பதனிடப்படாத தோல்

அவள் ஒரு வெள்ளை நாய், அகன்ற முகமும், ஆர்வம் காட்டும் கண்களும் கொண்டவள். இது பனிக்காலத்தில் இருக்கும் ஒரு கிரகம், ஜாக்ஸா.
அவள் சில நேரம் தரையில் மூக்கை வைத்தபடியும், சில நேரம் காற்றை முகர்ந்து கொண்டும், தன் எஜமானனிடமிருந்து நிறைய தூரம் முன்னதாக ஓடிக்கொண்டிருந்தாள். அவர்களை யாரோ கண்காணிக்கிறார்களா இல்லையா என்பதில் அவள் அக்கறை கொள்ளவில்லை. பனியால் மூடப்பட்டிருந்த மரங்களின் பின்னே ஏதோ விசித்திரமானவை பதுங்கி இருந்தன என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அவளுடைய வேலையே வினோதமானதைக் கண்டு பிடிப்பதுதான். அதற்கு அவளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது, மேலும் கறாரான, மின்னுகிற ஜாக்ஸாவுக்காகவே தனக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது எனவும், தான் பிறந்ததே அதற்காகத்தான் என்றும் அவள் உணர்ந்திருந்தாள்.
நான் இதை நேசிக்கிறேன், நான் இதை நேசிக்கிறேன்… இது அவளுடைய சுட்டும் காதுகளில், ஆடும் வாலில் இருந்தது… நான் இந்த இடத்தை நேசிக்கிறேன்.
அது பனி மூடிய ஓர் உலகு, கண்ணாடிக் கோப்பைகள் உடைவது போன்ற ஒலிகளால் நிரம்பிய உலகு. ஒவ்வொரு முறையும் காற்று வீசியபோதும், தட்டு நிறைந்த கண்ணாடிக் கோப்பைகள் விழுந்து நொறுங்கினது போல ஒலிகள் கேட்டன, ஒவ்வொரு முறை கிளைகள் ஒன்றோடொன்று உரசியபோதும், அது: ஸ்கோல் என்ற வாழ்த்தொலி சகிதம் ராணிக்காக, டிங்க் டிங்க் என்ற ஒலியோடு … தொண்டைக்குள் மதுவை ஊற்றிக் கொள்வது போலத் தோன்றும். லட்சக்கணக்கான க்ரிஸ்டல் சரவிளக்குகளின் கீழ் வைக்கப்பட்ட, பானங்கள் வைக்கப் பயன்படும், செதுக்கப்பட்ட கண்ணாடியால் செய்த லட்சக்கணக்கான வட்டில்களில் பிரதிபலிக்கப்பட்டது போல சூரியன் ஒளிரும்.
அவள் நான்கு சிறு கருப்பு பூட்ஸுகளை அணிந்திருந்தாள், ஒவ்வொரு அடியை அவள் எடுத்து வைக்கும்போதும் இரண்டு மூன்று கண்ணாடிக் கோப்பைகள் உடைந்தது போல ஒலி எழும். ஆனால் அந்த ஒலி, வெள்ளி நிறத்தில் உறைந்து சூழ இருந்த காட்டிலிருந்து எழும் உடைப்பு ஒலிகளிலும், விரிசல் விழும் ஒலிகளிலும் கேட்கப்படாமல் ஒடுங்கிப் போகும்.
அவள் கடைசியாக, சூழலில் கவிந்திருந்த வாடை என்னதென்று இனம் கண்டு கொண்டாள். அது துவக்கத்திலிருந்தே அங்கு இருந்தது. இரண்டு நாட்கள் முன்பு அவர்கள் கீழே இறங்கிய போதும், ஜாக்ஸாவின் கடுமையான காற்றில் கலந்து, அந்த இடத்தின் வாடையே அதுதான் என்று தோன்றும்படி இருந்த வாடைதான் அது. தரையிறங்கி அமர்ந்திருந்த கப்பலைச் சுற்றி குறுக்கிலும் நெடுக்கிலும் போயிருந்த பாதைச் சுவடுகளில் அதை உணர்ந்திருந்தாள், தட்டையான கிளைகளோடு பைன் மரத்து வாசனையோடு இருந்த புதர்களுக்குப் பின்னே இருந்த பள்ளங்களில் கண்டாள். அதை நுகரும்போது, தேன், பருமனான மனிதர், மேலும் உலர்ந்த மிருக ரோமத்தின் வாசனைகளைத்தான் அவளுக்கு நினைக்கத் தோன்றியது.
அங்கே ஏதோ பெரியதான ஒன்று இருந்தது, ஒன்றுக்கு மேற்பட்டவை அவை, குறைந்தது இரண்டுக்கு மேலிருந்தன அவை. எத்தனை என்று அவளுக்குத் தெளிவு கிட்டவில்லை. இதைத் தன் எஜமானனிடம் சொல்ல வேண்டும் என்றுதான் அவளுக்குத் தோன்றியது, ஆனால் முன்னதாக அவர்கள் இருவரும் ஒத்துக்கொண்ட அந்தச் சைகையை, எதைக் கண்டால் அவள் எழுப்ப வேண்டும்: நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்று தெரிவிக்கவா? அங்கே ஒரு கிசுகிசுப்பான குரல் போல ஒரு அடங்கிய ஒலி இருந்தது, சுருக்கமாக, வேகமாகச் செய்யப்பட வேண்டியது: கிட்டே கண்டது பற்றி, வந்து சுடு என்று சொல்ல. அப்புறம் அபாயத்தைத் தெரிவிக்க ஒரு ஒலி எழுப்ப வேண்டி இருந்தது (இதெல்லாம் அவளுடைய தொண்டையில் இருந்த ஒலி பெருக்கி வழியே அவளுடைய எஜமானனின் காதில் இருந்த ஒலி வாங்கும் கருவிக்கு அனுப்பப்பட வேண்டியவை), ஒரு தனிப்பட்ட, ஊளையிடுவது போன்ற குரைப்பு ஒலி. அதிசயமான, அற்புதமான ரோமம்- உடனே எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு, இதைப் பின் தொடர வா என்று அழைக்க ஒரு கீழ் ஸ்தாயி, உறுமல் போன்ற ஒரு ஒலி கூட இருந்தது. (அவளுக்கு நல்ல ரோமம் என்பது என்ன என்று பார்த்தவுடன் தெரியும். அதற்கு அவளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது.) ஆனால், நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்று தெரிவிக்க ஒரு ஒலிச் சைகையும் இருக்கவில்லை.
(கண்காணிக்கும் ஏதோ ஒன்றைப் பற்றி) அவளுக்குத் தெளிவானதும் அவள் ஊளையிட்டு, குரைத்தாள், ஆனால் அதற்கு அவள் தலையில் ஒரு மென்மையான தட்டலும், கழுத்து ரோமப்பகுதியில் விரல் துழாவலோடு தடவலும்தான் கிட்டின. “நீ நல்லபடியா வேலை செய்யற, செல்லம். இந்த உலகம் நம்மோட முத்துச் சிப்பி, எல்லாம் நம்முடையதுதான். நாம செய்ய வேண்டியதெல்லாம் முத்துக்களைப் பொறுக்கற வேலைதான். ஜாக்ஸாவுக்காகத்தான் நாம காத்துக் கொண்டிருந்தோம்.” ஆமாம், ஜாக்ஸாதான் அவளுக்கும் வேண்டியது, எனவே அவள் தன் வேலையைச் செய்தாள், அவருக்கு மேற்கொண்டு எதையும் சொல்ல முயலவில்லை, ஏனெனில் அந்த மொத்த உலகமே விசித்திரமானதுதான், அதில் இன்னும் ஒன்று விசித்திரமாக இருந்தால் என்ன ஆகிவிடப் போகிறது?
அவள் இப்போது ஏதோ ஒன்றின் தடயத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்தாள், அவளுடைய எஜமானர் பின்னால் எங்கோ இருந்தார். அவர் உடனே வந்தால் நல்லது. அவர் சீக்கிரம் வராவிடில், காத்திருக்க நேரும், அது எதானாலும், அதையே கவனித்துக் கொண்டிருக்க வேண்டி வரும், அசையாமல் அங்கேயே இருக்க வேண்டும், இறுக்கிக் கொண்டு காத்திருக்க வேண்டும், அது மிகவும் கஷ்டமானது. சீக்கிரம் வாங்க, சீக்கிரம்…
தன் காதில் இருந்த ஒலி வாங்கியில் அடங்கிய தொனியில் சீட்டி ஒலியாக ஒரு பாட்டை அவளால் கேட்க முடிந்தது, அவர் அவசரமாக வரவில்லை, மாறாக மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அவளுக்குப் புரிந்தது. அவள் ஆர்வத்தோடு, தெரிந்து கொள்ளும் உந்துதலோடு, இன்னும் சிறிது ஓடினாள். அவசரமாக வர வேண்டுமென்ற சங்கேத ஒலியை அவள் எழுப்பவில்லை, ஆனால் சீக்கிரப்படுத்துவதற்கு என ஒரு ஒலியைத் தானாகவே உருவாக்கி அதை எழுப்பினாள், அவர் சீட்டி அடிப்பதை நிறுத்தினதையும், ஒலி பெருக்கியில் ரகசியத் தொனியில் பதில் அனுப்பியதையும் கேட்டாள், ‘அட, அட, வீனஸ் ராணியே. நாம் பொறுக்கிக் கொள்ள ரோமத் தோல்கள் காத்திருக்கின்றன. அவசரமில்லை, செல்லமே.” ஆனால் காலை நேரம் என்பதே அவளுக்கு அவசரப்படும் நேரம். சோர்வடையவும், மெதுவாகச் செல்வதற்கும் நாளின் பிற்பகுதியில் நேரமிருக்கும்.
அந்த பருமனான மனிதனின் தேன் போன்ற வாடை சுற்றிலும், அருகிலும், வலுவாகவும் இருந்தது. அவளுடைய அறியும் ஆர்வம் இரு முனை கொண்டதாயிற்று- இந்த வாடையா, மற்ற அதுவா? கண்காணிக்கும் அந்தப் பெரிய ஏதோ ஒன்று அது என்னது? ஆனால், தான் இருந்த தடத்திலேயே அவள் தொடர்ந்தாள். எதானாலும் நிச்சயமாகத் தெரிந்து கொள்வது மேல், இதுவோ அப்படி ஒன்றும் பிடிபடாததாக இல்லை, மறைந்து ஒளிந்தோ, முன்னே சென்று விட்டுப் பதுங்கிப் பின்னே வருவதாகவோ இல்லை, ஆனால் முன்னே, தன் போக்கில் போய்க் கொண்டிருந்தது.
அவள் ஒரு மேட்டின் முகட்டை எட்டினாள், தன் அடர்த்தியான முடி படர்ந்திருந்த பிருஷ்டத்தின் மீது பாதி சறுக்கலாக, அடுத்த பக்கமிருந்த சரிவில், இருபுறமும் பனித்துகளைச் சிதறடித்தபடி இறங்கினாள். மறுபடி, மூக்கைத் தரையருகே வைத்தபடி, அடர்ந்து, செடுக்காக இருந்த வேலிப் புதர் ஒன்றைத் தாண்டி சிறு ஓட்டமாக ஓடினாள்.
இப்போது அவள் தன் மூக்கை நம்பிச் சிந்தனை செய்து கொண்டிருந்தாள். உலகமே வாடைகளால் நிரம்பியதாக இருந்தது, கூர்மையான காற்று, புளிப்பான பனிக்கட்டி, டர்பண்டைன் வாடை கொண்ட பைன் … இப்போது இந்த மிருகம், ஒரு சிறுநீரும், பழுப்பான புற்கள் வேறு… அப்புறம்… வலுவாக, அவள் எதிரே, தேனும் பருமனுமான வாடையோடு ஒரு மனிதன்.
அவள் தலையை உயர்த்திப் பார்க்கும் முன், அது திடீரென்று உயரமாக நிற்பதாக உணர்ந்தாள், அது அங்கே இருந்தது, அந்த வாடை ஒரு நேரிடை இருப்பாக, அவளுடைய எஜமானரை விட உயரமானதாக, இரண்டு மடங்கு அகலமானதாக இருந்தது. அவருடைய இரட்டை மேலங்கிகளையும் சேர்த்துக் கொண்டு பார்த்தால் கூட, இரண்டு மடங்கு அகலமாக இருந்தது.
இதுதான் அந்த ரோமம்! அதிசயமாக, வியப்பானதாக இருந்தது. ஆனால் அவள் அப்படியே நின்றாள், வாய் திறந்து, உதடுகளை பின்னே நோக்கி இழுத்தபடி, உயரே பார்த்திருந்தாள். அவளுடைய கழுத்துக்கு மேல்புற முடிகள் உயர்ந்திருந்தன, ஆனால் அது பயத்தால் அல்ல, திடீரென்று நேர்ந்த நிகழ்வால் ஆனது.
அது வெள்ளி நிறமும் கருப்பும் கலந்து, புலியின் வரிக்கோடுகள் போலக் கொண்டிருந்தது. வெள்ளைப் பாகங்கள் ஜாக்ஸாவின் பனிக்கட்டியைப் போல ஒளியை வாங்கிப் பிரதிபலித்து ஒளிர்ந்தன. அதைப் போலவே மின்னி, கண்களைக் கூசச் செய்தன. அதன் முகத்தின் நடுவில், அச்சமூட்டும் விதமாக இருந்தது ஒரு பெரிய ஆரஞ்சு நிறக் கண். அதைச் சுற்றி கருப்பாக இருந்தது. அங்கிருந்து விரிந்து நெற்றி மற்றும் தலை பூராவும் பரவிய கருப்பு வரிகள். அந்த ஆரஞ்சுப் புள்ளி அந்த மொத்த உருவையும் ஆக்கிரமித்தாற்போலத் தெரிந்தது, ஆனால் அது ஒரு தட்டையான, பார்வை இல்லாத கண் போன்ற உரு. உரோமத்தினுள்ளிருந்து உயர்ந்து வளர்ந்திருந்தது. அதை அவள் முதலில் பார்த்தபோது வண்ணப் பொட்டாகத்தான் பார்த்தாள், ஆனால் உடனே அதன் கீழிருந்த இரு சிவப்பாக ஒளிர்ந்த இரு சிறு கண்களைப் பார்த்து விட்டாள். அவை அன்பாகத் தெரிந்தன, பயமுறுத்தலாக இல்லை.
வாங்க, வந்து, பூமியிலேயெ மிகப் பணக்காரியான அந்தப் பெண் அணிந்து கொண்டு ஜ்வலிக்க விரும்புகிற, விலை கொடுத்து வாங்க விரும்புகிற, மிக அதிகமான விலை கொண்ட இந்தப் பெரிய ரோமத்தைப் பிடிங்க என்று அழைக்க வேண்டிய நேரம் இது. ஆனால், தட்டையான அந்தக் கருப்பு மூக்கிலும், வில் போல வளைந்த மென்மையான உதடுகளிலும், அன்பான கண்களிலும் இருந்த எதுவோ, அப்படி அழைப்பை அனுப்பாமல் அவளைத் தடுத்தன. ஏதோ எஜமானரைப் போல இருந்த ஒன்று. அவள் அதிசய உணர்வும், முடிவு செய்ய முடியாத உணர்வும் நிரம்பியவளாக இருந்தாள், ஒரு ஒலியையுமே எழுப்பவில்லை.
அது அப்போது அவளிடம் பேசியது, அதன் குரல் தாலாட்டை ஒத்திருக்கும் செல்லோ வாத்தியங்களின் ஆழ்ந்த மரமரப்பான நாதத்தைப் போலக் கேட்டது. அது தன் அடர்ந்த முடியடர்ந்த கையால் சைகை செய்தது. அது ஏதோ உறுதி அளித்தது, கொடுத்தது, பின் கேட்டது; அவள் அப்போது செவி கொடுத்துக் கேட்டாள், புரிந்தவளாகவும், புரியாதவளாகவும் இருந்தபடி.
சொற்கள் மெள்ளமாக வந்தன. இது…. …உலகம்.
இங்கே வானம், பூமி, பனிக்கட்டி. அந்த கனத்த கரங்கள் அசைந்தன. கைவிரல்கள் சுட்டின.
குட்டி அடிமையே, நாங்கள் உன்னைக் கண்காணித்து வந்திருக்கிறோம். சுதந்திரமாக நீ என்ன செய்திருக்கிறாய் இன்று? உரிமை எடுத்துக் கொள். உன்னுடைய காலணி உள்ள நான்கு கால்களுக்கான தரை, நட்சத்திரங்களுள்ள வானம், குடிப்பதற்குப் பனிக்கட்டி. இன்று ஏதாவது சுதந்திரமாகச் செய். செய்வாய், செய்வாய்.
நல்ல குரல், அவள் நினைத்தாள், நல்லதாகவும் உள்ள அது. அது எதையோ கொடுக்கிறது… கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
அவளுடைய காதுகள் முன் நோக்கி நீண்டிருந்தன, பிறகு பக்கவாட்டில் நகர்ந்தன, முதலில் ஒரு காது அசைந்தது, பிறகு இன்னொன்று, பிறகு மறுபடி முன்புறமாக நீண்டன. அவள் தன் தலையை ஒரு புறமாக சாய்த்தாள், ஆனால் உண்மையான அர்த்தம் தெளிவாகக் கிட்டவில்லை. காற்றுக்குள் தன் மூக்கை நீட்டித் துழாவினாள். மறுபடியும் சொல்லேன், அவளுடைய மொத்த உடலும் கேட்டது. எனக்கு எல்லாம் புரிகிற மாதிரி இருக்கிறது. என்னால் உணர முடிகிறது. இன்னொரு தடவை சொல்லு, ஒருவேளை அப்போது அதன் முழுப் பொருள் திரண்டு வந்து கிடைக்குமோ என்னவோ.
ஆனால் அது திரும்பியது, வேகமாக நகர்ந்து போனது, அத்தனை பெரிய ஜீவனுக்கு அது நல்ல வேகம்தான், மரங்களின், புதர்களின் பின்னே மறைந்து விட்டது. அது அங்கே ஒளிச்சிதறலாக மினுக்கியபடி மறைந்த பின், மினுங்கலாக அங்கே இருந்த பனியின் ஒளிச் சிதறலும், தடியான தட்டையான கிளைகளின் கருப்பும்தான் எஞ்சின.
எஜமானர் கிட்டே வந்திருக்கிறார். அவருடைய நடையின் நொறுங்கல் ஒலிகள் தன் பின்னே வருவதை அவளால் கேட்க முடிந்தது.
அவள் மெலிதாக ஊளையிட்டாள், அது அவருக்காக என்பதை விடத் தனக்காக என்றிருந்தது.
“ஓ! ராணி, அலூரா. அதைத் தொலைச்சுட்டியா?” அவள் தரையை மறுபடியும் முகர்ந்தாள். தேன் -ரோம வாடை இன்னும் வலுவாகவே இருந்தது. அவள் சற்றுத் தூர இருப்பதை முகர்ந்தாள், வாடை அங்குமிங்கும் அலைந்தது. ஆனால் சுவடு இருந்தது. “அதுக்குப் போ, செல்லம்!” அவள் காற்றிலாடும் சீன மணிகளின் ஒலி போன்ற ஒன்றை நோக்கி, கருமமே கண்ணாக ஓடினாள். ஆனால் அவளுடைய வால் குற்ற உணர்வோடு தொங்கியது, அவள் தன் தலையைத் தொங்க விட்டிருந்தாள். அவள் மறுபடி ஒரு முக்கியமான சைகையை அனுப்பத் தவறி விட்டாள். அவள் காத்திருந்ததால், காலம் தாழ்த்தி விட்டது. ஆனால் அவள் பார்த்தது ஒரு மனிதனா, ஒரு எஜமானனா? இல்லை ரோமம்தானா? அவள் சரியான செயலைச் செய்யவே விரும்பினாள். அவள் எப்போதுமே அதைத்தான் செய்ய முயன்றாள், ஆனால் இப்போது அவள் குழம்பி இருந்தாள்.
அவள் எதைத் தேடினாளோ அதை நெருங்கிக் கொண்டிருந்தாள், ஆனால் சூழக் கவிந்திருந்த அந்த வாடை அங்கு இன்னும் இருந்தது, ஆனால் அருகில் இல்லை. அவள் பரிசுகளை நினைத்தாள். அந்த மெதுவான, தாலாட்டு போன்ற வார்த்தைகளிலிருந்து அவளுக்கு அந்த மட்டும் புரிந்திருந்தது, பரிசுகள் என்றதை நினைக்கையில் அவளுக்கு எலும்புகளும், மாமிசமும் எண்ணத்தில் வந்தன, அந்த உலர்ந்த மீன் போன்ற பிஸ்கட்டுகள் இல்லை, அவைதான் பயணங்கள் போகும்போது எப்போதும் அவளுக்குக் கிட்டின. அவளுடைய வாயின் ஓரத்திலிருந்து ஒரு இழை எச்சில் ஓடி வழிந்தது, அவளுடைய தோளின் குறுக்கே ஒரு வெள்ளிக் கம்பியாக உறைந்து படர்ந்தது.
அவள் மெதுவானாள். அவள் தேடியது அங்கேதான் இருக்க வேண்டும், அடுத்த வரிசை மரங்களுக்குப் பின்னே. அவள் தன் தொண்டையில் ஒரு ஒலியை எழுப்பினாள்… தயாராகு, அசையாமல் நேராக இரு… அவள் தனக்கு நிச்சயமாகும் வரை மெள்ள முன்னே போனாள். அவள் அந்த உருவின் வடிவை உணர்ந்தாள். அவள் அதை நிஜமாகப் பார்க்கவில்லை… அனேகமாக அந்த வாடையும், கண்ணாடிக் கோப்பை நொறுங்கும் ஒலிகளிலும்தான் இன்னும் ஏதோ அங்கிருப்பதாக உணர்ந்தாள். அவள் சங்கேத ஒலியை அனுப்பினாள், பின் அசையாதிருந்தாள், ரோமமடர்ந்த இரையைச் சுட்டும் நாயொன்றின் நேரடியான பிரதி போல இருந்தாள். சீக்கிரம் வாங்க…இப்படிக் காத்திருப்பதுதான் மிகக் கஷ்டமான வேலை.
அவர் பின் தொடர்ந்து வந்தார், அவளுடைய ஒலி வாங்கிக்கு அனுப்பினார். “அசையாமலிரு, செல்லம். அந்த நிலையிலேயே இரு. நல்ல பெண், நல்ல பெண்.” தன் வாலை அவள் ஆட்டியபோது அதில் ஒரு சிறு அசைவுதான் இருந்தது, அவருக்குத் தன் மனதில் ஒரு பதிலை அனுப்பினாள்.
அவர் பின்னாலிருந்து அவளருகே வந்தார், பின் தாண்டிப் போனார், குந்தி அமர்ந்தார், தன் ரைஃபிளை முன்னே நீட்டியபடி, முழங்கைகள் மடங்கிய நிலையில். அவர் பின் மண்டியிட்டார், பிறகு தானுமே ஒரு புள்ளியை நோக்குவது போலக் காத்திருந்தார், ரைஃபிளைத் தன் தோளில் வைத்து நீட்டியபடி. மெதுவாக அங்கே நகர்கிற மிருகத்தின் நிழலோடு திரும்பியபடி, சுட்டார், இரண்டு தடவைகள், ஒன்றன் பின்று ஒன்றாக.
அவர்கள் எழுந்து சேர்ந்து முன்னே ஓடினார்கள், அது அவள் எதிர்பார்த்தபடிதான் இருந்தது- மான் போன்ற ஒன்று, நளினமான குளம்புகள், கர்வமான தலை, மூன்று நிறங்களில் புள்ளிகள் கொண்டிருந்தது, பழுப்பு மஞ்சளில் பெரிய சாம்பல்- பச்சை நிற வட்டங்கள், அங்கங்கே வெள்ளி நிற ரோமங்கள் சிதறிப் பரவி இருந்தன.
எஜமானர் கூர்மையான, தட்டைத் தகடுள்ள ஒரு கத்தியை எடுத்தார். அந்த அழகான தலையை வெட்டும்போது அவர் சீட்டி அடித்தபடி இருந்தார். அவருடைய முகம் ரத்தம் பாய்ந்து சிவந்திருந்தது.
அவள் அருகே உட்கார்ந்தாள், வாய் திறந்திருந்தது ஒரு சிரிப்பு போலிருந்தது, அவர் வேலை செய்யும்போது அவருடைய முகத்தைப் பார்த்தபடி இருந்தாள். உஷ்ணமான அந்த வாடை அவளுடைய வாயோரங்களிலிருந்து எச்சிலை ஒழுகி ஓடச் செய்தது, கீழே அவளுடைய பாதங்களின் மேல் சொட்டி உறைந்து பனிக்கட்டியாகியது. ஆனால் அவள் மௌனமாக அமர்ந்திருந்தாள், வெறுமனே பார்த்தபடி.
சீட்டியடிப்புக்கு இடையே அவர் சிறிது முக்கினார், வசவு வார்த்தைகளைப் பொழிந்தார், தனக்குத் தானே பேசிக் கொண்டார், இறுதியாக அவர் அந்தத் தலையை உள்ளே வைத்து, உள்புறத் தோல் வெளியே தெரியும்படி சிறு மூட்டையாக இறுக்கிக் கட்டி விட்டார்.
பிறகு அவர் அவளிடம் வந்தார், அவளுடைய விலா எலும்புகளின் மேல் அவளுடைய பக்கங்களில் அடி போன்று ஒலித்த ஷொட்டு ஒன்றை வைத்தார், அவளுடைய காதுகளுக்குப் பின்னே சொறிந்து கொடுத்தார், பிறகு ஒரு பிஸ்கட்டைத் தன் தடிமனான உறையணிந்த உள்ளங்கையில் வைத்து நீட்டினார். அவள் அதை அப்படியே முழுதாக விழுங்கினாள். அவர் தன் குதிகால்களில் குந்தியபடி தானும் பிஸ்கட் போன்ற ஒன்றை உண்டார், அதைப் பார்த்திருந்தாள்.
அவர் எழுந்து, அந்தத் தோலும் தலையுமான மூட்டையைத் தன் முதுகின் மீது வீசிப் போட்டார். “இதை நான் எடுத்துக்கறேன், செல்லம். வா, சாப்பாட்டுக்கு முன்னால வேற ஒண்ணைப் பிடிக்கலாம்.” அவளை வலது பக்கமாகப் போகச் சொல்லி கை காட்டினார். “நாம ஒரு பெரிய வட்டமாக வரலாம்.”
தான் ஏதும் சுமக்காமல் இருப்பது பற்றி மகிழ்ச்சியோடு, அவள் சிறு ஓட்டமாகக் கிளம்பினாள். நிறம் மாறி இருந்த ஒரு பனிக்கட்டித் திட்டில் காட்டமான வாடையைக் கண்டவள், அதன் மீது சிறு நீர் கழித்தாள். மேலே இருந்த மரங்களில் வந்து இறங்கி, அவள் தலை மீது பனிக்கட்டிகளை உதிர்த்த ஒரு பறவையிடம் இருந்து ரோமம் அடர்ந்த பாலூட்டி மிருகத்தின் வாடை வந்ததை முகர்வால் கண்டவள், அதை நோக்கி உறுமினாள். அவள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய போது, ஒரு கிளை அவளுடைய உடலில் பக்க வாட்டில் கீறியதைக் கண்டு, அதை நோக்கித் திரும்பி, உதடுகளைப் பின்னொதுக்கிப் பொய்யான கோபத்தோடு அதைக் கடித்தாள்.
சிலர் பேசிக் கொண்டிருப்பது போன்ற ஒலியோடு பனிப் பாளத்துக்கு அடியில் ஓடிய நீரோட்டத்தைச் சிறிது நேரம் தொடர்ந்து ஓடியவள், ஓர் இடத்தில் ஆடு போன்ற எண்ணெய் வாடை குறுக்கே வந்த போது அகன்று போய், அதைப் பின்பற்றினாள். உடனேயே அவள் அவற்றைக் கண்டாள்- ரோமமடர்ந்து, நெகிழ்வான கால்களோடு ஆறு பச்சை நிறத்துச் சிறு கம்பளி ரோமப் பந்துகள் அங்கிருந்தன. தேன் வாடையோடு பருமனான மனிதனின் வாடையும் அங்கிருந்தது. ஆனால் அவள் ஆடுகளுக்கான சைகையை அனுப்பினாள், வந்து சுடுங்க என்ற ஒலி அது. எஜமானனுக்காக அங்கே காத்து நின்றாள். “நல்ல பொண்ணு!” அவருடைய குரலில் தனி மெச்சுதல் கேட்டது. “ஆ, கடவுளே! இந்த இடம் ஒரு தங்கச் சுரங்கம். வீனஸோட ராணி, அப்படியே நில்லு. அது எதானாலும், போக விட்டுடாதே.”
அந்தச் சிறு பிராணிகளுடைய பார்வையில் அவள் நின்றாள், அங்கே ஐம்பது கஜ தூரத்துக்கு தடங்கலில்லாத பார்வை கிட்டியது, ஆனால் அவை அவளைக் கவனிக்கவில்லை. எஜமானர் மெள்ள எச்சரிக்கையோடு வந்தார், அவளருகே மண்டியிட்டு அமர்ந்தார். அவர் அங்கே உட்கார்ந்த போது, அந்த வெளியின் மறு கோடியில், மின்னும் வெள்ளியும், கருப்புப் புலிக் கோடுகளும் கொண்ட மனிதர் தோன்றினார்.
தன் எஜமானர் திடீரென்று பலமாக மூச்சை உள்ளிழுத்ததை அவள் கேட்டாள், அவரிடம் ஒரு இறுக்கம் வந்ததைக் கவனித்தாள். ஒரு புதிய, புளிப்பான வியர்வை வாடை, இறுகிய மௌனம், ஒரு தனி விதமான மூச்சு விடுதல் இவை இருந்தன. அவரிடம் அவள் கண்டது அவளுடைய முதுகில் முடிகளை உயரச் செய்தது, பயம் கலந்த ஒரு துடிப்பு எழுந்தது.
அந்த புலிப் பிராணி ஒரு சிறு பொட்டலத்தைத் தன் கையில் வைத்திருந்தது. அதற்குள் நோக்கியபடி, தன் மொண்ணையான விரலால் உள்ளே துழாவியது. திடீரென அவளருகே வேகமான ஒரு நகர்வு இருந்தது, ஐந்து அவசரமான, வேகமான சுடும் ஒலிகள் அவள் காதில் கடுமையாக ஒலித்தன. இரண்டு சுடுதல்கள் அந்தத் தேன் வாடையோடு பருமனாக இருந்த மனிதன் ஏற்கனவே கீழே விழுந்து, அலங்கரிக்கப்பட்ட ஒரு மூட்டையைப் போலக் கிடந்த பின்னர் வந்தன.
எஜமானர் முன்னால் ஓடினார், அவள் அவருடைய பாதங்களுக்குப் பின்னே ஓடினாள். அவர்கள் நின்றார்கள், அத்தனை அருகில் செல்லவில்லை, அவள் அந்த பெரிய, செத்துக் கிடந்த, பயம் தரும் கண் போன்ற வடிவோடு கூடிய புலித்தலை உருவத்தை எஜமானர் நோக்குவதைப் பார்த்தாள். எஜமானர் வேகமாக மூச்சு விட்டார், சூடாகி இருப்பதாகத் தெரிந்தார். அவருடைய முகம் சிவப்பாக, வீங்கித் தெரிந்தது, அவருடைய உதடுகள் கடினமான வெள்ளைக் கோடு போலிருந்தன. அவர் சீட்டி அடிக்கவில்லை, பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அவர் தன் கத்தியை எடுத்தார். அதன் கூர்மையைத் தன் கைவிரலில் சோதித்தார், அது ஒரு மெல்லிய நூலான ரத்தக் கோட்டை அவருடைய இடது கட்டைவிரலில் கொணர்ந்திருந்தது. அவர் இப்போது அருகே போனார், அவள் நின்று அவரைப் பார்த்தபடி, கேள்வி கேட்கும் ஒரு மெல்லிய ஊளையை எழுப்பினாள்.
அவர் தேன் வாடையடித்த பருமனான உருவிடம் குனிந்தார். பாதி திறக்கப்பட்ட அந்தச் சிறு பொட்டலத்தை, வெறுப்போடு மத்தியில் வெட்டினார். சிறு உருண்டையான துண்டுகள் விழுந்தன, அவை ஒரு வாய் அளவு இருந்த உலர்ந்த மாமிசத் துண்டுகள், பாலாடைக் கட்டி போன்ற ஏதோ பொருள், பிறகு உடைந்த சிறு துண்டுகளான தெளிந்த நீல நிற பனிக்கட்டிகள்.
எஜமானர் அவற்றை உதைத்தார். அவருடைய முகம் இப்போது சிவந்து இருக்கவில்லை, ஆனால் ஆலிவ் நிறத்தில் வெளிறி இருந்தது. அவருடைய மெல்லிய வாய் ஒரு சிரிப்பு போலத் திறந்து இருந்தது, ஆனால் அது சிரிப்பு இல்லை. அவர் பிறகு தோலை உரிப்பதில் இறங்கினார்.
அந்தத் தட்டையான முகம் கொண்ட பெரிய தலையை எடுத்துக் கொள்ளவில்லை, மொண்ணையான விரல்களையும் எடுத்துக் கொள்ளவில்லை.
 
தட்டையான கிளைகளில் இருப்பதில் மிக அகலமான இரண்டை எடுத்துக் கொண்டு அவற்றை வைத்து சறுக்கலாகப் போக உதவும் ஒரு பொருளை அந்த மனிதர் உருவாக்கினார். அதைக் கொண்டு கனமான புது ரோமத் தோலையும், அந்த மானின் தலையையும், தோலையும் எடுத்துப் போகவிருந்தார். பிறகு நேராக கப்பலை நோக்கிக் கிளம்பினார்.
சாப்பிடும் நேரம் தாண்டி விட்டிருந்தது. ஆனால் அவருடைய அமைதியற்ற விழிகளைப் பார்த்தவள், அதைப் பற்றி ஏதும் கேட்கவில்லை. அவள் அவருக்கு அருகில் இருந்தபடி, முன்னால் நடந்தாள். அவ்வப்போது திரும்பிப் பார்த்தாள், தன் தோளுக்குக் குறுக்கே போட்டிருந்த ஒரு கயிற்றால் அவர் அந்த ஸ்லெட் போன்ற வஸ்துவை இழுத்ததைக் கவனித்தாள், அந்த ரைஃபிளை அவர் தன் இரு கைகளிலும் பிடித்திருந்த விதத்திலிருந்து தான் விழிப்போடு இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டிருந்தாள்.
சில நேரங்களில், ஈரமான உள்புறம் வெளியாக இருந்த அந்த மூட்டை வழியில் எதிலாவது மாட்டி இழுத்தது, எஜமானர் வசவு வார்த்தைகளை ரகசியக் குரலில் பொழிந்தபடி, அதை இழுத்துச் சரி செய்வார். அந்த மூட்டை அவரைச் சோர்வடையச் செய்தது என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அவர் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளவும், உணவுக்காகவும் நிற்கலாமே என்று அவள் விரும்பினாள், அப்படித்தான் அவர்கள் இந்த நாளுக்கு வெகுநாட்கள் முன்பு செய்திருந்தார்கள்.
அவர்கள் மெதுவாகச் சென்றார்கள், பருமனான மனிதரின் தேன் வாடை துவக்கத்திலிருந்தது போலவே எங்கும் சூழலில் கவிந்திருந்தது. பல மிருகங்களில் சுவடுகளை அவர்கள் தாண்டிப் போனார்கள். இன்னொரு மான் ஓடிப் போவதைக் கூடக் கண்டார்கள், ஆனால் இது துரத்திப் போவதற்கான நேரமில்லை என்று அவளுக்குத் தெரிந்திருந்தது.
அப்போது இன்னொரு வெள்ளியும் கருப்புமான பெரிய புலி உருவம் அவர்கள் முன்னே சரிகச்சிதமாக நின்றது. அது திடீரென்று தோன்றியது, ஏதோ அங்கேயே எப்போதும் நின்றிருந்தது போலவும், அவர்கள்தான் பளபளக்கும் பின்புலத்திலிருந்து அதைப் பிரித்து அறியுமளவு அருகே வந்திருக்கவில்லை என்பது போலவும் இருந்தது அதன் வருகை.
அது அங்கேயே நின்றது, அவர்களுக்கு சவால் விடுவது போல இருந்தது. எஜமானர் தன் துப்பாக்கியை இரு கரங்களிலும் பிடித்தபடி அதைப் பார்த்திருந்தார், அவள் அவர்களுக்கு இடையில் நின்று ஒரு முகத்திலிருந்து இன்னொரு முகத்தைப் பார்த்தபடி இருந்தாள். அவளுக்கு, ஒரு கணத்துக்குப் பிறகு தெரிந்து விட்டது, எஜமானர் இம்முறை சுட மாட்டார் என்று. அந்த புலி உருவுக்கும் அது தெரிந்திருந்தது போல இருந்தது, ஏனெனில் அது திரும்பி அவளைப் பார்த்தது, தன் கைகளை உயர்த்தியது, விரல்களை விரித்த போது இரு புறமும் உள்ள காட்டைப் பிடிப்பது போல இருந்தது. சிறிது ஆடியது, அதன் பெரும் உரு அதனுடைய சம நிலையைப் பாதித்தாற்போல, பிறகு அது தன் வழக்கமான, இறுக இழுத்துக் கட்டப்பட்ட செல்லோ வாத்தியத்தின் தொனிகளில் பேசியது. அந்த வார்த்தைகளும், தொனியும் முன்போலவேதான் இருப்பதாகத் தோன்றின.
குட்டி அடிமையே, சுதந்திரமான செயல் என்று சொல்லத்தக்க எதை இன்று நீ செய்தாய்? நினைவு கொள், இது உலகம். இன்று ஏதாவது சுதந்திரமாகச் செய். செய், செய்.
அவளுக்கு அது என்ன சொன்னது என்பது அதற்கு முக்கியமானது என்பது தெரிந்திருந்தது, அவள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும், ஏதோ ஒரு கொடுக்கலும் ஒரு வாங்கலும் போன்றது அது. அது அவளைப் பார்த்தபடி இருந்தது, அவள் சரியானதைச் செய்ய வேண்டும் என்று விரும்பியவளாய், ஆனால் என்னது அந்தச் செயல் என்று தெரியாதவளாய், தன் அகன்ற, கபடற்ற கண்களால் பதிலுக்கு நோக்கினாள்.
அந்தப் புலி போன்ற பருமனான உரு இப்போது திரும்பியது, இந்த முறை மெதுவாக, எஜமானருக்கும், அவளுக்கும் அகன்ற தன் முதுகைக் காட்டியபடி, பிறகு தன் கனமான, உயர்ந்திருந்த தோள் வழியே துரிதமாக ஒரு தடவை திரும்பிப் பார்த்தது. பிறகு அது மெதுவாக நகர்ந்து மரங்கள், பனிப் பாளங்களினூடே சென்றது. எஜமானர் தன் துப்பாக்கியை இரு கரங்களில் பிடித்தபடி நின்றார், அசையவில்லை.
மாலைக் காற்று வீசத் துவங்கியது, அங்கு அவர்களைச் சுற்றி லட்சக்கணக்கான சர விளக்குகள் கிணுங்கியது போலவும், சீனக் காற்றிசைச் சரங்கள் இசைப்பது போலவும் ஒலி ஓங்கிப் பெருகியது. ஒரு முடிகளடர்ந்த பறவை, சிறு மூஞ்சூறு போலவிருந்தது, அவர்கள் இடையே சிறு கூக்குரலோடு பறந்தோடியது.
அவள் எஜமானரின் முகத்தைப் பார்த்தபடி இருந்தாள், அவன் தயாராகி விட்டது போலத் தெரிந்த பின் அவர் அருகே போனாள். அந்த தேன் வாசனை கொண்ட பருமனான மனிதன் எழுப்பிய மென்மையான ஓசைகள் அவள் மனதில் இன்னும் ஒலித்தபடி இருந்தன, ஆனால் அவற்றுக்கு அர்த்தமேதும் இப்போது இல்லை.
அன்று இரவு எஜமானர் பெரிய தோலை ஒரு சட்டத்தில் விரித்துப் பிணைத்தார். பிறகு அதன் மினுமினுப்பை பார்த்தபடி இருந்தார். அவளிடம் அவர் பேசவில்லை. அவள் அவரைச் சிறிது நேரம் பார்த்திருந்தாள், பிறகு தனது விரிப்பில் மூன்று முறை சுழன்று திரும்பி விட்டு, உறங்குவதற்குப் படுத்துக் கொண்டு விட்டாள்.
அடுத்த நாள் காலை எஜமானர் மெதுவாக இயங்கினார், வெளியே போகத் தயங்கியவராக இருந்தார். அவர் வேறு இடங்களின் வரைபடங்களை, மஞ்சள் புள்ளிகளும், பெயர்களும் கொண்ட வட்டமான அல்லது மணலால் மணிகாட்டும் குடுவை போல உருவமுள்ள வரைபடங்களைச் சோதித்துக் கொண்டிருந்தார். நின்றபடி அவற்றைப் பார்த்துக் கொண்டு தன் காஃபியைக் குடித்தார். இறுதியில் அவர்கள் வெளியேறி, மணிஒலி போல ரீங்கரித்த காற்றினூடே போனார்கள்.
இது அவளுடைய உலகமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் செல்லச் செல்ல மேன்மேலும் அப்படித்தான் ஆகி வருவதாக அவள் உணர்ந்தாள்.
சரியான தட்ப நிலை, அருமையான வாசனைகள். அவள் வழக்கத்தை விட நிறைய முன்னால் பாய்ந்து ஓடினாள், ஆனால் இன்று அதிக தூரம் போகவில்லை, சில நேரம் அவள் நின்று, காத்திருந்து, தன் எஜமானர் நெருங்கி வருகையில் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில சமயம், மேலே போகுமுன் அவள் ஒரு கேள்வியாக சிறு ஊளையை எழுப்புவாள்….நீங்க ஏன் வேக வேகமாக சுறுசுறுப்பாக நடக்க மாட்டேங்கிறீங்க, என்னை ஏன் வீனஸோட, அலூராவோட ராணி என்றோ, பீட்டில்ஜூஸோட பெட்டை நாய் என்றோ அழைக்கவில்லை, என்னை மாதிரி நீங்க ஏன் மூக்கால் முகர்வதில்லை? முகர்ந்து பாருங்க, நீங்களும் இந்த இடத்தைப் பத்தி மகிழ்ச்சியாய் இருப்பீங்க… பிறகு அவள் மேலே தொடர்ந்து ஓடுவாள்.
பாதைச் சுவடுகள் கண்டு பிடிக்கச் சுலபமாக இருந்தன, மறுபடி அவள் எண்ணெய் போல வாடையுள்ள ஆடுகளின் வாசனையைக் கண்டாள், அவற்றைச் சீக்கிரமே இன்னொரு தடவை கண்டு பிடித்தாள். எஜமானர் அவளருகே எட்டி நடை போட்டு வந்தார், துப்பாக்கியை உயர்த்தினார்… ஆனால் ஒரு கணம் கழித்து அவர் திரும்பினார், கவனமின்றி, தானே ஒரு பலத்த ஓசையை எழுப்பினார். ஆடுகள் சிதறி ஓடின. அவர் முகத்தைச் சுளித்து விட்டு, பனி மீது துப்பினார். “வா ராணி. இங்கே இருந்து நாம் போகலாம். இந்த இடத்தை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை இப்போது.”
அவர் திரும்பி, தன் தலைக்கு மேலாகத் தன் கட்டை விரலை உயர்த்தி இரு தடவை ஆட்டி, திரும்பிப் போகலாம் என்று அவளுக்குச் சைகை செய்தார்.
ஆனால், ஏன், ஏன்? இது காலை நேரம், இது நம்மோட உலகம். அவள் தன் வாலை ஆட்டினாள், ஒரு சிறு குரைப்பைச் செய்தாள், அவரை நோக்கியபடி, தன் பின்னங்கால்களால் ஒரு சிறு நாட்டியமாடினாள், அவரிடம் தன் மொத்த உடலால் கெஞ்சினாள். “வா, போகலாம்,” என்றார் அவர்.
அவருடைய காலருகே தன் இடத்தில் இருந்தபடி, தலை தொங்க, ஆனால் கண்களால் அவரைப் பார்த்தபடி, தான் ஏதும் தவறு செய்தோமோ என்று யோசித்தபடி, சரியானதையே செய்ய வேண்டும் என்றும், தான் கவனிக்கப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்றும் விரும்பியபடி அவள் திரும்பினாள், ஏனெனில் அவர் ஏதோ பிரச்சினையில் சிக்கி, கவனத்தை எங்கோ வைத்தவராகத் தெரிந்தார்.
திரும்பும் வழியில் அவர்கள் சிறிது தூரம் கூடப் போயிருக்கவில்லை, அவர் ஓரெட்டு எடுத்து வைக்கவிருக்கையில் திடீரென்று நின்றார், தன் இரு பாதங்களையும் தரையில் அழுத்தி நின்றார், விறைப்பாக, சமநிலை தவறிய ‘அட்டென்ஷனில்’ இருக்கும் ஒரு படைவீரனைப் போல நின்றார். அங்கே, அவர்களின் பாதையில் முன்னால், அந்தப் பெரிய, ஆரஞ்சுக் கண் போன்ற பாகத்தைக் கொண்ட தலையும், அதன் முன்னர், நீட்டப்பட்ட கரங்களின் முடிவில் இருப்பது போல இரு கடினமான தோல் கொண்ட கரங்களும், அதன் முடியில்லாத உள்ளங்கைகள் மேல் நோக்கிப் பார்க்கக் கிடந்தன.
அவள் தன் தொண்டையில் ஓர் ஆழ்ந்த உறுமலைச் செய்தாள், அவளுடைய எஜமானரும் அதே போல ஒரு சத்தம் செய்தார், ஆனால் அது வேதனைக் குரலாகத் தெரிந்தது. அவள் அவருக்காகக் காத்திருந்தாள், அவர் அசையாமல் நிற்கையில், அவருடைய விறைப்பு தனக்குள்ளும் பரவுவதாக உணர்ந்தாள். இருந்தாலும் அவை என்னவோ ஒரு தலையும், இரண்டு கைகளும்தான், அவற்றுக்கு ஒரு மதிப்பும் கிடையாது, அவை அவர்கள் ஏற்கனவே வேண்டாமென்று தூக்கிப் போட்டு விட்ட பழைய பொருட்கள்தான்.
அவர் திரும்பினார், அவளால் அவருடைய கண்களில் ஒரு கலக்கத்தைப் பார்க்க முடிந்தது. அவர் மிகக் கவனமான எட்டுகள் வைத்து நடந்தார், அவள் பின்னே போனாள், அந்த இடத்தைச் சுற்றி ஒரு பெரிய வட்டமிட்டு வந்தார்கள்.
அவர்கள் கப்பலிடமிருந்து அதிக தூரத்தில் இல்லை. அதன் தட்டையான கருமையை, அது இருந்த வெட்ட வெளிக்கருகே அவர்கள் வருகையில், அவளால் அது இருந்த இடத்திலேயே பார்க்க முடிந்தது. அதைச் சுற்றி எரிக்கப்பட்ட, பனியில்லாத, ஆழக் கிளறப்பட்டுக் கருப்பான மண் வெளி இருந்தது. அப்போது அவள் வெள்ளிப் புலி மனிதர் அங்கு இருந்ததைப் பார்த்தாள், ஒரு விரிந்த வட்டமாக ஒன்பது பேர் நின்றார்கள், ஒவ்வொருவரும் ஒரு தேன் கலந்த ஈரமான ரோமத்தின் வாடையோடு, ஆனால் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு விதமான இனிப்பு தென்பட்டது.
எஜமானர் இன்னமும் வேகமாக நடந்து கொண்டிருந்தார், காலடிகளின் மீது கவனமாக இருந்தன அவர் கண்கள், அதனால் அவர் அந்த வட்டத்துக்குள் வரும்வரை, ஒன்பது நெடிய கரடிகள் வெள்ளிப் புலி ஆடைகள் அணிந்தது போல நின்றிருந்த அவர்களைப் பார்க்கவில்லை.
அவர் நின்று, சிறு வேதனைக் குரலை எழுப்பினார், தன் துப்பாக்கியை ஒரு கரத்தில் தொங்க விட்டார், அதன் குழல் கிட்டத்தட்ட தரையைத் தொடும்படி நீண்டிருந்தது. அவர் ஒருவரிடமிருந்து இன்னொருவரைப் பார்த்தபடி இருந்தார், அவள் அவரைப் பார்த்திருந்தாள், அவருடைய வெளுத்த கண்கள் அந்த வட்டத்தைச் சுற்றி வந்ததைக் கவனித்தாள்.
“இரு,” என்றார் அவர், சங்கடமான நொண்டல் நடையோடு கப்பலை நோக்கிப் போகத் துவங்கினார், அது ஓட்டமும், நடையுமாக ஒரே நேரம் தெரிந்தது, துப்பாக்கியின் பிடியைக் காற்றடைப்புக்கான நுழைவாயிலில் மோதியபடி உள்ளே நுழைந்தார்.
இரு என்று அவர் சொல்லி இருந்தார். அவள் கப்பலின் வாயில் கதவைப் பார்த்துக் கொண்டே தன் முன் கால்களை மேலும் கீழுமாக அசைத்தபடி இருந்தாள், ஏனெனில் அவருக்குப் பின்னே போக விரும்பினாள். அவர் ஒரு சில நிமிடங்கள்தான் உள்ளே இருந்தார், திரும்பி வரும்போது அவர் கையில் துப்பாக்கி இல்லை, பெரிய ரோமத் தோலை, அதன் வெட்டப்பட்ட துண்டுகள் அதன் விளிம்புகளில் நாடாக்கள் போல தொங்கியபடி இருக்கக் கொணர்ந்தார். அந்த நாடாக்கள் அந்தத் தோலை இழுத்து விரித்துக் கட்டும் சட்டத்தில் கட்டப் பயன்படுத்தப் பட்டு இருந்தவை. அவர் அதே ஓட்ட நடையில், கனமான மூட்டையின் சுமையால் அது சமநிலை தவறி இருந்தது, அந்த வட்டத்தில் இருந்த ஒருவரிடம் போனார். மூவர் அவர் முன்னால் சேர்ந்து நின்றார்கள், அதைத் திரும்ப வாங்க மறுத்தனர். அவர்கள் அதை, தளர்வாகக் கட்டப்பட்டிருந்ததை, அவருடைய கைகளிலேயே திரும்பத் தள்ளினர். அத்தோடு இன்னொரு கனமான பெரிய பொட்டணத்தையும் சேர்த்துக் கொடுத்தனர். அது செய்திகள் எழுதுவதற்காகப் பதனிட்ட ஒரு தோல் பையில் கட்டப்பட்டிருந்தது. எஜமானர் தன் கால்களை அகட்டி வைத்து அவற்றை வாங்கிக் கொண்டார்.
அப்போது ஒரு தேன் வாசனை கொண்ட பருமனான மனிதர், தன் ரோமமடர்ந்த கையால் கப்பலைச் சுட்டிக் காட்டி, அந்தப் பொட்டணங்களையும் சுட்டி, பிறகு கப்பலையும், எஜமானரையும் சுட்டி, பிறகு வானத்தை நோக்கிக் கை காட்டினார். இரு கூர்மையான ஒலிகளை எழுப்பினார், பிறகு மறுபடியும் அவற்றையே ஒலித்தார். வேறொருவர் மற்றுமிரு ஒலிகளை எழுப்பினார். அவள் அவர்களிடையே இருந்த உணர்ச்சிகளை அறிய முடிந்தது…
உன் பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிப் போ. அவற்றை எடுத்துக் கொள், இதை எல்லாமும் எடுத்துக் கொள், பிறகு போ.
அவர்கள் அவளிடம் திரும்பினார்கள், ஒருவர் அவளிடம் பேசினார், விரிவான சைகை ஒன்றைச் செய்தார். இது உலகம். இது வானம், இது பூமி, இது பனிப்பாளம்.
அவள் தன் வாலைத் தயக்கத்தோடு ஆட்டினாள், தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, அவர்களைப் பார்த்தாள்… நான் சரியானதையே செய்ய விரும்புகிறேன், எல்லாரையும் திருப்திப்படுத்த விரும்புகிறேன். எல்லாரையும்… ஆனால்… பிறகு அவள் எஜமானரைப் பின் தொடர்ந்து கப்பலுக்குள் போனாள்.
கதவுகள் பூட்டுகையில் அதிர்ந்தன. “நாம இங்கேயிருந்து போய் விடலாம்,” அவர் சொனார். அவள் தன் இடத்தைப் பிடித்துக் கொண்டாள், தன் உடலைப் பக்கவாக்கில் தட்டையாக நீட்டிக் கொண்டு, உயரே பறந்து எழுவதற்கேற்ற தயார் நிலையில் படுத்துக் கொண்டாள். ஒரு தட்டையான ப்ளாஸ்டிக் போர்வையை தலையையும், உடலையும் எல்லாம் மூடிய நிலையில் அவள் மேல் போர்த்தி, கொக்கிகளால் பொருத்தினார் எஜமானர். சில நிமிடங்களில் அவர்கள் பேரிரைச்சலோடு விண்ணில் ஏறினார்கள்.
பிறகு அவர் அந்தப் பதனிட்ட தோல் பையைத் திறந்தார். அவளுக்கு அதில் என்ன இருந்தது என்று தெரிந்திருந்தது. அவருக்கும் தெரியும் என்று அவள் அறிந்திருந்தாள், ஆனால் அவள் அதை வாடை கொண்டு தெரிந்து கொண்டிருந்தாள். அவர் பையைத் திறந்து உள்ளே இருந்த தலையையும், கைகளையும் கீழே கொட்டினார். அவருடைய முகம் இறுக்கமாக, உதடுகள் விறைப்பாக இருந்தன.
அவர் அந்தத் தலையையும், கைகளையும் கழிவுக் கூண்டுக்குள் போடத் தயாராகவிருந்தார் என்பதை அவள் கவனித்தாள். ஆனால் அவர் போடவில்லை. நல்ல தலைகளையும், சில வித்தியாசமான பாதங்கள், குளம்புகளையும் வைத்திருந்த இடத்திற்கு அவற்றை எடுத்துப் போனார், மற்றவற்றின் அருகே இவற்றை வைத்தார்.
இந்தத் தலை மற்றவற்றிலிருந்து வேறுபட்டது என்பது அவளுக்குமே தெரிந்திருந்தது. மற்றவை எல்லாம் அவளைப் போலவே குறுக்குச் சாய்வான புருவம் கொண்டவை, தவிர நீண்ட மூக்கும் வாயுமுடையவை. இது பிற பெரிய தலைகளை எல்லாம் விடப் பெரியதான தலை, அதன் கனமான, கலைந்திருந்த முடியோடும், அதன் உற்று நோக்கும் கண்ணோடும், அது வேறெதையும் விட ஆடம்பரமாகவும், மிகவும் பயங்கரமாகவும் இருந்தது…. இருந்தாலும் அது, நளினமான கருப்பு மூக்கும், மென்மையான உதடுகளுடனும் இருந்த ஒரு தட்டையான முகம்.
வேறெந்த உதடுகளையும் விட மிக மென்மையான உதடுகள்.

~oOo~

1921 ஆம் வருடம் பிறந்த கேரொல் எம்ஷ்வில்லர் (Carol Emshwiller) ஓர் அமெரிக்க எழுத்தாளர். அதிபுனைவு/ அறிவியல் புனைவுகளில் மிக மதிப்புள்ள நெபுலா பரிசையும், ஃபிலிப் கே. டிக் பரிசையும் வென்றிருக்கிறார். கார்மென் டாக் (1988), த மௌண்ட் (2002) ஆகியன அவரது மிகக் கவனம் பெற்ற இரு நாவல்கள். 2011 இல் அவரது சிறுகதைகள் எல்லாம் தொகுக்கப்பட்ட ஒரு புத்தகம் வெளியானது.
உர்சுலா லெ குவின் இவரைப் பற்றிச் சொன்னது: “ஒரு பெரும் அதிபுனைவாளர், அற்புதமான மாய எதார்த்த எழுத்தாளர், புனைவுகளில் இருக்கும் பெண்ணிய எழுத்தாளர்களில் எப்போதும் நம்பகமான தரத்தோடு, மிகச் சிக்கலான, மிக்க வலுக் கொண்ட எழுத்து இவருடையது.”
இவருடைய இந்தக் கதையை 2016 ஆம் ஆண்டில் ஆன் மற்றும் ஜெஃப் வாண்டர்மீயர் தம்பதிகள் தொகுத்தளித்த ‘த பிக் புக் ஆஃப் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன்’ தொகுப்பிலிருந்து பெற்றோம். விண்டேஜ் பிரசுர நிறுவனத்தின் புத்தகம் இது. மூலக் கதையின் தலைப்பு, ‘Pelt’.
தமிழாக்கம்: மைத்ரேயன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.