மொழியின் இயல்பு

மொழி

மொழியென்பது  (மிகவும் சரியாகச் சொல்வதென்றால் மனித மொழியென்பது) மனிதர்கள் பிறர் புரிந்து கொள்ள முடிகிற வகையில் வாய்வார்த்தைகளையும்  குரலோசைகளையும் அமைத்துக்கொள்ள ஏதுவாக்கும் இலக்கணம், விதிகள், மற்றும் தர நிர்ணயம் ஆகியவற்றின் தொகுப்பே என்கிறார், கொலம்பியா பல்கலையில் ஆங்கிலம் மற்றும் ஒப்பீடு இலக்கிய இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் மொழியியலாளர் ஜான் மக்வோர்டெர் (John Mc Whorter ). இதையே  கய் டோய்ச்செர் (Guy Duetscher ) என்னும் மொழியியலாளர் , “ மொழிகளின் உதயம் : மனித குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பை அறியும் பரிணாம வழிப்  பயணம்” என்னும் தன் ஆராய்ச்சிப் படைப்பில்  “ நம்மை மனிதராய் ஆக்குவது மொழியே” என்று வேறுவிதமாக குறிப்பிடுகிறார் . எனவே மொழியென்றால் என்னவென்று  அறிந்து கொள்ள,மொழியின் பூர்விகங்கள், பல நூற்றாண்டுகளின் ஊடாக அது கண்ட பரிணாம வளர்ச்சி மற்றும் மனிதகுல இருப்பிலும், உருவாக்கத்திலும் அதன்  முக்கிய பங்கு ஆகியவற்றைக் கொஞ்சமாவது அறிய வேண்டியது அவசியம் .

மாபெரும் கண்டுபிடிப்பு

மொழி மனித குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு எனக் கூறுகையில் , அது நிஜமாக    முறையாகக் கண்டுபிடிக்கப் படவில்லை என்ற கருத்தையும் ஏற்க வேண்டியிருப்பது அற்புதமான முரண்நகை. உண்மையில், இன்றைய பெரும் புகழ் பெற்ற  மொழியியலாளர்களான டோய்ச்செர் மற்றும் மக்வோர்ட்டர் இருவருமே மொழியின் உதயம் பற்றிய விவரங்கள் அனைத்தும் விவிலிய காலத்தில் இருந்தது போலவே இன்று வரை தொடர்ந்து மூடுமந்திரமாக இருந்து வருவதாகக் கூறி வருகிறார்கள். உண்மையில் இது குறித்து  விவிலியத்தின் மிகவும் முக்கியமான துயரக் கதையான பேபெல்லின் கோபுரம் (Tower of Babel ) சொல்வதை விடத் தகுதி மேம்பட்ட விளக்கம் தந்தவர் எவருமில்லை என்கிறார் டோய்ச்செர். அக்கால பூமி வாசிகள் கட்டடக் கலையில் திறமை பெற்று விட்டதையும், பண்டைய மெசபடோமியாவில்  (mesopotamia ) வானளாவிய வழிபாட்டுக் கோபுரம் (உண்மையில் அது ஒரு பெருநகர் கட்டுமானம் ) அமைக்க அவர்கள் முடிவு செய்து விட்டதையும் அறிந்த கடவுள், ஒரே மொழி பேசிவந்த அவர்களிடையே கருத்துப் பரிமாற்றத்தை முற்றிலும் தடுக்கவேண்டி ஒரே நொடியில் எண்ணற்ற மொழிகளை மனித இனத்தின் மீது திணித்தார் என்று விவிலியத்தின் இந்த நீதிக்கதை கூறுகிறது. (கருத்துப் பரிமாற்றம் நின்று போனால் கடவுளை மறுதலிக்கும்  பெரு நகர நிர்மாணம் கைவிடப் பட்டுவிடும் அல்லவா?)

 
இந்தக் கதை நம்பமுடியாததாக இருந்தாலும் அதன் உட்கருத்தை ஏற்கலாம் என்கிறார் டோய்ச்செர் . அவர் தெரிவித்த கருத்து :
“மனித மொழி திறமையுடன் வடிவமைக்கப் பட்டிருப்பது கண்கூடு . எனவே அதை   உயரிய தொழில் திறமை வாய்ந்தவனின் கச்சிதமான கைவண்ணமே உருவாக்கி இருக்க முடியும் என்பதைத்   தவிர வேறு கற்பனைக்கு இடமில்லை. சுமார் மூன்று டஜன் அற்ப ஒலித்துணுக்களை மட்டுமே பயன்படுத்தி  இக்கருவி(மொழி) எண்ணற்ற வார்த்தைகளை உருவாக்கும் அற்புதம் வேறு எப்படி சாத்தியமாகி இருக்கும்?
i ,f ,b ,v ,t ,d ,k ,g ,sh ,a ,e போன்ற எழுத்துக்களை உச்சரிக்கும் போது தெரியும் வாயின் வெளித்தோற்றங்கள் தனித்தன்மை கொண்டவையல்ல; சீரற்ற எச்சில் துப்பலின் போதும் , உணர்ச்சி மிகுதியில் எச்சில் தெறிக்க பேசுகையிலும் ,அர்த்தமற்றவிதமாக குரலோசை எழுப்பும் போதும் ஒலிப்பவை; அர்த்தமற்றவை; அவை சுயமாக எதையும் வெளிப்படுத்துவதுமில்லை; விளக்குவதுமில்லை.” 
இலக்கணம் சொல்லும் வழியில் இவற்றைப்  பிரத்யேகமான முறையில் அடுக்கி மொழி-இயந்திரத்தின் பற்சக்கரங்களில் செலுத்தினால் சட்டென்று மொழி நமக்குக் கிடைத்து விடுகிறது- அது மக்கள் குழுக்களில் உள்ளோர் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய, கருத்துத் தொடர்புக்குப்  பயன்பட்டு அதன் மூலம் அவர்களை வாழும் தகுதியுள்ள சமூகமாக செயல்பட வைக்கக் கூடிய மொழி. மனித குல இருப்பிலும் வளர்ச்சியிலும் முக்கிய பங்கேற்கும் மொழி.

சாம்ஸ்கியின் மொழியியல்

மொழியின்  புதிரான ஜனனம் பற்றிய அறிவு, மொழியின்  அர்த்தம் விளங்கிக் கொள்ள உதவாது. மொழியின்  அர்த்தம் விளங்கிக் கொள்ள மேலைச் சமூகத்தில் பெருங்கீர்த்தி பெற்றவராகவும், அதே அளவில் சர்ச்சைக்கு இலக்கானவராக இருந்துவரும் மொழியியலாளர் நோம் சாம்ஸ்கியை அணுகவேண்டும். மொழியியலின் உட்பிரிவான  மொழியறிதல் முழுவதற்கும் தன்  பெயர் சூட்டப்படும் அளவுக்கு நாடறிந்த அறிஞர் அவர். மொழியியலின் அஸ்திவாரத்தை அதிர வைத்த தொடரியல் அமைப்புகள்(Syntactic Structures)  (1957) மற்றும் தொடரியல் கோட்பாட்டுக் கூறுகள் (Aspects of Theory of Syntax ) (1965 ) ஆகிய படைப்புகள் மூலம் அவர் அறிமுகப் படுத்தி ஜனரஞ்சகமாக்கிய மொழியின் அடிப்படைக் கொள்கைகள், மொழி கற்கும் வழிகள் குறித்த கருத்தாக்கங்கள் அனைத்தும் சாம்ஸ்கியின் மொழியியல் என்ற பெயரில் மொழியியலின் பரந்த உட்பிரிவாகி இருக்கிறது.
அதனினும் மேலாக,  சாம்ஸ்கி 1976-ல் வெளியிட்ட “மொழியின் இயல்பு” என்னும் மிக உசிதமான ஆராய்ச்சிக் கட்டுரையே மொழி குறித்த விவாதங்களுக்கு மிகவும் பயனுக்குள்ளதாக அமைந்தது.  இதில் சாம்ஸ்கி “மொழியின் அர்த்தம்” என்ற கருத்தை நேரடியாகக் கையாண்ட விதம் பின்னாளில் வரப்போகும் டொய்ச்செர் மற்றும் மக்வோர்ட்டர் துணிவுரைகளை (assertions) முன்னுரைப்பதாக இருந்தது. 
“ பிந்திய அணுகுமுறையில், மரபணுவால் உறுதி செய்யப் படும்  மொழி நிபுணத்துவமே (language faculty), மொழியின் இயல்பைத்   (nature of language ) தெளிவாகக் காட்டுகிறது , இது மொழியின்  அறிவுப்பரப்பை (knowledge attained ) கிடைப்பிலுள்ள பட்டறிவுடன் (available experience) சம்பந்தப்படுத்தும்  செயல்பாடாகக் (function ) கருதப் படுகிறது. மொழியின் இலக்கணம் அறிவுப் பரப்பை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவோ அல்லது குறைந்த பட்சம் அம்மொழியின் அடிப்படை அம்சம் என்றோ கருதலாம். மொழி நிபுணத்துவம் என்பதை ஒரு நிலையான செயல்பாடாக, மனித இனத்தின் சிறப்புப் பண்பாக, மனித மனத்தின் ஒரு அம்சமாக, பட்டறிவின் சாராம்சத்தை இலக்கணமாகப் பதிவிடும் செயல்பாடாகக் கருத வேண்டும். இணைந்தியங்கும் (concommitant ) மாற்றம் என்னும் வழிமுறையால்    இத்தகைய செயல்பாட்டை அதன் இயல்பான போக்கில் பயிலலாம்.”
(மேற்கண்ட மேற்கோளில் மொழி பெயர்க்கப் பட்டிருப்பவை சாம்ஸ்கியின் “மொழியின் இயல்பு” கட்டுரையின் முதல் பாராவில் முதல் நான்கு வாக்கியங்கள் தவிர மற்ற வாக்கியங்கள்.)
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மொழி  சாதனமாகவும் (tool), அதே சமயம் பொறியியக்கமாகவும் ( Mechanism ) செயல்படுகிறது;  அதுவே உலகுடனும் பிறருடனும், நமக்குள்ளும் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோம்  என்பதைத் தீர்மானிக்கிறது. அதாவது மொழியே நம்மை மனிதராக்குகிறது .

மனிதநேயத்தின்  வெளிப்பாடு

மனித இனத்தின் அனுபவங்களின் ஒட்டு மொத்தத்  தொகுப்பே மொழி என்றார் புகழ் பெற்ற அமெரிக்கக் கவிஞரும் இருத்தலியலாளருமான வால்ட் விட்மன். அவர் உதிர்த்த கருத்துக்கள்:
“ மொழி என்பது கற்றவரோ அல்லது அகரமுதலி தயாரிப்பாளரோ கட்டும்  கருத்தியல் கட்டுமானமல்ல. மனித குலத்தின் நீண்ட தலைமுறைகளின் வேலைகள், தேவைகள், பந்தங்கள், குதூகலங்கள்,  பாச நேசங்கள், ரசனைகள் அனைத்திலிருந்தும் உதித்தது அது.  மண்ணில் ஆழப்  பதிந்த அகண்ட அடித்தளம் கொண்டது.”
எனவே மண்ணில் தோன்றிய காலம் முதல்  மனித குலம் பெற்றுள்ள அனுபவங்களின் ஒட்டு மொத்தமே மொழி. மொழி இல்லையேல் மனிதர்களால் தம்  உணர்வுகளை, எண்ணங்களை மனவெழுச்சிகளை , விருப்பங்களை, நம்பிக்கைகளை வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கும். மொழியின்றி மனித சமூகமும், அதன்  இறை நம்பிக்கையும் கூட  பிழைத்திருக்க  வாய்ப்பில்லை.
பேபெல் கோபுரம் எழுவதால்  கடவுளுக்கு ஏற்பட்ட கடுங்கோபம் உலகம் முழுவதும் மிதமிஞ்சிய மொழிகள் தோன்றக் காரணமானது என்றாலும் அவ்வாறு உதித்த மொழிகள் அனைத்தும் புரிந்து கொள்ளக் கூடியவை; பயிலவும், எழுதவும் மொழி மாற்றம் செய்யவும் கருத்துத் தொடர்பு கொள்ளவும் முடிகிற நிஜ மொழிகள் அவை.

கணினி மொழி

கணினிகள் தமக்கிடையேயும், மனிதர்களுடனும் தொடர்பு கொள்ளக் கூடிய இந்த காலகட்டத்தில் மொழியின் அர்த்தம் மாறக் கூடும். கணினிகள் நிரல்மொழியில் பேசுகின்றன. மனித மொழியைப் போலவே  கணினி மொழியும் இலக்கணம், தொடரியல், பிற விதிகள் கொண்ட ஒரு அமைப்பு. அது மனிதர்கள் கணினி, கைக்கணினி, திறன் பேசிகளுடன் தொடர்பு கொள்ளவும் ,ஒரு கணினி மற்றொரு கணினியுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கிறது.
மனிதர் இடையீடு இல்லாமல்  கணினிகள் தாமாக தமக்கிடையே தொடர்பு ஏற்படுத்திக்  கொள்ள முடிகிற அளவுக்கு செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் , மொழியின் வரையறுப்பும் விஸ்தரிக்கப்பட வேண்டிய நிலை வரக்கூடும். அப்போதும் மனிதனை ஆக்குவது மொழிதான்.  ஆனால் அவ்வாறு விஸ்தரிக்கப்பட்ட வரையறுப்பு,  எந்திரங்கள் தம் சொந்த மொழியில் தமக்குள்ளே தொடர்பு வைக்க, தேவைகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க, ஆணையிட, உருவாக்க, உற்பத்தி செய்ய வழி வகுக்கும். ஆதியில் மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட மொழி, தன் மனித இணைப்புகளைத் துறந்த, ஒரு புது  தொடர்பு அமைப்பாக வெளிப்படும்.

[இங்கிலிஷ் மூலக் கட்டுரை: மொழியியலாளர் கூர்நோக்கில் மொழி – நம்மை மனிதராக்கிய கருத்துத் தொடர்பு சாதனமே மொழிதான் -ThoughtCo  இணைய தளத்தின் கட்டுரை -13/02/2018- by Richard Nordquist ]

தமிழாக்கம் :கோரா
***
அருஞ்சொல் விளக்கம்
தொடரியல் (syntax ): ஒரு வாக்கியத்தில் அல்லது தொடரில் சொற்கள் ஒன்றிணைந்து
சேரும் முறை பற்றிய மொழியியல் பிரிவு தொடரியல் எனப்படும்  . மொழியியலாளர் அல்லாத பிறர் தொடரியலையே இலக்கணம் என்பார்கள்  தமிழ் மரபில் சொல்லமைப்பு
வாக்கிய அமைப்பு இரண்டும் சேர்ந்தே இலக்கணம் எனப்படும் . செய்யுள் அமைப்பையும்  இலக்கணத்தில் அடக்குவது தமிழின் பழைய மரபு .
சாம்ஸ்கியன் மொழியியல் (Chomskyan Linguistics): அமெரிக்க மொழியியலாளர் நோம்  சாம்ஸ்கி அறிமுகப் படுத்தி கல்வியாளர்களின் நன்மதிப்பைப்  பெற்ற “ மொழியின் கோட்பாடு மற்றும் மொழிபயிலும் வழிமுறைகள்”என்ற அகண்ட மொழியியல் பகுப்பைக்  குறிக்கும் சொற்றொடர். மரபுசார் (formal ) மொழியியல் என்பது இதன் இணைச் சொற்றொடர்(synonym ) என்றும் கருதப் படுகிறது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.