அத்தியாயம் 19
பாக்கியம் ராத்திரி பூராவும் தூங்கவே இல்லை. குத்தாலம் கடை அடைத்து விட்டு வந்து அவளிடம் தகவல் சொல்லும்போது, தங்கம் படித்து விட்டுத் தூங்கி விட்டாள். அதனால் அப்பா, சீட்டாடி போலிஸில் மாட்டிக் கொண்டதெல்லாம் தெரியாது. குத்தாலமும் வீட்டுக்குள் கூட வரவில்லை. வாசலில் நின்று கொண்டே நின்றாள். அந்த நேரத்திலும் மருமகனை அவள் உபசரித்தாள், “ரெண்டு தோச சாப்புட்டுட்டுப் போயேன்..”
“இல்ல அத்தை. இன்னொரு நாள் வந்து சாப்பிடுதேன். அம்மா ராத்திரிக்கி இட்லி எல்லாம் அவிச்சு வச்சிருப்பாள். அதெல்லாம் வம்பாப் போயிரும்லா.. நான் காலையில ஒரு வக்கீலப் புடிச்சு, வெளிய கொண்டார ஏற்பாடு பண்ணுதேன். தங்கத்து கிட்ட இதப் பத்தி ஒண்ணும் சொல்ல வேண்டாம். நீங்க கதவப் பூட்டிட்டுத் தூங்குங்க.”
“இந்த மனுசனோட ஒரே செறையா இல்ல இருக்கு. ஏதோ, அண்ணன், நீங்கள்ளாம் இருக்கப் போயி, எதும் ஒண்ணுன்னா ஓடியாறீங்க. உங்கள விட்டா வேற எனக்கு எந்த நாதி இருக்கு? இந்த ஆளு கிருமமா இருக்க மாட்டேங்க… அண்ணன் ரொம்பக் கோவிச்சுக் கிட்டானா?…”
“என்ன செய்ய? அப்பா சத்தம் போடத்தான் செஞ்சா… என்ன செய்யிறது அத்தை… சரி நீங்க படுங்க…” என்று சொல்லிவிட்டுப் போனான் குத்தாலம். அவன் போனதும் வாசல் கதவைத் தாழ்ப்பாள் போட்டாள். தெருவடி வீட்டில் ஒரே உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கிற சத்தம் கதவைச் சாத்திய பிறகும் கேட்டுக் கொண்டிருந்தது. தங்கம் தலையணையோ, விரிப்போ இல்லாமல் வெறும் தரையிலேயே படுத்துக் கிடந்தாள். விரிப்பில் அவளைப் படுக்க வைத்து விட்டு, அவள் பக்கத்திலேயே உட்கார்ந்து, எதை எதையெல்லாமோ நினைத்துக் கொண்டிருந்தாள்.
பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்தவள், தங்கத்தை எழுப்பி, “மாமா வீட்டுக்குப் போயிட்டு வந்திருதேன்… நீ பல் தேச்சு குளிச்சு முழுகி ரெடியா இரு…” என்று சொல்லிவிட்டு, சீதாபவனத்துக்குப் புறப்பட்டாள். மேலக் கோபுர வாசல் தெரு முனையில் வடநாட்டு யாத்ரீகர்கள் குழு ஒன்று, தெரு ஓரத்திலேயே நின்று, பல் தேய்த்துக் கொண்டிருந்தது. மேலமாசி வீதி மூக்கில் பிருந்தா பவன் ஹோட்டலில், ஒரு ஆள் கடையின் முன்னால் நின்று சாம்பிராணி காட்டிக் கொண்டிருந்தான். அவ்வளவு காலையில் அவன் குளித்திருப்பானோ என்னவோ. அனால், நெற்றி நிறைய திருநீரு பூசியிருந்தான். மீனாட்சியம்மன் கோவில் ஸ்பீக்கரிலிருந்து சன்னமான ஒலியில் தேவாரம் கேட்டது.
சீதா பவனத்தில், அடி பம்பை ஒட்டி, முற்றத்தில் ராஜி கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். பாக்கியத்துச் சித்தி வருவதைப், பார்த்ததும், கோலத்தை நிறுத்தி விட்டு நிமிர்ந்தாள் ராஜி. “வாங்க, சித்தி” என்றாள். மனதிலுள்ள வருத்தத்தைக் காட்டிக் கொள்ளாமல், “சௌக்கியமா இருக்கியாம்மா…” என்று கேட்டாள். ராஜியும் பாக்கியமும் ஒருத்தரை ஒருத்தர் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, உள்ளேயிருந்து சீதா வந்தாள். “வாங்க மதினி…” என்றாள். பாக்கியம் புருஷன் விஷயமாகத்தான் வந்திருக்கிறாள் என்று யூகித்தாள் சீதா. “ஏன் மதினி வாசல்லேயே நிக்கியோ?… உள்ள வாங்க…” என்று பாக்கியத்தின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். ராஜி, விட்ட இடத்திலிருந்து கோலத்தைத் தொடர்ந்தாள்.
வீட்டிற்குள் நுழைந்ததுமே பாக்கியத்துக்குக் கண் கலங்கிவிட்டது. சேலை முந்தானையினால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். சீதா அவளை அடுக்களைக்கே கூட்டிச் சென்று உட்கார வைத்தாள். அடுக்களை பூராவும் காபி மணத்தது. விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடருகிற மாதிரி, “என்ன செய்யது?… இந்த ஆளு இப்பிடியா பண்ணும்? நமக்கு எதுக்கு சீட்டு நாட்டெல்லாம்? போலீஸ்காரன் கையில ஆம்புட்டா சும்மா விடுவானா? வயசுக்கு வரப்போற பொம்பளப் புள்ளய வீட்டுல வச்சுக்கிட்டு சீட்டாடப் போகலாமா சொல்லுங்க?…” என்று பாக்கியத்திடம் பேசிக் கொண்டே, காபியை ஆற்றி அவளிடம் சீதா கொடுத்தாள். “காபியச் சாப்பிடுங்க மதினி… அண்ணன் எந்திரிச்சிருப்பாஹ …” என்று சொல்லிக் கொண்டே மாடிப்படியருகே போய் நின்று, அண்ணாந்து பார்த்து, “ஏங்க… கீழவாங்க… மதினி வந்திருக்காங்க…” என்று கொஞ்சம் குரலை உயர்த்தியே சொன்னாள். “பாக்கியமா வந்திருக்கா?… வாரேன்… வாரேன்…” என்ற சுப்பிரமணிய பிள்ளையின் குரல் கேட்டது.
அதற்குள் ராஜி கோலத்தை முடித்துவிட்டு வந்து பாக்கியத்தின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். குடிக்காமல் வைத்திருந்த காபி தம்ளரை எடுத்துச் சித்தியிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னாள் ராஜி. பாக்கியத்துக்குத் தொண்டையை அடைத்தது. இருந்தாலும், கடகடவென்று காபியை வாயில் ஊற்றினாள். ராஜி, சித்தியின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு அவளை அணைத்துக் கொண்டாள். சீதா “தங்கம் தூங்கிட்டிருக்காளா?” என்று பாக்கியத்திடம் கேட்டாள். “ஆமா” என்று மெதுவாகச் சொன்னாள். இவ்வளவு காலையில் அவர்களைத் தொந்திரவு செய்வது பாக்கியத்துக்குப் பிடிக்கவில்லை. தனது இயலாமையை நினைத்து சுவரில் சாய்ந்து கொண்டே அழுதாள் பாக்கியம். ராஜி தன் சேலையினால் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.
“அழாதீங்க மதினி… என்ன செய்ய? பொண்ஜென்மமே இப்படித்தான் இருக்கு. வீட்டுக்கு வீடு வாசப்படி… என்ன செய்ய?… ஒண்ணு இல்லாட்டா ஒண்ணு தொடந்துக் கிட்டே இருக்கே.” என்று சொல்லிக் கொண்டே விறகை அடுப்பினுள் தள்ளிவிட்டாள் சீதா. குத்துப் போணியிலிருந்து இட்லி மாவை இட்லித் தட்டில் கோரிக் கோரி விட்டாள். சுப்பிரமணிய பிள்ளை வந்து கொண்டே, “வா… பாக்கியம்…” என்றார். அண்ணனைப் பார்த்ததும் எழுந்து நின்றாள்.
“எதுக்குப் போட்டு அழுத?… அவன் கததான் தெரிஞ்சதாச்சே… கொஞ்ச நாள் ஒழுங்கா இருக்கான்… இருக்கும் போதே திருகுதாளம் பண்ணிருதான்…” என்றார்.
“நேத்து ராத்திரியே வக்கீல் கிட்ட குத்தாலம் பேசிட்டான். காலையில போயி கூட்டிட்டு வந்திரலாம்… அழாத…”
“சும்ம… சும்ம ஒன்னைத்தான் தொந்தரவு பண்ண வேண்டியிருக்கு…” என்றான் பாக்கியம்.
“அதனால என்ன?… நடந்தது நடந்து போச்சு… அவன் வந்தான்னா அவனுக்குப் புத்தி சொல்லு…”
“நாஞ்சொல்லி எங்க கேக்கப் போவுது?… நீங்கள்ளாம் சொல்லியே திருந்தாத ஆளு, நாஞ்சொல்லியா கேக்கப் போவுது?… கட்டையில போற வரைக்கும் அது மாறாது…”
“சரி… சரி… காபி குடிச்சியா?…”
“குடிச்சிட்டேன். இந்த ஒரு தடவ மட்டும் அத காப்பாத்தண்ணே… நாளயும் பின்னயும் அது சீட்டாடப் போச்சுன்னா… அதத் தலை முளுகிட்டு நானும் எம் பிள்ளையும் எங்கயாவது போயிப் பொழச்சுக்கிடுவோம்…”
சுப்பிரமணிய பிள்ளை பாக்கியத்தையே பார்த்துக்கொண்டு நின்றார். அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ஏதாவது ஒன்னக் கெடக்க ஒண்ணு பேசாத… பொட்டப் புள்ளய வச்சிருக்க… மனசுவிட்டுப் போயிராத…”
“அத நெனச்சுத்தான் நானும் சரி… சரின்னு… பொறுத்துப் போறேன்… இந்த மனுசன் பண்ணுத இம்சயத் தாங்க முடியல… நான் நாலு வீட்டுல தோசக்கி அறைச்சி வச்சிருக்க துட்டையும் புடுங்கப் பாக்குதாரு…”
“அவுஹ என்ன செய்வாஹ பொம்பள?… நீங்கதான் கொழுந்தனக் கண்டிசன் பண்ணனும்…” என்று கணவனிடம் சீதா சொன்னாள்.
“அவன் வரட்டும்… நான் இதுக்கு ஒருவழி பண்ணுதேன்…” என்றார் சுப்பிரமணிய பிள்ளை. பிறகு, “சரி நீ சாப்புட்டுட்டுப் போ… தங்கத்துக்கும் இட்லிய எடுத்துக் கொண்டு போயிக் குடு…” என்றார்.
“இல்லண்ணே… வீட்டுல மாவு இருக்கு… எனக்கு ராத்திரி பூரா இருப்புக் கொள்ளல… அதான் விடிஞ்சதும் ஓடியாந்துட்டேன். நான் போயிட்டு வாரேன்… மதினி, ராஜி போயிட்டு வாரேன்…” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் பாக்கியம். தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே வேகமாகப் போனாள். அவள் போவதையே மூன்று பேரும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
~oOo~
ஆனால், சுப்பிரமணிய பிள்ளையும், குத்தாலமும் நினைத்தது போல், கிட்டுவை உடனே வெளியே கொண்டுவர முடியவில்லை. மூன்றாவது நாள்தான் கிட்டுவை மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆஜர் செய்தார்கள். ஆரப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் வேண்டுமென்றே காலதாமதப் படுத்திய மாதிரி இருந்தது. அந்த மூன்று நாளும் குத்தாலம்தான் கிட்டுவுக்குச் சாப்பாடு கொண்டு போய்க் கொடுக்கவும், சீதாபவனத்துக்கும், கடைக்கும் அலைவதுமாக இருந்தான்.
அன்று காலையில் வந்து அண்ணனைப் பார்த்துவிட்டுப் போனபிறகு பாக்கியம், ஏதோ தெளிவு வந்தவள் மாதிரி வீட்டு வேலைகளைக் கவனிப்பது, தங்கத்தைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைப்பது, வழக்கம் போல் தோசைக்கு அறைக்கிற வீடுகளில் போய் அறைத்துக் கொடுத்து விட்டு வருவது என்று தன்னுடைய உலகத்தில் அமிழ்ந்து போனாள். குத்தாலம் அவ்வப்போது அத்தையிடம் வந்து தகவல் சொல்லிவிட்டுப் போனான். தன் புருஷன் சாப்பிட்டானா என்று கூடக் கேட்காதது குத்தாலத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. சுப்பிரமணிய பிள்ளை செலவுக்கு அவனிடம் கொடுத்து விட்ட பணத்தையும் பாக்கியம் வேண்டாம் என்று சொல்லித் திருப்பியனுப்பி விட்டாள். கோர்ட்டுச் செலவு, வக்கீல் பீஸ் என்று ஆயிரம் ரூபாய் வரை ஆகிவிட்டது. சுப்பிரமணிய பிள்ளை தான் கொடுத்தார். தங்கச்சிக்காக இதையெல்லாம் செய்தார்.
கோர்ட்டிலிருந்து குத்தாலமும், கிட்டுவும் வெளியே வரும்போது சாயந்திரம் நாலேகால் ஆகிவிட்டது. இரண்டு பேரும் நேரே கடைக்குத் தான் வந்தார்கள். கிட்டு கடைக்குள்ளேயே வரவில்லை. ரோட்டிலேயே நின்று கொண்டிருந்தான். சாயந்திர நேரத்து வியாபாரம் கடையில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சுப்பிரமணிய பிள்ளை கிட்டுவிடம், ” ஏண்டா நின்னுக்கிட்டே இருக்கே?… வீட்டுக்குப் போ… வீட்டுக்குப் போயிக் குளிச்சிட்டு இன்னையோட சீட்டைத் தலைமுழுகு… காலையில் கடைக்கி வா…” என்றார். “போயிட்டு வாரேன் அத்தான்… குத்தாலம் போயிட்டு வாரேன்…” என்று குத்தாலத்திடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.
வீட்டுக்குப் போகவே என்னவோ போலிருந்தது. பாக்கியம் கேட்டால் என்ன சொல்வது? தங்கம்தான் என்ன நினைப்பாள்? ஏன் இந்த மாதிரி நடந்து கொண்டோம்? திடீர் திடீரென்று தன்னுடைய புத்தி இப்படிப் போவானேன் என்று நினைத்தான். குற்ற உணர்ச்சியால் நெஞ்சு படபடவென்று அடித்தது. நான்கு நாளாகக் குளிக்காமல் வியர்வையிலும், போலீஸ் ஸ்டேஷன் புழுதியிலும் படுத்துக் கிடந்தது துணியெல்லாம் நாறியது. கொசுக்கடியில் கை, காலெல்லாம் சொறிந்து சொறிந்து காந்தலெடுத்தது.
வீட்டில் தங்கம்தான் இருந்தாள். பாக்கியம் வெளியே போயிருந்தாள். தங்கமும் அவனிடம் பேசவில்லை. பாக்கியமும் பேச மாட்டாளோ? “தங்கம், சாப்பிட்டியா?” என்று கேட்டதற்குக் கூட அவள் பதில் சொல்லவில்லை. “அப்பா மேல கோவமா?” என்று கேட்டான். தங்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். சம்பளம் போதாமல்தானே லாட்டரிச் சீட்டு வாங்குகிறோம், சீட்டாடுகிறோம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு, கொடியில் கிடந்த துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனான்.
~oOo~
(தொடரும்)