ஆட்டோஃபாக்

காத்திருந்த மூன்று பேர்களின் மீதும் இறுக்கம் கவிந்திருந்தது.  அவர்கள் புகை பிடித்தார்கள், முன்னும் பின்னும் நடை போட்டனர், சாலையோரத்தில் வளர்ந்திருந்த பூண்டுச் செடிகளை எதற்கென்றறியாமல் உதைத்தனர். மேற்குத் திக்கில் தூரத்தில் கோடாக இருந்த மலைகளின் மீதும், வரிசையாக அருகே இருந்த கச்சிதமான ப்ளாஸ்டிக் வீடுகள் மீதும், பழுப்பாகக் கிடந்த வயல்வெளிகள் மீதும் சூடான மத்தியானச் சூரியனின் கண் கூசும் வெயில் வெக்கை படர்ந்தது.

நேரம் கிட்டி வந்திடுச்சு,’ தன் மெல்லிய கைகளைச் சேர்த்துப் பின்னியபடி, எர்ல் பெரீன் சொன்னார். ‘சுமையைப் பொருத்து அது மாறுகிறது, ஒவ்வொரு பௌண்ட் கூடுதல் எடைக்கும் அரை வினாடி.’

கசப்போடு மோரிஸன் பதில் சொன்னார்,’நீங்க என்ன அதைக் கணக்குப் போட்டு, வரைஞ்சு வச்சிருக்கீங்களா? அதைப் போலவே மோசமா நீங்களும் இருக்கீங்க. இப்ப அது தாமதமா வருதுன்னு நாம்ப சும்மா பாவிப்போமே.’

மூன்றாவது நபர் எதுவும் சொல்லவில்லை. நீல் வேறொரு குடியிருப்பிலிருந்து இங்கு பார்வையாளராக வந்தவர்; அவர்களோடு வாதிடும் அளவுக்கு அவருக்குப் பெரீனையோ, மோரிஸனையோ அவருக்கு அதிகம் தெரியாது. மாறாக அவர் கீழே குனிந்தமர்ந்து, தன் அலுமினம் சோதிப்பு அட்டையில் இருந்த காகிதங்களைத் திருத்தி அமைத்தார். எரிக்கும் சூரியனில், நீலின் கைகள் பழுப்பாகி, ரோமமடர்ந்து, வியர்வையால் மின்னின. பலமுள்ளவர், செடுக்கான நரை முடி, கொம்பால் விளிம்புகள் செய்யப்பட்ட மூக்குக் கண்ணாடியோடு இருந்தவர் மற்ற இருவரை விட வயதானவர். அவர் முழுக்கால் பேண்ட்ஸ், ஒரு ஸ்போர்ட்ஸ் சட்டை, சப்தம் செய்யாத காலடி கொண்ட காலணிகளை அணிந்திருந்தார். அவருடைய கைவிரல்கள் நடுவே உலோகத்தாலான, செயல் திறனுள்ள ஒரு மசிப் பேனா மின்னியது.

என்ன எழுதறீங்க?’ பெரீன் குறையாகக் கேட்டார்.

நாம பயன்படுத்தவிருக்கிற வழிமுறை என்னங்கிறதை எழுதி வைக்கிறேன்.’ ஓநீல் மென்மையாகச் சொன்னார். ‘இப்போதே திட்டமா எழுதி வைப்பது நல்லது, தோணறபடியெல்லாம் செய்து பார்க்கிறதை விட அது மேல். நாம என்ன முயன்று பார்த்தோம், எது வேலை செய்யல்லைங்கிறது எல்லாம் நமக்குத் தெரியணும். இல்லைன்னா, நாம சுத்திச் சுத்தி வருவோம். நம்மளோட பிரச்சினை தொடர்பு சரியா இல்லாததுதான்; நான் அப்படித்தான் இதைப் பார்க்கிறேன்.’

தொடர்பு,’ மோரிஸன் தன்னுடைய ஆழ்ந்த, நெஞ்சிலிருந்து வரும் குரலில் ஆமோதித்தார். ‘ஆமாம், நாம் அந்த பாழாப் போறதோட தொடர்பு கொள்ளவே முடியல்லை. அது வருது, தன்னோட சுமையை போடுகிறது, போய் விடுகிறதுநமக்கும் அதுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.’

அது ஓர் எந்திரம்,’ கிளர்வடைந்து பெரீன் சொன்னார். ‘ அது உயிரில்லாததுகுருடு, செவிடு.’

ஆனால் அது வெளி உலகோடு தொடர்பு கொண்டிருக்கிறதே.’ நீல் சுட்டினார். ‘அத்தோடு தொடர்புக்கு ஏதாவது வழி இருக்க வேண்டும். குறிப்பிட்ட பொருளுள்ள சைகைகள் அதற்கு அர்த்தமாகின்றன; நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவை என்ன என்று கண்டுபிடிப்பதுதான். அது உண்மையில் மறுகண்டுபிடிப்புதான். பத்து லட்சம் சாத்தியக் கூறுகளில் ஒருவேளை அரை டஜன் தான் இருக்கும்.’

ஒரு தாழ்ந்த நிலை ஒலியாக ஏதோ உருளும் ஒலி அவர்கள் பேச்சில் இடையிட்டது. அவர்கள் எச்சரிக்கையோடு, விழிப்படைந்து மேலே பார்த்தனர். அந்த நேரம் வந்து விட்டது.

இதோ வந்துடுத்து,’ பெரீன் சொன்னார். ‘ஓகே, புத்திசாலியே, அதோட வழக்கத்தில ஒரு மாறுதலாவது செய்து காட்டுங்க பார்க்கலாம்.’

அந்த ட்ரக் மிகப் பெரிதாக இருந்தது, இறுக்க அடைக்கப்பட்டிருந்த அதன் பளுவால் அரைபடும் ஒலியெழுப்பி வந்தது. பல விதங்களில், மனிதர்கள் இயக்கிப் பயன்படுத்தியிருந்த வண்டிகள் போலத்தான் பார்க்க இருந்தது, ஆனால் ஒரு வித்தியாசம் இருந்ததுஓட்டுபவருக்கான கூண்டு ட்ரக்கில் இல்லை. நீளவாக்கில் இருந்தது பொருட்களை ஏற்றி இறக்க உதவும் பலகை, வழக்கமாக முன்விளக்குகள், ரேடியேட்டர் போன்றன இருக்கும் இடத்தில் நார்களால் செய்யப்பட்ட கடல்பஞ்சு போன்று திண்மையுள்ள உணர்விகள் இருந்தன, பொருள் நகர்த்தலுக்கான இந்த நீட்சி சாதனத்தின் குறைவான உணரும் கருவிகள் அவை.

மூன்று மனிதர்கள் இருப்பதை உணர்ந்த ட்ரக் மெதுவாகி நின்றது, கியர்களை மாற்றியது, தன் அவசர ப்ரேக்கை இழுத்துப் பொருத்தியது. அதன் தொடர்பு சாதனங்கள் செயலுக்கு வரும் நேரம், ஒரு கணம் ஆயிற்று; பிறகு அந்த ஏற்றி இறக்கும் பலகையின் ஒரு பகுதி சாய்ந்தது, சாலையில் பல பெட்டிகள் சரிந்தன. அந்தப் பொருட்களோடு ஒரு பட்டியல் போட்ட காகிதமும் மிதந்து விழுந்தது.

உங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியும்,’ நீல் வேகமாகப் பேசினார். ‘அது இங்கேயிருந்து போகிறதுக்கு முன்னால வேகமாப் போங்க.’

லாகவத்தோடும் கடுமையான நோக்குடனும் மூன்று பேரும் அந்தப் பெட்டிகளைப் பிடித்து, மேலே பாதுகாப்புக்கு இருந்த உறைகளைக் கிழித்தனர், உள்ளே பொருட்கள் மின்னின. ஒரு பைனாகுலர் மைக்ரோஸ்கோப், கையோடு எடுத்துப் போகக் கூடிய ரேடியோ, அடுக்கடுக்கான ப்ளாஸ்டிக் தட்டுகள், மருத்துவப் பொருட்கள், ரேஸர் ப்ளேடுகள், துணி, உணவு. பெரும்பாலான சரக்கு வழக்கம்போல உணவுப் பொருட்களாகவே இருந்தன. மூன்று பேரும் திட்டம் போட்டிருந்தபடி எல்லாவற்றையும் உடைக்கத் துவங்கினர். சில நிமிடங்களில் அங்கே பூராவும் நொறுக்கப்பட்ட பொருட்களின் குழப்படிதான் எஞ்சியது.

அவ்வளவுதான்,’ நீல் மூச்சிரைக்கச் சொன்னார், பின்னே ஒதுங்கினார். அவர் தன்னிடம் இருந்த சோதனைத் தாளைத் தடவி எடுத்தார்.  இப்ப பார்க்கலாம், அது என்ன செய்யறதுன்னு.’

அந்த ட்ரக் நகர ஆரம்பித்திருந்தது; திடீரென்று நின்று அவர்களை நோக்கிப் பின்னே வந்தது. அதன் உள்வாங்கிகள் மூன்று பேர் இறக்கப்பட்ட பொருட்களை அழித்து விட்டார்கள் என்பதைக் கண்டு பிடித்திருந்தன. அது கடமுடவென்ற சப்தத்தோடு அரை வட்டமடித்துத் திரும்பி, தன் உணர்வி உள்வாங்கிகள் அவர்களை நோக்கி இருக்குமாறு நின்றது. அதன் ஆண்டென்னா மேலே சென்றது; தொழிற்சாலையோடு அது தொடர்பு கொண்டிருந்தது. அதற்குக் கட்டளைகள் வந்து கொண்டிருந்தன.

முதல் சுமையை ஒத்த இரண்டாவது சுமை, அதன் மேடை சாய்ந்து கீழே தள்ளப்பட்டது.

இன்னொரு சரக்கு அளிப்புப் பட்டியல் ட்ரக்கிலிருந்து மிதந்து கீழே விழுகையில், ‘நாம தோற்று விட்டோம்,’ பெரீன் முனகினார். ‘அத்தனை பொருட்களையும் ஒரு பலனுமில்லாமல் நாம் நொறுக்கி இருக்கிறோம்.’

இப்ப என்ன செய்யறது?’ மோரிஸன் ஓநீலைக் கேட்டார். ‘உங்கள் பலகைப் பட்டியலில், அடுத்ததாக என்ன செய்யலாம்னு இருக்கு?’

எனக்கு ஒரு கை கொடுங்க.’ நீல் ஒரு பெட்டியைப் பிடித்துத் தூக்கினார். அதை ட்ரக்குக்கு இழுத்துப் போனார். சரக்குமேடையின் மீது அதை இழுத்துப் போட்டார். இன்னொன்றை எடுக்கத் திரும்பினார். மற்ற இருவரும் அவரைப் பின் தொடர்ந்து கோணல்மாணலாகச் செயல்பட்டனர். மொத்தப் பளுவையும் ட்ரக்கின் மேடை மீது ஏற்றினர். ட்ரக் நகர ஆரம்பித்தபோது மொத்த சுமையும் ட்ரக்கில் ஏறி இருந்தது.

ட்ரக் தயங்கியது. அதன் உணர்வி உள்வாங்கிகள் சுமை திரும்பி விட்டதை அறிந்து விட்டன. அதன் உள்புறத்திலிருந்து தொடர்ந்த ரீங்கார ஓசை ஒன்று வந்தது.

இது அதைக் குழப்பலாம்,’ நீல் குறித்தார். அவர் வியர்த்திருந்தார். ‘அது தன் வேலையைச் செய்து விட்டு, எதையும் சாதிக்கவில்லை.’

அந்த ட்ரக் ஒரு சிறிய, பாதியில் நிறுத்தப்பட்ட முன்னோக்கிய நகர்வில் இருந்தது. பின் முழு முனைப்போடு முழுதுமாகத் திரும்பி, படு வேகமாக, மறுபடி சுமையைச் சாலையில் கொட்டியது.

பிடிங்க அதை!’ நீல் கத்தினார். மூன்று பேரும் பெட்டிகளைப் பிடித்து, ஜுர வேகத்தில் ட்ரக்கில் மறுபடி ஏற்றினர். எவ்வளவு வேகமாக நீட்டவாக்கிலிருந்த ட்ரக்கின் தளத்தில் அவற்றைப் போட்டாலும், ட்ரக்கின் பிடிப்பான்கள், அவற்றை மறுபுறத்தின் இறங்கும் பாதையின் வழியே சாலையில் போட்டு விட்டன.

பிரயோசனமே இல்லை,’ மோரிஸன் மூச்சிரைக்கச் சொன்னார். ‘சல்லடையில தண்ணீரை ரொப்பற மாதிரிதான் இது.’

நாம தோத்துட்டோம்,’ விசனத்தோடு ஒத்துக் கொண்டார் பெரீன், ‘எப்பவும் போல. நாம மனுசங்க ஒவ்வொரு தடவையும் தோத்துத்தான் போகிறோம்.’

ட்ரக் அவர்களை அமைதியாகப் பார்த்தது, அதன் உள்வாங்கிகள் வெற்றாக, ஒரு உணர்ச்சியும் இல்லாதிருந்தன. அது தன் வேலையைச் செய்திருக்கிறது. உலகமெங்கும் ஆட்டோமாடிக் ஃபாக்டரிகள் ஒரு வலைப்பின்னலாகச் சேர்ந்து ஐந்து வருடங்களுக்கு முன்னால் கொடுக்கப்பட்ட வேலைகளைப் பிசிறின்றி செய்து கொண்டிருந்தன. அது மொத்த உலகமும் போரில் சிக்கிக் கொள்வதற்கு முன்னால் நடந்த விஷயம்.

இப்ப அது போகிறது,’ மோரிஸன் சலிப்போடு சொன்னார். ட்ரக்கின் ஆண்டென்னா கீழே இறங்கி விட்டது; அது கீழ் கியருக்கு மாறி, தன் நிறுத்தத்துக்கான ப்ரேக்கை விடுவித்தது.

ஒரு கடைசி முயற்சி,’ நீல் சொன்னார்.

அட்டைப் பெட்டிகளில் ஒன்றை எடுத்துக் கிழித்துத் திறந்தார். அதிலிருந்து ஒரு பத்து காலன் பால் தொட்டியை இழுத்து, அதன் மூடியைத் திறந்தார். ‘முட்டாள்தனமாகத் தெரியலாம்தான்.’

இது அபத்தம்,’ எரிச்சலோடு சொன்னார் பெரீன். உடைக்கப்பட்ட பொருட்குவியலில் இருந்து ஒரு கோப்பையை எடுத்தார். அதைப் பாலில் முக்கினார். ‘குழந்தை விளையாட்டு!’

ட்ரக் நின்று அவர்களைக் கவனித்தது.

செய்யுங்க!’ ,’நீல் பளிச்சென்று ஆணையிட்டார். ‘நாம் முன்னாடி ஒத்திகை பார்த்ததைச் சரியாச் செய்யுங்க.’

மூவரும் பால் தொட்டியில் இருந்து எடுத்து வேகமாகக் குடித்தார்கள், தாடை, கழுத்தில் பால் வழிவது பார்க்கத் தெரியும்படி செய்தார்கள்; அவர்கள் செய்வதில் எந்தப் பிழையும் இருக்கக் கூடாது.

திட்டமிட்டபடி, நீல்தான் முதல். அவருடைய முகம் வெறுப்பில் சுளித்தபடி, அவர் கோப்பையைத் தூக்கி எறிந்தார், பாலைச் சாலையில் காறித் துப்பினார்.

கடவுளே, என்ன சோதனை!’ அவர் திணறினார்.

மற்ற இருவரும் அதையே செய்தனர்; கால்களைத் தரையில் உதைத்து, பலமாக வசவுச் சொற்களை வீசியபடி, அவர்கள் பால் தொட்டியை உதைத்துக் கீழே சாய்த்தனர், பிறகு குற்றம் சாட்டும் வகையில் ட்ரக்கைப் பார்த்தனர்.

இது நல்லாவே இல்லை!’ மோரிஸன் இரைந்து கத்தினார்.

விவரம் அறியும் நோக்கோடு ட்ரக் மெதுவாகத் திரும்பி வந்தது. அதன் எலெக்ட்ரானிக் தொடர்புகள் க்ளிக்கின, விர்ரென்றன, நிலைமைக்கு மறுவினை செய்யும் வகையில் அதன் ஆண்டென்னா கொடிக் கம்புபோல மறுபடி வேகமாக உயர்ந்தது.

இதுதான் நாம எதிர்பார்த்தது,’ நீல் நடுங்கியபடி சொன்னார். ட்ரக் பார்க்கையில், அவர் இன்னொரு பால் தொட்டியை வெளியே இழுத்து, மூடியைத் திறந்து, அதன் உள்ளே இருந்ததைச் சுவை பார்த்தார். ‘அதே மாதிரிதான் இருக்கு!’ ட்ரக்கைப் பார்த்துக் கத்தினார். ‘அதே மோசமான பால்!’

ட்ரக்கிலிருந்து ஒரு உலோக உருளை வெளியே குதித்து வந்தது. மோரிஸனின் காலடியில் விழுந்தது; அவர் வேகமாக அதை எடுத்தார், அதைத் திறந்தார்.

குறை என்ன என்று சொல்லவும்

அந்த விளக்கங்களைக் கொடுக்கும் தாள்கள், வரிசைகளாக என்னென்ன குறைகள் என்று பட்டியலிட்டிருந்தன. ஒவ்வொரு வரிசையிலும் ஒரு கச்சிதமான சதுரப்பெட்டி இருந்தது; ஒவ்வொரு பொருளுக்கும் என்ன குறை என்று சொல்ல உதவியாக, ஒரு துளையிடும் குச்சி கொடுக்கப்பட்டிருந்தது.

நான் எதைக் குறிக்கணும்?’ மோரிஸன் கேட்டார். ‘கலப்படமானதா? பாக்டீரியா உள்ளதா? புளிக்கிறதா? கெட்டுப் போயிடுத்தா? தப்பா லேபல் இருக்கிறதா? உடைந்திருக்கிறதா? நசுங்கிடுத்தா? விரிசல் விட்டிருக்கா? வளைஞ்சிருக்கா? அழுக்கா இருக்கா?’

வேகமாக யோசித்தார் ஓநீல், பிறகு சொன்னார், ‘எதையும் குறிக்காதீங்க. ஃபாக்டரி இதை எல்லாம் சோதித்துப் பார்த்து மறுபடி சாம்பிள் அனுப்பத் தயாரா இருக்கும். அது தன்னோட சோதனையைச் செய்து விட்டு, நம்முடைய குறையை அலட்சியம் செய்து விடும்.’ அவருடைய முகம் அருமையான ஒரு யோசனை வந்ததால் பளபளத்தது. ‘கீழே இருக்கிற வெற்றிடத்தில் எழுதுங்க. அது மேலும் தகவல் கொடுக்கவென்று இருக்கிற திறந்த பகுதி.’

என்ன எழுதணும்?’

நீல் சொன்னார், ‘இதை எழுதுங்க: இந்தப் பொருள் சுத்தமா பிச்சிலாயிருக்கு.’

அப்படீன்னா என்ன?’ குழம்பிய பெரீன் கேட்டார்.

எழுதுங்க. அது சும்மா ஒரு வார்த்தைக் குளறுபடிஃபாக்டரிக்கு அது புரியாது. ஒருவேளை நாம் அதன் செயல்களை ஸ்தம்பிக்க வைக்கலாமோ என்னவோ?’

நீலுடைய பேனாவால், மோரிஸன் கவனமாக எழுதினார், அந்தப் பால் பிச்சிலாயிருக்கென்று. தன் தலையைச் சலிப்பால் ஆட்டியபடி, அந்த உருளையை மறுபடி மூடி அதை ட்ரக்குக்குக் கொடுத்தார். ட்ரக் பால் தொட்டிகளை ஒரு வீச்சில் பொறுக்கிக் கொண்டது, தன் தடுப்புக் கம்பிகளைக் கச்சிதமாக அவற்றினிடத்தில் பொருத்தியது. டயர்கள் கிறீச்சிட, அது விரைந்தோடியது. அதன் துளை ஒன்றிலிருந்து ஒரு இறுதி உருளை குதித்து விழுந்தது; ட்ரக் வேகமாகப் போய் விட்டது, அந்த உருளை புழுதியில் கிடந்தது.

நீல் அதைத் திறந்தார், அதிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து மற்றவர்களிடம் காட்டினா.

ஒரு ஃபாக்டரி பிரதிநிதி அனுப்பப்படுவார். பொருளின்குறைபற்றி

அவரிடம் முழுத் தகவலைக் கொடுக்கத் தயாராக இருக்கவும்.

சிறிது நேரம், மூவரும் மௌனமாக இருந்தனர். பிறகு பெரீன் சிரிக்கத் துவங்கினார். ‘நாம செஞ்சுட்டோம். அதோட நாம் தொடர்பு கொண்டாச்சு. நாம செய்தி அனுப்பிட்டோம்.’

நிச்சயமா நாம் செஞ்சிருக்கோம்,’நீல் ஒத்துக் கொண்டார். ‘ஒரு பொருள் பிச்சிலாயிருக்குன்னு அது ஒருபோதும் கேட்டிருக்காது.’

மலைகளின் அடிவாரத்தில் வெட்டப்பட்ட இடத்தில் கான்ஸஸ் நகரத் தொழிற்சாலையின் கனசதுரம் இருந்தது. அதன் மேற்புறங்கள் அரிக்கப்பட்டிருந்தன, கதிர்வீச்சால் எங்கும் பள்ளங்களும் மேடுகளுமாக இருந்தன, அப்பகுதியில் கடந்து போன ஐந்து வருடப் போரால் விரிசல்களும், வெட்டுக் கோடுகளுமாய் இருந்தன. ஃபாக்டரியின் பெரும்பகுதி தரையடியில் புதைக்கப்பட்டிருந்தது, நுழைவாயிலின் சில பகுதிகள் மட்டுமே பார்வைக்குத் தெரிந்தவை. பரந்த கரும் உலோகமாக இருந்த அவற்றை நோக்கி மிக வேகமாக விரைந்து கொண்டிருந்த ட்ரக் தொலைவிலிருந்து ஒரு புள்ளியாகத் தெரிந்தது. இப்போது சீரான அந்தப் பக்கத்துத் தளத்தில் ஒரு திறப்பு உருவானது; அந்த ட்ரக் அதனுள் பாய்ந்தது, உள்ளே போய் மறைந்தது. வாயில் அடித்து மூடி விட்டது.

இப்ப பெரிய வேலை பாக்கி இருக்கு,’ நீல் சொன்னார். ‘இப்ப நாம அதைத் தன்னோட செயல்களை எல்லாம் நிறுத்துவதற்கு ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும்தானே நிறுத்த வைக்க வேண்டும்.’

2

ஜூடித் ஓநீல் சூடான கருப்புக் காஃபியை புழங்கும் அறையில் அமர்ந்திருந்தவர்களுக்கு வழங்கினார். அவருடைய கணவர் பேசினார், மற்றவர்கள் இருந்து கேட்டுக் கொண்டிருந்தனர். ஆட்டோஃபாக் அமைப்பு பற்றித் தெரிந்தவர்களாக இன்னும் இருக்கும் கொஞ்சம் பேரில் கிட்டத்தட்ட எல்லாம் தெரிந்தவர் எனலாம்.

சிகாகோ பகுதியில் இருந்த அவரது வாழ்விடப் பக்கம், அவர் ஒரு ஃபாக்டரியின் காவல் வேலியின் மின் சக்தியைப் பழுதாக்கியவர். அதன் பின்புறத்து மூளையில் சேமிக்கப்பட்டிருந்த தகவல் நாடாக்களைக் கவர்ந்து வருமளவு நேரம் அவரால் அந்த வேலியைப் பழுதாக வைக்க முடிந்திருந்தது. ஆனால் ஃபாக்டரி உடனேயே தனக்கு இன்னும் மேலான ஒரு காவல் வேலியை நிர்மாணித்து விட்டிருந்தது. ஆனால் அவர் ஃபாக்டரிகள் குறையே இல்லாதவை அல்ல என்பதைக் காட்டி விட்டிருந்தார்.

த இன்ஸ்டிட்யூட் ஆஃப் அப்ளைட் ஸைபர்னெடிக்ஸ்,’ நீல் விளக்கினார், ‘ இந்த வலைப்பின்னல் மீது முழுக் கட்டுப்பாடு கொண்டிருந்தது. போரைக் குற்றம் சொல்லுங்கள். தொடர்புக்கான பாதைகளில் ஏற்பட்ட பெரும் சப்தம் நமக்குத் தேவையான அறிவுச் சேமிப்பை அழித்து விட்டதே அதன் மீது பழி போடுங்கள். எப்படியுமே இன்ஸ்டிட்யூட் நமக்கு சேமித்த அறிவை அனுப்ப முடியாமல் போய் விட்டது, அதனால் நாம் நம்முடைய தகவல்களைபோர் முடிந்து விட்டது, நாம் தொழில் முறை உற்பத்தியை நிர்வகிக்கத் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியைஃபாக்டரிகளுக்கு அனுப்ப முடியாமல் இருக்கிறோம்.’

இதற்கிடையில்,’ மோரிஸன் கசப்போடு சேர்ந்து கொண்டார், ‘அந்த பாழாப் போகிற வலை பெரிதாகிக் கொண்டே போகிறது, நம்முடைய இயற்கை வளங்களை எல்லாம் ஏகமாகச் சாப்பிட்டு விடுகிறது.’

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்,’ ஜூடித் சொன்னார், ‘நான் வேண்டிய அளவு பலமாக உதைத்தால், நான் அப்படியே ஒரு ஃபாக்டரியின் சுரங்கப் பாதைக்குள் விழுவேன். அத்தனை தூரம் எங்கே பார்த்தாலும் சுரங்கங்களை அவை தோண்டி விட்டன.’

அவற்றின் செயல்களுக்கு ஒரு எல்லை விதித்த கட்டளை ஏதும் இருக்கவில்லையா?’ பெரீன் பதட்டத்தோடு கேட்டார், ‘அதெல்லாம் எல்லையில்லாமல் பெரிதாகிக் கொண்டே போகும்படியாகவா நிறுவப்பட்டன?’

ஒவ்வொரு ஃபாக்டரியும் அதன் இயக்க எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது,’ நீல் சொன்னார், ‘ஆனால் அவற்றின் வலை என்னவோ எல்லையற்றது. அது நம் வளங்களை என்றென்றுமாக தோண்டி எடுக்கலாம். அந்த இன்ஸ்டிட்யூட் வலைக்குத்தான் முதலிடம் என்று தீர்மானித்திருந்தது; மனிதர்களாகிய நமக்கு இரண்டாமிடம் தான்.’

நமக்கு ஏதேனும் மிச்சமிருக்குமா இனிமேல்,’ மோரிஸன் தெரிந்து கொள்ளக் கேட்டார்.

வலையின் செயல்களை நிறுத்தினாலொழிய ஏதும் கிட்டாது. அது ஏற்கனவே அரை டஜன் தாதுப்பொருட்களை முழுதும் பயன்படுத்தி விட்டது. அதன் தேடும் குழுக்கள் எல்லா நேரமும் உலாவுகின்றன, ஒவ்வொரு ஃபாக்டரியிலிருந்தும், கிட்டுகிற துண்டு துணுக்கை எல்லாம் கூடத் தங்கள் இடத்துக்கு இழுத்துப் போக என்று எல்லா இடங்களிலும் தேடுகின்றன.’

இரண்டு ஃபாக்டரிகளின் சுரங்கப் பாதைகள் ஒன்றிலொன்று குறுக்கிட்டால் அப்போது என்ன ஆகும்?’

நீல் கை விரித்தார். ‘சாதாரணமாக, அப்படி நடக்காது. ஒவ்வொரு ஃபாக்டரிக்கும் நம் பூமியில் தனியாக ஒதுக்கப்பட்ட பகுதிகள் இருக்கின்றன, மொத்த ஆப்பத்தில் அததுக்குப் பயன்படுத்தவென்று ஒரு துண்டு ஒதுக்கப்பட்டிருக்கிறது.’

ஆனால் அது நடக்கலாம்.’

அதெல்லாம் கச்சாப் பொருளைத் தேடறத்துக்கு பயிற்சி கொடுக்கப்பட்டவை. ஏதாவது பாக்கி இருக்கறவரைக்கும் அதை எல்லாம் அதுங்க வேட்டையாடி எடுத்துடும்.’நீல் இந்த எண்ணத்தை மேலும் சுவாரசியத்தோடு தொடர்ந்தார். ‘இதை நாம இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம். கனிமங்கள் கிடைக்கறது அரிதாக ஆக…’

அவர் பேசுவதை நிறுத்தினார். ஒரு உருவம் அறைக்குள் வந்திருந்தது; அது கதவருகே மௌனமாக நின்று அவர்களை எல்லாம் பார்வையிட்டது.

மங்கலான நிழல்களில், அந்த உரு ஒரு மனிதனைப் போலவே இருந்தது. ஒரு சிறு கணம், நீல் அதைக் குடியிருப்பைச் சார்ந்த ஒரு ஆள், கூட்டத்திற்குத் தாமதமாக வருகிறவர் என்று நினைத்தார். ஆனால், அது முன்னே நகர்ந்தபோது, அது ஒரு கால்வாசி மனிதன் தான் என்று புரிந்து கொண்டார்; இரு கால் கொண்டு நெடுக்கு வாக்கில் நின்று வேலை செய்யக் கூடிய எந்திரம், தகவல் வாங்கிகள் மேலே பொருத்தப்பட்டு, வேலை செய்யக் கூடிய பாகங்களும், முன்னும் பின்னும் நகர உதவும் பாகங்களும் கீழ் நோக்கிச் செல்லும் புழுப் போன்ற ஒரு உடல் கீழே தரையைப் பிடித்துக் கொள்ள உதவும் பாகங்களோடு பொருத்தப்பட்டு நின்றது. இயற்கையின் செயல்திறனைப் பிரதி எடுக்கவே அந்த உரு அமைக்கப்பட்டிருந்தது; உணர்ச்சிகளுக்கு இதமூட்டும் முயற்சிக்காக அந்தப் பிரதி அமைக்கப்படவில்லை.

ஃபாக்டரியின் பிரதிநிதி வந்தாயிற்று.

அது ஒரு பீடிகையும் இல்லாமல் துவங்கியது. ‘இது தகவல் சேகரிக்கும் எந்திரம், பேச்சு வார்த்தை மூலம் தொடர்பு கொள்ள முடிகிற ஒன்று. இதில் ஒலி பரப்பவும், ஒலி வாங்கிக் கொள்ளவும் கருவிகள் உண்டு, மேலும் கண்டு பிடிக்க வந்த விஷயத்துக்குத் தேவையான உண்மைகளைத் தொகுக்கும் திறனும் இதற்கு உண்டு.’

அந்தக் குரல் சுயநம்பிக்கையோடும், இனிமையாகவும் இருந்தது. போருக்கு முன்னால் யாரோ அந்த இன்ஸ்டிட்யூட்டின் ஒரு உதவிப் பொறியாளர், ஒலிப்பதிவு செய்து கொடுத்த ஒலிநாடா அது என்பது தெளிவாக இருந்தது. ஒரு கால்வாசி மனித உருவிடமிருந்து அந்தப் பேச்சு வருவது விகாரமாக இருந்தது; நீலால் அந்த உயர நின்ற உலோகமும், மின் கம்பிகளும் கொண்ட எந்திரத்தின் வாயிலிருந்து வெளிப்பட்ட உற்சாகமான குரலுக்கு உரிமையாளனும், போரில் இறந்திருக்கக் கூடியவனுமான இளைஞனை அந்தக் குரலை வைத்து விரிவாகக் கற்பனை செய்ய முடிந்தது.

ஓர் எச்சரிக்கை,’ அந்த இணக்கமான குரல் தொடர்ந்தது. ‘இந்த தகவல் வாங்கியை மனிதரைப் போலக் கருதி அத்துடன் விரிவாகச் சர்ச்சை செய்ய முயல்வது பயனற்றது, இது அதற்கெல்லாம் ஏற்றதாகத் தயாரிக்கப்படவில்லை. இதற்கு செயல் முனைப்பு இருந்தாலும், இதனால் கோட்பாட்டுச் சிந்தனையை எல்லாம் உருவாக்க முடியாது; அதனிடம் ஏற்கனவே உள்ள விஷயத்தைத்தான் அதனால் செயலுரு கொடுக்க முடியும்.’

நம்பிக்கை தரும் அந்தக் குரல் ஒரு க்ளிக்கோடு நின்றது, இன்னொரு குரல் வெளிப்பட்டது. இது முதல் குரலைப் போலவே இருந்தது, ஆனால் இப்போது தனிநபரின் பாவங்களோ, ஏற்ற இறக்கங்களோ இல்லை. இறந்து போன மனிதனின் ஒலிப்புப் பாணியைப் பயன்படுத்தி எந்திரம் தன் தொடர்புப் பணியைச் செய்து கொண்டிருந்தது.

மறுக்கப்பட்ட பொருளை ஆராய்ந்த போது,’ அது சொன்னது, ‘எந்த வெளிப் பொருளுமோ, கவனிக்கத் தக்க சீரழிவோ காணப்படவில்லை. வலையில் எங்கும் பயன்படுத்தப்படும் தர அளவு எதிர்பார்ப்புகளை இந்தப் பொருள் கொண்டுள்ளது. அதனால் மறுப்பு என்பது சோதிக்கப்படக் கூடியவற்றின் எல்லைக்கு அப்பால்பட்டது; அதற்குத் தர அளவுகள் இல்லை; வலைக்குக் கிட்டாத தர அளவு எதிர்பார்ப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.’

அது சரிதான்,’ நீல் ஒத்துக் கொண்டார். தன் சொற்களைக் கவனமாக எடை போட்டபடி, அவர் தொடர்ந்தார். ‘நாங்கள் அந்தப் பால் தரம் குறைந்தது என்று கருதினோம். எங்களுக்கு அது சிறிதும் வேண்டாம். இதை விடத் தரமான தயாரிப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துகிறோம்.’

அந்த எந்திரம் அப்போதே பதிலளித்தது. ‘அந்த வார்த்தை, “பிச்சிலாயிருக்குஎன்பது வலையின் வார்த்தைச் சேமிப்புக்கு அப்பாற்பட்டிருக்கிறது. ஒலிநாடாவில் சேகரிக்கப்பட்டுள்ள சொற்களஞ்சியத்தில் அது இல்லை. அந்தப் பாலில் உள்ள குறிப்பிட்ட மூலப்பொருட்களின் வழியே எது இருக்கிறது எது இல்லை என்று ஒரு மெய்ப்பொருள் ஆய்வைக் கொடுக்க முடியுமா?’

முடியாது,’ நீல் எச்சரிக்கையோடு சொன்னார்; இங்கு நடப்பது அபாயகரமான, சூட்சுமம் கொண்ட ஒரு வார்த்தை விளையாட்டு. ‘ “பிச்சிலிப்பதுஎன்பது ஒரு ஒட்டு மொத்தமான வருணனை. அது வேதியல் மூலப்பொருட்களால் கொடுக்கப்பட முடியாதது.”

அந்த வார்த்தைபிச்சிலாயிருக்குஎன்பது எதைக் குறிக்கிறது?’ எந்திரம் கேட்டது. ‘மாற்று அர்த்தக் குறியீடுகள் வழியே இதை வரையறுக்க உங்களால் முடியுமா?’

நீல் தயங்கினார். அந்தப் பிரதிநிதி அதன் விசேஷ விசாரணையிலிருந்து அகற்றப்பட்டு, மேலும் பொதுவான விஷயங்களுக்குச் செலுத்தப்பட வேண்டும், வலை உற்பத்திகளை நிறுத்துவதற்கான பிரச்சினைக்குக் கொணரப்பட வேண்டும்

‘ “பிச்சிலாயிருக்கு,”’ அவர் சொன்னார், ‘ என்பதன் அர்த்தம், உற்பத்தி செய்யப்பட்ட இந்தப் பொருளுக்கு இனி தேவையே இல்லை என்பதுதான். இந்தப் பொருள் இனிமேல் வேண்டாம் என்ற காரணத்தால் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.’

அந்தப் பிரதிநிதி சொன்னது, ‘வலைத் தொழிலின் ஆய்வு தெரிவிப்பதன்படி இந்தப் பகுதியில் உயர்ந்த தரமுள்ள பாஸ்சரைஸான பாலுக்கான பதிலியின் தேவை இருக்கிறது. வேறேதும் மாற்று மூலம் இங்கு இல்லை; தொழில் வலை பாலூட்டி வகை சாதனங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.’ அது மேலும் சொன்னது, ‘ஒரிஜினல் ஒலிநாடா ஆணைகள் பாலை மனித உணவின் ஒரு முக்கிய அம்சமாகக் கொடுக்கின்றன.’

நீலின் சாமர்த்தியம் பலிக்கவில்லை; எந்திரம் தொடர்ந்து பேசுபொருளில் குறிப்பிட்ட விஷயத்துக்கே திரும்பிக் கொண்டிருந்தது. ‘நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்,’ நம்பிக்கை அற்றவராய் அவர் சொன்னார், ‘எங்களுக்கு பால் இனிமேல் வேண்டாம். அது இல்லாமலே நாங்கள் வாழ்வோம், குறைந்தது நாங்கள் சில பசுக்களைக் கண்டு பிடிக்கும்வரை இப்படியே இருப்போம்.’

இது வலைத் தொழிலின் ஒலிநாடாக்களுக்கு எதிரானது,’ பிரதிநிதி எதிர்ப்பு தெரிவித்தது. ‘அங்கே பசுக்களே இப்போது இல்லை. எல்லா பாலும் செயற்கையாகத்தான் தயாரிக்கப்படுகிறது.’

அப்போது நாங்களே செயற்கையாகத் தயாரித்துக் கொள்வோம்,’ மோரிஸன் பொறுமை இழந்து குறுக்கிட்டார். ‘நாங்கள் ஏன் எந்திரங்களைக் கட்டுப்படுத்துவதை எடுத்துக் கொள்ளக் கூடாது? அட கடவுளே, நாங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை. எங்கள் வாழ்வை நாங்களே நடத்திக் கொள்ள முடியும்.’

ஃபாக்டரி பிரதிநிதி கதவை நோக்கி நகர்ந்தது. ‘பால் சப்ளைக்கு வேறு வழிகளை நீங்கள் கண்டு பிடிக்கும் வரை தொழில் வலை உங்களுக்குத் தொடர்ந்து பாலைக் கொடுத்து வரும். ஆராய்வதும், எடை போடுவதும் செய்யும் கருவிகள் இந்தப் பகுதியில் இருந்து வரும், வழக்கமான முன் தீர்மானமில்லா மாதிரிமுறை தகவல் சேகரிப்பைத் தொடர்ந்து செய்யும்.’

பயனேதும் இல்லாமல் பெரீன் கத்தினார், ‘வேறு வழிகளை நாங்கள் எப்படிக் கண்டு பிடிப்பது? உன்னிடம்தான் எல்லா வசதிகளும் சிக்கி இருக்கின்றன. நீதான் மொத்தத் தொழில்களையும் செய்கிறாய்!’ அதைப் பின் தொடர்ந்து போய் அவர் இரைந்தார், ‘நாங்கள் எல்லாவற்றையும் நடத்துவதற்குத் தயாராக இல்லை என்கிறாய்எங்களுக்குத் திறனில்லை என்று சொல்கிறாய். உனக்கு எப்படித் தெரியும்? எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறாயே. எங்களுக்கு வாய்ப்பு ஒரு போதும் கிட்டாது.’

நீல் கல்லாய் உறைந்தார். எந்திரம் போய்க் கொண்டிருந்தது; அதன் ஒரே வழி மூளை வெற்றி பெற்று விட்டது.

இங்கே பார்,’ அதன் வழியைத் தடுத்தபடி, அவர் கரகரப்பான குரலில் சொன்னார், ‘நீ எல்லாவற்றையும் நிறுத்தி விட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், புரிந்து கொள். உன் சாதனங்களை நாங்கள் எடுத்துக் கொண்டு அவற்றை ஓட்ட வேண்டும் என்று விரும்புகிறோம். போர் முடிந்து போய் விட்டது. நீ நாசமாப் போ, எங்களுக்கு இனிமேல் நீ தேவையில்லை.’

ஃபாக்டரி பிரதிநிதி கதவருகே சிறிது தயங்கியது. ‘வேலை நிறுத்தும் சுழற்சி,’ அது சொன்னது, ‘வெளி உற்பத்தியை பிரதி எடுக்கும் நிலை வரும்போதுதான் துவங்கும். இன்றைய நிலையில், தொடர்ந்து நாங்கள் எடுக்கும் மாதிரிதகவல் சேகரிப்பின்படி, வெளியில் உற்பத்தி ஏதும் இல்லை. எனவே வலைத்தொழில் உற்பத்தி தொடர்கிறது.’

ஒரு எச்சரிக்கையும் இல்லாமல் மோரிஸன் தன் கையிலெடுத்த ஒரு இரும்புக் குழாயை வீசி அடித்தார். அது எந்திரத்தின் தோள்பகுதியில் வெட்டி, அதன் மார்பில் இருந்த விரிவான உணர்வி சாதனங்களின் தொகுப்பை உடைத்தது. உணர்விகளின் கூண்டு நொறுங்கியது; கண்ணாடித் துண்டுகள், கம்பிகள், மிகச் சிறு பாகங்கள் எங்கும் சிதறிக் கொட்டின.

இது ஒரு முரண் புதிர்!’ மோரிஸன் கத்தினார். ‘வெறும் வார்த்தை ஜாலம்பொருள் குழப்ப விளையாட்டை நம்மிடம் ஆடிக் காட்டுகிறார்கள். சைபர்னெடிஸிஸ்டுகள் இதை எல்லாம் நமக்கெதிராகவே முன் கூட்டித் தீர்மானித்திருக்கிறார்கள்.’ அவர் அந்தக் குழாயை மறுபடி உயர்த்தி, வெறியோடு எதிர்ப்பு தெரிவிக்காத அந்த எந்திரத்தைத் தாக்கினார். ‘நம் காலை வெட்டி விட்டார்கள். நாம் நிராதரவாக நிற்கிறோம்.’

அறையில் ஒரே அமளியாக இருந்தது. ‘இதுதான் ஒரே வழி,’ பெரீன் மூச்சுத் திணறினார், நீலைத் தள்ளி அவர் தாண்டிப் போனார். ‘நாம் இவற்றை அழிக்கத்தான் வேண்டும்வலைத் தொழிலாச்சு நாமாச்சு பார்த்து விடலாம்.’ ஒரு விளக்கைப் பிடுங்கினார், அதை ஃபாக்டரி பிரதிநிதியின் முகத்தை நோக்கி வீசினார். விளக்கும், அதன் நுட்பமான ப்ளாஸ்டிக் மேல்பகுதிகளும் வெடித்தன; பெரீன் மேலும் நெருங்கினார், எந்திரத்தைப் பிடிக்க முயன்றார். அறையில் இருந்த எல்லா மனிதர்களும் நெடுக்காக இருந்த எந்திரத்தினருகில் குழுமினர், அவர்களது பயனில்லாத வெறுப்புகள் கொதிநிலைக்கு வந்திருந்தன. அந்த எந்திரம் அப்படியே கீழே விழுந்தது, அதை அவர்கள் தரையோடு இழுத்தபோது கண்பார்வையிலிருந்து மறைந்தது.

நடுங்கிய ஓநீல் அங்கிருந்து அகன்றார். அவரது மனைவி அவர் கையைப் பற்றி, அறையின் இன்னொரு புறம் அழைத்துப் போனார்.

இந்த முட்டாள்கள்,’ அவர் விரக்தியாய் சொன்னார். ‘அதை இவர்கள் அழிக்க முடியாது; மேலும் நல்ல பாதுகாப்பைக் கட்டத்தான் அதற்குச் சொல்லிக் கொடுப்பார்கள். மொத்தப் பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறார்கள்.’

அந்த அறைக்குள் வலைத் தொழிலின் பழுதுபார்க்கும் குழு உருண்டு வந்தது. மிக்க திறனோடு, எந்திரக் குழுக்கள் பாதிசங்கிலித் தடம் கொண்ட தாய் எந்திரத்திடமிருந்து தம்மைப் பிரித்துக் கொண்டன, தள்ளு முள்ளுவில் இருந்த மனிதர்களை நோக்கி விறுவிறுவென ஓடின. மனிதர்களிடையே புகுந்து வேகமாகத் தோண்டின. ஒரு கணம் கழித்து, சக்தியற்ற பிரதிநிதியின் உடல் இழுத்து தாய்எந்திரத்தின் தொட்டியில் போடப்பட்டது. சிதறிய பாகங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டன, கிழிந்த பகுதிகள் பொறுக்கப்பட்டு எடுத்துப் போகப்பட்டன. ப்ளாஸ்டிக் கியர்கள், ஆணிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. பிறகு அந்த துணை எந்திரங்கள் தாய் எந்திரத்தில் மறுபடி இணைத்துக் கொண்டன, மொத்தக் குழுவும் கிளம்பிப் போயிற்று.

திறந்த கதவு வழியே இரண்டாவது ஃபாக்டரி பிரதிநிதி நுழைந்தது; முதல் எந்திரத்தின் கச்சிதமான பிரதி. வெளியில் இருந்த பெரிய அறையில் மேலும் நெடுக்கு வாக்கில் நின்ற எந்திரங்கள் இரண்டு இருந்தன. அந்தக் குடியிருப்பு பூராவும் பிரதிநிதிகளின் அணிகளால் சலிக்கப்பட்டிருந்தது. எறும்புக் கூட்டம் போல தகவல் சேகரிக்கும் எந்திரங்கள் நகரம் பூராவும் திரிந்து வடிகட்டிப் பார்த்து, எதேச்சையாக ஒரு எந்திரம் ஓநீலைக் கண்டிருந்தது.

உலாவி தகவல் சேகரிக்கும் சாதனங்களைச் சேதப்படுத்துவது மனிதர்களின் நலனுக்கு எதிரானது,’ ஃபாக்டரி பிரதிநிதி அந்த அறையிலிருந்த மனிதர்களிடம் சொன்னது. ‘கச்சாப் பொருட்களின் சேகரிப்பு மிக அபாயகரமான கீழ் நிலையில் உள்ளது; என்ன மூலப் பொருட்கல் இருக்கின்றனவோ, அவற்றை நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பதற்கே பயன்படுத்த வேண்டும்.’

நீலும் அந்த எந்திரமும் ஒருவரோடு ஒருவர் எதிரெதிராக நின்றனர்.

!’ என்று மென்மையாகச் சொன்னார் ஓநீல். ‘இது சுவாரசியமான தகவல். நீ எதில் மிகத் தாழ் நிலையில் இருக்கிறாய்னு நான் யோசிக்கிறேன்அதோட எதுக்காக நீ சண்டை போடத் தயாரா இருப்பேன்னும் யோசனை வருது.’

*

ஹெலிகாப்டரின் ப்ளேடுகள் ஓநீலின் தலைக்கு மேலே தகடு உரசும் ஓசையை எழுப்பின; அதை அவர் சட்டை செய்யவில்லை, தானிருந்த சிறு அறையின் ஜன்னல் வழியே அவர் கீழே அதிகம் தொலைவில் இல்லாத நிலத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.

உலோகக் கழிவுகளும், அழிந்த பொருட்களும் எங்கும் கிடந்தன. பூண்டுச் செடிகள் தரையிலிருந்து உயரமாக நீண்டு வளர்ந்திருந்தன, அவற்றின் மெலிவான நலிந்த தண்டுகளைச் சுற்றிப் பூச்சிகள் வட்டமிட்டன. இங்கும் அங்கும் பெருச்சாளிக் கூட்டங்கள் தென்பட்டன; எலும்பாலும், குச்சி, குப்பைகளாலும் கட்டப்பட்ட பாய்க் கூரை குடிசைகள் தெரிந்தன. கதிர் வீச்சு அனேகப் பூச்சிகள், மிருகங்களைத் தாக்கிச் சீர் குலைத்தது போல, பெருச்சாளிகளையும் உருக் குலைத்திருந்தது. கொஞ்ச தூரம் தள்ளி, நீல் ஒரு சிறு கூட்டமான பறவைகள் ஓர் அணிலைத் துரத்திக் கொண்டிருந்ததைக் கவனித்தார். அந்த அணில் உலோகக் கழிவுக் குவியலில் கவனமாகத் தயாரிக்கப்பட்ட ஓர் இடுக்குக்குள் குதித்து மறையவும், பறவைகள் தம் இரை தப்பியதால் வேறு புறம் திரும்பிப் போயின.

நாம் எப்பவாவது இதை எல்லாம் மறுபடி கட்டி எழுப்புவோம்னு நினைக்கிறீங்களா?’ மோரிஸன் கேட்டார். ‘இதை எல்லாம் பார்க்கவே எனக்கு வெறுப்பா வருது.’

காலாகாலத்தில நடக்கும்,’ நீல் பதிலளித்தார். ‘நாம தொழிற்சாலைகள் மேல கட்டுப்பாட்டைத் திரும்ப அடைஞ்சுடுவோம்னு வச்சுகிட்டா அப்படி நடக்கும். அதுக்கு மேல, நமக்கு உற்பத்தி செய்யறத்துக்கு மூலப்பொருள் ஏதும் பாக்கி இருக்கணும். எப்படி இருந்தாலும் எல்லாம் மெதுவாத்தான் ஆகும். நாம நம்மோட குடியிருப்புலேருந்து அங்குலம் அங்குலமாத்தான் வெளியில நகர முடியும்.’

வலது பக்கம் ஒரு மனிதக் குடியிருப்பு இருந்தது, கந்தலும் கிழிசலுமணிந்த சோளக்கொல்லைப் பொம்மை மாதிரி இருந்தார்கள், உடம்பெல்லாம் வாடி, எலும்பும் தோலுமாக, ஒரு காலத்தில் ஒரு சிறு நகரமாக இருந்த ஊரின் இடிபாடுகளிடையே வாழ்ந்தனர். வறண்ட நிலத்தில் சில ஏக்கர்கள் சுத்தம் செய்யப்பட்டு விளைநிலமாக்கப் பட்டிருந்தன; வாடிக் கொண்டிருந்த காய்கறிகள் வெய்யிலில் சோர்வாக நின்றன. கோழிகள் இங்குமங்கும் உற்சாகமின்றி திரிந்தன, ஈக்கள் தொல்லை செய்த ஒரு குதிரை, கொணல்மாணலாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கொட்டகையின் நிழலில் படுத்து இரைப்போடு மூச்சு விட்டது.

இடிபாடுகளில் அனாமதேயமாகக் குடியேறி இருக்கிறார்கள்,’ நீல் சலிப்போடு சொன்னார். ‘வலைத் தொழிலிலிருந்து ரொம்ப தூரம் தள்ளி இருக்கிறார்கள்எந்த ஃபாக்டரிகளுக்கும் ஒட்டின இடமும் இல்லை.’

அது அவர்களோட தப்புதான்,’ மோரிஸன் கோபமாகச் சொன்னார். ‘அவர்கள் ஒரு குடியிருப்புக்குள் வர முடியும்.’

அது அவர்களோட நகரம். நாம என்ன செய்ய முயற்சி பண்ணறோமோ அதைத்தான் அவங்களும் செய்யறாங்கதாங்களே எல்லாத்தையும் கட்டி எழுப்பப் பார்க்கிறாங்க. ஆனா அவங்க இப்பத்தான் துவங்கி இருக்காங்க, ஒரு கருவியும் இல்லாம, எந்திரங்கள் இல்லாம, வெறும் கைகளால, நொறுங்கினதுல கிடைச்சதை எல்லாம் ஆணியடிச்சு இணைச்சுச் செய்யறாங்க. இது வேலைக்கு ஆகாது. நமக்கு எந்திரங்கள் வேணும். நம்மால இடிபாடுகளை எல்லாம் சீர் செய்ய முடியாது. நாம தொழிலுற்பத்தியைத் துவங்கணும்.’

எதிரே உடைக்கப்பட்ட குன்றுகள் இருந்தன, ஒரு காலத்தில் மலை முகடாக இருந்தது இப்போது வெட்டப்பட்டு சிதிலமடைந்த பகுதியாக எஞ்சியது. தொலைவில் பெரும் பரப்பில் நீண்டது பிரும்மாண்டமான ஹைட்ரஜன் குண்டு வெடித்து உருவாக்கிய பெரும் பள்ளம், பாதி நிரம்பிய தேங்கிய தண்ணீரும் பாசியுமாக, வியாதிகள் நிரம்பிய உள்நாட்டுக் கடல்.

அதைத் தாண்டிஅவசரம் நிறைந்த நடவடிக்கைகளின் மின்னும் ஒளி.

அங்கேதான்,’ நீல் பதட்டத்தோடு சொன்னார். அவர் ஹெலிகாப்டரை விரைவாகக் கீழ் நோக்கி இறக்கினார். ‘உங்களால் அதெல்லாம் எந்த ஃபாக்டரியிலிருந்து வந்தவை என்று சொல்ல முடியுமா?’

அது எல்லாம் ஒரே மாதிரிதான் எனக்குத் தெரியறது,’ சாய்ந்து நோக்கிய மோரிஸன் முணுமுணுத்தார். ‘நாம கொஞ்சம் தங்கியிருந்து, ஒரு சுமை அதுங்க கிட்ட வரும்போது, அதுங்க பின்னாடிப் போகணும்.’

அப்படி ஒரு சுமை வரணுமே, வருமா?’ நீல் திருத்தினார்.

தேடலுக்காக வந்த ஆட்டோஃபாக்குடைய குழுக்கள் ஹெலிகாப்டரை அசட்டை செய்தன, தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தன. மைய ட்ரக்குக்கு முன்னே இரு ட்ராக்டர்கள் ஊர்ந்து சென்றன; அவை சிதைவுகளின் மேடுகள், குவியல்கள் மீதேறிச் சென்றன, அவற்றிலிருந்து முள்ளம்பன்றியின் ஊசி முள்கள் போல துழாவிகள் சிலிர்த்தன, சுடப்பட்டு தூர இருந்த உலோகக் கழிவுகள் மீது பரவி இருந்த சரிவான சாம்பல் குவியலுக்குள் ஊடுருவி மறைந்தன. இரண்டு சாரண எந்திரங்களும் துளைத்து உள்ளே போயின, அவற்றின் ஆண்டென்னாக்கள் மட்டும்தான் வெளியே தெரிந்தன. வெடித்தாற் போல அவை திடீரென்று மேலே எழுந்தன, மறுபடி ஊர்ந்து முன்னே போயின. அவற்றின் பட்டைச் சங்கிலி சுற்றிய சக்கரங்கள் விர்ரிட்டன, டங்டங்கென்று சப்தமிட்டன.

அதுங்க என்ன தேடுது?’ மோரிஸன் கேட்டார்.

கடவுளுக்குத்தான் தெரியும்.’ நீல் தன் க்ளிப் அட்டையில் செருகிய காகிதங்களில் எதையோ தேடினார். ‘நாம் நம்மிடம் இருக்கிற பழைய ஆர்டர் காகிதங்களை எல்லாம் தோண்டிப் பார்த்தால்தான் தெரியும்.’

அவர்களுக்குக் கீழே, ஆட்டோஃபாக்கின் தேடும் குழுக்கள் பின்னே மறைந்து போயின. ஹெலிகாப்டர் ஏதுமில்லாத மணல் பரப்பும், உலோகக் கழிவுகளுமாக இருந்த  வெளி ஒன்றைக் கடந்தது, அங்கே ஏதும் நடமாடவில்லை. தாழ்ந்த உயரம் கொண்ட புதர்கள் அடங்கிய ஒரு தோப்பு நெருங்கி வந்தது, பிறகு, தொலை தூரத்தில் வலது பக்கம், வரிசையாக நகர்ந்த சிறுபுள்ளிகள் தெரிந்தன.

தானியங்கி கனிமம் சுமக்கும் வண்டிகள் வெறிச்சோடிக் கிடந்த உலோகக் கழிவுப் பரப்பின் மீது விரைந்து ஓடின. மிக விரைவாக ஓடும் உலோக ட்ரக்குகள் ஒன்றை ஒன்று நெருக்கி அடித்துக் கொண்டு போயின. நீல் ஹெலிகாப்டரை அவற்றை நோக்கித் திருப்பினார், சில நிமிடங்களில் சுரங்கத்திற்கு மேலே சுற்றிப் பறந்து வந்தார்.

ஏராளமான தோண்டும் எந்திரங்கள் அங்கு செயலுக்கு வந்திருந்தன. பெரிய குழாய்கள் தரைக்குள் இறக்கப்பட்டிருந்தன; காலியான வண்டிகள் பொறுமையாக வரிசையில் நின்றன. தொடர்ந்து ஓடும் வண்டிகள் சுமையேற்றப்பட்டு தொலைவானை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன, கனிமத் தூள்கள் கிழே ஆங்காங்கே சிந்தியபடி இருந்தன. நிறைய நடவடிக்கைகளும், எந்திரங்களின் ஓசைகளும் அந்தப் பகுதியெங்கும் பரவி இருந்தது, மனதில் சலிப்பைக் கொணருமளவு உலோகக் கழிவுகளே நிரம்பிய அந்தப் பகுதியில் திடீரென தொழில் முனைப்பு மையம் கொண்டிருந்தது.

இங்கே பாருங்க ஒரு தேடும் குழு வருகிறதை,’ மோரிஸன் கவனித்தார், அவர்கள் கடந்து வந்த திக்கில் பின்பக்கம் பார்த்தபடி. ‘இவை இரண்டும் மோதிக் கொள்ளும் என்று நினைக்கிறீர்களா?’ அவர் சிரித்தார். ‘இருக்காது, அது ரொம்பவே எதிர்பார்க்கிறார் போல ஆகும்.’

இந்தத் தடவை அப்படித்தானிருக்கும்நீல் பதிலளித்தார். ‘அதுங்க வேறு ஒரு பொருளைத் தேடுகின்றனவோ என்னவோ. சாதாரணமா ஒண்ணையொண்ணு கண்டுக்காம இருக்க அதுங்க கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.’

தேடி வந்த பூச்சி போன்ற எந்திரங்கள் கனிமங்கள் இருந்த வண்டிகளை அணுகின. கொஞ்சம் விலகிப் போய்த் தேடலைத் தொடர்ந்தன; வண்டிகள் முடிவில்லாத வரிசையாக, ஏதும் நடக்காதது போலத் தொடர்ந்து ஓடின.

ஏமாற்றமடைந்த மோரிஸன், ஜன்னலிலிருந்து விலகினார், திட்டினார். ‘ஒண்ணும் நடக்கல்லை. ஒண்ணொண்ணும் மத்தது இருக்கிறதையே கண்டுக்கிடல்லை.’

கொஞ்சம் கொஞ்சமாக தேடலில் இருந்த குழு வண்டிகளின் வரிசையிலிருந்து அகன்று வேறு புறம் போயிற்று, சுரங்க வேலை நடந்த இடத்தைத் தாண்டி, பின்னாலிருந்த ஒரு மலை முகட்டுக்கு அப்பால். அப்படி ஒன்றும் தனிப்பட்ட வேகத்தை அவை காட்டவில்லை; கனிமம் சேகரிக்கப்பட்ட முயற்சிக்கு அவை எந்த மறுவினையும் புரியவில்லை.

ஒரு வேளை அவை இரண்டுமே ஒரே ஃபாக்டரிலேருந்து வந்திருக்கலாம்,’ மோரிஸன் நம்பிக்கையோடு சொன்னார்.

நீல் அங்கே சுரங்க வேலையில் பெரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எந்திரங்களின் ஆண்டென்னாக்களைச் சுட்டினார். ‘அவற்றின் மானிகள் வெவ்வேறு திக்குகளில் திரும்பி இருக்கின்றன, அதனால் இவை வெவ்வேறு ஃபாக்டரிகளைச் சார்ந்தவை. போகப் போக இதெல்லாம் மிகக் கடினமாக ஆகவிருக்கிறது; நாம இதை மிகச் சரியாகக் கணிக்க வேண்டும், இல்லையேல் இங்கு மறுவினைகள் நாம் விரும்புகிற மாதிரி அமையாது.’ அவர் தன் ரேடியோவை ஒரு க்ளிக்கால் துவக்கினார். குடியிருப்பின் கண்காணிப்பாளரைப் பிடித்தார். ‘நாம் கேட்டிருந்த மொத்தமாகச் சேர்க்கப்பட்ட பழைய ஆர்டர்களின் பிரதிகள் வந்து சேர்ந்தனவா?’

ஆபரேட்டர் அவரைக் குடியிருப்பின் நிர்வாக அலுவலகத்துக்கு மாற்றினார்.

அதெல்லாம் இப்ப வரத் துவங்கி இருக்கு,’ பெரீன் சொன்னார். ‘போதுமான அளவு மாதிரிகள் கிடைத்த உடனே, ஃபாக்டரிகளில் எதெதுக்கு என்னென்ன போதாமல் இருக்கு என்று கண்டு பிடிக்கலாம். இது கொஞ்சம் ஆபத்தான விஷயம், பல பொருட்கள் இணைந்து தயாராகும் நுகர் பொருட்களிலிருந்து அதை எல்லாம் ஊகிக்கிறது சுலபமில்லை. பல கிளைப் பொருட்களுக்கிடையே பொதுவான மூலப் பொருட்கள் இருக்கலாம்.’

நாம என்ன மூலப்பொருளெல்லாம் கிடைக்கவில்லை, போதவில்லைன்னு கண்டு பிடிச்சப்புறம் என்ன நடக்கப் போகிறது?’ மோரிஸன் ஓநீலிடம் கேட்டார். ‘எதிரெதிர் பகுதிகளில் இருக்கிற இரண்டு ஃபாக்டரிகளிடம் ஒரே விதமான பொருட்களுக்கான குறைபாடு இருந்தால் என்ன ஆகும்?’

அப்ப,’ நம்பிக்கை வற்றிய குரலில் ஓநீல் சொன்னார், ‘அந்தப் பொருட்களை நாமே சேகரிக்கத் துவங்கணும்நம் குடியிருப்பில் இருக்கிற பொருட்களை எல்லாம் உருக்கினால்தான் அதைச் சேகரிக்க முடியும்னாலும் சரி.’

3

விளக்கை நாடும் பூச்சிகள் நிரம்பிய இரவில், மங்கலாகக் காற்று கிளம்பியது, குளிராக, இலேசாக இருந்தது. அடர்ந்த தாழ்புதர்கள் உலோக ஒலியோடு மரமரத்தன. இங்குமங்கும் ஒரு இரவு நேரத்து எலி, அதன் உணர்வுகள் தீட்டப்பட்டு, உற்று நோக்கியபடி, திட்டமிட்டு உணவைத் தேடியபடி, உலாவியது.

அந்தப் பகுதி ஆளற்ற நிலப்பரப்பாக இருந்தது. பல மைல்களுக்கு மனிதக் குடியிருப்புகளே ஏதும் அருகே இல்லை; அந்த மொத்தப் பகுதியே எரிக்கப்பட்டு தரைமட்டமாகி இருந்தது, திரும்பத் திரும்ப போடப்பட்ட ஹைட்ரஜன் குண்டுகளின் வெடிப்பால் பொசுக்கப்பட்டு இருந்தது. அங்கே நிலவிய ஆழ்ந்த இருட்டில் எங்கோ, சிறு ஓட்டமான நீர் உலோகக் கசடுகள், மற்றும் பூண்டுச் செடிகளின் ஊடே போய்க் கொண்டிருந்தது. அது முன்பு விரிவாகக் கட்டப்பட்டிருந்த கழிவு நீர்க் குழாய்களின் சுரங்கப் பாதைகளில் அடர்த்தியாகக் கொட்டியது. அந்தக் குழாய்கள் இப்போது இரவின் இருளுக்குள் நீட்டிக் கொண்டு, சுற்றி வளர்ந்திருந்த படரும் செடிகொடிகளால் மூடப்பட்டும், விரிசல் விட்டும், உடைந்தும் கிடந்தன. காற்று கரும் சாம்பலை மேகம் போலக் கிளப்பி சுழற்றி, புதர்களிடையே நடமிட வைத்தது. ஒருதடவை கதிர்வீச்சால் விகாரமாக உருமாறிப் பெரும் உருவாக ஆகி இருந்த பாட்டுக் குருவி ஒன்று தூக்கத்தில் விதிர்த்து எழுந்து, இரவுக்கான பாதுகாப்பாகத் தன்னிடமிருந்த கந்தைகளை இழுத்து மூடிக் கொண்டு மறுபடி உறங்கியது.

சிறிது நேரம் அங்கு எந்தச் சலனமும் இல்லை. மேலே ஆகாயத்தில் தொலை தூரத்தில், பிடிவாதமாக ஒளிர்ந்த நட்சத்திரங்களின் ஒரு விரிகற்றை தெரிந்தது. எர்ல் பெரீன் சிறிது நடுங்கினார், உற்று மேலே நோக்கினார், மூன்று பேருக்கு நடுவே தரையில் வைத்திருந்த, அலையலையாக உஷ்ணத்தைப் பரப்பிய கருவிக்கருகே ஒடுங்கி உட்கார்ந்தார்.

என்ன?’ பற்கள் குளிரில் தாளமிட்டபடி., மோரிஸன் கேள்வி எழுப்பினார்.

நீல் பதில் சொல்லவில்லை. அவர் தன் சிகரெட்டை முடித்தார், அழிந்து கொண்டிருந்த ஒரு உலோகக் கழிவுக் குப்பையில் அதை நசுக்கி அணைத்தார், தன் லைட்டரை வெளியே எடுத்து இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தார். ஒரு பெரும் குவியலான டங்க்ஸ்டன்தூண்டில் இரைநூறு கஜம் தள்ளி அவர்களுக்கு நேரெதிரே இருந்தது

முன்பு சில நாட்களாக, டெட்ராய்ட்டிலும், பிட்ஸ்பர்க்கிலும் இருந்த ஃபாக்டரிகள் டங்க்ஸ்டன் தீர்ந்து விட்ட நிலைக்கு வந்திருந்தன. ஒரு நிலப்பகுதியிலாவது அவற்றின் செயல்பாட்டுக் களன்கள் ஒன்றன் மேல் ஒன்று படிந்திருந்தன. இந்த கழிவுக் குவியல் நுண் துல்லிய வெட்டும் கருவிகள், எலெக்ட்ரிக் ஸ்விட்ச்களிலிருந்து பிய்க்கப்பட்ட பாகங்கள், உயர் தர் அறுவை சிகிச்சைக் கருவிகள், நிரந்தர காந்தங்களின் சில பகுதிகள், அளவைக் கருவிகள் போன்றனவறால் ஆனதாக இருந்ததுடங்க்ஸ்டன் இருக்கும் சாத்தியம் உள்ள அனைத்துப் பொருட்களிலிருந்தும், எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும் ஜுர வேகத்தில் சேகரிக்கப்பட்டிருந்தன.

இருண்ட மூடுபனி டங்க்ஸ்டன் மேட்டின் மீது பரவிக் கவிந்திருந்தது. அவ்வப்போது ஒரு இரவு நேரத்து அந்துப் பூச்சி கருவிகள் பிரதிபலித்த நட்சத்திர ஒளியால் ஈர்க்கப்பட்டு மென் இறகுத் துடிப்போடு கீழிறங்கியது. ஒரு கணம் அந்தரத்தில் நின்று விட்டு, அதன் நீண்ட இறகுகளை பின்னிக் கிடந்த உலோகங்கள் மீது பயனின்றித் தட்டி விட்டு, கழிவு நீர்க் குழாய்களைச் சுற்றி மூடி உயர்ந்து அடர்த்தியாகப் பின்னி வளர்ந்திருந்த கொடிகளின் நிழலுக்குள் மிதந்து போகும்.

நாசமாப் போன இடம், அழகுங்கறதுக்கும் இதுக்கும் துளிக் கூட சம்பந்தமில்லை,’ பெரீன் வறட்சியாகச் சொன்னார்.

விளையாட்டுக்குக் கூட அப்படிச் சொல்லாதீங்க,’ நீல் மறுத்தார். ‘இது பூமியிலேயே மிக அழகான இடம். இதுதான் ஆட்டோஃபாக்குகளின் புதைகுழியைக் குறிக்கப் போகிற இடம். மக்கள் இந்த இடத்தைப் பார்க்க ஒருநாள் வருவார்கள். இங்கு ஒரு மைல் உயரத்துக்கு ஒரு சின்னம் இருக்கப் போகிறது.’

நீங்க உங்களோட தைரியத்தை காப்பாத்திக்கப் பாக்கறீங்க,’ மோரிஸன் அலட்சியப்படுத்திச் சொன்னார். ‘ஒரு சின்னக் குவியலா இருக்கற அறுவை சிகிச்சைக் கருவிகளுக்கும், லைட் கம்பிகளுக்கும்னு அது ரெண்டும் ஒண்ணையொண்ணு அடிச்சு நொறுக்கும்னு நிஜமாவே நம்புவீங்களா. அதுங்க இத்தனை நேரம் ஒரு எந்திரத்தை வைச்சு அடித்தளத்தில இருக்கற பாறைகள்லேருந்து டங்க்ஸ்டனை உறிஞ்சி எடுக்க வழி செய்திருக்கும்.’

இருக்கலாம்,’ நீல் ஒரு கொசுசை அடித்த வண்ணம் சொன்னார். அந்தக் கொசு தந்திரமாகத் தப்பியது, பிறகு ரீங்காரத்தோடு போய் பெரீனைத் தொல்லை செய்தது. பெரீன் ஆத்திரமாக அதை அடிக்கக் கை வீசினார், பிறகு வெறுப்போடு ஈரமான செடிகொடிகள் மீது குந்தி அமர்ந்தார்.

அப்போது அவர்கள் எதைப் பார்க்க வந்தார்களோ அது காணக் கிட்டியது.

நீல் அதைப் பல நிமிடங்களாகத் தான் பார்த்திருந்தாலும் அது என்னவென்று கவனிக்கத் தவறி விட்டதை அதிர்வோடு புரிந்து கொண்டார். அந்தத் தேடும் எந்திரம் சிறிதும் அசைவின்றி அமர்ந்திருந்தது. கழிவுக் குவியலின் சிறு மேட்டின் உச்சியில், அதன் பின் பகுதி சிறிது உயர்ந்து, அதன் வாங்கிகள் முழுதுமாக நீண்டு இருக்க, அது அமர்ந்திருந்தது. அது எறியப்பட்ட ஒரு கூடாக இருக்கலாம் என்பது போலத் தோற்றமளித்தது; அங்கு ஒரு நடவடிக்கைகளும் இல்லை, உயிரோ, அறிவு விழிப்புணர்வுக்கான சுவடோ ஏதும் இல்லை. அந்த பாழடைந்த, நெருப்பால் எரிக்கப்பட்ட நிலப்பரப்பில் கச்சிதமாகப் பொருந்தியது. உலோகத் தகடுகளும், பல்சக்கரங்களும், தட்டையான சங்கிலித் தடங்களும் கொண்ட உருத் தெளிவில்லாத ஒரு தொட்டியாகத் தெரிந்த அது, ஓய்வாகக் காத்திருந்தது. கண்காணித்தது.

அந்த டங்க்ஸ்டன் குவியலை அது சோதித்தது. அந்த தூண்டில் இரை தன் முதல் கவ்வலை ஈர்த்து விட்டிருந்தது.

மீன்,’ பெரீன் தடித்த குரலில் சொன்னார். ‘தூண்டில் நூல் நகர்ந்திருக்கு. முள் கொக்கி இறங்கிடுத்துன்னு நினைக்கிறேன்.’

என்ன எழவை நீங்க முணுமுணுக்கிறீங்க,’ மோரிஸன் குறையாகக் கேட்டார். அப்போது அவரும் அந்தப் பூச்சி போன்ற தேடும் எந்திரத்தைப் பார்த்து விட்டார். ‘யேசுவே,’ அவர் கிசுகிசுத்தார். தன் பெரிய உடம்போடு பாதி நின்றார், உடல் முன்புறம் வளைந்திருந்தது. ‘ஆக, ஒண்ணு வந்திருக்கு. இப்ப நமக்கு வேணுங்கிறதெல்லாம் மத்த ஃபாக்டரிலேருந்து ஒரு எந்திரம்தான். இது எந்த ஃபாக்டரியோடதுன்னு நினைக்கிறீங்க?’

நீல் தொடர்புக்கான கம்பியைக் கண்டு பிடித்திருந்தார், அதன் கோணத்தை அளந்தார். ‘பிட்ஸ்பர்க். இப்ப டெட்ராய்ட்டோடது வர்றணும்னு பிரார்த்தனை செய்யுங்கபித்துப் பிடிச்சாப்ல பிரார்த்தனை பண்ணுங்க.’

திருப்தி அடைந்த தேடல் பூச்சி, தன்னைப் பிரித்துக் கொண்டது, முன்னால் உருண்டு சென்றது. எச்சரிக்கையோடு அந்தக் குவியலை அணுகியது, சிக்கலான சில நகர்வுகளைச் செய்தது, இப்படியும் அப்படியும் உருண்டு புரண்டது. பார்த்துக் கொண்டிருந்த மூவரும் மர்மம் புரியாமல் குழம்பினர்மற்ற தேடும் பூச்சிகளின் துழாவும் கம்பிகளைக் காணும் வரை குழப்பம் இருந்தது.

தொடர்பு,’ மென்மையாகச் சொன்னார் ஓநீல். ‘தேனீக்களைப் போல.’

இப்போது ஐந்து பிட்ஸ்பர்க்கின் தேடும் பூச்சிகள் டங்க்ஸ்டன் பொருட்கள் இருந்த குவியலை நெருங்கிக் கொண்டிருந்தன. தகவல் வாங்கிக் கருவிகளை உற்சாகம் பொங்க ஆட்டியபடி, அவை தம் வேகத்தை அதிகரித்தன, திடீரெனக் கண்டு பிடித்துப் பொங்கிய வேகத்தில் குவியலின் உச்சிக்கு விரைந்து ஊர்ந்தன. ஒரு பூச்சி துளைத்து உள்ளே வேகமாகப் போய் மறைந்தது. மொத்தக் குவியலும் அதிர்ந்தது; எத்தனை அங்கே இருக்கிறது என்று அளவிட, பூச்சி கீழே போய் விட்டிருக்க வேண்டும்.

பத்து நிமிடத்தில் பிட்ஸ்பர்க் ஃபாக்டரியின் கனிம வண்டிகள் தோன்றின, சுறுசுறுப்பாகத் தங்களுடைய கொள்ளையை ஏற்றிக் கொண்டு ஓடத் துவங்கின.

நாசமாப் போச்சு,’ நீல் வேதனையோடு கத்தினார். ‘டெட்ராய்ட் வர்றதுக்கு முன்னாடி இதுங்க எல்லாத்தியும் கொண்டு போயிடும்.’

நாம ஏதாவது செஞ்சு இதுங்களைத் தடுத்து நிறுத்த முடியாதா?’ பெரீன் மன்றாடும் குரலில் கேட்டார். குதித்து எழுந்து, கிட்டே இருந்த ஒரு வண்டி மீது ஒரு கல்லை எடுத்து வீசினார். அந்தக் கல் அதன் மீது மோதி ஒரு பலனும் இல்லாமல் விழுந்தது, வண்டி சிறிதும் லட்சியம் செய்யாமல் தன் வேலையைத் தொடர்ந்தது.

நீல் எழுந்து நின்றார், சுற்றி வந்தார், செயலற்ற நிலையில் கடுங்கோபத்தால் உடல் விறைப்பாக இருந்தது. அதுங்க எங்கே? ஆட்டோஃபாக்டரிகள் எல்லா விதங்களிலும் சமமாக இருந்தவை, இந்த இடம் நேர் கோட்டில் இரண்டு ஃபாக்டரிகளுக்கும் இடையில் சமதூரத்தின் நடுவில் சரியாக இருந்தது. கருத்து ஆய்வின்படி இரண்டு ஃபாக்டரிகளும் ஒரே நேரத்தில் இங்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் டெட்ராய்ட்டின் வரவுக்கான அறிகுறியே இல்லைஅங்கேயோ அவர் கண் முன்னாடியே டங்க்ஸ்டனின் கடைசிப் பகுதி வண்டிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

அப்போது, திடீரென ஏதோ அவரைத் தாண்டிப் பிய்த்துக் கொண்டு ஓடியது.

அவர் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை, ஏனெனில் அந்தப் பொருள் மிக வேகமாக ஓடியிருந்தது. அது ஒரு துப்பாக்கிக் குண்டைப் போல சீறிப் போய் பின்னிக் கொண்டிருந்த கொடிகள் வழியே ஓடி, அந்தக் குன்றின் பக்கத்தில் வேகமாக ஓடி முகட்டில் ஏறியது, ஒரு கணம் அங்கே தயங்கித் தன் இலக்கைத் தீர்மானித்தது, மறுபுறம் பாய்ந்து இறங்கியது. முதல் வண்டியின் மீது நேராக அடித்து மோதியது. தாக்கியதும், இடிபட்டதும் கடும் ஒலியோடு நொறுங்கி விழுந்தன.

மோரிஸன் தாவி மேலே எழும்பினார். ‘அதென்ன கொடுமை?’

அதேதான்!’ பெரீன் கத்தினார், தன் குச்சியான கைகளை ஆட்டியபடி ஆட்டமாக ஆடினார். ‘ அது டெட்ராய்ட்.’

ஒரு இரண்டாவது டெட்ராய்ட்டின் தேடும் பூச்சி தோன்றியது, தயங்கி நிலைமை என்னவென்று புரிந்து கொள்ள முயன்றது, பின் கடும் வேகத்தோடு பின் வாங்கும் பிட்ஸ்பர்க் வண்டிகள் மீது தாவியது. டங்ஸ்டனின் துகள்கள் எங்கும் சிதறினபாகங்கள், மின் கம்பிகள், உடைந்த தகடுகள், பல்சக்கரங்கள், சுருள் கம்பிகள், மேலும் எதிரிகளின் தாக்கும் கணைகள் எல்லாப் பக்கங்களிலும் பறந்தன. எஞ்சிய வண்டிகள் பெரும் கீச்சிடலோடு சுழன்றன. ஒன்று தன் சுமையை அப்படியே போட்டு விட்டு உச்ச வேகத்தில் ஓடியது; இன்னொன்று தொடர்ந்தது, ஆனால் அது இன்னமும் தன் சுமையால் கனத்திருந்தது. ஒரு டெட்ராய்ட் தேடும் பூச்சி அதைப் பிடித்து விட்டது, நேராக அதன் பாதையில் சுழன்று நின்றது, கச்சிதமாக அதைக் கவிழ்த்து விட்டது. பூச்சியும் வண்டியும் ஒரு சிறு பள்ளத்தில் உருண்டு விழுந்து தேங்கி இருந்த கொஞ்சம் நீரில் முங்கின. நீர் சொட்டச் சொட்ட, மின்னிக் கொண்டு, பாதி மூழ்கிய நிலையில், இரண்டும் மல்லுக்கு நின்றன.

அப்ப சரி,’ நீல் தடுமாறியபடி சொன்னார், ‘நாம சாதிச்சுட்டோம். வீட்டுக்குத் திரும்பிப் போகலாம்.’ அவருடைய கால்கள் தெம்பில்லாதது போலத் தோன்றின. ‘நம்ம வண்டி எங்கே இருக்கு?’

ட்ரக்குடைய எஞ்சினை அவர் வேகப்படுத்திய போது, தூரத்தில் ஏதோ மின்னியது, ஏதோ பெரியதாக, உலோகமாக, மடிந்த கழிவுகளும் சாம்பலுமாக இருந்ததன் மேலே வேகமாக ஓடியது. அது ஒரு நெருக்கமான கூட்டமான வண்டிகள், கனரக தாதுப்பொருளைச் சுமக்கும் வண்டிகளின் பெருங்கூட்டம் அந்த இடத்துக்கு விரைந்து வந்து கொண்டிருந்தது. இது எந்த ஃபாக்டரியுடையது?

இப்போது அது ஒரு பொருட்டல்ல, ஏனெனில் கருமையாக, நீர் சொட்டும் கொடிகளுள்ளிருந்து அந்த வண்டிகளைச் சந்திக்க எதிர்ப்பு வலை நீட்டல்கள் எழுந்து வந்தன. எல்லாத் திசைகளிலிருந்தும், பூச்சிகள் ஊர்ந்தன, பதுங்கின, மீதம் இருக்கும் டங்க்ஸ்டன் குவியலைச் சுற்றிக் கவிந்தன. இரண்டு ஃபாக்டரிகளுமே அரிய டங்க்ஸ்டன் உலோகத்தை, கச்சாப்பொருளை விட்டு விலகத் தயாராக இல்லை; இரண்டுமே தம் கண்டு பிடிப்பை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. குருட்டுத்தனமாக, எந்திரங்களாக, மாற்றப்பட முடியாத ஆணைகளின் கட்டுப்பாட்டில் சிக்கி, இரண்டு எதிரிகளும் மேலான படைகளைத் திரட்டும் வேலையில் இறங்கி விட்டிருந்தன.

போகலாம் வாங்க,’ மோரிஸன் அவசரமாகச் சொன்னார். ‘இங்கேயிருந்து போயிடலாம். இங்கே பெரிசா ஏதோ பயங்கரம் நடக்கப் போகுது.’

நீல் அந்த ட்ரக்கை அவசரமாகக் குடியிருப்பை நோக்கித் திருப்பி ஓட்டினார். இருட்டினூடே கடமுடா சப்தங்களோடு அவர்கள் தாம் திரும்பும் பாதையில் பயணம் செய்தனர். அவ்வப்போது, ஒரு உலோக உரு அவர்களருகே கடும் வேகத்தில் விரைந்து கடந்தது, எதிர் திசையில் பயணித்துப் போனது.

அந்தக் கடைசி வண்டியைப் பார்த்தீர்களா நீங்கள்?’ பெரீன் கேட்டார், கவலையோடு. ‘அது காலியாக இல்லை.’

பின்னே தொடர்ந்த வண்டிகளும் காலியாக இல்லை, ஒரு பெரும் ஊர்வலத்தில் ஏகப்பட்ட சுமைகளோடு சப்ளை வண்டிகள் போயின, அவற்றை நிறைய மேம்பட்ட கருவிகள் கொண்ட மேற்பார்வை எந்திரம் ஒன்று வழிநடத்தியது.

பீரங்கிகள்,’ கண்கள் கவலையால் விரிந்திருந்த மோரிஸன் சொன்னார். ‘அதுங்க போர்க்கருவிகளைல்ல கொண்டு போகிறது. ஆனா யார் அதையெல்லாம் பயன்படுத்தப் போறாங்க?’

அதுங்களேதான்,’ நீல் பதில் சொன்னார். அவர் தன் வலது பக்கம் ஏதோ விரைந்ததைச் சுட்டினார். ‘அங்கே பாருங்க. இது நாம எதிர்பார்க்காதது.’

அவர்கள் முதல் ஃபாக்டரி பிரதிநிதி ஒன்று செயலில் இறங்குவதைப் பார்த்தார்கள்.

ட்ரக் கான்ஸாஸ் நகரக் குடியிருப்பில் நுழைந்த போது, ஜூடித் மூச்சிரைக்க அவர்களை நோக்கி ஓடி வந்தார். அவருடைய கையில் மெல்லிய உலோகத் தாளின் துண்டு ஒன்று அசைந்து கொண்டிருந்தது.

இது என்னது?’ நீல் கேட்டார், அதை ஜூடித்திடமிருந்து பிடுங்கினார்.

வாங்களேன்.’ அவருடைய மனைவி மூச்சு விடச் சிரமப்பட்டார். ‘ஒரு மொபைல் கார்வேகமாக வந்தது, இதைப் போட்டதுஉடனே போய் விட்டது. பெரும் களேபரம். ஏ அம்மா, ஃபாக்டரிலவெள்ளமா வெளிச்சம். பல மைல்களுக்கு நீங்க அதைப் பார்க்க முடியும்.’

நீல் அந்தக் கடிதத்தை அவசரமாகப் பார்வையிட்டார். அது கடைசி குடியிருப்புகளின் ஆர்டர்களுக்கு ஃபாக்டரி கொடுத்த சான்றிதழ், என்னென்ன இதுவரையிலும் கோரப்பட்டன, எதெல்லாம் அளிக்கப்பட்டு விட்டது என்ற பட்டியல். தடியான கருப்பு எழுத்துகளில் பட்டியலின் குறுக்கே அச்சடிக்கப்பட்ட ஆறு அச்சுறுத்தும் வார்த்தைகள் இருந்தன:

எல்லாப் பொருள் சப்ளைகளும் மாற்று அறிவிப்புவரை நிறுத்தப்பட்டிருக்கின்றன

தன் மூச்சைப் பலமாக விட்ட ஓநீல், பெரீனிடம் அந்தத் தாளைக் கொடுத்தார். ‘இனிமேல் நுகர் பொருட்கள் வராது.’ கிண்டலாகச் சொன்னார், சிறிது பதற்றமான சிரிப்பு அவர் முகத்தில் துடிப்போடு படர்ந்தது. ‘தொழில் வலைகள் போர்க்கால ஆயத்தங்களில் இறங்கி விட்டன.’

அப்ப நாம சாதிச்சுட்டோமா?’ மோரிஸன் நிறுத்தி நிறுத்திப் பேசினார்.

அதேதான்,’ நீல் சொன்னார். போரை மூட்டி விட்டாயிற்று, அவர் இப்போது ஒரு உறைய வைக்கும் பீதிக்கு ஆளாகி இருந்தார். ‘பிட்ஸ்பர்கும் டெட்ராய்ட்டும் இறுதி வரை போரில் இறங்கி விட்டன. இனிமேல் நம் கருத்தை மாற்றிக் கொள்ள நேரமில்லைஅவை இப்போது தம் நேச சக்திகளை அணி திரட்டுகின்றன.’

4

குளிர்ந்த காலையின் சூரிய ஒளி கருமையான உலோகச் சாம்பல் படர்ந்த நாசமாகி விட்ட சமவெளியில் வீசியது. அந்த சாம்பலில் மங்கலான, நோய்ப்பட்ட சிவப்பாக நெருப்பு கனன்றது; அது இன்னும் உஷ்ணமாகவே இருந்தது.

காலை கவனமா எடுத்து வைங்க,’ நீல் எச்சரித்தார். தன் மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவரை துருப்பிடித்த, தளர்ந்து சாய்கிற ட்ரக்கிலிருந்து இறக்கி, அங்கு சிதறி இருந்த கான்க்ரீட் பாறைகளின் மேல் ஏற உதவினார். அவை அங்கிருந்த பதுங்கு குழிகளின் மீதங்கள். எர்ல் பெரீன் பின்னே வந்தார், தன் வழியைக் கவனமாகப் பார்த்து, தயக்கத்தோடு நடந்தபடி.

அவர்களின் பின்னே, பாழடைந்த குடியிருப்பு பரவிக் கிடந்தது, சதுரங்கப் பலகையில் சிதறிய காய்கள் போல வீடுகள், தெருக்கள், கட்டடங்கள் சிதறி இருந்தன. ஆட்டோஃபாக் வலை தன் சப்ளைகளை நிறுத்தி, பராமரிப்பையும் கை விட்டபின், மனிதக் குடியிருப்புகள் பாதி நாகரீகத்தை இழந்து விட்டன. எஞ்சிய பொருட்கள் உடைந்திருந்தன, பாதி பாகம்தான் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. உணவு, கருவிகள், ஆடைகள், துணிகள், பழுது பார்க்க உதவும் பாகங்கள் எல்லாம் கொண்டு வரும் மொபைல் ஃபாக்டரி ட்ரக் ஒன்று கடைசியாக வந்து சுமார் ஒரு வருடத்துக்கு மேல் ஆகி விட்டிருந்தது. சமதளமாகவிருந்த கருத்த கான்க்ரீட்டும் உலோகமும் கலந்த அந்த மலையடிவாரத்துக் கட்டடத்திலிருந்து எதுவும் அவர்களின் திசையில் வரவில்லை.

அவர்களின் ஆசைகள் நிறைவேறி விட்டனஅவர்கள் வலை உலகிலிருந்து துண்டிக்கப்பட்டு விட்டார்கள்.

இப்போது அவர்கள் தாமே தம்மைப் பராமரிக்க வேண்டும்.

அவர்களுடைய குடியிருப்பைச் சூழ்ந்த பகுதிகளில் கோதுமை வயல்களும், சூரியன் காய்ச்சிய காய்கறிகளும் ஆங்காங்கே கிடந்தன. நேர்த்தி இல்லாது தயாரிக்கப்பட்ட கருவிகள் விநியோகிக்கப்பட்டிருந்தன, பல குடியிருப்புகளாகச் சேர்ந்து அடித்துத் தயாரித்த செயற்கை உபகரணங்கள் அவை. குடியிருப்புகள் இப்போது குதிரை வண்டிகளாலும், டெலிக்ராஃப் தந்திகளாலும்தான் தொடர்பு கொண்டன.

ஆனாலும், அவர்களால் தம் சமூக அமைப்புகளை நீடிக்க வைக்க முடிந்தது. பொருட்களும், சேவைகளும் மெதுவாக, இடைவிடாத வேகத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அடிப்படைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன. நீல், ஜூடித் மேலும் பெரீன் அணிந்திருந்த துணிகள் கரடுமுரடாக, வெளுக்க வைக்கப்படாத ஆனால் நல்ல உறுதி கொண்டவையாக இருந்தன. அவர்கள் சில ட்ரக்குகளை பெட்ரோலிலிருந்து மரத்தால் ஓட்டப்படக் கூடியவையாக மாற்றி இருந்தனர்.

இங்கே வந்தாச்சு நாம,’ நீல் சொன்னார். ‘ இங்கேயிருந்து நம்மால் பார்க்க முடியும்.’

இதுக்கு இத்தனை பாடா?’ ஜூடித் கேட்டார், களைத்துப் போயிருந்தார். குனிந்து தன் காலணியிலிருந்து எதையோ கவனமின்றிப் பிய்த்தார். அவருடைய மென்மையான தோல் அடிப்பாகத்திலிருந்து ஒரு கூழாங்கல்லைப் பிரித்து எடுக்க முயன்றார். ‘இது ரொம்ப தூரப் பயணம். பதிமூணு மாசமா நாம தினம் பார்த்துக் கொண்டிருந்த ஒண்ணைப் பார்க்க இத்தனை சிரமப்படணுமா?’

உண்மைதான்,’ நீல் ஒத்துக் கொண்டார். அவர் கை தன் மனைவியில் தளர்ந்த தோள் மீது ஒரு கணம் தங்கியது. ‘ஆனால் இதுதான் நமது கடைசிப் பயணமாயிருக்கும். அதனால்தான் நாம் இதைப் பார்க்க விரும்புகிறோம்.’

அவர்களுக்கு மேலே இருந்த சாம்பல் வானில், வேகமாகச் சுழலும், ஒளி ஊடுருவாத கரும் புள்ளி ஒன்று விரைந்தது. உயரே, தூரத்தில், அந்தப் புள்ளி சுழன்றது, ஒரு சிக்கலான, ஜாக்கிரதையான பாதையைப் பின்பற்றிய வண்ணம், அகன்று போனது.

சான் ஃப்ரான்ஸிஸ்கோ,’ நீல் விளக்கினார். ‘அந்த நீண்ட தூர ஹாக் ப்ரொஜக்டைல்களில் ஒன்று, மேற்குக் கரையிலிருந்து அத்தனை தூரம் வந்திருக்கிறது.’

இதுதான் கடைசியா இருக்கும்னு நினைக்கிறீங்களா?’ பெரீன் கேட்டார்.

இந்த மாசம் நான் பார்த்தது இது ஒண்ணைத்தான்.’ நீல் அங்கே உட்கார்ந்து கொண்டு, பழுப்புக் காகிதக் குழல் ஒன்றில் கொஞ்சம் உலர்ந்த புகையிலைத் தூள்களைப் போடத் துவங்கினார்.

ஒருவேளை அதுங்கள் கிட்டே இன்னும் மேலான ஆயுதம் ஏதாவது இருக்குமோ என்னவோ?’ ஜூடித் யோசனை சொன்னார். அவர் ஒரு வழவழப்பான பாறையைக் கண்டுபிடித்து அதில் அமர்ந்தார். ‘அப்படி இருக்குமா?’

அவருடைய கணவர் புதிர் போலச் சிரித்தார். ‘இல்லை, அதுங்க கிட்டே இதை விட மேலானதா ஏதும் இல்லை.’

மூன்று பேரும் இறுக்கமாக மௌனமாக அமர்ந்திருந்தனர். மேலே, அந்த வட்டமிட்ட புள்ளி கீழே இறங்கி வரத் துவங்கியது. தரையிலிருந்த உலோகமும் காங்க்ரீட்டுமாக இருந்த தளத்தில் ஏதும் நடவடிக்கையே தென்படவில்லை; கான்ஸாஸ் நகரத்து ஃபாக்டரி செயலற்று, எதிர்வினை ஆற்றாமல் கிடந்தது. சில அலைகளான சூடான சாம்பல் எழுந்து அதன் குறுக்கே கடந்து போயிற்று, ஒரு மூலை பாதி இடிபாடுகளில் மூடிக் கிடந்தது. அந்த ஃபாக்டரி பல நேரான தாக்குதல்களை வாங்கி இருந்தது. அந்தச் சமவெளியின் குறுக்கே, அதன் பல தரையடிச் சுரங்கங்கள் வெளிப்பட்டு, இடிபாடுகளாலும், நீரைத் தேடும் கடினமான கொடிகளின் இருண்ட வேர்களாலும் அடைபட்டு வெறும் குழிகளாகக் கிடந்தன.

அந்த நாசமாப் போன கொடிகள்,’ பெரீன் தன் தாடையில் இருந்த ஆறாமலிருந்த ஒரு காயத்தைத் தடவிப் பிய்க்க முயன்றபடி குறையாக முனகினார். ‘உலகத்தையே ஆளணும்னு பாக்கிறதுங்க.’

ஃபாக்டரியைச் சுற்றிலும் இங்கேயும் அங்கேயும், அதன் நீட்சிகளாக உலவியவை எல்லாம் காலைப் பனியில் துருப்பிடித்துக் கிடந்தது தெரிந்தது. வண்டிகள், ட்ரக்குகள், தேடும் பூச்சி எந்திரங்கள், ஃபாக்டரி பிரதிநிதிகள், ஆயுதம் தாங்கி வண்டிகள், பீரங்கிகள், சப்ளை ரயில்கள், தரையடிக் கணைகள், இன்னதென்று தெரியாத பல எந்திரங்களின் பாகங்கள் எல்லாம் கலந்து உருகி உருவற்றக் குவியல்களாகக் கிடந்தன. சில ஃபாக்டரிக்குத் திரும்புகையில் அழிக்கப்பட்டிருந்தன; மற்றவை முழுதும் சுமை தாங்கி, எந்திரங்களால் நிரம்பி வெளிவருகையில் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன. ஃபாக்டரியேபாக்கி என்ன இருந்ததோ அதுமுன்னை விட ஆழத்தில் தரையடியில் பதுங்கி விட்டதாகத் தோன்றியது. பூமிக்கு மேல் அதன் மேல் பாகம் அனேகமாகத் தெரியாதபடி இருந்தது, அதுவும் அலைந்து திரியும் சாம்பலில் அது மறைந்தே விட்டது.

நான்கு நாட்களாக, அங்கு ஏதும் கண்ணுக்குத் தெரிகிற மாதிரி நடவடிக்கை இருக்கவில்லை, தெரிகிற மாதிரி ஏதும் போக்கு வரத்து இல்லை.

அது ஒழிந்து போயிடுத்து,’ பெரீன் சொன்னார். ‘உங்களால அது செத்துப் போயிடுத்துன்னு பார்க்க முடியறதில்லையா?’

நீல் பதில் சொல்லவில்லை. குந்தி உட்கார்ந்து, அவர் தன்னை வசதியாக இருத்திக் கொண்டார், பின் காத்திருக்கத் தயாரானார். அவருடைய மனதில், ஃபாக்டரியின் மிச்சப் பகுதிகளில் இன்னும் மீதமுள்ள ஆட்டோமேஷன் இருப்பதாக அவருக்கு நிச்சயமாக இருந்தது. காலம்தான் சொல்ல வேண்டும். அவர் தன் கைக்கடிகாரத்தைச் சோதித்தார்; எட்டரை மணி ஆகியிருந்தது. முன் நாட்களில், ஃபாக்டரி இந்த நேரம் தன் வழக்கமான தினசரி இயக்கத்தைத் துவங்கி இருக்கும். ட்ரக்குகளும், பல பயணிக்கிற எந்திரங்களும் தரைக்கு மேலே வரும், சுமைகளால் நிரம்பி இருக்கும், மனிதக் குடியிருப்புகளுக்குக் கொண்டு கொடுக்கத் தம் பயணங்களைத் துவங்கி விடும்.

அவர்களுக்கு வலது பக்கம் ஏதோ நகர்ந்தது. அவர் சட்டென்று தன் கவனத்தை அங்கே செலுத்தினார்.

அடிபட்டு நைந்திருந்த ஒரு வண்டி ஃபாக்டரியை நோக்கித் தடுமாறியபடி சென்று கொண்டிருந்தது. ஒரு கடைசி பயண வண்டி தன் வேலையைப் பூர்த்தி செய்ய முயன்று கொண்டிருந்தது. அந்த வண்டி அனேகமாகக் காலியாகத்தான் இருந்தது; சில உலோக உடைசல்கள் அதன் கூண்டில் கிடந்தன. குப்பையிலிருந்து பொருட்களைச் சேகரிக்கும் சாதனம்வழியில் கிடந்த நொறுங்கிய சாதனங்களிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட உலோகப் பாகங்கள் அவை. சக்தியே இல்லாமல், ஒரு குருட்டு உலோகப் பூச்சியைப் போல, அந்த வண்டி ஃபாக்டரியை நெருங்கியது. அதன் முன்னேற்றம் நம்ப முடியாதபடி தட்டுத் தடுமாற்றத்தோடு இருந்தது. அவ்வப்போது, அது நின்றது, துள்ளியது, நடுங்கியது, இலக்கில்லாமல் பாதையிலிருந்து அலைந்து திரிந்தது.

கட்டுப்பாடு மோசமாக உள்ளது,’ தன் குரலில் பயங்கரம் ஒலிக்க ஜூடித் சொன்னார். ‘ஃபாக்டரிக்கு அதை வழிகாட்டித் திரும்பக் கொணர்வதில் பிரச்சினை இருக்கிறது.’

ஆமாம். அதை அவர் பார்த்து விட்டிருந்தார். நியூயார்க்கைச் சுற்றி இருந்த ஃபாக்டரி தன் உயர் அலைவரிசை ஒலிபரப்பியை முற்றிலும் இழந்து விட்டிருந்தது. அதன் பயணச் சாதனங்கள் கோணல் மாணலான சுழற்சிகளில் திண்டாடின, ஒழுங்கில்லாத வட்டங்களில் ஓடின, பாறைகள், மரங்களில் போய் மோதின, பள்ளங்களில் சறுக்கி வீழ்ந்தன, கவிழ்ந்தன, இறுதியில் தளர்ந்து தம் விருப்பத்தை மீறி அசைவற்று நின்று விட்டன.

கனிம வண்டி பாழடைந்த சமவெளியின் இறுதிப் புள்ளிக்கு வந்திருந்தது, சிறிது நின்றது. அதன் மேலே, கருப்புப் பருந்து வட்டமாக இன்னும் ஆகாயத்தில் சுழன்றது. சில கணங்கள் அந்த வண்டி உறைந்து நின்றது.

ஃபாக்டரி தீர்மானிக்க முயல்கிறது,’ பெரீன் சொன்னார். ‘அதற்கு இந்தப் பொருள் வேண்டும், ஆனால் மேலே இருக்கிற அந்தப் பருந்தைப் பார்த்துப் பயப்படுகிறது.’

ஃபாக்டரி சர்ச்சித்தது, ஏதும் அசையவில்லை. அந்த கனிம வண்டி தன் நிலைப்பில்லாத ஊர்தலைத் தொடர்ந்தது. கொடிகளின் சிக்கலான பின்னலை விட்டு அகன்று போயிற்று, வெடிகளால் நாசமாக்கப்பட்ட அந்தத் திறந்த சமவெளியின் வழியே போகத் துவங்கியது. மிகத் துன்பப்பட்டு, அளவில்லாத எச்சரிக்கையோடு, அது ஒரு இருண்ட நிற உலோகமும் காங்க்ரீட்டுமாக மலையடிவாரத்தில் இருந்த பகுதியை நோக்கிச் சென்றது.

பருந்து சுற்றுவதை நிறுத்தியது.

கீழே உக்காருங்க,’ நீல் கடுமையாகச் சொன்னார். ‘அதுங்க இந்தக் கணையில இப்ப புது மாதிரி குண்டுகளைச் சேர்த்திருக்குங்க.’

அவருடைய மனைவியும், பெரீனும் குனிந்து அவரருகே கீழே அமர்ந்தனர். மூவரும் சமவெளியில் உற்று நோக்கியபடி விழிப்பாக இருந்தனர். அந்த உலோகப் பூச்சி சிரமப்பட்டு சமவெளியில் ஊர்ந்து கொண்டிருந்தது. ஆகாயத்தில் பருந்து ஒரு வீச்சில் நகர்ந்து அந்த வண்டிக்கு நேராக நின்றது. பிறகு ஒரு சைகையும் இல்லாமல் ஒரு நேரான குதிப்பில் கீழே இறங்கியது. முகத்தைக் கைகளால் மூடியபடி ஜூடித் கதறினார், ‘என்னால் இதைப் பார்க்க முடியல்லே. இது கோரமாக இருக்கிறது. காட்டு மிருகங்களைப் போல இருக்கு.’

அது அந்த வண்டிக்காக வரல்லை,’ நீலின் குரல் உரசி அறுப்பது போல ஒலித்தது.

காற்றில் பறக்கும் ப்ரொஜெக்டைல் கீழே தாழ்ந்ததும், அந்த வண்டி நம்பிக்கையிழந்தது போல திடீரென்று வேகம் பிடித்தது. ஃபாக்டரியை நோக்கி கடும் வேகத்தில் கடங் முடங்கென்று சத்தத்தோடும், பெரும் ஆட்டங்களோடும் ஓடியது, பயனற்ற கடைசி முயற்சி போலத் தெரிந்த ஒன்றில் பாதுகாப்பை நோக்கி ஓடியது. மேலே இருந்த அபாயத்தை மறந்து, கச்சாப் பொருளுக்காக ஏக்கத்திலிருந்த ஃபாக்டரி, வாயிலைத் திறந்து தன் பயண ஊர்தியை நேரே உள்ளே வழி நடத்தியது. அந்தப் பருந்து எந்திரத்துக்கு அது எதற்காகக் காத்திருந்ததோ அது கிட்டி விட்டது.

வாயில் தடுப்பு மூடுமுன், அந்தப் பருந்து ஒரே வீச்சில், தரைக்கு இணைகோடான ஒரு நீண்ட சறுக்கலில், கீழிறங்கிப் பறந்தது. வண்டி ஃபாக்டரியின் ஆழங்களுக்குள் மறையத் துவங்கியபோது, பருந்து அதன் பின்னே பிய்த்துக் கொண்டு போயிற்று, வெகுதுரிதமான உலோக மின்னலாக அது கடங்முடாங்கென்று போய்க் கொண்டிருந்த வண்டியைத் தாண்டி சீறிக் கொண்டு போயிற்று. திடீரென்று நிலைமையைத் தெரிந்து கொண்ட ஃபாக்டரி தன் வாசல் தடுப்புகளை அடித்து மூடியது. பாதி மூடிய வாயிலில் இறுகப் பிடிக்கப்பட்டு, அந்த வண்டி கோரமாகச் சிக்கிக் கொண்டது, விடுவித்துக் கொள்ளப் போராடியது.

ஆனால் அது விடுவித்துக் கொண்டதா இல்லையா என்பது ஒரு பொருட்டில்லை. அங்கே ஒரு ஒலி மங்கிய அதிர்வு எழுந்தது. தரை நகர்ந்தது, வீங்கியது, பிறகு மறுபடி அடங்கியது. பலமான அதிர்ச்சி அலை ஒன்று பார்வையாளராக இருந்த மூவருக்குக் கீழே கடந்து போயிற்று. அங்கிருந்த காங்க்ரீட் தரை காய்ந்த விதைப் பை போல விரிந்தது; சுருங்கியது, நொறுங்கியது, தன் உடைந்த சில்லுகளை சிறு மழை போல எங்கும் சிதறடித்தது. புகை அங்கே சிறிது நேரம் கவிந்திருந்தது, காலைக் காற்றில் குறிப்பின்றி இங்குமங்கும் அலைந்தது.

ஃபாக்டரி உருக்கப்பட்டு, உள்ளீடெல்லாம் அழிக்கப்பட்டு, பெரும் அழிவாக ஆகியிருந்தது. அது ஊடுருவப்பட்டு, அழிக்கப்பட்டு விட்டது.

நீல் சிரமப்பட்டு எழுந்து நின்றார். ‘அவ்வளவுதான். எல்லாம் முடிஞ்சு போச்சு. நாம எதை அடையணும்னு எண்ணினோமோ அது கிடைச்சுடுத்துஆட்டோஃபாக் வலைத் தொழிலை நாம் அழித்து விட்டோம்.’ அவர் பெரீனைப் பார்த்தார். ‘ஆனா, இதுதானா நாம விரும்பினது?’

அவர்கள் பின்னே இருந்த குடியிருப்பை நோக்கினர். முந்தைய வருடங்களில் இருந்த ஒழுங்கு வரிசையான வீடுகளோ, தெருக்களோ சிறிதும் மீதம் இல்லை. தொழில் வலை இல்லாமல், குடியிருப்பு வேகமாக க்ஷீணித்து விட்டது. வளமிருக்கையில் இருந்த முந்தைய சீரான நிலை அழிந்து விட்டது, குடியிருப்பு இப்போது அழுக்காக, மோசமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது.

இல்லையா பின்னே?’ என்றார் பெரீன், தயக்கத்தோடு. ‘நாம ஃபாக்டரிகளுக்குள்ளே போன பிறகு, நம்முடைய அசெம்ப்ளி லைன் உற்பத்தியை நாமே துவங்கின பிறகு….’

ஏதாவது பாக்கி இருக்கா என்ன?’ ஜூடித் கேட்டார்.

அங்கே ஏதாவது மிச்சம் இருந்தே ஆகணும். கடவுளே, அங்கே எத்தனை தளங்கள்  மைல் கணக்கில இல்லே கீழே போய்க் கொண்டே இருந்தன…’

கடைசி நாட்கள்லே தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் சிலதெல்லாம் பயங்கரமாப் பெரிஸ்ஸா இருந்ததில்லியா?’ ஜூடித் சுட்டினார். ‘நம்முடைய போர்கள்ல இருந்த எதையும் விட இதெல்லாம் பெரிசு.’

நாம பார்த்த அந்த முகாம் நினைவிருக்கா? பாழடைந்த இடங்கள்லே குடி புகுந்திருந்தாங்களே?’

நான் அப்ப கூடப் போகல்லே,’ பெரீன் சொன்னார்.

அவங்க காட்டு மிருகங்களைப் போல இருந்தாங்க. கிழங்குகள், வேர்கள், லார்வான்னு எது கிட்டினாலும் சாப்பிட்டாங்க. கற்களைக் கூர்மைப் படுத்திக் கொண்டு, தோல்களைப் பதப்படுத்தி வச்சுகிட்டு. மிருகத்தனம், காட்டுமிராண்டித்தனம்.’

ஆனா அதைத்தான் அந்த மாதிரி ஜனங்க விரும்பறாங்க,’ பெரீன் பதிலளித்தது தற்காப்பு போலிருந்தது.

அவங்க அதான் விரும்பறாங்களா? நமக்கு இது வேண்டி இருக்கா?’ நீல் ஒழுங்கேதுமின்றிச் சிதறியிருந்த குடியிருப்பைச் சுட்டினார். ‘டங்க்ஸ்டனைச் சேகரிக்கக் கிளம்பினபோது இதைத்தானா அடைய விரும்பினோம்? அல்லது ஃபாக்டரி கிட்டே பால் வந்து….’ அவரால் அது என்ன வார்த்தை என்று நினைவு கூர முடியவில்லை.

பிச்சிலாயிருக்குஜூடித் எடுத்துக் கொடுத்தார்.

சரி வாங்க,’ நீல் சொன்னார். ‘நாம இப்ப ஆரம்பிக்கணும். ஃபாக்டரியில என்ன பாக்கி இருக்கு நமக்குன்னு போய்ப் பார்க்கணும்.”

*

அவர்கள் அந்த அழிக்கப்பட்ட ஃபாக்டரியை அடையும்போது பின் மாலை ஆகி இருந்தது. நான்கு ட்ரக்குகள் உறுமிக் கொண்டு ஆட்டத்தோடு மேலேறி முழுதும் பிடுங்கி எறியப்பட்டு உருவான குழியின் விளிம்பில் வந்து நின்றன. எஞ்சின்கள் நீராவியை வெளிப்படுத்தியபடி இருக்க, கழிவுக்குழாய்களில் நீர் சொட்டியது. எச்சரிக்கையும், விழிப்பும் கொண்ட தொழிலாளர்கள் கீழே அவசரமாக இறங்கி சூடான சாம்பலின் மீது கவனமாக, மெல்ல அடியெடுத்து வைத்துக் கடந்தனர்.

இது ரொம்ப சீக்கிரம் போல இருக்கு,’ அவர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

நீல் காத்திருக்கச் சிறிதும் விரும்பவில்லை. ‘வாங்க போவோம்,’ அவர் ஆணையிட்டார். ஒரு ஃப்ளாஷ்லைட்டை எடுத்துக் கொண்டு, அவர் குழிக்குள் காலை எடுத்து வைத்தார்.

பாதுகாப்பாக இருந்த கான்ஸாஸ் நகர ஃபாக்டரியின் மேல் அடுக்கு நேர் எதிரே இருந்தது. அதன் பாழாக்கப்பட்ட முகவாயிலில், கனிம வண்டி இன்னமும் பிடிபட்டுத் தொங்கிய நிலையில் இருந்தது, ஆனால் இப்போது அது முரண்டிக் கொண்டு இல்லை. வண்டியைத் தாண்டி எங்கும் குளமாக இருள் தேங்கி இருந்தது. நீல் தன் விளக்கொளியை வாயில் வழியே உள்நோக்கி வீசி அடித்தார். நெடுக்கு வாக்கில் இருந்த தாங்கும் தூண்களின் உடைந்த மீதப் பகுதிகள் தெரிந்தன.

நாம் ஆழத்துக்குப் போக வேண்டும்,’ அவர் தன் அருகே எச்சரிக்கையோடு உலவிய மோரிஸனிடம் சொன்னார். ‘அங்கே ஏதாவது மிச்சம் இருந்தாக்க, அது அடியிலேதான் இருக்கணும்.’

மோரிஸன் முனகினார். ‘அட்லாண்டாவிலிருந்து வந்த துளைக்கும் எந்திர எலிகள் ஆழ்நிலையிலிருந்தவற்றில் அனேகத்தை எடுத்து விட்டன.’

மத்ததெல்லாம் தங்களோட கண்ணி வெடிகளைப் புதைக்கும் வரை,’ நீல் சாய்ந்து தொங்கிய வாயில் வழியே கவனமாக உள்ளே நுழைந்தார், உள்புறமிருந்து வாயிலில் இருந்த துவாரத்தின் மீது தூக்கி எறியப்பட்டிருந்த இடிபாடுகளின் மேட்டின் மீது ஏறினார், உடனே ஃபாக்டரிக்கு உள்புறம் வந்து விட்டதாக அறிந்து கொண்டார். பரந்த வெளியாக, ஒரு ஒழுங்கோ, பொருள் தரும் பாணியோ இல்லாது குழப்பமாகக் கிடந்த அழிவுகள் எதிரே கிடந்தன.

எண்ட்ராப்பி,’ நசுக்கப்பட்டதைப் போல உணர்ந்த மோரிஸன் மூச்சுவிட்டுச் சொன்னார். ‘அது எப்போதும் வெறுத்த ஒன்று. எதை அது எதிர்க்கவென்று கட்டப்பட்டதோ அது. ஒழுங்கேதும் இல்லாத துகள்கள் எங்கும். ஒரு நோக்கமும் இல்லை இதற்கெல்லாம்.’

இன்னும் கீழே,’ நீல் பிடிவாதமாகச் சொன்னார், ‘ நாம் சில அடைக்கப்பட்ட ஒதுக்கிடங்களைக் காணலாம். அது தன்னைப் பிரித்து தன்னாட்சி செய்யும் பிரிவுகளாக மாற்றிக் கொண்டிருந்ததை நான் அறிவேன். பழுது பார்க்கும் பிரிவுகளை உருக்குலையாமல் வைத்திருந்தது, மறுபடி பின்னால் ஒரு கூட்டு ஃபாக்டரியை நிறுவுவதற்காக.’

எந்திர எலிகள் அவற்றை எல்லாம் அழித்து விட்டன,’ மோரிஸன் தான் கவனித்ததைச் சொன்னார், ஆனால் அவர் ஓநீலைப் பின் தொடர்ந்து சென்றார்.

அவர்களுக்குப் பின்னே தொழிலாளர்கள் மெதுவாக வந்தனர். இடிபாடுகளில் ஒரு பகுதி அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அசைந்து கொடுத்தது. சூடான சிதிலங்கள் மேலிருந்து சரிந்து விழுந்தன.

நீங்களெல்லாம் ட்ரக்குகளுக்குத் திரும்பப் போயிடுங்க,’ நீல் சொன்னார். ‘நம்ம எல்லாரையும் அவசியமில்லாம ஆபத்தில சிக்க வைக்கிறதுல அர்த்தமில்லே. மோரிஸனும் நானும் திரும்ப வரல்லைன்னா, எங்களை மறந்துடுங்ககாப்பாத்தறத்துக்கு ஒரு குழுவை எங்கள் பின்னாலேயே அனுப்பாதீங்க.’  அவர்கள் திரும்பப் போனதும், அவர் மோரிஸனுக்கு கீழே இறங்கிச் செல்ல இருந்த ஒரு பாதையைச் சுட்டினார், அது இன்னமும் பகுதி ஒழுங்காக இருந்தது. ‘நாம கீழே போகலாம்.’

மௌனமாக, இரண்டு பேரும் அழிந்த தளங்களை ஒவ்வொன்றாகக் கடந்தனர். முடிவில்லாத மைல்கள் தூரங்களில் ஓர் ஒலியும், எந்த நடவடிக்கையும் இல்லாதே இருண்ட இடிபாடுகள் நீண்டு சென்றன. கருகிய எந்திரங்களின் தெளிவில்லாத உருவங்களும், நகராத பெல்ட்களும், அவற்றை நகர்த்தும் எந்திரங்களும் பாதி தெரிந்தன, பாதி பூர்த்தியாகி இருந்த போருக்கான தளவாடங்கள் (ப்ரொஜெக்டைல்கள்) கடைசி வெடிப்பால் வளைந்து நெளிந்து சிதறிக் கிடந்தன.

இவற்றில் சிலவற்றை நாம் மீட்க முடியும்,’ நீல் சொன்னார், ஆனால் அவரே தான் சொன்னதை அத்தனை நம்பவில்லை. எந்திரங்கள் உருகி, உருவிழந்து மொத்தையாகக் கிடந்தன. ஃபாக்டரியில் இருந்த எல்லாம் உருகி ஒன்றாக ஓடி, உலோகக் கழிவாக, உருவோ, பயன்பாடோ தெரியாமல் இருந்தன. ‘இவற்றை மேலே தரைத் தளத்துக்குக் கொண்டு போன பின்பு,,’

நம்மால் அது முடியாது,’ மோரிஸன் கசப்போடு மறுதலித்தார். ‘நம்மிடம் மேலுயர்த்திகளோ, ஏற்றும் உருளைப் பொறிகளோ ஏதும் இல்லை.’ அவர் நின்றிருந்த கன்வேயர் பெல்ட்டில் சில நுகர் பொருட்கள் கருகிக் குவியலாகக் கிடந்ததைக் காலால் உதைத்தார். அவை அந்தக் கீழே செல்லும் சரிவுப் பாதையில் சிதறிக் கிடந்தன.

அப்ப இது ஒரு நல்ல யோசனையாத் தெரிஞ்சது, இல்லையா,’ என்றார் ஓநீல். அவர்கள் எந்திரங்கள் இருந்த பல காலித் தளங்களைக் கடந்து கீழே போய்க் கொண்டிருந்தனர். ‘இப்பத் திரும்பிப் பார்க்கிறேன், எனக்கு அப்படி உறுதியாச் சொல்ல முடியல்லை.’

அவர்கள் ஃபாக்டரிக்குள் வெகு தூரம் போயிருந்தார்கள். இறுதித் தளம் முன்னால் விரிவாகக் கிடந்தது. நீல் இங்குமங்கும் ஃப்ளாஷ் லைட்டின் ஒளியைப் பாய்ச்சி, அழிக்கப்படாத பகுதிகளையும், இணைத்து உருக்கொடுக்கும் வேலைக்கான எந்திரங்களில் இன்னும் அப்படியே இருக்கிறவற்றையும் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்த்தார்.

மோரிஸன் தான் அதை முதலில் உணர்ந்தார். அவர் திடீரென்று தன் முழங்கால்களில் முட்டியிட்டு, கைகளைத் தரையில் ஊன்றிப் படுத்தார்; கனமான உடல் தரையில் ஒட்டி அழுத்தியது, அவர் படுத்துக் கேட்டிருந்தார், முகம் கடுமையாக இருந்தது, கண்கள் விரிந்திருந்தன. ‘அடக் கடவுளே-’

என்னது அது?’ நீல் இரைந்தார். அப்போது அவரும், அதை உணர்ந்தார். அவர்களுக்குக் கீழே ஒரு மெல்லிய, இடைவிடாத அதிர்வு தரைக்கு மேல் ரீங்கரித்தது. அவர்கள் தவறான முடிவு செய்திருந்தனர்: பருந்து விசையின் தாக்குதல் முழுதும் வெற்றி பெறவில்லை. கீழே, இன்னும் ஆழ் தளத்தில், ஃபாக்டரி இன்னும் உயிரோடு இருந்தது. மூடப்பட்டு, குறைவான அளவு உற்பத்தி இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது.

அது பாட்டில வேலை செய்கிறது,’ நீல் முணுமுணுத்தார், கீழே இறங்கும் லிஃப்டுக்குத் தொடர்ச்சி ஏதும் இருக்கிறதா என்று தேடினார். ‘தன்னிச்சையான நடவடிக்கை, மற்றதெல்லாம் அழிந்த பின்னும் தொடரும்படி அமைக்கப்பட்டிருக்கிற ஒன்று. நாம எப்படிக் கீழே போவது?’

கீழிறங்கும் லிஃப்ட் உடைந்திருந்தது. தடியான உலோகத் தகட்டால் அது மூடப்பட்டிருந்தது. அவர்களுக்குக் கீழே ஒரு தளத்தில் இன்னும் செயலில் இருப்பன, அவர்கள் காலுக்குக் கீழே உள்ளன, முழுதும் அடைக்கப்பட்ட இடத்தில் இருந்தன. நுழை வாயில் ஏதும் இல்லை.

வந்த வழியே வேகமாக ஓடிப் போன ஓநீல் தரைத் தளத்தை அடைந்த உடன், முதல் ட்ரக்கை அழைத்தார். ‘அந்தப் பாழாப் போற உருக்கும் பந்தம் எங்கே? இங்கே கொடுங்க அதை.’

அந்த அரிய எரித்து உருக்கும் பந்தம் அவரிடம் கடத்தப்பட்டது, அவர் அவசரமாகத் திரும்பி மூச்சிரைக்க ஓடினார். மோரிஸன் காத்துக் கொண்டிருந்த இடத்திற்கு, அழிக்கப்பட்ட ஃபாக்டரியின் ஆழ் நிலைத் தளத்துக்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்தார். இருவருமாக, அவசர அவசரமாக, வளைந்து நெளிந்திருந்த அந்த உலோகத் தரையை வெட்டத் துவங்கினர், மூடிஅடைக்க உதவிய வலையை வெட்டினர்.

முடியப் போகிறது,’ மோரிஸன் திணறி மூச்சு விட்டார், எரிப் பந்தத்தின் கண் கூசும் ஒளியூடே கண்ணை இடுக்கி நோக்கிக் கொண்டிருந்தார். ஒரு உலோகப் பட்டை க்ளாங்கிய ஒலியோடு கீழே வீழ்ந்தது, கீழ்த் தளத்தில் மறைந்தது. கீழிருந்து ஒளி வெள்ளம் மேலே பீறி வந்தது, இரு மனிதர்களும் பின்னால் தாவி விழுந்தனர்.

அடைத்து மூடப்பட்ட அறையில், கடும் வேகத்தில் நடவடிக்கைகள் ஓங்கி ஒலித்தன, எங்கும் எதிரொலி கேட்டது, தொடர்ந்து நகரும் பெல்ட்களும், எந்திரக் கருவிகளின் விர்ரிடும் ஒலியும், விரைந்தோடும் மேலாள எந்திரங்களும் காணப்பட்டன. ஒரு கோடியில் வேகமாக ஓடும் கச்சாப் பொருட்கள் வரிசையாக ஓரிடத்தில் நுழைந்தன; இன்னொரு கோடியில் தயாரிப்பு முடிந்து பொருட்கள் வெளியே விசுக்கென்று எடுத்து, சோதிக்கப்பட்டு, இன்னொரு கடத்தும் பெல்ட்டில் போடப்பட்டன.

இதெல்லாம் ஒரு சில வினாடிகள்தான் தெரிந்தன: அதற்குள் ஏதோ உள்நுழைந்தது கண்டு பிடிக்கப்பட்டு விட்டது. தானியங்கி ரிலேக்கள் நடவடிக்கையில் இறங்கின. விளக்குகள் அதிர்ந்து மங்கின. இணைப்பு வரிசை அப்படியே அசையாமல் நின்றது, தன் அவசர வேலைகளை நிறுத்தி விட்டது.

எந்திரங்கள் தம்மை அணைத்துக் கொண்டு, மௌனமாக நின்றன. இன்னொரு மூலையில் ஒரு நகரும் எந்திரக் குழு தன்னைப் பிரித்துக் கொண்டு சுவற்றில் வேகமாக ஏறியது, நீலும் மோரிஸனும் வெட்டிய துவாரத்தை நோக்கி வந்தது. ஒரு தற்காலிக அடைப்பை அந்த இடத்தில் அடித்து ஒட்டியது, அதை மிக்க திறமையோடு சூடாக்கி ஒட்டியது. கீழே தெரிந்த காட்சி பார்வையிலிருந்து மறைந்து விட்டது. ஒரு கணம் கழித்து கீழே தரை மறுபடி நடுங்கியது, அங்கே செயல்கள் தொடர்ந்தன.

மோரிஸன், முகம் வெளுத்து, சிறிது நடுக்கலோடு, நீலைப் பார்க்கத் திரும்பினார். ‘அதுங்க என்ன செய்யறது அங்கே? எதைத் தயாரிக்கின்றன?’

ஆயுதங்கள் இல்லை,’ நீல் சொன்னார்.

அந்தப் பொருட்கள் மேலே அனுப்பப்படுகின்றன-’ மோரிஸன் நடுக்கலோடு சைகை செய்தார்– ‘தரைத்தளத்துக்கு.’

தானும் சிறிது ஆடிப் போயிருந்த ஓநீல், எழுந்து நின்றார். ‘நாம் அந்த இடம் எது என்று கண்டு பிடிக்க முடியுமா?’

முடியும்னு நான் நினைக்கிறேன்.’

நாம அதைக் கண்டு பிடிச்சே ஆகணும்.’ நீல் தன் விளக்கொளியை மேலே நோக்கிப் பாய்ச்சினார், மேலே ஏறும் வளைபாதையைக் காட்டினார். ‘நாம் மேல் நோக்கி வீசி அனுப்புகிற அந்த உருளைகள் எல்லாம் என்ன என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்.’

கடத்தும் பெல்ட்டின் வெளி வாசல் வால்வ், ஃபாக்டரியிலிருந்து கால் மைல் தள்ளி இருந்த இடிபாடுகளில் கொடிகளின் முறுக்கி இறுகிய புதர் நடுவே இருந்தது. மலைகளின் அடிவாரத்தில் ஒரு பாறையின் கீழ் ஒரு நீண்ட துளையில் அந்த வால்வ் ஒரு குவி முனை போல பொருத்தப்பட்டிருந்தது. பத்து கஜ தூரத்திலிருந்து பார்வைக்குப் புலப்படவில்லை; இரண்டு பேரும் கிட்டத்தட்ட அதன் மேலேயே நடந்து விட்ட போதுதான் அதைக் கவனித்தார்கள்.

ஒவ்வொரு சில கணங்களிலும், ஒரு உருளை அந்த குவி முனையிலிருந்து விசையோடு மேலே வீசப்பட்டு ஆகாயத்தில் உயரே போனது. அந்தக் குவிமுனை சுழன்றது, தன் கோணத்தை மாற்றிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு உருளையும் வேறு சரிவுப் பாதைகளில் வீசப்பட்டது.

எத்தனை தூரம் அதெல்லாம் போகும்?’ மோரிஸன் வியந்தார்.

அது நிறைய வேறுபடும். ஒரு பாணியில்லாமல் அது விநியோகிக்கிறது.’ நீல் எச்சரிக்கையோடு அதை நோக்கிச் சென்றார், ஆனால் அந்த எந்திர அமைப்பு அவரைக் கவனிக்கவில்லை. மேல் புறத்தில் நெடுக்கில் உயர்ந்த பாறைச் சுவரில் ஒட்டி இருந்தது ஒரு நசுங்கிய உலோக உருளை; தற்செயலாக குவிமுனை அதை மலைப் பக்கத்தின் மீது நேரடியாகச் செலுத்தி இருந்தது. நீல் மேலே ஏறினார், அதைப் பொறுக்கினார், கீழே குதித்தார்.

அந்த உருளை உடைந்து நசுக்கப்பட்ட எந்திரப் பாகம். மிகச் சிறு உலோகக் கூறுகள் உள்ளே இருந்தன, அவற்றை நுண்நோக்கியின் உதவி இன்றி அலச முடியாது.

ஆயுதம் இல்லை,’ என்றார் ஓநீல்

அந்த உருளை உடைந்திருந்தது. முதலில் அது பாறையில் மோதியதால் உடைந்திருந்ததா இல்லை உள்ளே இருந்த திட்டத்தால் இயங்கிய பாகங்கள் அப்படி வேலை செய்து பிளந்தனவா என்பதை அவரால் முதலில் சொல்ல முடியவில்லை. கிழிசலிலிருந்து சிறு உலோகத் துண்டுகள் நழுவிக் கொண்டிருந்தன. கீழே அமர்ந்து, நீல் அவற்றைப் பரிசோதித்தார்.

அந்தத் துண்டுகள் இயங்கின. மைக்ரொஸ்கோப் அளவே இருந்த எந்திர அமைப்பு, எறும்பை விடச் சிறியது, குண்டூசியை விடச் சிறியது, மிக்க சக்தியோடு இயங்கியது, முனைப்போடு இயங்கியதுஅது கட்டியது ஒரு சிறு இரும்பு நீள்சதுரச் சட்டம்.

அதுங்க மறுபடி நிர்மாணம் செய்யறதுங்க,’ நீல் சொன்னார், பெரும் வியப்போடு. எழுந்து சுற்றி வந்தார். ஒரு பக்கத்தில், அந்த ஓடைச் சரிவின் ஒரு கோடியில் ஒரு உருளையைப் பார்த்தார், அது இன்னும் முன்னேறிய நிலைக் கட்டுமானத்தில் இருந்தது. அது கொஞ்ச நாட்கள் முன்னரே வீசப்பட்டிருக்க வேண்டும்.

இது நிறைய முன்னேற்றம் கண்டிருந்தது, அதனால் என்ன நடந்திருந்தது என்பதைக் கண்டு பிடிக்க முடிந்தது. மிகச் சிறிதாக அது இருந்தாலும், அதன் கட்டுமானம் பழகிய உருவாகத் தெரிந்தது. அந்த எந்திரங்கள் நொறுக்கப்பட்ட ஃபாக்டரியின் ஒரு வாமனப் பதிலி உருவாக இருந்தது.

அப்போ,’ யோசனையோடு ஓநீல் சொன்னார், ‘நாம மறுபடி எங்கே துவங்கினோமோ அங்கேயே வந்து சேர்ந்திருக்கோம். இது நல்லதா, கெட்டதாஎனக்குத் தெரியல்லை.’

இதுங்க இப்ப பூமி பூராப் பரவி இருக்கும்னு நான் ஊகிக்கிறேன்,’ மோரிஸன் சொன்னார், ‘எல்லா இடங்களிலும் விழுந்து அங்கங்கே வேலையை ஆரம்பிச்சிருக்கும்.’

ஒரு யோசனை ஓநீலுக்கு எழுந்தது. ‘ஒரு வேளை சிலதுங்க தப்பிக்கிற வேகத்தைக் கூட எட்டி இருக்கலாம். அது செம்மைஆட்டோஃபாக் வலைகள் அண்ட பேரண்டமெங்கும்.’

அவருக்குப் பின்னால், அந்தக் குவி முனை தொடர்ந்து பெருக்கெடுத்தோடும் உலோக விதைகளைச் சொரிந்த வண்ணம் இருந்தது.

~oOo~

குறிப்பு:

ஃபிலிப் கி. டிக் ஓர் அமெரிக்க அறிவியல் புனைவாளர். இவருடைய பல நாவல்கள் வெற்றிகரமான ஹாலிவுட் திரைப்படங்களாகக் கடந்த சில பத்தாண்டுகளில் வெளியிடப்பட்டிருக்கின்றன. நாவலாசிரியராகத் தெரிய வந்திருந்தாலும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறார் டிக். இந்தக் கதை இவருடைய 40க்கு மேற்பட்ட புத்தகங்களில் சில தொகுப்புகளில் காணப்பட்டிருக்கும். இங்கு மொழிபெயர்க்கப்பட்ட கதையின் மூலம் 2017 இல் வெளியிடப்பட்ட எலெக்ட்ரிக் ட்ரீம்ஸ் என்கிற சிறுகதைத் தொகுப்பிலிருந்து பெறப்பட்டது. ஆட்டோஃபாக் கதை 1957 இல் எழுதப்பட்டது என்ற சிறு தகவல் நம்மைச் சிறிதாவது ஆச்சரியப்பட வைக்க வேண்டும். இந்தப் புத்தகத்தில் கதையை அறிமுகப்படுத்தி சிறு குறிப்பை எழுதும் ட்ராவிஸ் பீச்சம் என்ற திரை இயக்குநர், கதை பற்றிச் சொல்வது- “ஆட்டோஃபாக்கில் எது மிக்க திறனுள்ளதாக உள்ளதென்றால், இந்தக் கதையில் அந்தத் தொழிற்சாலை ஒரு எந்திரம் தறி கெட்டுப் போகவில்லை என்பதுதான். அது என்ன செய்யவேண்டுமென அதன் அபாரத் திறன் உள்ள ஆனால் பொறுப்பில்லாத தயாரிப்பாளர்கள் அதற்குச் செய்யக் கொடுத்தார்களோ அதைத்தான் செய்கிறது.” இந்தக் கதையில் எந்திரத்தின் பிழையோ, குறையோ இல்லை பிரச்சினையின் முகம். ஒரு பண்பாடாக, நாகரீகமாக மனிதர் என்ன விரும்பினார்களோ அதன் தர்க்க ரீதியான முடிவுதான் இப்படி ஒரு பேரழிப்பு. பீச்சம் சரியாகச் சொல்கிறார், ”இதில் நாம் எந்திரங்களோடு போரிடவில்லை, நாம் நம்மோடுதான் போரிடுகிறோம். நம் இயல்போடு போரிடுகிறோம். இது மனிதகுலத்தைப் பற்றியது- அதுதான் ஃபிலிப் கி.டிக்கின் அடையாளம்.”
ஃபிலிப் கி. டிக் முப்பதாண்டுகளுக்கு மேல் எழுதியவர். 1928-1982 வாழ்ந்த காலம். 36 நாவல்களையும் 121 சிறுகதைகளையும் எழுதியவர். முக்கியமாக மனிதரை எது மனிதராக வைத்திருக்கிறது, மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பது எப்படி ஒரு பேரச்சம் தருவது என்பன இவருடைய முக்கிய இலக்கியக் கருத்துகள். 25க்கும் மேற்பட்ட மொழிகளில் இவரது கதைகள் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.
புத்தகம் பற்றி: ’ஃபிலிப் கி. டிக்’ஸ் எலெக்ட்ரிக் ட்ரீம்ஸ்’ / ஃபிலிப் கி. டிக்/ 2017 / பிரசுரகர்த்தர்- ஹோடன் மிஃப்லின் ஹார்கோர்ட்/ பாஸ்டன் – நியூ யார்க்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.