கணிப்புக்குடில்

கணிப்புக்குடில்  விடியக் காத்திருந்தது.  விழிப்பு வந்தபின் மீண்டும் தூங்கமுடியாமல் புரண்டுப் படுத்த ரெண்டு, பக்கத்துப் படுக்கை காலியாயிருப்பதை பார்த்து ஏதோ நினைவுக்கு வந்து துள்ளியது. “அய்யோ, காலியாயிருக்கே.” அதுவரை ஏதோ குறைந்தது போல குழப்பத்தில் இருந்த மனது சட்டென பெருக்கல் சுழலில் மாட்டிக்கொண்டதுபோல உத்வேகம் கொண்டது. சடசடவென மனம் கணக்கிடத்தொடங்கியது.

“ஒன்று! ஒன்று! எந்த அறையிலும் இல்லை,” என எங்கோ அசரீரி போல மனதுக்குள் சொல்லிக்கொண்டது. ஒன்று, தனது குச்சிக்கால்களைக் கொண்டு நெடும் பயணம் செய்வதற்காக கிளம்புவது புதிதல்ல. ஏற்கனவே பல முறை அந்த முயற்சியில் இறங்கியபோதெல்லாம் வழி தடுமாறி சில நாட்களுக்குப் பின் சதுப்பு நிலத்தில் கால்புதையக் கிடந்ததை காவலர்கள் கண்டுபிடித்திருந்தனர். இது நான்காவது முறை. இந்த முறை நிச்சயம் திரும்பாது என ரெண்டு உறுதியாக நம்பியது. மூன்று முறைக்கு மேல் யாரும் வழி தெரியாது காணாமல் போனதில்லை.

எண்களிலேயே பிரத்யெகமானது நீதான் எனச் சொல்லி வளர்க்கப்பட்டாலும், ரெண்டு தனது குற்ற உணர்ச்சியால் பெரும் சோகமாகவே வளர்ந்தது. ஒன்றும் பூஜ்ஜியமும் பெறும் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததுதான். அதுவும் கணினிக்குடியிருப்பில் வேறு யாரும் தேவையில்லை. இத்தனை அருகே இருப்பதால் தனக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கேட்க முடியுமா என்ன?

ஒன்று இந்த முறை முடிவிலியைச் சந்தித்து விடுமா? முடிவிலியை சந்திப்பது அப்படி ஒரு எளிதான காரியமா என்ன? நினைக்கும்போதே ரெண்டு தன் வாய் உலர்வதை உணர்ந்தது.  ஒன்று முடிவிலியைச் சந்தித்துவிட்டால் அவ்வளவுதான்! . ஏற்கனவே முதலாம் எண் எனும் கர்வம். முடிவிலியின் சக்தி முழுவதும் அதற்குக் கிடைத்தால் அவ்வளவுதான். நினைத்ததும் ரெண்டின் உடல் சிலிர்த்தது!

ரெண்டின் மனதில் மடமடவென செயல்திட்டம் உருவாகத் தொடங்கியது.முடிவிலியைச் சந்திக்க ஒன்று மேற்கொண்டுள்ள பயணத்தை எப்படியேனும் தடுத்தே ஆகவேண்டும் எனும் எண்ணம் ஒரு பக்கம் இருந்தாலும், இதுவரை கணிப்புக்குடிலைத் தாண்டி எங்கும் சென்றது இல்லை எனும் பயமும் ஒட்டிக்கொண்டது. துணைக்கு யாரையாவது அழைத்தால் என்ன?

தன் அறையை விட்டு வெளியேறி நான்கு படிக்கட்டுகளை ஏறி மூன்றும் நான்கும் இருந்த அறை வாசலை அடைந்தது. பலத்த குறட்டைச் சத்தம். ம்ம், இவர்களை எழுப்பிப் புரியவைப்பதற்குள் ஒன்று முடிவிலியைச் சென்று சேர்ந்துவிடும். அடுத்தடுத்த அறைகளிலும் புல்லாங்குழல் ஒலிக் குறட்டையோடு ஐந்தும் ஆறும் தூங்கிக்கொண்டிருந்தன. எல்லாரையும் எழுப்பினால் தன்னை வெளியேற விடமாட்டார்கள் என்பதை உணர்ந்து சிறு மேகம் போல மிதந்தபடி பூஜ்ஜியத்தின் மாடியை அடைந்தது.

“நீயா? ரெண்டு?” எனக் கதவின் மீது காது வைத்ததும் உள்ளிருந்து குரல் வந்தது.

தான் வருவதை உடனே கண்டுபிடித்துவிட்டதை எண்ணி ரெண்டு உள்ளுக்குள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாலும் தன் நெருங்கிய நண்பி இதற்கெல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்ததும் சத்தம் போடாது திரும்பப் பார்தது.

“தூக்கம் வரலியா?” கதவைத்திறந்து அரைவட்டம் எட்டிப்பார்த்தது.

“ஆ..ஆமாம். இப்ப வர்றா மாதிரி இருக்கு,” என படிக்கெட்டில் நகரப்பார்த்தது ரெண்டு.

பூஜ்ஜியத்துக்கு இருக்கிற சிறப்பு யாருக்கும் இல்லை எனும் கர்வம் இருந்தாலும், பல சமயங்களில் தான் ஒரு பூஜ்ஜியம் தானே எனும் மனக்குறையும் அதற்கு உண்டு. பெரியவள் எனும் பொறுப்பைக் கொண்டதால் கணிப்புக்குடிலின் எந்த விதியையும் அது மீறாது. யார் என்ன சொன்னாலும் கேட்கும். செக்கு மாடு எனும் கிண்டலையும் மீறி அவளோடு நட்போடு இருப்பது ரெண்டு மட்டுமே. கணிப்புக்குடிலின் விதிக்கு ஏற்றவாறு ஒன்றோடு சேர்ந்து சுற்றும் என்றாலும் அவளுக்குப் பிடித்தது ரெண்டு தான். ஏனோ எண்களிலிலேயே அழகானது ரெண்டு மட்டுமே எனும் ரகசிய மையல் அதற்கு உண்டு.

“உன் மூஞ்சியப் பார்த்தா மனசில ஏதோ குழப்பம் இருப்பது போலிருக்கே,” என விரைவாக இறங்கப்போன ரெண்டை கொக்கி போட்டு இழுத்தது அரைவட்டம்.

“அதெல்லாம் இல்ல..,” என தப்பிக்கப் பார்த்தாலும் ரெண்டு தன் பரபரப்பை உள்ளே வைத்திருக்க முடியவில்லை.

“நீ சொன்னா கேட்கமாட்டே விடு,” என தலையை தூக்கித் தப்பிக்கப்பார்த்தது.

முழு பூஜ்ஜியம் மேலேறி உட்கார்ந்துகொண்டு, “இல்ல சொல்லு, கேக்கிறேன். என்கிட்ட சொல்லாம எப்படி?”

“நான் சொல்றதைக் கேட்டு சத்தம் போடாதே. என்ன?  ஒன்று காணாமல் போய்விட்டது..”

பூஜ்ஜியம் சந்தோஷத்தில் குதித்தாலும், எப்படி கணிப்புக்குடிலில் பிழைக்கபோகிறோம் எனும் நினைப்பில் அதன் வயிறு கலங்கியது.

“என்ன சொல்றே? அது இன்னும் திருந்தலியா? பொய்க் கதையையெல்லாம் நம்பிகிட்டு..,” படிக்கட்டில் மேலும் கீழும் உருண்டு மேலெழுந்தது.

“நீ பதட்டப்படாதே. அது பொய்க் கதைன்னு உன்னை மாதிரி தைரியமில்லாதவங்க தான் சொல்றாங்க. எனக்கு முன்னாடி இன்னொரு ரெண்டு இருந்ததுன்னு சொல்றாங்களே, அதெல்லாம் பொய்யா?”

“ஐயோ பைத்தியம். என்னிக்குமே நாம தான் இங்க இருக்கிறோம். வேணும்னா அந்த கும்பநவன் ஒன்பதைக் கேட்டுப்பார். இவ்வளவு நாளா இங்க இருக்கிறோமே என்னிக்காச்சும் பத்து, பதினொன்னு எல்லாம் சொல்றாங்களே அதைப் பார்த்திருக்கியா?” பூஜ்ஜியம் கிசுகிசுப்பானக் குரலில் அழுத்தமாகச் சொன்னது.

“நாம தினமும் சொல்லற மந்திரம் என்ன சொல்லுது?” ரெண்டு பயபக்தியாக காலை மடக்கிப்பாடியது

“ஒன்றாய்ச் சேர்ந்து திளைப்போம்
ஒருவராய் மாறிக் களிப்போம்
எவன் கடலில் முளைத்து
ஆகாசத்தில் கலந்து
அளவில்லாது இருக்கிறானோ
அவன் ஒருவனே ஸ்வரூபன்
அவனே முடிவிலி
அவனையே வணங்குவோம்!”

“அளவில்லாம இருப்பவன் யாரு? நீயும் நானுமா?” ரெண்டு சீறியது.

“மக்கு, நாம அகம்பாவம் கொண்டு கணிப்புக்குடிலை அழித்திடக்கூடாதுன்னு சொல்றது இது.”

“இதுவரை இருந்த எண்களெல்லாம் முடிவிலிலேர்ந்து வந்தது, அங்கேயே செல்வதுன்னு சொல்றதெல்லாம் பொய்யா?”

“இதுவரை வந்தது போனதெல்லாம் இல்லை..ஒன்பதுக்கே நம்மை மட்டும் தான் தெரியுது. இந்த கதையெல்லாம் நம்பாதே.” பூஜ்ஜியம் விடாப்பிடியாக அடம் பிடித்தது.

“முடிவிலிகிட்ட இல்லாத சக்தியே கிடையாது. அது வெச்சிருக்கிற மந்திரச்சாவி நமக்கும் சக்தி தந்திடும்னு சொல்றதும் பொய்யா?”

பூஜ்ஜியம் ரெண்டை முறைத்தது, “இதோ பாரு, நாம அறியக்கூடியதெல்லாம் இங்க இந்த குடிலுக்கு உள்ளே தான் இருக்கு. வெளியே பார்க்காத உலகம் இல்லாத மாதிரிதான் எனக்கு.”

மிகவும் துவண்டு போன ரெண்டு சுவரில் இருந்த சக்கரங்களை சுண்டிவிட்டபடி சோகமாக நின்றது.

“சரி, நீ என்னை நம்பலியா? கிளம்பு.”

“போடி,” ரெண்டு வேகமாகச் சுழன்ற சக்கரங்களை தலையில் உராயவிட்டது.

“இல்லை, உண்மையா சொல்றேன். கிளம்பு. போய் பார்த்திடுவோம்.

“சும்மா சொல்லலையில்ல?”

“இல்லை,” எனத் தீர்மானமாகச் சொல்லிவிட்டு படியில் உருளப்போன பூஜ்ஜியத்தைக் கொக்கி போட்டு நிறுத்தியது ரெண்டு.

“நில்லு, நில்லு..ஒன்று போனதும் அதைத் தேடித்தானே என்னோட வர்றேன்னு சொல்றே?” ரெண்டு சந்தேகத்தோடு இழுத்தாலும் அதில் ஒரு ஏக்கம் தெரிந்தது.

“நீ எப்படிவேணும்னாலும் வெச்சுக்கோ. நான் உனக்காகத்தான் வர்றேன்.

*

படம் – ஆதிரா கிரிதரன்

வேண்டிய அளவு நீரும், ஜாடியில் உதிர்த்த பிஸ்கெட்டுகளும் எடுத்துக்கொண்டு நகரின் எல்லையை அடைந்தபோதே பூஜ்ஜியத்துக்குப் பசி வந்துவிட்டது. வழியில் பார்த்த நேரக்குடில், வடிவப்பிரதேசம் எல்லாம் மிரள வைத்தன. அதுவும் வடிவப்பிரதேசத்தின் உச்சாணியில் இருந்த தசமக்கோணப் பளிங்குக்கல் அந்த நிலத்தைப் பிரகாசமாக்கியது. சிறு பூச்சிகள் போல சதுரமும், உருளைகளும் மெல்ல அந்த தசமக்கோணத்தை நோக்கி ஊர்ந்து சென்றபடி இருந்தன. ஒன்றாய் பல வடிவங்கள் சேர்ந்து புது கோணக்கற்கள் உருவாவது விநோதமானக் கனவு போலத் தெரிந்தது.

முதல் இலக்கு முக்கோணமலை தான். ரெண்டு எழுதி வந்திருந்த கணக்குப்படி ரெண்டு ரெண்டாய் ஆயிரம் கூட்டலுக்குள் முக்கோணமலை வந்துவிடும். பெருக்கல் சக்கரங்களைக் கொண்டு வராமல் போனோமே என ரெண்டுமே ஒருத்தரை ஒருத்தர் கடிந்துகொண்டனர்.

“எனக்கு எப்படி நினைவிருக்கும். நான் அருகில் வந்தாலே பெருக்கலைத் தூக்கிக்கொண்டு ஓடிடறீங்களே?” என பூஜ்ஜியம் வாயோரத்தைச் சுழித்துக்காட்டியது.

“அப்போ அவ்வளவு எரிச்சல் இருக்கிற நீதானே மறக்காமல் இருந்திருக்கணும்?”

தென்னைமரத் தோப்பு மரக்கிளைகளிடையே ஒளிந்து விளையாடிய முக்கோணமலை ஆயிரம்கூட்டலைத் தாண்டிய தூரத்தில் இருக்கும் உணர்வைத் தந்தது.

“என்ன இது? இன்னும் பத்து கூட்டலுக்குள் சூரியனும் மறைந்துவிடும். பக்கத்தில வர்றா மாதிரியே தெரியலியே?”

அவர்கள் பயந்ததுக்கு ஏற்றார்போல இருட்டத் தொடங்கியது.

“சீக்கிரம், வேகமாக உருள். எனக்கு முன்னர் மலையடிவாரத்துக்குப் போ,” ரெண்டு தன் பின்னங்காலை இழுத்துக்கொண்டு உந்தியது.

அதே நேரத்தில் யானையின் பெரும் பிளிறல் ஓசை கேட்டதும் பூஜ்ஜியத்துக்கு ஒரே குஷி.

“எப்படியாவது ஒருமுறையாச்சும் யானையைப் பார்க்கணும்ற ஆசை இன்னிக்கு நிறைவேறிடும் போலிருக்கே.

“சீக்கிரம் போ. மலை மேல போனபிறகு உன்னோட ஆசையப் பத்தியெல்லாம் பேசலாம்.

ஒருவர் முகம் மற்றொருவருக்குத் தெரியாதபடி ஆனபோது மிகச் சரியாக மலையடிவாரத்தை அடைதிருந்தார்கள்.

“சீக்கிரம் வா. ராத்திரி காட்டுல அடை மழை பெய்யும்னு கேள்விப்பட்டிருக்கேன். உனக்கென்ன நீ படுத்துகிட்டா தப்பிச்சிடுவே.,” என ரெண்டு பூஜ்ஜியத்தை இடித்துக்கொண்டு ஒதுங்கியது.

“உன் பொலம்பல். முதல் தடவை வந்திருக்கோம். இப்போது இருக்கிறத அனுபவி.,” மூங்கில் கம்பு நட்டிருந்த ஒரு பந்தல் செடி மீது களைப்பு தாளாமல் பூஜ்ஜியம் சாய்ந்தது.

அப்போது அவர்கள் உட்கார்ந்திருந்த பந்தலுக்குப் பின்பக்கம் கீச்கீச்சென உரசொலி கேட்டது. அதுவரை தைரியமாக இருந்த பூஜ்ஜியத்தின் காலி வயிறு கலக்கத் தொடங்கியது.  ரெண்டு தனது தலையை அருகிலிருந்த கிளைக்குள் நுழைத்திருந்தது. பயத்தில் உருண்டு வந்த பூஜ்ஜியம் ரெண்டின் தலையைக் காணாது அலறியது.

“ஈஈ..யாரது கத்தறது,” எதிரொலி போல ரெட்டைக்குரல்கள் ஒன்றுக்கு ஒன்று இடைவெளியோடு கேட்டன.

திரும்பிப்பார்த்த பூஜ்ஜியத்தின் முன்பாக ரெண்டு காளான்கள் நின்றிருந்தன. அவற்றின் கால்கள் ஒட்டியிருந்தன.

“உங்களைத்தான்.. கத்தக்கூடாது..உஷ்,” என இரண்டும் ஒரே நேரத்தில் குடையை உதடாக்கிக்குவித்தன.

பச்சை நிறக்காளான்களின் குடை செம்மஞ்சள் நிறத்தில் அப்பியிருந்தது. வேறெங்கேனும் பார்த்திருந்தால் பூஜ்ஜியத்தால் சிரிப்பை அடக்கியிருக்கமுடியாது. ஒன்பதும் ஆறும் சேர்ந்து ஆடும் சுழல்நடனம் போல ஒன்று நகர்ந்தால் மற்றொன்று இழுபட்டது.

“ம்..வணக்கம். நாங்க ஏன் கத்தக்கூடாது..,” எனச் சொல்லிவிட்டு பூஜ்ஜியம் ஒருபக்கம் ஒதுங்கியது. ரெண்டு தனது தலையை இன்னும் வெளியே எடுக்காமல் உடல்நடுங்கிக்கிடந்தது. தன்னில் பாதி உயரம் கூட இல்லாத காளான்களை ஓரக்கண்ணால் பார்த்து சற்று தைரியம் கொண்டது.

“நாங்க இன்னிக்கு ராத்திரி மட்டும்தான் இங்கிருப்போம். முதல் வெளிச்சத்தில் மலை ஏறிடுவோம்ரெண்டு. நாங்க முடிவி..,” என சமாதானம் சொல்லத்தொடங்கியதும் பூஜ்ஜியம் சத்தமாக,“இந்த காட்டில யானை இருக்கா?” என ரெண்டு பக்கத்தில் நெருக்கமாக முட்டியது.

“..யானை இருக்கு. .நீங்க ரெண்டு பேரும் எதுக்கு மலைக்கு போறேன்னு சொன்னீங்க?”

பூஜ்ஜியம் ரெண்டை முறைத்துப்பார்த்துவிட்டு, “அதுவா..நாங்க, நாங்க நண்பரைத் தேடி வந்திருக்கிறோம். அதான் மலை மேலேயும் தேடலாமேன்னு. இங்க யாராவது போனாங்களா?”

“அது தெரியாது..எங்களுக்குத் தூக்கம் வருது..வருத காலைல பேசிக்கலாம். நீங்க போய் தூங்குங்க.”

சந்தேகம் தீராத காளான்கள் விலகப்போகும்போது, “நீங்க யாருன்னு சொல்லலியே,” எனப் பூஜ்ஜியம் கத்தியது.

“நாங்க ரெண்டு ரெண்டு,” சற்று பூஞ்சையான காளான் திரும்பிப்பார்த்துக் கூறியது.

“இல்ல,இல்ல.. இருபத்திரெண்டு..,” என்றது மற்றொரு காளான் சலிப்புடன்.

“என்ன உளர்ற நாம எப்படி இருபத்திரெண்டா இருக்க முடியும்? ஒரே மாதிரி இருக்கிறோம் பார்த்தியா? ஏரில முகத்தைப் பார்த்த அப்புறமுமா நம்ப மாட்டேங்கிற,” என முதல் காளான் இடித்துத் திட்டியது.

“இதோ பார். நாம ஒரே மாதிரி இருக்கிறதனால ஒரே பேர் இருக்கணும்னு இல்ல. அதுவும் தவிர புதுசா ரெண்டு வந்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன்..,” காளான் சொன்னதும் பூஜ்ஜியமும் ரெண்டும் ஒன்றை ஒன்று திரும்பிப் பார்த்துக்கொண்டன.

ரெண்டு ஏதோ சொல்ல வருவதற்கு முன்பாக பூஜ்ஜியம் இடைமறித்துக் கொட்டாவிவிட்டபடி, “சரி, நாங்க இப்படியே ஓரமா தூங்கறோம். காலைல கிளம்பிடுவோம். குட் நைட், ” என ரெண்டுடைய தலையை இடித்துத் தள்ளியது.

“என்னைத் தள்ளாத..நிறுத்து..ஏற்கனவே என் காலெல்லாம் மடங்கிப்போச்சு பாரு..”

“அறிவில்லாம நீ ஏதாவது உளறப்போறேன்னுதான் தள்ளிவிட்டேன், சரியான பூஜ்ஜியம் நீ.

“அது நீ.

“நீதான் அது.”

வேறு வார்த்தை எதுவும் கிடைக்காமல், “ம்ம்..அதுதான் நீ” எனத் திட்டிவிட்டு ரெண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டது.

அதன் உடலில் உருண்டு ஏறிய பூஜ்ஜியம், “சரி கோச்சுக்காதே என்ன? யாருன்னே தெரியாதவங்ககிட்ட நாம ஏன் எல்லாத்தையும் சொல்லணும்? சொல்லு.

ரெண்டு பதிலேதும் சொல்லாமல் தலையைக் குனிந்து கோணலாக்கிக்கொண்டது.

“ஆறு மாதிரியே எல்லாத்துக்கும் கோபிக்காதே..யப்பா அப்படியே ஆறு கோணல்களைப் பார்ப்பது போலிருக்கு..மூஞ்சியத் தூக்கு. அதுங்க ரெண்டும் சண்டை போட்டதக் கேட்டேயில்ல..ம்ம்ம்?”

“ம்ம்,” என மையமா தலையாட்டியது ரெண்டு.

“நான் நினைக்கிறது உண்மைன்னா, இது நம்ம கணிப்புக்குடில்ல காணாமப்போன போன ஆளுங்க..,” பூஜ்ஜியம் தனக்குள் சொல்வது போல முணுமுணுத்தது.

“என்ன சொன்ன திரும்பவும் சொல்லு,” என குதித்துத் திரும்பிய ரெண்டு பூஜ்ஜியத்தை கண்விரியப்பார்த்தது.

“நான் எப்பவும்போல ஏதோ எனக்குள்ளேயே சொல்றது மாதிரி வெளிய சொல்லிட்டேன்..ஒண்ணுமில்ல,” என பூஜ்ஜியம் நகரப்பார்த்தது.

“இல்ல, நீ சொன்னதை நானும் ரொம்ப நாளா யோசிச்சேன். ஏதோ ஒரு காலியிடம் இருக்கிறதுபோல குழப்பம். என்னென்னு சொல்லத்தெரியல..,” என ரெண்டு திரும்பவும் யோசிக்கத் தொடங்க, இதுதான் சாக்கு என பூஜ்ஜியம், “சரிவிடு, இப்போதைக்குத் தூங்கலாம். நாளைக்கு முடிவிலியோட சந்திப்பு.மறக்காத.”

முடிவிலி என்றதும் ரெண்டு உற்சாகமடைந்தது.

“நட்சத்திரங்கள் எல்லாம் எவ்வளவு அதிகமாகி நம்மளப்பார்க்குது பாரு.,” என கண்சிமிட்டிப் படுத்துக்கொண்டது.

“அட, ஆமாம். மெதுவா எல்லாமே பதுங்கின இடத்திலேர்ந்து வெளில வருது பாரேன்..ரெண்டு, நாலு, ஆறு..”

சற்று நேரத்தில் சுற்றியிருந்த புற்கள் அவர்களது மூச்சொலியில் ஆடத்தொடங்கின.

*

உருளும் கற்களில் இடறிச் சென்று ஒரு சிறு முகட்டை அடைந்திருந்தபோது காட்டின் விளிம்பு தெரியத் தொடங்கியது. புஸ் புஸ் என மூச்சு விட்ட ரெண்டு பூஜ்ஜியத்தை கொக்கி போட்டு பிடித்திருந்தது.

“இன்னும் கொஞ்ச தூரம் உச்சி வந்திடும்.,” என பூஜ்ஜியம் கல்லில் சாய்ந்தபடி சொன்னது.

“ஆமாம்.,” ரெண்டு பெருமூச்சுவிட்டது. பூஜ்ஜியம் உருண்டோடுவதைத் தவிர்க்க படும் சிரமங்கள் அதற்கு சங்கடம் தந்தது. மேலே ஏறிவிட்டு ஒன்றும் இல்லாவிட்டால் என்ன செய்வது?

“என்ன இருக்கும்னு நினைக்கிற?” அதன் மனதைப் படித்தது போல பூஜ்ஜியம் கேட்டது.

தூரத்தில் காடு இன்னும் முழுவதுமாக விழிக்காததுபோல பனிப்போர்வை படர்ந்திருந்தது.

“தெரியலை. ஒன்று இந்த வழியா போயிருக்காதுன்னு தோணுது.”

“அப்போ நல்லதுதானே? முடிவிலியை நீதான் முதல்ல சந்திப்பே!,” எனக் கண் சிமிட்டியது.

பூஜ்ஜியத்தின் கிண்டலைப் புரிந்துகொண்டலும் ரெண்டு எதுவும் சொல்லவில்லை. சின்ன வயதிலிருந்தே எந்த வழியிலும் திருப்திப்படுத்த முடியாததாக இருப்பதன் காரணத்தை புரிந்துகொள்ளமுடியாது தவித்திருந்தது. தனது தாழ்வு மனப்பான்மைக்குக் காரணத்தை உள்ளே தேடிக்கழித்த நாட்கள் மட்டுமே நினைவுக்கு வந்தன.

‘’உனக்கு நம்பிக்கை இல்லைன்னா என்ன பண்ண சொல்றே?” என முகத்தைத் திருப்பிக் கொண்டது.

“இது நம்பிக்கை இல்லை. இப்படி நம்மில் விசேஷமான ஒருத்தன் இருப்பான்னு நான் நம்பலை. அவ்வளவுதான்.”

“ஏன் நீயும் ஒன்றும் விசேஷமானவர்கள் தானே?”

“அப்படி நீதான் சொல்லறே. எனக்கென்னவோ உன்னைப் போல அழகான எண் நம்ம குடிலில் கிடையாதுன்னு தோணும்,” பூஜ்ஜியம் சொன்னதை ஏதோ அரைகுறையாக ரெண்டு ஏற்றுக்கொண்டது.

“உனக்கு ஏதாவது வெறுமையா தோணுதா? வெற்றிடம் மாதிரி..இல்ல இப்ப நாம இருக்கிற கணிப்புக்குடில் சந்தோஷம் தருதா?”

தூரத்தில் மேகங்களைக் கிழித்து சிறு பறவைகள் சலம்பிப் பறந்தன. மூன்றும் ஐந்துமாகச் சிறு கூட்டங்கள் துரத்திப்பிடிக்கும் விளையாட்டு ஆடுவதைப் போல வானில் வடிவங்கள் வரைந்தன.

இரண்டும் பேசாமல் அந்த ஆட்டத்தைப் பார்த்தன, “..நீயும் எனக்கு நினைவு தெரிந்த நாளிலேர்ந்து இதைச் சொல்லறியே. எனக்கு ஒண்ணும் தோணலை. சந்தோசமா இருக்கேன். ஒன்றும் நானும் சேர்ந்து கணினி அழைப்பை ஏற்கத்தொடங்கிட்டா வேற யோசனையே வராது..”

“அப்போ ஒன்று மட்டும் ஏன் தப்பிக்க முயற்சி செய்யுது?”

“அதான் எனக்கும் புரியலை. அறியமுடியாததை அடைய நினைக்கும் ஆசைன்னு நினைக்கிறேன்.”

சிறிது நேரம் ரெண்டு காட்டின் விஸ்தாரத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தது. மெல்ல எழும்பியது. முகம் குழப்பமாக இருந்தாலும் கொஞ்ச தூரத்தில் தெளிவு பிறந்திடும் எனும் எண்ணமே வேகத்தைத் தந்தது.

*

உச்சிக்குச் சென்ற பொழுது மலையின் கண்ணைப் போல ஒற்றைக் கிணறு தனித்து இருந்தது,

“என்னது? மலை மேல இப்படி ஒரு பள்ளம்”

“பள்ளமில்ல, இது பேரு கிணறு. நான் கேள்விப்பட்டிருக்கேன்,” என பூஜ்ஜியம் எட்டிப்பார்த்தது.

இதுவரை கிணறைப் பார்த்திராததால் ரெண்டும் பூஜ்ஜியமும் கொஞ்சம் பயத்தோடு எட்டிப்பார்த்தன. உள்ளே பாதாள இருள்.

“நல்லது நீங்க வந்தாச்சா?”

பின்னால் கேட்ட கணீர் குரலால் ரெண்டும் பூஜ்ஜியமும் பயந்து தள்ளிப்போயின.

ஒற்றைக்கண்ணோடு கத்திரிக்காய் வடிவில் ஒரு உருவம். நீலமான உடல். ஒன்றோடு ஒன்று சேர்க்கமுடியாதபடி கத்தரிக்கப்பட்ட சிறு கைகள்.

“எவ்வளவு நாளா காத்திருப்பது?” நண்பனைப் பார்த்தது போல சிரித்துக்கேட்டது.

“எங்களை எதிர்பார்த்தீங்களா?” ரெண்டின் முகத்தில் கொஞ்சம் ஆவல்.

“பின்ன? இதுவழியாதானே இறங்கிப்போனீங்க? எப்படியும் வந்திடுவீங்கன்னு தெரியும்”

தன் காதில் விழுந்ததை நம்ப முடியாமல் பூஜ்ஜியம் ஆச்சர்யமடைந்தது.

“இதுவழியா இறங்கிப்போகமுடியுமா?”

“வழக்கம்போல கலாட்டாவ ஆரம்பிச்சிட்டீங்களா? எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்ல. வாங்க வாங்க.,” என கத்திரிக்காய் கைவிரல்களை சொடுக்கியபடி இருவரையும் அழைத்தது.

பூஜ்ஜியமும், ரெண்டும் ஆச்சர்யத்தில் பேச்சு வராது அதைத் தொடர்ந்தன. ஒரு வேளை தான் நினைத்தது உண்மையோ? ஏதோ ஒரு வசீகரமான உணர்வு ரெண்டின் அடி வயிற்றில் உண்டானது. பூஜ்ஜியம் தன்னிடம் இல்லாத வயிறைத் தடவும் பாவனையைச் செய்தபடி தொடர்ந்தது.

சில நொடிகள் சரிவில் இறங்கியபோது அங்கே சிறு கல் குடில்கள் கண்களில் தோன்றின. பல கத்திரிக்காய் உருவங்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தன.

“வாங்க வாங்க. உடனே நான் திரும்பப் போகணும். இன்னிக்கு எத்தனை பேரு வருவாங்கன்னு தெரியலை,” என தனக்குள் பேசியபடி கத்திரிக்காய் அவர்களை கூட்டிச் சென்றது.

இரு உருவங்கள் வருவதைப் பார்த்ததும் பிற கத்திரிக்காய்கள் வேலையை விடுத்து கூடிவிட்டன.

“இங்க பாருங்க வந்தாச்சு. இனிமே நீங்களாச்சு அவங்களாச்சு. நான் கிளம்பணும்,” என பொருட்களை ஒப்படைப்பது போல பூஜ்ஜியத்தையும் ரெண்டையும் கூட்டத்தின் முன் நிறுத்தியது.

“வாங்க,” என அழைத்த சிறு கத்திரிக்காய் ஒன்று பூஜ்ஜியத்தைப் பார்த்து கண்ணடித்தது.

“அதுக்கு கண்ணு தெரியாது” என மெல்லிய குரலில் சொன்ன மற்றோரு குட்டிக்காய் பெரிய கத்திரிக்காய் திரும்பிப் போன வழியைக் காட்டியது. தனக்குள் ஏதோ பேசியபடி கைகளை ஆட்டிக்கொண்டு மேட்டில் ஏறிய பெரிய கத்திரிக்காயை பூஜ்ஜியமும் ரெண்டும் கோபத்துடன் பார்த்தன.

“நீங்க யாரு. இப்ப சொல்லுங்க,” என நடுத்தர பழுப்புக்கத்திரிக்காய் கேட்டது.

“நான் பூஜ்ஜியம். இவன் ரெண்டு. நாங்க கணிப்புக்குடில்லேர்ந்து வர்றோம்.”

பூஜ்ஜியம் சொன்னது விளங்காதது போல எல்லா கத்திரிக்காயும் ஒன்றை ஒன்று பார்த்தன. சின்ன கத்திரிக்காய்கள் தங்கள் பிஞ்சுக்கைகளால் பூஜ்ஜியத்தைத் தடவின. சில ரெண்டின் மீதேறி சறுக்கிவிளையாடத் தொடங்கின. இதுக்கு நடுவே, கணிப்புக்குடிலில் கதையை மொத்தமாகச் சொன்ன ரெண்டு அவர்கள் தேடி வந்த முடிவிலி பற்றி எதுவும் சொல்லாமல் முடித்துக்கொண்டது. பூரிப்புடன் பூஜ்ஜியத்தைப் பார்த்தது.

“இங்க எண்கள் எலலாம் கிடையாது. ” என்றது பழுப்புக்கத்திரிக்காய்.

“அப்ப இங்க எங்களை மாதிரி ஆனா நீட்டமா ஒரு உருவம் இங்க வரலியா?”

“இல்லையே..எங்களைத் தவிர நாங்க வேற யாரையும் பார்த்ததில்லை. ,” என பழுப்புக்கத்திரிக்காய் சொன்னது.

ரெண்டின் முகம் சோகத்தில் வாடிப்போனது.

“இது இப்படித்தான் முடியும்னு தெரியும். எனக்குத் தோன்றியது உண்மையாகும் சாத்தியம் இருந்தா நானும் ஏன் இப்படி? ,” என தனக்குள் முனகியது.

ரெண்டின் கைகளைப் பிடிக்க வந்த பூஜ்ஜியத்தைத் தள்ளிவிட்டு அங்கிருந்து நகர்ந்தது.

தனது நண்பியின் கோபத்தைப் புரிந்துகொண்ட பூஜ்ஜியம் தனது இயலாமையை நினைத்து ரொம்பவும் வருந்தியது. எப்படியேனும் அதன் சிக்கலை சரியாக்க வேண்டும். ஆனால் எப்படி?

“உங்களைத் தொந்திரவு செய்ததற்கு மன்னிக்கவும். இன்றைக்கு இங்கு தங்குவதற்கு இடம் கொடுத்தீங்கன்னா நாங்கள் நாளைக்குக் கிளம்பிடுவோம்,” என அங்கே இருந்த வயதான கத்திரிக்காயிடம் சொன்னது.

பரிதாபப்பட்ட மூத்த கத்திரிக்காய் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யச் சொல்லிவிட்டு நகர்ந்தது.

மாலை இருளத்தொடங்கும்போது கத்திரிக்காய்கள் அனைத்தும் சோம்பி படுக்கத் தொடங்கியதை பூஜ்ஜியம் ஆச்சர்யத்துடன் பார்த்தது. நன்றாகச் சாப்பிட்டபின்னர் பூஜ்ஜியம் ரெண்டுக்குத் தேவையான உணவை எடுத்து வைத்தது.

சாப்பாட்டைத் தள்ளிவிட்ட ரெண்டு வேறொரு பக்கமாகத் திரும்பியது

“எப்படி சுறுசுறுப்பாக இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்க பாறேன்,” எதையாவது பேசி ரெண்டின் மனநிலையை மாற்றப்பார்த்தது பூஜ்ஜியம். ரெண்டு அசைந்து கொடுக்கவில்லை.

சூரியன் மறைவதற்கு இன்னும் அதிக நேரமில்லை.

சற்று தூரத்தில் தன் கூட்டத்தினரைத் திரும்பிப்பார்த்தபடி பெரிய கத்திரிக்காய் இவர்கள் இருவரும் இருந்த இடத்தை நோக்கி நடந்தது. யாருக்காகவோ பயந்து வருவது போலொரு பூனைக்கள்ளம் அதன் நடையில்.

“சாப்பிட்டாச்சா?” என பூஜ்ஜியத்தைப் பார்த்து கேட்டது.

“நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். இது எங்க அப்பாவுக்கு நான் செஞ்சி கொடுத்த சத்தியத்தை மீறுகிற வேலை. ஆனால் என் பேரப்பிள்ளைங்க மாதிரி இருக்கீங்க. உங்க கிட்ட மறைக்க முடியாது”

ரெண்டும் பூஜ்ஜியமும் சட்டென கவரப்பட்டு எழப்பார்த்தன.

“அப்படியே உட்காருங்க. நான் சொல்றதை வேற யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் செய்யுங்க,” என திரும்பிப் பார்த்தபடி கேட்டது.

கத்திரிக்காயின் கொக்கிக்குள் தனது தலையை நுழைத்து எடுத்தது ரெண்டு. அப்படி செய்ய முடியாத பூஜ்ஜியம் கத்திரிக்காயின் உடலை ஒருமுறை உரசியது.

குரலை இன்னும் தாழ்த்திக்கொண்ட கத்திரிக்காய், “இப்படி எறங்கி வடக்கு பக்கம் போனீங்கன்னா,  ரெண்டு ஆலமரங்கள் வரிசையா வரும். அதைத் தாண்டியவுடன் ஒரு சேரி வரும். அங்க ஒரு எண் கூட்டம் இருக்கு. அவங்க கிட்ட கேட்டால் உங்களுக்கு ஒரு வழி கிடைக்கலாம்..”

இன்னொரு எண் கூட்டம் என்றதும் ரெண்டின் முகம் பிரகாசமானது.

“இதை ஏன் முன்னாடியே சொல்லலை..?” என கடிந்துகொள்ளும் குரலில் கேட்டது.

“என்னோட தாத்தா காலத்துல நாங்க அங்க தான் இருந்தோம். அப்போ அங்கிருந்த ஆலமரங்கள் நிரை மட்டுமே இருந்தது. ஒவ்வொரு வருஷமும் ஆலமரங்களுக்கு இடையே போட்டி வரும். யாரிடம் அதிகக் கிளைகள் இருக்கு என்பதுதான் அந்தப்போட்டி. அதுக்காக ஆலமரம் ரெண்டும் ஒரு நிபந்தனை போட்டுக்கிச்சு. ஏதாவது ஒரு கணித சூத்திரம் வழியாகத்தான் கிளைகள் வளரணும் என்பதுதான் அந்த நிபந்தனை.  சரின்னு ரெண்டும் ஆளுக்கு ஒரு சூத்திரத்தை எடுத்துகிச்சாம். முதல் ஆலமரம் ஃபிபனோச்சி எண், அதாவது ஒவ்வொரு கிளையும் அதுக்கு முந்தைய ரெண்டு கிளையோட கூட்டு எண் கிளைகளாக விரியும். ரெண்டாவது ஆலமரம் எடுத்துக்கொண்ட சூத்திரம் பெருக்கல் எண்கள். ஒவ்வொரு கிளையும் முந்தையதைவிட ரெண்டு மடங்கு அதிகமாகும். மடமடவென வளர்ந்து ரெண்டுமே ஆகாயத்தை முழுமையாக அடைச்சிகிச்சாம். யாரு ஜெயித்ததுன்னு பார்க்க உட்காரும்போதுதான் ரெண்டுக்கும் நடுவரே இல்லையேன்னு தோணிச்சாம். அப்போ பக்கத்திலே இருந்த எங்க தாத்தா கத்திரிக்காயை நடுவரா போட்டது. ”

ரெண்டும் பூஜ்ஜியமும் திறந்த வாயை மூடாமல் கேட்டன. மூத்த கத்திரிக்காயும் கதை சொல்லும் ஆர்வத்தில் முழுமையாக இருண்டு போய்விட்டதை உணரவில்லை.

“எங்க தாத்தாவுக்கு எண்ணவே தெரியாது என்ற உண்மை ஆலமரங்களுக்குத் தெரியாது. தாத்தாவும் எப்படி எப்படியோ கணக்குப் போடுவது மாதிரி பாவ்லா செய்திருக்கிறார். ”

“பாவ்லா?”

“நடித்திருக்கிறார்..தெரியாததைத் தெரிந்தா மாதிரி காட்டிக்கிறது”

“சரி, யாரு ஜெயித்ததுன்னு தெரியுமா?”

“இல்ல, அது தெரியாது”

மூத்த கத்திரிக்காய் சற்று இடைவெளிவிட்டது.

“அதுக்காக மனசு ஒடஞ்சிப்போயிடாதீங்க. என்னோட கதைக்காக இதைச் சொல்லலை. உங்களுக்காகத்தான்”

“அப்புறம் எப்படி இந்த மலைக்கு வந்தீங்க?”

“அங்க நாங்க வளரமுடியாதபடி இருள். கஷ்டப்பட்டு பல மாசத்துக்குப் பிறகு எங்க தாத்தாவோடு சின்ன கூட்டம் இந்த மலைக்கு வந்துட்டோம். அங்க போனா உங்களுக்கே தெரியும்.”

ரெண்டும் பூஜ்ஜியமும் ஒன்றை ஒன்று பார்த்தது.

மூத்த கத்திரிக்காய் மேலும் குரலைத் தாழ்த்தி, “அந்த ஆலமரங்களுக்கு முடிவிலி தெரியும்,” என முடித்தது.

**

“கத்திரிக்காய் சொல்றதை நம்பறியா?”

அதிகாலையிலேயே சூரியனின் கடுமை அவர்களது முகத்தில் தெரிந்தது. மலையிலிருந்து கீழிறங்கிப்போகும்போது ரெண்டு எட்டு எடுத்து வைத்த வேகத்தைப் பார்த்து பூஜ்ஜியம் கேட்டது, “நில்லு. நெஜம்மாவே அந்தக் கதையை நம்பறியா?”

“உன்னிடம் வேற ஏதாவது புது கதை இருக்கா?”

பூஜ்ஜியம் எதுவும் சொல்லாமல் ரெண்டைத் தொடர்ந்தது.

“எனக்கு எதுவும் வழி தெரியலை. இப்ப எதையாவது நம்பித்தானே ஆகணும். ஒன்று எங்க போச்சுன்னு தெரியலை. நாம போற வழி சரியான்னு தெரியலை. திரும்ப நம்ம குடிலுக்குப் போவாமான்னு தெரியலை. இந்த பயணத்துக்குத் தேவையான வலு தொடர்ந்து இருக்குமான்னு தெரியலை.

ரெண்டு மிகவும் விரக்தியாகப் பேசியதைக் கேட்க முடியாது பூஜ்ஜியம் தனது வாயை மூடிக்கொண்டது.

“இப்படி யோசிச்சு பாரு. மேல மேல என எட்ட முடியாத உயரத்துக்குப் போன ரெண்டு மரங்கள் நம் முன்னாடி இருக்கு. அதுங்க முடிவிலியை எட்டியிருக்கும் சாத்தியம் இருக்கில்ல?”

“அப்படி முடிவிலியைப் பார்த்திருந்தா அந்த மரங்கள் ஏன் இன்னும் அங்க இருக்கு?” என கேட்ட பூஜ்ஜியம் தனது நண்பியை மேலும் சங்கடப்படுத்த விரும்பவில்லை.

“சரி வா அங்கப் போய் பார்ப்போம்,” என உற்சாகமாக நடந்தது.

*

படம்: ஆதிரா கிரிதரன்

தூரத்தில் தெரிந்த மரக்கூட்டம் அருகே செல்லச் செல்ல ஒற்றை மரமானது. ஒரு மரத்தில் இத்தனை விழுதுகள் இருக்குமான்னு ரெண்டுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. ஒவ்வொரு விழுதும் ஒரு மரம் போல தடிமனாக இருந்தது. மண்ணில் இறங்கிய விழுதுகள் செங்குத்தாக நின்ற கிளைகள் போல அசையாமல் இருந்தன. மரத்தைச் சுற்றி ஒரே இருள். வானத்தை அடைத்திருந்த கிளைகளினூடாக சிறு சிறு வெளிச்சம் வரப்பார்த்தாலும் கீழுள்ள அடர்ந்த கிளைகள் தடுத்திருந்தன.

“நட்சத்திரமா?” என பூஜ்ஜியம் வானத்தைப் பார்த்தது.

“இல்லை..கிளைகலெல்லாம் வானத்தை அடைச்சிருக்கு. அதோட இடைவெளில கொஞ்சம் வானம் தெரியுது. எத்தனை இருட்டு. அதான் கத்திரிக்காயெல்லாம் இங்கேயிருந்து தப்பிச்சிட்டாங்க”

“ஆ,” பூஜ்ஜியத்தால் ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை. “நம்ம குடிலில் தெரியும் வானமும் இப்படித்தான் ஏதோ ஒரு மரத்தால மூடப்பட்டிருக்கும்னு தோணுது”

“அப்ப பகல்ல மரம் தெரியணும்ல? சரி வழக்கம்போல பேசாத, இங்க தான் எங்கியாச்சும் முடிவிலி இருக்கணும். தேடிப்பார்ப்போம் “

மண் முழுவதும் வேர்களாலும், விழுதுகளாலும் நிரம்பி இருந்தது. ரெண்டு அங்குமிங்கும் மாட்டிக்கொண்டு தவித்தது. உருண்டு சென்றபடி சுற்றிப்ப்பார்த்த பூஜ்ஜியம் ஒரு பழுத்த வேரின் அடியில் ஒரு சிறு பொந்திலிருந்து வந்த அசைவை பார்த்தது.

“ஏய், ரெண்டு, சீக்கிரம் வா..”

“எங்க?”

“இங்க , இங்க,” பூஜ்ஜியம் விழுதுகளுக்கிடையே எம்பி எம்பி குதித்தது.

வெளிச்சம் இல்லாத அந்த பொந்தில் தெரிந்த அசைவிலிருந்து சத்தம் வந்தது

“ம்ராஆஆ”

பெரிய பெருச்சாளி வெளியே வரப்போகிறதோ என ஒரு நிமிடம் பயந்த ரெண்டு, பூஜ்ஜியத்தின் வளைவில் கோர்த்துக்கொண்டது.

“அதோ இருக்கு முடிவிலி.அதோ,” என பூஜ்ஜியம் துள்ளியது.

கண்கள் இருளுக்குப் பழகியதும் அந்த பொந்தில் முடிவிலி வடிவில் ஒன்று படுத்திருப்பது தெரிந்தது.

ரெண்டும் குதிக்கத்தொடங்கியது.

“ஆஆ, சத்தம் போடாதீங்க..டீயும் பிஸ்கெட்டும் ரெடியா,” என சோம்பல் முறித்தபடி வெளியே வந்ததைப் பார்த்ததும் பூஜ்ஜியம் முகம் தொங்கிப்போனது.

“நீ, நீங்க..,” எனத் தடுமாறியது ரெண்டு.

“எட்டு,” என கொட்டாவிவிட்டபடி சொன்னது. “நான் எட்டு..எங்க என்னோட டீ?” என வெறுப்பாய் கேட்டது.

இங்கே எப்படி எட்டு வந்தது எனும் குழப்பத்திலும் அது முடிவிலி இல்லை என்பதாலும் ரெண்டும் பூஜ்ஜியமும் எரிச்சலடைந்தன.

“டீயெல்லாம் நாங்க எடுத்து வரலை..நீங்க முடிவிலி இல்லையா?”

“ஹஹ..சில சமயம் படுத்துகிட்டே தண்ணில என்னைப் பார்ப்பேன்..அப்படித்தான் இருப்பேன் ஹீ,” எனப் பெரிய பற்களைக் காட்டி இளித்தது. மறு நிமிடமே, “வாங்க போய் டீ எடுத்துக்கலாம்,” எனத் தன் பெருத்த உடலை உலுக்கிக் கிளம்பியது.

இருவரும் குழப்பத்துடன் அதைப் பின் தொடர்ந்தனர்.

இருளில் தட்டுத்தடுமாறி நடந்த ரெண்டு, வேகமாகச் சென்ற எட்டைத் தொடர்ந்தது. தலைக்குமேல் விரிந்திருந்த மரத்தின் நிழல் முடிவில்லாமல் நீண்டபடி இருந்தது. சிதறிக்கிடந்த ஒரு பொட்டு வெளிச்சம் அங்குமிங்கும் அசைந்தததினால் ஒரு விலங்கின் மீது நடக்கும் உணர்வு ஏற்பட்டது. இது ஏதோ ஒரு பாதாள உலகில் தான் முடியும், அங்கு முடிவிலி இருந்தாலும் நம்மால் இங்கிருந்து தப்பிக்க முடியுமா? பலத்த மூச்சு விட்டபடி ரெண்டு தொடர்ந்தது.

மெல்ல கண் கூசும் வெளிச்சப்படலை அடைந்தனர். வானில் தெரிந்த கிளைகளிருந்து கூட்டங்கூட்டமாக பறவைகள் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு மாறி மாறி பறந்துகொண்டிருந்தன.

எட்டு எதுவும் பேசவில்லை. இவர்கள் பின்னால் வருகிறார்களா எனக்கூட அது திரும்பிப்பார்க்கவில்லை.

சதுப்பு நிலம் முடிந்ததும் சட்டென ஒரு புகை மூட்டம் மண்ணிலிருந்து எழும்பியதை பூஜ்ஜியம் பார்த்தது. பின்னால் வந்த ரெண்டு புகையை மட்டும் பார்த்தது.

“ஏதோ நெருப்பு”

“ஏன்”

“நெருப்பு இருந்தால் தானே புகை வரும்?”

எட்டு எதுவும் பேசவில்லை. நீரோடும் ஓசை அதிகரித்தபடி இருந்தது.

“இதோ பார் நீர் இருந்தாலும் புகை வரும்”லும், என சட்டென எட்டு உட்கார்ந்தது.

அதன் காலுக்குக் கீழே பிளவிலிருந்து மூச்சு விடும் தவளை போல சிறு கொப்பளங்களில் நீர் வெளியேறிக்கொண்டிருந்தது. ஆவியிலிருந்து நீர் சொட்டுவது போல புகைக்கு நடுவே ஈரம்.

“இதோ இந்தா,” என ஆலமர இலைகளில் கோர்த்த ஒரு குடுவைக்குள் நீரை நிரப்பி ஆளுக்கு ஒன்று என பின்னால் தள்ளியது.

அதுவரை பேசாது வந்த ரெண்டு ஆச்சர்யம் தாங்காது, “ஆ, அற்புதமான வாசம். ருசி பற்றி சொல்லத்தேவையில்லை.,” அதன முகம் பிரகாசமானது.

“ஏன்? ருசிக்கும் வாசத்துக்கும் என்ன சம்பந்தம்,” என பூஜ்ஜியம் கேட்டது.

“தெரியாது. சொல்லக்கேட்டிருக்கேன்.”

ரெண்டு மிடறு டீயைக் குடித்தபின், எட்டு இவர்கள் பக்கம் திரும்பி, “மூவாயிரத்து முண்ணூத்தி முப்பத்தி மூணு,” என்றது.

“என்னது?”

“உங்களுக்கு முன்னாடி முடிவிலித் தேடி வந்தவங்க கணக்கு இது”

பூஜ்ஜியம் ஒரு முறை சப்பையாகி மீண்டது. எட்டு சொன்னதை ரெண்டு நம்ப முடியாமல் வாய் பிளந்து நின்றது.

“ஆச்சர்யமா இருக்கா? எனக்கும் சந்தேகம் இருந்தது. வாங்க என்னோட,” குடுவையை பின்னால் எறிந்துவிட்டு தனது பெருத்த உடலைத் தூக்கிக்கொண்டு நடந்தது.

இனி எந்த சாட்சியும் தேவையில்லை என்பது போல பூஜ்ஜியமும் ரெண்டும் தளர்வாக நடந்தன. முந்தினம் இருந்த உற்சாகம் இத்தனை வேகமாக வடிந்துவிடும் என இரண்டும் நினைக்கவில்லை. தூரத்தே தெரிந்த சிறு மலைக்கூட்டம் மல்லாந்து வீழ்ந்த பழங்கள் போலக் காணப்பட்டன. எட்டின் நடையில் தெரிந்த மிகு உற்சாகம் பூஜ்ஜியத்தை மேலும் சோர்வாக்கியது.

சிறிது தூரத்தில் தெரிந்த புளியமரத்தை அடைந்ததும் கிளைகளில் வளையவளையமாகத் தொங்கிக்கொண்டிருந்த ஒன்றை எட்டு சுட்டிக்காட்டியது.

வளையங்களுக்குள் வளையம் என ஒரு பெருமுடிச்சே உடலாகக் கிடந்த நத்தை மரத்தைப் பாதி மூடியிருந்தது. அத்தனை பெரிய நத்தையை இதுவரை அவர்கள் கண்டதில்லை. இவர்கள் அருகே வந்ததும் மிகச் சோர்வாக தனது இமைகளைத் தூக்கிப்பார்த்தது. இமைகளை அசைப்பது அன்றைய தினத்துக்கான அளப்பெரிய செயல் எனும் ஒரு பாரம் அதன் பார்வையில் தெரிந்தது. பூஜ்ஜியத்தையும் ரெண்டையும் பார்த்தபின்னர் மெல்ல தன் மஞ்சள் விழிகளைத் தாழ்த்திக்கொண்டது.

“இது நூத்தி ஐம்பது பூஜ்ஜியத்தைத் தாண்டிய பதுமம். பதுமூப்பன். முதன்முதலா முடிவிலியைத் தேடி வந்தவர்னு எனக்குச் சொன்னாங்க”

எட்டு மிகப் பெருமையான முகத்தோடு அறிமுகப்படுத்தியது.

கொழகொழவென்றிருந்த அதன் அடர்த்தியான உடலை பூஜ்ஜியம் மலைப்பாகப் பார்த்தது. ஆங்காங்கே மரத்தின் கிளையா பதுமனா எனத் தெளிவாகத் தெரியவில்லை. உடலின் சில வளைவுகள் வயதேறிய மரம் போலவும் கல் போலவும் உறைந்திருந்தது. கொத்து கொத்தாக ஊனுண்ணிகளும் மரவட்டைகளும் ஊர்ந்தபடி இருந்தன. பதுமம் எதைப்பற்றியும் கவலையற்ற மோன நிலையில் மெல்ல வாயசைத்தபடி கிடந்தது. உயரக்கிளைகளிலிருந்து மூப்பனின் உடற்பகுதிகளா கிளைகளா எனத் தெரியாத வடிவில் கனத்த பட்டைகள் உதிர்ந்தபடி இருந்தன.

“இது மாதிரி வெள்ளம், பிரமகற்பம்னு இந்த காடு முழுக்க இருக்காங்க,” என எட்டு பெருமூச்சுவிட்டது.

“அப்ப முடிவிலியோட சக்தி பற்றிய கதையெல்லாம் பொய்யா? குரு பாடல்லெல்லாம்?”

“அதெல்லாம் பொய்னு யார் சொன்னது? பதுமம், வெள்ளம் மாதிரி முடிவிலியும் ஒண்ணு இருக்கு. ஆனா அதைத் தேடி சந்தோஷத்தை இழக்காமல் இருக்கணும். இப்படி யோசித்துப் பார் – பூஜ்ஜியமில்லாம எதுவும் உண்டா? அதைப் பாரு அங்க. நம்மை பலமடங்கு பெருக்கினா வர்றதுதானே இந்த பதுமம்?”

ஏமாற்றத்தை தாங்கமுடியாத பூஜ்ஜியம் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டது.

“எனக்கும் இந்த ஏமாற்றம் பல வருஷங்கள் தாங்க முடியாம இருந்தது. ஏன் இப்படி ஒரு பயணத்துக்காகக் கிளம்பினேன்னு என்னையே திட்டித் திட்டியே பல வருடங்கள் ஓடின. ஆனா ஒரு நாள் ஆலமரத்தைப் பார்த்தபோது யோசிச்சேன். யாரு வானத்தை முதல்ல தொடுவதுன்னு ஒரு போட்டி இருந்திருக்கும். தொட்ட பின்னாடி அந்த ரெண்டு மரமும் இழந்தது என்னென்னு பேசிக்கும் இல்லையா? இல்ல கண்ணுக்குத் தெரியாம வானத்தில இன்னும் போட்டி தொடருதோ என்னமோ?”

ரெண்டும் பூஜ்ஜியமும் ஏதோ புரிந்தது போல் எட்டு சொன்னவற்றைக் கேட்டன.

“நம்மகிட்ட ஆதியில் முடிவிலி பற்றி சொன்னவர் யார்? அதை அருகிலிருந்து கேட்டவர் யார்? யாருக்கும் தெரியாது. ஆனால் நான் கேட்ட இதே கதையைத் தான் பதுமமும் கேட்டிருக்கிறார், நீங்களும் கேட்டிருப்பீங், கணிப்புக்குடிலின் மூத்தவரும் கேட்டிருப்பார். ஏதோ ஒரு விதத்தில நம்ம இயந்திரத்தனமான கணினி வேலைக்கு நடுவே நம் வாழ்வை நலமாக்கும் நோக்கம் இந்த கதைகளுக்கு இருக்கு. ஆலமரம் கிளைகளைப் பரப்பி வானத்தில ஏதோ தேடுதே அதுவும் நம் கதைதானே? முடிவிலியை ஒரு நாள் நான்  எட்டிவிட்டதாக உணர்ந்தேன். அதுக்கப்புறம் உண்டான சோர்வும் அலுப்பும் கொஞ்சநஞ்சமில்லை. அப்புறமாகத்தான் நான் என் கற்பனை மூலம் பல கதைகள் உருவாக்கத் தொடங்கினேன். இப்ப இந்த கற்பனையும் அது தரும் பறக்கிற அனுபவமும் தான் முடிவிலி என முடிவுக்கு வந்துட்டேன்.”

“அப்ப முடிவிலி தனியான எண் இல்லையா?” புரிந்தும் புரியாததுமாக ரெண்டு கேட்டது.

“நாமில்லாம முடிவிலி யாரு? நமக்குள்ள பல குறைகள் இருக்கலாம். அதெல்லாம் சரி செய்யத்தானே கூட்டலும், கழித்தலும், பெருக்கலும்? எல்லாமே ஒரே எண்ணுக்குள்ள இருந்துட்டா இதுக்கெல்லாம் என்ன தேவை? கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ நாம நம்மோட குறைகளா எண்ணக்கூடியவற்றை தாண்டி ஈசியா போக முடியும். முடிவிலியா இருந்து யோசிச்சுப் பாருங்க. ஒவ்வொரு எண்ணும் அதோட உறுப்புகள் தான். இப்படி அரையும் குறையுமா இருக்கிற நாமெல்லாம் சேரச் சேரத்தான் முடிவிலியே வரும். கூட்டலோ பெருக்கலோ நாம மனசுக்குள்ள பெருசாவதுதான் முடிவிலி. நம்ம கணக்குகள் முடிஞ்சு மனசுல பாட்டும் கவிதையும் தொடங்கும் இடம் அதுதான்.”

“நாம குறைகளா நினைக்கிற விஷயங்களைத் தாண்டிப்பார்க்கணும்னா விசாலமான பார்வையை வளர்க்கணும். அதுதான் முடிவிலி தரும் மந்திரச் சக்தி,” என ரெண்டும் பூஜ்ஜியமும் ஒரே குரலில் கூறின. சிறு வயதிலிருந்தே தன்னுள்ளே இருந்த பாரம் முழுவதுமாக விலகியதை ரெண்டு உணர்ந்தது.

“மறக்காதீங்க, நான் இப்ப சொன்னதும் முடிவிலி பற்றிய ஒரு கதைதான்..இன்னும் நீங்க கற்பனை செஞ்சீங்கன்னா நான் சொன்னது மாதிரி பலதும் சொல்லுவீங்க,” எனச் சொல்லிச் சிரித்தபடி தன் மரப்பொந்தை நோக்கி நடந்தது எட்டு.

“ஒன்று காணாமல் போனதால் தானே தேடத்தொடங்கினோம். நாங்க அதைத் தேட வேண்டாமா?” என ரெண்டு எட்டிடம் கத்திக் கேட்டது.

எட்டு எதுவும் சொல்லாது அவர்களை நோக்கிச் சிரித்தது. முதல் முறையாக எந்தவிதமான வாக்குவாதமும் செய்யாது ரெண்டும் பூஜ்ஜியமும் கணிப்புக்குடிலை நோக்கி சந்தோஷமாக துள்ளி ஓடின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.