அறிவியல் புனைவுச் சிறப்பிதழ் பற்றி…

சொல்வனம் 189 ஆம் இதழை ஒரு சிறப்பிதழாகக் கொணர உத்தேசித்தோம். இது பத்து நாட்கள் முன்புதான் திடீரெனத் தீர்மானிக்கப்பட்டது.
பொதுவாகச் சிறப்பிதழ்களைக் கொணர யோசிக்கும்போது சில மாதங்கள் அவகாசம் எடுப்பது எம் வழக்கம். இந்த முறை மாறியதற்குக் காரணம், 188 வெளியான பிறகு நிறைய கால இடைவெளி விழுந்திருந்ததுதான். சில நாட்கள் முன்பு இதழின் முகப்பில் ஏன் காலதாமதம் ஆகிறது என்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தோம்.
அதன் சுருக்கம் இங்கே- தொழில் நுட்பம் அதன் போக்கில் வளர்ந்து செடுக்காகவும், வேகமாகவும், மிக விலை கேட்பதாகவும் ஆகிக் கொண்டே போகிறது. நிதி வளம் இல்லாத சொல்வனம் அதிக விலை கொடுக்கத் தயங்கினதால், வலைத் தொடர்பை அளிக்கும் நிறுவனம் தொடர்பை மெதுவாக்கியது. இது வாசக சௌகரியத்தை மட்டும் பாதிக்காமல், பதிப்பு வேலைகளையும் கிட்டத்தட்ட முடியாத வேலையாக்கியதால், விருப்பமின்றி பத்திரிகையின் அமைப்பை மாற்றும் பணியில் இறங்கினோம். அது இரண்டு வாரங்களாக நடக்கிறது, இன்னமும் நடந்து வருகிறது.
இந்த கால இடைவெளியைப் பயன்படுத்தி ஒரு சிறப்பிதழ் தயாரிக்கலாம் என்று தோன்றியதால், இது அறிவியல் புனைவுச் சிறப்பிதழாக வெளி வருகிறது. இரண்டு வாரங்கள் இத்தகைய முயற்சிக்குப் போதாதவை. திடீர் விருந்தாளிக்குச் சமைப்பது போல இந்த இதழ் தயாரிப்பு என்று வைத்துக் கொள்ளலாம்.

~oOo~

அறிவியல் புனைவிலக்கியம், சில நாடுகளிலிருந்துதான் பெருமளவும் வெளிப்படுகிறது. அவை அனேகமாக யூரோப்பிய, மேலை நாடுகள் என்பது தெளிவு. சமீபத்துப் பத்தாண்டுகளில் சீனா, இந்தியா மற்றும் சில ஆஃப்ரிக்க நாடுகள் இந்த வகை இலக்கிய முயற்சியில் இறங்கி இருக்கின்றன. இந்த விஷயங்களில் அகழ்வாராய்ச்சி செய்பவர்கள் எங்கும் உண்டு. அந்தந்த நாட்டு அறிவியல் புனைவிலக்கியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் அனேகமாக 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தகைய முயற்சிகள் துவங்கி விடுவதைச் சொல்கிறார்கள். பற்பல யூரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும் இப்படி வேர் மூலம் காட்டும் ஆய்வுகள் உண்டு.
பொதுவாகத் தொழில் மயமாதலின் வளர்ச்சியோடு அறிவியல் புனைவுகளின் தோற்றமும், வளர்ச்சியும் பொருந்துகின்றன. இரண்டும் இணைகோடுகளாக வளர்வதில்லை. உதாரணமாக ஜெர்மனியும் ஃப்ரான்ஸும். 1960களுக்குப் பிறகு இரு நாடுகளிலும் அறிவியல் நவீனத்தின் படைப்பு அதிகம் இல்ல, இருப்பதும் அத்தனை காத்திரமாகவோ, பெரும் வீச்சு உள்ளதாகவோ இல்லை. வாசகர்கள் இருக்கிறார்கள், ஆனால் பெருமளவு பிற பண்பாடுகள், மொழிக் குழுக்களின் படைப்புகளை மொழி பெயர்த்து வாசிப்பது போதும் என்று இருப்பதாகத் தெரிகிறது. மாறாக போலந்தில் ஏராளமான இடையூறுகளிடையே கூட அறிவியல் நவீனங்களின் வளர்ச்சியும் தொடர்ந்த படைப்பும் குறையாமல் நீடிக்கின்றன.
சில நேரம் சில எழுத்தாளர்களின் அபாரத் திறன் ஒரு நாட்டின் படைப்புகளின் அளவு அதிகம் இல்லாததை ஈடு கட்டி விடலாம். போலந்தும், செக் குடியரசும் அப்படிப்பட்ட நாடுகள். (இந்த இதழில் வெளியாகி இருக்கிற கதைகள் இரண்டு, போலிஷ் மொழி எழுத்தாளர் ஸ்டானிஸ்லா லெம் என்பாருடையன. செக் நாட்டைச் சேர்ந்த காரெல் சாபெக் (Karel Čapek) என்பவர்தான் இன்று நம்மிடையே பிரபலமாக உள்ள ரோபாட் என்கிற சொல்லை உருவாக்கியவர். அவர் இதை 1920களிலேயே செய்தார் என்பதுதான் அதிசயம்.]
கருவிகளின் மேம்படுத்தல் மனித எத்தனத்தின் விளைவை, உற்பத்தியைப் பன்மடங்கு அதிகரிக்கும்போது, மனிதருக்கு ஒரு புறம் தம் உழைப்பின் மீது பெரும் நம்பிக்கை எழும். இன்னொரு புறம் உழைப்பின் தீவிரமும், மாறாத் தன்மையும் சலிப்பைக் கொணரலாம். இரண்டில் எது மேலாக உள்ளது என்பது சமூக அமைப்பின் தன்மை, வாழ்வின் தர மேம்படுதல் என்ன வேகத்தில் இருக்கிறது போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.
பொதுவாக, தொழில் மயமாகும் சமுதாயத்தில் வாழ்வின் கடும்பிடியிலிருந்து தம் துன்பமான நிகழ்காலம் முடிந்து ஒப்பீட்டில் சுலபமான வாழ்க்கையைக் கொடுக்கும் எதிர்காலம் கிட்டும், தம் போன்றவர் விடுபடுவர் என்ற எதிர்பார்ப்பை மனிதர் வளர்த்துக் கொள்வது இயல்பு.
இருபதாம் நூற்றாண்டு தொழில் மயமாதலில் ஒரு பெரும் தாவலைச் சாதித்த காலகட்டம். இதுவே, இன்னும் நுணுகிப் பார்த்தால், மனித சரித்திரத்தில் அதற்கு முன் நடந்திராத அளவில் பயங்கரமான சம்பவங்கள் பல நடந்த நூற்றாண்டு. ஒரே நூற்றாண்டில் மனிதர் பெரும் அழிப்புகளையும், பெரும் வளர்ச்சிகளையும் அடைந்தனர் என்பதும் ஒரு வரலாற்று விசித்திரம். இந்த நூற்றாண்டிலேயே உலகெங்கும் அறிவியல் புனைவுகள் பெருகின என்பதை, நிகழ் காலத்திலிருந்து நகர்ந்து மாற்றுகளுக்காக எதிர்காலத்தைக் கற்பனை செய்து பார்த்திருக்கின்றனர் பல நாட்டு மனிதர்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒருக்கால் மோசமான நசிவு எங்கும் காணப்படுகையில் மனிதருக்குச் சிறிது புத்தித் தெளிவும், வளர்ச்சியை நாடும் அறிவார்ந்த செயல்பாடும் சாத்தியமாகின்றனவோ?

~oOo~

இந்திய அறிவியல் புனைவுப் படைப்பு நெடுங்காலமாக இருக்கிறது. பல மொழிகளில் துவக்கங்கள் இருந்தாலும் தொடர்ந்த படைப்புகள் காணப்படுவதில்லை. இந்திய இங்கிலிஷில் ஓரளவு தொடர்ந்த படைப்புகள் உண்டு என்று தெரிகிறது. அவற்றில் சில அறிவியலாளர்களாகப் பணி ஆற்றுவோரோ, அல்லது அத்தகைய பயிற்சி பெற்றதைப் பயன்படுத்தி எழுதுவாரோ படைப்பன. (நார்லிகரின் எழுத்து அப்படி ஒன்று).  வேறு சில, புகழ் பெற்ற கலைஞர்கள் அல்லது எழுத்தாளர்களிடமிருந்து கிட்டுவன. ஒரு உதாரணமாக சத்யஜித் ராய் எழுதிய அறிவியல் புனைவுகளைச் சொல்லலாம். அவை அனேகமாக அறிவியலைத் தொட்டு விட்டு, அதிபுனைவுகளாக மாறுவன. ஆனால் இளம் பிராயத்தினருக்காகப் பெரும்பாலும் எழுதப்பட்டிருப்பதால் அப்படி கற்பனைக்கு அதிக இடம் கொடுத்து, தகவலுக்கும், தற்கால அறிவியல் அறிவுச் சேமிப்புக்குக் குறைவிடம் கொடுத்தும் அமைந்தன.
இந்த இதழில் இந்திய இங்கிலிஷில் கதைகள் எழுதும் மஞ்சுளா பத்மநாபனின் கதை ஒன்றை மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறோம். இது அறிவியலை மையமாகக் கொண்ட கதை இல்லை. ஆனால் அறிவியலும், தொழில் நுட்பமும் அபரிமித வளர்ச்சி அடைந்ததால் சூழலில் ஏற்பட்ட பெருமாறுதல்களுக்குப் பிறகு வரும் சமுதாயத்தினரின் வாழ்நிலை பற்றிய ஒரு ஊகக் கதை. இது அதிபுனைவும் அறிவியலும் கலந்த கதை.
குறுகிய கால கட்டத்தயாரிப்பு என்பதால் பல மொழிகளிலிருந்து அறிவியல் புனைவுகளைத் தேடிப் பிடித்து மொழி மாற்றம் செய்யவோ, தமிழ் எழுத்தாளர்கள் பலரிடமிருந்தே அப்படிக் கதைகள் பெறவோ இயலவில்லை. இருப்பினும் தமிழில் எழுதப்பட்டதாக ந. பானுமதியின் கதை இருக்கிறது. இதுவும் அறிவியலும் தொழில் நுட்பமும் மனித உறவுகளில் கொணரும் தாக்கம் பற்றிய கதைதான்.
அறிவியல் புனைவுகளில் பொதுவாக கடின அறிவியல், மென் அறிவியல் என்ற இரு வகைப் புனைவுகள் உள்ளதாகச் சொல்கிறார்கள். கடின அறிவியல் என்பது அறிவியலில் எழும் பல கேள்விகளுக்கு விடைகளை அறிவியலாளர்கள் எப்படிக் காண்கிறார்கள், அல்லது காணப் போகிறார்கள் என்ற ஊகங்களை மையப்படுத்தும் கதைகளாக இருக்கும். மென் அறிவியல் புனைவுகள் அறிவியல்/ தொழில் நுட்ப மாறுதல்கள் எப்படிச் சமூக அமைப்பு, உறவுகள், மேலும் அரசியல்/ பொருளாதார மாற்றங்களைக் கொணரும், அவற்றின் நன்மை தீமைகள் என்னவென ஊகமாகச் சுட்ட முயல்வன.
இந்த இரு பிரிவுகளிலும் ஒரு கிளை பாய்தலாக அதிபுனைவுகள் அமைகின்றன. எல்லா அறிவியல் புனைவுமே ஓரளவு அதிபுனைவு (fantasy) என்பது சரியான வருணனைதான், என்றாலும் அதீதமான அளவு ஊகங்கள் கலக்கும்போது அறிவியலின் அளவு குறைந்து போய் அந்த வகைப் புனைவு அதிபுனைவாக எஞ்சி நிற்கும். இந்த இதழில் இரண்டையும் ஓரளவுதான் கலந்து கொடுக்க முடிந்திருக்கிறது.
ஜெஃப்ரி லாண்டிஸ் என்பாரின் கதை மையத்தில் அறிவியல் நிற்கிறது. பிரச்சினையும் அறிவியல் பிரச்சினைதான். ஆனால் கதை நோக்குவதோ அந்தப் பிரச்சினையின் தீர்வால் மனிதருக்கு மட்டுமல்ல, அண்ட சராசரங்களுக்கும் ஏதாவது ஆகுமா என்ற கேள்வியே. அதை மனிதர் எப்படி எதிர் கொள்வது என்று அது கேட்கிறதாகத் தெரிகிறது.
ஃபிலிப் டிக்கின் கதை மேலை மரபில் வெகு நாட்களாக இருக்கிற ஒரு உளைச்சலின் வடிகால். மனிதம் தன் எத்தனத்தின் சாத்தியப்பாடுகளை முற்றிலும் அறிந்ததான மமதையோடு இயங்குகிறது. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் தன் எத்தனம் எதிர்பார்ப்புகளை மீறிய விளைவுகளையே கொணர்வதை அது அவ்வப்போது தெரிந்து கொண்டாலும், அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு தனி மனிதரிடமோ, சமுதாயத்திடமோ தங்கி இருப்பதில்லை என்ற அச்சம் அந்த உளைச்சலின் மையம். இன்றைய முதலியமும் தொழில் நுட்பமும் மனித வாழ்வை உலகெங்கும் மாற்றியதன் தாக்கத்தில் மாக்கடல்களைக் கூட ஜீவராசியற்ற பாழ் நிலமாக ஆக்குகிறோம் என்று புலம்புகிறார்கள் சூழல் அறிவியலாளர்கள். ஆனால் மனித சமூகங்கள் மேன்மேலும் நுகர் பொருட்களை அடைவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.  பெரு நுகர்வு விழைவுதான் உலகச் சூழலில் பெருநாசத்தைக் கொணர்ந்திருக்கிறது என்று தெரிந்துதான் இருக்கிறது, என்ற போதும் ஆசை அடங்குவதாகத் தெரியவில்லை.
இந்த நிலைக்கு, அரை நூறாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட ஃபிலிப் டிக்கின் கதை பொருத்தமான கதையாகத் தெரிகிறது.
கேரொல் எம்ஷ்வில்லரின் கதையும் தொழில் நுட்பத்தின் பயனை அனுபவிக்கும் மனிதரின் அண்ட சஞ்சாரம் மனித இயல்பை எத்தனை மாற்றும் என்ற கேள்விக்கு ஒரு அதிபுனைவு வழியே யோசிக்கிற கதை. களம் வேறு கிரகம், ஆனால் பிரச்சினை மனித அறம் பற்றியது. முந்தைய நூறாண்டுகளில் நம் உலகில் நடந்த காலனிய வன்முறையையும் இது இலேசாகச் சுட்டுவதை நாம் அறிவோம். அறிவியல் புனைவுலகின் கருத்து மரபைத் தெரிந்தவர்களுக்கு கேரொல் இந்தக் கதையில் ரஷ்யப் புனைவுலகின் மேதைகளான ஸ்ட்ரூகாட்ஸ்கி சகோதரர்களின் அதிசய நாவலான Noon:22 nd Century என்பதற்கு இக்கதை ஒரு சிறு தலைவணக்கத்தைச் செய்திருப்பதை அறிவார்கள். ஆனால் எங்கே இருக்கிறது இந்த சல்யூட்- கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள்
மூன்று கதைகள் சிறுவர் இலக்கியம் போலுள்ளவை.
 கிரிதரனும், சிறுமியான அவரது மகளும் இணைந்து யோசித்த கதைக் கருவை கிரிதரன் விரித்து எழுதி இருக்கிறார். இது கணிதத்தைச் சிறுவர்கள் எப்படி எல்லாம் கற்பனை மூலம் விரித்துப் புரிந்து கொள்ளக் கூடும் என்று நுணுகி யோசிக்கிறது. எண் கணிதத்தை மேதை ராமானுஜமும் இப்படித்தான் பார்க்க ஆரம்பித்தாரோ என்று ஒரு யோசனையை இந்தக் கதை எழுப்பக் கூடும்.
ஸ்டானிஸ்லா லெம் எழுதிய இரு கதைகளுமே நகையுணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறவை. ஒன்றில், ட்ராகனும் கணினியும் சந்திப்பதும் ஜப்பானியத் திரைப்படங்களில் கிங்காங் அல்லது காட்ஜில்லா ஆகிய பிரும்மாண்ட மிருகங்கள் நவீன ஜப்பானுடன் போருக்குப் போகும் கதைகளை நமக்கு நினைவூட்டக் கூடும். ஆனால் லெம் தன் பாணியில் பெரும் அழிவுகளில் கவனம் செலுத்தாமல், ஒரு தர்க்க முடிச்சை மையத்தில் வைத்துக் கதையை அவிழ்க்கிறார்.
இரண்டாவதில், யூரோப்பிய மாயாஜாலக் கதையான உறங்கும் ராஜகுமாரி என்பது களம் மாற்றி வேற்றுக் கிரகத்தில் பொருத்தப்பட்டு சில அசாதாரண வார்த்தைச் சிலம்ப விளையாட்டுகளுடன் கதையாகிறது. இந்த வார்த்தைச் சிலம்பத்தை போலிஷ் மொழியிலேயே படிக்க முடிந்தால் என்ன ஒரு கிறக்கம் கிட்டும்? இங்கிலிஷுக்கு மொழி பெயர்த்த மைக்கெல் காண்டெலின் பணி அற்புதமானது என்றுதான் சொல்ல வேண்டும்.
அறிவியல் புனைவில் சூழலியலை மையப்படுத்திப் படைப்புகள் கொடுத்த ஷெரி டெப்பர் என்ற எழுத்தாளரின் சமீபத்து மறைவுக்கு இன்னொரு அதிபுனைவு எழுத்தாளரான ஜெனெவீவ் வாலண்டைன் எழுதிய அஞ்சலி சுருக்கமானது, ஆனால் கூர்மையானது. அதை ந.பாஸ்கர் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார்.
பழைய காலம் என்பது ஏதோ பல நூறாண்டுகள் முந்தையது என்றில்லை. 1930-40களே, ’50-’60கள் கூடப் பழையனதான். மேரிலின் ராபின்ஸன் அமெரிக்காவின் சிற்றூர் வாழ்வை மையமாகக் கொண்டு ஆழ்ந்த அற விசாரங்களை மேற்கொள்ளும் நாவல்கள் சில எழுதியுள்ளார். அவை மனித இருப்பை, ஒரே நேரம் கிருஸ்தவம், அதை ஒட்டி வாழும் சமுதாயப் பண்பாடுகள், மிகச் சிறு ஊர்களில் வாழும் குடும்பங்களின் உணர்வு நிலைகள் என்ற பல கோணங்களில் தீர விசாரிக்கின்றன. அந்த நாவல்களில் ஒன்றில் பல பத்தாண்டு கால அமெரிக்க வாழ்வு நிலைகள் பற்றித் தனக்குக் கிட்டிய அனுபவங்களை விரித்துரைக்கிறார் நம்பி கிருஷ்ணன். இது நம் காலத்து வாசகர்களுக்கு ஒரு காலப்பயணம் போல இருக்கும் என்பது அவருடைய விமர்சனக் கருக்கால் தெளிவாகும். இத்தகைய விமர்சனம் தமிழில் நிச்சயமாக ஓர் புதுக் கதிரரிவாள்.
இந்தியாவின் பன் மொழிகளிலிருக்கும் இலக்கியம் பற்றி நமக்குத் தகவல் அதிகம் கிட்டுவதில்லை. கிட்டுவன அனேகமாக இங்கிலிஷ் எனும் வடிகட்டி மூலமாகத்தான் கிட்டுகின்றன. இருப்பினும் ஒவ்வொரு மொழிக்குழுவைப் பற்றியும் கிட்டுகிற தகவல்களை இலக்கியம் மூலமாகப் பெறும்போது அந்தந்த நாகரீகங்களில் நிலை பற்றி நாம் ஓரளவாவது நுண்மையுணர்வைப் பெறுகிறோம். எஸ்.சுரேஷ் தன் கட்டுரையில் ஒடிய மொழிப் படைப்பாளரான ஃபகீர் மோகன் சேனாபதியின் படைப்புகளை அடையாளம் காட்டி, சீர் தூக்குகிறார்.
ஜாய் வில்லியம்ஸ் என்ற எழுத்தாளரின் குறுங்கதைகளை மாது மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். கதைக்குச் சொல் சுருக்கம் ஒரு தடையா என்ன?
இவை தவிர ஒரு அதிபுனைவுக் கதையாக சுசித்ராவின் தமிழ்ப் படைப்பும், அறிவியல் கதைகள் நமக்கு என்ன தருகின்றன என்பதை விசாரிக்கும் கட்டுரையாக ஹரீஷின் கட்டுரையும், மொழியின் தன்மையை மொழியியலாளர்கள் எப்படி அணுகுகிறார்கள் என நோக்கும் நோர்ட்க்விஸ்ட்/ கோரா கட்டுரையும் உள்ளன.
பாஸ்கர் லக்ஷ்மண் ப்ளாக் செயின் தொழில் நுட்பம்  என்ன கொண்டு வரும் என்று யோசிக்கிறார், அதே போல ரவி நடராஜனும் சமீபத்தில் இந்திய நிதி உலகில் ஏற்பட்ட தொழில் நுட்ப மாறுதல்கள் எந்த அளவு வாழ்வை மேம்படுத்துகின்றன என்பதைத் தன் தொடர் கட்டுரையில் கவனிக்கிறார்.
தொடர்களாக வண்ணநிலவனின் நாவலும், அஸ்வத்தின் கட்டுரையும் உண்டு. அவ்வப்போது நாங்கள் வெளியிடும் நாஞ்சில் நாடனின் சொல்லாராய்ச்சி எனும் மோனத் தவ நிகழ்வும் இங்கு உள்ளது.
பக்கவாட்டுக் கட்டத்தில் ஒரு குறும்படமும் உள்ளது. கருந்துளை என்ற இது குறுஞ்சிரிப்பைக் கொடுக்கலாம் அல்லது ஐயோ மனிதா என்று அங்கலாய்க்கவும் வைக்கலாம். ஆனால் அவர் நடு இரவில் அலுவலகத்தில் எத்தனையோ கோப்பைகள் காஃபி அருந்தியபின், ஒரு பிரிண்டரோடு மல்லுக்கட்டுகிறார் என்பதை நினைவில் வைக்க வேண்டுமோ?
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக சுபத்ரா, ச. அனுக்ரஹா மற்றும் கமலதேவி என்ற மூன்று கவிஞர்களின் படைப்புகள் அமைந்திருக்கின்றன.
இதழ் தயாரிப்பில் அரும்பணியாற்றிய பல இளைஞர்களின் உழைப்புக்கு வெறும் நன்றி சொல்லல் போதாது. ஆனால் அதை மட்டும்தான் இங்கு கொடுக்க முடிகிறது.
திடீர் தயாரிப்புக்கு ஃப்ளாஷ் தயாரிப்பாக ஒரு முகப்புச் சித்திரத்தைப் படைத்தவர் ஒரு குழு உறுப்பினர்.  அதற்குத் தன் ஒளிப்படத்தைக் கொடுத்து உதவிய கார்த்திக் ராமநாதன் அவர்களுக்கு சொல்வனம் குழுவினர் தம் நன்றியைத் தெரிவிக்கின்றனர். கார்த்திக் தீவிர ஒளிப்பட விசுவாசி. அவரது படைப்புகளைக் காண விருப்பப்படும் வாசகர்கள் இந்தச் சுட்டியைத் தொடர்ந்து போனால் பார்க்கலாம். https://www.flickr.com/photos/60999792@N06/9530106492/in/dateposted/
அவசரத் தயாரிப்பு எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துகளை எழுதித் தெரிவியுங்கள்.
பதிப்புக் குழு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.