சுற்றுச்சூழல் ஆர்வலர், பெண்ணியவாதி, அறிவியல் புனைவு எழுத்தாளர் – ஷெரி எஸ். டெப்பரை நினைவுகூரல்

உனக்குப் போதாத காலம் என்று நினைக்கிறேன். மிகச் சிறிய உயிர்களுக்கு போதாத காலங்கள் ஏற்படுகின்றன. அதற்காகவே அவற்றை நான் படைக்கிறேன்
ஷெரி எஸ். டெப்பர், ‘கிராஸ்

ஷெரி எஸ். டெப்பர், மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறார். அதனால்தான் அவர் புத்தகங்களில் அத்தனை கொள்ளை நோய்கள் இருக்கின்றன.

மிட்வெஸ்ட்டில் நிகழ்ந்த ஒரு வர்ல்ட் பாண்டஸி கன்வென்ஷன் முடிந்து ஊர் திரும்பும்போது நான் இதைப் பற்றி என் பதிப்பாசிரியரிடம் சொகிறேன். டெப்பரின் மறைவையொட்டி, அவரது எழுத்தைப் பற்றி நினைவு கூர்ந்து எழுத நான் ஒப்புக் கொண்டிருந்தேன்; வாழ்நாள் நெடுக அறிவியல் புனைவு துறையில் உள்ளவர்களில் அவரை நேரடியாக அறிந்தவர்களிடம் உரையாட அது ஒரு நல்ல இடமாக இருந்தது. ஆனால் விஷயம் என்னவென்றால், அவரது எழுத்து குறிப்பிடத்தக்க வகையில் அச்சில் கிடைக்க அரிதாக இருப்பதால் அவரைப் பற்றிய செய்திகள் சேகரிப்பதே ஒரு மாபெரும் தேடல் போலானது. அவரைச் சந்தித்தவர்களும் மிகக் குறைவு. ஒன்றும் தெரியாது, என்று சொன்னார்கள். அவர் பாலைவனத்தில் சில காலம் வசித்தார், ஆனால் அதற்கு மேல் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. “நான் அவர் எழுதியதைப் படித்திருக்கிறேன்,” என்று யாரோ ஒருவர் சொன்னார். அவரது பார்வையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. “ஆனால் நான் கிராஸ் படித்திருக்கிறேன்,” என்று வேறொருவர் தலையாட்டிக் கொண்டே சொன்னார்அவர் தலையாட்டியது டெப்பரைச் சந்தித்ததேயில்லை என்பதற்கா அல்லது கிராஸ் நாவலுக்கா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மீண்டும் மீண்டும், “மனதை உறுத்துவது,” என்று சொல்லக் கேட்டேன்.
அவர் எழுத்து அச்சில் வெளிவரும்போது அவருக்கு வயதாகி விட்டிருந்தது (அவரது முதல் நாவல் 54ஆம் வயதில் பதிப்பிக்கப்பட்டது). நாற்பதுக்கும் மேற்ப்பட்ட கதைகளை பல்வேறு புனை பெயர்களில் எழுதினார். ஆனால் அறிவியல் புனைவு மற்றும் மிகுகற்பனை புனைவுகளில் (இனி அறிபுனைவு மற்றும் மிகுபுனைவு) அவருக்கு என்று தனி இடம் பெற்றுத்தந்த படைப்புகளை அவர் தன் சொந்தப் பெயரிலேயே எழுதினார். அவரது எழுத்தில் மிகுந்த தாக்கம் அளித்தவை அவருக்கு முன் எழுதியவர்களுக்கும் அவருடைய சமகாலத்தவர்களுக்குமிடையே செல்லும் பொதுப் பாதைகளில் பாதம் பதித்திருக்கின்றன. அவர் பெண்ணிய நீதிக்கதைகளின் இரண்டாம் அலையாய் அமைந்த மார்கரெட் அட்வுட் மற்றும் மார்ஜி பியர்ஸியின் கதைகளுக்கு இணையான கதைகளை எழுதியவர். அதே நேரம், முழுக்க முழுக்க பிறிதொரு உலகை விவரிக்கும் பிராங்க் ஹெர்பர்ட் மற்றும் ஜாக் வென்ஸின் கதைகளுக்கும் அவரது கதைகளுக்கும் இணக்கம் உண்டு.
அவரது புத்தகங்களில் மிக அதிர்ச்சியானது என்று கருதப்படுவது அவர் 1988ல் எழுதிய, ‘தி கேட் டு  விமென்ஸ் கன்ட்ரிஎன்ற நாவலாய் இருக்கலாம். அதில் பெண்களால் ஆளப்படும் சமூகங்கள் கொண்ட சிற்றரசுகள் விவரிக்கப்படுகின்றன. ஆண்கள் அதிஆண்மை நிலவும் கூடாரங்களுக்கு ஒதுக்கப்பட்டு, அவர்களின் எண்ணிக்கையை குறைக்க போர்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆண்கள் இல்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண மரபணுத் தேர்வுகள் முயற்சிக்கப்படுகின்றன. 1991ல் அவர் எழுதிய, ‘பியூட்டி‘, ஸ்லீப்பிங் பியூட்டியின் தொன்மத்தை மீளுருவாக்கம் செய்கிறதுதேவதைக் கதைகளின் கூட்டு ஒன்றை டெப்பர் மென்று விட்டு, துப்புகிறார், எதார்த்த உலகில் என்ன நடக்கிறது என்று கவலைப்படுபவர்களுக்காக கொஞ்சம் காலப் பயணத்தைச் சேர்க்கிறார். (அதில் எதுவும் நல்லதற்கில்லை.) 1989ல் அவர் எழுதிய கிராஸ்‘, முந்நூல்களில் முதலானது, அவர் எழுதியவற்றில் மிகப் பிரபலமானது, சமய நம்பிக்கை, சுற்றுச் சூழல், வர்க்கம் முதலியவற்றையும், போர் தொடுப்பவர்கள் மனிதர்களாய் இருக்கையில் இயற்கை பயங்கரமானதாக எப்படி எல்லாம் விவரிக்கப்படுகிறது என்பதையும் பற்றிய கேள்விகளை அதில் எதிர்கொண்டார்.நெடுஞ்சாலைப் பாதையில், மரங்கள் அரை மனதாகத் திரும்பிச் செல்கின்றன, பழுப்புக்கு இடையே சிவப்பு மற்றும் மஞ்சள் கறைகள். எங்கள் முன் விளம்பரப் பலகையில் நிலக்கரிச் சுரங்கத்தில் நின்று கொண்டிருக்கும் கவர்ச்சியான பெண். “என் ஆற்றல். என் வேலை. என் வாக்கு. விளக்குகள் எரிந்து கொண்டிருக்கட்டும்.” கார் கதவுகள் திறந்திருக்கின்றன, அக்டோபர் மாதத்தின் கடைசி நாட்கள், எண்பது டிகிரி வெயில்.
இதில் நுட்பமாக எதுவும் இல்லை. ஷெரி எஸ். டெப்பர் விஷயத்திலும் நுண்மைகள் இல்லை. அவரது எழுத்தில் பெண்ணிய இரண்டாம் அலையின் பாதிப்பும், சுற்றுச் சூழல் அழிவு பற்றிய பீதியும் சம அளவில் தாக்கம் கொண்டிருக்கின்றன.  அவரது ஆரம்ப கால செயல்பாடுகள் அவரது எழுத்தின் தொகைக்கு நேரடியாகக் கொண்டு செல்கின்றன என்பது போல், அவரது வாழ்வு குறித்துக் கிட்டும் குறைந்த அளவு தகவல்கள் கூட- கேர் மற்றும் ப்ளாண்ட் பேரண்ட் ஹூட் உடன் அவர் இணைந்து பணியாற்றியது- அவரது நினைவுக் குறிப்புகளில் இடம் பெறும்போது, ஏதோ அவரது துவக்க கால பணிகள் அவரது மொத்த எழுத்துக்கும் நேரடிக் காரணிகள் என்பதான சுட்டல் இருக்கிறது.
டெப்பர் நாவல்களில் அடிக்கடி, மக்கள் தொகை மிகுந்திருப்பது ஒரு பிரச்சினையாகிறது. கொள்ளை நோய் தாக்குகிறது. உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட வேற்றுகிரக இனங்கள், ஆனால் அவர்களின் நாடகீய நோக்கம் பெரும்பாலும் கோட்பாடு சார்ந்தவை. மொழியும், தொடர்புக்கான முயற்சிகளும்  உலகின் விதியை மாற்றுகின்றன. புத்திசாலி பெண்கள் சமூகத்தாலும் சூழ்நிலையாலும் தோற்கடிக்கப்படுவார்கள்ஒடுக்குமுறை மதம் அரசை ஆட்டுவிக்கும்.  பாத்திரங்களின்பார்வைகளாக அரை டஜன் இருக்கும். அந்தரங்கத்துக்கு துரோகம் இழைக்கும் தொழில்நுட்பம், பாதுகாப்புக் கவசம் என்று சந்தைப்படுத்தப்படும். வளர்ப்புப் பிராணிகள் கூட வெளிப்பார்வைக்குப் புலப்படாத திறன்கள் கொண்டிருக்கும். இனப் பிரச்சினைகள் முழுக்க முழுக்க வேற்று கிரகத்துக்கு உரியவை, அல்லது, கொஞ்சம் கூட இல்லாதவை. பூச்சிக்கடி போல் அரிக்கும் காதல், பாத்திரங்கள் அதைவிட முக்கியமானவற்றில் ஈடுபட்டிருப்பார்கள். பாலினப் பிரிவு அடிப்படையாகக் காட்டப்பட முடியுமென்றால், அது செய்யப்படும். தாவர இனங்கள் திருப்பித் தாக்க முடியுமென்றால், அதைச்  செய்யும்.
தன் நம்பிக்கையே சத்தியம்   எனக் கருதும் ஒருவரால் கையில் திணிக்கப்படும் துண்டுப் பிரசுரம் அளிக்கும் உணர்வை அவரது எழுத்து அளிக்கிறது.  இவ்வாண்டு வர்ல்ட் ஃபாண்டஸி கன்வென்ஷனில் வாழ்நாள் சாதனையாளர் விருது டெப்பருக்கு வழங்கப்பட்டபோது அவர் குறித்த நினைவுகளை எழுதிய அறிபுனை வரலாற்று ஆய்வாளரும் விமரிசகருமான டாக்டர். கேரி வுல்ஃப் அது அவரது நோக்கம் என்கிறார்.  “முன்பிருந்த அளவு இப்போது மதிப்புள்ளதாகக் கருதப்படாத சமூக நாவல்கள் என்கிற வகையை அவர் மனமறிந்து எழுதினார்,”  என்று சொல்லும் அவர் எழுதுகிறார், “தான் மிகத் தீவிரமாக கொண்டிருந்த எண்ணங்கள் எவ்வளவு நேரடியாக வாசகரைச் சென்றடையுமோ அவ்வளவு நேரடியாக அவற்றை வெளிப்படுத்த விரும்பினார். கதைசொல்லல் அவருக்கு இயல்பாகவே வந்தது என்று நினைக்கிறேன். முக்கியமான சிந்தனைகளை வெளிப்படுத்த கதைகளே அவருக்குத் தெரிந்த மிகச் சிறந்த வழியாக இருந்தன.”
நல்லதோ கெட்டதோ அதுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அவரது படிப்பில் குறிப்பிடத்தக்க அளவில் மரபணுக்கள் விதியைத் தீர்மானிக்கின்றன; ‘பியூட்டிஎன்ற கதையில் கற்பழித்தவனின் குழந்தை அவளது அப்பாவின் குரூர இயல்பு கொண்டிருக்கிறது, ‘தி கேட் டு உமன்ஸ் கண்ட்ரிநாவலில் தற்பாலின விழைவுக்கான மரபணுஅழிக்கப்படுகிறது, மரபணு அடிப்படையில் குழந்தைப்பேறும் மக்கள் தொகை கட்டுப்பாடும் அக்கறைகளாக இருக்கின்றன. கதையில் விவரிக்கப்படும் வழிமுறைகளை அவர் விமரிசிக்கிறாரா அல்லது ஆதரிக்கிறாரா என்ற சந்தேகம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது (உண்மையில் அவர் ஆதரிக்கிறார்– ‘தி கேட் டு –()விமென்ஸ் கண்ட்ரிநாவலில் வரும் கட்டாய மகப்பெறுத் தடையும் தேர்ந்தெடுத்த குழந்தைப் பேறும் அவருக்கு இணக்கமான கொள்கைகள் என்று தோன்றுகிறது)
இதன் காரணமாக டெப்பர் எப்படிப்பட்டவர் என்பது குறித்து எளிய முடிவுகளுக்கு வருவது கடினமாக இருக்கிறது. சில சமயம் அவரது சுற்றுச்சூழல் பீதி மட்டுமே ஆறுதலாக இருக்கிறது: அவர் அளிக்கும் தீர்வுகளைவிட அவரது விரக்தி மனதை பாதிக்கிறது. அவரது பாத்திரங்கள் நம் கவனத்தை தக்க வைத்துக் கொள்பவர்களாக இருக்கலாம், அதிலும் குறிப்பாக அழிந்து போவார்கள் என்று நினைக்கப்படக்கூடிய இடத்தில் தம் ஆற்றல்களை உணரும் பெண்கள். அவரது உலகம் அதன் கற்பனையால் நம்மை திடுக்கிடச் செய்யலாம்: டெப்பரின் கதையில் உள்ள எந்த ஒரு கதைக் கட்டத்தை நண்பர்களிடம் விளக்கும் போதும் அவர்கள் உங்களை நம்ப மறுக்கிறார்கள். தன் பேரழிவுகளின் அமைப்புரு குறித்து டெப்பர் அவ்வப்போது வறட்சியான புரிதல் கொண்டவராய் இருக்கிறார். ‘கம்பானியன்ஸ்கதையில் ஒரு பேசும் தாவரம் அதன் மானுட நாயகியிடம் அவற்றின் புறக் காவல் நிலை மீது நடந்த ஒரு தாக்குதல் பற்றி கேட்கிறது– “இது அந்த வேறொரு கெட்ட விஷயத்திலிருந்து மாறுபட்டது என்றால், மலை மீதிருந்து எப்படி கப்பல்கள் வந்தன என்பதற்கு யார் பொறுப்பு?” நாயகி பெருமூச்சு விடுகிறார்: “அது வேறொரு கெட்ட விஷயம்.”
அந்த நிலை தவறிய  இலையுதிர் காலத்தில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன். டெப்பர் பற்றி என்ன நினைப்பது என்று தெரியவில்லை. “உறுத்துகிறது,” என்பது சரிதான், ஆனால் ஒரு வழியில் அல்ல, பல வழிகளில் அவர் எழுத்து உறுத்துகிறது. ஆனால் அவர் புத்தகங்களிலிடையே வலுவான ஒரு சரடு உண்டென்றால் அது அறிவின் மதிப்புதான். அறிவென்பது எப்போதும் அடையத்தக்கது; அதிகம் அறிந்திருப்பது எப்போதும் பயனுள்ளது. டெப்பரின் எழுத்தை அணுக இதைவிடப் பொருத்தமான வழி இல்லை என்று தோன்றுகிறது.
இங்கிலிஷ் மூலக் கட்டுரை: ஜெனவீவ் வாலண்டைன்
தமிழாக்கம்: பாஸ்கர் ந.