாத ஊக்கத்தோடும் உள்ளவர்; பீடங்களைத் தகர்க்கப் புதிதாகக் கிளம்பியிருப்பவர், அறிவுலகக் கோட்டையின் புறக்கதவுகளை இடிக்க வந்திருக்கும் நாகரீகமடையாத ஆள், ஏற்கனவே ஐன்ஷ்டைனோடும், டிராக்குடனும் ஒப்பிட்டுப் பேசப்படுபவர். ஒருக்கால் இவர் உயரமாக, எலும்பு மனிதன் போல ஒல்லியாக, படிய மறுக்கும் கருப்புத் தலை முடியோடு, சாம்பல் நிறத்தில் ஷ்ரொடிங்கரின் பூனையின் கார்ட்டூன் படம் ஒன்றை அச்சிட்ட மேலங்கி போன்ற சட்டையோடு காணப்படலாம். அல்லது அவர் ஒரு மூன்று உடுப்பு சூட் அணிந்திருக்கிறாரோ என்னவோ; சூழலோடு அதன் பொருத்தமின்மை அவரது நகைச்சுவை உணர்வுக்கு ஏற்றதாக இருக்கலாம்.
அவர்கள் இருவரும் முதல் முறையாகச் சந்தித்தபோது நீங்கள் அங்கே இருந்தீர்கள். ஒருவேளை நீங்கள்தான் அவர்களை அறிமுகப்படுத்தியவராகவும் இருக்கலாம், அதில் பொறிபறக்கும் என்று எதிர்பார்த்தும் இருக்கலாம். அப்படியானால், நீங்கள் ஏமாற்றத்தையே அடைந்தீர்கள், ஏனெனில் அவர்களுடைய உரையாடல் துரிதமாக இன்னொரு மொழிக்குத் தாவி விட்டது, ஹில்பர்ட் வெளிகளும், காண்ட்ராவேரியண்ட் டிரைவேடிவ்களும் கொண்ட மொழிக்குப் போயிருந்தது. ஒரு வேளை சாதாரண மொழி துவங்குமுன், அனைத்து உலகையும் துவக்கிய சொல் உச்சரிக்கப்படுமுன், இந்த மொழிதான் அந்தச் சொல்லுக்குப் பின்னிருந்த மொழியோ என்று நீங்கள் யோசிக்கிறீர்கள்.
ஆனால் பொறிகள் பறக்கவே செய்தன, உங்களால் மட்டும் பார்க்க முடிந்திருக்கக் கூடாதா? ஒரு பொறியிலிருந்து தீயும் பற்றிப் பரவியிருந்தது.

~oOo~

“எவ்வளவு சுருக்க வர முடியுமோ,” நீங்கள் சொல்கிறீர்கள், “அத்தனை சீக்கிரமாக நான் வந்தேன்.”
இளைய அறிவியலாளர்- அவர் பெயர் என்ன, டேவிட்டா? – உங்கள் கையைப் பற்றி, சக்தியோடு குலுக்குகிறார். “ஆமா, ஆமா, ஆமாம்,” அவர் சொல்கிறார், “நீங்கள் வருவீர்களென்று எனக்குத் தெரியும். இப்போது நீங்கள் ஏதோ பார்க்கத் தயாராக வந்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன், அதான்  ..,” அவர் சிரிப்போடு கேட்கிறார், “உலகத்தையே அதிர வைக்கப் போகிற ஒன்றை?”
“உங்களுக்கு கட்ஸைப் (GUTs) பற்றி என்ன தெரியும்?” மூத்தவரான அறிவியலாளர் கேட்கிறார்.
“ஓ, ஆமாம்,” நீங்கள் பேசுகிறீர்கள், டேவிட்தானே அவர் பெயர், அந்த அறிவியலாளரிடம் சொல்கிறீர்கள், “கட்ஸா? (GUTs?) க்ராண்ட் யூனிஃபிகேஷன் தியரிஸ் தானே? மிகக் குறைந்த பட்சம்தான் தெரியும்.” இன்னொருவரிடம் சொல்கிறீர்கள்.
“ஆனால் க்வாண்டம் வெற்றிடம் என்பது சக்தி நிரம்பிய வெளி என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே?” அந்தப் பெண் அறிவியலாளர் கேட்கிறார், பேச்சில் சிறிது பிரிட்டிஷ் உச்சரிப்பு தொனிக்கிறது. “க்வாண்டம் விசையியல் கோட்பாட்டின் வழியே, வெற்று வெளியில் கூட பெரும் “ஜீரோ பாயிண்ட் எனெர்ஜி” இருக்கிறது என்பது தெரியுமில்லையா?”
“மெய் நிகர் துகள்களால் உயிர்ப்போடு இருக்கிறது அது,” இளம் விஞ்ஞானி குறுக்கிடுகிறார், “படைப்பின் சக்தியால் நிரம்பி வழிகிறது; ஹைஸன்பர்க் எல்லைக்குக் கீழே தொடர்ந்து பொங்கியபடியும், கொதித்தபடியும், படைப்புக்கும், அழிப்புக்கும் இயல்பான முடிவில்லாத, எல்லையற்ற, எண்ணற்ற நடனத்தைச் செயதபடி.”
“சரிதான்,” என்கிறீர்கள் நீங்கள், நிதானமாக. க்வாண்டம் மெகானிக்ஸைப் புரிந்து கொள்ள முன்பு முயன்றிருக்கிறீர்கள் நீங்கள். ஆனால் எப்படியோ, அதன் முக்கியமான சாரம் உங்களுக்கு எட்டாமல் போய் விட்டிருக்கிறது. “ஆனால், அது நிஜமான சக்தி இல்லை, அப்படித்தானே?”
“அதேதான்,” என்கிறார் அந்தப் பெண் அறிவியலாளர், “மிகவும் மதிப்பைப் பெற்றுள்ள” எப்படியோ அந்த அடைமொழியை அருவருப்பான ஒன்று எனத் தோன்றச் செய்கிறார் அவர், “இயற்பியலாளர்கள் உங்களிடம் சொல்வார்கள், ஜீரோ-புள்ளி சக்தி என்பது கணித நடைமுறையால் உருவான ஒரு தோற்றம், வடிவியலின் ஒரு சில்லு என்பார்கள்.”
“அப்படித்தான் வழக்கமான அறிவு சொல்லும்,” என்றார் இளைஞர், “ஆனால் அது இருக்கத்தான் செய்கிறது, என்ன மாற்றுக் கருத்து இருந்தாலும்.”
“ஒருக்கால்,” அந்தப் பெண் அறிவியலாளர் உணர்ச்சியற்ற குரலில் சொன்னார், “நீங்கள் அவருக்கு அந்தக் கருவியைக் காட்ட வேண்டி இருக்கும்.”
“ஆமாம், நிச்சயமாக. இப்படி வாங்க,” அந்த இளைஞர் திரும்பி, ஒரு குதி நடையோடு அந்த அறையின் ஊடாகப் போகிறார், நீங்கள் பின்னால் தொடர்ந்து வருகிறீர்களா என்று பார்க்கக் கூட இல்லை. நீங்கள் அவரைப் பின் தொடர்ந்து, அடுத்துள்ள அறைக்குப் போகிறீர்கள், அங்கே சிக்கலான, சோதனைகளுக்கான பெரிய கருவி ஒன்று, அங்கு இருக்கிற இடத்தில் பெரும்பகுதியை நிரப்பிக்கொண்டு, இருக்கிறது.  “இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
நீங்கள் ஒன்றை ஒத்துக் கொள்ளத் தயாராக இல்லை, அதாவது உங்களுக்கு எல்லா இயற்பியல் சோதனைகளும் ஒரே போலத்தான் தெரிகின்றன. பளபளப்பான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உருளை ஒன்று, திரவ வடிவில் உள்ள நைட்ரஜனும், ஹீலியமும் சேமிக்கப்பட்ட பெரிய தொட்டிகள், சாரி சாரியாக அடுக்கப்பட்ட டிஜிடல் மீட்டர்கள், ஒன்றிரண்டு ஆஸிலோஸ்கோப்கள், எங்கு பார்த்தாலும் ஓடும் பளீரென்ற வண்ணம் கொண்ட கம்பிகள் (ஒயர்கள்) மற்றும் அவை இணைக்கப்பட்டுள்ள தவிர்க்கவியலாத கணினிகள் எதிரே இருக்கும். “மிக அழகாக இருக்கிறது,” நீங்கள் சொல்கிறீர்கள், உங்களுக்கிருக்கும் சலிப்பை அவர் கண்டு பிடித்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன். எல்லாச் சோதனையாளர்களும் தங்கள் சோதனைச் சாலைக் கருவிகள் மிக அழகாக உள்ளன என்றுதான் நினைக்கிறார்கள்.  “இது என்ன?”
“வெற்றிடத்திலிருந்து சக்தியை எடுக்கும் ஒரு கருவி,” என்கிறார் அந்தப் பெண் இயற்பியலாளர்.
“என்னது?”
“முடிவில்லாத சக்திக்கான மூலாதாரம்,” என்கிறார் இளைஞர். “தொப்பியிலிருந்து தன்னைத் தானே எடுத்துக் காட்டும் முயல். வெளிச் சக்தியேதும் இல்லாமல், நிற்காமல் எப்போதும் இயங்கும் எந்திரம், அப்படி நீங்கள் கருத விரும்பினால்.”
“ஓ.” நீங்கள் இதன் மீது மதிப்பு கொண்டு விடுகிறீர்கள். “இது வேலை செய்கிறதா?”
இரண்டு அறிவியலாளர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். டேவிட் பெருமூச்சு விடுகிறார். “நாங்கள் இன்னும் இதைச் சோதிக்கவில்லை.”
“ஏனில்லை?”
“ஒரு கேள்வியில் எங்களுக்குள் உடன்பாடு இல்லை, ஆகவே நாங்கள் உங்களுடைய அபிப்பிராயம் என்ன என்று கேட்க விரும்பினோம்,” ஸீலியா, மெள்ளச் சொல்கிறார். ஒரு நிமிடம் நீங்கள் இது ஏதோ நகைச்சுவை என்று நினைக்கிறீர்கள்; அவர்களால் விடை காண முடியாத ஒரு கேள்விக்கு உங்களுக்கு விடை சொல்ல முடியும் என்பது ஒருக்காலும் நடக்க முடியாதது. பிறகு அது அத்தனை நகைச்சுவையுள்ளதாகத் தெரிவதில்லை, பிறகு நகைச்சுவையாகவே இருக்கவில்லை. அதனால் நீங்கள் மௌனமாகவே இருக்கிறீர்கள். “ஒரு தத்துவக் கேள்வி: நாம் வெற்றிடத்திலிருந்து சக்தியை எடுத்தால் அங்கு நாம் மிச்சம் விட்டு வைப்பது என்ன?”
“எதுவும் இல்லை!” டேவிட் குறுக்கிடுகிறார், ஸீலியா முடிப்பதற்குக் காத்திருந்து அடுத்த வினாடியே. “அதுதான் வெற்றிடத்தின் சமச்சீர்மை. ஜீரோ-புள்ளி சக்தி என்பது முடிவற்றதாகையால், எத்தனை சக்தியை நாம் அங்கிருந்து உருவி எடுத்தாலும், அங்கு எஞ்சி இருப்பது முடிவற்ற சக்திதான்.”
“அப்படித்தான் வழமையான அறிதல் சொல்கிறது,” ஸீலியா சொல்கிறார் மென்மையாக. “ஆனால் இந்த முடிவிலி என்பது மறுபடி ஒழுங்காக்கப்பட்ட முடிவிலிதான், இப்போது முக்கியமானது சக்தியில் ஏற்பட்டுள்ள வேறுபாடு மட்டுமே. நாம் சக்தியை அங்கிருந்து எடுத்தால், எஞ்சி இருப்பது குறைவான சக்தியாகத்தான் இருக்க முடியும்.
“ஆகவே இப்படி நம்மால் அங்கிருந்து சக்தியை எடுக்க முடிந்தால், அது போலியான வெற்றிடமாகத்தான் இருக்க முடியும்.”
இந்த முடிவை அவர் சொல்கையில் அழுத்தம் கூட்டிச் சொல்கிறார், அதுதான் உலகிலேயே மிக முக்கியமான விஷயம் என்பது போல. “நிஜ வெற்றிடமா?” நீங்கள் சொல்கிறீர்கள். “பொய் வெற்றிடமா?”
“ஆம், சரியாகச் சொன்னீர்கள்,” ஸீலியா சொல்கிறார். “இது எளிமையானது. ஒரு “நிஜ வெற்றிடம்” என்பது வரையறுப்புப் படி காலியான வெளியின் மிகத் தாழ்நிலை சக்தி உள்ள இடம். அதற்குள் எதையாவது நீங்கள் இட்டீர்களானால்- ஞாபகமிருக்கட்டும், பருண்மைக்கு சக்தி உண்டு! – அங்கு சக்தி கூடித்தான் ஆக வேண்டும், இப்போது அது உண்மையான வெற்றிடம் இல்லை.”
குச்சிகுச்சியான கால்களும், வட்டமான இருக்கையும் கொண்டு, பார்த்தாலும் மனதில் நிற்காத இளம் பழுப்பு நிற வண்ணத்தில் வழ வழப்பான எனாமல் பூச்சுடன் இருக்கும் சோதனைக் கூட முக்காலி ஒன்றில் தொப்பென்று நீங்கள் உட்கார்கிறீர்கள். உங்கள் ஜீன்ஸின் ஊடாக அந்த முக்காலி உங்கள் பிருஷ்டத்தில் குளிர்ச்சியைப் பரப்புகிறது. உண்மையான வடக்கு எது என்று தீர்மானிக்க முடியாத துருவமானியின் ஊசியைப் போல ஆடியபடி, இருக்கையிலேயே அரைச் சுற்று சுற்றுகிறீர்கள், முன்னும் பின்னுமாக.
“அனைத்தொற்றுமைக் கோட்பாடு (க்ராண்ட் யூனிஃபைட் தியரி- GUT) சொல்வதன்படி பேரண்டத்தின் இளமைப் பிராயத்தில் அங்கிருந்த வெற்றிடம் முற்றிலும் பொருண்மையே இல்லாது இருந்தாலும், அதில் ஏராளமான சக்தி இருந்தது. அப்படிப்பட்ட ‘பொய்’ வெற்றிடம் இழிந்து இன்று நம் காலத்து ‘உண்மையான’ வெற்றிடமாக ஆகியுள்ள நடைமுறையை நாம் தன்போக்கில் சிதைவுண்ட சமச்சீர்மை என்று நாங்கள் அழைக்கிறோம்.”
இளம் இயற்பியலாளர் அங்கு உயர்ந்த அடுக்காக இருந்த கருவிகள் மீது இலேசான புன்சிரிப்புடன், சாய்ந்து கொண்டிருக்கிறார். விளக்கங்களை மூத்த இயற்பியலாளரே கொடுத்துக் கொண்டிருப்பதில் சம்மதமுள்ளவராகத் தெரிந்தார். பெண் இயற்பியலாளர் தன் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார். “நமக்கு அதிகம் நேரமில்லை, அதனால் நான் சொல்வதை கவனித்துப் பாருங்கள்.
“இங்கே ஓர் உதாரணம் இருக்கிறது. கச்சிதமான சுத்தம் உள்ள திரவ நிலைத் தண்ணீர் இருக்கும் ஒரு பீக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். நீருக்கு கச்சிதமான சமச்சீர்மை உள்ளது, அதனால் நீங்கள் தண்ணீரின் ஒரு மூலக்கூறிலிருந்து துவங்கினால், நீரின் இன்னொரு மூலக்கூறை (மாலிக்யூல்) வேறொரு திசையிலோ அல்லது வேறெந்தத் திசையிலுமோ காண்பதற்கு ஒரே விதமான வாய்ப்புதான் இருக்கும். இப்போது நீரைக் குளிர வையுங்கள். உறையும் புள்ளியைத் தாண்டிக் குளிர்வியுங்கள். அது நிஜமாகவே சுத்தமான நீராக இருந்தால், அது உறையாது. மாறாக அது சூபர் குளிர் நிலைக்குப் போகும். ஏனெனில் பனிக்கட்டிக்கு நீரை விடக் குறைவான சமச்சீர்மைத்தன்மைதான் உண்டு; எல்லாத் திசைகளும் ஒரே போல இராது. சிலது படிக அச்சு வாக்கில் இருக்கும், மற்றவை அப்படி இராது. கச்சிதமான சுத்தநிலைத் தண்ணீருக்கு எந்தத் திக்கையும் ’பரிவோடு’ தேர்வு செய்ய முடியாது என்பதால், படிகங்களை அந்தத் திக்கில் அமைக்க அதால் முடியாது. அதனால் படிக நிலையை அது அடைவதில்லை.
“இப்போது ஒரு மிகச்சிறு பனிக்கட்டியை அந்த நீரில் போடுங்கள். ஒரே ஒரு வித்து ஆன பனிக்கட்டி, எத்தனை சிறியது அது என்பது ஒரு பொருட்டே இல்லை, அவ்வளவுதான்! திடீரென மொத்த நீரும் படிக நிலைக்கு வந்து விடும். அப்படி மாறும் போக்கில் சக்தியை விடுவித்து விடும். வெடித்துப் படிகமாதல் என்று அதற்குப் பெயர்.
“அது சமச்சீர்மையை உடைத்தல்.
“இப்போது, சமச்சீர்மை என்பது முற்றிலும் காலியான இடவெளியிலும் உண்டு, அது அருவத் தன்மையை அதிகமாகவே கொண்டது என்ற போதும். பேரொற்றுமைக் கோட்பாட்டின் படி (GUT theory), அண்ட அளவுப் பெருவெடிப்பு (பிக் பேங்) என்பதே இத்தகைய சமச்சீர்மை நொறுக்கல்தான். துவக்கத்தில் பேரண்டம் நினைக்க முடியாதபடிக்குச் சிறியதாக இருந்தது, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உஷ்ணமாக இருந்தது, ஆனால் முற்றிலும் காலியாக இருந்தது. அனைத்தும் சூப்பர் சமச்சீராக இருந்தன, நான்கு சக்திகளும் ஒரே போல இருந்தன, எல்லாத் துகள்களும் ஒரே போல இருந்தன. பேரண்டம் உஷ்ணத்தை இழந்தது, பிறகு சூப்பர் குளிர்ச்சி நிலைக்கு வந்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு, சூப்பர் சமச்சீர் வெற்றிடம் நிஜமான வெற்றிடமாக இருக்கவில்லை, மாறாக போலி வெற்றிடமாக இருந்தது, நிலைச் சக்தி நிரம்பியதாக இருந்தது. எது படிகமாவதைத் தூண்டியது என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் திடீரென்று இது நிகழ்ந்தது, பேரண்டம் அதன் சக்தி குறைந்த நிலைகளில் ஒன்றுக்குள் விழுந்தது.
“ஏராளமான சக்தி விடுவிக்கப்பட்டது. அனைத்தும் அந்த வெடித்து மாறி தாழ்ந்த நிலைச் சக்தியுள்ள வெற்றிடத்துக்கு மாறிய நகர்விலிருந்துதான் உருவாக்கப்பட்டன.
“ஓ,” என்று சொல்கிறீர்கள், ஏனெனில் வேறெதையும் உம்மால் சிந்திக்க முடியவில்லை.
“சில நேரம் நான் அதைப் பற்றிச் சொப்பனம் காண்கிறேன்,” அந்தப் பெண் அறிவியலாளர் சொன்னார், “ஒருவேளை, பெருவெடிப்புக்கு முன்னால் பேரண்டத்தில் அறிவுள்ள ஜீவன்கள் இருந்தனவோ என்னவோ. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நாம் கற்பனை கூடச் செய்ய முடியாது. அவர்களின் உலகம் பெரும் திணிவும், உயர்ந்த உஷ்ணமும் கொண்டு, மிகச் சிறியதாக இருந்தது; அவர்களின் மொத்தப் பேரண்டமும் ஒரு ஊசியின் கூர்முனையை விடச் சிறிய புள்ளியாக இருந்திருக்க வேண்டும், அவர்கள், நமக்குச் சாத்தியமாகியிருக்கிற கால அளவைகளிலேயே மிகக் குறைந்த நேரத்திற்குள், நூறாயிரம் கோடி (1ட்ரில்லியன்) தலைமுறைகள் வாழ்ந்திருக்கக் கூடும். ஒரு வேளை அவர்களில் ஒருவர், தாம் வாழ்கிற வெற்றிடம் ஒரு போலி வெற்றிடம் என்று உணர்ந்திருக்கக் கூடும், அதனால் அந்த வெற்றிலிருந்து சக்தியை உருவாக்க முடியும் என்று புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஒரு வேளை ஒருவர் அதை முயன்றாரோ என்னவோ. ஒரு சிறு விதை, அது எத்தனை சிறிதாக இருந்தது என்பது ஒரு பொருட்டே இல்லை…..”
பெருவெடிப்புக்கு முன்பு இருந்த மிகச் சிறு அறிவியலாளர்களைக் கற்பனை செய்ய முயல்கையில், உங்கள் தலை சுற்றுகிறார்போல இருக்கிறது. அவர்கள் மிகச் சிறிதாக இருப்பார்கள், ஆனால் நகர்வது அத்தனை வேகமாக இருப்பதால் நமக்கு வெறும் மசமசப்பாகத்தான் தெரிவார்கள்.  மேலும் உஷ்ணமாக, மறக்காதீர்கள், மிக்க உஷ்ணமாக எல்லாமிருக்கும். நீங்கள் அதையெல்லாம் கற்பனை செய்வதை இயலாததாக விட்டு விடுகிறீர்கள், மறுபடியும் கேட்பதைத் தொடர்கிறீர்கள். அவர் கனசதுர சாத்திய நிலைகளைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார், பேரண்டத்தை குன்றின் உச்சியில் இருக்கும் ஒரு கோலி குண்டோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்- அந்தக் கோலி குண்டு குன்றின் உச்சியில் சரியாகப் பொருந்தி இருந்தால் எந்தப் பக்கம் உருண்டு வீழ்வது என்பது அதற்குத் தெரியாதென்கிறார்.
“இங்கே எழும் கேள்வி என்ன என்றால்,” அவர் தொடர்கிறார், “வெற்றிடத்திலிருந்து சக்தி எடுக்கப்பட முடியும் என்றால், அது ஏன் இயல்பாக நடப்பதில்லை, தானாக ஏன் நேர்வதில்லை? இதற்கு விடை என்னவாக இருக்க முடியுமென்றால், ஏதோ ஒரு சமச்சீர்மை அதைத் தடுக்கிறது. ஆனால், அந்தச் சமச்சீர்மை உடைக்கப்பட்டால்….
“பெருவெடிப்புக்குப் பிறகு, பேரண்டம் நிறைய குளிர்ந்து விட்டிருக்கிறது. ஒருக்கால் நமது வெற்றிடம் அந்த சக்தி நிறைந்த நிலையிலேயே மிகக் குறைவான நிலையிலிருந்து குளிர்ந்த ஒன்றாக இருக்கலாம். சமச்சீர்மை நிலை உடைந்தால், வெற்றிடத்தின் அனைத்து சக்தியும் உடனே விடுவிக்கப்பட்டு விடும். அத்தோடு எல்லாம் முடிந்து விடும், நம் பூமியின் முடிவு மட்டுமல்லாமல், நமக்குத் தெரிந்த அளவுள்ள பேரண்டமுமே முடிவுக்கு வந்து விடும்.
“இங்கே டேவிடோ, குறிப்பாக அதையேதான் செய்ய வேண்டும் என்கிறார்.”
“இப்போதுள்ள நிலையைப் பார்த்தால், அவருடைய கவலைகளுக்கு தேவை ஏதும் இல்லை,” டேவிட் சொல்கிறார். “பேரண்டத்தில் அப்படி ஒரு மாறுதலைத் தூண்டக் கூடிய சக்தியுள்ள பொருட்கள் ஏராளமாக உள்ளன. க்வேஸார்கள், கருந்துளைகள், ஸெய்ஃபெர்ட் அண்டங்கள் என்றிவை. அகிலம் ஒரு போலி வெற்றிடமாக இருந்திருந்தால், அது பல நூறு கோடி வருடங்களுக்கு முன்னரே அப்படி மாறிய நிலைக்குப் போயிருக்கும்.”
“நீங்கள் எப்போதாவது ஃபெர்மியின் புதிர் முரணைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?” ஸீலியா கேட்கிறார். “பேரண்டத்தில் எங்குமே அறிவுள்ள ஜீவன்களை நாம் ஒரு போதும் காணவில்லை, அது ஏன்? விடையை நான் உங்களுக்குத் தர முடியும். நம்மை விட நிறைய முன்னேறிய ஜீவராசிகள் இருந்தால், அவர்கள் ஏற்கனவே வெற்றிடத்திலிருந்து சக்தியை உறிஞ்சி எடுக்கும் ரகசியத்தைக் கண்டு பிடித்திருப்பார்கள்.  சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ அவர்கள் அதை முயலத்தான் போகிறார்கள், அப்போது, படார்! பேரண்டத்தின் முடிவுதான் அது. அப்போது அகிலம் இராது. ஒருக்கால் நாம்தான் முதலோ என்னவோ.”
நீங்கள் ஏதாவது சொல்வீர்கள் என்று அவர்கள் இருவரும் காத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள். நீங்களோ உங்கள் கால்களை காங்க்ரீட் தரையில் தேய்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் ஏன் உங்களைக் கூப்பிட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு விளங்கி விட்டது, ஆனால் என்ன சொல்வது என்று பீதியோடு நீங்கள் யோசிக்க முயன்று கொண்டிருக்கிறீர்கள். “ஆகவே, உங்களுக்கு இப்போது ஐயம் வந்து விட்டதா என்ன? நீங்கள் இந்த சோதனையைச் செய்யலாமா வேண்டாமா என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?”
“இல்லை,” டேவிட் சொல்கிறார், “நாங்கள் அந்தச் சோதனையை ஏற்கனவே துவங்கி விட்டோம்.” அங்குள்ள டிஜிடல் காட்டியை அவர் சுட்டுகிறார். “நீங்கள் கதவு தாண்டி நுழைந்த உடனே நான் அதைத் துவக்கி விட்டேன். இப்போது (காந்த) சக்தியின் புலம் நிர்மாணமாகிறது. அது பத்தாயிரம் டெஸ்லாக்களை எட்டியதும், மின்னோட்ட இயக்கி தானாகவே செயலுக்குத் தூண்டப்படும்.” நீங்கள் எல் ஈ டி காட்டியைப் பார்க்கிறீர்கள், ஒன்பது புள்ளி நான்கு, அது உற்சாகமூட்டும் செர்ரிப்பழச் சிவப்பு ஒளிர்தலோடு, உங்களுக்குத் தெரிவிக்கிறது.
“ஆனால்,” மற்றவர் சொல்கிறார்.
“ஆனால்?” நீங்கள் கேட்கிறீர்கள். டேவிட் உங்கள் கையைப் பற்றிக் கொள்கிறார், அதை ஒரு ஸ்விட்ச்சின் கைப்பிடியைச் சுற்றிப் பொருத்துகிறார், அது ஒரு பழைய மாதிரி கத்தி போலத் துண்டிக்கும் மாற்றி (ஸ்விட்ச்).  நீங்கள் உங்கள் மனதுள் அதை ‘ஃப்ராங்கென்ஸ்டைன் ஸ்விட்ச்’ என்று நினைத்துக் கொள்கிறீர்கள்.  கொஞ்ச நேரம் நீங்களே அந்த மன உளைச்சல் பீடித்த மருத்துவர் என்று பாவித்துக் கொள்கிறீர்கள், வாழ்வும் சாவும் உங்கள் சக்திக்கு அடங்கி விட்டிருக்கின்றன. நீங்கள் நிறையவே பழைய பயங்கர சினிமாக்களைப் பார்த்திருக்கிறீர்கள். “இது அந்த சோதனையை நிறுத்தி விடுமா?”
“அப்படி வைத்துக் கொள்ளலாம்,” டேவிட் சொல்கிறார்.
“நாங்கள் கண்டு பிடித்ததை வேறு யாரும் திரும்பச் செய்ய முடியும் என்பது பற்றி எங்களுக்கு ஐயம்தான் உண்டு,” ஸீலியா சொல்கிறார், “இப்படிச் சொல்வது பெருமை பீற்றிக் கொள்வது போலத் தெரியலாம், ஆனால் இதை அடையச் சில மிகவே எல்லை தாண்டிய அசாதாரணமான உள்ளூகங்கள் தேவைப்பட்டன- அதற்கு வழக்கத்தையும் விடக் கூடுதலான அதிர்ஷ்டமும் தேவைப்பட்டிருந்தது – இதுவோ மற்ற இயற்பியலாளர்கள் எவரும் தேடும் திக்குகளிலேயே இல்லை. வெற்றிடத்திலிருந்து சக்தியைப் பெறும் யோசனைச் சொல்லவில்லை-  அதை நிறைய பேர்கள் யோசித்திருக்கக் கூடும். நாங்கள் செய்யும் வழிமுறை, அதில்தான் சூட்சுமம் இருக்கிறது.”
“நான் இதில் உடன்படவில்லை. ஒரு நபர் என்ன கண்டு பிடிக்கிறாரோ, அது என்னதான் அசாதாரணமானதாக இருந்தாலும், அதை வேறொரு நபரால் பிரதி செய்து விட முடியும். ஒருக்கால் நிறைய காலத்துக்கு யாரும் அதைக் காண மாட்டார்களோ என்னவோ, ஒருவேளை நம் வாழ்நாளில் கண்டு பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் சீக்கிரமாகவோ அல்லது பின்னாளிலோ, அது நடக்கவே செய்யும்.”
ஸீலியா சிரிக்கிறார். “மறுபடியும், இங்கு தத்துவ வேறுபாடுதான் எழுகிறது. நான் அறிவியல் விளையாட்டில் செலவழித்துள்ள நீண்ட காலத்தில் எனக்குப் புலப்பட்டிருக்கிறது ஒன்று, அறிவியல் புத்தகங்கள் பாவனை செய்கிற மாதிரி எல்லாம் அறிவியல் இயங்குவதில்லை. அது ஒன்றும் வரைபடம் எழுதுவது போன்றதல்ல. நாம் வரைபடம் எழுதும்போதே அந்த நிலத்தையுமே படைக்கிறோம் என்றால் அது வேறு விஷயம். அறிவியலின் உருவே அதை முதலில் படைக்கும் அறிவியலாளர்களால்தான் ஏற்படுகிறது. நாமோ உருவகங்கள் மூலம்தான் யோசிக்கிறோம்; நாம் எதைப் பார்க்கத் தீர்மானிக்கிறோமோ அதையேதான் கண்டு பிடிக்கிறோம். இந்தக் கண்டு பிடிப்பை நாம் இப்போது விட்டு விட்டால், நம் வாழ்நாளில் இது மறுபடி கண்டுபிடிக்கப்படாது, அதற்குள் அறிவியலின் ஓட்டம் வேறெங்கோ போயிருக்கும்.”
“அது என்னவாக இருந்தாலும்,” டேவிட் சொல்கிறார், “எங்களுக்குக் கிட்டிய நிதி ஒதுக்கீட்டில் இந்தச் சோதனையை மறுபடி செய்யப் போதுமான நிதி இல்லை.
“நீங்கள் கையில் பிடித்திருக்கும் ஸ்விட்ச், உச்சநிலைக் காந்தங்களின் (சூபர்கண்டக்டிங் மாக்னெட்ஸ்) இணைப்பைத் துண்டிக்கும். சுருள்கள் மூலமாக ஆயிரம் ஆம்ப்கள் பாய்கின்றன இப்போது. காந்தத்தைத் தணித்தால், உச்ச நிலைக் கடத்திகள் (சூபர் கண்டக்டர்கள்) சூடாகும். திரும்ப சாதாரண உலோகமாக மாறத் துவங்கும். வேறு விதமாகச் சொன்னால், அவை இப்போது தடுப்பான்களாக (ரெஸிஸ்டர்கள்) மாறும். அத்தனை மின்சக்தியும்…. ஏகப்பட்ட உஷ்ணத்தை உருவாக்கும். அந்த மாற்றியை இழுங்கள், பத்து மிலியன் டாலர் பெறுமானமுள்ள கருவிகள் அப்படியே உருகி உலோகக் கழிவாக மாறிவிடும்.”
“ரொம்பக் கவலைப்படத் தேவையில்லை, பாருங்க,” ஸீலியா உற்சாகமாகச் சொல்கிறார். “அதென்ன மானிய நிதிப் பணம்தானே.”
திடீரென்று உங்கள் உதடுகள் உலர்ந்து விடுகின்றன. உங்கள் நாக்கு நுனியை அவற்றின் மீது ஓட்டுகிறீர்கள். “அப்ப, நான் என்ன செய்யணும்னு விரும்பறீங்க….”
“நாங்கள் இந்த மட்டிலும் உடன்பட்டிருக்கிறோம்,” ஸீலியா சொல்கிறார், என் மீது சலிப்பு ஏற்பட்டதைக் காட்டி. “நீங்கள் இந்தச் சோதனையை நிறுத்தினால், உங்கள் முடிவுக்கு ஒத்துக் கொள்வோம். நாங்கள் இதைப் பற்றி எதையும் பிரசுரிக்க மாட்டோம். ஒரு கோடி கூடக் காட்ட மாட்டோம்.”
“எதுக்கு என்னை இங்கே இழுக்கறீங்க?” நீங்கள் கேட்கிறீர்கள். “இன்னொரு நிபுணரை ஏன் கொண்டு வரல்லே?”
“நாங்கதானே நிபுணர்கள்,” டேவிட் சொல்கிறார். “எங்களுக்கு என்ன வேணும்னா, அது வெளியிலேருந்து ஒரு நபர், எந்த விதமான மனச் சாய்வும் இல்லாத நபர்.”
“யோசிக்காமப் பேசாதீங்க,” ஸீலியா உங்களிடம் சொல்கிறார். “இங்கே இருக்கிற விபரங்களைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு நபரை நாங்கள் வேண்டினோம். ஒரு கூட்டமா நிபுணர்களை இங்கே கூப்பிட்டால், அப்புறம் இந்தச் சோதனையை ரகசியமாக எங்களால் வைத்திருக்க முடியுமா என்ன?”
“அது தவிர,” டேவிட் இன்னும் சேர்க்கிறார், “கூட்டுக் குழுக்கள் எப்போதுமே பழமை வாதிகள். அவர்கள் என்ன சொல்வார்கள் என்பது நமக்குத் தெரியும்: பொறுத்திருங்கள், இன்னும் கொஞ்சம் இதை ஆராய்வோம் (என்பார்கள்). அட, பாழாப் போக, நாங்க இதை ஏற்கனவே நிறைய ஆராய்ஞ்சாச்சு. இப்ப இவங்க இதைப் பற்றி ஒரு கூட்டுக் குழுவோடு கலந்து பேசலாம்னு சொல்லி இருந்தாங்கன்னாக்க, ஒரு நாள் நடுராத்திரியில இங்கே சத்தம் போடாம நுழைஞ்சு, இதை நானே துவக்கி ஓட்டி இருப்பேன். இப்ப நீங்க என்ன முடிவு செய்தாலும், அதுதான் நிற்கும். ஒரு கசமுசாவும் இருக்காது. இரண்டாம் யோசனைகளே கிடையாது. இப்பவே இதை நடத்தப் போகிறோம், இல்லைன்னா, சுத்தமா விட்டு விடுவோம்.
“நான் சொல்றது சரியின்னா, “அவர் தொடர்கிறார், “அப்புறம் நட்சத்திர உலகமே நம்முடையதாகி விடும். மொத்த அகிலமே நம்முடையது. மானுட குலமே இறப்பில்லாததாகி விடும். சூரியன் எரிஞ்சு முடியும்போது, நாம் நமக்கான புது சூரியன்களை உருவாக்கிக் கொள்ளலாம். படைப்பின் அத்தனை சக்தியும் நம் விரல் நுனியிலேயே இருக்கும்.”
“ஒரு வேளை இவர் சொல்வது தப்பாக இருந்தால்,” ஸீலியா சொல்கிறார், “அப்ப அத்தோட எல்லாம் முடிஞ்சு போயிடும். நாம் மட்டும் அழிய மாட்டோம், அகிலமே அழியும்.”
“ஆனா நான் சொல்வதில் தவறேதும் இல்லை.”
“நீங்க தவறாகச் சொன்னால் நமக்கு ஒரு போதும் அது தெரியப் போவதில்லை. எப்படியானாலும் புரியப் போகிறதில்லை.”
“இருந்தாலும் நான் எல்லாத்தையும் பணயம் வைப்பேன். இதுதான் அகில அண்டத்துக்கும் சாவி போல. இப்படிப் பணயம் வைப்பது தகும். இது எந்த ஆபத்துக்கும் ஈடு கொடுக்கக் கூடியது.”
ஸீலியா உங்களைப் பார்க்கிறார்.  “அவ்வளவுதான். இப்ப உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்.”
டேவிட் ஒரு புருவத்தை உயர்த்துகிறார். “ஒரு பக்கம், முடிவில்லாதிருப்பது. இன்னொரு பக்கம் எல்லாமும் அழிவது.”
அவர் அந்த டிஜிடல் காட்டியைப் பார்க்கிறார். உங்கள் கண்கள் அதைத் தொடர்கின்றன. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், அது 9.8 இலிருந்து 9.9க்கு மாறுகிறது. மாற்றியின் (ஸ்விட்ச்) பிடி உங்கள் கையில் கதகதப்பாக இருக்கிறது, கொஞ்சம் வியர்வையின் வழுக்கலோடு. உங்கள் கையில் அது அதிர்வது போலக் கூடத் தெரிகிறது.
ஸீலியா உங்களைப் பார்க்கிறார். நீங்கள் டேவிட்டைப் பார்க்கிறீர்கள். அவர் மாற்றியை நோக்குகிறார். நீங்கள் ஸீலீயாவைப் பார்க்கிறீர்கள். இருவரும் உங்களைப் பார்க்கிறார்கள்.
“நீங்க சீக்கிரமே முடிவெடுக்கணும், பாருங்க,” மென்மையாக டேவிட் சொல்கிறார்.

~oOo~

இங்கிலிஷ் மூலக் கதையாசிரியர்: ஜெஃப்ரி  ஏ. லாண்டிஸ் (Geoffrey A. Landis)
தமிழாக்கம்: மைத்ரேயன்
1988 இல் வெளியான ‘வாக்குவம் ஸ்டேட்ஸ்’ என்ற மூலக் கதையை இங்கிலிஷில் எழுதிய ஜெஃப்ரி லாண்டிஸ் ஒரு அறிவியலாளர். ஹ்யூகோ பரிசை வென்றிருக்கிற அறிவியல் புனைவாளர். அறிவியலாளராக, இவர் நாஸாவில் பணி செய்திருக்கிறார். குறிப்பாக, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டு மிக்க புகழடைந்திருக்கிற மார்ஸ் ரோவர் என்ற தானியங்கி வண்டியைக் கட்டமைப்பதில் பங்கெடுத்திருக்கிறார். இவர் ஆஸிமாவின் அறிவியல் புனைவுப் பத்திரிகையில் பல கதைகளை வெளியிட்டிருக்கிறார். 1988 இல் ஒரு சிறுகதைக்கு நெபுலா பரிசை வென்றார். 1991 இல் ஒரு கதைக்கு ஹ்யூகோ பரிசு கிட்டியது. இவரது பல கதைகள், ஒரு தொகுப்பாக, ‘இம்பாக்ட் பாரமீட்டர் அண்ட் அதர் க்வாண்டம் ரியாலிடிஸ்’ என்ற புத்தகத்தில் 2001 இல் வெளி வந்திருக்கின்றன.
அயர்ன் ஏஞ்சல்ஸ்’ (2009) இல் வெளிவந்த ஒரு தொகுப்பு இவரது பல கதைகளின் சொல்லத் தக்க தொகுப்பு.
‘வாக்குவம் ஸ்டேட்ஸ்’ எனும் இந்தக் கதை 1988 இல் ஆஸிமாவ் அறிவியல் புனைவுப் பத்திரிகையில் வெளி வந்தது.
இதை ஜெஃப் மற்றும் ஆன் வாண்டர்மியர் தம்பதியினர் தொகுத்த ‘த பிக் புக் ஆஃப் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன்’ என்ற புத்தகத்திலிருந்து பெற்றோம். அது 2016 இல் விண்டாஜ் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட 1178 பக்கப் புத்தகம்!!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.